நெசவும் தொழில்நுட்பமும்

நெசவும் தொழில்நுட்பமும்

திருமதி. பெ.காளியானந்தம்,

உதவிப் பேராசிரியர்,

சைவ பானு சத்திரிய கல்லூரி,

அருப்புக்கோட்டை.

kaliyanantham@gmail.com

தொழில் தான் ஒரு நாட்டின் உயிர்த் துடிப்பாகும். எந்த நாடு தொழிலில் சிறந்து விளங்குகிறதோ  அந்த நாடுதான்  பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது இந்த அடிப்படையில் பழங்காலம் தொட்டே தமிழர்கள் தாம் வாழ்ந்த திணைகளுக்கு ஏற்ப மேன்மைமிகு தொழில்களை செய்து சிறப்புற்று இருந்தனர் இப்பொழுதும் இருக்கின்றனர் இதற்கு காரணம் அன்று முதல் இன்றுவரை தமிழர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பமே என்று கூறலாம் அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் விவசாயம் நெசவு சிற்பம் ஓவியம் கட்டிடம் இதுபோன்று பல கலைகள் நம்நாட்டில் சிறப்புற்று இருந்தன இவற்றுள் நெசவும் தொழில்நுட்பமும் என்னும் கட்டுரையில் தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் சிறப்புற்று விளங்கினர் என்பதை இலக்கியம் வரலாற்றுச் சான்றுகள் காட்டி பாவு ஓடுதல் தொழில்நுட்பத்தை  பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நெசவுத் தொழிலில்  ஆடையின்  சிறப்பு

நெசவுத்தொழில் என்பது பலரது கூட்டு முயற்சியால் நடைபெறும் தொழிலாகும்.

இந்தியாவில் நெசவுத் தொழில் தாயிடமிருந்து மகளுக்குக்  கற்றுக் கொடுக்கப்படும் ஒரு பரம்பரைக்  கலையாகவே கருதப்படுகிறது வீடுகளில் குடிசைத்  தொழிலாகவும் சிறு சிறு தொழிற்சாலைகள் பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்தும் அரசின் உதவியுடன் கூட்டுறவு சங்கங்களில் துணையுடன் இத்தொழிலை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்துள்ளது

பருத்தியும், ப ட்டும் தான் நெசவு ஆடைகளின் அடிப்படை

மூலப்பொருட்கள் ஆகும். பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் பருத்தி,பட்டு ஆடைகளை நெய்வதுடன் கிரேக்கம், ரோமானிய உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர்  என்பதற்கு ஆவணங்கள் உள்ளன. நம் நாட்டில் நெய்யப்படும் ஆடைகளுக்கு எப்பொழுதுமே புதுவரவு ஏற்படுவதற்குக்  காரணம் தமிழர்கள் நெசவு இயந்திரங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, துணிகளுக்குப்  போடப்படும் வண்ணக்கலவை செய்வதில் வேதியியல், பொறியியல், தொழில்நுட்பம் முதலியவற்றால் இணைந்த செயல்பாடுகள் போன்றவையேஆகும்

ஆடை, அறுவை, உடுக்கை, உடை, கிளி, துணி, துண்டு, வேட்டி, சிதார், பறை, போர்வை, துகில், படம், சிலை, புடவை, காகம் எனப்  பல சொற்கள் ஆடையை குறிப்பனவாகும்.

பாம்பு உரித்த தோலைப் போன்று இழையோட்டம் அறிய இயலாத நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட துணிகள் இருந்ததை

“ நோக்குழை  கல்லா நுண்மைப் பூக்கனிந்து

அர உரி அன்ன அறுவை”   ( பொருநர்— 82- 83}

“இழை  மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்”   (மலைபடு 561}

 

 

என்னும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.மேலும் தூய மூங்கில் சவ்வு போன்ற ஆடை இருந்ததை

 

“- – – – – – – – – – – -மாசில்

காம்பு  சொலித் தன்ன அறுவை”   (சிறுபாண்  235– 236) என்னும் வரிகள் உணர்த்துகின்றன

“ஆவி அன்ன அவி நூல் கலிங்கம் “(பெரும்பாண்  –  460)

