பன்முக ஊடகங்களும் கல்வியும்

பன்முக ஊடகங்களும் கல்வியும்

C. கீர்த்தனா,
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை

ஸ்ரீஎஸ்.இராமசாமிநாயுடுஞாபகார்த்தக்கல்லூரி(த),சாத்தூர்.

          அறிவினையும் மனதினையும் செம்மைப்படுத்தும் குணம் கொண்டதே கல்வி. ‘கற்றது கைமண் அளவு கல்லாதது’ உலகளவு’1 என்பார்கள். இத்தகைய கல்வியின் மேன்மையினை, சிறப்பினை கற்க முடியாத பல்வேறு பேரிடர் காலச் சூழல்கள் இன்றைய காலக்கட்டங்களில் உருவாகி இருந்தாலும் ‘ஆளும் வளரனும் அறிவும் வளரனும்’ என்பதற்கேற்ப அறிவிலும் அறிவியலிலும் மானுட சமுகம் வெற்றி வாகை கண்டுள்ளது. ஆகாயத்தை தொடும் வளர்ச்சி பெற்ற ஊடகங்களின் சிறப்பும் மனித வாழ்க்கையில் குறிப்பாக மாணவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களின் பன்முகம்

              கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற அறிவு மானுட சமூகத்திற்கு வந்தபோதே அறிவியலும் வளரத் தொடங்கியது. ஊடகம் என்பது தகவல்களை சேமிக்கவும், சேமிக்கும் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் பயன்படுவதாகும். ”புதிய கற்பித்தல் ஊடகங்களின் உதவி இல்லாமல் கல்வியின் குறிக்கோள்களை முழுமையாக ஒரு கல்வி நிலையம் அடைய முடியாது” என்கிறார் நெல்சன் ஹென்றி2. இத்தகைய இன்றியமையாத ஊடகமே ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குகிறது.                 

 ஊடகங்களின் பரிணாம வளர்ச்சி

               ஆரம்ப காலத்தில் கருத்துக்களை, சிந்தனைகளை சைகைகளிலும், குறியீடுகளிலும் வெளிப்படுத்திய மனிதனுக்கு இவை போதுமானதாக இல்லை என்றுணர்ந்தான். இதன் பின்னரே மொழி தோன்றியது. மொழிகளின் வழி அறிவை வளர்த்து ஊடகங்களின் பரிணாம வளர்ச்சியை அடைந்தான். குகை ஓவியங்கள், வரைபடங்கள், கல்வெட்டு எழுத்துக்கள் வழி தகவல்களை பரிமாறிக்கொண்டு பின்னர் படிப்படியாக அச்சு ஊடகங்களான பத்திரிக்கைகள், இதழ்கள் என்றும், மின்னணு ஊடங்களான வானொலி, தொலைக்காட்சி, கணினி, திறன் பேசி, இணையம், செயலி என்றும், சிகரத்தை தொடும் வளர்ச்சியை இன்று ஊடகம் எட்டியுள்ளது.

கல்வியில் ஊடகங்களின் செயல்பாடு

       கற்றல் கற்பித்தலில் ஊடங்களின் செயல்பாடு குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன,

             வானொலியானது ஊடகங்களின் முன்னோடியாக கருதப்படுகிறது. உலகில் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே கல்வி துறையில் வானொலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் இல்லாத சூழலிலும் நேரடியாக பாடங்களை ஒலிப்பரப்பு செய்து கற்பிக்க உதவுகிறது. இன்றைய காலக்கட்டங்களில் இருக்கும் உபகரணங்கள் இல்லாத மாணவர்களுக்கு வானொலி உறுதுணையாக இருக்கின்றது. அனைவருக்கும் அளிக்கப்படும் கல்வியானது சமம் என்ற நோக்கில் இது செயல்படுகிறது. கற்பித்தலில் பாடத்திட்டங்களை மட்டும் திணிக்காமல் பொதுவான கல்வி வாழ்க்கைக்கு தேவையான பல நிகழ்ச்சிகளை வழங்குவது வானொலியின் சிறப்பாகும்.

       தொலைக்காட்சியானது வானொலியில் கல்வியை ஒலிப்பரப்புவதைக் காட்டிலும் ஒலி-ஒளி அமைப்புகளில் கற்பிப்பதால்  மாணவர்களால் அதிகளவு விரும்பப்படுகிறது. தொலைக்காட்சியில் ஆசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துரையாடுதல் மூலம் கல்வியானது எளிமையாக மாணவர்களை சென்றடைகிறது. பொதுவாக கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளில் படக்காட்சிகள், வினாடி வினாக்கள், உரைச்சித்திரங்கள் இடம்பெறுவதால் ’கல்வித்தொலைக்காட்சி’ என்றழைக்கப்படும் ,அளவிற்கு ஊடகமானது மாணவர்களுக்கிடையே வளர்ந்துள்ளது.

