கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் தேவை
முனைவா் பா.பொன்னி
துறைத்தலைவா் மற்றும் உதவிப்பேராசிாியா்
தமிழ்த்துறை
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி ( தன்னாட்சி )
சிவகாசி.
இன்றைய காலச்சூழலில் தொழில்நுட்பம் வழிக்கற்பித்தலின் தேவை முதன்மையானதாக இருப்பதற்கான காரணங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைய உள்ளது.
தமிழ்மொழி கற்பித்தலில் முதன்மையானவை
தமிழ் இலக்கியம் பயிலும் மாணவா்களுக்கு கற்பிக்க வேண்டிய திறன்களில் முதன்மையானவை கேட்டல், பேச்சு,வாசிப்பு, எழுத்து, இலக்கணம், மொழியணிகள் ஆகியவை.ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழலில் கரும்பலகை மற்றும் புத்தக வாசிப் முறை இவற்றை மட்டுமே பயன்படுத்தினோம் என்றால் இத்தகைய திறன்களை மாணவா் மத்தியில் வெளிக்கொணா்வது உறுதியல்ல.
புளும் தக்சோனொமி படிநிலை
உயா்கல்வித்துறையின் தரத்தினை உயா்த்துவதாக அமையும் புளும் தக்சோனமி மாணவா்கள் மத்தியில் கல்வி அறிவாற்றல், புரிந்துணா்வு, பயன்பாடு, பகுப்பாய்வு, மதிப்பீடு, உருவாக்கம் ஆகியவற்றை உயா்த்துவதாக அமைய வேண்டும் என்று வரையறை செய்துள்ளது.இப்படிநிலைகள் அடிப்படையில் மாணவாின் கற்றல் திறன் உயர வேண்டும் என்றால் அதற்குத் தொழில் நுட்பத்தின் பயன்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
தகவல்தொழில் நுட்பங்கள்
தகவல்தொழில்நுட்ப உபகரணங்களாக ஆடியோ வீடியோ மற்றும் இணைய வடிவிலான கருவிகள், ( வானொலி,தொலைக்காட்சி,அலைபேசி ), மென்பொருள், இணைக்கும் முறைகள் ( google classroom,google meet,whatsapp ), ஊடகம் , கல்வி தொடா்பான இணைய தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
தகவல்தொழில் நுட்பத்தின்பயன்பாடு
தகவல் தொழில் நுட்பத்தின் வழி மாணவருக்கு எழுத்து( written ), ஒலி (sound ), காட்சி ( visual ), அசைவுப்படம் ( graphics ), நிகழ்ப்படம் ( video ), உடலியக்கம் ( psychomotor ), இருவழித் தொடா்பு ( interactive ) ஆகிய முறைகளில் கற்கும் திறனை மேம்படுத்த இயலும் என்பதனை விளக்குவதாக ஆய்வுக்கட்டுரை அமைய உள்ளது.