பாலாடை போன்ற மெல்லியதான நூல் ஆடைஎன்பது இதன் பொருளாகும்

இதுபோன்று நுட்பமான ஆடைகளைத்  தமிழர்கள் நெய்து அணிந்து வந்துள்ளனர் என்பதை இதன் வழி அறிகிறோம்

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம்  இன்றிக்  கெடும்”

உணவிற்கு அடுத்து ஆடை இன்றியமையாதது என்பதை வள்ளுவர் இங்கு கூறுகிறார் ஒருவர் மற்றவருக்கு செய்யும் உதவியை கண்டு பொறாமைப்  படுபவன் சொந்தபந்தங்கள் இல்லாமல் உண்பதற்கு உணவும் உடுப்பதற்கு ஆடையும் இல்லாமல் கெட்டு  அழிவான் என்பதைக்  காணும்போது வள்ளுவர் உணவுக்கும் உடைக்கும் தந்த சிறப்பினை அறிய முடிகிறது.

“உண்பது நாழி உடுப்பவை இரண்டே “  (புறம்  189)

என்பதும் உணவையும்  உடையையும் சிறப்பிக்கும் பாடலாகும்

ஆடை மானம் காப்பதுடன் தட்பவெட்ப நிலைகள் தாக்காத வண்ணம் மனிதனைப் பாதுகாத்து வருகிறது .பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கால நிலைகளில் பல்வேறு வகைகளில் ஆடைகள் செய்யப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் தமிழக கிராமங்களில் குடிசைத் தொழிலாக ஆண்களோடு பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் சில நிலைகளில் ஆண்களை விட பெண்களே பொறுமையாகவும் சிறப்பாகவும் மென்மையாகவும் தொழில் நுட்பங்களைக்  கற்று வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது

இந்த நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரீகச்  சின்னங்களின் காணப்படும் உடைகள் உணர்த்துகின்றன ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல் ,உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை போன்றவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல் பருத்தி போன்றவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது {சண்முகநாதன் தமிழனின் வரலாறு}

ஆடை குறித்த பழமொழிகளும் இலக்கியச் சான்றுகளும்

“ஆடை உடையான்  அவைக்குஅஞ்சான்”

“ஆடையில்லா மனிதன் அரை மனிதன்”

“உடை பெயர்த்து எடுத்தல்” என்பது தொல்காப்பியம்

பண்டைக் காலத்தில் பெண்கள் சிறப்பாக நூல் நூற்று வந்ததை நக்கீரரும் கபிலரும் பவணந்தி முனிவரும் கூறியுள்ளனர்

“ பருத்திப்பட்டு” என்று புறநானூறு (125 326)  குறிப்பிடுகிறது

“நூலிலும் மயிரினும் நூல் பட்டேனும்

பால்வகை தெரியாப் அடுக்கத்து நறுமண சரிந்த அறுவை வீதியும்” (சிலப்பதிகாரம்)

என்று இளங்கோ அடிகள் கூறுவதால் பண்டைத் தமிழர்கள் நெசவின் பெருமை விளங்கும். மயிரினும் என்பதற்கு “ எலி மயிரினாலும்” என்று பொருள் கூறுகிறார் அடியார்க்கு நல்லார் மயிர் நிறைந்த ஒருவகை மலை எலி  பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது என்பதும் அதன் மயிரால் சிறந்த கம்பளம் செய்யப்பட்டது என்பதும்

“ புகழ் வரை சென்னிமேல் பூசையில் தெரியல

பவளமே அனையன பன்மயிர்ப் பேரெலி _- ( சீவக சிந்தாமணி)

செந்நெருப்புணும் செவ்வெ லிம்  மயிர்

அந்நெருப்பள வாய் பொன்  கம்பள  – சீவக சிந்தாமணி

என்று சிந்தாமணி கூறுவதாலும் அறியலாம்

“ஆளில் பெண்டிர் தாளின்  செய்த நுணங்கு நுண்பனுவல் போலக் கணங்கொள

“பருத்திப்  பெண்டின்  சிறு தீ  விளக்கத்து

இழை மருங்கு அறியா நுழைநூல் கலிங்கம்” புறம். 326)

