கல்வியும் தகவல் தொழில்நுட்பமும்

கல்வியும் தகவல் தொழில்நுட்பமும்

முனைவர். ச.பத்மா

M.A.,M.Phil(Tamil),M.Ed.,M.Phil(Edu),

M.A(Soci).,Ph.D(Tamil)

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

நந்தா கல்வியியல் கல்லூரி, ஈரோடு -52

ஆய்வுச் சுருக்கம்

தொடக்க நிலையில் மனிதன் தம்முடைய கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிக்க ஒலிக்குறிப்பினையே தகவல் தொடர்புக் கருவியாகக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு குறியீட்டு முறையை பயன்படுத்தினான். சிந்துவெளி நாகரகம் தோன்றிய பிறகு தான் மொழி மனிதனுக்கு தகவல் தொடர்பு கருவியாகியது. அதனைத் தொடர்ந்து தகவல் தொழில் நுட்ப வளரச்சியியும் பன்முகப் பரிமாணங்களை பெற்றுள்ளது. இச்சாதனம், கல்வி, சமூகம், அறிவியல், அரசியல், பொருளாதாரம், வணிகம், வானவியல், கடலாய்வு என அனைத்து துறைகளுக்கமான பயன்பாட்டுக் கருவுலமாக உள்ளது. குருகுலம் சென்று கல்வி பயின்ற நிலையிலிருந்து இன்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் இல்லங்கள் தோறும் கல்வி புகட்டும் ஆசானாக இணையதளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மாணவரகள் அறிவுத் தேடலுக்கான அட்சயபாத்திரமாய் இணையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளில் சென்று பயிலும் வாய்ப்பினையும் வேலை வாய்ப்பு   குறித்த தகவல்களையும் மணற்கேணி போல் தந்து கொண்டே இருக்கிறது. இந்திய முன்னேற்ற நுழைவாயில் சமூகமேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும் சேவைகளையும் தகவல்தொடரபு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி  செயலாற்றி வருகிறது. இந்திய அரசின் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இத்திட்டத்தை மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது. ஒரு மனிதனை ஆளுமைத்திறனுள்ளவனாக மாற்றக் கூடிய திறமை தகவல்தொழில் நுட்பத்திற்கு இருக்கிறது. இணையத்தின் தேவையை மாணவர்கள் நன்கு உணரந்து செயல்படுத்தினால் நம் நாடு வல்லரசு நாடாக திகழும் என்பதில் ஐயமில்லை.

முன்னுரை

தொடக்க நிலையில் மனிதன் தம்முடைய கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிக்க ஒலிக்குறிப்பினையே தகவல் தொடர்புக் கருவியாகக் கொண்டிருந்தான். அதற்குப் பிறகு குறியீட்டு முறையை பயன்படுத்தினான். சிந்துவெளி நாகரீகம் தோன்றிய பிறகு தான் மொழி மனிதனுக்கு தகவல் தொடர்பு கருவியாகியது. அதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பன்முகப் பரிமாணங்களை பெற்றுள்ளது. இச்சாதனம், கல்வி, சமூகம், அறிவியல், அரசியல், பொருளாதாம், வணிகம், வானவியல், கடலாய்வு என அனைத்து துறைகளுக்குமான பயன்பாட்டுக் கருவூலமாக உள்ளது. குருகுலம் சென்று கல்வி பயின்ற நிலையிலிருந்து இன்று உள்ளங்கை நெல்லிக்கனி போல் இல்லங்கள் தோறும் கல்வி புகட்டும் ஆசானாக இணையதளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தகவல் தொடர்பு

பொதுவாகத் தகவல்தொடர்பு என்பது செய்திகள், கருத்துகள், எண்ணங்கள் முதலியவற்றை ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு அனுப்பும் செயல் ஆகும். எனவே, ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்குச் செய்தி அனுப்பப்படும் போது தகவல் தொடர்பு நிகழ்கிறது. அவ்வாறு எண்ணங்களையும், உணர்வுகளையும், செய்திகளையும் அனுப்பும்போது இரண்டு அல்லது மூன்று மனிதர்களிடையே பரிமாற்றம் நிகழ்கின்றன. குறிப்பாகத் தகவல் தொடர்பு என்பது செய்தியை அனுப்புதலும் பெறுதலுமாகிய வழிமுறை என்று கூறலாம். இதற்குத் தகவல் தொடர்புச் சாதனங்கள் பெரிதும் துணை நிற்கின்றன

