கலாச்சாரக் கல்வியில் கணினியும் மொழியும்
கு.திலகவதி
முனைவர் பட்ட ஆய்வாளர்
கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி
முத்தூர்,தமிழ்நாடு,இந்தியா.
தி.நா.கிருஷ்ணமூர்த்தி
தலைமைப் பொறியாளர் & நிர்வாகி
அந்தமான் இலச்சத்தீவுகள் துறைமுகம்
போர்ட் பிளேயர்.
ஆய்வுச் சுருக்கம்:
கணிணி பயன்பாடு என்பது திரும்பத் திரும்ப ஒரே வேலையை செய்வதிலிருந்து, நமக்கு விடுதலை தருகின்ற ஒரு சேவையை தருகின்றது. அதனை அலுவலகப் பயன்பாட்டிற்கு மட்டும் இல்லாமல் மொழி சார்ந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்த முடிந்தால் அது மொழியின் வளர்ச்சிக்கான பாதையாக அமையும்.தமிழின் மிகச் சிறந்த,நாற்கவிகளுள் ஒன்றான சித்திரக் கவியைப் பொறுத்தவரை மரபில் பாடல் எழுதுவதோடு மட்டுமின்றி குறிப்பிட்ட வகையான ஓவியத்தோடுப் பொருந்தச் செய்வது இன்றியமையாதது. பலமுறை முயற்சித்தே அது முழுமையாக்கப்படுகிறது.அதனால் சலிப்பு தட்டுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகின்றது. இந்தக் காரணம் கொண்டே புதிய கவிஞர்கள் பலர் சித்திரக்கவி எழுதுவதில் ஆர்வம் குறைந்து வருவதையும் காண முடிகிறது. எனவே சித்திரக்கவியையும் நாம் கணினி பயன்பாடு கொண்டு எழுது முயற்சித்தால், எதிர் வரும் காலத்தில் பல சித்திரக் கவிஞர்கள் உருவாக வாய்ப்பாக அமையும்.. மேலும் இன்றைய இளைஞர்கள் பலரும் கணினியோடு இணைந்து இருப்பதால் இளைஞர்களுக்கும் சித்திரக்கவி என்ற தமிழ் அமுதினை இனிதே பருகிட ஒரு வாய்ப்பாகவும் இது அமையும். இந்த வகையில் சித்திரக்கவியை நம் பலரின் பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் என்று மென்பொருள் வசதியைப் பயன்படுத்தி சித்திரக்கவியினைப் படைக்கும் வழிமுறையைக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
பயன்பாட்டுச் சொற்கள்:
சித்திரக்கவி,கூடசதுக்கம்,கணினி,எக்செல்,மொழிப்பயன்பாடு.
Abstract:
Computer application provides a service that frees us from doing the same work over and over again. If it can be used not only for office use but also for language-related activities, it will be a path for the development of the language. For the pictorial poet, one of the best quatrains of Tamil, it is essential to match the tradition not only with songwriting but also with a specific type of painting. It is perfected after repeated attempts, so boredom becomes inevitable. Due to this reason, many new poets are losing interest in pictorial writing. So if we try to write chitrakavi using computer, it will be an opportunity to create many chitrakavi poets in the coming time.. And since many of today’s youth are connected with computer, this will also be an opportunity for the youth to enjoy the Tamil nectar of chitrakavi. In this way, this article shows the method of creating a graphic poem using the software called Microsoft Excel, which is used by many of us.
key words: chiththirakkavi ,kuudasathukkam ,software compute language.
முன்னுரை:
உலகில் மனிதன் தனக்கென கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை உருவாக்கி பாதுகாத்து வருகிறான்.நாகரிகமாக வாழும் மனிதன் உணவு,உடை,உறையுள் இவற்றினால் மட்டும் மன அமைதி அடைவதில்லை.அவற்றிற்கு மேலாக கலைகளைப் படைத்து அவற்றிலும் அறிவார்ந்த செறிவார்ந்தக் கருத்துக்களால் வளமூட்டி அதன் பெருமையை உலகறியச் செய்கிறான். ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் பெருமையில் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ் மொழியின் சிறப்பு வாய்ந்தப் பகுதியாக சித்திரக்கவி அமைகிறது.பார்ப்போரை பரவசமடையச் செய்யும் சித்திரக்கவிகள் எழுதுவது கடினம். குறிப்பிட்ட படவடிவுகளை உருவாக்கி ,யாப்பமைதியுடன் ஓவியத்தில் பொருந்துமாறு கவிதைகளைப் படைப்பது சித்திரக்கவி. இதன் கடினத் தன்மைக் கருதியே இதன் வளர்ச்சிக் குறைந்து போனது. “தமிழ் வளம் அருகியுள்ள இந்நாளில் சித்திரக்கவி திறம்படப் பாடுவார் சிலரே” (சித்திரக் கவி மாலை –அணிந்துரை )என்று திரு.வி.க அவர்கள் காலத்திலேயே குறிப்பிட்டு இருக்கின்ற நிலையில் இன்றையக் காலகட்டத்தில் விரல் விட்டு எண்ணும் அளிவிலேயே சித்திரக்கவி படைப்பாளர்கள் இருப்பதைக் காணமுடிகிறது. அதனை சற்று எளிமைப் படுத்த தற்போது சில கவிஞர்கள் முயன்று வருகிறார்கள்.சொற்களில் இனிமையும், எழுதுத்தில் எளிமையும் கொண்டு எழுதுவதோடு தொழில் நுட்பத்தையும் இணைத்துக் கொண்டால் தமிழின் சிறப்பை அடுத்த தலைமுறைக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும் . கணினியின் முக்கியப் பயன்பாடான எக்செல் லில் சித்திரக்கவி எழுதும் வகையினை இக்கட்டுரை விளக்குகிறது.