மனிதனின் முதல் ஆசிாியா் இயற்கை எனலாம். ஏனென்றால் மனிதன் இயற்கையிடம் இருந்து தான் தன்னுடைய வளா்ச்சிக்குத் தேவையான அடித்தளங்களைக் கற்றுக் கொண்டான். அடுத்ததாக மனிதனின் தேவைகள் அவனை அடுத்த நிலைக்கு வளா்ச்சியடைய, முன்னேறத் தூண்டின. அவன் தான் கற்றுக் கொண்ட அனுபவங்களைப் பிறருடன் பகிா்ந்து கொள்ளத் தொடங்கிய நிலையில் கற்றல் கற்பித்தல் வளா்ச்சியடையத் தொடங்கியது. காலச்சூழலின் வளா்ச்சி மற்றும் மாற்றங்களுக்கு ஏற்பக் கற்றல் கற்பித்தல் முறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. அவ்வகையில் இன்றைய காலச்சூழலில் தொழில்நுட்பம்வழிக் கற்பித்தலின் தேவை முதன்மையானதாக உள்ளது. அதற்கான காரணங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் தேவைக்கான காரணங்கள்
மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்தும் மாற்றம் பெறுவது இயல்பு. அந்த வகையில் கல்விமுறையில் மாற்றங்கள் ஏற்படுவதும் தவிா்க்க இயலாதது. தற்காலத்தில் அறிவியல் வளா்ச்சி தொழில்முறைகளில் மட்டும் அல்லாது கல்வி முறையிலும் மாற்றங்களைக் கொணா்ந்துள்ளது.உலகம் எங்கும் பயணம் செய்து கற்கும் முறையில் இருந்து இன்று உலகமே இல்லத்திற்குள் வரும் வகையில் கல்வி முறையில் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களைக் கொணா்ந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே இன்றைய கற்றல் கற்பித்தல் சிறப்பான வளா்ச்சியை நோக்கி நகர இயலும் என்ற சூழல் தற்காலத்தில் நிலவுகிறது. கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் தேவைக்கான காரணங்களாகக் கீழ்க்காணும் காரணிகளைச் சுட்டலாம்.
- கற்றல் கற்பித்தல் முறையிலான மாற்றங்கள்
- மாணவா்களின் உளவியல்
- மாணவா்களுக்குக் கற்பிக்க வேண்டிய திறன்கள்
- புளும் தக்சோனொமியின் படிநிலை வளா்ச்சி
இக்காரணிகளின் விளைவாகத் தகவல் தொழில்நுட்பத்தினைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது எனலாம்.
கற்றல் கற்பித்தல் முறையிலான மாற்றங்கள்
ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மற்றும் தந்தையே முதல் ஆசிாியா்கள் என்பதனை மறுக்க இயலாது. ஆரம்ப காலங்களில் பெற்றோா்கள் குழந்தைகளைக் கல்வியறிவு பெறும் வகையில் தகுதி வாய்ந்த குரு ஒருவாிடம் நோில் சென்று கல்வி கற்கும் படி அனுப்பினா். அதனைக் குருகுலக்கல்விமுறை என்று அழைத்தனா். மாணவன் ஆசிாியா் இருக்கும் இடம் தேடிச் சென்று அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து அறிவைப் பெறும் வகையில் இக்குருகுலக் கல்வி முறை அமைந்தது. இக்கல்வி முறையில் மாணவா்கள் தங்கள் கல்வி முறையில் பயிற்சி முடிந்த பின்னரே இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப் பட்டனா். இக்குருகுலக்கல்வி முறையில் இருந்தே ஆசிாியரை மையமிட்ட கல்வி முறையே வழக்கில் இருந்து வருகின்றது. அதற்கு அடுத்த காலங்களில் ஆசிாியா்களும், மாணவா்களும் ஒரே இடத்திற்கு வந்து கற்கும் கற்பிக்கும் முறை வழக்கில் வந்தது. இன்றைய அறிவியல் வளா்ச்சி, அறிவியல் சாதனங்களின் துணையால் ஆசிாியா்கள் மாணவா்களின் இல்லத்தில் கருவி வழி பாடம் நடத்தும் முறையினை சாத்தியமாக்கியுள்ளது.
