விளையாட்டு முறைக் கற்றல் அல்லது கற்பித்தல்

விளையாட்டு முறைக் கற்றல் அல்லது கற்பித்தல்

நாகூர் அப்துல் கையூம்

குழந்தைகளுக்கு விளையாட்டில் இருக்கின்ற விருப்பத்தையும்  ஈடுபாட்டையும்  அறிவார்ந்த முறையில் வகுப்பறையில் பயன்படுத்திக் கொள்ளும் அழகிய முறைதான் இந்த விளையாட்டு முறை. களைப்போ, சோர்வோ தோன்றா வண்ணம் அவர்களும் முனைப்பாக கற்றுச் சிறப்பார்கள். அச்சத்தை உண்டாக்கும் வகையில் கல்வி முறை இருத்தலாகாது. மாறாக, ஆர்வத்தை தூண்டும் வகையில் இருத்தலே சாலச் சிறந்தது. அகிலத்திற்கே இந்த விளையாட்டு முறையை அறிமுகம் செய்தவன் தமிழன். இதனை மேலை நாட்டவர் நம்மிடமிருந்து தத்தெடுத்துக் கொண்டார்கள். ஆனால் நாம்தான் புத்தக மூட்டைக்குள் மாணவச் செல்வங்களை மூழ்கடித்து விட்டோம்.

சங்க காலத்தில் கல்வி என்பது மொழியறிவு, உலகறிவு, பண்பாட்டறிவு இவை மூன்றையும் உள்ளடக்கியதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. மாணவர்கள் சுமந்துச் செல்லும் புத்தக மூட்டையின் எடையை வைத்தே கல்வியின் திறன் தீர்மானிக்கப்படுகிறது. ஏராளமான புத்தகங்களை பள்ளிக்கூடம் வாரி வாரி வழங்கினால் அது சிறந்த கல்வி நிலையம் என்றும், வாங்கிய பணத்திற்கு ஏற்றவாறு நிறைய புத்தகங்கள் கொடுக்கிறார்கள் என்றும் ஆனந்தக் களிப்பில் பெற்றோர்கள் அகமகிழ்ந்துப் போகிறார்கள்.

‘ஏட்டுக் கல்விதான் எல்லாமே’ என்று தப்புக்கணக்கு போடும் அன்பர்களுக்காகவே “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழியை எழுதி வைத்தனர் நம் முன்னோர்கள்.  ஏட்டில் சுரைக்காய் சித்திரம் வரையலாம். ஆனால் அதை எடுத்துக் கறி சமைத்து உண்ண முடியாது என்பதே இதன் உட்பொருள்.

முற்காலத்தில் இயற்கைச் சூழ்நிலையில் பயிற்றுவித்த குருகுலம் முறைகூட விளையாட்டு முறையில் இயங்கிய கல்விக்கூடமே. குருகுலத்தில் வில்வித்தை முதற்கொண்டு அனைத்துக் கலைகளும் கற்பிக்கப்பட்டன. நமது கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்ற உயர்நோக்கில்தான் ரவீந்திரநாத் தாகூர் ‘சாந்தி நிகேதன்’ எனும் கல்வி நிலையத்தையே தொடங்கினார். இந்திரா காந்தி, சத்யஜித்ரே, காயத்ரி தேவி,  அமர்த்தியா சென் உட்பட பலரும்  இக்கல்விக் கூடத்திலிருந்து  புறப்பட்ட அறிவுஜீவிகளே.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ‘ஜூம்’ செயலி மூலம் நேரலையில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், கணினி முறையில் பாடம் கற்பிப்பதை நவீனமாக கருதுகிறார்களே தவிர பயிற்றுவிப்பதில் நவீன உத்திகள் ஏதும் அவர்கள் கையாள்வதில்லை என்பதே கசப்பான உண்மை. விடுமுறைக் காலத்தில் கொடுக்கப்படும் தண்டனையாகத்தான் மாணவர்கள் இந்த நிகழ்வலை பாடங்களை எதிர்கொள்கிறார்கள். வீட்டுப்பாடம் மற்றும் தனியார் பயிற்சி வாயிலாக மட்டுமே பிள்ளைகள் பாடத்திட்டத்தில் வெற்றி காண முடியும் என்ற எண்ணம் முதற்கண் நமைவிட்டு அகல வேண்டும். ஞானம் என்பது தக்க முறையில், தட்டி எழுப்பினால், தன்னாலே பீறிட்டெழும் சுனை போன்றது. எனவேதான் வள்ளுவர் பெருமகனார் “தொட்டனைத்தூறும் மணற்கேணி” என்று ஒப்பீடு செய்தார்.