செய்தியைக் கூற வருபவர், தாம் கூற வரும் கருத்தைக் கேட்போருக்குக் கூறுவதோடு தாம் கூறும் கருத்துத் தொடர்பான கேட்போரது கருத்துகளையும் அவரிடமிருந்து வெளிக்கொணர்கிறார். செய்தியைச் சொற்கள் வாயிலாகவோ நேரடியாகவோ எப்படி அனுப்பினாலும் மக்கள் ஒருவரை ஒருவர் தம்பக்கம் ஈர்க்கும் வழிமுறையே தகவல் தொடர்பு ஆகும்

தகவல் தொடர்பு அமையும் விதம்

இன்றைய காலக்கட்டத்தில் தகவல் தொடர்பு என்பது விலங்குகளாயினும், மனிதர்களாயினும் கருத்துப் பரிமாற்றத்தின் தேவை என்பது, உணவு, தண்ணீர் முதலிய அடிப்படைத் தேவை போலவே இன்றியமையாத தேவையாக அமைந்துள்ளது. இது வெறும் வார்த்தைகளால் மட்டுமே இருக்க வேண்டும் என்பது இல்லை. அவை படம், அச்சு, தலையசைவு, பெரிய படங்கள், ஒரு சிறு ஒலி முதலிய எதன் மூலமாகவும் அமையலாம்.

கற்காலத்தில் தகவல் தொடர்பு

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே இலக்கியங்கள் மக்கள் தகவல் தொடர்புச் சாதனங்களாக விளங்கியிருக்கின்றன. இலக்கியம் சமுதாயத்தைக் காட்டி பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி ஆகும். பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட பழக்க வழக்கங்கள், மரபுகள் இலக்கியங்களில் பதிவு செய்து வைக்கப்பட்டதன் விளைவாக இன்றும் மக்களால் பின்பற்றப்படுகிறன்றன. இலக்கியங்கள் மக்களுக்கு இவற்றைப் போதித்து கருவிகளாகச் செயல்படுகின்றன. மனிதனின் நல்வாழ்வுக்கான நெறிமுறைகளை அறிவிப்பவனவாகவும் இலக்கியங்கள் திகழ்கின்றன. அந்நாட்களில் பனை ஓலைகளிலும், கற்பாறைகளிலும் இலக்கியங்களும் வேதங்களும் எழுத்துவடிவில் பதிவு செய்து வைக்கப்பட்டன.

பண்டைக் காலத்தில் மொழி தோன்றாத நிலையில் மனிதன் தன் கருத்தை முதன் முதலில் சைகைகள் வழியாகத் தெரிவித்தான். அவன் இரவிலும், பகலிலும் தொலைவிலுள்ளோர்க்குச் சைகைகள் வழியாக செய்தியைத் தெரிவித்துக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. ஆகவே, தன் குரல் ஒலியைப் பயன்படுத்தத் தொடங்கினான். இரவில் மட்டும் குரல் ஒலியைப் பயன்படுத்துவதுடன் அல்லாமல் பகலிலும் சீழ்க்கை ஒலி போன்ற ஒலியைப் பயன்படுத்தித் தகவல்களைச் சொல்லத் தொடங்கினான். பின்பு மொழியை அறிந்த பின் குரல் ஒலியைப்பயன்படுத்த முற்பட்டான். இது எந்த நேரத்திலும், எந்நிலையிலும் இடையூறு இல்லாத கருத்து புலப்பாட்டுக் கருவியாக அமைந்திருப்பதை அறிந்தான். நாளடைவில் ஒலியே பேசும் மொழியாக வளர்ச்சி பெற்றுத்தகவல் தொடர்புக் கருவியாக மாறியது எனலாம்.

