சூழலியல் தொழில்நுட்பம்

சூழலியல் தொழில்நுட்பம்

திருமதி ஆ.மகாலெட்சுமி,

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

மேட்டமலை, சாத்தூர்.

mahalakshmiarumugasamy@gmail.com

 

 

 

மனிதன் தன்னை சுற்றி அமையும் சூழலுக்கேற்ப அறிவியலின்

வளர்ச்சியான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே சூழலியல் தொழில்நுட்பம் ஆகும். சூழல் என்பது தாவரங்கள், விலங்குகள் அடங்கிய அனைத்து இயற்பியல் கூறுகளையும் அடக்கியதாகும். இவைகளுக்கு இடையே தொடர்புகள், பரிமாற்றங்கள் அல்லது அடைவினைகள் என்பதைப் பற்றி கற்றுக்கொள்ளுவதே சூழலியல் ஆகும். தொழில்நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பாகும்.

தொழில்நுட்பங்களின் பயன்கள்

மனிதனும் சுற்றுச்சூழலும் நெருங்கிய தொடர்புடையவை. மக்கள் சுற்றுச்சூழலின் நிலையை பல்வேறு வாழ்க்கை காரணிகளுடன் தொடர்புபடுத்துகிறார்கள். அவை,

  1. கல்வி சார் தொழில்நுட்பம்
  2. வணிகம் சார் தொழில்நுட்பம்
  3. பணப்பரிமாற்றம் சார் தொழில்நுட்பம்
  4. பாதுகாப்பு சார் தொழில்நுட்பம்

போன்றவை ஆகும். இவையனைத்தும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவரவர் சூழலுக்கேற்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.

கல்வி சார் தொழில்நுட்பம்

கல்வி என்பது அழியாச் செல்வமாகும். அவ்வழியாச் செல்வத்தை ஆக்கும் சாதனங்களான பல்வேறு தொழில்நுட்பத்தின் வழி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். ஏனெனில் சூழல் சார்ந்த கல்வியானது தற்கால சூழலில் ”பொருத்தமான தொழில்நுட்ப செயல்முறைகள் மற்றும் வளங்களை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதன் மூலம் கற்றலை எளிதாக்குவது மற்றும் செயல்திறனை ஆயு்வு மற்றும் நெறிமுறை நடைமுறை” போன்றவற்றில் செயல்படுகிறது.

”தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

                    கற்றனைத் தூறும் அறிவு”1   – குறள் 396, திருக்குறள் எளிய உரை,                                                                         டாக்டா் மு.வ

இக்குறட்பாவானது கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. அதாவது, சூழல் சார் தொழில்நுட்பமானது தற்போதைய கொரோனா காலக் கட்டங்களில்  மாணவர்களுக்கு இணைய வழியிலான வகுப்புகள், போட்டிகள், கருத்தரங்குகள் போன்ற பலவற்றை நடத்த பெரிதும் துணைபுரிகின்றது.

வணிகம் சார் தொழில்நுட்பம்

வணிகம் அல்லது வர்த்தகம் என்பது மனிதனது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றும் இலராப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும். மனிதன் வாழ்வதற்கு பொருள் வேண்டும். மனிதன் வாழ்வதிலும் பொருள் வேண்டும். இவற்றை திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்கிற பழமொழியால் குறிக்கின்றனர்.

”……. மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

        புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்”2- பட்டினப்பாலை(216-217) ,பட்டினப்பாலை மூலமும் தெளிவுரையும், முத்து.இராம மூர்த்தி

என்ற பட்டினப்பாலை வரியானது மக்களின் வணிகப் போக்கினை கூறுகிறது.       இன்றைய சூழலில் மக்கள் ஒவ்வொரு கடையாக சென்று தனக்கு தேவையான பொருட்களை பெறுவதில்லை. இருந்த இடத்திலே இருந்து  திறன்பேசியின் உதவியால் வீட்டிற்கே பொருள் வந்து சேரும்படியாக பொருட்களை பெறுகின்றனர்.

