மேல்நிலைப் பள்ளி வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம் மூலம் கற்றல் கற்பித்தலால் ஏற்படும் பயனுறுதி

மேல்நிலைப் பள்ளி வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம்
மூலம் கற்றல் கற்பித்தலால் ஏற்படும் பயனுறுதி

முனைவர் இரா.முத்தையன்

உதவிப் பேராசிரியர் 

drmuthaiyantamiluniv@gmail.com

ர. கபீர்

முனைவர்பட்ட ஆய்வு மாணவர்

கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை 

தஞ்சாவூர்-10.

kabeer3515@gmail.com

 

 

ஆய்வுச் சுருக்கம்

மேல்நிலை இரண்டாமாண்டு வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம் மூலம் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் பயனுறுதியை கண்டறிதலை நோக்கமாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒற்றைக்குழு பரிசோதனைமுறை மூலம்  மேற்கொள்ளப் பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள சோழன் பதிமன் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் ஐம்பது மாணவர்களை மாதிரிக்கூறாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்தேர்வு-பயிற்சி-பின்தேர்வு என்ற முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சராசரி, திட்டவிலக்கம், ‘t’-சோதனை மற்றும் F-சோதனைகளைக் கொண்டு கருதுகோள்கள் சோதிக்கப்பட்டது. இவ்வாய்வின் முடிவுகளாக பாலினம், குடும்பவகை மற்றும் பெற்றோர்களின் கல்வித்தகுதி போன்ற மாறிகளின் சராசரி வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. தனியாக மாணவர்களைவிட குழுவாக படிக்கும் மாவர்களிடம் கற்றல் அடைவு அதிகமாக காணப்படுகிறது எனத் தெரியவருகிறது.

முக்கிய வார்த்தைகள்:

கணினிவழிக் கட்டகம், ஒற்றைகுழு பரிசோதனை, பயனுறுதி.

 

முன்னுரை

          இவ்வாய்வு கட்டுரையானது மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் வேதியியல் பாடத்தில் ஒரு பகுதியான அணு அமைப்பு கணினி வழி கட்டகம் மூலமாக கற்பித்தலால் ஏற்படும் பயனுறுதியை கண்டறிய முற்படுகிறது. மேலும் இவ்வாறு கண்டறிந்து அறிவிப்பதால் மாணவர்களுக்கு தானேகற்றல் கருவியாக கணினி வழிகட்டகம் கிடைக்கிறது. மேலும் அனைத்து மாணவர்களிடயே வேதியியல் பாடத்தில் சிறந்த கற்றல் அடைவை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

 

 

கணினி வழி கட்டகம்

கணினி வழி கட்டகம் என்பது மாணவர்கள் மையக்கற்பித்தல் முறையில் சமீபகால முயற்சிகளில் ஒன்றாகும். இதில் பாடப்பகுதிகள் சிறிய பகுதிகளாக்கப்பட்டு கற்க எளிமை படுத்தப்பட்ட ஒரு புதிய முறையாகும் கணினி வழி கட்டகம் என்பது கடினமான பாடக்கருத்தை தலைப்பு, அலகு, உபஅலகு, விளக்கம், அட்டவணை, எடுத்துக்காட்டுகள், ஒருங்கிணைத்தல், தொடர்புடைய விளக்கம், மேலும் கற்க வாய்ப்புகள், விரைவு குறியீடுகள் மற்றும் தொடர்புடைய பாடங்கள் போன்றவைகளை உள்ளடக்கிய கட்டமைக்கப்பட்ட பாடப்குதியாகும். இதில் பாடக்கருத்துகளுக்கு ஏற்புடைய பகுதிகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இவை தனி தனி பகுதிகளாக கோடிட்டு பிரித்துக் காட்டப்படுகிறது.

ஆய்வுத் தலைப்பு

மேல்நிலைப் பள்ளியில் அறிவியல், கணிதம், கணினி மற்றும் சில பாடப்பிரிவுகளில் கற்பிக்கப்படும் வேதியியல் பாடத்தின் கற்றல் அடைவை அதிகரிக்கும் நோக்கத்துடன் கீழ்கண்ட தலைப்பு ஆய்வு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. “மேல்நிலைப் பள்ளி வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம் மூலம் கற்றல் கற்பித்தலால் ஏற்படும் பயனுறுதி”.

ஆய்வின் நோக்கம்

 1. மேல்நிலைப்பள்ளி இரண்டாமாண்டு வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம் மூலம் கற்பித்தலால் ஏற்படும் கற்றல் அடைவின் பயனுறுதியை அறிதல்.
 2. மேல்நிலைப்பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் பின்தேர்வு அடைவின் சராசரி வேறுபாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களின் பாலினம், குடும்பவகை, படிக்கும் பழக்கம் மற்றும் பெற்றோர்களின் கல்வித்தகுதி போன்ற மாறிகளின் அடிப்படையில் கண்டறிதல்.

