கல்வியில் தொழில்நுட்பத்தின் ஆளுமை

கல்வியில் தொழில்நுட்பத்தின் ஆளுமை

முனைவர். இரா. சுதா பெரியதாய்,

இயற்பியல் துறை துணை பேராசிரியை,                            

தி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,

சிவகாசி.

மின்னஞ்சல்        : sudhaperiathai-phy@sfrcollege.edu.in

ஆய்வுச் சுருக்கம்

கற்கால மனிதனின் எண்குறிகள் முதல் இன்றைய இணையவழி கற்றல் வரை, கல்வியும் மனிதனோடு சேர்ந்து பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. கல்வி, ஒருவருக்கு விலை மதிப்பற்ற செல்வம் என்கிறார் திருவள்ளுவர். அத்தகைய கல்வியை, எல்லைகள் கடந்து, உலகமக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் தொழில்நுட்பம் பெரும் பங்காற்றுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு தகவல்களும் நம் விரல்நுனியில் கிடைக்கின்றன. 15ஆம் நூற்றாண்டில் குட்டன்பர்கின் அச்சு இயந்திரம் தொடங்கிய அறிவுப் புரட்சியை இணையம் இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. புத்தகங்களும் நூலகங்களும் உருவான வரலாற்றையும், தொழில்நுட்பத்தால் கல்வியில் உண்டான மாற்றங்களையும், தற்காலத்தில் கற்றல் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் உள்ள பன்முக வளர்ச்சி பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

குறிப்புச்சொற்கள் 

காகிதம், புத்தகம், நூலகம், அச்சுஇயந்திரம், கல்வி, தொழில்நுட்பம், இணையம்

முன்னுரை

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.[1]

கல்வியின் பெருமையைச் சொல்லும் இந்த நாலடியார் பாடல், நம்முடைய மயக்கத்தை தீர்க்கக்கூடிய மருந்து கல்வியைப் போல எதுவும் இல்லை என்கின்றது. மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றுவிட்டால் அவர்களை சுரண்டிப் பிழைக்க முடியாது என்று ஆட்சி செய்பவர்களும், ஆளும் வர்க்கமும் நினைத்தது. உயர் குலத்தில் பிறந்தோருக்கு மட்டும் கல்வி, செல்வந்தர்களுக்கு மட்டும் கல்வி, அவற்றிலும் ஆண்களுக்கே அன்றி பெண்களுக்கு கல்வி இல்லை என்று சதி செய்யப்பட்டு மிகச் சிலருக்கே கல்வி கற்க வாய்ப்பளிக்கப்பட்டது. காலங்காலமாக வழக்கத்தில் இருந்து வந்த இந்த இழிநிலை மாற்றம் பெற  பெரிதும் துணை நிற்பது குட்டென்பெர்கின் அச்சு இயந்திரம் முதல் இன்றைய இணைய வகுப்புகள் வரை வளர்ந்து வந்திருக்கின்ற தொழில்நுட்பம் தான் என்றால் அது மிகையில்லை. அனைவருக்கும் சமமான இலவச கட்டாயக் கல்வி இல்லாத காரணத்தினால் ஒரு குழந்தையின் கல்விச் சூழலை, அந்தக் குழந்தையின் பாலினமும், பெற்றோரின் மொழியும், இனமும், மதமும், வருமானமுமே தீர்மானிக்கின்றன. காலங்காலமாக இந்த தடைக்கற்கள் இருந்து வந்தாலும், இவற்றை மீறி நம்முடைய குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வியை பெறுவதற்கு தொழில்நுட்பத்தின் பங்கு என்ன என்பதைச் சற்று விரிவாக பார்க்கலாம்.

எண்ணும்         எழுத்தும்
           மொழிக்கு வரிவடிவம் இல்லாமல் போனால் அடுத்த தலைமுறைகளுக்கு அறிவைக் கொண்டு போவது மிகுந்த கடினமான செயல். எழுதா மறையாக 4 வேதங்கள்[2] இருந்ததினால் தான் அதை மனப்பாடமாக சொல்லத் தெரிந்தவர்கள் சதுர்வேதி, திரிவேதி[3] என்று சிறப்பிக்கபட்டனர். சங்க இலக்கியத்தை மனப்பாடமாக சொல்பவர்கள் யாரும் இல்லை என்றாலும் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்த காரணத்தால், உ. வே. சாமிநாதஐயர்[4] அவர்களின் தேடுதலால் 2000 வருடங்களைத் தாண்டியும் நம் கையில் அவை கிடைத்தன.