அயல்நாட்டில் கல்வி முறை    

பின்லாந்து பள்ளிகளில் தேர்வு முறை கிடையாது என்று கூறுகிறார்கள். அது உண்மையல்ல. தேர்வுகள் நடைபெறும், ஆனால் மாணவர் பெறும் மதிப்பெண் அவருக்கு மாத்திரமே அறிவிக்கப்படும். அதை அனைவரும் அறிய பறை சாற்றாததன் நோக்கம் யாரையும் யாரோடும் ஒப்பிடக்கூடாது, மதிப்பெண் குறைவாக எடுத்திருப்பின் அவருக்கு அது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது, மிகக் கூடுதலாக எடுத்திருப்பின் அது கர்வத்தை தூண்டக்கூடாது என்ற காரணத்தினால்தான். ஒரு மாணவனுக்கு சிறப்பாக எது வருகிறது என்பதை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டிதான் இந்த தேர்வு முறையே. தேர்வுகள் மாணவக் கண்மணிகளை வார்த்து எடுப்பனவாக இருந்தல் வேண்டும். வடிகட்டுவனாக இருத்தல் கூடாது. அவை பண்படுத்தவே அன்றி பயமுறுத்த அல்ல. அந்தோ! அவர்களை நாம் முளையிலேயே தேர்வுகள் மூலம் கிள்ளியெறிய முடிவு செய்துவிட்டோம்.

ஆஸ்திரேலியா போன்ற பெரும்பாலான நாடுகளில் பிள்ளைகள் பள்ளியில் சேர குறைந்தபட்ச வயது ஆறு என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் மூன்றரை வயதிலேயே மூவுருளி தானியில், மூட்டை முடிச்சுகளுடன் ஏற்றிவிட்டு, பெற்றோர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி விட்டதாக களித்து மகிழ்கிறார்கள். தரமான கல்வி என்ற மாயை காட்டி, இங்குள்ள தனியார் பள்ளிகள் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பல்லாயிரக்கணக்கில் பணம் வசூல் செய்வது கண்கூடு. மேலைநாட்டில் இதனை ‘விளையாட்டு பள்ளி’  (Play School)  என்றே அழைக்கிறார்கள். ஏனெனில் விளையாடும் பருவத்தில் வீண் பாரத்தைச் சுமத்தலாகாது என்பது அவர்களது விரிவான கொள்கை.

ஆங்கிலேயன் “Twinkle Twinkle  Little Star” என்றும் “Like a diamond in the sky” என்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் பயில்விக்கிறான். பயிலும் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் வானவியல், புவியியல், ரத்தினவியல் என பல்துறையில் வல்லுனர்களாகும் எண்ணம் பக்குவமாய்த் துளிர்க்கிறது  ஆனால் இன்னும் நாம் “இலையில் சோறு போட்டு; ஈயத் தூர ஓட்டு” என்ற பாடலைத்தான் பாடத்திட்டத்தில் வைத்திருக்கிறோம். இலையில்  சோறு கொட்டிவைத்தால் கட்டாயம் அதைச் சுற்றிலும் ஈக்கள் மொய்க்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை அவர்களின் மண்டைக்குள்  நாம் திணிக்கிறோம். ஆங்கில அகராதியில் உள்ள 14,286 சொற்களில் 12,960 சொற்கள் தமிழிலிருந்து பிறந்தவை என்கிறார் ஸ்கிட் என்ற மொழியாய்வாளர். தமிழர்களாகிய நாம் பலவகையில் முன்னோடிகளாகத் திகழ்கிறோம்.

விளையாட்டு முறையில் இலக்கியப்பாடம்

இரட்டுற மொழிதல், சித்திரக்கவி, சிலேடைக்கவி மற்றும் விகற்பாற்கவி (PALINDROME) போன்ற படைத்திறன்களைக் கொண்டு, பண்டுதொட்டே இலக்கியத்தை விளையாட்டு முறையில் கற்பித்தவர்கள் நம் மூதாதையர். விகடம் என்ற பெயரில் கவி காளமேகம் செய்து காட்டிய சொற்சிலம்பமும் ஒரு வார்த்தை விளையாட்டுதானே?

விளையாட்டு முறையில் இலக்கணப்பாடம்

பண்டைய தமிழர்கள் தமிழிலக்கணத்தையும் “கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம், யாருமிங்கே ஓரினம்” என்று மனதில் பாடல் வாயிலாக பதிய வைத்ததோடு இறுதியில் ‘யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனார் கருத்தையும் விதைத்தனர். தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்பதையும் பாடலாகத்தான் நம் மனதில் பதிய வைத்தார்கள். வெறும் கால்பந்தும், மட்டைப்பந்துமே விளையாட்டு அல்ல. ஒளவைப் பாட்டியின் ஆத்திச்சூடியே எழுத்து வருக்கங்களின் ஒரு விளையாட்டுதானே?

