மொழிக்கல்வியில் தொழில்நுட்பத் தேவைகள்

மொழிக்கல்வியில் தொழில்நுட்பத் தேவைகள்

T.Sivapalu B.Ed. Hons, M.A in Ed. Cey.

இந்தக் கட்டுரை தமிழ்மொழியைக் கற்பித்தலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதைப் பகுப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்மொழியை முதலாம் மொழியாகவும் இரண்டாம் மொழியாகவும் கற்றலிலும் கற்பித்தலிலும் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரவதன் முக்கியத்துவத்தை முதன்மைப் படுத்துகின்றது.  விஞ்ஞானத் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி மொழியைக் கற்பித்தல் உத்திகள் குறித்து ஆராய்வதற்கு சிறந்த ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. முன்னர் அறிந்திராத நவீன தொழில் நுட்பவளத்தையும் தளத்தையும் மொழி கற்பித்தலில் பயன்படுத்த வேண்டிய தேவை இன்று தவிர்க்கமுடியாததாகி உள்ளது. மொழிக் கல்வியில் தொழில் நுட்பத்தின் வகிபாகம், தொழில்நுட்பப் பயன்பாட்டில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் என்பன பற்றியும் ஆராய முற்படுகின்றது. அவற்றிற்கேற்ப கற்றல்-கற்பித்தலை எவ்விதம் திட்டமிடலாம் என்பதனையும் பகிர்ந்துகொள்வது அவசியமாகின்றது.  தொழிநுட்ப வளங்களுடன் மொழி கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்ளவும்  மேம்படுத்தவும் ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டிய உத்திகளை மட்டுமல்லாது கற்றல்-கற்பித்தலில் பெற்றோரின் பங்களிப்பின் தேவை பற்றியும் அவர்களுக்கு உதவக்கூடிய தொழில்நுட்ப வளங்களின் பயன்பாடு பற்றியும் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

இன்றைய காலவோட்டத்திற்கேற்ப ஆசிரியர்கள் தொழில் நுட்ப வளங்களையும் தளங்களையும் பாட அலகுகளில் இணைத்துக்கொண்டு பயணிக்கவேண்டிய வழிகளையும் கோடிட்டுக்காட்ட விளைகின்றது,

அறிமுகம்

நாம் கணினி யுகத்தில் வாழ்கின்றோம். எதிலும், எப்பொழுதும், எதற்கும் தொழில்நுட்பம் என்றாகிவிட்டது. கோவிட்-19 அனைவரையும் வீட்டில் முடக்கியுள்ளது. கல்வியில் தொழில் நுட்பத்தின் தேவை தவிர்க்கமுடியாதது. இணையவழித் தொலைநிலை,  கலப்புமுறை, உள்ளகவலைத் தளம், மின்-கற்றல் போன்றனவற்றைத் தொழில்நுட்பம் தருகின்றது.  கற்றலில் தொழில்நுட்பத்தின் வகிபாகம் மற்றும் அதன் தேவைபற்றி ஆய்வது இன்று முக்கியமாகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலல்லாமல் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தமிழ் மொழி பேசப்படும் நாடுகளில் எல்லா மட்டங்களிலும் இவ்வாயப்புக்கள் சமமாகக் கிடைப்பதில்லை.  தொழில்நுட்ப வளங்கைளப் பயன்படுத்தி கற்பிப்பதனால் மாணவர்கள் இலகுவாக மொழியைப் பேச Boyle. Simth, and Eckert 1976, Collett 1980) Rassool, 1999;  Murray, 2000; Warschaure, 2000  எழுத, வாசிக்க் கூடிய ஆற்றலை விரைவாக விருத்தி செய்கின்றனர். மொழிக் கல்வி வாழ்வாதாரத்தோடு இணைந்தது. அது வாழ்வியலில் இருந்து பிரிக்கமுடியாதுள்ளது. தொழில்நுட்பம் இன்று அர்த்தமுள்ளதும், உணர்ச்சிமயமானதும், உளமற்றம் சமூக விருத்தி தொடர்பானதும் ஆகும். மாணவர்களைத் தாமே செயற்படாமல் தடைசெய்யும் கற்பித்தலில் இருந்து பயனுள்ள  செயற்பாட்டிற்கான தாக்கத்தைக் கொண்டுள்ளது. தன்னூக்கத்தோடு தாமே ஈடுபட்டுக்கற்கும் நிலைக்கு மாணவர்களை வளப்படுத்துகின்றது. மொழிக்கல்வியில் ஆழமாக மூழ்கிவிடக்கூடிய நிலையை ஏற்படுத்தும் சிறந்த கருவியாக விளங்குகின்றது. தொழில்நுட்பத்தை ஆங்கில மொழியைக் கற்பதில் பயன்படுத்தும் நிலை 1960 இல்தான் பரந்தளவில் பயன்படுத்தப் பட்டுள்ளமையைக் கறோல் ஏ. சப்பல் அவர்கள்: “இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் நுழையும்போது நாளாந்த மொழிப்பாவனை மிக அதிகளவில் தொழில்நுட்பத்தோடு பிணைக்கப்பட்டிருக்கும்; இன்று தொழில்நுட்பத்தினூடு மொழியைக் கற்றுக்கொள்ளுவது வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாறிவிட்டது. குறிப்பாக மொழியியல் பயன்பாட்டாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது”[i]  எனப் (2001) பதிவிட்டுள்ளார். Boyle. Simth, and Eckert 1976, Collett 1980, Rassool, 1999;  Murray, 2000; Warschaure, 2000  முதலிய பலர் வெவ்வேறு மொழிகள் சார்ந்து தொழில்நுட்பப் பயன்பாடு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.  ஜேர்மெனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம்,  ஐக்கிய அமெரக்கா. கனடா கீழை நாடுகளில் யப்பான், சீனா போன்ற நாடுகளும் மொழிக்கல்வியல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் முன்னிலை வகுக்கின்றன. 

