கணினியில் தமிழ் வளர்ச்சி
மூ.மோனிஷா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஸ்ரீ.எஸ்.இராமசாமிநாயுடுஞாபகார்த்தக் கல்லூரி,
சாத்தூர்.
monishamoorthy311@gmail.com
9384084025
முன்னுரை
மனித மூளையின் வியக்கத்தக்க படைப்புகள் தான் மனிதரின் இயற்கைமொழிகள். மனித மூளையின் சிறப்புத் திறனான மொழித்திறனை வளர்த்தெடுக்க மனித சமுதாயம் தொடர்ந்து முயன்று வந்துள்ளது. அதன் பயன் மொழிகளுக்கான வரிவடிவங்கள். மொழியின் எழுத்துவடிவம் என்பது மனிதன் உருவாக்கிய முதல் மொழித் தொழில் நுட்பம். புல வளர்ச்சி நிலைகளைக் கடந்த மொழிகள் மென்மேலும் நவீனப்படுத்தப்படுகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க மொழி தமிழ். ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக கணிப்பொறியில் தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. கணினியில் தமிழ் வளர்ச்சியை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கணினியில் தொடக்ககாலதமிழ் வளர்ச்சி
தமிழை கணினியில் உள்ளீடு செய்வதற்கான வசதிகள், தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள்யாவும் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. தமிழ், உரையை, ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து பின் தமிழ் எழுத்துருவில் மாற்றும் வசதியும் உருவாக்கப்பட்டது. ஆதமி போன்ற மென் பொருட்கள், எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. அடுத்தவளர்ச்சி நிலையாக தமிழ் விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டன. இதன் பயன் தமிழை நேரடியாக கணினியில் உள்ளிடு செய்யும் வசதி ஏற்பட்டது
தமிழ் எழுத்துருக்கள்
தமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் அரசின் பங்களிப்புடன் வெளியாகின. இன்றும் தனிநபராகவோ குழுவாகவோ சேர்ந்து எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனவையாவும் விசைப்பலகையின் அமைப்பிற்கேற்ப இயங்குதளங்களில் பயன்படும்படி அமைக்கப்பட்டிருக்கின்றன. முயிலை என்ற எழுத்துருவானது ஆங்கிலத் தட்டச்சுசெய்வதன் மூலம் தமிழ் எழுத்துக்களைப் பெறும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
கணினித்தமிழுக்கான சிக்கல்களும் தீர்வும்
கணினியில் வோர்டு, வோர்டு ஸ்டார் போன்ற மென்பொருட்கள் மூலம் தமிழைப் பயன்படுத்தும் வளர்ச்சிநிலை ஏற்பட்டாலும் தமிழ் எழுத்துருக்களை கணினியில் குறியேற்றம் செய்வதில் பல இடர்பாடுகள் இருந்தன. ஒரு குறிப்பிட்ட மென் பொருளைக் கொண்டு தட்டச்சு செய்யப்பட்ட ஒரு தமிழ் ஆவணத்தை மற்றொரு தமிழ் மென் பொருளைக் கொண்டு வாசிக்கவோ பதிப்பிக்கவோ இயலாதநிலை நீடித்தது .இதற்கு அஸ்கி என்ற குறியேற்ற முறையும் ஒரு தடையாக அமைந்தது. தமிழ் விசைப் பலகைகளும் தரப்படுத்தப் படாமல் இருந்தது. இருப்பினும் தமிழில் இணையதளங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் வணிகமுயற்சியால் ஒருங்குறி (யூனிகோட,; என்கோடிங்) என்ற குறியேற்றம் .தமிழுக்குத் தனியே ஒருங்கறிகுறியேற்ற எண்கள் வழங்கப்பட்டன. இதன் பயனாக தற்போது மின்னனு சாதனங்களில் தமிழை உள்ளீடு செய்வதற்கான தடைகள் இல்லை. கைப்பேசியிலும் தமிழை உள்ளீடு செய்து அனைத்துப் பயன்பாடுகளையும் மேற்கொள்ளலாம்.