சித்திரக்கவி:
“ஆசு மதுரஞ் சித்திரம் வித்தார மாகு
நாற்கவி யறையுங்க் காலே
(முத்து வீரியம் 55)
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரே சித்திரக் கவிக்கான முன்னோடியாவார். கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய மாறனலங்காரம் சொல்லணியியலில் இருபத்தாறு வகையான சித்திரக் கவிகளைக் கூறுகிறது.”வல்லின மெல்லின மிடையினப் பாட்டே….
பழிதீர் மடக்குடைச் சித்திரப் பாவே”
(மாறனலங்காரம் -270)
தண்டியலங்காரம், வீரசோழியம்,இலக்கண விளக்கம்,சுவாமிநாதம்,குவலயான்ந்தம் போன்ற நூல்களும் சித்திரக்கவிக்கான இலக்கணம் தருகின்றன.
வெண்பாப் பாட்டியல்:
வெண்பாப் பாட்டியல் சித்திரக்கவி எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறுகிறது
.”யாப்புடைய மாலைமாற் றாதியா வேனையவும்
வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து-நீப்பிலா
வண்ணமுந் தொன்னூன் மரபு வழுவாமற்
பன்னுவது சித்திரத்தின் பா”
(வெண்பாப் பாட்டியல் 2.செய்யுளியல்.4)
யாப்பமைதியுடன் ஓவியங்களில் எழுதப் படும் சித்திரக்கவி வகைகளுள் முக்கியமான ஒன்று கூட சதுக்கம்.
கூடசதுக்கம்:
கூடம்-மறைவு :சதுக்கம்-நான்கன் கூட்டம். மாறனலங்க்காரம் இதனை கூட சதுர்த்தம் என்கிறது.
நாலடியால் ஆன ஒரு செய்யுளின் நான்காம் அடி ஏனைய மூன்று அடிகளை மேனின்று கீழிழிந்தும் ,கீழ்நின்று மேலேறுவதுமாக எழுதி முடித்த வரி மூன்றிடை மறைந்து நிற்பது கூட சதுர்த்தம் எனலாம்.ஒரு செய்யுளின் ஈற்றடியில் அமைந்துள்ள எழுத்துக்கள் ஏனைய மூன்றடிகளிலும் மறைந்து நிற்கும் வகையில் அமையும் பாடல் என்றும் குறிப்[பிடுவர்.
“பாடலின் நாலாம் பதம்பொறி வரியிடைக்
கூடமுற் றதுவே கூடசதுர்த்தம்”
(மாறனலங்காரம் 293)
“.பின் அடி எழுத்துஏனை அடியின்
விழுந்து அடங்கல் கூடச்சதுக்கம்
சுவாமிநாதம்,197)
உதாரணப் பாடல்:
போதாவே மாதாகா லாமாயூ ராநேசா
யோதாதி யேவாவே கோவேபூ பாலாவா
நாதாவே சூதேதே காவாயே தேவாவா
தாதாமா நேதாவா வேலாதா தேவாவா
(கந்தன் சித்திரபந்தன மாலை 31)
நான்காவது அடி மூன்றடிக்குள் அமைந்திருப்பதைக் காணலாம்.தற்காலத்தில் சித்திரக் கவி எழுதுபவர்களில் பாட்டரசர்.கி.பாரதிதாசன் அவர்கள் மிக எளிமையான சித்திரக் கவிகளைப் படைத்திருக்கிறார்.
சித்திரக்கவிகளை எளிமைப்படுத்தி எழுதுவது அவசியமாகிறது.சொற்களில் எளிமை எவ்வளவு அவசியமோ அதே அளவு தொழில்நுட்பமும் அவசியமாகிறது. அவ்வகையில் சித்திரக்கவிகளை எக்செல் வழியாக எழுதுவது சுலபமானதாகிறது.