காப்பியக் காலத்தில் தகவல் தொடர்பு

தமிழர் வாழ்வியலை நெறிப்படுத்தி உணர்த்தும் நூலாகக் கருதப்படும் தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியலில் தூதினைக் குறிப்பிடும் போது தலைமகன் கூற்றில்

“தூதிடை யிட்ட வகையினானும” (தொ-987)

எனத் தூது பற்றிக் கூறுகிறது. இத்தூது என்பது ஒருவர் தம் கருத்தை மற்றொருவருக்குத் தெரிவிக்கப் பிறிதொருவரை அனுப்புவது ஆகும். தூது அனுப்பும் வழக்கு பண்டைக் காலத்தில் தமிழரிடத்தில் பல்கிப் பரவியிருந்தது. இதில் தமிழ் மக்கள் தலைவன், தலைவி இருவரில் ஒருவர் மற்றவர் மீது காதல் கொண்டு வருந்தித் தம் வருத்தத்தைத் தெரிவிக்குமாறு நாரை, அன்னம், மேகம், மயில், கிள்ளை, எழிலி, பூவை, கோழி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு, பணம், தமிழ், மான், சவ்வாது, நெல், புகையிலை, துகில், காக்கை, விறலி, அன்பு,  போன்றவற்றைத் தூது அனுப்பும் தகவல் தொடர்புச் சாதனங்களாகப் பயன்படுத்தியுள்ளதை நாம் காணமுடிகிறது.

உலகப் பொதுமறையும் திருக்குறள் மன்னனின் நாட்கடமைகளும் ஒன்று மக்களின் நடைமுறை நிகழ்ச்சிகளை அன்றன்றே அறிந்து கொள்வது. இதனை வள்ளுவர் பெருந்தகை.

“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்”     (குறள் -582)

என்பர்.

அக்காலத்தில் ஊர்ப் பொது மன்றங்களில் முரசறைந்து செய்தி பரப்பும் நிலையினைப்

“பறையறைந்தல்லது சொல்லற்க என்னா இறையே தவறுடையான்”

(குறிஞ்சி-20: 32,33)

என்று கலித்தொகை கூறுகிறது. முத்தமிழ்க் காப்பியமாகிய நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி திருமணத்தை புகார் நகரத்திற்கு அறிவித்த செய்தியை

“யானை எருத்தத்து அணியிரைத்தார் மேலிரீ மாநகர்க்கீந்தார் மணம்”

(மங்கல வாழ்த்து -43)

என்று பகர்கிறது.

சொல்லுறாக் காட்சிக் கலைகள்

சொல்லுறாக் காட்சிக் கலைகள் நாம் கவனமாகப் பார்ப்பதால் மட்டுமே அவை உணர்த்தும் பொருள் தெளிவாகப் புலப்படுகிறது. ஒலிக் குறியீடுகளால் செய்திகளை இவை தெரிவிப்பது இல்லை. இவற்றை உற்றுக் கவனிப்பதால் மட்டுமே இவை கூறவரும் செய்தியைக் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகச் சிற்பங்கள், ஓவியங்களைக் குறிப்பிடலாம். சிற்பங்களின் தோற்றப் பொலிவு, அழகுணர்வு, பக்தி உணர்வு, உடலமைப்புப் பாங்கு, குறிப்பிட்டப் பொருள் ஆகியவற்றின் வாயிலாகக் கருத்துப் புலப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரங்களில் புராணக் கதைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கட்டிடங்களின் அமைப்பைக் கொண்டு, கிறித்துவ ஆலயங்கள், இந்துக் கோயில்கள், இசுலாமியரின் மசூதிகள் எனப் பிரித்தறிய முடிகிறது. இக்கட்டிடங்கள் ஒரு சமயத்தின் கலை, பண்பாட்டு வரலாறு ஆகியவற்றை எடுத்துக் கூறும் புலப்பாட்டு ஊடகமாகத் திகழ்கின்றன. ஓவியன் தன்னுடைய உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் கற்பனையில் ஒரு நிழலை ஏற்படுத்திக் கொண்டு தளத்தில் தீட்டும்போது அது ஓவியமாகிறது. அதுபோன்றே இறைவனின் கதைகள் கோவில்களில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. பெரிய புராணக்கதை சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலிலும், திருவிளையாடல் புராணக்கதைகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

