மின் கற்றல் கற்பித்தல் – வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள்

மின் கற்றல் கற்பித்தல் – வளர்ச்சி மற்றும் பயன்பாடுகள்

(e-Learning – Development and Uses)

திரு. ச. சுசீந்திரன் *

முனைவர்ப் பட்ட ஆய்வாளர்,

தமிழ்மொழி (ம) மொழியியல் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  

தரமணி, சென்னை –  600113.

ஆய்வுச்சுருக்கம்:

தற்பொழுது மின் கற்றல் கற்பித்தல் என்பது எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீப காலமாக, கற்றல் கற்பித்தலுக்கு என இணையத்தைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இணைய வழியில் மொழி, கணிதம், பொருளாதாரம், வானியல், அறிவியல், கணினி அறிவியல், கலை, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவற்றைக் கற்க ஏதுவாகவுள்ள தளங்கள் பற்றியும், இவ்வகையில் கற்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றியும் இந்தக் கட்டுரை விரிவாக முயல்கின்றது. மேலும், இணைய வழிப் பயிற்றுவிப்பிற்கான தரவுகளை எவ்வாறு பயன்படுத்திக் கற்றல் கற்பித்தல் நிகழ்கின்றது என்பதன் சுருக்கத்தையும் இந்த ஆய்வுக் கட்டுரை வாயிலாக அறியலாம்.

இணையத் தளம் மூலம் கற்கும் கல்வியால் ஏற்படும் நன்மைகளான காலவிரயம் தவிர்த்தல், கற்றல் தொடர்பான தரவுகளின் சிறந்த விரிவான விளக்கங்கள், அச்சு நூல்கள் மற்றும் பல்லூடக வசதிகளைக் கொண்ட  நூல்கள் தொடர்பான விளக்கங்கள், மின்னூலகப் பயன்பாடுகள், மற்றும் அவற்றிலுள்ள, அகாரதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள் போன்றவற்றை எவ்வாறு பயன்படுத்திக் கற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்பதைப் பற்றி ஆராய்ந்து அறிவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

முக்கிய வார்த்தைகள் (Keywords) :

மின் கற்றல் கற்பித்தல்; மின் கற்றல் கற்பித்தல் வகைகள்; மின் கற்றல் கற்பித்தலுக்கான சில இணைய தளங்கள், இணைய அடிப்படையிலான கற்றல் கற்பித்தலின் நன்மைகள்; இணைய அடிப்படையிலான கற்றல் கற்பித்தலின் குறைபாடுகள்.

அறிமுகம் (Introduction) :

மின் கற்றல் கற்பித்தல் (e-learning) :

ஒரே விதமான கல்வியைப் பல்வேறுச் சூழல் சார்ந்த மாணவர்களும் தங்கள் வசதிக்குகேற்ப மின் கற்றல் கற்பித்தல் வாயிலாகக் கற்க முடியும். விரைவான கற்றல், குறைவான மனிதவளம், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி போன்ற காரணங்களால் இக்கல்வி முறையைத் தற்பொழுது பலரும் ஏற்று வருகின்றனர். மின் கற்றல் கற்பித்தல் மூலம் பாட பொருண்மைகள் யாவும் புத்தங்களுக்கு மாறாக வன்தகடு (DVD) அல்லது பென்-டிரைவ்களில் (Pen Drive) குறிப்பு ஏற்றப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

          மின் கற்றல் கற்பித்தல் என்பது மின்னணு வளங்களின் மூலம் முறைப்படுத்தப்பட்ட கற்பித்தலை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்றல் கற்பித்தல் முறையாகும். இணைய வசதியுடன் கூடிய கணினி அல்லது கையடக்க கருவிகள் வாயிலாக வகுப்பறைகளுக்கு வெளியேயும் கற்றல் கற்பித்தல் பணி இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. மின் கற்றல் கற்பித்தலுக்காகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பள்ளிகள் கற்றலுக்கான பாரம்பரிய அணுகுமுறையிலிருந்து ஒரு படி மேலே உள்ளதாக கருதப்பட்டு வருகின்றன.

மேலும், இணையம் வழியாக எங்கும், எந்த நேரத்திலும் மாணவர்கள் தங்கள் அறிவைப் பெறவோ அல்லது பகிரவோ முடிகின்றது. குறிப்பாக உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் தங்களுக்கான அறிவுத் தேடலை பன் மடங்கு அதிகரிக்கவும் இவ்வழிக் கற்றல் உதவுகின்றது.

