தமிழ்மொழி கற்பித்தலிற் தொழில் நுட்பத்தின் தாக்கம்
சபா. அருள்சுப்பிரமணியம் M.A. தமிழ்ப்பூங்கா தமிழ்ப் பாடசாலை கனடா
ஆய்வுச்சுருக்கம்:
தொழில்நுட்பத்தின் துணையில்லாமல் இந்த உலகம் இந்தளவிற்கு வளர்ந்திருக்க முடியாது என்னும் அளவிற்குத் தொழில்நுட்பம் மானிட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. காட்டு விலங்குபோற் காலம் கடத்திய மனிதனை அவனது சிந்தனை ஆற்றலே காட்டுவிலங்கிலிருந்து வேறுபடுத்திக் கட்டம் கட்டமாக முன்னேற வைத்துள்ளது. மேலும் மனிதனிடமிருந்த கற்பனை வளமும் கண்டறியும் திறனும் அவனை அடுத்த கட்டத்திற்கு முன்னேற வைத்துள்ளது. அன்றிலிருந்து இன்றுவரை உணவு தேடுதல், இடம்விட்டு இடம் நகர்தல், மானம் காத்தல், குமுகாயமாகக் கூடிவாழுதல், செய்திப் பரிமாற்றம், எதிரியை வெற்றிகொள்ளுதல், பொழுது போக்கு, தான் மேற்கொள்ளும் தொழிலை எளிமையாக்குதல் என்று எல்லா நிலைகளிலும் நுட்பங்களைப் பயன்படுத்தித் தன்னை முன்னேற்றி வருகிறான். இந்த அளவிற்குத் தொழில்நுட்பம் அவனுக்குக் துணைசெய்துள்ளது.
இங்கு கற்றலும், பட்டறிவுமே மானிடனை உயரவைத்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய நிலையில் காலங்காலமாகத் தான் பட்டறிந்தவற்றைத் தனது அடுத்த சந்த திக்குக் கடத்தும் பணியையும் அவன் செய்துவந்துள்ளான். குருசீட முறையில் இருந்து இன்றைய இணையவழிக் கல்விமுறைவரை எமது அடுத்த சந்ததிக்கு நாம் அறிந்தவற்றைக் கூறி வைப்பதிலும் ஆர்வமுள்ளவராகவே இருந்து வருகிறோம். இதற்கு அவன் கண்டறிந்துள்ள தொழில்நுட்பமே பலவகையிற் கைகொடுத்து வருகிறது.
அதனால் மொழிப் பயன்பாட்டிலும், கற்றலிலும் கற்பித்தலிலும் தொழில்நுட்பம் பலமாற்றங்களைச் செய்தும் வருகிறது. கற்றல் என்பது மானிட வளர்ச்சியில் வகிக்கும் பங்கு உணரப்பட்டதாலேயே இன்று அரசுகள் யாவும் கற்றலுக்கு முக்கிய இடம்கொடுத்து வருகின்றன. இதனால் கற்பித்தல் முறைகளிலும் மாணவர் சூழல் அறியப்பட்டு அதற்கேற்பப் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெ டுத்துச் செல்லப்படுகின்றன. இன்று கற்கும் சமூகமே நாளைய உலகை வழிநடத்தி வருகிறது என்ற உண்மை அனைவராலும் காலாகாலமாக உணரப்பட்டுவருகிறது. இன்றும் அவ்வுணர்வு உயிர்த்துடிப்போடுள்ளதையும் கண்ணாரக் காண்கிறோம்.