நாகரிகமற்ற காலத்தில் தகவல் தொடர்பு

நாட்டுப்புறத் தகவல் தொடர்புச் சாதனங்கள் அறக்கருத்துகளைப் பொழுதுபோக்கு விடுதிகள் போன்ற பல்வேறு விவரங்களில் வழங்குவதால் நமது சுயவெளிபாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. நமது மரபையும் முன்னோர்களின் கலாச்சாரத்தையும் பாதுகாப்புடன் மிகவும் உயிரோட்டத்துடன் அவற்றைப் பரப்பவும் செய்கின்றன. மரபில் இவற்றின் வேர் ஊன்றப்பட்டு பெரும்பாலான மக்களின் அனுபவக் களஞ்சியமாக விளங்கிப் பெரும்பாலான மக்களைச் சென்றடைவதால் இவையெல்லம் தகவல் தொடர்புச் சாதனங்கள் என்பதற்குப் பொருத்தமானவை எனலாம்.

கதைப் பாடல்களாக நாட்டுப்புற கலைப்படிவங்கள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. விடுகதைகள், பழமொழிகள், போன்றவை பல்வேறு கருத்துகளை மக்களுக்குப் பரப்பிய நாட்டுப்புற வடிவங்களே. இவைகளுக்குக் கண்டிப்பான விதிமுறைகள் இல்லாததால் சூழலுக்கேற்ப எச்செயலையும் சேர்த்துக் கொள்ள இயலுகிறது. தகுந்த நேரத்தில் மக்களுக்கு நன்மை தீமைகளை எடுத்துக் கூறுகின்றன.

கரு, உரையாடல், நகைச்சுவைக் கூறு போன்றவை நிகழ்காலச் சமுதாயத்திற்கு ஊற்ப மாற்றிக் கொள்ளப்படுபவையேயாகும். இவ்வாறு நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை இவ்வடிவங்களில் தகவல் தொடர்பைத் தெரிவிப்பதில் காணப்படும் சிறப்பம்சமாகும். தேவையானால் எல்லா மக்களும் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை நல்குகிறது. எனவே, பண்பாட்டையும் மரபுவிதியிலான சமூக மதிப்புகளையும் நேரடியாகப் பரிமாற்றம் செய்வதில் இவை தலைசிறந்து விளங்குகின்றன.

வரலாற்றுக் காலத்தில் தகவல் தொடர்பு

முகலாய மன்னன் ஜஹாங்கீர் ஆக்ராவில் தன் மனைவிக்குப் பிறக்கும் குழந்தை ஆண், பெண் என்பதை அறிய டில்லியிலிருந்து ஆக்ரா வரை சிவப்பும் பச்சையுமான கொடிகளை ஏந்திய பணியாட்களை நியமித்தான். ஆண் குழந்தையானால் சிவப்புக் கொடியும், பெண் குழந்தையானால் பச்சைக் கொடியும் காட்டப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டான். இவ்வகையில் தகவல் அறியும் முறையினை அவன் கடைப்பிடித்திருந்தான்.