  • மின் கற்றல் கற்பித்தல் வகைகள் (Types of e-learning ) ;
  • மின் கற்றல் கற்பித்தலை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை 
  • வகுப்பறை முறை மின் கற்றல் கற்பித்தல் (synchronous e-learning)
  • வகுப்பறையற்ற முறை (மறைமுக) மின் கற்றல் கற்பித்தல் (asynchronous e-learning)
  • வகுப்பறை முறை மின் கற்றல் கற்பித்தல் (synchronous e-learning) :

வகுப்பறை முறை மின் கற்றல் கற்பித்தல் என்பது கற்போரும் கற்பிப்போரும் ஒரே சமயத்தில் இணையம் வழியாகக் கலந்துரையாடலுடன் மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தலாகும். இம்முறையில், மாணவர்கள் கற்றல் கற்பித்தலின் போது தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளலாம், மேலும், அவர்களுக்கு எழும் ஐயங்களுக்கு உடனுக்குடன் விரிவான தீர்வுகளையும் பெற முடியும். இக்கற்றல் கற்பித்தல் முறை தொழில்நுட்ப மற்றும் இணைய வளர்ச்சியால் பல முன்னேற்றம் அடைந்து வருகின்றது.

வகுப்பறை முறை மின் கற்றல் கற்பித்தலை இணைய வகுப்பறை (Virtual Classroom), ஒலி மற்றும் ஒளி மாநாடு (Audio and Video Conferencing), உரையாடுதல் (Chat), இணையரங்கம் (Webinars), உடனடி செய்தி பரிமாற்றம் (Messaging instantly) போன்றவற்றைகள் மூலம் மேற்கொள்ள இயலும்.

வகுப்பறையற்ற முறை மின் கற்றல் கற்பித்தல் (asynchronous e-learning) ;

வகுப்பறையற்ற முறை மின் கற்றல் கற்பித்தல் என்பது கற்போரும் கற்பிப்போரும் இணையம் வழியாக வெவ்வேறு காலங்களில் மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தலாகும். இதில் மாணவர்கள் தானகவும் மற்றும் நேரடியாகவும் கற்க இயலும். இம்முறையில் மாணவர்கள் அவர்களின் வசதிகேற்ப எந்த நேரத்திலும் தங்களுக்கான பாட பொருண்மைகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டு ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடிக் கொள்வர். உண்மையில், மாணவர்கள் இணைய வழி பாடத் திட்டங்களை இம்முறையான  கற்றல் கற்பித்தல் மூலம் கற்கும் போது தங்களது அன்றாட வேலைகளிலும் எவ்வித இடர்பாடுகள் ஏற்படாதால் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.

வகுப்பறையற்ற முறை மின் கற்றல் கற்பித்தலைத் தானாகக் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இணைய வழி பாட பொருண்மைகள் (Self-paced online courses), குழு கலந்துரையாடல் (Group Discussion), மின் புத்தகங்கள் (e-books), மின் அஞ்சல்கள் (e-mails), போன்றவற்றைகள் மூலம் மேற்கொள்ள இயலும்.

மின் கற்றல் கற்பித்தலுக்கான சில இணைய தளங்கள் (Few  e-learning websites) :

வளர்ந்து வரும் காலச் சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியால் மின் கற்றல் கற்பித்தல் என்பது மிகவும் எளிமையான ஒன்றாகிவிட்டது. அதனால் இவ்வகை பாட பொருண்மைகளை வழங்குவதற்கு என பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சில இணைய தளங்களைப் பற்றியும் இவ்வாய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.

கான் கல்விக்கழகம் (Khan academy) :

          கான் கல்விக்கழகம் என்பது 2008-ஆம் ஆண்டு திரு. சல்மான் கான் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு இலாப நோக்கமற்ற கல்வி முறையை உலகிற்கு அறிமுகம் செய்து, அனைவருக்கும் பொதுவான மற்றும் தரமான கல்வி முறையை வழங்கி வருகின்றது. இந்நிறுவனம், ஆரம்ப பாடம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உள்ள கணிதம், அறிவியல், கலைப்புலம் மற்றும் வரலாறு ஆகிய பாட பொருண்மைகளுக்குப், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணொலிகளை உருவாக்கி வருகிறது. எல்லா காணொலிகளும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அக்காணொலிகள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன.  தமிழ் இணையக் கல்விக்கழகம் கான் கல்விக்கழகக் காணொலிகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறது.

