நவீன கற்பித்தலும் கூகுள் வகுப்பறையும்

நவீன கற்பித்தலும் கூகுள் வகுப்பறையும்

திருமதி பெ.ஆனந்தி

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,

தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,

சிவகாசி.

 

ஆய்வுச்சுருக்கம்

நாகரீக வளர்ச்சி கல்விச் சூழலையும் பாதித்துள்ளது உண்மை. கற்றல் கற்பித்தல் முறைகளில் ஏற்பட்ட மாற்றம் ஆரோக்கியமான சூழலைத் தரக்கூடியது தானா என்ற ஐயப்பாடு இன்றுவரை நிலவி வருகிறது. தொழில்நுட்ப வளங்கள் ஏராளமாக பெருகி நிற்கும் இன்றைய சூழலில் அதை அடுத்த தலைமுறையிடத்தே எடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை. அவ்வகையில் நவீன கற்பித்தல் தொழில் நுட்பங்களுள் முதன்மையானதான கூகுள் நிறுவனத்தார் கல்விக்கென இலவசமாக வழங்குகிற அமைப்பான கூகுள் வகுப்பறை முக்கியமானதாகும். கூகுள் வகுப்பறையினை அறிமுகப்படுத்துவதாகவும் அதில் இடம்பெறும் தொழில்நுட்பங்களையும் அவற்றின் நன்மைகளையும் விளக்குவதாக இந்த ஆய்வுக் கட்டுரை அமையப் பெறுகின்றது.

Abstract

It is true that the development of civilization has also affected the educational environment. Doubts remain that whether the change in learning and teaching methods can provide a healthy environment. In today’s environment where technological resources are increasing abundantly, it is our duty to take it to the next generation. In this way, Google Classroom, a free system provided by Google for education, which is the first among modern teaching techniques, is important. This research paper aims to introduce Google Classroom and explain the technologies involved and their benefits.

முன்னுரை

கல்வி கரையில்லாதது. காலம்தோறும் வளர்ச்சி அடைவது. இனிய வாழ்வை அமைத்திட அவசியமான கல்வி தலைமுறை தலைமுறையாய் பல மாறுதல்களை அடைந்திருப்பது நாம் அறிந்த உண்மை. குருகுலக் கல்வி முறை பள்ளிக்கூட கல்வியாக பரிணமித்தது. வகுப்பறையில் அமர்ந்து ஆசிரியரின் வாய்ச்சொல் கேட்டு அறிவைப் பெறல் அடுத்தநிலை வளர்ச்சியாய் இருந்தது. ஆசிரியரையே பார்க்காமல் இருந்த இடத்திலிருந்தே உலகளாவிய கல்வியைப் பெறும் இணையவழிக் கல்வி நாம் இன்றடைந்த வளர்ச்சி. நவீனக் கற்பித்தலில் கூகுள் வகுப்பறையின் அவசியத்தை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.

நவீன கற்றல் முறைகள்

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கும் நாம் கல்வியின் பரிபூரண வளர்ச்சியை கண்டும் கேட்டும் அனுபவித்தும் வருகிறோம். கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஊரடங்கு போடப்பட்ட சூழ்நிலையில் நவீன கற்றல் கற்பித்தல் முறையின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் பெரும்வியப்பை ஏற்படுத்தியது.

  • இணைய ஊடகங்கள்(மின் இதழ்கள், மின்னஞ்சல்,சமூக வலைத்தளங்கள்)
  • மைக்ரோசாஃப்ட் நுட்பங்கள்(வேர்டு,பவர்பாயிண்ட்,எக்ஸல்,நோட்பேடு, பப்ளிஸர்)
  • இணைய நூலகங்கள்(தமிழ் இணைய கல்விக் கழக நூலகம் (TNVU),தமிழ் இணைய நூலகம் (Tamil Digital Library),சென்னை நூலகம்)
  • கற்றல் வலைப்பதிவு தளங்கள் (Blog)
  • விக்கி குடும்பம் (விக்கிபீடியா,விக்கிமூலம்,விக்கிநூல்கள்,விக்கி செய்திகள், விக்கி மேற்கோள்)
  • இணைய தேடுபொறிகள்(கூகுள் (Google),டக்டக் கோ (Duck duck Go),பிங் (Bing), நாய் தேடல் (Dogpile),யிப்பி (Yippy),கூகுள் ஸ்காலர் (Google Scholar), வெப்போ பீடியா (Webopedia),யாஹீ (Yahoo))

இவை போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றல்முறையில் பயன்பாட்டில் உள்ளன. மாணவா்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் கற்றலோடு தொடர்புடையபிற திறமைகளை வளர்த்திடவும் உதவிடும் இன்னும்பிற நுட்பங்களும் உள்ளன. மாணவா்தம் பாட அறிவோடு தொழில்நுட்ப அறிவும் வளர்ந்திட நவீன தொழில்நுட்பங்கள் வழியிலான கல்விமுறை நல்ல வாய்ப்பாக அமைகின்றது. ஆனால் கற்றல் தொழில்நுட்ப பயன்பாடுகள் முழுமையாக மாணவா்களைச் சென்று சேர்ந்திருக்கிறதா என்பது ஐயமே.