ஆனால் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் மொழியைக் கற்பதற்கு கணினிப் பாவனையையோ அன்றி வேறு தொழில்நுட்ப சாதனைங்களையோ பாவிப்பதற்குப் பதிலாக பாரம்பரிய முறைக் கற்றலையே ஆரம்ப நிலை வகுப்புக்களில் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவது தவிர்க்கப்படவேண்டும். ஆங்கிலத்தைக் கற்பதில் காட்டப்படும் அக்கறையும் ஆர்வமும் தமிழ் மொழியைக் கற்பதில் இல்லை. “இந்திய மாநிலங்களில் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. எனினும் ஆங்கிலத்தைக் கற்பிப்பதற்கான போதுமான தொழில்நுட்பப் பயன்பாடோ அல்லது உத்திகளோ பயன்படுத்தப்படுவதில்லை”[ii]  என்னும் கருத்து ஆர்.அபிலாசா மற்றும் எம். இளங்குமரன் இருவரும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுக்கட்டுரையில் பதிவிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைக் கற்பதில் எதிர்கொள்ளும்  சவால்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப தரங்களில் தமிழ் மொழியைக் கற்பித்தலில் உள்ள தடங்கல்கள், பின்னடைவுகள், உத்திகள்இ தொழில்நுட்ப வளங்கள் பற்றி போதியளவு ஆராயப்படவில்லை என்பது துர்லபமே.

தமிழ்க் கல்வியை மின்-கற்றல் மூலம் கற்றல் பற்றி பாரதியார் பல்கலைக்கழக ஆய்வாளர் மாணவர் விஜயலஷ்மி முருகேசன் [iii]  கல்வியில் நவீனு கற்பித்தல் தொழில்நுட்பம் என்னம் பொருளில் ஆய்வுக்கட்டுரையை கோயாம்புத்தூர் மகாநாட்டில் (2019) வாசித்துள்ளார்.    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்து  துணைப்பேராசிரியர்களாக இருந்த ஜி. றெக்ஸ்லின் ஜோ மற்றும் பி.வில்லியம் தர்ம ராஜா ஆகிய இருவரும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகள்[iv] (2011) போன்றன தமிழ் மொழிக்கல்வியில் தொழில்நுட்பத்தின் தேவையும் அவற்றின் பயன்; பற்றியும் ஆராயந்துள்ளது. எனினும் மேலும் ஆராயப்பட வேண்டிய ஒரு பரப்பாகவே உள்ளது.