கற்றல், கற்பித்தற் செயற்பாடுகள் பற்றி நேக்கும்போது காலச்சூழலும், கற்போர் மனப்பாங்கும், அவர்களது எதிர்பார்ப்பும் என்று பலவற்றைக் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. தமிழ்மொழிக் கல்வியென்று பார்க்கும்போது இது இடத்துக்கு இடம் மாறுபட்டமைவதை நாம் கவனிக்கலாம். தாய் மண்ணில் தன்மொழியையே பேசும் தன்னின மக்களோடு வாழும் ஒரு சிறுவன் அல்லது சிறுமி தனது தாய்மொழியைக் கற்கமுனைவதும், புலம்பெயர்ந்த சூழலிலே பல்லின மக்களோடு வாழநேர்ந்துள்ள ஒரு சிறுவன் அல்லது சிறுமி தனது தாய்மொழி என்று பெற்றோரால் அறிமுகப்படுத்தப்படும் தாய்மொழியைக் கற்கவேண்டுமென்று பெற்றோர் நினைப்பதுபோற் கற்கமுனைவதும் வேறுபட்டதாக இருப்பதை நாம் அவதானிக்கலாம். இங்குதான் பாடத்திட்டங்களின் வடிவமைப்பும், கற்பிப்பவர்களின் அணுகுமுறையும் மாணவன் தமிழ்மொழியைப் பற்றிக்கொள்ளத் தூண்டுகோலாக அமைகின்றன.
இதனால் மொழிபற்றிய பார்வை கற்கவிழையும் மாணவர் மனதில் சாதகமான ஒரு முடிவை எடுக்க உதவுவதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் கல்வி கற்கும் ஒருவர் அம்மொழியில் இருபத்தியாறு எழுத்துகளே உள்ளன என்ற மனவுணர்வோடு இருப்பான். இவனிடம் தமிழில் இருநூற்றி நாற்பத்தேழு எழுத்துகள் உள்ளன என்று அறிமுகம் செய்ய முனைந்தால் இம்முயற்சி எந்தளவிற்குச் சாதக மனநிலையை ஏற்படுத்தும் என்று சிந்திக்கவேண்டும். அதனால் தமிழில் முப்பது எழுத்துகளே உள்ளன என்றும் அந்த உயிர், மெய் எழுத்துகளே ஒவ்வொரு ஓசையை வெளிப்படுத்தவும் பயன்படுகின்றன என்பதையும் ஒலிவட்டூடாக உணரவைக்கலாம். இதற்குத் தற்போதைய தொழில்நுட்பக் கருவிகள் பெருமளவிற் பயன்படும்.
தொழில் நுட்பங்கள் தமிழ்மொழிக் கற்றலில் எவ்வளவிற்கு உதவமுடியும்?
எழுத்து அறிமுகம்:
முதலில் எழுத்துகள் இவை என்பதை அறிமுகம் செய்யும்போதே அவற்றிற்குரிய ஒலி வடிவத்தையும் அறிமுகம் செய்யலாம். குறுகி ஒலிக்கும் உயிர்களையும் நீண்டு ஒலிக்கும் உயிர்களையும் அவற்றுக்குரிய சரியான பலுக்கலுடன் (உச்சரிப்புடன்) அறிமுகம் செய்வது பின்பு உயிர்மெய் அறிமுகத்தின்போது பெரிதும் கைகொடுக்கும். மெய்எழுத்துகளிலும் அவற்றின் பிறப்பிடத்தை உணரும்வகையில் பலுக்கப் பழக்கும்போது சொல்லாக்கத்தின்போது எழுத்துப் பிழையின்றி எழுத உதவிசெய்யும். இப்போது அவை பிறக்கும் இடத்திற்கேற்ப வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுவ தையும் ஒலிவட்டுகள் ஒலிநாடாக்கள் ஊடாகவோ உணரவைக்கலாம்.