 

 

ஆய்வின் கருதுகோள்கள்

 1. மேல்நிலைப்பள்ளி இரண்டாமாண்டு வேதியியல் பாடத்தை கணினி வழிகட்டம் மூலம் கற்றலால் கற்றல் அடைவின் சராசரி வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.
 2. மேல்நிலைப் பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பாலினம், குடும்பவகை மற்றும் படிக்கும் பழக்க வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.
 3. மேல்நிலைப் பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பெற்றோர்களின் கல்வித்தகுதி வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்தாக இல்லை.

ஆய்வின் மாதிரிக்கூறு

காஞ்சிபுரத்தில் உள்ள சோழன் பதிமன் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பயிலும் மாணவர்களில் ஐம்பது பேர் மட்டும் சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஆய்வு முறை

இவ்வாய்வு ஒற்றை குழு பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டது. அதாவது முன்சோதனை – பயிற்சி – பின்சோதனை என்ற முறையில் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு கருவி

“வேதியியல் கற்றல் அடைவுச் சோதனைத்தாள்” இவ்வாய்வுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த அடைவுச் சோதனை தாளில்  அணு அமைப்பு என்ற பாடப்பகுதியில் ஐம்பது பலவுள் தேர்வு உருபடிகள் உருவாக்கப்பட்டு தரப்படுத்தி பயன்படுத்தப்பட்டது.

ஆய்வுக்கு பயன்படுத்திய புள்ளியியல் நுட்பங்கள்

சராசரி, திட்டவிலக்கம், இரு மாறிகளுக்கு ‘t’-சோதனையும் இரண்டிற்கு மேற்பட்டவைக்கு ‘F’- சோதனையும் பயன்படுத்தப்பட்டது.

 

புள்ளியியல் பகுப்பாய்வும் கருதுகோள்களை சோதித்தலும்

கருதுகோள் எண்-1

மேல்நிலைப் பள்ளி இரண்டாமாண்டு வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம் மூலம் கற்றலால் கற்றல் அடைவின் சராசரி வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்த தாக இல்லை.

இக்கருதுகோளானது ‘t’-சோதனை மூலம் சோதித்தறிப்பட்டது.

மாறிகள் எண்ணிக்கை சராசரி திட்டவிலக்கம் திட்டபிழை ‘t’-மதிப்பு
முன்தேர்வு 50 45.6000 10.102 1.4196 26.1490
பின்தேர்வு 50 82.7200 6.8185

மேற்கண்ட அட்டவணையில் இருந்து கண்டறிந்த ‘t’-மதிப்பானது (26.1490) அட்டவணை மதிப்பைவிட 0.01 நிலையில் அதிகமாக உள்ளது. எனவே, இரு சராசரிகளின் வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முன்தேர்வு கற்றல் அடைவைவிட பின்தேர்வு கற்றல் அடைவு அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் வேதியியல் பாடத்தை கணினி வழி கட்டகம் மூலம் கற்றல் ஆகும்.

கருதுகோள் எண்-2

மேல்நிலைப் பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பாலினம், குடும்பவகை மற்றும் படிக்கும் பழக்க வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை.

 

 

 

 

 

 

 

இக்கருதுகோளனது ‘t’-சோதனை மூலம் சோதிக்கப்பட்டது.

மாறிகள் N சராசரி திட்டவிலக்கம் திட்டப்பிழை ‘t’-மதிப்பு
பாலினம் ஆண் 25 81.92 3.90 1.1133 0.1440
பெண் 25 82.08
குடும்ப வகை தனிக் குடும்பம் 38 82.02 3.90 1.9520 0.0205
கூட்டுக்குடும்பம் 12 81.98
படிக்கும்

பழக்கம்

தனியாக 28 79.26 3.90 1.0485 2.6133
குழுவாக 22 84.74

மேற்கண்ட அட்டவணையின் முதல் இரண்டு பகுதியில் கண்டறிந்த ‘t’-ன் மதிப்புகள் முறையே 0.1440 மற்றும் 0.0205 அவைகள் அட்டவணை மதிப்பைவிட 0.01 நிலையில் குறைவாக உள்ளது. எனவே இரு சராசரிகளின் வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை இன்மை கருதுகோள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அட்டவணையின் மூன்றாம் பகுதியில் கண்டறிந்த ‘t’-ன் மதிப்பானது (2.6133) அட்டவணை மதிப்பைவிட 0.01 நிலையில் அதிகமாக உள்ளது. இன்மை கருதுகோள் மறுக்கப்படுகிறது. இதிலிருந்து தனியாக படிக்கும் மாணவர்களைவிட குழுவாக படிக்கும் மாணவர்களிடம் கற்றல் அடைவு அதிகமாக காணப்படுகிறது எனத் தெரியவருகிறது.