தமிழ் பிழைத்திருத்தி
கணினியில் தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்கையில் சொற்களில் ஏற்படும் பிழைகளைத் திருத்திக் கொடுக்கும் சொற்பிழைத் திருத்தி வெளி வந்துள்ளது. இது போன்று சந்திப்பிழை, இலக்கணப் பிழைத் திருத்திகளும் கணினியில் தமிழ் பயன் பாட்டிற்கு உதவுகிறது. இந்த வகையான பிழைத் திருத்திகள் உருவாக்கப்பட்டிருப்பது கணினியில் தமிழ் பயன்பாட்டை அதிகமாக்குவதோடு எளிமையாக்கவும் வழி செய்கிறது. சொற்பிழை திருத்தியைப் போல சொற்பிழைசச்சுட்டி என்ற மென் பொருளும் உருவாக்கப்பட்டது. இம்மென் பொருட்கள் சொற்பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளது.
கணினி இணையத்தில் தமிழின் தோற்றம்
கணிப்பொறியில் இணையப் பயன்பாடு அமெரிக்கவல்லரசால் சாத்தியாப்படுத்தப்பட்டது. இணையத்தின் வரவால் கூகுள் என்றதோடு பொறியின் மூலம் தகவல்களைப் பெறுதல் எளிமையாகிறது. ஒரு மொழிவளர்ச்சிக்கு அதன் பன்முகத் தன்மையும் ஆளுமைப் பண்பும் முக்கியமானதாக விளங்க வேண்டியது அவசியம். தமிழ் மொழி இத்தன்மையை பெற்று விளங்குகிறது. தமிழ் சிலநாடுகளில் ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் தமிழர்களின் தாய் மொழியாகவும் விளங்குகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களை இணையத்தின் வளர்ச்சியால் ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இணையத்தின் வழியாக தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவிரும்பினர். தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைக் கற்றுத் தெளியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர். கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப் பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.
இணையத்தில் தமிழின் வளர்ச்சிநிலை
உலகின் பழமை வாய்ந்த செம்மொழிகள் எட்டில் இன்றளவும் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக தமிழும் சீனமும் விளங்குகிறது. வுளமான மொழியாகவும் நவீன மொழியாகவும் தமிழ் விளங்கும் இன்றைய காலக்கட்டத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிலோடு கணினித்தமிழ் நான்காம் தமிழாய் விளங்குகிறது. தமிழகத்தை விட்டு தொழில் காரணமாக அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் தமிழைப் பேசவும் எழுதவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக் கொள்ளதமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையதளங்களையும் பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக,
BBC என்பது உலகறிந்த செய்தி நிறுவனம். பலமொழிகளில் செய்திகளை வெளியிடுகிறது. இதில் தமிழ் மொழியும் ஒன்று.
சீன வானொலி ஏறத்தாழ 43 மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. உருது, வங்கம் தவிர தமிழ், இந்தி ஆகிய இரண்டு இந்தியமொழிகளில் மட்டும் ஒலிபரப்புகிறது.
தமிழ் இணையஅகராதி
கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை உருவாக்கும் முயற்சி உமர் என்பவரால் மேற்கொள்ளப்படடடது. இதன் விளைவாக தமிழ் இணைய அகராதி உருவாக்கப்பட்டது. இவ்வகராதியைப் பயன்படுத்தி ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் பொருள் காணலாம்.