தமிழில் முப்பது எழுத்துகளே உள்ளன என்றும் அவை எவையென்றும் வரிவடிவிற் காட்டவும் கணினி போன்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தமுடியும். மேலும் எழுத்துகளைச் சரியாகப் பலுக்க (உச்சரிக்க)ப் பழக்குவதன் ஊடாக அதை பிழையின்றி எழுதப்பழக்கவும் கணினியின் துணையை நாடலாம். இதற்கு எழுத்துகளின் பிறப்பிடத்தையும் அவை எவ்வாறு வெளிவந்து ஒலியை ஏற்படுத் துகின்றன என்பதையும் படங்களின் ஊடாகத் தெளிவுபடுத்தலாம். லகர, ளகர, ழகர வேறுபாடுகளையும் நகர, னகர, ணகர வேறுபாடுகளையும், ரகர, றகர வேறுபாடுகளையும் உணர்த்தவும் நவீன தொழில்நுட்பம் பெரிதும் கைகொடுக்கும். (இதுசார்ந்த ஆய்வுகள் இன்று வெளிவந்துள்ளன)
முதல்எழுத்துகள் என்று நாம் அறிமுகம் செய்யும் உயிரும் மெய்யும் எவ்வாறு கூடி உயிர்மெய் வடிவத்தை அடைகின்றன என்பதை விளையாட்டாக உணர்த்த விளையாட்டுமுறை பெரிதும் பயன்படும். எடுத்துக்காட்டாக: ‘க்’ என்ற மெய்யுடன் ‘அ’ என்ற உயிர் இணையும்போது ‘க’ என்ற உயிர்மெய் உண்டாகிறது என்பதை கணினி விளையாட்டினூடாகக் கற்பிக்கலாம். மாணவர் ‘க’ என்பதற்குப் பதிலாக ‘கா’ என்றோ ‘கெ’ என்றோ குறிப்பிட்டால் அது தவறான விடையென்பதை வேறுபட்ட ஒலியூடாக உணரவைக்க முடியும். மேலும் இவ்வாறு உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாக்கப்படுவதே உயிர்மெய் என்று கூறி அது சார்பெழுத்து என்பதை அறியவைத்து அதனூடாக 216 உயிர்மெய் எழுத்துகளும் உயிரும் மெய்யும் சேர்வதால் உண்டாகின்றன என்பதை விளங்கிக் கொள்ள உதவலாம்.
எழுத்து அறிமுகத்தைப் படங்களுடன் கூடிய எழுத்தட்டைகளைப் பயன்படுத்திக் கணினியூடாக அறிமுகம் செய்யும்போது மாணவரிடம் தெளிவை ஏற்படுத்தும். இங்கே எழுத்துடன் சொல்லும் அறிமுகமாகும் நிலையும் உருவாகின்றது. படங்களைப் பார்த்து அவைபற்றிச் சொல்ல முற்படும் போது எழுத்தும், சொல்லும் அறிமுகமாகின்றன. படங்களைப் பார்த்து அவற்றை விவரிக்க முற்படும்போதும் இது நடைபெறுகிறது. இங்கே படங்கள், காட்சிகள் என்பன மாணவனைச் சிந்திக்க வைத்து அதுபற்றிப்பேசவும் வைக்கும். இங்கும் தொழில்நுட்பத்னூடாக எளிதாக ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்.
சொல் அறிமுகம்:
தமிழில் உள்ள ஒரு சிறப்பு, எழுதப்படும் எழுத்துகள் அத்தனையும் ஒவ்வொன்றாக உச்சரிக்கப்பட்டே சொல்லாக வெளிக்கொணரப்படுகின்றது. ஆங்கிலத்தில் உள்ளதுபோல் எந்த எழுத்தையும் ஒலிக்காது மௌனமாக வைத்துத் தமிழில் உச்சரிப்பதில்லை. இதை எடுத்துக்காட்டுகள் ஊடாக தெளிவுபடுத்தலாம். இங்கே வகுப்பறையில் மாணவன் எந்தப் பிறமொழியுடன் தொடர்புள்ளவன் என்பதைக் கண்டறிந்து ஆசிரியரே அதை விளக்கவேண்டும். மேலும் எழுத்துகளை அசைகளாக்கி ஒன்றோடு ஒன்றை இணைத்து வாசிப்பதன் ஊடாகச் சொற்கள் உருவாவதையும் எடுத்துக்காட்டுகள் ஊடாக விளக்கிக் காட்டலாம்.
சொற்பொருள் உணர்ந்து எழுத்துகளைப் பொருளுள்ளவையாக அமைப்பது என்பது ஒரு முக்கியமான விடயமாகும். இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவில் பெரும்பாலும் கைதேர்ந்தவர்களாக இருப்பதால் மாணர்களும் இதை வரவேற்பார்கள். இதற்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்பதும் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. சொற்களை எழுத முற்படும்போது அவை பொருளுள்ளனவாக அமையவேண்டும் என்பதை உணர்த்தவேண்டும். இது வேற்று மொழிகட்கும் பொருந்தும் என்பதால் இதுவிடயத்தில் ஆசிரியர் பெரிய அளவில் நேரத்தைச் செலவிடவேண்டி நேராதென்பதே எனது எண்ணம்.