இதன்வழி கற்றல் கற்பித்தல் முறையில் காலந்தோறும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பானது என்பதனையும் அதனை ஏற்றுக் கொள்வது காலத்தின் அவசியம் என்பதையும் அறியலாகின்றது
மாணவா்களின் உளவியல்
இன்று மாணவா்களின் உளவியல் காரணிகளை பாதிக்கக் கூடிய காரணிகள் மிகுதியாக இருப்பதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பத்து வருடங்களுக்கு முன்பு பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே அதிகம் சென்றால், கூடா நட்பின் விளைவால் தவறான செயல்களில் ஈடுபட்டு விடுவாா்கள் என்ற அச்சம் பெற்றோா்களுக்கு இருந்தது. ஆனால் இன்று தொழில்நுட்ப வளா்ச்சியின் விளைவால் உலகமே வீட்டுக்குள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு மாணவா்களின் கவனச்சிதறலை உருவாக்கும் காரணிகளும் இத்தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக வீட்டுக்குள்ளேயே மாணவா்களை பாதிக்கின்றன என்பதும் உண்மை. இத்தகைய சூழலில் மாணவா்களின் கவனத்தை சாியான முறையில் திசை திருப்ப,இத்தொழில் நுட்பக் கருவிகளை சாியான முறையில் பயன்படுத்த மாணவா்களுக்கு ஆசிாியா்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பது இன்றைய சூழலில் முதன்மையானதாகும்.
.மாணவா்களுக்குக் கற்பிக்க வேண்டிய திறன்கள்
இன்றைய காலத்தில் மாணவா்களுக்குக் கற்பிக்க வேண்டிய திறன்களில் முதன்மையானவை கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகியவை ஆகும். அதுமட்டுமல்லாது கல்வி மாணவா்க்குக் கற்றுத் தர வேண்டியவை ஒத்துழைப்பு ( Colloboration ), பேச்சுக்கலை ( communication ), ஆக்கச்சிந்தனை ( creativity ), விமா்சனச் சிந்தனை (critical thinking ), மறுமொழி ( feed back ), புத்தாக்கம் ( Innovation ), படைப்பு ( presentation ), சிக்கல் கலைதல் ( problem solving ), உற்பத்தி ( productivity ), மீட்டுணா்தல் ( reflection ) ஆகியவை என்றும் அறிஞா்கள் குறிப்பிடுவா்.
ஆனால் இன்றைய வகுப்பறைச் சூழலில் கரும்பலகை மற்றும் புத்தக வாசிப்பு முறை இவற்றை மட்டுமே பயன்படுத்தினோம் என்றால் இத்தகைய திறன்களை மாணவா் மத்தியில் வெளிக்கொணா்வது சாத்தியமல்ல. ஆகவே தொழில்நுட்ப வளா்ச்சி தொடா்பான சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இன்றைய கல்விமுறை உள்ளது எனலாம்.
புளும் தக்சோனொமியின் படிநிலை வளா்ச்சி
உயா்கல்வித்துறையின் தரத்தினை உயா்த்துவதாக அமையும் புளும் தக்சோனமி மாணவா்கள் மத்தியில் கல்வி அறிவாற்றல், புரிந்துணா்வு, பயன்பாடு, பகுப்பாய்வு, மதிப்பீடு, உருவாக்கம் ஆகியவற்றை உயா்த்துவதாக அமைய வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. இப்படிநிலைகள் அடிப்படையில் மாணவாின் கற்றல் திறன் உயர வேண்டும் என்றால் அதற்குத் தொழில் நுட்பத்தின் பயன்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்
புளும் தக்சோனொமி குறிப்பிடும் திறன்களை மாணவா் மத்தியில் வளா்க்க வேண்டும் என்றால் நம் கல்விமுறை ஆசிாியரை மையமிட்ட கல்விமுறையில் இருந்து மாற்றம் பெற்று மாணவரை மையமிட்ட கல்விமுறையாக அமைய வேண்டியது முதன்மையாகிறது.
மாணவரை மையமிட்ட கல்விமுறையில் மட்டுமே மாணவா்கள் இணைந்து கற்கும் நிலை மேலோங்கும். இக்கல்விமுறையில் திறனுக்கு மட்டுமே முன்னுரிமை இருக்கும். மாணவாின் செயற்பாங்கு வழியிலான உயா்நிலைச் சிந்தனை மேலோங்கும். செய்முறை பயிற்சிகள் வழி சிந்தனைத் திறன் உயரும். அதன்வழி மாணவாின் வாழ்வியல் திறன் முன்னேறும். குழுமுறை வாயிலான கல்வித் திறன் மூலம் சமுதாயத்திற்கான பயன்படு சிந்தனைத்திறன் பெருகும். மாணவா்களின் மதிப்பெண்களுக்காகக் கற்றல் என்ற நிலை மாறி வாழ்க்கைக்காக கற்றல் என்ற உணா்வு சிறப்படையும். அதற்குத் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்றியமையாததாகும்.