தொழில்நுட்ப கற்பித்தல் சவால்கள்

  • தொழில்நுட்பங்கள்வழி கற்றல் கற்பித்தல் என்பவை தவிர்க்க இயலாததாக மாறிவிட்ட இன்றைய சூழலில் மாணவா்களின் கற்றல் மனதும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும் மாறிக் கொண்டே வருவது உண்மை. தொழில்நுட்ப கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல.அவையாவன;
  • மாணவர்களின் கவனச்சிதறல்
  • இணைய இணைப்பின் வேகக்குறை
  • பழைய கற்பித்தலிலிருந்து திடீரென மனமாற்றம்
  • உளவியல்சார் சிக்கல்கள்
  • குடும்ப மற்றும் கற்பித்தல் சூழல்களை ஒரே நேரத்தில் கையாளுவதில் சிக்கல்
  • நவீன கற்பித்தல் வசதியைப் பெறுவதில் பொருளாதார நெருக்கடி
  • ஒரே நேரத்திலே இணையவழி சிக்கல் (Network Problem) மற்றும் மாணாக்கரின் கருத்து ஒருங்கிணைப்பு (Concentration) சிக்கலை எதிர்கொள்ளுதல்

இவ்வாறாக நவீன கற்பித்தல் முறைகளில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. எத்தனை சவால்களைச் சந்தித்த போதிலும் கற்பித்தலின் அடிப்படை இன்பம் மாறுவதில்லை. தொழில்நுட்ப கல்வியின் வளர்ச்சிக்கான முக்கிய காரணம் எளிமையே (Easy Approach) ஆகும் . எளிமையான முறையில் கற்பித்தல் செயலிகள் நிறைய இருந்தாலும் அடிப்படை தொழில்நுட்ப அறிவு பெற்றவா்களும் பயன்படுத்தும் அளவிற்கு மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டது கூகுள் வகுப்பறையாகும்.

கூகுள் வகுப்பறை

கூகுள் வகுப்பறை (Google Classroom) எனும் அமைப்பு கூகுள் நிறுவனத்தார் கல்விக்கென வழங்குகிற இலவச தளமாகும். கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பங்களில் தவிர்க்க இயலாத இடத்தைப் பிடித்துள்ள இக்கூகுள் வகுப்பறை மாணவா்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வரப்பிரசாதமே. கூகுள் வகுப்பறையில் ஆசிரியர்களும் மாணவா்களும் தங்களது கோப்புகளை (Files) பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் அன்றாட வீட்டுப் பாடங்கள், பயிற்சிக் கட்டுரைகள் (Assignments) போன்றவற்றையும் பாடத்திட்டம், பாடம் தொடர்பான இணைய வெளியீட்டு பகுதிகள் (Online Reference Link) வீடியோக்கள் போன்றவற்றையும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது.

கூகுள் வகுப்பறை உருவாக்குதல்

கூகுள் வகுப்பறையை உருவாக்க அடிப்படை ஆசிரியரும் மாணவா்களும் ஜிமெயில்  கணக்கு வைத்திருக்க வேண்டும். தங்களது ஜிமெயிலில் வரப்பெறும் கூகுள் ஆப்ஸ்களில் கூகுள் கிளாஸ்ரூம் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது Https://classroom.google.com/ என்ற இணைய இணைப்பை பயன்படுத்தலாம். அதில் மேல் வலப்புறத்தில் இருக்கும் + குறியைத் தேர்ந்தெடுக்கும் போது அதில் வகுப்பில் இணைய (Join Class) வகுப்பை உருவாக்க (Create Class) என இரு தெரிவுகள் இருக்கும். பயன்பாட்டாளர் ஆசிரியராக இருந்தால் வகுப்பை உருவாக்கிக் கொள்ளலாம். பயன்பாட்டாளர் மாணவராக இருந்தால் வகுப்பில் இணையலாம். மாணவா்கள் வகுப்பில் இணைய ஆசிரியர்கள் வழங்கிய வகுப்புக் குறியீட்டைப் (Class code) பயன்படுத்தலாம்.