தாய்மொழிக்       கல்வி “தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா” என்றார் கவியரசர் கண்ணதாசன்[5].  தாய் நமக்குத் தந்த சீதனத்தில் முதன்மையானது தாய் மொழியாகும். தாய்மொழியில் கல்வி கற்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை ஆகும். ஆனாலும் ஆங்கில மொழி பயில்வது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக காலத்தின் கட்டாயமாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020, தாய்மொழி வழியாக பயில்வதை 5ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கி உள்ளது வரவேற்கத் தக்கது. Wikipedia போன்ற கலைக்களஞ்சியங்கள் முதன்மையாக ஆங்கிலத்தில் இருந்தாலும், தமிழிலும் மற்றும் பல மொழிகளிலும் இருப்பது நமக்குப் பேருதவியாக இருக்கின்றது. இது தவிர பல மொழிகளில் translator கருவிகள் கிடைக்கின்றன. Google translatorஇன் பயன் நாம் அனைவரும் அறிந்ததே.

காகித         ஓடம் “எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்” என்று சொன்ன பாரதியார் என்ன காரணத்தினாலோ எழுதும் காகிதத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். தமிழர்கள் தாங்கள் எழுதும் தளமாக கருங்கற்கள், செப்பேடுகள், பணை ஒலை நறுக்குகள் போன்றவற்றைக் கொண்டிருந்தனர். வடஇந்தியாவிலே மரபட்டைகளிலே எழுதும் வழக்கம் இருந்தது. எகிப்தில் நைல் நதிக்கரையில் விளையும் பேபிரஸ் என்ற ஒரு வகைப் புற்களை, பாய் போல நெய்து, அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து எழுதும் வழக்கம் இருந்தது. சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட காகிதமானது பின்னர் துருக்கியர்கள் மூலமாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது பேபிரசின்[6] நினைவாக பேப்பர் என்று அழைக்கப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக அமிலம் கலவாத காகிதத்தால் தயாரிக்கப்பட்ட நீண்ட வாழ் நாட்களை உடைய புத்தகங்கள் தற்போது கிடைக்கின்றன.

அச்சு இயந்திரம்

கல்விக்கான தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் கண்டுபிடிப்பாக திகழ்வது ஜெர்மானியரான ஜான் குட்டென்பர்கின் அச்சு இயந்திரம் ஆகும்.  விளக்கின் முன் இருள் நீங்குவது போல, அச்சு இயந்திரம் வந்தவுடன் அறியாமை இருள் விலகியது.  செல்வந்தர்கள் மற்றும் அதிகாரம் படைத்தவர்களிடம் இருந்து ஏழைகளுக்கும், அதிகாரம் அற்றவர்களுக்கும், கல்வியைக் கொண்டு சென்றது அச்சு இயந்திரம். புத்தகங்களை ஒன்று ஒன்றாக கையெழுத்துப் பிரதி எடுக்கும் முறைக்குப் பதிலாக மொத்தமாக ஒரே நேரத்தில் பல பிரதிகளை தயாரித்த அச்சு இயந்திரம் கல்வியைப் பரவலாக ஆக்கியது. போர்த்துகீசிய தலைநகரான லிஸ்பனிலே முதல் தமிழ் அச்சு நூலான கார்ட்டிலா[7], ரோமானிய எழுத்திலே 1554ஆம் வருடத்தில் தயாரிக்கப்பட்டு தமிழகம் வந்தடைந்தது. இந்திய மொழிகளில் மட்டுமல்ல ஆசிய மொழிகளிலேயே முதல் அச்சு நூல் என்னும் பெருமையைக் கொண்டது. பின்பு கொல்லம் நகரிலே 1578ஆம் வருடத்திலே தமிழ் எழுத்திலேயே அச்சாக்கப்பட்ட “தம்பிரான் வணக்கம்”[7] என்னும் நூல் வெளியாகியது. Hickey’s Bengal gazette என்ற பத்திரிக்கை[8] 1780ஆம் ஆண்டு வங்காளத்தில் வெளியாகி அன்றாட அரசியல் சமூக நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது. ஆசியாவின் முதல் செய்தித்தாள் என்ற பெருமையும் பெற்றது.  தமிழிலே வெளியிடப்பட்ட இந்தியா போன்ற பத்திரிக்கைகள் மக்களிடம் சுதந்திர தாகத்தை உண்டு செய்தன. பாமர மக்களிடம் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் பெரும்பணி ஆற்றுகின்றன. குடியரசு போன்ற பத்திரிக்கைகள் மூலம் தந்தை பெரியார் அவர்கள் தமது புரட்சிக் கருத்துகளை மக்களிடம் பரப்பினார். மக்களாட்சியின் மூன்று தூண்களாக சட்டசபை, நிர்வாகம், நீதி ஆகியவை இருக்கையிலே மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருக்கும் அச்சு ஊடகங்களும் மற்ற இதர ஊடகங்களும் நான்காவது தூணாக மதிக்கபடுகின்றன.

