இணையவழி கற்றல் கற்பித்தலில் உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

இணையவழி கற்றல் கற்பித்தலில் உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

Dr. Anurama,

Assistant Professor (Sociology),

Department of Religion, Philosophy & Sociology,

The American College,

Madurai

முன்னுரை:

இந்திய உயர்கல்வி, கரும்பலகை வகுப்பறையில் இருந்து கணினி சாளரம் கொண்டு, உலகில் உயர்கல்வி நிறுவனங்கள் அடைந்திருந்த உச்சங்களை கண்டு உத்வேகம் பெற்று இருந்த நேரம், எதிர்க்க இயலாத வல்லமையோடு எதிர்கொண்டது கொரோனா பெருந்தொற்று. பெரும் துயரம், பேரிடர் காலமாக மாறிப்போக ஊரடங்கில் உலகமே அடங்கிப்போனது. வகுப்பறை முடங்கிப் போனது. கட்டிடங்களுக்கு தான் விடுமுறை, கற்றலுக்கு அல்ல என அணிவகுத்த இணையவழி கருத்தரங்கங்கள், ஆசிரியர்களுக்கு அறிவை விசாலப்படுத்த கிடைத்த வரப்பிரசாதம். கற்பித்தலில் மூழ்கியிருந்த ஆசிரியர்கள், கணினி வழி கருத்தரங்கங்களில் கற்றலை தொடர்ந்தபோது, முடங்கிக் கிடந்த வகுப்பறைகளும் உயிர் பெற்றன. இணையவழிக் கல்வி, கற்றல் கற்பித்தலை தளம் மாற்றிச் சென்றிருக்கிறது இந்த மாற்றத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளம். இணையவழிக் கல்வியை கையாள்வதில், ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைப்பது இந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நோக்கம்.

இந்திய சூழலில் இணையவழிக் கல்வி:

இணையவழி கற்றல் கற்பித்தலை தொடர்ந்து அரசாங்கமும் பல்கலைக்கழக மானியக்குழுவும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வந்தன. இதற்காக சுயம் என்னும் பொருள்படும் SWAYAM (Study Webs of Active-Learning for Young Aspiring Minds) என்ற திட்டத்தை இந்திய மனிதவள மேம்பாட்டு துறை துவக்கி வைத்து 2017 முதல் இணையவழி கல்வியை (Massive open online course) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திட்டத்தின் மூலம் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமமான வாய்ப்பு, தரமான கல்வி, அனைவரையும் சென்றடைதல் என இந்த மூன்றையும் தன் இலக்குகளாக கொண்டு இந்த திட்டம் இயங்குகிறது. ஒரு மாணவர் ஏதேனும் காரணங்களுக்காக பிற பல்கலைக்கழகங்களுக்கு மாற நேர்ந்தால், படிப்பை தடையின்றி தொடர்வதற்கு வசதியாக கிரெடிட் டிரான்ஸ்பர் என்ற முறையை எளிதாக்கியது. ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுநராக நடத்தப்படும் பாடத்தை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அங்கங்கு இருந்தபடியே கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

தொலைநிலை கல்வியை விட அதிகரித்த பாடவேளைகள் இருந்தது இதன் சிறப்பு. தான் படிக்கும் பட்டப்படிப்புக்கு துணையான ஒரு பாடத்தை படிக்க விரும்பும் ஒரு மாணவர் அந்த பாடத்திட்டம் அந்த கல்வி நிறுவனத்தில் வழங்கப்படவில்லை என்றாலும் இந்த இணையவழி கற்றல் மூலம் கற்றுக் கொள்ளுதல் சாத்தியமாக்கியது. ஆனாலும், ஆர்வமும், தன்முனைப்பும் கொண்ட ஆசிரியர் மாணவர்களை இந்தத் திட்டங்கள் சென்று சேர்ந்த அளவுக்கு, அனைவரையும் சென்று சேரவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வு, இணைய வசதிகளை பயன்படுத்துவதில் உள்ள ஏற்றத் தாழ்வு, கணினி தொழில்நுட்ப அறிவு அனைத்துமே தடைக்கற்களாக தொடர்ந்து இருந்தன.