எக்செல் மூலம் சித்திரக்கவி
கூட சதுக்கம் தயார் செய்யும் பொருட்டு, முதலில் நான்கு அடிகளை உடைய கவியினை எழுதிட வேண்டும். அதில் நான்காவது அடி மட்டும் சித்திரக்கவியின் நடுவே வருகின்ற அடியாகவே அமையும். ஆனால் மற்ற மூன்று அடிகளும் சித்திரக்கவியின் மேலிருந்து கீழே இறங்கி, வலது புறம் சென்று, மேலும் மேலே சென்று மீண்டும் வலதுபுறம் சென்று கீழே இறங்கி வலது புறம் சென்று இப்படியாக படத்தில் காட்டியபடி அமைந்திருக்க வேண்டும். இதனை அமைப்பதற்காக பலமுறை பல எழுத்துக்களை, சொற்களை, சீர்படுத்த வேண்டிய தேவைகள் ஏற்படும். அதனை மிகவும் எளிமையான முறையில் கணினியைப் பயன்படுத்தி செய்துவிடலாம்.
மைக்ரோசாப்டின் எம் எஸ் எக்செல் பொதுவாக கணக்கு வழக்குகள் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அதே வசதியை வைத்துக்கொண்டு இன்ன பிற பயன்பாடுகளும் செய்யலாம். இதே வகையில்தான் இந்த சித்திர கவிதையும் எழுத அதனை பயன்படுத்தினோம். கூடச் சதுக்கம் என்ற வகை சித்திர கவியில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு அடி என்னவென்றால், பாடலில் வரும் நான்காவது அடி. அதாவது அந்த பாடலில் வரும் நான்காவது அடி, சித்திரக்கவியின் நடுவில் வர வேண்டும். அப்படி நடுவில் வருகின்ற அடியை மட்டும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தாக அமைத்துவிட்டால் நாம் சித்திரக்கவியினைப் நிறைவு செய்வது என்பது எளிதான காரியமாக அமைந்துவிடும்.
ஒருவழியாக சித்திரக் கவி வடிவில் நாம் அதனை எழுதி விட்டோம். ஆனால் அதனை கவிதையின் வடிவமாக பார்ப்பது எப்படி? அதுவும் நம்மால் சுலபமாக செய்ய இயலும் இதே எம்எஸ் எக்சல் உதவியுடன். இரண்டு கட்டங்களில் இருக்கின்ற செய்திகளை இணைப்பதற்கான வசதி இருக்கிறது. இதனை கண்காடினேட் என்ற வசதி மூலம் செய்யலாம். இரண்டு செல்களில் இருக்கின்ற எழுத்துக்களை, வார்த்தைகளை நம்மால் இணைக்க இயலும். உதாரணமாக பூ, மு, க என்ற மூன்று எழுத்தும் தனித்தனி அறையில் இருக்கின்றன. அந்த மூன்று எழுத்தையும் நாம் ஒன்றாக இணைக்க இயலும். அதன் பிறகு இடைவெளியையினை உண்டாக்க ஏதுவாக டபுள் கோட் என்ற குறியீடு பயன்படுத்தி நாம் செய்துவிடலாம்.
இப்படியாக செய்திட வேண்டும்.
இது பார்ப்பதற்குக் கடினமானது போல் தெரிந்தாலும், செய்வது மிக எளிது. சித்திரக்கவியை எழுதி அதனை கவிதையாகவும் நாம் மாற்றிவிட இயலும். இந்த வகையான வடிவத்தை உருவாக்கி சேமித்துக் கொண்டால் எந்தக் கவிதையையும் இதில் எழுதிவிடுவது சுலபம் ஆகும்.ஏற்கனவே கணினியில் எழுதப்பட்ட ஒரு சித்திரக்கவியில் எழுத்துக்களை மாற்றி புதிதாக சிந்தனைக்கு ஏற்றபடி கவிதையை எழுதி படத்தில் சேர்க்க இயலும்.
முடிவுரை:
தமிழ் மொழியின் தொன்மையான கலாச்சாரமான சித்திரக்கவியின் சிறப்புகளை உலகிற்கு எடுத்து இயம்ப, தமிழின் தனிச் சுவையை அனைவரும் சுவைத்திட கணினியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதுமையாகவும்,எளிமையாகவும் கூடசதுக்கம் சித்திரக்கவி எழுதும் முரை இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. வாருங்கள் தமிழின் சுவையினை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம் புதிய தொழில்நுட்பங்களுடன்.
துணைநூற்பட்டியல்:
- முத்துவீரியம்,சுவாமிநாதம்,குவலயானந்தம்,,தமிழ் இலக்கண நூல்கள்,பதிப்பாசிரியர்,ச.வே.சுப்பிரமணியன்,மெய்யப்பன் பதிப்பகம்,சென்னை,,2007
- .சித்திரக் கவிகள்,வே.இரா.மாதவன்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை,
- சித்திரக் கவிகளஞ்சியம்,பதிப்பாசிரியர் வ.ஜெயதேவன்,சென்னைப் பல்கலைக் கழகம்,
- சித்திரக்கவிதிரட்டு,ஞானம் பாலச்சந்திரன்,ஞானம் பதிப்பக வெளியீடு,
- https://bharathidasanfrance.blogspot
- .எளியமுறையில் எக்செல்,தி,நா.கிருஷ்ணமூர்த்தி,கணியத்தமிழ் வெளியீடு,2006,சென்னை.