பாஞ்சாலக்குறிச்சியை ஆண்ட வீரத்திலகமாய் வாழ்ந்து மறைந்த வீரபாண்டியக் கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகக் கடவுளின் மீது மிகுந்த பற்றடையவர். முருகனுக்கு நண்பகல் வழிபாடு முடிந்த பின்னரே மதிய உணவு உடகொள்வதை வழக்கமாக் கொண்டிருந்தார். இதற்காகப் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து திருச்செந்தூர் வரை மண்டபங்கள் கட்டி வழிபாடு முடிந்ததும், ஒவ்வொரு மண்டபத்திலும் மணியடிக்க ஏற்பாடு செய்திருந்தார். அவ்வாறே மணி ஒவ்வொன்றும் முறையாக ஒலிக்கப் பெற்றுச் செய்தி அறிந்து உணவு உட்கொள்ளும் வழக்கம் உடையவராக இருந்தவர் என்பதை வரலாறு கூறுகிறது. செய்திகளைப் பரப்புவதில் கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் உற்ற துணையாக இருந்துள்ளன. அசோகர் காலம் முதல் இக்கல்வெட்டுகள் செய்திகளைக் கூறும் நிலைக்களன்களாயின. ஓலைச் சுவடிகள் மூலம் ஒரு நாட்டு மன்னன் மற்றோர் நாட்டு மன்னனுடன் தொடர்பு கொண்டிருக்கிறான். மன்னன் அனுப்பும் செய்தி ஓலைக்குத் திருமுகம் என்றும் பெயர் இத்திருமுகத்தைக் கொண்டு செல்பவர் ஓலை நாயகம் என்றும் பெயர். பெரிய புராணத்தில் ஆலய சுந்தரரைச் சிவபெருமான் திருமணக் கோலத்தில் தடுத்தாட்கொள்ள மூலச் சான்றாக இருந்தது ஓலை என அறிகிறோம். அரசவையில் இன்றைய காலத்தில் கையெழுத்துப்படி வரைவோர் தனியாக நியமிக்கப்பட்டிருந்தனர். 1850இல் அயோத்தி அரசனிடம் அறுநூற்றுக்கும் மேற்பட்ட படிவரைவோர் இருந்ததாகத் தெரிகிறது. இன்றும் கிராமப் புறங்களில் சாதகம் எழுத இவ்வோலையே பயன்படுகிறது.

புதுமையின் தசாப்தம்

2010-2021 க்கும் இடைப்பட்ட ஆண்டை புதுமையின் தசாப்தம்  (Decade of innovation)என்று குறிப்பிட்டுக் கூறலாம். பகுத்தாயும் திறனும், ஆழ்ந்த சிந்தனைத்திறனும் புத்தாக்கங்களுக்குரிய இன்றியமையாத பண்புகள். பள்ளிப்பருவத்திலிருந்தே இத்தயை பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். மாணவர்களிடையே புத்தாக்கத்திறனை வளர்க்க விரைவான கருத்துப் பரவலைபும் அறிவுநுட்பத்தையும் தன்னகத்தே கொண்ட தொலைத் தொடர்பு நுட்பவியலின் (ICT) பங்களிப்பு இன்றியமையாததாக விளங்குகிறது.

தேசியக் கல்விக்கொள்கையும் தகவல் தொழில் நுட்பமும் 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையின் முகப்புரையில் இரண்டு முக்கியமான கூறுகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.  கல்வி நுட்பம்  (Educational Technology – ET) மற்றும் பள்ளிகளில் கணிப்பொறிக் கல்வி (Computer Literacy And Studies in School – CLASS) ஆகியவையே அவை.  பள்ளிகளில் கற்பித்தல் திறனை மேம்படுத்த கல்விநுட்பவியல் கூறுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பள்ளிகளில் கூறுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பள்ளிகளில் கணிப்பொறியறிவு மற்றும் கணிப்பொறிப் படிப்புகளைத் தொடங்குதல் ஆகிய இரண்டுக்கும் முன்னுரிமை கொடுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத் தேசியக் கல்வித்திட்ட வடிவமைப்புப் பணிகளில் (National Curriculum Framework 2005 (NCF-2005) தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பத்திற்கு (Information and Communication Technology) (ICT) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