பாம்பு விரித்தன்ன வான் பூங் கலிங்க மொடி” (  புறம் 397 15)

“பட்டினும்  மயிரினும் பருத்தி  நூலினும்

கட்டுநுண்   வினைஞர் காருகர் இருக்கையும்”(சிலம்பு  5:16-1

அக்கால ஆடை வகைகள்

தமிழர்கள் ஆடைகளில் பல்வேறு வண்ணங்கள் பயன்படுத்தி         வந்தனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் பட்டியலும் பஞ்சு நெய்த பூந்துகில் அணிந்து வந்துள்ளனர். தமிழர்கள் 40க்கும் மேற்பட்ட வண்ணங்களை அறிந்திருந்தனர் சித்தன்னவாசல், தஞ்சை பெரிய கோவில் ஆகியவற்றில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீட்டப்பட்ட ஓவியங்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உட்பட்டும் அதன் நிறம் மாறாது இன்றும் பொலிவு குன்றாது புத்தம்புதிய வண்ணம் போல் காட்சியளிப்பது இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும்.

முற்காலத்தில் தமிழ்நாட்டில் ஆடைகளின் வண்ணங்கள் மட்டுமல்ல அதன் உடலும் விரும்பும் முந்தானையும் பல்வேறு கொடிகளாலும் பூக்களாலும் இன்னும் பலவற்றாலும் செய்யப்பட்டு அவைகளுக்குப்  பெயர்கள் வழங்கப்பட்டன துகில் பூந்துகில் புத்தகம் உடுக்கை என்று பல்வேறு பெயர்கள் உள்ள ஆடைகளும் எண்ணிலடங்கா துகில் வெண்மை நிறம் உடையது சிவப்பு நிறம் உடையதாயும் உடையது பூந்துகில் தாமரை மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் கொண்டதாய் உள்ளது அவைகளில் சிலவற்றின் பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன

“துகில் மலர்போல் மணிநீர் நிறைந்த என்று” (பரிபாடல்)

“புட்டகம் பொருந்துவ துணைக்கு வரும் போரும்” (பரிபாடல்)

“நீலக் கச்சை பூரானை ஆடை” (புறநானூறு)

 

“மிப்பால்  வெண்துகில் போர்க்குநர்

பூப்பால் வெண்துகில் குழல் முறுக்குநர்”   (பரிபாடல்)

“பாம்பு பயந்தன்ன வடிவின் காம்பின் கழைபடு சொலியின்

இழைமணி வாரா ஒண்  பூங் கலிங்கம்”( புறநானூறு)

“நோக்கு நுழை கல்லா நுண்மை அறிந்து கனிந்து கனிந்து

அரவுரி அன்ன அறுவை” (பெரும்பாணாற்றுப்படை)

“புகை விரித்தன்ன பொங்குறுகி  துடீ  இ ” (புறநானூறு)

மேற்கூறிய சங்க இலக்கிய பாடல்களிலிருந்து முற்காலத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு  அழகிய ஆடைகள் இருந்தன என்பதை அறிய முடிகிறது . மேலும் முந்தானை ஆடை உடல் ஆடைகள் அழகாக விளங்க தாமரை, அல்லி, மல்லிகை அரும்பு போன்ற உருவங்கள் கவினுற செய்யப்பெற்றன .இம் மலர்களும் அரும்பும் ,பிஞ்சும், சிகப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், ஊதா, பச்சை போன்ற பல நிறங்களில் மட்டுமன்றி வெள்ளி சரிகை பொன் ஜரிகை போன்றவர்களை இணைத்து பட்டு நூலிலும் பஞ்சு நூலிலும் ஒளிவீசும் ஆடைகள் நெய்யப்பட்டன