யுடிமி (Udemy) :

யுடிமி (you-de-mee) you + academy என்பதின் ஒட்டுச் சொல்லாகும். இந்நிறுவனம், வணிகம், தொழில் முனைவோர், கல்வி, கலை, சுகாதாரம், உடற்பயிற்சி, மொழி, இசை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாட பொருண்மைகள் இந்நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கருவிகள் மூலம் பல பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பாட பொருண்மைகளைக் காணொலிகளாகப் பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. பயிற்றுவிப்பாளர்களைப் பொருத்து இது இலவசமாகவும் மற்றும் கட்டணச் சேவையாகவும் வழங்கி வருகிறது

இப்பாடப் பொருண்மைகள் மூலம் பல ஊழியர்கள் தங்களின் பணித் தேவைக்கான திறமையை மேம்படுத்தி கொள்கின்றனர்.

கோர்ஸ்ரா (Coursera)

கோர்ஸ்ரா 2012-இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக கணினிப் பேராசிரியர்கள் ஆண்ட்ரூ என்ஜி (Andrew Ng) மற்றும் டாப்னே கொல்லர் (Daphne Koller) ஆகியோர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் பல பாட பொருண்மைகளில் சான்றிதழ், பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.  இப்பாட பொருண்மைகள் வினாடி வினாக்கள் (Quizzes), பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் (Exercises and exams ) கொண்டவை ஆகும்.

டபியு3 பள்ளிகள் (W3 Schools) ;

டபியு3 பள்ளிகள் முதலில் நோர்வே மென்பொருள் மேம்பாடு மற்றும் ஆலோசனை நிறுவனமான ரெஃப்ஸ்னெஸ் டேட்டாவால் (Refsnes Data) 1998-இல் உருவாக்கப்பட்டது. இது வலை தொழில்நுட்பங்களைக் கற்க வழி வகை செய்யும் ஒரு கல்வி வலைத்தளமாகும். இதில் இணையப் பக்கங்களை உருவாக்குவதற்கும் சரிபார்ப்பதற்கும் பயன்படுத்தும் நிரல் மொழிகளை வழங்குகிறது. இதிலுள்ள பயிற்சிகள் அடிப்படையிலிருந்து தொடங்கி தொழில்முறை குறிப்புகள் வரை எல்லோருக்கும் பயன்படும் வகையில் வழங்கப்படுகிறது.

இந்தத் தளம் அதன் பெயரை உலகளாவிய வலையில் (world wide web W3) இருந்து பெற்றது. ஆனால் இவ்வலைதளம் உலகளாவிய வலை சேர்த்தியம் (world wide web consortium W3C) உடன் இணைக்கப்படவில்லை.

ஓபன் கல்சர் (Open Culture) :

ஓபன் கல்சர் 2006-இல் தொடங்கப்பட்டது. இது கலாச்சார மற்றும் கல்வி பொருண்மைகளில் உலகளவில் வாழ்நாள் முழுவதும் கற்க விரும்புவோரை ஒருங்கிணைக்கிறது. இதில் அதிக அளவில் உள்ள ஒலி ஒளிகளை வலை 2.0 மூலம் இலவசமாக வழங்கி வருகிறது.

இதில் சிறந்த பல்கலைக்கழகங்களின் இணைய வழி பாடத் திட்டங்கள், சிறந்த திரைப்படங்கள், ஒலி நூல்கள் (பதிவிறக்கங்களுடன்), மின் நூல்கள், குழந்தைகளுக்கான கல்வி வளங்கள், சிறந்த பல்கலைக்கழகங்களிலிருந்து Massive Open Online Course (MOOC) (சான்றிதழ்களுடன்) போன்றவற்றை இலவசமாக வழங்குகிறது.

 ஓபன் யேல் பாடத் திட்டங்கள் (Open Yale Courses) :

ஓபன் யேல் பாடத் திட்டங்கள் டிசம்பர் 2007-இல் யேல் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் கற்பிக்கப்படும் பரந்த அளவிலான அறிமுக படிப்புகளின் முழு ஒளிகள் மற்றும் பாடப் பொருட்களைப் இணையத்தில் படைப்பாக்கப் பொதுமக்கள் (Creative Commons) அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் திட்டமாகும். இதிலுள்ள பாடங்களை இலவசமாக காணலாம், பதிவு செய்ய தேவையில்லை.

ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கான பாடங்களின் முழு வகுப்பு விரிவுரைகள் ஒலி ஒளிக் காட்சியாகவும், ஒலி நூலாகவும் கிடைக்கின்றன. அதனை பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

அகாடமிக் எர்த் (Academic Earth) :

அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதன் நோக்கத்துடன் 2008-ஆம் ஆண்டு ரிச்சர்ட் லுட்லோ (Richard Ludlow), கிறிஸ் ப்ரூனர் (Chris Bruner) மற்றும் லியாம் பிசானோ (Liam Pisano) ஆகியோரால் அகாடமிக் எர்த் தொடங்கப்பட்டது. உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் இலவச இணைய வழி பாடத்திட்டங்களின் இணையற்ற தொகுப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

வானியல், உயிரியல், வேதியியல், கணினி அறிவியல், பொருளாதாரம், பொறியியல், ஆங்கிலம், தொழில் முனைவோர், வரலாறு, கலை மற்றும் வடிவமைப்பு, வரையிலான 50 முதன்மை பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய காணொலிகளின் பாடங்கள் இங்கு இடம்பெற்றுள்ளது.

வகுப்பு (vagupu) :

சிபிஎஸ்இ (Central Board of Secondary Education), ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education), ஐஜிசிஎஸ்இ (International General Certificate of Secondary Education), போன்ற பள்ளி தேர்வுகளுக்கும் மற்றும் ஜே.இ.இ (Joint Entrance Examination), நீட் (The National Eligibility cum Entrance Test), எஸ்.ஏ.டி (Scholastic Assessment Test), ஏசிடி (American College Testing) போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான சிறந்த பாடத்திட்டங்கள், மாதிரி தாள்கள், முந்தைய ஆண்டு வினாத் தாள்கள் போன்றவற்றை மாணவர்களுக்கு வகுப்பு இணைய வழியில் வழங்குகிறது.

யூடியுப் மின் கற்றல் கற்பித்தல் (YouTube | E LEARNING) :

யூடியுப் கற்றல் கற்பித்தல் என்பது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் யூடியுப் இணைய அலைவரிசையாகும். இதில் கல்வி மற்றும் டிஐஒய் (Do It Yourself), என்ற முறையில் கல்வி காணொலிகளை வழங்குகிறது.

புதிய பணித் திறன்களைக் மேம்படுத்த விரும்புவோருக்கும், பொழுதுபோக்கு அம்சத்திற்குகாகவும் இதில் பல காணொலிகள் இடம் பெற்றுள்ளது.

ஆக்ஸ்போர்டு இணைய வழியில் ஆங்கிலம் (Oxford Online English) :

ஆக்ஸ்போர்டு இணைய வழியில் ஆங்கில இணைய தளம் மூலம் கற்ற ஒருவர் ஆங்கில எழுத்துகளை தெளிவாகவும் துல்லியமாகவும் எழுத கற்றுக்கொள்ள முடியும், சரளமாக ஆங்கிலம் பேசும் திறனையும் அதில் நம்பிக்கையையும் மேம்படுத்த இது பெரிதும் உதவுகிறது, வணிக ரீதியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளவும், மேலும் ஐஇஎல்டிஎஸ் (International English Language Testing System) தேர்வுக்காகத் தயார்படுத்திக் கொள்ளவும்  உதவுகிறது.

மின் கற்றல் கற்பித்தலின் நன்மைகள் (Advantages of e-learning) :

மின் கற்றல் கற்பித்தலின் நன்மைகள் பல உள்ளன. மின் கற்றல் கற்பித்தலின் மூலம் உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் தாங்கள் கற்க விரும்பும் பாட பொருண்மைகளை எளிதாக தாங்கள் இருக்கும் இடத்திலேயிருந்து கற்க இயலும். இதன் மூலம் ஓர் ஆசிரியர் உலகில் எங்கிருந்தாலும் தம் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும். மேலும் இணைய ஆதாரங்களைக் கொண்டு மாணவர்கள் தமக்குத் தேவையான பாட பொருட்களைப் பெற இயலும். இதனால் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களை முழுமையாகச் சாராமல் தாமாகவே கற்க முடியும். மேலும், பணிக்குச் செல்லும் மாணவர்கள் பகுதி நேரமாகவும் அல்லது முழுநேரமாகவும் கற்றலை மேற்கொள்ள முடியும். இதனால் மாணவர்களின் நேரம் மற்றும் பயணச் செலவு குறைக்கிறது.  அவர்களின் தனித்துவமான கற்றலும் இங்கு ஊக்குவிக்கப்படுகிறது.  