மொழிக் கல்விக்கான தொழில்நுட்ப வளங்களும் தளங்களும்

இன்று தொழில்நுட்பத்தின் கல்விக்கான பங்களிப்பு தவிர்க்கமுடியாதது.  தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வருகின்றது. அதற்கேற்ப நாம் எம்மை தயார்படுத்த வேணடியவர்களாக உள்ளோம். அத்தோடு தொழில்நுட்ப வளங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றது. Zoom, Google classroom, seesaw, Khan Academy, Epathshala, Moodle, WizIZ, Groupworld, UnRemot, NewRow, Vedamo, Big Blue Button, learn Cube, Electa Live, Adobe Connect, Kahoot, Skype, Prezi, Live Binders, Class Dojo, e-learning, Brightspace, schoolpad போன்ற கற்பித்தற் தொலைத் தொடர்புச் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இவற்றுள் பல கட்டணமற்றவை, சில கட்டணம் செலுத்தவேண்டிவை. Zoom, Google classroom, Kahoot போன்றவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விச்சபையின் கணக்கில் இலவசமாகப் பயன்படுத்தக் கனடாவின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள கல்விச் சபைகள் வாய்ப்பளித்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தவதால் மாணவர்களின் கல்வி ஆற்றலையும் அடைவையும், அதிகரிக்கமுடியும் என்பதனைப் பல்வேறு ஆய்வுகள் வெளிக் கொண்டுவந்துள்ளன. இவற்றை மொழிப் பாடவிதானத்தல் சேர்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததும் தவிர்க்கமுடியாததும் ஆகும்.

வகுப்பறைக் கற்றல் – கற்பித்தலில் தொழில் நுட்பம்

தொழில் நுட்பத்தின் முக்கிய தேவைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1.ஈடுபடுத்துதல்:  கற்றலும் – நோக்கம், ஊக்கமூட்டல், தூண்டல் – துலங்கல்

2.பிரதிநிதித்துவப் படுத்தல்: வகுப்பறை வளங்களையும் கல்வி தருநனையும் தொழில் நுட்பம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. தொழில்நுட்பம் தருநரைப் பிரதிநிதித்துவ் படுத்துகின்றது.  வளமார்ந்த, அறிவுபூர்வமான கல்வி, மற்றும் தகவல்களையும் உள்ளடக்கங்களையும் வெவ்வேறு உத்திகளின் அடிப்படையில் வேறுபடுத்துத உதவுகின்றது.

3.செயற்பாடும் வெளிப்பாடும்: இலக்கு – நோக்கி வழிப்படுத்தப்பட்ட மாணவர்கள், மாணர்வளின் வேறுபட்ட வழிகளில் மாணவர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்த வழிப்படுத்துதல் .

வகுப்பறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள பயன்களை Vawn Himmelsbach[v]  என்பவர்  பின்வருமாறு  வகைப்படுத்துகின்றார்:

1. தொழில்நுட்பத்தால், கற்பித்தலில் அதிக பரிசோதனைகளைச் செய்து கருத்துக்களைப் பெறமுடியும்.

2. மாணவர்களைப் முழுமையான பங்கேற்பை உறுதிப்படுத்த உதவுகின்றது.

3. கற்றலை மேம்படுத்த, பயன்பெற, விளையாட்டாகக் கற்க எண்ணற்ற வளங்கள் உளளன.

4. கடினமான பணிகளை தொழில்நுட்பம் இலகுவாக்கி நேரத்தை மீதாக்கி தன்னியல்பாக்குகின்றது.

5. மாணவர்களைப் அனுபவங்களைப் பெறத்தக்க புதிய தகவல்களை அணுகும் வாய்பை தருகின்றது.

