தமிழில் திறந்த கல்வி வளங்கள்

தமிழில் திறந்த கல்வி வளங்கள்

 Open Education Resources in Tamil

முனைவர் இரா.குணசீலன்

          தமிழ் உதவிப் பேராசிரியர் (சுயநிதிப் பிரிவு),          தமிழ்த்துறை

          பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி,     கோயம்புத்தூர்

gunathamizh@gmail.com

தமிழில் திறந்த கல்வி வளங்கள்

ஆய்வின் குறிக்கோள் –      தமிழில் திறந்த கல்வி வளங்களை மேம்படுத்துதல்

ஆய்வுச் சிக்கல் – திறந்த வளங்கள் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வளர்ந்துள்ள அளவுக்குத் தமிழில் பெரிதும் வளரவில்லை. தமிழில் திறந்த கல்வி வளங்கள் குறித்த ஆய்வுகளோ, நூல்களோ இதுவரை பெரிதும் வெளிவரவில்லை.

குறிப்புச் சொற்கள் – திறந்த கல்வி வளங்கள், தமிழில் திறந்த கல்வி வளங்கள்,

       மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. மொழிகளுள் தமிழ் மொழி தனிச்சிறப்புடைதாகும். தொன்மையாலும் தொடர்ச்சியான இலக்கிய மரபுகளாலும் புகழ் பெற்ற தமிழ் இன்று கணினி உலகில் புதிய புதிய நுட்பங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருகிறது. குருகுலக் கல்வி, திண்ணைப் பள்ளி, பள்ளிக்கூடங்கள், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என கற்பிக்கப்பட்ட தமிழ் இன்று இணையதளங்கள் வழியாக உள்நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகளில் வாழும் மக்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது. இச்சூழலில் தமிழில் திறந்த கல்விவளங்களின் தேவை நிறைந்துள்ளது.

திறந்த கல்வி வளங்கள் என்பவை (OER) இலவசமாக அணுகக்கூடியவையாக அமைகின்றன, வெளிப்படையாக உரிமம் பெற்ற உரை, ஊடகம் மற்றும் பிற டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும்                             கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுபவை ஆகும். திறந்த கல்வி வளங்கள் எந்தவொரு பயனருக்கும் சில உரிமங்களின் கீழ் பயன்படுத்த, மீண்டும் கலக்க, மேம்படுத்த மற்றும் மறுபகிர்வு செய்ய பொதுவில் அணுகக்கூடிய பொருட்கள் மற்றும் வளங்களை வழங்குகிறது. இணையவழி படிப்புகள், விரிவுரைகள், பயிற்சிக்கட்டுரைகள், வினாடிவினா, கல்வி தொடர்பான கலந்துரையாடல், விளையாட்டு என இதன் உட்கூறுகள் பன்முகத்தன்மை கொண்டவையாகும். சான்றாக, கான் அகாதமி[i] காணொளி வடிவில் கல்விசார் உள்ளடக்கங்களை வழங்குகிறது, ஓபன்ஸ்டாக்ஸ்[ii] உயர்தர, சக மதிப்பாய்வு செய்யப்பட்ட, வெளிப்படையாக உரிமம் பெற்ற பாடப்புத்தகங்களை வெளியிடுகிறது, அவை முற்றிலும் இலவச ஆன்லைன் மற்றும் குறைந்த செலவில் அச்சிடப்படுகின்றன. என்.பி.டெல்[iii] பொறியியல், அடிப்படை அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை யூடியூப் இணையம் வழியாக வழங்குகிறது. மேலும், சுவயம்[iv], சுவயம் பிரபா[v], ஈ பாதசாலா[vi], சோத்கங்கா[vii] ஆகியவற்றை இந்திய அரசு வழங்கும் திறந்த கல்வி வளங்களுக்கான தக்க சான்றுகளாக உரைக்கலாம்.

திறந்த கல்வி வளங்களின் நன்மைகள்

கல்விசார்ந்த உள்ளடக்கங்கள் இணையத்தில் இருந்தால் எந்த நேரத்திலும், யாரும் பயன்படுத்தமுடியும். உரைகள், படங்கள், காணொலிகள் என பல்வேறு வடிவங்களில் விளக்குவது எளிது, விரைவாக உள்ளடக்கங்களைப் பகிர்ந்துகொள்ளமுடியும்

திறந்த கல்வி வளங்களின் நன்மை, தீமைகள்

இணையத்தில் கிடைக்கும் செய்திகள் நம்பகத்தன்மையற்றவை தொழில்நுட்பச் சிக்கல்கள், இணைய வேகமின்மை காரணமாக கோப்பை அணுகுவதில் இடர்பாடுகள் ஏற்படலாம். ‘எவரும் திருத்தலாம் என்பதால் தவறான, பொருத்தமற்ற செய்திகளும் உருவாக வாய்ப்பு உள்ளது.