  1. அமேசான்
  2. ஃபிலிப் காட்
  3. மீசோ

போன்ற பல வணிக நிறுவனங்கள் இணையத்தின் உதவியுடன் செயல்படுகின்றன. அவற்றினால் தவிர்க்க முடியா சூழலிலும் மக்கள் பொருட்களை வாங்கி பயன்பெறுகின்றனர்.

பணப்பரிமாற்றம் சார் தொழில்நுட்பம்

பண்டைய காலங்களில் மக்களிடத்தில் பண்டமாற்று முறை மட்டுமே இருந்து வந்தது. தன்னிடம் உள்ள பொருளை கொடுத்து தனக்கு தேவையான பொருளைப்  பெற்றுக்கொள்ளுதலே பண்டமாற்று
முறையாகும். இதனை,

”பாலொடு வந்து கூழொடு பெயரும்

        யாருடை இடையன்”3                 – குறுந் (221-3-4), குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம்

குறுந்தொகை பாடலானது பண்டமாற்று முறையை விளக்குகிறது. பின்னாட்களில் பண்டமாற்று முறையானது பணப்பரிமாற்றம் முறையாக உருவெடுத்தது. பணத்தேவைகள் ஏற்படும் போது மக்கள் வங்கிக்கு சென்று காத்திருந்து மனஉளைச்சலுக்கு ஆட்பட்டு பணத்தை பெறும் நிலை உள்ளது. இவற்றிலிருந்து விடுபட அவரவர் சூழலுக்கேற்ப பணப்பரிவர்த்தனைகளை பல செயலிகள் மூலம் செய்கின்றனர்.

  1. ஜிபே
  2. போன்பே
  3. மொபைல் பே
  4. பே.டி.எம்

இச்செயலிகள் மூலம் மக்கள் தங்களின் தேவைகளை உடனுக்குடன் பெறுகின்றனர்.

பாதுகாப்பு சார் தொழில்நுட்பம்

பாதுகாப்பு என்பது பொதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகும். மனித வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது. செயல்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாவிடின் பின் விழைவுகளை தரக்கூடும்.

”செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்

வெருவந்து வெய்து கெடும்”4               –  குறள் 569, திருக்குறள் எளிய உரை, டாக்டா் மு.வ

என்ற இக்குறட்பாவானது பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. தற்காலத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் சமூகமானது பாதுகாப்பற்ற ஒரு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மக்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு முடிவுகளை எடுக்கிறது. அவற்றில் ஒன்று காவலன் என்கிற செயலி. இவை மக்களுக்கு ஏதேனும் பாதுபாப்பற்ற சூழல் ஏற்படும் போது அச்செயலியின் துணைக்கொண்டு செயல்படலாம்.

தொகுப்புரை

மனிதனும் சுற்றுச்சூழலும் நெருங்கிய தொடர்புடையவை. மக்கள் தன்னை சார்ந்த சூழலின் நிலையை பல்வேறு தொழில்நுட்ப உதவியுடன் எதிர்கொள்கின்றனர். பேரிடர்ச்சூழலில் மாணவர்களின் சூழலுக்கேற்ப பயன்படும் கல்விக்குரிய தொழில்நுட்பமும், குடும்பச்சூழலின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளும் வணிக தொழில்நுட்பமும், தவிர்க்க முடியா காலச்சூழலில் கையறு நிலையில் உடனுக்குடன் பணப்பரிவர்த்தனை செய்யும் தொழில்நுட்பமும், பொது மக்களின் நலன் கருதி இன்றைக்கு நடைமுறையில் உள்ள இணைய வழியிலான அரசுத்தேர்வுகள் சார்ந்த தொழில்நுட்பமும், பொது மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பமும் எனச் சூழலியல் சார்ந்த தொழில்நுட்பத்தின் தன்மையை காணமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

  1. திருக்குறள் எளிய உரை, டாக்டா் மு.வ
  2. பட்டினப்பாலை மூலமும் தெளிவுரையும், முத்து.இராம மூர்த்தி
  3. குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம்
  4. திருக்குறள் எளிய உரை, டாக்டா் மு.வ
error: Content is protected !!