6. நாங்கள் வாழும் எண்ணிம உலகத்தில் தொழில்நுட்பம் என்பது வாழ்க்கைத் திறனாகும்

வகுப்பறையில் மொழியைக் கற்பிப்பதில் தொழில் நுட்பத்தின் தேவையை உறுதிப்படுத்துவதாக அவரது கூற்றக்கள் அமைந்திருப்பதனைக் காணமுடிகின்றது. ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மாணவர்களின் கல்வியை துரிதமாக விருத்திசெய்கின்றது. படங்கள், வீடியோக்களைக் காட்சிப்படுத்திக் கற்றல்-கற்பித்தலுக்குப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை கல்வி உலகை ஆட்கொண்டுள்ளது. ஸ்மாட்போட், அல்லது கணினி, ஐபாட், போன்ற சாதனங்களை வகுப்பறைகளில் கல்விக்காகப் பயன்படுத்த முடியும். இன்று மொழிக் கல்விக்கான அனுகூலமானவற்றை முகநூல், இணையத்தளங்கள் போன்றவற்றில் இருந்து தரவிறக்கம் செய்ய முடியும். இவற்றை மொழிக்  கல்வியல் பயன்படுத்துவது கற்றல்-கற்பித்தல் பரப்பை இலகுபடுத்துகின்றது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. புதிய கல்;விக் கருத்துக்களைக் காட்சிப்படுத்தவும், இலகுவாக விளங்கிக் கொள்ளவும் இவை உதவுகின்றன. மாணவர்களின் திறன்களை மேற்பார்வை செய்யவும் அவர்களது கருத்துக்களைப் பரிமாறவும் உதவுகின்றன. சுயமாகக் கற்க உதவுவதால் கற்றலில் ஊக்கம், ஊடாட்டம், ஒன்றிணைதல் என்பனவற்றை தொழில்நுட்பச் சாதனங்களின் வழி மேற்கொள்ளமுடியும். இவற்றைப் பயன்படுத்தும் தேவை தவிர்க்க முடியாதது. “  என கரோல் எ. சப்பல் என்பவர் தனது மொழி கற்கைக்கான ஆய்வு நூலில் குறிப்பிடுகின்றார். தொழில்நுட்பப் பயன்பாட்டில் ஆசிரியர்கள் பெறும் பயன்களும் அடையும் நன்மைகளையும் பின்;வருமாறு வகைப்டுத்த முடியும் அவற்றைத் தமிழ் மொழிக் கல்வியில் பயன்படுத்தும் திறன்களை ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை உண்டு. 

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

   தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாடு மொழிக்கல்வியில் ஆசிரியர்களின் பாரம்பரிய முறைக்கற்பித்தலை மாற்றியமைத்துத் புதிய தேடல்களையும் திட்டமிடலையும் புகுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பக் கல்வி நடத்தைகள் இன்றைய கோவிட்-19 காலகட்டத்தில் கணினி மயமாக்கப்பட்டுள்ளதோடு பல்வேறு சாதனைங்களையும் பயன்படுத்த ஊக்குவிக்கின்றது.

ஆசிரியர்கள்  தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படைத் தொழில்நுட்பத் தேவைகள்:

இன்றைய மாணவர்கள் நாளைய சமூக உறுப்பினர்கள். அவர்களைத் தயார்ப்படுத்த உறுதியான கல்வி மற்றும் கற்பித்தல் முறை தேவை. முன்னோக்குப் பார்வையோடு  வாழ்வியல் திறன்களை வளர்ப்பதற்கு தொழில்நுட்பம் வழிவகுக்கின்றது.

மாணவர்களிடையே அக்கறை, விருப்பு, அர்த்தம் உள்ள தொடர்பாடலையும், ஒன்றிணைவையும் ஏற்படுத்தும் கல்வி தேவை. தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கற்றலை எளிதாக்கமுடியும். மாணவர்களை ஒன்றிணைப்பதில் தொழில்நுட்பம் இலகுவான சாதனமாக உள்ளது. திறனாய்வுச் சிந்தனைத் திறன்கள், எதிர்வினைகள் பற்றிய நுட்பங்களையும்  வழிகளையும் தேவைகளையும் தொழில்நுட்பம் தருகின்றது. நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டில் மாணவர்களின் கருத்துரிமைக்கு முதன்மை அளித்து அவர்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்த்து, பகுப்பாய்ந்து மதிப்பீடு செய்யவேண்டும். தொழில்நுட்பப் பயன்பாட்டுத் தேவைகளும் அவற்றிற்கான தளங்களும் நாளாந்தம்  பல்கிப் பெருகுகின்றன. 