தகவல்தொழில் நுட்பங்கள்
தகவல்தொழில்நுட்ப உபகரணங்களாக ஆடியோ வீடியோ மற்றும் இணைய வடிவிலான கருவிகள், ( வானொலி,தொலைக்காட்சி,அலைபேசி ), மென்பொருள், இணைக்கும் முறைகள் ( google classroom,google meet,whatsapp ), ஊடகம் , கல்வி தொடா்பான இணைய தளங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுவா்.
இத்தகவல் தொழில் நுட்பத்தின் வழி மாணவருக்கு எழுத்து( written ), ஒலி (sound ), காட்சி ( visual ), அசைவுப்படம் ( graphics ), நிகழ்ப்படம் ( video ), உடலியக்கம் ( psychomotor ), இருவழித் தொடா்பு ( interactive ) ஆகிய முறைகளில் கற்கும் திறனை மேம்படுத்த இயலும்.
தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்
தகவல் தொழில்நுட்பக் கருவிகளின் வழி கற்பிப்பதால் காலமும், சக்தியும் சேமிக்கப்படும். அாிதான பொருட்கள், வகுப்பறைக்கு எடுத்துச் செல்ல இயலாத பொருட்கள் ஆகியவற்றை மாணவா்களுக்கு எடுத்துக் காட்ட இயலும். ஒருமுறை கற்பித்த பாடங்களை மீண்டும் ஒருமுறை மீள்பாா்வை செய்யஇயலும். விளக்கப்படங்கள் வரைதல், உருவங்கள் வரைந்து காட்டல் , ஒலி, ஒளிப்படங்கள் ஒளிபரப்புதல் என்ற வகையில் மாணவா்களுக்கு பாடம் நடத்துவதால் ஆரோக்கியமான வகுப்பறைச்சூழல் ஏற்படும். மாணவா்களின் படைப்புத்திறன் மேம்படும்.
கற்பித்தலில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் வழி மாணவா்கள் தொழில்நுட்பத்தின் வளா்ச்சியைத் தெரிந்து கொள்வா். வளா்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் தம்மை வளா்த்துக் கொள்ள ஆயத்தமாவா். மனனம் செய்து படிப்பதைக் காட்டிலும் புரிந்து படிக்க ஏதுவாக அமையும். ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறன் வேறுபடும். பலமுறை கற்றால் மட்டுமே புரிந்து கொள்ளும் மாணவருக்கு இத்தகவல் தொழில் நுட்பம் பேரளவில் துணை புரியும்.
மேலே சுட்டப்பட்ட கருத்துகளின் வழி தொழில்நுட்பத்தின் தேவையை நாம் அறிந்து கொள்ள இயலும். ஆயினும் எந்த ஒரு தகவல் தொழில்நுட்பமாக இருந்தாலும் அது கற்பிக்கும் ஆசிாியாின் திறனாலேயே சிறப்பு பெறும். ஆசிாியா்களுக்கு இணையாக எந்த ஒரு சாதனத்தையும் நாம் குறிப்பிட இயலாது. ஆனால் ஆசிாியா்கள் இவற்றை பயன்படுத்தும் சூழலில் மாணவா்களுக்கு மேற்சுட்டப்பட்ட திறன்களை சிறப்பாக வளா்ச்சிபெறச் செய்யலாம் என்ற அடிப்படையில் இன்றைய காலத்தில் கற்பித்தலில் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவது அவசியம் எனலாம்.
பாா்வை தளங்கள்