கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

ச.கண்மணி கணேசன் (ப.நி.)

முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்

ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி. 626189 இந்தியா

kanmanitamilskc@gmail.com

அறிமுகம் 

பள்ளியிறுதித் தேர்வு முடித்துக் கல்லூரிக்கு வரும் மாணவர்  கற்றுக்  கொள்ள வேண்டிய பொதுத்தமிழைக் கணினி மூலம் எவ்வாறு கற்கலாம்; கற்பிக்கலாம் என்பதை அலசிப் பார்ப்பதே  இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். எழுதுவதற்கு மட்டுமே முதன்மை கொடுக்கும் போக்கு கல்லூரிக் கல்வியில் பல்லாண்டு காலமாக நிலைத்திருப்பதால்; தமிழ்க் கல்வியின் தரத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தேவை உள்ளது.

  கல்லூரியில் தமிழ் கற்பித்த அனுபவம் இக்கட்டுரையின் பரப்பும் எல்லையுமாக அமைய;  தன்னாட்சியில் பாடத்திட்டம் தீட்டிய பயிற்சி    சிக்கலுக்குத் தீர்வு  காண முனைகிறது.  காரணகாரியத் தொடர்புடன் விளக்கும் மரபுவழிப்பட்ட ஆய்வாக அமைந்து; சிக்கலைக் கணினிப் பயன்பாட்டால்  தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையை  அளிக்கிறது.

கற்றல் கற்பித்தலுக்கு முன்னும் பின்னும்

கற்பிக்கும் உத்திகள்  பாடத்திட்டத்துடன்   தொடர்புடையன. மாணவர் கற்ற பிறகு சோதனை செய்வது ஆசிரியப் பணியின் அடுத்த பொறுப்பு. கற்றல் கற்பித்தல் ஒருபுறம் பாடத்திட்டத்தில் காலூன்றி; மறுபுறம் தேர்வுமுறையை எட்டிப் பார்க்கும். அதனால் தான் பல்கலைக்கழக நதிநல்கைக் குழுவின் தேசீயத் தரநிர்ணய மதிப்பீட்டுக் குழுமம் (National Assessment and Accreditation Council) கல்வி நிறுவனங்களின் தகுதியை மதிப்பிடப் பாடத்தன்மைகளை (curricular aspects- 1st criterion) முதல் கூறாகவும்; கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செய்தலை (teaching learning and evaluation) அடுத்த கூறாகவும் வரையறுக்கிறது.   எனவே இக்கட்டுரை பாடத் திட்டத்திலிருந்து தொடங்குகிறது.  

மொழியும் மொழிக்கல்வியும்

மொழி என்னும் கருத்துப் பரிமாற்றத்திற்குரிய கருவி; பேசும் வரை மட்டுமே உயிர்த்திருக்கும். அன்றாட வாழ்வில் பேசாத மொழி காலப் போக்கில் அழிந்துவிடும். எனவே  மொழிக்கல்வி; எழுதக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வாய்த்திறனுக்கும் கொடுத்தல்  நலம். மொழியின் அடிப்படை அலகு ஒலி. மொழிக் கல்வியிலும் இந்த அலகு சிறப்பிடம் பெறவேண்டும். பள்ளிக்கல்வியில் வாய்மொழிப்  பயிற்சியும் தேர்வும்  பாலர் பள்ளியில் மட்டுமே உள்ளன.

இன்றைய சிக்கல்         

     பெரும்பாலான மாணவர் வாயாரத் தமிழ் வாசிக்கத் தடுமாறுகின்றனர். தட்டுத்தடுமாறி வாசிப்பவரின் தமிழில் /ல்,ள்,ழ்/,  /ர்,ற்/, /ன்,ண்/ ஆகியவற்றின் ஒலிப்பில் வேறுபாடு இல்லை. மேற்சுட்டிய ஒலிகள் பொருள் வேறுபாட்டிற்கு உரிய அடிப்படைக் காரணிகள். அவற்றை மாற்றி ஒலிப்பதும், எழுதுவதும் பெரும்பிழை ஆகும். ஒற்று மிகும் இடங்களை ஒலிக்கும்போது கொடுக்க வேண்டிய அழுத்தம் இன்றியமையாதது. நிறுத்தி வாசிக்க வேண்டிய இடம் எது? சேர்த்து வாசிக்க வேண்டிய இடம் எது? என்னும் வேறுபாடும், விளைவும் பற்றிய புரிதல்  தேவை. இயந்திரத்தன்மையுடன் ஒரே சீராக ஏற்ற இறக்கங்களின்றி வாசிப்பதால்  பொருள் தெளிவுறாது. இந்நடைமுறைப்  பிரச்சினைகளைக்  கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைய வேண்டும்.