எப்படியாக பொருத்தமான கற்றற் தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்துவது என்பது ஆசிரியர்களின் சவாலாக உள்ளது. தொழில்நுட்பப் பயன்பாட்டை மொழிக்கல்வியல் பயன்படுத்த வேண்டிய ஆய்வினையும் கல்வியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். மாற்றமடைந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவற்றின் அடிப்படையில் கற்பித்தலைத் திட்டமிடவும் ஆசியர்கள் தம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

பாரம்பரிய மொழிக்கல்வி பயிற்றுமுறையைப் புறத்தொதுக்கி நவீன முறைகளைக் கையாள வேண்டியது அவசியமாகிறது. தமிழ் மொழிக் கற்றலை நவீன தொழில்நுட்பம் இலகுவாக்கும் என்பதை ஆசிரியர்கள் உணரத்தலைப்படுதல் வேண்டும்.  இதனை மாணவர்கள் அறியவும் பயன்படுத்தவும் ஏனைய ஆசரியர்களோடு இணைந்து செயற்படவேண்டி தேவை தவிர்க்கமுடியாததே.

அறிவியல், கணிதம் போன்றனவற்றில் தொழில்நுட்பத்தை ஆசிரியர்கள் பயன்படுத்துவது பல காலமாகத் தொடர்கின்றது.   எனினும் ஆங்கில மொழிக் கல்வியில் இதன் பயன்பாடு மேலை நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ் மொழிக்கல்வியிலும் இவ்வித முன்னேறம் ஏற்படுத்தப்படுவதன்  மூலமே தமிழ் மொழியை மாணவர்கள் சிரமின்றியும் விருப்போடும் கற்கமுடியும்.  இன்று இளம் சந்ததியினர் தொழில்நுட்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக் கின்றார்கள். பல நூற்றுக் கணக்கான இணையத் தளங்கள் கல்விக்கான வளங்களை தந்தவண்ணம் இருக்கின்றன. இவ்வளங்களையும் தளங்களையும் தமிழ் மொழிக் கல்வியில் எவ்விதம் பயன்படுத்தலாம்?, அதன் தேவை என்ன?, அதன் பயன் எத்தககையது? என்பனபோன்ற கேள்விகளுக்கு விடைகாணப்படவேண்டும். குழந்தைகள் முதல் பால்கலைக்கழக மாணவர்கள் வரை தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தும் நிலை தவிர்க்கமுடியாதுள்ளது. ஆனால் வளர்ந்தோர் மத்தியில் அவற்றைப் பயன்படுத்தும் தலைமுறை இடைவெளி வளர்முக நாடுகளில் அதிகமாக உள்ளது. பெற்றோருக்கும் தொழில்நுட்பச் சாதசனங்கள் பற்றிய அறிவை வளர்க்கவேண்டிய கடப்பாடும் உண்டு.

வகுப்பறைகளுக்கு வெளியேயும் உள்ளேயும் தொழில் நுட்பத் தேவைகளும் பயன்பாடும்

தொழில் நுட்பத்தின் ஊடாக ஆசிரியர் வழிகாட்டிக் கற்றலும் மாணவர்கள் தன்னியல்பாகக் கற்றலுக்குமான தேவைகள் அதிகரித்து வருகின்றன. பாடசாலை மட்டத்தில் தொழில்நுட்பம் அதன் தாக்கத்தை அதிகளவிற்கு ஏற்படுத்தி வருகின்றது.  தொழில்நுட்பங்களின் வழி ஆசிரியர் இல்லாமல் எதனையும் கற்றுக்கொள்ள இயலாது என்ற உண்மை உணரப்படவேண்டும். ஆசரியர்களின் தேவை எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். தொழில்நுட்பம் ஆசிரியர்களை ஒதுக்கிவிட முடியாது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வழிப்படுத்துவதும் மாணவர்களை தன்னியல்பாக இயங்கவைப்பதும் ஆசிரியர்களது பணியாகும். தொழில்நுட்பம் மாணர்வர்கள் நேரடியாக அனுபவித்து விருப்போடு ஈடுபடத்தூண்டுகின்றது.

தொழில்நுட்பப் பயன்பாட்டால் மாணர்வள் பெறும் அனுகூலங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

மாணவர்களுக்கு இன்று ஆர்வத்தைத் தூண்டும் கருவியாக தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை தவிர்க்கமுடியாதது. வகுப்பறையில் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல் கற்றலில் மிகுந்த ஈடுபாடு, விருப்பு, மகிழ்ச்சி, இலகுத்தன்மை, எளிதாகப் புரிந்துகொள்ளல் என்பனவற்றிற்கு வழிவகுக்கின்றது. மொழியைக் கற்பது உண்மைநிலைப் பாடங்கள், காணொளி, நிழல்படக்கருவிகள் போன்றனவற்றின் துணையோடு  இடம்பெறும்போது மாணவர்களின் ஈடுபாடும் விருப்பமும் அதிகரிக்கின்றது.