நூலகங்கள்


          உலகின் முதல் நாகரிகமாக கருதப் படுகின்ற சுமேரிய நாகரிக காலத்திலேயே களிமண்ணிலே ஆணியால் எழுதி, பிறகு அதனைச் சுட்டு, சுட்ட களிமண் பலகைகளால் ஆன நூலகங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. மன்னர்களின் ஆணைகள் மட்டுமல்ல, உலகின் முதல் ஆதி காவியமான “கில்காமெஷ்” காப்பியமும்[9] நமக்கு கிடைத்துள்ளன. தமிழகத்திலே திருக்கோவில்கள் கலைகளின் மையமாகத் திகழ்ந்து வந்ததை நாம் அறிவோம். மாமன்னர் இராஜராஜன்  அவர்கள் பெருமுயற்சி எடுத்து சிதம்பரம் கோயிலிலே சிறைப்பட்டு, செல்லரித்துப் போன ஓலைச்சுவடிகளில் இருந்து தேவாரப் பாடல்களை மீட்டார் என்பதும் நமக்குத் தெரிந்ததே. தஞ்சையில், சரபோஜி மன்னரின் முயற்சியால் கட்டி எழுப்பப்பட்ட சரசுவதி மகால் நூலகம் சிறந்த ஓலைச்சுவடி நூலகமாகத் திகழ்கின்றது. நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் அங்குள்ள ஓலைச் சுவடிகளும் பழைய நூல்களும் பராமரிக்கப் படுகின்றன. பல பொது நூலகங்கள் மற்றும்  கல்விச் சாலைகளில் உள்ள நூலகங்கள் ஆகியவற்றில் உள்ள  நூற்பட்டியலை எளிதாக கணிப்பொறி மூலமாகவும், இணையத்தின் மூலமாகவும் தேடுவது OPAC தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக சாத்தியமாகி உள்ளது. கல்லூரி நூலகங்களுக்கு மத்திய அரசின் மூலம் NLIST என்ற அமைப்பின் வழியாக இணையத்தின் வழியாக மிக மிகக் குறைந்த கட்டணத்தில் எராளமான டிஜிட்டல் புத்தகங்களும், digital பத்திரிகைகளும்வழங்கப்படுகின்றன.

இணையம்
         

குட்டன்பர்கின் அச்சு இயந்திரத்திற்கு அடுத்தபடியாக கல்வியைப் பரப்புவதில் பெரும்பங்கு வகிப்பது இணையமாகும். கணிப்பொறிகள் ஒன்றோடொன்று பேசிக்கொண்டால் அது இணையாமாகும். கணிப்பொறிகள் வடிவத்தில் சுருங்கி நம் கையளவு வந்து, கைபேசியாக, இணையத்தில் எப்போதும் நம்மை இணைத்திருக்கும் கருவியாக நம் பையிலேயே  அமர்ந்துள்ளது. அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், நாளிதழ்கள், சஞ்சிகைகள், பாடப் புத்தகங்கள், பார்வை நூல்கள் என்று வரி வடிவமாகவும், சமைத்துப் பார் என்று சொல்லாமல், சமைப்பதைப் பார் என்று சொல்லுகின்ற காணொளி காட்சியாகவும் கொட்டிக் கிடக்கின்ற இணையமானது மிகப் பிரமாண்டமாகவிரிந்துகொண்டேசெல்கின்றது.
விரல் நுனியில் உலகத்தைக் கொண்டு வந்து நிறுத்துகின்ற ஊடகமானது, கல்வியைக் கல்விச் சாலைகள் சென்று தான் பெறமுடியும் என்ற நிலையை மாற்றி ‘கண்ணிருப்பவர் பார்த்துக் கொள்ளட்டும்’ என்ற திருவிவிலிய வாக்கின்படி  ஆர்வமிருப்பவர் கற்றுக் கொள்ளட்டும் என்ற நிலையைக் கொண்டு வந்துள்ளது. காப்புரிமை இல்லாத ஏராளமான தமிழ் நூல்கள், சங்க இலக்கியம் முதல் ஜெயகாந்தன் கதைகள் வரை  ‘பிராஜக்ட் மதுரை’ இணைய தளத்தில் சென்று நாம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல ஆங்கில நூல்களை ‘பிராஜக்ட் குட்டன்பர்க்’ இணையதளத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். பல்வேறு துறைசார்ந்த பாடப் புத்தகங்கள், ‘ஓபன் புக்ஸ்’ எனப்படும் திறந்த புத்தகங்கள், பலதுறை வல்லுனர்களால் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இலவசமாக கிடைக்கின்றன. ஆராய்ச்சிக்குத் தேவையான சஞ்சிகைகளும், ‘ஓபன் ஜர்னல்ஸ்’ எனப்படும் வடிவங்களாக இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக பல்வேறு பத்திரிக்கைகளின் பழைய இதழ்களைத் தேடுவது இப்போது இணையத்தின் வரவால் சாத்தியமாகி உள்ளது. இணையவழி வகுப்புகள்தான் இப்போதைய புதுமை. கொரோனா காலகட்டத்தில் இணையவழி வகுப்புகள்தான் மாணவர்களையும் ஆசிரியர்களையும் இணைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக ‘ MOOCs’ என்று அழைக்கப்படும் Massive Open Online Courses பிரபலமடைந்து வருகின்றன. Coursera மற்றும் Edx தளங்களில் வழங்கப்படும் MOOCsகள் உலகப் புகழ் பெற்றுள்ளன. இந்தியாவிலும், சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு NPTEL எனப்படும் அமைப்பின் மூலம் MOOCs நடத்தப் படுகின்றன. அவற்றின் சான்றிதழ்கள் கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்டு இரண்டு கிரெடிட்கள்கொடுக்கப்படுகின்றன.பன்முக வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு

          உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மனவளர்ச்சி, ஆன்மிக வளர்ச்சி என்று பல தளங்களில் மனித வளர்ச்சி உள்ளது. இணையத்தில் உள்ள புத்தகங்களும், wikihow போன்ற வழிகாட்டுத் தளங்களும், YouTube இல் உள்ள காணொளிகளும் நாம் பயணம் செய்ய வேண்டிய பாதையைக் காட்டி, நம்முடன் பயணம் செய்பவர்களை Facebook, WhatsApp போன்ற இணையதளங்களின் மூலம் இணைத்தும் வைக்கின்றன. ‘காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே’ என்றார் உடுமலை நாராயண கவி. சுயதொழில் முனைவோராக இருந்தாலும் சரி, வேலை தேடி அலைவோராக இருந்தாலும் சரி, இணையத்தின் சேவை நமக்குத் தேவையாக உள்ளது. அரசாங்க வேலை வாய்ப்பு மையங்களும், Naukri, LinkedIn போன்ற தனியார் வேலை வாய்ப்பு மையங்களும் இணையத்தின் வழியே இயங்குகின்றன. உயர்கல்விக்கு நடத்தப்படும் JEE, NEET போன்ற தேர்வுகள் மட்டுமல்லாது, வேலை வாய்ப்பை அளிக்கின்ற IBPS, SSC போன்ற தேர்வுகளும் இணைய வழியே நடத்தப் படுகின்றன. Amcat போன்ற நிறுவனங்கள் இணையவழித் தேர்வுகள் மூலம் நம் திறனை சோதித்து அறிந்து அதற்கு ஏற்றாற் போல, தனியார் நிறுவனங்களில் நமக்கு வேலை கடைக்கச் செய்கின்றன. நேர்முகத் தேர்வுகளும் விடியோ அழைப்பின் மூலம் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை Gradeup, Adda போன்ற YouTube channelகள் வழங்குகின்றன.

இணையத்தின்         குறைகள்
          

ஆபாசப் படங்கள், மனம் மயக்கும் விளம்பரங்கள், பாரபட்சமான செய்திகள், காசுகேற்ற பணியாரம் போன்ற அச்சு ஊடகங்களுக்கு உள்ள குறைகள் அனைத்தும் பல மடங்காக இணைய தளங்களுக்கும் உள்ளன. விதிவிலக்குகளும் உண்டு. ‘விதி வழி செல்லும் மதி’ போல விளம்பரங்களை நாம் தொடர்ந்தும் செல்லலாம். ‘சித்தத்தை சிவன் பால் வைத்தவர் போல’ நம் காரியத்தில் மட்டும் கருத்தை வைக்கலாம்.

முடிவுரை


          மடங்களிலும், கோவில்களிலும், குருகுலங்களிலும் சிறைபட்டுக் கிடந்த கல்வியை அனைவருக்குமான கல்வியாக மாற்றியது குட்டன்பர்க்கின் அச்சுப்பொறி. அந்தக் கல்வியை ஓரளவிற்கு எல்லைகளற்ற, சமமான, சாதி மத இன பேதமற்ற, இன்பமான, 24*7 கல்வியாக மாற்றியுள்ளது இணையத்தின் வளர்ச்சி.
          ‘அறிவை விரிவு செய், அகண்டமாக்கு… மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளைத் தலைமேற் கொள்வோம்.

பார்வை

நாலடியார் (2. பொருட்பால், 2.14 கல்வி, 132)

அபிராமி அந்தாதி,  பாடல் 10

என் சரித்திரம்உ. வே. சாமிநாதஐயர்

சரஸ்வதி சபதம் திரைப்பட பாடல்

https://apps.lib.umich.edu/papyrus_making/pm_intro.html
https://en.wikipedia.org/wiki/Printing_in_Tamil_language
https://yourstory.com/2018/01/indias-first-newspaper-the-bengal-gazette
https://www.britannica.com/topic/Gilgamesh

error: Content is protected !!