பட்டப்படிப்பில் பொதுத்தமிழுக்குக்  கிடைக்கும் நேரம்

ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும்; முதல் நான்கு பருவங்களில்  (semesters) பொதுத்தமிழுக்கென ஒதுக்கப்படும்  (6×15=90)× 4= 360 மணி நேரத்தில் செய்யக்கூடியதை மட்டுமே நாம்  திட்டமிட இயலும். இந்தக் கால அளவில் மாற்றம் நிகழ வழியில்லை. ஏனெனில் இது பல்கலைக்கழக நதி நல்கைக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட திட்டவரைவில் இடம்பெறும் பரிந்துரை ஆகும். ஒரு பருவத்திற்கு 90மணி நேரம் வீதம் நான்கு பருவங்களில் நடக்கும்   பொதுத்தமிழ் வகுப்புகள் இலக்கியம், இலக்கணம், இலக்கியவரலாறு ஆகிய பாடங்களை மட்டுமே இன்றுவரை கற்றுத்தருகின்றன. இவற்றுடன் வாய் விட்டுத் தமிழை வாசித்தலும் அதை மதிப்பீடு செய்வதும் சேர்த்துக் கொள்ள வேண்டியவை ஆகின்றன.

தமிழைத் தாய்மொழியாகப் பெறாத மாணவர்களுக்கும், பள்ளியில் தமிழ் பயிலாத மாணவர்களுக்கும் அடிப்படைத் தமிழ் என்ற பெயரில் நடத்தும் பாடங்களுடனும்  இதே பயிற்சியைச் சேர்ப்பதில் முட்டுப்பாடு ஏதுமில்லை. அவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு மணி நேரம் என ஒரு பருவத்திற்கு 30மணி நேரம்; ஆக நான்கு பருவங்களில் (30×4=) 120மணி நேரம் தமிழ் வகுப்புகள் நடக்கும்.

தமிழ்வகுப்பில் கணினிப் பயன்பாடு

         தொற்று நச்சில் காரணமாக உள்ளிருக்கும் இக்காலம் இதுநாள் வரை இருந்த பல நடைமுறைகளைக்  காலாவதி ஆக்கி விட்டது. பள்ளிக்   குழந்தைகளும்  தமது பாடங்களைக் கணினி மூலம் கற்கின்றனர். கல்வியாண்டின் ஒவ்வொரு பருவத்  தொடக்கத்திலும்  வகுப்பாசிரியர் தாம் எடுக்கவிருக்கும் பாடங்களைக்  காலஅட்டவணைக்கு  உட்படுத்தித் தலைமையிடத்தில் கணினி உபகரணங்களாகச் (notes of lesson) சமர்ப்பித்து விட வேண்டும். கல்லூரிப் பாடங்கள் தமிழ் உச்சரிப்புக்கு முதலிடம் கொடுத்து குறுந்தட்டுக்களாகவோ;  அது போன்ற வேறு பிற உபகரணங்களாகவோ ஒலிப்பதிவு செய்யப்பட்டு  பருவத்தின் தொடக்கத்திலேயே மாணவர்க்கு வழங்கப்பட வேண்டும். மாணவர் அன்றாடம் அதைத் திரும்பத்திரும்ப வீட்டில் கேட்டு உடன்சேர்ந்து வாய் விட்டுப் பயில்வது அவசியம். அப்பதிவுகள் சரியான உச்சரிப்பில் அமைய வேண்டும் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வதன் மூலம் வகுப்பில் மாணவர் தமிழ் வாசிக்கத் தாராளமாக நேரம் கிடைக்கும். அவர்கள் வாசிப்பதும் சொல்வதும் கணினி உதவியுடன் மதிப்பிடப்பட  வேண்டும். மொழியியல் சோதனைச் சாலைகளில் ஒலிகளைச் சரிவர அடையாளம் காணும் கருவிகள் உள்ளன. எனவே கணினித் துணையுடன் மாணவர் சொல்வதை மதிப்பிட இயலும். தமிழ்வகுப்புகளில் அதற்குரிய உபகரணங்கள் இருக்க வேண்டும்.

வாசிப்புப் பயிற்சிக்குரிய பாடம்

அந்தந்தப் பருவத்திற்குரிய பாடங்களே வாசிப்பதற்கு உரியனவாய்  அமைவது தான் வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்கும். இதன் மூலம் பாடத்தை ஆழமாகவும் அகலமாகவும் பயின்று கொள்வதுடன்; மொழி உச்சரிப்பும் சீராகும்.  