ஆனால் தமிழ் இலக்கணத்தில் இன்ன இன்ன எழுத்துகள்தான் முதலெழுத்தாக வருமென்றும் இன்ன இன்ன எழுத்துகள்தான் இறுதிஎழுத்துகளாக வருமென்றும் கூறப்பட்டிருந்தபோதிலும் பல்லின பன்மொழிகளின் தாக்கம் அவற்றை இன்று மாற்றியமைக்க வைத்துள்ளதையும் தெளிவுபடுத்தலாம். இதை இன்று நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடாகச் சிறப்புப் பெயர்களில் பெரும்பாலும் காண்கிறோம். வேற்றுமொழிச் சொற்களைத் தமிழிற் கூறமுற்படும்போது முதலெழுத்து, இறுதியெழுத்து என்ற வரம்பு மீறப்படுகிறது. இது தவிர்க்க முடியாதுள்ளதையும் கவனிக்கின்றோம். தனித்தமிழ் விதியைப் பின்பற்றி ஒருவரின் பெயரையோ அல்லது ஒருஇடத்தின் பெயரையோ எழுத முற்படும்போது அப்பெயர்வடிவமே மாறிவிடுவதைக் காண்கிறோம். தவிரப் புதுக்கண்டுபிடிப்புகளோடு தெடர்புள்ள சொற்களும் தொடக்கத்தில் இந்நிலைக்கே உள்ளாகின்றன.
சொல்லறிமுகத்தின்போது இனஎழுத்துகள், மெய்மயக்கம், மயங்கும் எழுத்துகள், மயங்காத எழுத்துகள் என்பவற்றைச் செயல்முறையூடாக (பயிற்சிகளினூடாக) மாணவரை எளிதிற் சென்றடையச் செய்ய இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இது இலக்கண அறிவும், கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவும் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
வாக்கிய அமைப்பு:
வாக்கிய அமைப்பென்று நோக்கும்போது அவற்றினூடாக பொருளுள்ள வசனங்களையும், கருத்தை வெளிப்படுத்தும் வசனங்களையும் ஆக்க வைக்கலாம். இதை எழுத்து, சொல் என்பவற்றில் ஒரு தெளிவு ஏற்பட்டபின்பே முன்னெடுத்துச் செல்வது பொருத்தமானதாக அமையும். சொற்கூட்டங்களோ அல்லது சொற்றொடர்களோ பொருளை வெளிப்படுத்தினாலும் ஒழுங்கான வாக்கியமாக அமைந்து விடுவதில்லை.
அதனால் வசன ஆக்கத்தின்போது:
எழுவாய் பயனிலையில் தெளிவு, காலமறிதலில் மயக்கமின்மை, இடைச் சொற்கள் உரிச்சொற்களின் முக்கியத்துவம், என்பன வாக்கிய அமைப்பில் எந்தளவிற்கு முக்கியம் பெறுகின்றன என்ற அறிவை மாணவரிடம் ஏற்படுத்தவேண்டும்.
மூவிட எழுவாய்களுக்கு ஏற்ப அவற்றின் பயனிலைகள் மாறுபடும்போது வினை முற்றுகளின் விகுதிகள் மாறுபடும் என்பதை அறிமுகப்படுத்தி எளிதாக எழுவாய்க்கு ஏற்ற பயனிலையை அமைக்க உதவலாம். இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்றமுறையில் பயிற்சிகளை அறிமுகப் படுத்த இன்றைய தொழில்நுட்பம் பெரிய அளவில் உதவமுடியும்.