மின்னஞ்சலில் தமிழ்
தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஓர சில நொடிகளில் பரிமாற்றம் செய்து கொள்ளமுடிகிறது. கணிப்பொறியும் இணைய இணைப்பும் இருந்தால் மின்னஞ்சல் மூலம் தகவல்களை எளிமையாகப் பரிமாறிக் கொள்ளலாம். தொலைவில் இருப்பவரிடம் கூற வேண்டிய செய்திகளை தொலைபேசி, அலைபேசி மூலமாக எடுத்துக்கூறி அவர்களின் பதிலையும் பெற நமக்கு தொலைபேசி அல்லது அலைபேசி எண் தேவைப்படுகிறது. அதேபோல மின்னஞ்சல் மூலமாக செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவிரும்பினால் செய்தியையாரிடம் கூற விரும்புகிறோமோ அவரின் மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. எழுத்துவடிவில் உள்ள தகவல்களை ஒருவருக்கொருவர் தபால் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்வதற்கு பதிலாக மின்னியல் தொடர்பு மூலமாகப் பெற்றுக் கொள்ளும் முறைக்கு மின்னஞ்சல் என்று பெயர். இணையத்தின் மூலமாக தமிழ் மொழியிலும் மின்னஞ்சல் அனுப்பமுடியும். இதற்கு தனியாக கட்டணம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்
அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பது இணையம். இணையம் தகவல் தொழில் நுட்ப உலகில் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம் பாராமல் உலகமக்களுக்குச் செய்துவருகிறது. இது விஞ்ஞானரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மட்டும் இல்லாமல் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றுகிறது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கியவகைகளைப் பெற்றுவளர்ந்துவரும் தமிழ் மொழிக்கு வலைப்பூக்கள் என்ற புதிய இலக்கியவகை தோன்றி பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இலக்கியம், பக்தி, ஆன்மீகம், கணிப்பொறி, மருத்துவம் எனப் பல்சுவைசார்ந்த வலைப்பூக்களாகப் பகுக்கப்பட்டு தமிழ்ப் பண்பாட்டை எடுத்துவிளக்குகிறது.
தமிழ்வலைப்பூக்களின் வகைப்பாடும் வளர்ச்சியும்
வலைப்பூ என்பது ஒருதனி இலக்கிய வகையாகத் தோன்றியுள்ளது. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தும் தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி, வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியேதனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணையவழியிலான ஒருசேவையே வலைப்பூ என்பதாகும். வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் என்கிறார்கள். தமிழ் வலைப்பூகளில் கவிதைகளுக்கான வலைப்பூக்கள் அதிகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் பலகருத்துக்களை தெரிவிக்கும் விதமாகவும் வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக,
வேர்களைத் தேடி என்ற வலைப்பூவில் தமிழ் ஆசிரியர்கள் சிலர் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றம் செய்கின்றனர்.
தமிழில் கணிதம், அறிவியல், விண்வெளி மற்றும் நவீனத் தொழில் நுட்பங்களை வெளிப்படுத்தும் சிலவலைப்பூக்களையும் உருவாக்கியுள்ளனர்.
பெண்கள் சார்ந்த வலைப்பூக்களும் உருவாக்கப்பட்டு வேலை வாய்ப்பு, பெண் சுதந்திரம், உடல் நலம் பற்றிய கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. வலைப்பூக்களின் வருகையால் தமிழ் இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரியவருகின்றன.
தமிழ் மின்னியல் நூலகம்
தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்துத் தருவது தமிழ் மின்னியல் நூலகம் மற்றும் இணைய நூலகம் ஆகும். அச்சுவடிவில் அமைந்த புத்தகங்கள் மொத்தமாக தொகுத்தும், பகுத்தும் வைக்கப்பட்டிருக்கும் இடம் நூலகம். நூலகம் சென்றுபடிக்கும்ஆர்வம் இயந்திரமயமானஉலகில் குறைந்துகொண்டேவரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகம் உருவாகி வருகின்றன. புத்தகங்களை மறுபிரதியாக எடுத்துவைக்கவும் மின்னியல் நூலகம் பயன்படுகிறது. ருNநுளுஊழு மற்றும் அமெரிக்க காங்கிரஸ் இணைந்து உலகமின்னியல் நூலகத்தை வழிநடத்துகிறது. இதன் பயனாக கலாச்சாரம் சார்ந்த தகவல்கள் இணையத்தில் அதிகரிக்கிறது. ஊலகளாவிய கலாச்சாரத்தின் முக்கியத் தகவல்களை இணையத்தில் கிடைக்க வழி வகைசெய்து கொடுக்கிறது. இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி வெளியிட்டு உலகத் தமிழ் மக்களுக்கும் பிறமொழியாளருக்கும் முன்னோடியாக தமிழ் மொழி திகழ்கிறது.