முதல்பருவத்தில் அடிப்படை அலகாகிய ஒலிகளுக்கும் அவற்றைத் தவறின்றி  உச்சரிப்பதற்கும் முதலிடம் தந்து சொற்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கலாம். அவ்வாறு சொற்பயிற்சி அளிக்கப் பாடப்பகுதியில் காணும்  தொடர்புடைய சொற்களின் குறைஒலி இணைகளைத் (minimal pairs) தொகுத்துப் பாடமாக்கலாம். எடுத்துக்காட்டாக பாடப்பகுதியில் ‘முல்லை’ என்ற சொல் இருப்பின்;

முல்லை  கொல்லை     கல்லை   வல்லை     புல்லை   சொல்லை  

முள்ளை  கொள்ளை கள்ளை  வள்ளை   புள்ளை     சொள்ளை    

என்ற போக்கில் 100சொல் தொகுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலே காட்டியிருப்பது ஒரு சொல் தொகுதி மட்டுமே.

இரண்டாம்பருவம்  சொற்றொடர்கள்  வாசிக்கும் பயிற்சியாக அமைய வேண்டும். /க், ச், த், ப்/ ஒற்று மிகும் இடங்களுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்கப் பழக்க வேண்டும். சான்றாக;

எடுத்துக்கொடுத்தான்          எடுத்துச்சொன்னான்

எடுத்துத்தைத்தான்          எடுத்துப் பார்த்தான்

இதுபோல் 100தொடர்த் தொகுதிகள் பாடப்பகுதியுடன் தொடர்புடையனவாய் அமைக்க வேண்டும்.

மூன்றாவது பருவத்தில் முழுமையான தொடர்களை வாசிக்கும் பயிற்சி தரவேண்டும். நிறுத்தற்குறிகளுடன்; பாடத்தோடு தொடர்புடைய   100வாக்கியங்கள்  உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் சரிவர நிறுத்தி வாசிக்கக் கற்றுத்தர வேண்டும்.

நான்காவது பருவத்தில் ஒட்டுமொத்தத் திறனைப் பாடல் வாசிப்பின் மூலமும், உரைநடை வாசிப்பின் மூலமும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

அடிப்படைத்தமிழ் மாணவர்க்கு விளம்பரப்பலகைகள், பேருந்துத்  தடஅறிவிப்பு, செய்தித்தாள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகை வாசித்தல் எனப் புதிய கோணங்களில் தமிழ் கற்றுக் கொடுப்பதே நல்லது. அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய திருக்குறள், நாலடியார், மூதுரை, கொன்றை வேந்தன் போன்ற பாடல்களை நான்காம் பருவத்தில் பாடமாக வைக்கலாம்.

அகமதிப்பீடும் புறமதிப்பீடும் (internal and external assessments)      

       மதிப்பீடுகளைப் பங்கீடு செய்வதில் தன்னாட்சி நிறுவனங்களுக்குச்  சுதந்திரம் உள்ளது. 50% அகமதிப்பீடும் 50% புறமதிப்பீடும் முறையே பேசும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் ஒதுக்கலாம். அகமதிப்பீட்டுக்கென நடைபெறும் மூன்று சுழல் தேர்வுகளில் (cycle tests) பாடத்தின் ஆழமான அறிவைத் துல்லியமாகச் சோதித்தறியும் வினாடிவினா, தானாக வடிவமைக்கக் கூடிய பயிற்சிக்கட்டுரைகள், தமிழ் வாசிப்பு என மூன்றும் இடம்பெற வேண்டும். எப்போது வாய்மொழித்தேர்வு மதிப்பிடும் முறைகளில் ஒன்றாக  ஆக்கப்படுகிறதோ; அப்போது தான் வாய்மொழிப் பயிற்சிக்கு உரிய சிறப்பிடம் கிடைக்கும். வாசிப்புப் பயிற்சியின் அகமதிப்பீட்டைக் கணினியே மதிப்பிடவேண்டும். புறமதிப்பீட்டில் எழுத்துத் தேர்வை (written exam) மட்டும்  வைத்துக் கொள்ளலாம்.

      பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னர் வாய்மொழிப் பயிற்சிகள் உள்ளன எனினும்; பள்ளியில் வாய்மொழிப் பயிற்சி முக்கியத்துவம் பெறவில்லை என்பது பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர் மூலம் தெரிகிறது.

முடிபும் பயனும்      

‘செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற முதுமொழியின்படி  வாய்மொழிப்பயிற்சிக்கும் தேர்வுக்கும் இடம்கொடுப்பது சிறந்தது.கற்றல் கற்பித்தல் மதிப்பிடுவதில் கணினிப் பயன்பாடு இடம்பெறும் போது; தமிழுக்கே உரிய சிறப்புஒலிகளை இறவாமல் பாதுகாக்க இயலும்.

error: Content is protected !!