பாம்பின் சட்டை போலவும் மூங்கிலில் குறித்த மெல்லிய தோல் போலவும் பால் காய்ச்சும் பொழுது எழும் ஆவி போலவும் பால் நுரை போலவும் வெண்ணிற அருவிநீர் வீழ்ச்சியின் தோற்றம் போலவும் தமிழர்கள் நுணுக்கமான ஆடைகளை செய்தனர் மேலும் மசூலிப்பட்டினம் கலியுகத்திலும் நெய்யப்பட்ட ஆடைகள் விட மெல்லிய ஆடைகள் மதுரை காஞ்சி முதலிய இடங்களில் செய்யப்பெற்று வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த அரசர்களின் உடல்கள் பல்வேறு   பொருட்களால் பதம் இடப்பட்டு அழியாமல் கல்லறைகளில் வைத்துப்  பாதுகாக்கப்  பெற்றுள்ளது .அந்த உடல்கள் இந்திய மசுலின் துணிகளால் பொதியப்  பெற்றுள்ளன என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் பாண்டியநாட்டில் நெய்யப் பெற்ற தாமரை மலர்கள் பொறித்த பட்டு துணிகள் ரோம். கிரேக்கம். எகிப்து. அரேபியா. இலங்கை. கடாரம், சாவகம், போதகம் முதலிய பல்வேறு நாட்டு மன்னர்களின் அரண்மனைகள் அனைத்தையும் அலங்கரித்து 19ஆம் நூற்றாண்டில் எங்கிலாந்து அரண்மனையிலும் இடம் பெற்றுள்ளது

ஆடை குறித்த பழந் தமிழ் சொல் வழக்குகள்

பரிபாடல்,  புறநானூறு பெரும்பாணாற்றுப்படை போன்ற பழந்தமிழ் நூல்களில் ஆடை குறித்த வழக்காறுகள் காணப்படுகின்றன.” ஆவியன்ன அவிநூல், கலிங்கம், நீலக் கச்சைப்  பூராடை,  வெண்துகில் ,இழைமணி வாரா ஒண்பூக்  கலிங்கம் “என்பன. அவற்றுள் சில பாண்டிய நாட்டில் நெய்யப்பட்ட பட்டாடைகள் ஆகும் . ஆடைகளைக்  குறிக்கும்  சொற்கள் :

  1. கோசிகம் 2.பீதகம் 3. பச்சிலை 4. அரத்தம் 5/ துண்டுகில் 6. சுண்ணம் 7. வடகம் 8. பஞ்சு 9.இரட்ட 10 பாடகம்  11. கோங்கலர் 12. கோபம் 13. சித்திரக்  கம்மி 14, குருதி 15. பரியல் 16. பே டகம் 17.பரியட்டக் காசு 18. வேதங்கம் 19 புங்கர்காழகம்  20. சில்லிகை 21. தூரியம் 22 பங்கம் 23 தத்தியம் 24. வண்ணடை  25. க வற்றுமடி 26. நூல் யாப்பு 27. திருக்கு 28. தேவாங்கு 29. பொன்னெழுத்து 30. குச்சரி 31. தேவகிரி 32. காத்தூலம் 33. இறஞ்சி 34.வெண்பொத்தி 35. செம்பொத்தி   36. பணிப் பொத்தி என்று முப்பத்தியாறு வகைகளை சிலப்பதிகாரத்தில் உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகிறார் அக்காலத்தில் பால் ஆடை க்கும் பஞ்சு  ஆடைக்கும் ஆடை என்னும் பொதுப்பெயர் வழங்கி வந்துள்ளது மேலும் இக்காலத்தில் தொழில்நுட்ப இயந்திரங்களால் நெய்யும் சிறந்த ஆடை வகைகளைப் போலவே பழங்காலத்தில் கைத்தறிகளில் தமிழர்கள் செய்து வந்துள்ளனர் என்பதை அறிகிறோம்

தொழில்நுட்பம்

மனிதன் முதலில் காடுகளில் வாழ்ந்து , வேட்டையாடினான்.பின்  உணவும்  உடையும்  உற்பத்தி செய்த காலத்தை தொழில்நுட்ப காலம் என்று கூறலாம் தொழில்நுட்பம் என்பது ஒரு செயலை எழிலாக முறையாக  மனிதனால் மேற்கொள்ளப்படும் சிறந்த முயற்சிகள் எனலாம்

மனித படைப்பாற்றல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் இணைந்து புதுமைக்கு வழிவகுக்கும் கலையாக விளங்கி வருகிறது நெசவுக்கலை .