கருதுகோள் எண்-3

மேல்நிலைப்பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் பின்தேர்வு அடைவு மதிப்பின் சராசரி வேறுபாடு அவர்களின் பெற்றோர்களின் கல்வித்தகுதி வேறுபாட்டால் முக்கியத்துவம் வாய்ந்ததாக  இல்லை.

இக்கருதுகோளனது F-சோதனை மூலம் சோதிக்கப்பட்டது.

மாறுபாட்டின் ஆதாரம் வர்க்கங்களின்

கூடுதல்

பாகை சராசரியின்

வர்க்கம்

F-மதிப்பு
மாதிரிக்கு

இடையில்

17.8400 3 5.9470 0.3770
மாதிரிக்குள் 726.1600 46 15.7860

மேற்கண்ட அட்டவணையில் இருந்து கண்டறிந்த F-மதிப்பானது 0.3770 அட்டவணை மதிப்பைவிட குறைவாக உள்ளது. எனவே, சராசரிகளுக்கு இடையேயான வேறுபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. எனவே, இன்மைக்கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதிலிருந்து மாணவர்களின் பெற்றோர்களின் கல்வித்தகுதி கற்றல் அடைவில் எவ்விதமான மாறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை எனத் தெரியவருகிறது.

ஆய்வின் முடிவுகள்:

 1. மேல்நிலைப் பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் வேதியியல் கற்றல் அடைவு கணினி வழி கட்டகம்வழி கற்றலால் அதிகரிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
 2. மேல்நிலைப் பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் வேதியியல் கற்றல் அடைவில் அவர்களின் பாலினம், குடும்பவகை மற்றும் பெற்றோர்களின் கல்வித்தகுதி போன்ற மாறிகளினால் எவ்விதமான மாறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை.
 3. மேல்நிலைப் பள்ளி இரண்டாமாண்டு மாணவர்களின் வேதியியல் கற்றல் அடைவு தனியாக படிக்கும் மாணவர்களைவிட குழுவாக படிக்கும் மாணவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது எனத் தெரியவருகிறது.

ஆய்வின் பரிந்துரைகள்

 1. அட்டவணை எண்-1 ன்படி கண்டறிந்த ‘t’-மதிப்பானது (00000) அட்டவணை மதிப்பைவிட அதிகமாக உள்ளது. எனவே முன்தேர்வைவிட பின்தேர்வின் சராசரி அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் கணினி வழிக் கட்டகம் மூலம் கற்பதனால் ஏற்பட்டதாகும். எனவே, ஆசிரியர்களுக்கு கணினி வழிக் கட்டகம் தயார் செய்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு பயிற்சியை அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களின் வாயிலாக அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
 2. அட்டவணை எண்-2 இன் மூன்றாம் பகுதியில் இருந்து கண்டறிந்த ‘t’-ன் மதிப்பு (2.6133) அட்டவணை மதிப்பவிட அதிகமாக உள்ளது. அதாவது தனியாக படிக்கும் மாணவர்களைவிட குழுவாக படிக்கும் மாணவர்களின் கற்றல்அடைவு அதிகமாக காணப்படுகிறது. எனவே ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை குழுவாக படிக்க தூண்டவேண்டும். மேலும் இதற்கான பயிற்சி அளிக்கப் பரிந்துறைக்கப்படுகிறது.

முடிவுரை

மேல்நிலைப்பள்ளி வேதியியல் பாடத்தில் அணு அமைப்பு என்ற பாடத்தை கணினி வழி கட்டகம் வாயிலாக கற்றல் கற்பித்தலில் ஈடுபடும் போது கற்றல் அடைவு அதிகரிக்கிறது. எனவே இதுபோல வேதியியலில் உள்ள அனைத்துப் பாடங்களுக்கும் கணினி வழி கட்டகத்தை உருவாக்கி பயன்படுத்தினால் கற்றல் அடைவு அதிகரிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.

மேற்கோள் நூல்கள்:

 1. தமிழ்நாடு பாடநூல் கழகம், (2017), மேல்நிலை இரண்டாமாண்டு வேதியியல், பாடப் புத்தகம், சென்னை-6. தமிழ்நாடு பாடநூல் கழக வெளியீடு, கல்லூரி சாலை.            முத்தையன், இரா. (2009). கலைத்திட்ட மதிப்பீடு, தஞ்சாவூர்-7, அகரம், மனை எண்-1, நிர்மலா நகர்.
 2. Aggarwal, Y.P. (2002). Statistical methods: Concepts, Application and Computation. New Deli, Sterling publication, Private Limited.
 3. Best, W. John (1975). Research in Education. New Delhi: Prentice Hall of India private limited.
error: Content is protected !!