              கணினியானது  கல்வியைக் கற்பிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. கணினியைப் பயன்படுத்தி கற்கும் கல்வி கணினிவழிக் கல்வி. தொழிநுட்ப திறனையும், புதிய ஆக்கப்பூர்வமான தகவல்களையும் கணினி வழங்குகிறது. தயாரிக்கப்பட்ட தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க  கணினியில் பலவகையான மென்பொருள்கள் உள்ளன. இந்த கணினியுடன் இணையத்தள இணைப்பானது படிப்படியாக வளர்ந்துள்ளது. பல்லூடக வசதி கொண்டகணினி, மடிக்கணினி,கையடக்கக் கணினி முதலிய கணினிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பேரிடர் காலச் சூழல்களில் கல்விக் கூடங்களில் சென்று கற்க முடியாத நிலையில் வீட்டிலிருந்தபடியே எல்லா மொழிப்பாடங்களையும் கற்க கணினி பேருதவியாக இருக்கின்றது. கணினி அறிவு இல்லாத மாணவர்கள் கூட இணையததின் வழி தனக்கேற்பட்ட சந்தேகங்களையும், சிக்கல்களையும், தேவைகளையும் அறிந்து கணினிப் பயன்பாட்டைப் பெறலாம். மேலும் ’தமிழ் என்ற இணையதளம்’3 தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத்தருகிறது.

              திறன்பேசி மூலம் ஏழை எளிய மாணவர்களும் கல்வியினை கற்க முடிகின்றது. கணினி வாங்க வசதி இல்லா நிலையில் இயங்கலை வகுப்பை கற்க விரும்பும் மாணவர்களுக்கு இது உதவிகரமாக கையடக்க கணினியாக உள்ளது. இணைய வசதியுடன் ஒலி- ஒளிப் படங்களையும், செய்திகளையும் உடனுக்குடன் மாணவர்களுக்கு பகிர்கிறது. திறன்பேசி மூலம் ஒரு குழுமமாக உரையாடல்கள் நடத்தி ஆசிரியர்கள் கற்பிக்கலாம். மேலும் தனக்கு தேவையான நூல்களையும். காணொளிகளையும். மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் திறன்பேசி மூலம் வலைத்தளங்கள், பல்வேறு செயலிகள் மூலமும் நேரலையாக மாணவர்களை சந்தித்து சந்தேகங்களை தீர்த்து வகுப்பறையில் இருப்பது போன்ற உணர்வில், கற்பிக்கலாம். புகைப்பட உதவியுடன் புத்தகங்களை, கட்டுரைகளை கேம் ஸ்கேனர், டாக் ஸ்கேனர் மூலம் ஆவணப்படுத்தவும், வகுப்பறையில் எடுப்பது போன்றே பலகையின் குறிப்புகளைப் படமெடுத்து அதனை கையடக்க ஆவண வடிவமைப்பாக, கோப்புகளாக அனுப்பலாம்.

              செயலிகள் பல இணையத்தின் உதவியுடன் கல்வியினை நன்முறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ஊடகத்தின் வழிக் கற்றல் – கற்பித்தலில் அன்றாடம் பயன்படும் கால அட்டவணை, வீட்டுப்பாடம் முதலியவற்றை TIME TABLE, MY CLASS SCHEDULE, MY HOMEWORK  போன்ற செயலிகளும், குரல் பதிப்பு மற்றும் பாடக்குறிப்புகளை ஒரு சேர அனுப்ப AUDIO NOTE என்ற செயலியும், மாணவர்களுக்கு அடிப்படையான EVERNOTE, GOOGLE KEEP, POCKET, ANYDO. போன்ற செயலிகளும் இன்று கற்பிக்கும் முயற்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. மேலும், மாணவர்களுக்கு துணைப்பாட சேவைகளை வழங்கும் ‘ஸ்னேப்- ஆஸ்க்’4 என்ற செயலியும், பேரிடர் காலச் சூழலிலும் தொடர்ந்து கல்வி கற்க MYANHYAS  என்ற செயலி மாணவர்களின் கல்வித்திறனை வளர்த்து வருகிறது. மேலும் சூம், கூகுள் மீட், வெப் போன்ற செயலிகள் பல்வகையான கருத்தரங்குகளையும், வகுப்புகளையும் நடத்தி வருகின்றது.

ஊடகங்கள் கற்றுக்கொடுக்கும் சவால்கள்

               மனித வாழ்க்கையில் நன்மை, தீமை என்று இருப்பது போல், மாணவர்களின் வாழ்க்கையிலும் நன்மை கலந்த தீமைகள்  இருக்கின்றது. கணினி, திறன்பேசி, இணையதளம், வலைத்தளம், செயலி என்று ஊடகங்களின் வளர்ச்சி இருந்தாலும், மாணவர்கள் அதில் உள்ள நன்மைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பயனுற வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஊடகங்களை தவறான முறையில் உபயோகிக்காமல் தன்னையும், தன் சம்பந்தமான செய்திகளை பாதுகாப்பாக வைப்பதே மாணவர்களுக்கு உரிய சவாலாக உள்ளது.

              ஊடகங்கள் பன்முகத்தையும் அதன் வளர்ச்சியையும், கல்வியில் ஊடகங்களின் செயல்பாட்டினையும், அதன் ஆக்கப்பூர்வமான செயல்களையும் இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

சான்றெண் விளக்கம்

  1. ஓளவையார் தனிப்பாடல்கள்
  2. விக்கிப்பிடியா
  3. விக்கிப்பிடியா(siragu.com)
  4. தமிழ் முரசு

error: Content is protected !!