பல தலைமுறைகளைக்  கடந்தும் என்றும் தனக்கென ஒரு தனி இடத்தை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தமிழர்கள் பேசும் கலையில் காலந்தோறும் பல நுட்பங்களை கையாண்டு வருவதே ஆகும்

மக்கள் பயன்படுத்தும்  ஆடை வேட்டி புடவை படுக்கை கம்பலம் பாய் மற்றும் சாக்கு போன்ற பொருட்களை உற்ப த்தி செய்வதற்குப்  பயன்படும் நுட்பமே நெசவுத் தொழில்நுட்பம் ஆகும் ஒவ்வொரு தொழிலிலும் அதன் மூலப் பொருட்கள் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில் புகழ் பெற்றிருக்கும் பஞ்சு உற்பத்தி பயன்பாடு வண்ணக்கலவை எடுத்தல் போன்ற செயல்பாட்டு நுட்பங்கள் நெசவு தொழிநுட்பத்தில் அடங்கும்

அன்றும் இன்றும் தமிழர்கள் நெசவுத் தொழிலை தொழில்நுட்பத்தை ஒரு கலையாகவே போற்றி வந்துள்ளனர் பருத்தியிலிருந்து நூல் நூல்களையும் கை தெரியும் செயலையும் நுட்பமாக கையாண்டு உள்ளனர் என்பதை அறிகிறோம்

நெசவுத்  தொழில் நுட்பம் –பாவு ஓடுதல்

நெசவு தொழிலில் இன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பருத்தி இழை  நெசவுத்  தொழில்நுட்பம் பல படிநிலைகளை உள்ளடக்கியது. நூல் தயாரிப்பு நூலைப்பதப்படுத்துதல், வண்ணம் ஏற்றுதல், கஞ்சி போடுதல், சாயம் அல்லது வண்ணம் ஏற்றல், பாவு ஓட்டுதல் நெசவிற்கு  ஆயத்தப்படுத்துதல் பூ வேலைப்பாடுகள் செயற்கை நுண்ணறிவு இப்படி இருக்கும் பல தொழில்நுட்பங்களுள்  பாவு ஓட்டுதல் என்னும் தொழில்நுட்பத்தை மட்டும் இங்கு காண்போம்.

பாவு ஓடுதல்

பாவு  ஓடுதல் என்னும் நுட்பம் பின்வரும் தலைப்புகளில் ஆய்வு செய்யப்படுகிறது பாவு  என்பதன் விளக்கம் ,பாவு  ஓடுவதில் கணித மேலாண்மை,பாவு , ஓடுவதற்கு முன் செய்யவேண்டிய பணிகள் .பாவு  ஓடுவதற்குரிய கருவிகள், பாவோடும் தொழில்நுட்பம், புணியின் அமைப்பும் சிறப்பும், பாவோடும்போது ஏற்படும்குறைகள், பாவு சுற்றுதல் ,பல் சக்கரத்தின் பணி, ரீம்  எனப்படும் பாவு உருளை போன்றவை ஆகும்

பாவு என்பதன் விளக்கம்

துணி நெய்வதற்குத்  தகுந்தார்போல் மேல் வச நீளமான நூல்களைப்  பக்குவப்படுத்தி உருளையில் சுற்றப்படும் ஓர் அமைப்பையே பாவு என்கிறோம். இந்தப்  பாவை உருவாக்கும் பணியே பாவு ஓடுதல் எனப்படும் இந்த பாவை  ஓட் டுபவர் பாவோடி என்று அழைக்கப்படுவார். இந்தப்  பாவை  நெசவுத் தொழிலின் உயிர் எனலாம். ஏனெனில், இந்தப் பாவு  ஒழுங்காக அமைந்து  இருந்தால்தான் துணியைச்  சிறப்பாகவும் நுடபமாகவும்  நெய்ய முடியும்.