அதுமட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்திக் கணினி மூலம் பல்வேறு வழிகளில் பாடப் பொருட்கள் உருவாக்கிக் கற்பிக்க முடியும். பல்லூடக வசதிகளைப் பயன்படுத்தி, பாட நூல்களில் ஒலி, படங்கள் மற்றும் காணொளிகளைச் சேர்த்து அளிப்பதால் மாணவர்கள் பாடங்களை ஆர்வமாக கற்கின்றனர். இது மாணவர்களின் கால விரயத்தைத் தவிர்க்கிறது. மேலும் மாணவர்கள் பல மின்னணுத் தரவுகள் மூலம் இலக்கணச் சரிபார்ப்பு, அகராதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வகுப்பில் மட்டும் கற்க முடியும் என்ற வரையரையில்லாமல் எந்நேரத்திலும் கற்கலாம். இதில் மாணவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகளான படித்தல், தேர்வு, மதிப்பெண்கள், அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் முடியும். கூச்சசுபாவம் உள்ள மாணவர்களும் தங்களின் ஐயப்பாடுகளை ஒரு கலந்துரையாடல் மன்றத்தின் (forum for discussion) மூலம் நிவர்த்தி செய்து கொள்ளவும், காணொளி வாயிலாக ஒருங்கிணைக்கின்ற வாய்ப்பையும் இணையம் வழங்குகிறது.

தற்போது, இணைய வளப் பயன்பாடுகளான Skype, WebEx, Yahoo messenger, Hangout போன்ற மென்பொருட்களைக் கொண்டு கற்றல் கற்பித்தலின் செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

மின் கற்றல் கற்பித்தலின் பயன்பாடுகள் (Uses of e-learning ) :

மின் கற்பித்தலில் பல இணைய வளங்கள் உள்ளன. இதில் உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ’தமிழ் இணையக் கல்விக்கழகம்’ ஆகும். இதன் மூலம் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி இணையம் வழியாக அளித்து வருகிறது. இணைய அடிப்படையிலான கற்றலின் அடிப்படையில் இந்நிறுவனத்தில் சான்றிதழ், மேற்சான்றிதழ் மற்றும் இளநிலைத் தமிழியல் பட்டக் கல்விக்கான பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் மின்னூலத்தில் நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள், சுவடிக்காட்சியகங்கள், பண்பாட்டுக் காட்சியகங்கள்  கணினித் தமிழ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு விவரங்கள் மற்றும் மென்பொருள் கருவிகளின் விவரங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

இதில் தமிழ் மொழியை அனைத்து தரப்பினரும் கற்க ஏதுவாக இனிமையாகவும், எளிமையாகவும், பல்லூடக வசதிகளைக் கொண்டும் பாடங்கள் வழங்கப்பட்டுள்ளது, பாடங்களைப் படிக்கும் மாணவர்களின் வசதிக்கேற்ப மின்னூலகத்தின் மூலம் பல அரிய நூல்களைப் பார்வை நூல்களாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் தனக்கு ஏற்படும் ஐயங்களுக்கு உடனுக்குடன் விளக்கங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

இம்முறை, கற்றலின் பயனாக மாணவர்கள் ஒரு சொல்லுக்கான விளக்கத்தினைப் பல அகராதிகளிலிருந்து தேடி பொருள் அறிந்து கொள்ளமுடிகிறது. மேலும், ஒரு சொல்லுக்கான சரியான உச்சரிப்பையும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உச்சரிப்புடன் கூடிய மின் அகராதியைப் பயன்படுத்துவதன் மூலம் இணைய அடிப்படையிலான இரண்டாம் மொழி கற்கும் மாணவர்கள் மொழியை விரும்பி கற்கும் சூழலை ஏற்படுத்தித் தருகிறது.

மேலும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய தளத்தில் பண்பாடு, கலை மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்வுகளை  ஒலி-ஒளி காட்சிகளாகவும் வண்ணப் படங்களாகவும் வழங்குகிறது. இதனால் மாணவர்கள் தம்  மொழிக்கான பண்பாடு, கலை மற்றும் இலக்கியத்தினை இரசித்தும், விரும்பியும் கற்க முயற்சி செய்வார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.

மேலும், தற்பொழுது பல நாளிதழ்கள், வார இதழ்கள்,  மாத இதழ்கள்,  போன்ற பெரும்பான்மையான இதழ்கள் தங்களின் இதழ்களை இணையம் வழியாக வழங்கி வருகிறது.