மாணவர்களை எதிர்காலத்திற்காக தயார்ப்படுத்த இலகுவாகக் கையாளக்கூடிய வகையில்  நம்பகத்தன்மையை தொழில்நுட்பம் ஏற்படுத்துகின்றது. கற்றல் என்பது தரவுகளையும், சொல்வளத்தையும் மனப்பாடம் செய்வதாக அன்றி பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், ஒன்றிணைந்து கற்றல் போன்றவற்றிற்கான வாய்ப்பைத் தருகின்றது.

மாணவர்கள் தங்களின் வசதி, வாய்ப்பு, காலம் என்பவற்றிற் கேற்பக் கற்றுக்கொள்ளவும் தாம் செல்லும் இடங்களிலும் தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பையும் தொழில்நுட்பம் தருகின்றது.

தொழில்நுட்பம் மாணவர்களிடையே தொடர்பை ஏற்படுத்துகின்றது. பாடசாலைக்கு வெளியேயும் அவர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு கல்விபற்றிக் கலந்துரையாடவும் ஒப்படைகளைச் செய்யவும் வாய்ப்பாக உள்ளது.

மாணவர்கள் தாங்கள் கற்பவற்றையும் தாங்களே செய்தவற்றையும் நேடியாக சேமிக்கக்கூடிய தளங்கள் தாராளமாகவே இலவசமாகக் கிடைக்கின்றன. அவர்கள் கற்பவற்றை பதிவாக்கி மீண்டும் கேட்கக்கூடிய வாய்ப்பினைத் தொழில்நுட்பம் தருகின்றது. பாரம்பரிய வகுப்பறைகளில் காண்படாத ஒரு வெகுமதியாக இது அமைகின்றது. தாங்கள் பதிவிட்டவற்றை திரும்பப் பார்த்து அவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வாய்பளிக்கின்றது. அனைத்தையும் பதிவிடல், பின்னூட்டஅளித்தல், மீள்பார்வை செய்தல் என்பன மிக இலகுவான முறையில் செய்யக்கூடிய வாய்ப்பை இவை நல்குகின்றன. இலகுவாக காணொளிகளையும், படங்களையும் இணைக்கவோ அன்றி பதிவிட்டு அவற்றை வெளிப்படுத்தவோ முடியும். மிகக் குறைந்த நேரத்தில் இவற்றை எல்லாம் செய்யக்கூடிய வாய்ப்புக்களை தொழில்நுட்பம் தருகின்றது. பாடநூல்கள், பயிற்சிக்கான கருவிகள் அனைத்துமே தொழில்நுட்பவழி கிடைக்கின்றன.  மாணவர்களின் செலவினத்தைக் குறைக்கின்றது. மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும் விருப்புடனும் நவீன தொழில் நுட்பத்தை மொழிக் கல்வியில் பயன்படுத்த முன்வருகின்றார்கள். அவற்றை அவர்களின் தரம், வயது, என்பனவற்றிற்கேற்ப திட்டமிட்டு வளங்கவேண்டிய பொறுப்பு பாடசாலை நிருவாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. “மாணவர்களுக்கு  Padlet,  Popplet,  Linoit  and  Pinterest  போன்ற பொறிமுறைகள் மொழியை விளையாட்டாகக் கற்பதற்கு உறுதுணையாகவும் மொழியில் சரளமாக உரையாட பயிற்றவும் உதவுகின்றன[vi]”  என  Joe Dale என்னும் மொழிகற்கைக்கான கனடா நாட்டு ஆலோசகர் குறிப்பிடுகின்றார். முன்பள்ளிப் பருவத்தினருக்கும், ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கும் தொழில்நுட்பச் சாதனங்களின் வழி கற்பிக்கப்படுவதால் ஏற்படும் சாதகமான விளைவுகள் பற்றிய அய்வுகள் நெடுங்காலமாக இடம்பெற்றுவருகின்றன. இதனைப் பற்றி பிறெட் றோஜர் என்பவர்  “குழந்தைகள், பாலர் பள்ளி, மழலையர் பள்ளி, முதலாம், இரண்டாம், மூன்றாம் வகுப்பு மற்றும் சிறு குழந்தைகள் தொழில்நுட்பம், ஊடகம் தொடர்பான சொற்கள், தொழில்நுட்பம் மற்றும் ஊடகம் தொடர்பான இரண்டாம் நிலை தேடல் சொற்கள் “வயது தொடர்பான” தொகுப்புகளுக்கு சொல்வள வங்கி பயன்படுத்தப்பட்டன. இதைச் செய்ய, தொழில்நுட்பம், சாதனங்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பு கொள்ளும் ஊடாடும் ஊடகம் தொடர்பான சொற்களுக்கு வயது தொடர்பான ஒவ்வொரு தொகுப்பின் சுருக்கத்தையும் நாங்கள் தேடினோம். இந்த நிலைகளில் பெரும்பாலானவை கூட்டு நிலை அறிக்கையில்  அடையாளம் காணப்பட்ட வன்பொருள் மற்றும் மென்பொருளிலிருந்து வெளிவந்தன[vii]”  எனக் குறிப்பிட்டுள்ளமை கருத்திற்கொள்ளற்பாலது.