இத்தகைய சூழலில்தான் எதிர்பாராவிதமாக ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட விடுமுறை விடப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பூட்டியிருந்த வகுப்பறைகள் கற்றல் கற்பித்தலில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது. தொற்றுநோய்க்கு தீர்வு கண்டு பிடிக்கப்படாத சூழலில் முன்னெச்சரிக்கையாக மொழியப்பட்ட சமூக இடைவெளி பெரும் சவாலாக உருவெடுத்தது. ஒரு அறையில் சராசரியாக ஒரு ஆசிரியரும், 60 மாணவர்களும் என பயின்ற முறை மாறி, வகுப்பறைகளை விசாலப் படுத்துவதோ, மாணவர் எண்ணிக்கையை குறைப்பதோ, இரண்டுமே உடனடியான தீர்வு இல்லை என்ற குழப்பமான சூழல் உண்டானபோது இணையம் தன் அகண்ட வகுப்பறைகளை திறந்துவிட்டது. மாணவரின் நலனை மனதில் கொண்டு தேர்வுகளையும், பாடங்களையும் நடத்துவது என உயர்கல்வி நிறுவனங்கள் முடிவு எடுத்து பாட வேளைகளையும், தேர்வு அட்டவணைகளையும் அறிவிக்க,  இணையவழி கற்றல் கற்பித்தலில் அதுவரை இருந்த  தடைக்கற்கள் கொரோனாவால் தகர்த்து எறியப்பட்டன.

இலக்கிய மீளாய்வு

இணைய வழி கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான உயர்கல்வி சென்று சேர்வதை உறுதிப்படுத்துகிறது(Bates, A.W., 2003). கல்வி சார் இலக்குகளை அடைவதில் கூடுதல் பொறுப்பு உள்ளவர்களாகவும், தன்முனைப்பு உள்ளவர்களாகவும் மாணவர்கள் மாற வேண்டியதன் அவசியம் இங்கு முன்வைக்கப்படுகிறது. (McLaren, C. H., 2004),

இளங்கலை பட்டப்படிப்பு என்பது கல்வி மட்டும் சார்ந்தது அல்ல அது சமூகமயமாதல், தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் அடைதல், நாட்டிற்கு நல்ல குடிமகன்களாதல் மற்றும் பண்படுதலையும் உள்ளடக்கியது.(Barth, T. J., 2004),

தொழில்நுட்ப அளவில் இது முன்னெப்போதும் இருந்திராத வகையில் வந்திருக்கும் புதிய முன்னேற்றம். வகுப்பறை மற்றும் விடுதி வசதி போன்ற வசதிகளை அதிகரிக்காமல் மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகங்கள் அதிகரிக்கக்கூடும் இணைய வழி கற்பித்தல் என்பது வேலை பளுவை அதிகரிக்கக்கூடியது மட்டுமன்றி ஆசிரியர் மாணவர் உறவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியது சிக்கலான சிக்கலான பரிமாணங்களைக் கொண்டது சிறு தவறுகளும் இணைய சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் (Dykman, Charlene & Charles, Ph & Davis, Kathleen, 2008).

ஆய்வின் குறிக்கோள்:

இந்திய அளவில் உயர்கல்வியின் முன்னோடியின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக அறியப்படும் தமிழகத்தில், மதுரையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இணையவழி கற்றல் கற்பித்தலில் உள்ள  சிக்கல்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் அறிவதற்கு என்று இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

 1. இணைய வழி கற்றலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அறிவது
 2. இணையவழி கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அறிவது
 3. சிக்கல்களுக்கான தீர்வுகளை முன் வைப்பது

ஆய்வு முறை:

தமிழகத்தில், மதுரையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை பாடப் பிரிவில் கற்கும் 100 மாணவர்களிடம், மற்றும் 25 ஆசிரியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. Purposive Sampling முறையில் Structured Interview schedule,  மற்றும் Focus Group Discussion உத்திகளைப் பயன்படுத்தி தகவல்கள் பெறப்பட்டன. நேரமின்மை காரணமாக கலைப்பிரிவு மாணவர்களிடம் (ஆண்) மட்டுமே இந்த ஆய்வை நடத்த முடிந்தது, ஆய்வின் குறை.

ஆய்வின் முடிவுகள்:

ஆய்வில்  56% முதலாமாண்டு மாணவர்களும், 18% இரண்டாமாண்டு மாணவர்களும், 26% மூன்றாமாண்டு மாணவர்களும் பங்கேற்றனர். இதில் 67% முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் 59 % மாணவரின்   குடும்பத்தின் மாத வருமானம் 20 ஆயிரத்திற்கும் கீழ்.

இதில் 63%  மாணவர்களிடம் முன்பே ஸ்மார்ட்போன் இருந்தாலும் 37 சதவிகிதம் மாணவர்கள் இந்த இணையவழி கற்றலுக்காகவே ஸ்மார்ட்போன் வாங்கி இருக்கிறார்கள்.

மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:

இணைய வழி கல்வியில், 65 சதவீதம் மாணவர்கள், இணையத் தொடர்பில் இணைவதில் சிக்கல் உள்ளது என்கிறார்கள். கணினி அல்லது மடிக்கணினி வழி இணைய வழிக் கல்வியைப் பெறும் மாணவர்களோடு ஒப்பீடு செய்கையில் அலைபேசி வழியே இணைய வழியில் கற்கும் மாணவர்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். 5 மணிநேரம் இணைய வழி கற்றலில் பங்கேற்கும் போது, 79% மாணவர்கள் 1 முதல் 1.5 ஜிபி வரை டேட்டா செலவாவதாகவும் இதற்கு தினம்தோறும் செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக குடும்பத்தின் மாத வருமானம் 10 ஆயிரத்திற்கும் கீழ் என்று கூறும் 26 சதவிகிதம் மாணவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

தினந்தோறும், மணிக்கணக்கில் தொடர்ச்சியாக திரையை பார்த்துக் கொண்டே இருக்கும்போது, 49 சதவிகிதம் மாணவர்கள் கண் வலி ஏற்படுவதாகவும், 33% மாணவர்கள் தலைவலி ஏற்படுவதாகவும், 18 சதவிகிதம் மாணவர்கள் குனிந்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் கழுத்து மற்றும் தோள்பட்டை வலியும் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள்.

இணையவழி கற்றலின் சாதகங்கள் என நீங்கள் நினைப்பவை என்ன என்ற கேள்விக்கு பாடங்கள் விரைந்து முடிக்கப்படுகிறது என்றும், எந்தவித இடைஞ்சலும் இன்றி  முழுமையான நேரம் பாடம் நடத்துவதற்கு என்று ஒதுக்கப்படுவதும், பயணத்திற்கான நேரமும் பணமும் மிச்சமாகிறது என்றபோதும், 82 சதவிகிதம் மாணவர்கள் இணைய வழிக் கற்றல் என்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருவதாக இருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்கள். வகுப்பறைக் கல்வி இணையவழிக் கல்வி எது பிடித்தமான கல்விமுறை என்று கேட்டதற்கு, 96.3 சதவிகிதம் மாணவர்கள் வகுப்பறையில் கற்றலே பிடித்தமானது என்கிறார்கள்.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:

ஆசிரியர்களை பொறுத்தவரையில் இணையத் தொடர்பு பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தாண்டி இணைய வழிக் கல்வியில் புதிதாக இணைந்திருக்கும் ஆசிரியர்கள், போதிய பயிற்சி இன்றி இந்த கல்வியை கற்பித்துக் கொண்டு இருப்பதாக உணர்கிறார்கள்(66%). ஆசிரியர்களின் வயது, அனுபவம், தொழில்நுட்பத் திறனை கொண்டே அவர்களின் கற்பிக்கும் முறை அமைகிறது. ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் கண் எரிச்சல், தலைவலி, உடல் வலியை தாண்டி பெரும்பான்மையானோர்(82%) உளவியல் ரீதியான பாதிப்புகளை தான் அதிகம் பட்டியலிடுகிறார்கள்.

ஆராய்ச்சியாளரின் கருத்து:

இணைய வழி கற்றலில் மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, தொழில்நுட்ப காரணிகள், உடல்நலம் சார்ந்த காரணிகள், உளவியல் காரணிகள், சமூக பொருளாதார காரணிகள், மற்றும் கல்வி சார்ந்த காரணிகள் என  ஐந்து விதமாகப் பிரிக்கலாம்.

வீட்டிலிருந்து கல்வி பெறுவதில் முக்கியமான பிரச்சினைகளாக மாணவர்கள் குறிப்பிடுவது  இணையத் தொடர்பில் இணைவதில் ஏற்படும் சிக்கல்கள்,  நண்பர்களுடன் அளவளாவ முடியாதது, வகுப்பறையில் அனைவரும் சேர்ந்து பங்கேற்பது, வகுப்பறைச் சூழலில் ஆசிரியரோடு உரையாடும் போது கிடைக்கும் தெளிவு, வகுப்பறைக்கு வெளியே இருக்கும் விளையாட்டு  மற்றும் கலைப் போட்டிகளில் பங்கேற்கும் அனுபவத்தை தவற விடுவது, குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போவது, வசிக்கும் சூழல் சார்ந்த இடைஞ்சல்கள் மற்றும் இரைச்சல்கள் என வீட்டிலிருந்தபடியே இந்த இணைய வழி கற்றலில் பங்கேற்பதில் பெரும் சிக்கல்களை சந்திக்கிறார்கள் மாணவர்கள். தொடர்ச்சியாக அலைபேசியின் திரைகளை பார்த்துக் கொண்டிருப்பதால் வரும் தலைவலி, கண் எரிச்சல் போன்ற உடல் ரீதியான கோளாறுகளை தாண்டி சமூக ஊடகங்கள் சார்ந்த கவனச் சிதைவுகளும் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே ஏற்படத்தான் செய்கின்றன.