பாவு ஓடுவதில்  கணித மேலாண்மை

பாவை ஓட்டும் பவோடி   பாவை ஓட்டுவதற்கு முன் பல நிலைகளை கடந்த பின்தான் பாவு ஓடுதல் என்னும் பணியைச் செய்ய முடியும்.அதற்குரிய ஆயத்தப் பணிகள் பின்வருமாறு:

பஞ்சில் இருந்து நூல் நூற்று இழைகள் ஆக்குதல், இழைகளைச்  சுத்தம்   ஆக்குதல், வண்ணம் ஏற்றுதல்,பசை போடுதல், சிட்டத்தைக் குழலில் கண்டாகச்    சுற்றுதல் இதுபோன்ற பல பணிகளை முடித்தபின் பாவு ஓடுவதற்கு உரிய குழல் நிறுத்தத்தில் கண்டுகள் வைக்கப்பட்டு, பாவு ஓடுவதற்குத்  தயாராகிறது.

கண்டு நிறுத்தம் குழலில் சுற்றிய கண்டுகள் பாசி துளையிட்ட அச்சு, இரும்பு அச்சு என்னும் இரண்டு அச்சுகள் தங்கா டங்கா இழைகளை பாவாக ஏற்று உருவாக்கும் உருளை பல் சக்கரம் நான்கு பற்களைக் கொண்டது.அதற்கேற்ப   இழைகளின் சுற்றுகளைக்  கணக்கிடும் கருவி. ஒரு சுற்று என்பது 2.6 மீட்டர் / மொத்தம் அறுபத்தி ஆறு பல் சுற்ற வேண்டும் .ட ங்கா பல் சக்கரத்  துணையுடன் புணி அமைப்பின் வழி பாவை ஏற்கும் உருளை போன்ற  கருவிகளைத்  தயார் நிலையில் முறையாக வைத்த பின்பே ஓடுதல் என்னும் பணி தொடங்குகிறது.

ஒரு பாவு  என்பது ஐந்தரை மீட்டர் அளவுடைய அறுபத்தி எட்டு புடவைகளைக்  கொண்டது. இதற்கு தேவைப்படும் நூலின் அளவு 90 களிகள். ஒரு களி  என்பது ஐந்து சிட்டங்கள்  உடையது. ஒரு சிட்டம் என்பது 100 மீட்டர் நூலின் அளவைக்  குறிக்கும். ஒரு புடவைக்கு இரண்டரை களி நூல் எனக் கணக்கிடப்படுகிறது.

பாவு ஓடும் தொழில்நுட்பம்

பாவு ஓட்டம் தொடங்கும்போது 224 கண்டு களை உயர வாக்கில் 28 வரிசையிலும், நீளவாக்கில் எட்டு வரிசையிலும் ஆக வைத்து ஒவ்வொரு கண்டிலிருந்தும் ஒவ்வொரு இழையாக எடுத்து பாசி துலை அச்சு இரும்பு அச்சு என அடுத்தடுத்து உள்ள இரண்டு அச்சுகளின் வழி பாய்ச்சி புணி  உருவாக்கப்படுகிறது அதன்பின்தான் உருளை இயக்கப்படுகிறது அப்போது கண்டிலிருந்து கறந்த 224 இழைகளும் டங்கா எனப்படும் உருளையில் சுற்றப்படும்.

புணியின் அமைப்பும் சிறப்பும்

புணி  என்பது இழைகள்  மேலும் கீழும் ஒன்று விட்டு ஒன்று என மாறி மாறி அமைந்த அமைப்பைக்  குறிக்கும். இந்த புணி  என ப்படும் மேல் பாவின் அமைப்புதான் ஆடை நெய்யும் போது ஊடு நூலை எடுத்துச் செல்லும் நாடா சென்று வருவதற்கு உரிய முக்கியப்  பணியைச்  செய்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பத்தைக்  கண்டறிந்த நம் தமிழரின் பட்டறிவை நினைக்கும் போது நமக்கு வியப்பை  ஏற்படுத்துகிறது.