உதராணமாக

http://www.dailythanthi.com/
http://tamil.thehindu.com/
http://www.dinamani.com/
http://www.dinamalar.com/
https://tamil.oneindia.com/

இது போன்ற இணைய வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்கள் தங்களின் மொழி அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள பெரும் உதவி புரிகிறது.

மின் கற்றல் கற்பித்தலின் குறைபாடுகள் (Disadvantages of e-learning ) :

மின் கற்றல் கற்பித்தலின் சில குறைபாடுகள் உள்ளன. இம்முறையில் தத்துவ கோட்பாடு அடிப்படையில் மட்டுமே அறிவைப் பெற முடிகிறது, மேலும் கற்றுக்கொண்டதைப் செயல்படுத்தும்போது ஏற்படும் சற்று வித்தியாசமான விளைவுகளின் விளங்கங்களைப் பெற இயலாமல் இருக்கலாம். நேருக்கு நேர் கற்றல் அனுபவம் சிலருக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அது இங்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை.

மேலும், மின் கற்றல் கற்பித்தலின் போது சில நேரங்களில் பாதுகாப்பற்ற இணைய தளங்களைக் காண நேரிடலாம். அது மாணவர்களின் நலனைப் பாதிக்கும். இணைய அடிப்படையிலான கற்றல் கற்பித்தலுக்குக் கணினி தொடர்பான தொழில்நுட்ப அறிவோ அல்லது தகவல் தொழில்நுட்ப வல்லுநரின் உதவியோ தேவைப்படுகிறது. மாணவர்களின் உளவியல் அல்லது கல்வித் தொடர்பான பிரச்சனைகளைக் இக்கற்றலால் தீர்க்க முடியாது. இம்முறையிலான கற்றலில் மாணவர்களுக்குச் சோர்வும் ஏற்படுகிறது.  மேலும், மாணவர்களின் சுய முயற்சிகளைக் கணிப்பொறியால் பாராட்ட இயலாது. இக்கல்வியானது வகுப்பறையில் ஆசிரியர்-மாணவர் தொடர்பையும் பாதிக்கிறது.

முடிவுரை

தற்போதைய பெருந் தொற்று நோய் காலங்களில் உலகேங்கும் அனைத்து வகையான கற்றல் கற்பித்தல் பணிகள் மின் கற்றல் கற்பித்தல் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனவே இவ்வகையான கற்றல் கற்பித்தல் மாணவர்களுக்கு வழங்கும் பலவிதமான நன்மைகளின் காரணமாக இது ஒரு சிறப்பான தளமாக மாறி வருகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இன்றைய காலங்களில் இணைய தளமும் கல்வியும் ஒன்றோடொன்று சேர்ந்து மாணவர்களின் அறிவை பெரும் அளவில் உயர்த்தி வருகிறது என்பது ஒரு மாற்ற முடியாத சான்றாகும்.

பார்வை நூல்கள் (References) :

Muhammad Ammar Saleem & Iqra Rasheed, (2014), “Use of E-learning and its Effect on students”, Vol.26, New Media and Mass Communication Journal www.iiste.org,

Chiu. C.M & T.G. Wang. E. (2008), “Understanding web-based learning continuance intention: The role of subjective task value”. 48, 194-201.

M. Samir Abou El-Seoud & et.al (2014), E-Learning and Students’ Motivation: A Research Study on the Effect of E-Learning on Higher Education International Journal of Emerging Technologies in Learning (iJET) Vol. 9(4):20-26

Zuleika Firdosh Homavazir (2015), “Impact of E-learning on student learning and employability – A study in India”

Partha Pratim Ray (2010), Web Based E-Learning In India: The Cumulative Views Of Different Aspects, Indian Journal of Computer Science and Engineering Vol. 1 No. 4 340-352

https://en.wikipedia.org/ , Retrieved on 17.08.2020

About | Khan Academy, Khan Academy Retrieved on 17.08.2020

https://www.udemy.com/ , Retrieved on 17.08.2020

https://www.coursera.org/, Retrieved on 17.08.2020

https://www.w3schools.com/, Retrieved on 17.08.2020

http://www.openculture.com/, Retrieved on 17.08.2020

https://oyc.yale.edu/, Retrieved on 17.08.2020

https://www.academicearth.org/, Retrieved on 17.08.2020

https://vagupu.com/, Retrieved on 17.08.2020

https://blog.vagupu.com/, Retrieved on 17.08.2020

https://www.youtube.com/, Retrieved on 17.08.2020

https://www.oxfordonlineenglish.com/, Retrieved on 17.08.2020

http://www.tamilvu.org/, Retrieved on 17.08.2020

error: Content is protected !!