மொழியைக் கற்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் சொல்வளத்தின் பயன்பாட்டை தொழில்நுட்பச் சாதனங்கள் ஊக்;குவிக்கின்றன. மாணவர்கள் செய்யும் வேலைகளை அவர்கள் செய்து முடித்தநேரம், காலம் என்பனவற்றை துல்லியமாக அறிந்துகொள்ளவும் முடிகின்றது. எனவே மாணர்வளின் திறன்களைத் தனித்தனியாக பார்த்து மதிப்பீடு செய்யவும் வாய்ப்பாக உள்ளது.

தமிழ் மொழிக் கற்றலில் எழுத்து, சொல், என்பனவற்றிற்கா இலக்கணத்தை இலகுவாகக் கற்றுக்கொள்ளவும் அவற்றின் உச்சரிப்பை இலகுவாகப்பயிற்சி பெறவும் தொழில்நுட்பம் உதவுகின்றது. ஒலியால் ஆனது எழுத்து என்பதனைத் தெளியவைக்க ஒலியன்களைப் பயன்படுத்முடியும். எழுத்துக்களின் சேர்க்கை அவற்றின் ஒலி மாற்றங்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் தேவை இன்று உணரப் பட்டள்ளது. ஒலி வடிவத்தை மாணவர்கள் புரிந்துகொண்டு அவற்றில் தேர்ச்சி பெற வைப்பதற்குத் தொழில் நுட்பக் கருவிகள் உதவுகின்றன. இவற்றின் மூலம் தமிழ் மொழியை இலகுவாகக் கற்றுக்கொள்ள முடிகின்றது. சொற்களுக்கான உண்மைத் தன்மையை நேரடியாகப் பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பை தொழில்நுட்பம் தருகின்றது. அத்தோது சரியான உச்சரிப்பையும் விளக்கத்தையும் எங்கும் செல்லாமல் அறிந்துகொள்ளவும் வைக்கின்றது.

மொழிக் கல்வியை வளப்படுத்தவும் கற்பித்தலை மேம்படுத்தவும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்றியமையாத மிகவும் தவிர்க்கமுடியாத தேவையாக இன்று தொழில்நுட்பம் முதன்மை பெறுகின்றது. ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மனி, சீனம், யப்பானியம் போன்ற மொழிகளை மாணவர்கள் மிக விருப்போடு கற்றுவருவதற்கும் அவற்றைச் சரளமாகப் பேசுவதற்கும் தொழில்நுட்பச் சாதனங்கள் உதவுகின்றன என்பதனை கருத்திற்கொண்டு அவற்றை தமிழ் மொழிக்கல்வியில் பயன்படுத்துவதன் மூலம் மொழிக்கல்வியை விரிவுபடுத்த முடியும் என்னும் முடிவுக்கு வரமுடிகின்றது.