பாவில் நிகழும் குறைகள்

சில நேரம் பாவு  ஓடும்போது இழைகள் அறுபட்டு விடும் இதற்கு இரண்டு காரணம் உண்டு ஒன்று நூலின் தரமின்மைஇரண்டாவது திட்டங்களை கண்டா கண்டாக குழலில் சுற்றும்போது ஏற்படும் குறை எனலாம் அதாவது சிட்டத்தைப்  பூடத்தின் வழி குழலில்  சுற்றும்போதும் நூல் அறுபட வாய்ப்புண்டு அப்படி அறுபட்ட நூலை நன்றாக இணைத்து முடிச்சு போடவேண்டும் இதில் குறை ஏற்பட்டாலும் ஓடும்போது இழை  அறுபட்டு விடும். இதனைக்  கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். மாறாக இப்படி ஒரு இழை அறுபட்டு குறையுடன் தறியில் பாவைப் பிணைக்கும்போது பாவு  பிணைப்பவர் கண்டுபிடித்து இணைக்க வேண்டும் அல்லது அவர்கள் கவனிக்காமல் விடுபட்டு தறியில் ஆடை நெய்யப்படும்போது புடவையில் இடைவெளி ஏற்பட்டு  தரத்தை குறைத்துவிடும்.மேலோட்டமாக இது நமக்குத்  தெரியாது புடவையை வாங்கும் முதலாளி அல்லது வியாபாரி இதைக்  கண்டுபிடித்து தரம் குறைந்தது என்று முத்திரை இட்டுவிடுவர். இதனால் புடவை சரியான விலைக்கு விற்பனை ஆகாது .ஆகவே இக்குறையை ஓடும்போது பாவு  ஓட்டுபவர் அறுபட்ட இழையை கண்டுபிடித்து ஓடாமல் நிற்கும் கண்டிலிருந்து இழையை இணைத்து முடிச்சு போடவேண்டும். உடனே இதை சரி செய்தால் தான்  இந்த இழை  ஆடை நெய்யும் வரை நேர்த்தியாக இருக்கும்.

பாவு உருளையில் சுற்றும் முறை

புணையில் குறைகளை சரி செய்து வரும் 224 இழைகளும் பல் சக்கரத்தின் துணையுடன் 16 முறை உருளையில் வரிசையாக சுற்றப்படும் அதாவது 3500 இழைகள் நான்கு நான்காகச் சுற்றியதும் பாவம் ஒருமுறை நிறுத்தப்படும். இதைக்  கணக்கிடுவதற்கு ஒரு பல்சக்கரம் இருக்கும். இந்த பல் சக்கரம் நூலின் அளவான அதாவது ஒரு பாவிற்கு உரிய களி சிட்டங்களின் அடிப்படையில் கணக்கிட்டுக் கொண்டிருக்கும்.

பாவின் அமைப்பு – கணித மேலாண்மை

ஒரு விசைத்தறிக்குரிய  பாவில்  சுற்றி உருவாக்கப்படும் புடவையின் எண்ணிக்கை அறுபத்தி எட்டு ஆகும். 224 கண்டுகளில் 192 களிக்கு உரிய நூல் சுற்றப்படும். அதாவது ஒரு பாவு என்பது ஐந்தரை மீட்டர் அளவுடைய அறுபத்தி எட்டு புடவைகளைக் கொண்டது. அதற்குத் தேவையான களிகள் 192 இவை 224 கண்டுகளில் இருந்து 3500 இழைகளாகச் சுற்றப்பட்டிருக்கும் 224 x 16 = 3584. இங்கு இப்படிக் கூடுதலான இழைகளைக் கணக்கிட 44 பற்கள் பல் சக்கரத்தில் கணக்கிடும். பாவு சுற்றும் போது 44 சுற்றுகளுடன் நான்கு தடவை சுற்றப்படுகிறது. ஒவ்வொரு முறை சுற்றும் போதும் ஒரு சத்தம் கொடுக்கும். ஒவ்வொரு முறை சுற்றும் போதும் அதற்குரிய புள்ளியை விட்டு பல்சக்கரம் நகரும். அப்படி நான்காவது புள்ளியில் வந்ததும் பாவு ஓடுபவர் சுற்றுவதை நிறுத்தி விடுவர். பின்னர் இழைகளை புணியில் இருந்து இரண்டரை inch விட்டு புணி முடி இடுவர். அதன்பின் புணிகளையும் பல் சக்கரத்தையும் முறையாக அமைத்து இழைகள் வரும் பலகையையும் நகர்த்திக் கொண்டே வருவார். இப்படி 14 முறை 224 இழைகளைக் கொண்டு 3500 இழைகளாக உருளையில் சுற்றி முடிப்பார். இப்பணியை முடிக்க குறைந்தது பத்து மணி நேரம் ஆகும்.