கூகுள் வகுப்பறை நுட்பங்கள்

கூகுள் வகுப்பறையின் அமைப்புகள்(Settiings) பகுதியில் வகுப்பிற்கான பெயர், வகுப்பு பற்றிய சிறு அறிமுகம், எப்பாடத்திற்காக உருவாக்கப்பட்ட வகுப்பு என்பதான தகவல்களைப் பதிவு செய்யலாம். ஆசிரியர் ஒருவர் உருவாக்கிய கூகுள் வகுப்பறை  ஸ்டீரிம் (Stream) வகுப்புப்பாடம் (Classwork) மக்கள் (People) மதிப்புகள் (Grades) ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டது. இதில் ஸ்டீரிம் பகுதியில் ஆசிரியர்கள் வகுப்பிற்கான வகுப்புக் குறியீட்டைப் (Class code) பெற முடியும். People பகுதியிலும் மாணவா்களை அவரவா் ஜிமெயில் மூலம் வகுப்பில் இணைய அழைக்கலாம். மேலும் இப்பகுதியில் கூகுள் வகுப்பில் இணைய லிங்க் பெறலாம். அந்த லிங்க்கை மாணவா்களுக்கு அனுப்பி வகுப்பில் இணைய அழைக்கலாம். மாணவா்கள் வகுப்பில் இணைந்த பின்பு வகுப்புப்பாடம் (Classwork) பகுதியில் மாணவா்களுக்கான பயிற்சிக் கட்டுரைகள், பாடத்திட்டம், வினாடிவினா, தேர்வு வினாக்கள் போன்றவற்றை உருவாக்க இயலும். அதை மாணவா்களோடு பகிரவும் முடியும். மதிப்புகள் (Grades) பகுதியில் மாணவா்தம் செயல்பாடுகளுக்கான மதிப்பெண்கள் வழங்கலாம்.

கூகுள் வகுப்பறையின் பயன்கள்

கூகுள் வகுப்பறை நவீன கற்பித்தலில் இன்றியமையாத இடத்தினைப் பிடித்திருப்பதற்கு அதன் எளிமையான பயன்பாடுகளே காரணம் எனலாம். அடிப்படை எழுத்தறிவு பெற்றவா்களும் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு தொழில்நுட்பங்கள் அமையப் பெற்றது. கூகுள் வகுப்பறையிலேயே பாடம் நடத்தி தேர்வுகள் வைத்து மதிப்பெண்களும் வழங்குவதால் இயல்பான வகுப்பறையில் இருப்பதான சூழலைத் தரவல்லது. ஆசிரியர்கள் மாணவா்களுடன் பகிரும் அனைத்து பாடக்குறிப்புகள் மற்றும் மாணவா்கள் ஆசிரியருக்கு அனுப்புகிற பயிற்சிக் கட்டுரைகள், தேர்வு விடைத்தாள்கள் என அனைத்துக் கோப்புகளும் கூகுள் டிரைவில் தனிப்பட்ட ஃபோல்டரில் சேகரிக்கப்படும் வசதியுள்ளது. இதன்வழி பாடம் தொடா்பாக தேவைப்படும் அனைத்து தகவல்களையும் நாம் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ள முடிகிறது. மாணவா்களின் பாடம் தொடர்பான செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதால் அவா்தம் ஒழுங்குநடவடிக்கைகள் பாதிக்கப்படுவதில்லை. மாணவா்கள்  அவரவர்தம் செல்லிடைபேசியில் கூகுள் வகுப்பறை ஆப் வழி வகுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மாணவா்களுக்கும் எளிமையானதாக இவ்வகுப்பறை அமைந்துள்ளது கண்கூடு. இணையவழி தொழில்நுட்பம் பற்றிய திறன் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது உதவுகிறது.

தொகுப்புரை

கூகுள் வகுப்பறை இணைய வசதி இருந்தால் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. அதேபோல மாணவா்களின் கவனச்சிதறல், இணைய இடையூறுகள் என்பது சாதாரண வகுப்புகளை ஒப்பிடும்போது இணைய வகுப்புகளில் அதிகம் எனினும் இன்றைய நவீன கற்பித்தல் முறைகளுள் கூகுள் வகுப்பறையின் தொழில்நுட்பங்களை அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. அதிகளவில் சிரமப்படாமல்  மாணவா்களும் ஆசிரியர்களும் பயன்படுத்திட ஏற்ற முழுவசதிகளோடு கூகுள் வகுப்பறை உள்ளதால் பெரிய அளவில் அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுகிறது. தொழில்நுட்ப வளங்கள் ஏராளமாக பெருகி நிற்கும் இன்றைய சூழலில் அதை அடுத்த தலைமுறையிடத்தே எடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை.

பயன்பாட்டுத் தளங்கள்

  1. https://ta.eferrit.com/google-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88/

http://www.tipsdocs.com/2020/05/blog-post.html

error: Content is protected !!