மேலும் படங்களின் துணையுடன் காண்பதை விவரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மாணவர் வேறு மொழியிற் சிந்தித்தாலும் அதைத் தான்விரும்பும் மொழியில் கூறவைக்கப் படங்கள் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. இதற்குச் சிறிய பாடல்களும் சுவையான சிறுசிறு சித்திரக் கதைகளும் கைகொடுக்கும். தமிழ்நாட்டில் வெளிவரும் இணையத்தளங்களின் உதவியுடன் இத்தேவையைப் பூர்த்திசெய்யலாம். (இதற்கு ஆங்கில மொழியில் வெளிவரும் காட்சியும் கருத்தும் பற்றிய இணைய வெளியீடுகள் பெரிதும் துணைபுரியலாம்)
உடல், உளப் பாதிப்புகளின் காரணமாகக் கற்றற் செயற்பாட்டில் சில மாணவர்கள் பின்தங்கி நிற்பதை வகுப்பறைகளிற் காணமுடிகின்றது. இவர்களிற் சிலர் எழுத்துகளை எழுதவோ அன்றிப் பலுக்கவோ முடியாதவர்களாக அல்லது முயற்சிக்க விரும்பாதவர்களாக இருக்கக்கூடும். இவர்களைக் கணினியின் துணையுடன் வழிப்படுத்தமுடியுமா என்பதற்கும் நவீன தொழில் நுட்பம் வழிகாட்டுவதாக அமையும். இதையும் முன்கூறியதுபோற் கணினித் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களால் மட்டுமே காயாளமுடியும். இத்தகைய முயற்சிகளில் ஈடுபட முன்வரும் தனிநபர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பொது அமைப்புகளோ, அரச நிறுவனங்களோ இருக்கவேண்டும்.
எழுத்து, சொல், வாக்கியம் முதனிலை, இறுதிநிலை என்பவற்றில் ஏற்படுத்தப்படும் தெளிவு மாணவரிடம் பிற்காலத்தில் சொற்களைப் புணர்த்தும்போது நிலை மொழி ஈற்றையும் வருமொழி முதலையும் அறிந்து செயற்பட வாய்ப்பளிக்கும். மேலும் சொற்களை உணர்ந்து அவற்றை வாக்கியங்களிற் பயன்படுத்தும் போதும் சரியெது பிழையெது என்று கண்டிறியும் வாய்ப்பை நவீன தொழில் நுட்பத்தின்மூலம் ஏற்படுத்தமுடியும். கால இடைநிலைகளை அறிமுகம் செய்யும்போதும், வேற்றுமை உருபுகளை அறிமுகப்படுத்தும்போதும் ஏற்படும் சிக்கலையும் தீர்க்க இது உதவலாம்
புலம்பெயர்ந்த மண்ணில் இதுபோன்ற வாய்ப்புகள் போதியளவு இல்லை என்பதே எனது பட்டறிவு. தமிழருக்கென்று ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் தமிழரை வழிநடத்தும் அமைப்பால் அல்லது அரசால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதும் எனது பணிவான கருத்தாகும். மேற்கூறிய பலவிடயங்கள் கனடாவை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை என்பதால் வேறிடங்களுக்கு ஒத்துவராமலும் போகலாம். ஆனால் தமிழ்மொழிக் கல்வியில் இன்று காணப்படும் பொதுத்தேவை இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தமிழ்மொழிக் கல்வியில் கணினி, ஒலி ஒளி இறுவட்டுகள் ஒலிநாடாக்கள் போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை எளிமைப்படுத்த முடியும். தமக்கென்று கைகொடுக்கும் தன்னார்வ நிதிநிறுவனமோ அன்றி அமைப்போ இல்லாத புலம்பெயர் நாடுகளில் அக்குறைபாட்டைப் போக்க மனமுவந்து யாரேனும் முன்வரவேண்டும். தென்னிந்தியாவில் ஒரு அரசமைப்பு இருப்பதால் அவர்கள் உரிமையுடன் தமது குறைபாட்டை முன்வைத்து அதற்கான தீர்வையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிற் கல்விப்பணியில் ஈடுபடும் எம்போன்றவர்கட்கு இந்த வாய்ப்பு இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயமே. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டுமென்று ஆர்வம் காட்டும் தமிழார்வலர்கள் இதற்கான தீர்வைத் தேடித்தரவேண்டும்.