தமிழ் மின் நூல்கள்
கணிப்பொறி உதவியுடன் நூலை அச்சுவடிவில் படிக்கும் முறைக்கு மின் நூல் என்றுபெயர். கணிப்பொறி உதவியுடன் தட்டச்சு செய்து இணையத்தில் படிக்கும் விதத்தில் மின்நூல்கள் உருவாக்கப்படுகின்றன. இணையத்திலிருந்து கணினியில் பதிவிறக்கம் செய்து தேவைப்படும் பொழுது படிக்கும் விதமாகவும் மின்நூல்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறான மின்நூல்கள் உலகமொழிகள் அனைத்திலும் உருவவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியில் பரவலாகமின்நூல்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழ் மொழியிலும் மின்நூல்கள் உருவாக்கப்படுவதுதமிழின் ஏற்புமற்றும் நெகிழ்வுத் தன்மையைக் காட்டுகிறது. தனியார் புத்தகநிறுவனங்கள், தனி ஆட்கள் மற்றும் பலர் குழுவாகச் சேர்ந்தும் மின்நூல்களை வடிவமைத்து வெளியிட்டுவருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் தமிழ்
சமூக ஊடகம் என்பது சமூகத்தில் உள்ளமக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஊடகமாகும். சமூகஊடகத்தின் மூலம் செய்திகளை எளிமையாகவும் இலவசமாகவும் அனுப்பமுடியும். முகம் பார்த்தும் பேசிக்கொள்ளமுடியும். நமது உரையை காணொலியாகவும் வெளியிடலாம். இவ்வாறெல்லாம் பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதே முகநூல், கட்செவி, குறுஞ்செயலிகள் போன்றவையாகும். இவை எல்லாவற்றையும் உலகில் எந்த மூலையில் இருப்பவரும் எந்தநேரத்திலும் எல்லா மொழிகளிலும் பயன்படுத்தமுடியும். இத்தகைய சமூக ஊடகங்களில் தமிழ் மொழி பெரிதும் பயன்படுகிறது.
கணிப்பொறித் திருவிழாக்கள்
சென்னையைச் சேர்ந்த கணினித் தமிழ்ச் சங்கமானது, மதுரையில் கணினித்தமிழ் என்ற பெயரில் கணிப்பொறித் திருவிழாவை நடத்தியது. இத்திருவிழாவானது தமிழ் மென்பொருட்களை பரப்புவதற்கும் மக்களுக்குதமிழ் மென்பொருட்கள் பற்றி தெரிவிப்பதற்கும் நடத்தப்பட்டது. இதே போன்று இணையத்திலும் தமிழ்ப் பயன்படுத்தப்பட்டமைக்கு உழைத்த நல்லுள்ளங்களைப் பாரட்டும் விதமாக விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் இணையமாநாடுகளும் உலகின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்டது.
முடிவுரை
கணிப்பொறியுகம் எனக் கருதும் அளவுக்கு இன்றைய காலத்தில் கணினிப்பொறியானது மக்களின் வாழ்வில் மிகமுக்கியமான ஒன்றாக அங்கம் வகித்துள்ளது. மக்கள் வாழ்வோடு ஒன்றிப்போன கணினியில் தமிழ் மொழி ஆங்கிலமொழிக்கு அடுத்தபடியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையப் பயன்பாட்டிலும் தமிழ் அதிவேகவளர்ச்சி பெற்றுள்ளது. ஒருமொழி காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொண்டால் மட்டுமே சமூகத்தில் நிலையான இடத்தைப் பெறமுடியும். தமிழ் மொழியானது இத்தகைய சிறப்பைப் பெற்று விளங்குகிறது. காலமும் மக்களும் எவ்வளவு நவீனமாக மாறினாலும் தமிழ் மொழியும் அதைப்பொறுத்து புதுப்புது விதங்களில் வடிவெடுக்கும் என்பதில் வியப்பில்லை.