புத்தகமில்லா வகுப்பறைகள், வகுப்பறையில்லா ஆசிரியர்கள் தமிழகத்தில் சில கல்வி நிலையங்களில் குறிப்பேடுகளும் புத்தகங்களும் பயன்படுத்தப்படுவதில்லை அவற்றின் இடத்தைக் கையடக்கக் கணிப்பொறிகள் (Tablet as Textbook)பிடித்துவிட்டன.  பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகங்கள் (From Pre K.G to University)வரை கையடக்கக் கணிப்பொறிகள் மற்றும் மடிக்கணினிகளில் (Laptop)பயன்பாடு மிகுந்துள்ளது. தேசிய மற்றும் மாநிலப் பாடத்திட்ட புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ப்பட்ட கையடக்கக் கணிப்பொறிகள், மாணவர்களின் புத்தகச் சுமையை முற்றிலுமாக நீக்கிவிட்டன.  மெய்நிகர் வகுப்பறைகள் (Virtual Class room)மற்றும் காணொளிக் காட்சி (Video Conference)நிகழ்வுகள் ஆசிரியர்களையும் அறிஞர்களையும் நம் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து அறிவுத்தாகத்தைத் தணித்து நிற்கின்றன. இணைய நூலகங்கள் (Digital Library)அறிவுத் தேடலுக்கு அட்சயபாத்திரமாக விளங்குகின்றன.

தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்வியல் நுட்பக் கழகம்

(ICT Academy of Tami Nadu (ICTACT)

தகவல் மற்றும் தொடர்பியல்நுட்பத் துறையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் திறன் மிக்கவர்களாக உருவாக்குவதற்குத் தேவையான பயிற்சிகளை அளிப்பதற்காக நடுவண் அரசின் உதவியுடன் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக தமிழ்நாடு தகவல் மற்றும் தொடர்பியல்நுட்பக் கழகம் – ICT Academy of Tamil Nadu (ICTACT)  விளங்குகிறது. தொழில் துறைக்கும் கல்வி நிலையங்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதுதான் இவ்வமைப்பின் நோக்கமாக உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்று வரும் மாணவர்களைத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவதற்கு உரியவர்களாக மாற்றுவதே இவ்வமைப்பின் முதன்மைப் பணியாகும். நாட்டுக்குத் தேவையான அடுத்த தலைமுறை தொழில்நுட்ப விற்பனையாளர்களை வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், நிறுவனங்களுக்கும்அரசு அமைப்புகளுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக இவ்வமைப்பு விளங்குகிறது.

தமிழகச் சூழலும் தகவல் தொழில்நுட்பமும்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவின் விரிவாக்கத் தேவையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படுத்திவரும் விளையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தினால் கிராமப்புற மாணவர்களும் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாட்டு அறிவையும் அவற்றின் வழியே கல்வியறிவையும் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பலவற்றில் நிறுவப்பட்டள்ள தரமான கணிப்பொறி ஆய்வுக்கூடங்கள், தகவல் மற்றும் தொடர்பியல் நுட்ப வளர்ச்சியில் தமிழ்சமூகம் முன்னணியில் நிற்பதற்குத் துணைசெய்கின்றன.

21ஆம் நூற்றாண்டில் தகவல் தொடர்பு

மக்கள் தகவல் தொடர்புச் சாதனங்களாக இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், தொலைபேசி, கணினி, இணையம், மின்னஞ்கல், தொலைநகலி, செல்லிடப்பேசி, பேஜர் போன்றவை பெருமளவில் பல்கிப் பெருகி உள்ளன. இவை உடனுக்குடன் தகவல்களைத் தந்து மக்களுக்குச் சிறந்த சேவை புரிகின்றன. தகவல் தொடர்புச் சாதனங்கள் தாம் இன்றைய உலகில் மனிதனுக்குக் கிடைத்த மாபெரும் தவத்தால் கிடை;த்த வரம். இவற்றால் நேரம், அதிகப்படியான உழைப்பு, பண்ம் ஆகியன மிச்சமாகின்றன. உடனுக்குடன் முடிவு எடுக்கவும் நடக்கும் நிகழ்ச்சிகளை வீட்டிற்குள் வந்து தந்துவிடுகின்றன.

