தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்கள்:தமிழ் நூலகம்
முனைவர் வி.வசுமதி
தமிழ்த்துறைத் தலைவர்& இணைப் பேராசிரியர்
ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி
உடுமலைப்பேட்டை.
Abstract:
வளர்ந்து வரும் காலச்சூழலில் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் பெறுவகையில் ஒன்றாக அமைவது கணினியும், அதனூடே செயாற்றும் மென்பொருள்களும். இணையத்தின் பயன்பாட்டில் வாசிப்பு எனும் பழக்கம் பல மாற்றங்களைக் கொண்டு அழிவின் பாதைக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலை மாறிட வளர்ந்துவரும் மென்பொருள் நிறுவனங்கள் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அதில் ஒரு செயலியை பற்றி மட்டும் காண்பது இக்கட்டுரையின் நோக்கம்.
ஆய்வுப் பொருள்
வாசிப்பு என்பது ஒரு கலை. இது இன்று அழியும் தருவாயில் இன்றைய இளைய தலைமுறையினரிடம் உள்ளது. இதற்குக் காரணம் திறன்பேசியாக மாறிய கைப்பேசியே ஆகும். இதன் வழியே நாம் வாசிப்புக் கலையை மீட்டெடுக்க தமிழ் நூலகம் என்ற செயலி வழி காணலாகும் செய்திகளை ஆய்வது இக்கட்டுரையின் ஆய்வுப்பொருளாகும்
ஆய்வின் கருதுகோள்
வாசிப்பினை மீட்டெடுக்க பயன்படும் செயலிகளில் நன்மை தீமைகளை ஆய்ந்து ஒரு செயலியின் தன்மையை மட்டும் கூறி அதன்வழி வாசிப்புக் கலைக்கு முக்கியத்துவம் காணுவதை இக்கட்டுரை கருதுகோளாகக் கொண்டுள்ளது.
உட்தலைப்புகள்
செயலிகள் உருவாக்கம் – புதினச் செயலிகள் – தமிழ் நூலகம் – செயலி – விளைவுகள் – நன்மைகள் – தீமைகள் – முடிபு என்ற தலைப்புகளில் இக்கட்டுரை அமையவுள்ளது.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லார் அறிவிலா தார்
குறள் எண் – 140
என்பது வள்ளுவம். உலகத்தின் ஊடே செல்லும் வாழ்வில் கல்வி கட்டாயமாகி விட்டது. நேர்முக வகுப்போ இணைய வழி வகுப்போ ஏதாயினும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சூழலில் உள்ளனர். நேர்முக வகுப்பில் அவர்களது படிப்பார்வம் மிகினும் இணையத்தின் பயன்பாடு கட்டாயம் தேவைப்படுகிறது
தமிழ்ப் பயிலும் மாணவன் தனது இலக்கிய தேடலில் தன்னை மறக்கிறான். நூலகம் சென்று பார்த்த காலம் மாறி நூலகச் செயலியில் வாழ்கிறான். அவ்வகையில் செயலிகள் கல்வியியலில் தனி இடம் பெற்றுத் திகழ்கின்றன. செயலிகளின் செயல்பாடுகள் அளப்பரிய தன்மை பெறுகிறது.
செயலிகள் உருவாக்கம்
கணினி தொழில்நுட்பவியல் செயலிகளின் வரப்பிசாதம் ஆகும் கணினியுடன் இணைந்த இன்றைய கல்விமுறை மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. அவ்வகையில் மழலையர் பருவம் முதல் அனைத்து பருவம் வரை எல்லா வயதினருக்கும் செயலிகள் உள்ளன. படிக்கவும், கேட்கவும், சமையல் செய்யவும், பாடம் படிக்கவும் கேட்கவும், எழுதும் முறை (மொழிகளுக்கு ஏற்ப) இசைவடிவில் இது போன்ற அனைத்து கணினி வளங்களும் வலைத்தளத்தில் வலம் வருகின்றன என்றால் மிகையாகாது. இதுபோன்ற செயலிகளை மென்பொருள் நிறுவனங்கள் நிறுவுகின்றன இவற்றுள் கல்வியியல் நோக்கில் இடம்பெறும் சில செயல்கள் வடிவமைப்பு அதன் பயன்பாடு அதனால் ஏற்படும் விளைவுகள் இதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது
புதினச் செயலிகள்வகுப்பு கல்வி முதல் கற்பிக்கப்படுவது தமிழில் வாசிப்பு என்னும் கலை. வாசித்தல் என்பது பல்வேறு வகைகளில் காணமுடியும்
நாளிதழ் வாசித்தல், மனப்பாடச் செய்யுள்களை வாசித்தல், நூல்கள் வாசித்தல், சிறுகதை மற்றும் புதினங்கள் வாசித்தல். இவையனைத்தும் குறைவதற்குக் காரணமாக நம்மிடமுள்ள திறன்பேசிகளே என்பதும் மறுக்க முடியாத உண்மை.
புதின வாசிப்பு என்பது நீண்டு செல்லும் ஒரு பயணம். அன்றைய காலங்களில் தொடர்கதைகளாக வலம் வந்த கதைகள் பின்னாளில் தொகுக்கப்பட்டு புதினங்கள் ஆயின. இதற்கு உதாரணம் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு. இன்று அனைத்து இணைய வழியிலும் தொடர்களே வலம் வருகின்றன என்பது சிக்கலான செய்தி.