தமிழில் திறந்த கல்வி வளங்கள்

விக்கிப்பீடியா[viii], விக்சனரி, விக்கி மேற்கோள், விக்கி மூலங்கள், விக்கி பொதுவகம், ஆகிய தளங்கள் தமிழில் கிடைக்கும் திறந்த கல்விமூலங்களாக உள்ளன. இவற்றில் ஆசிரியர்களோ மாணவர்களோ அல்லது தமிழ்த்தட்டச்சு அறிந்த யாரும் கல்வி மூலங்களை உருவாக்க இயலும். இருந்தாலும் இவற்றின் நம்பகத்தன்மை குறிப்பிடத்தக்கதாக இல்லை. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின்[ix] பதிவுகள் தமிழக அரசின் சார்பாக வெளியிடப்படுவதால் நம்பகத்தன்மையுள்ளனவாக விளங்குகின்றன.

உரிமங்கள்

தமிழில் திறந்த கல்வி வளங்களை உருவாக்கும்போது உரிமங்கள் குறித்த அடிப்படை அறிவு தேவை. அறிவு சார்ந்த சொத்துகளைப் பகிரவோ, திருத்தவோ இந்த அறிவு முதன்மையானது. நாம் கல்வி வளத்திற்காகப் பயன்படுத்தும் நிழற்படமோ, ஒலியோ, காணொளியோ எந்த உரிமத்தின் கீழ் வருகிறது என்று அறிந்துகாள்ள வேண்டும். குறிப்பிடுதல், வர்த்தக நோக்கமற்றவை, வழிபொருளற்றவை, அதேமாதிரிப் பகிர்தல், படைப்பாக்கப் பொதுமங்கள் என பதிப்புசார்ந்த உரிமங்கள் உள்ளன. மென்பொருள்களுக்கென தனியே உரிமங்கள் உள்ளன.

திறந்த வளங்களுக்கான மதிப்பீடுகள்

      கல்வி வளத்தை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்பதால், கல்வி வளத்தை யார் வெளியிடுகிறார்கள்? அதை யார் மதிப்பீடு செய்துள்ளார்கள்? என்பதை அடிப்படையாக் கொண்டே அக்கல்வி வளம் மதிப்புப் பெறுகிறது. ஒரு பல்கலைக்கழகமோ, மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி நிறுவனமோ மதிப்பீடு செய்தபின் கல்வி வளம் வெளியிடப் பெற்றால்தான் திறந்த கல்வி வளத்துக்கான மதிப்பு முழுமையாகப் பெற இயலும்.

திறந்த கல்வி வள மேம்பாட்டுக் கருவிகள்

வலைப்பதிவுகள், இணையதளங்கள்,  யூடியூப், மின்னூல்கள், ஒலி நூல்கள், சொற்களஞ்சியங்கள், தொடரடைவுகள், அகராதிகள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சிகள் என பல்வேறு கருவிகள் வழியாகத் திறந்த கல்வி வளங்களைத் தமிழில் உருவாக்கவும், மதிப்பீடு செய்யவும் வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

நிறைவுரை

  • திறந்த கல்வி வளங்கள் என்றால் என்ன என்பதும் அதன் தகுதிகள், வகைப்பாடு மற்றும் நன்மை, தீமைகள் உரைக்கப்பட்டன.
  • தமிழில் திறந்த கல்வி வளங்கள் உருவாக்கவேண்டிய தேவை எடுத்துரைக்கப்பட்டது. திறந்த கல்வி வளங்கள் உருவாக்கத்தில் உரிமங்கள் குறித்த விழிப்புணர்வும், உரிமங்களின் வகையும் இயம்பப்பட்டன.
  • திறந்த கல்வி வளங்களுக்கள் உருவாக்கத்தில் மதிப்பீடுகளின் தேவையும், மதிப்பிடுவோர் தகுதியும் உணர்த்தப்பட்டது. திறந்த கல்வி வளங்களுக்கான சான்றுகளை எடுத்துரைத்து தமிழில் திறந்த கல்வி வளங்கள் உருவாக்குவதற்கான களங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

[i] https://www.khanacademy.org/

[ii] https://cnx.org/

[iii] https://nptel.ac.in/

[iv] https://swayam.gov.in/ 

[v] https://www.swayamprabha.gov.in/

[vi] https://epathshala.nic.in/

[vii] https://shodhganga.inflibnet.ac.in/

[viii] https://ta.wikipedia.org/

[ix] http://www.tamilvu.org/

error: Content is protected !!