திரைப்படங்கள் நம்மை மகிழ்விக்கின்றன. பத்திரிக்கைகள் அறிவுறுத்தி அறிவூட்டுகின்றன. வானொலி காதிற்கு இன்பத்தை பாய்ச்சுகின்றன. கணினி, இணையம், செல்பேசி ஆகியவை விரைவுச் செய்தி தகவல் ஆகியவற்றை உடனடியாகத் தமிழ் மொழிக்கு இவை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன என்பதை மறுக்க இயலாது. தேவைக்கு ஏற்ப இச்சாதனங்களைப் பயன்படுத்தினால் நமக்கு நல்லது தேவையின்றிப் பயன்படுத்தினால் பணம்தான் அதிகம் செலவாகும். இவற்றை உணவிற்கு உப்புப் போல அளவுடன் தேவை கருதிப் பயன்படுத்தினால் ஏற்றம் பெறலாம். மக்கள் தொடர்புச் சாதனங்கள் துணை இன்றி வாழ்வது அரிதுதான் என்றாலும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து தேர்ந்து, தெளிந்து வாழ்தல் என்றும் இன்பத்தைத் தரும்.

முடிவுரை

தகவல் தொடர்புச் சாதனங்கள் தொடக்கக் காலத்தில் வாய்மொழி, வாய்மொழியல்லாதவைகளாக விதைகளாய் இருந்துள்ளன. இடைக்காலத்தில் வண்ணம். ஓலைகள், ஓவியங்கள் எனத் துளிர்விட்டன. அவை கலைகள், கதைகள், நாடகம், பழமொழி, விடுகதை என வகைவகையான மொட்டுகளாய்க் கூம்பின. அவை பல்வேறு இலக்கியங்களிலும் தவழ்ந்து, இன்று இணையம் வழியாகவும், செயற்கைக் கோள்கள் வாயிலாகவும், வாட்ஸ் அப், டுவிட்டர், மின் இதழ்கள், வலைப்பூக்கள், காட்சி வலைப்பூ, தோற்ற உலகம், செய்தித் தளங்கள், முகநூல் என மலர்ந்து மணம் வீசி உலகில் உள்ள யாவரையும் தகவல் சாதனங்கள் பயன்பாடு என்னும் மனத்தால் மயங்கச் செய்துவிட்டன. தகவல் தொடர்பு விதைகளை விதைத்த நாம் அவைகளை நன்மைக்கு மட்டுமே பயன்படும் மலர்களாய் மலரச் செய்வோம், அம்மலர்களைக் கொண்டு உலக அளவில் ஈடு இணையில்லாத அறிவியல் அறிவு மலர்களால் மாலையாகத் தொகுத்துத் தகவல் தொடர்பு விதைகளை விதைத்த நாம் அவைகளை நன்மைக்கு மட்டுமே பயன்பாடு என்னும் மணத்தால் மயங்கச் செய்துவிட்டன. தகவல் தொடர்பு விதைகளை விதைத்த நாம் அவைகளை நன்மைக்கு மட்டுமே பயன்படும் மலர்களாய் மலரச் செய்வோம். அம்மலர்களைச் கொண்டு உலக அளவில் ஈடு இணையில்லாத அறிவியல் அறிவு மலர்களால் மாலையாகத் தொகுத்துத் தகவல் தொடர்புச் சாதனங்களில் எவரும் சூடாத வாகை சூடுவோம்.

பார்வை நூல்கள் :

  1. ஆ.பி. அந்தோணி ராசு. இதழியல் ஓர் அறிமுகம் ஆரோக்கியம் பதிப்பகம், – 1986
  2. மா.பா. குருசாமி இதழியல் கலை – வண்ணன் வெளியீடு – சாத்தான் குளம் – 1998
  3. வெ. நல்லதம்பி – தொலைக்காட்சியும் பிற தகவல் தொடர்புச் சாதனங்களும், வள்ளுவன் வெளியீட்டகம், சென்னை -1998
  4. இரா. கோதண்டபாணி இதழியல் கற்பக நூலகம் மதுரை – 1980
  5. சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் மணிவாசகர் பதிப்பகம் சென்னை -2003
  6. முனைவர் சா.சவரிமுத்து இதழியல் மக்கள் தகவலியல் மணிமொழி பதிப்பகம், சென்னை – 2002
error: Content is protected !!