ஆசிரியர்கள் இணையவழி கற்றல் வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் பொழுதே, சமூக ஊடகங்களை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவதாக, 30 சதவிகித மாணவர்கள், தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் இணைய வழி கற்றலில் கற்றல் கற்பித்தல் என்பது கல்வி சார்ந்த தளங்களில் இயங்க படுகிறதே அன்றி வகுப்பறைச் சூழலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் மதிப்பீடுகள் இங்கே போதுமான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என்பதே கசப்பான உண்மை.

ஆண்டாண்டு காலமாக வகுப்பறைகளில் முகம் பார்த்து பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு, கணினித் திரையின் எதிரே அமர்ந்து மாணவர்களிடம் உரையாடுவதும், அவர்களுக்கு கற்பிப்பதும் பெரும் சவாலாக உள்ளது. மாணவர்களின் கவனச்சிதறலை கண்காணிக்க முடியாமல் போவதும், மாணவர்களுக்கு புரிந்து இருக்கிறதா  இல்லையா என்பதில் ஏற்படும் குழப்பங்கள், ஆசிரியர் மாணவர் உறவில் ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆசிரியர்களுள் குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு வீட்டிலிருந்தே பணி புரிவதில் குடும்பம் சார்ந்த அலுவல்களின் குறுக்கீடும் அதிகம் உள்ளதால் பணிச்சுமை அதிகமாக உள்ளது. வகுப்பறை கல்வியை கற்பிக்கும் முறையில் கற்று தேர்ந்த ஆசிரியர்கள் கூட, இணைய வழிக் கல்வியில் தேர்வுகளை நடத்துவதும், அதனை மதிப்பீடு செய்வதும் தரமானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண்டும் என்பதில்  பெரும் சவால்களை சந்திக்கிறார்கள். உண்மையில் வகுப்பறைச் சூழலுக்கென்றே வடிவமைக்கப்பட்ட பாடங்களும் தேர்வு முறைகளும், போதுமான கால அவகாசமும் பயிற்சியும் இன்றி அறிமுகப்படுத்தப்பட்டதில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்  கற்றல் கற்பித்தல் அனுபவத்தை கடினமாக்குகிறது. நோய்த்தொற்று காலத்தில் வேறு வழி இல்லாத போது இணையவழி கற்றல் கற்பித்தல் என்பதே கைவசம் உள்ள ஒரே தீர்வு என்றபோதும் காலச் சூழல் மாறும்போது வகுப்பறை கல்வியையும் இணைய வழிக் கல்வியையும் சரிவர இணைத்து உருவாக்கப்படும் பாடத்திட்டங்களும், வகுப்பறைகளும், தேர்வு முறைகளுமே உயர்கல்வியில் பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும்.

தீர்வுகள்

 • ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இணையவழி கற்றல் தொடர்பான பயிற்சி
 • மாணவர்களுக்கு வருகைப் பதிவை கட்டாயம் ஆக்காமல் இருப்பது
 • பாட வேளைகளின் நேரத்தை குறைப்பது
 • தொலைத்தொடர்பு வசதிகளை பெறுவதில் மாணவர்களுக்கு அரசாங்கம் மானியம் அளிப்பது
 • மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த கலைப் போட்டிகளையும் குழு விவாதங்களையும் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் வகையில் இணையவழியில் ஒருங்கிணைப்பது

 

ஆய்வின் குறிப்புச்சொற்கள்:

இணைய வழி கல்வி, SWAYAM, உயர்கல்வி, வகுப்பறைக் கல்வி, கற்றல் – கற்பித்தல்

References

 1. Bates, A. W. (2003), Technology, Distributed Learning, and Distance Education. London: Rutledge.
 2. McLaren, C. H. (2004), “A Comparison of Student Persistence and Performance in Online and Classroom Business Statistics Experiences.” Decision Sciences Journal of Innovative Education, Vol. 2(1), pp.1-10.
 3. Barth, T. J. (2004), “Teaching PA Online: Reflections of a Skeptic.” International Journal of Public Administration, Vol. 27(6), pp. 439-455.
 4. Dykman, Charlene & Charles, Ph & Davis, Kathleen. (2008). Part One-“The Shift Toward Online Education”. Journal of Information Systems Education,

p 19.

 

error: Content is protected !!