ரீம் ( பாவு உருளை)

224 இழைகளாக 16 முறை சுற்றிய பின் பிணை முடி போட்டுச் சொருகி வைத்த ஒவ்வொரு துணி முடியையும் பாவு ஓட்டுபவர் தரிக்குரிய பாவு உருளையில் அதற்குரிய துளைகளில் நுழைத்து முறையாக அமைப்பர். அதன்பின் மின் விசை மூலம் உருளையை இயக்கி ஆடை நெய்வதற்கு உரிய உருளையில் சுற்றி முடிப்பார். இதற்குக் குறைந்தது ஒரு மணி நேரமாகும்.

இப்படி உருளையில் பாவைச் சுற்றும்போது ஒன்றரை மீட்டருக்கு ஒரு முறை காகிதத்தை இடையில் வைத்து சுற்றுவார். அப்போதுதான் பாவு விலகாமல் சரிந்து விடாமல் நேர்த்தியாக இருக்கும். இப்படி வடிவமைத்த பின் முறைப்படி தறியில் ஆடை நெய்வதற்கு பாவு  கொண்டு செல்லப்படும். இவ்வாறு ஆடை அணிவதற்கு தகுந்தாற்  போல் பக்குவப்படுத்திச் சுற்றப்படும். இப்பணியே  பாவு ஓடுதல் என்று அழைக்கப்படும்

தொகுப்புரை

  1. தொல்பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் நெசவுத் தொழில் நுட்பத்தில் சிறப்பாகவும் உலகிற்கே முன்னோடியாகவும் இருந்துள்ளனர். பாலாடை போன்று  மென்மையாகவும் மென்மையாகவும் இழை  போன இடம் தெரியாத வண்ணம் நெசவில் நுட்பத்தைக்  கண்டுள்ளனர் என்பதை இலக்கியச் சான்றுகள் உணர்த்துகின்றன.
  2. பாவிற்கு உரிய சிட்டம் , கண்டுகள். நூலிழைகள் ஆகியவற்றைப் பாவு ஓடுதல் நுட்பத்தில் கையாளும்  நுட்பம் கணித மேலாண்மையைக்  காட்டுகிறது.
  3. இவ்வாய்வு நெசவுத்தொழில் நுட்பத்தின் சிறு முயற்சி தான். நெசவுத் தொழிலில் கொட்டிக்கிடக்கும் பல நுட்பங்களை ஆராயும்போது தமிழரின் பல வியத்தகு திறமைகள் வெளிப்படும் என்பது தின்மை.

துணை  நூல்கள்

  1. நெசவாளர்களும் துணிவணிகர்களும் – எஸ்.ஜெயசீல ஸ்டீபன், தமிழில் – ந.அதியமான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் , சென்னை.
  2. சண்முகநாதன் – தமிழனின் வரலாறு
  3. எட்டுத்தொகை நூல்கள்
  4. பத்துப்பாட்டு நூல்கள்
  5. ஐம்பெரும்காப்பியங்கள்

வெளி இணைப்புகள்:

  1. https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
  2. https://roar.media/tamil/main/history/contribution-of-tamilnadu-in-textile-industry/amp
  3. https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

 

error: Content is protected !!