புதின வாசிப்பு என்பதன் வழி புதின ஆசிரியர் தமது உலகத்திற்கே வாசிப்பாளரை இழுத்துச் செல்கிறார். வாசகனும் எழுத்தாளனோடு இணைந்து பயணிக்கும் இந்தப் புதிய பயணத்தில் தமிழ் நூலகம் என்று ஒரு செயலியின் பங்களிப்பினைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழ் நூலகம் – செயலி
‘’உங்கள் கைபேசியில் ஒரு நூலகம் மேற்பட்ட புத்தகங்கள் ஒரே தளத்தில்’’ – என்ற வாசகத்துடன் உள்ளே செல்கிறது இந்தச் செயலி. அதனுள் புத்தகங்கள், வரலாறு, தமிழ் இலக்கியம், உலக இலக்கியங்கள், ஆன்மீகம், கட்டுரை நூல்கள், பிற நூல்கள், பல்சுவை புத்தகங்கள், தத்துவங்கள், புதுமைப்பித்தன், கல்கி, அ. ச ஞானசம்பந்தன், அண்ணாதுரை, வாணிதாசன், நா பார்த்தசாரதி, லா ச ராமாமிர்தம், சாவி, ஜெயகாந்தன், வடுவூர் துரைசாமி, டாக்டர் இராசமாணிக்கனார், சு சமுத்திரம், எஸ்.எம். கமால், வானமாமலை, கி. வா ஜெகந்நாதன்,, மயிலை சிவமுத்து, பேராசிரியர் நா.சஞ்சீவி, அ.கா. பெருமாள், ஜெயமோகன், கோவை இளஞ்சேரன், சிபி சிற்றரசு, கவிஞர் மீரா, டாக்டர் ரா.சீனிவாசன், புலவர் கா.கோவிந்தன் மற்றும் இளம் எழுத்தாளர்கள் வரை இடம் பெற்றுள்ளனர்.
இவர்களின் படைப்புகள் அனைத்தும் மின் நூலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இன்று அச்சில் இல்லாத நூல்களும் இச்செயலில் இடம்பெறுவது சிறப்பு. நூலக நூலகமாய்ச் சென்று சுற்றித் திரிந்து அதில் உறுப்பினராகி, நூலகக் கணக்கிற்கு ஒப்பிட்டு நூல் எடுத்துவிட்டு உரிய நாளில் ஒப்படைக்காவிடின் அதற்கு அபராதம் விதித்து அப்பப்பா…. என்று இத்தனை வழிவகைகளைக் கடந்து இன்று மின்னிதழில் நூலகள் வலம் வருவது வாசிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
விளைவுகள்
நன்மைகள்
எல்லா வளங்களும் நிறைந்த நம் நாட்டில் கணினி மென்பொருள் தொழில் நுட்பவியல் மிக அருமையாக உள்ளது இதனை முன்னெடுத்து மக்களாகிய நாம் கடைபிடித்தால் தேவையற்ற அலைபேசி தொல்லைகளில் இருந்து சற்றேனும் ஆறுதல் அடையலாம்.
வாசிப்பில் மனம் இணையும் போது மன அழுத்தம் குறையும். செயல்திறன் மேம்படும். சிக்கலான சூழலை எதிர்கொள்ளும் மன வலிமை பெறும். கற்பனைத் திறன் கூடும். மனித வாழ்வின் பல்வேறு கோணங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும். மன போராட்ட தருணங்களில் மனம் அமைதி ஏற்படும். கைப்பேசி இப்போது திறன்பேசி ஆக மாறியுள்ளது. அத்தனை கொண்டு நம் திறமையை வளர்ப்பது புத்திசாலித்தனம். என் வாயிலாக நாம் ஒரு இலக்கியத்தை வாசித்தல் என்பது நல்ல தன்மையை நமக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த விதிவிலக்கும் இல்லை.
தீமைகள்
வாசித்தல் பழக்கத்திற்கு புத்தகத்தைக் கையில் எடுக்கும் போது மட்டுமல்ல கெயலிகளின் வழியே படிக்கும்போதும் பல்வேறு இடையூறுகள் வருவது இயல்பு. வேற்றுச் செயலிகளை தரவிறக்கம் செய்ய திரை முன் தோன்றும் திரை தொடுதல்கள். தொடுதிரை என்பதால் ஏதேனும் ஒன்றை தொட்டாலே அடுத்தடுத்து வரும் இடையூறுகள். தவிர்க்க இயலாத புலனச் செய்திகள் மின்னஞ்சல் மற்றும் வலையொளி வாயிலாகப் பெறப்படும் வருகைகள்இ. இவையணைத்தும் வாசிப்புப் பழக்கத்தை தொடர முடியாத சூழ்நிலை காரணிகளாகும். இவைகளை தக்க முறையில் மீண்டும் வராதபடிக்கு நமது திறன்பேசியின் அமைப்புமுறைகளை மாற்றிவிட்டால் படிக்கத் தொடங்கலாம் எனினும் இது 100% சாத்தியமற்றதாகவே தெளிய முடியும்
முடிவு
வாழ நினைத்தால் பூமியில் வழி இல்லாமல் இல்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றைய தொழில்நுட்பவியல் உலகில் ஒரு செயலை பற்றிய அறிமுகம் மட்டும் ஈண்டு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நூலகம் என்ற செயலின் வழி தலைப்புகளில் இனம் பிரித்து காட்டப்பட்ட ஆசிரியர்கள், அறிஞர்கள் என்றால் அனைத்து தரப்பு நூல்களும் இடம் பெறுகின்றன. இத்தகு சிறப்பான செயலிகள் ‘தமிழ் இலக்கிய இலக்கியங்களுக்கான கணினி வளங்கள்’ – என்று கூறுவது மிகச் சரியாக பொருந்தும். இதுபோன்ற கணினி உலகில் இடம்பெறும் பல்வேறு செயல்களை நாம் இனம் கண்டு பயன் பெறுவோமாக.