முடிவுரை

பொதுவாகத் தொழில்நுட்பப்பயன்பாடு கற்றல்-கற்பித்தல் தொடர்பான அனைத்து மட்டங்களிலும் முகியத்துவம் பெறுகின்றது, தொழில்நுட்பத்தின் பயன்பாடு மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் கருவியாகவும் வழங்கியாகவும் உள்ளது, பெற்றோர் தொலைத்தொடர்பு கற்றல் சாதனங்களைப் பயன்படுத்தத் தெரிந்திருத்தல் வேண்டும் என்பது முக்;கியமானது. அனைத்துப் பாடசாலைகளிலும் தொழில்நுட்ப வளங்கள் கிடைக்குமா? மடிக் கணினிகளை தமிழ்நாட்டு அரசு சில மாணவர்களுக்கு வழங்கினாலும் பாடசாலைகளுக்கு வெளியே பயன்படுத்தமுடியுமா? போன்ற கேள்விகள் எம்முன்னே எழுகின்றன. இன்று தொழில்நுட்பப் பயன்பாடு நகரங்களில் காண்படுவதுபோன்று கிராமப்புறங்களில் இல்லை.  வளர்ச்சியடைந்த கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கிராமிய பாடசாலைகளுக்கும் நகர்ப்புறப் பாடசாலைகளுக்குமிடையே இ;வ்வித வேறுபாடுகள் காண்பபடுகின்றன. ஒவ்வொரு பாடசாலைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடி வாய்ப்புகள், வளங்கள் தேவை. அற்றைப் பெற்றுத்தருவது யாருடைய பொறுப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினையாக உள்ளது. அரசாங்கங்கள்தான் இவற்றிற்குப் பொறுப்பேற்கவேண்டிய கடப்பாடு உண்டு என்பது மறுப்பதற்கில்லை. கோவிட்-19 காலகட்டத்தில் கனடாவில் மாகாண அரசுகள் கல்விச் சபைகளிநூடாக மடிக்கணினிகள் போன்ற தொழில்நுட்பச் சாதனங்களை இரவல் கொடுத்துள்ளன. ஆனால் இது உலகில் உள்ள எத்தனை நாடுகளில் சாத்தியமாகும்? கனடாவின் மத்திய அரசு கடந்த 25.08.2020 அன்று இரண்டு மில்லியன் டொலர்களை ஓன்ராறியோ மாகாணக் கல்விச் சபைகளுக்கு வழங்கி வகுப்பறைகளில் குறைந்தளவான மாணர்வளை உள்வாங்கி கற்றலக்கு உதவியுள்ளது. ஆனால் இந்த நிலை வளர்ச்சி பெறும் பொருளாதார சமத்துவமற்ற பாடசாலைகளில் சாத்தியமற்றது. தமிழ் நாட்டு அரசாங்கம் 2017ல் இலவச மடிக்கணினித் திட்டத்தை 3000 கோடி ரூபா நிதி உதவியுடன் உயர்நிலை மாணவர்களுக்கு வளங்கத் தீர்மானித்திருந்தமை வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஆரம்ப, இடைநிலை மாணவர்களுக்கு இவை கிடைக்க ஆவன செய்யப்படவேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஏழை  மாணவர்கள் கற்கும் பொதுப் பாடசாலைகளுக்கு இவ்வித தேவைகள் அதிகம். ஆவற்றைப் பூர்த்தி செய்ய அரசு முன்வரவேண்டும். 


[i] Carol A. Chapelle., Iowa State University, ‘English Language Learning and Technology: Volume 5, Computer Applications in Second language Acqusition,  

   Cambridge University Press 2001

[ii] Abilasha and Ilankumaran,  English Language Teaching: Challenges and Strategies from the Indian Perspective ‘International Journal of Engineering &   

   Technology,’ 7 (3.6) (2018) 202-205  

[iii] Vijayaluxmi Murugesan, “Educatinal Technology in Teacher Education in 21st Century, at:Government College of Education for Wman, Coimbatore, Feb.2019

[iv] Willam & Tharama Rajah

[v] Vawn Himmelshach, Technoloy in the Classromm in 2019: 6 Pros & Cons, Education Technology, TOP HAT Weeky blog recap, Canada July 15, 2019

       [vi]Joe Dale, Teaching languages with technology: tools that help students become fluent- Advertisement feature:From Padlets to Popplets,   

           languages consultant Joe Dale shares the tools modern foreign languages teachers are turning to in their classroom 13 May 2014 17.30 BST

[vii] Fred Rogers Center- 2013  Technology In The Lives of Educators and Early Childhood Program – 2012 Surey of Early Childhood Educators, By Ellen Artella, Courtney K.Blackwell, Alexis R.Lauricella and Michael B.Bobb. –

error: Content is protected !!