ஜனரஞ்சக முறையில் இலக்கணப் பாடம்

ஓசையின்மை, எதுகைத்தொடை, மோனைத்தொடை, சொல்முரண், பொருள்முரண், இயைபுத்தொடை, உவமையணி, இயல்பு நவிற்சி அணி, உயர்வு நவிற்சி அணி, பிறிது மொழிதல் அணி, அங்கதம் இவைகளை ஒரு மாணவனுக்கு திரைப்படப் பாடல்களால் புரிய வைக்க இயலும். ஒரு சொல்லின் முடிவெழுத்து ஒரு சொல்லின் தொடக்கமாக வருவது ‘அந்தாதி’ என்பதை திரைப்படப் பாடலை எடுத்துக்காட்டாக கூறலாம்.

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்குக் காமனவன் மலர்க்கணைகள்

என்ற பாடல் போதுமானது. இயல்பாய் நடக்கும் ஒரு செயலில் கற்பனையைக் கலந்து சொல்வதற்குப் பெயர்  “தற்குறிப்பேற்ற அணி” என்பதாகும்.  ‘போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட’ என்ற சிலப்பதிகார வரிகளை பொதுவாக மேற்கோள் காட்டுவார்கள். இதையே

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தொலைந்ததனால்

அழுதிடுமோ அது மழையோ?

என்று உதாரணம் காட்டினால் கற்பூரமாய் பற்றிக் கொள்வார்கள்.

விளையாட்டு முறையில் கணிதப்பாடம்

தற்போது கற்பிக்கப்படும் கணிதமுறையில் கண்டிப்பாக மாற்றம் தேவை. கடன் வாங்கிக் கழித்தல் என்றுதான் இன்னும் நாம் சொல்லிக் கொடுக்கிறோம். பெரியவனானபின் வங்கிக் கடன் வாங்கி மேற்கல்வி கற்பதா அல்லது  வீட்டுக் கடன் வாங்கி  வீடு கட்டுவதா என்றுதான் அவன் சிந்தனைப்போக்கு இருக்கும். கடன் வாங்கியே இந்தியாவையும் கடன்கார தேசமாக்கி விட்டோம். 

விளையாட்டு முறையில் கற்பிக்கும் கணிதம் பசுமரத்தாணியாய் மனதில் பதிகிறது. சீன ‘அபாக்கஸ்’ முறை, ஜப்பானிய ‘குமோன்’ முறை இன்றைய காலத்தில் சிலாகித்துப் பேசப்படுகிறது. பண்டு “மனக்கணக்கு” என்ற ஒன்றை வைத்துதான் நம்மவர்கள் கணிதவியல் மேதை ஆனார்கள். கணினிக்கே சவால் விட்ட ஸ்ரீனிவாச ராமனுஜமும், சகுந்தலா தேவியும் இந்தியர்கள்தான். சூன்யம் மட்டுமின்றி விகிதமுறா எண், அளவியல், கோணவியல், தேறப்பெறாத சமன்பாடுகள், அட்சர கணிதம் இவை யாவும் கண்டுபிடித்த ஆர்யபட்டாவும் ஒரு இந்தியர்தான்.

மாறுபட்ட முறையில் கல்விப்பாடம்

பாடல், நடனம், நடிப்பு மூலம் பாடம் கற்பிப்பதும் ஒரு விளையாட்டு முறையே.  தமிழ்நாடு ஆசிரியை ஒருவர் நடனம், அரவணைப்பு, கைத்தட்டல் போன்ற விளையாட்டு முறைகளைக் கையாண்டு மாணவச் செல்வங்களை வகுப்பறைக்கு வரவேற்ற காணொளியொன்று அண்மையில் மக்களிடையை பேரலையை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்தில் கதை மூலம் பாடம் நடத்தி திறமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஆசிரியர் ஒருவரை ஊடகங்கள் வெகுவாக மெச்சின. புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் நடன அசைவுகள் மூலம் தமிழ் எழுத்துக்களை படிப்பிக்கும் காணொளி மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆசான்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

“மாற்றம் என்பது மானுட தத்துவம்” என்றார் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கிறது. இவை சரியான முறையில் வெளிக்கொணர்ந்து, திறன்சார் கல்வி கற்பித்தால் நாளைய சமுதாயம்  நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும். குழந்தைகளுக்கு ஆர்வத்தையூட்டி விளையாட்டு முறையில் கற்பித்து, கற்பனைத்திறனைக் கூட்டுவது காலத்தின் கட்டாயம்.

error: Content is protected !!