தமிழ் இலக்கியம் கற்க உதவும் குறுஞ்செயலிகள்

பா. வீரலட்சுமி

   அ.மோகன சங்கரி இரண்டாமாண்டு கணிதம்

சைவபானு சத்திரிய கல்லூரி

அருப்புக்கோட்டை 626101

Abstract

        Many Tamil activists are making many efforts to take the pride of our motherland Tamil language to the world level and to protect the language. In today’s era of growing information technology, it is very necessary to innovate in language. In this way many technical experts are volunteering with interest in computer Tamil development. It is because of their rare efforts that we got the Tamil Apps. Tamil literature, grammar and many other rare information in Tamil are created and made available to us for free on Google Play Store. Among them, this article is a study of  Apps which helps in learning Tamil literature.

Key Words

      Google Play Store, Apps

முன்னுரை

            தமிழ் மொழியில் பல குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டு கூகுள் பிளே ஸ்டோரில் நாம் அவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. வகுப்பறைகளில் தமிழ்ப் பாடவேளையில் நாம் அனைத்து இலக்கிங்களையும் முழுமையாகப் படித்துவிட முடியாது. தமிழ் இலக்கியங்களின் மீது ஆர்வம் உள்ளவர்கள் அவற்றைப் படிக்க வேண்டுமானால் நூலகங்களுக்குச் சென்று அங்கு புத்தகங்களைத் தேடியலைந்து படிக்க வேண்டிய நிலையை இந்தக் குறுங்செயலிகள் மாற்றிவிட்டன எனலாம். நமக்குத் தேவையான இலக்கியங்களுக்கென உள்ள குறுஞ்செயலிகளை நம்  திறன்பேசிகளில் தரவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம். நாங்கள் பயன்படுத்திய தமிழ் இலக்கியக் குறுஞ்செயலிகள் பற்றியும் அதை உருவாக்கியவர்கள் பற்றியும் இக்கட்டுளையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இலக்கியம்  பதினெண்கீழ்க்கணக்கு

            இந்தக் குறுஞ்செயலியை உருவாக்கியவர் கே.ஆர்.ஜவஹர்லால் ஆவார். 11 ஜூலை 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளோரின் எண்ணிக்கை ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆவர். இதன் பதிப்பு 1.1 ஆகும்.  இதன் பதிவிறக்க அளவு 2.85MB ஆகும்.

             இந்தக் குறுஞ்செயலியைப் பற்றி, “பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நான்கு நூல்களை இந்த மென்பொருளில் தந்துள்ளோம். பள்ளியில் இருக்கும் போது இவைகளை படிக்க நேரமில்லை. மேலும் இவைகளைப் பற்றி அறிந்ததை விட அறியாதது அதிகமாகும். நிதியமைச்சர் பட்ஜெட் பேச்சில் தமிழ் இலக்கியத்திலிருந்து  பாடலை குறிக்கோள் காட்டியது தமிழின் உயர்வினையும் அது தற்காலத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கிறது. ஆனால் தற்சமயம் இளைய தமிழ்ச்சமுதாயம் தமிழை சிறிது சிறிதாக புறக்கணித்து வருகிறது. வெளி மாநிலத்தினர்  தமிழ் பாடலை ஓதி பொருள் விளங்க வைப்பதும் தமிழ் இளைஞர்கள் வார்த்தைகளை படிக்க முடியாமல் திணறுவதும்  நாம் எங்கே போகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டும். “என்று குறிப்பிடப்பட்டுள்ளது.( இலக்கியம் பதினெண்கீழ்க்கணக்கு , கூகுள் பிளே ஸ்டோர்)

இலக்கியம் நீதிநெறி நூல்கள்

            இந்தக் குறுஞ்செயலியையும் கே.ஆர்.ஜவஹர்லால் என்பவரே உருவாக்கியுள்ளார்.

            இந்தக் குறுஞ்செயலியைப் பற்றி, “’ஔவையார்’ என்னும் மெல்லியலார் அருளிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்பனவாகிய நூல்களும் அதிவீரராம பாண்டியரால் இயற்றப்பட்ட வெற்றி வேற்கை எனும் நறுந்தொகை, சித்தாந்த  சைவ மதத்தைச் சார்ந்த குமரகுருபரர் அடிகளார் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நீதிநெறி விளக்கம், உலகநாதன் இயற்றிய உலகநீதி மற்றும் முனிசீப் வேதநாயகம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல் ஆகிய நூல்கள் உள்ளன. இவைகளை சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியோர்க்கும் தினசரி வாழ்வில் மிகவும் பயனுள்ள நூல்களாகும். பெரியோர் தங்கள் பேரன் பேத்திகளுக்கு இவைகளை போதிக்கலாம். இதனால் குழந்தைகள்  இதனைப் பின்பற்றி வருங்காலத்தில் இதையொட்டி வாழ்க்கையை அனுபவிக்கலாம். “என்று குறிப்பிடப் பட்டுள்ளது.( இலக்கியம் நீதிநெறி நூல்கள் , கூகுள் பிளே ஸ்டோர்)

         இந்தச் செயலி  25 செப்டம்பர் 2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்துள்ளோரின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆவர். இதன் பதிப்பு 1.0 ஆகும்.  இந்த செயலியின் பதிவிறக்க அளவு 3.19 MB ஆகும்.

திருமந்திரம்

         இச்செயலியை Free Tamil Ebook.com என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதை உருவாக்கியவர் ரய் என்பவராவார். நரேன் என்பவர் மின்னூலாக்கம் செய்துள்ளார்.

        இந்தச் செயலி  குறித்து, “திருமூலர் யோகப் பயிற்சி தரும் விதம் சுவாரசியமான நடை. அவை வெறும் சூத்திரங்களாக இல்லாமல், படிப்பவர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக அதன் பலன்களையும் சேர்த்தே சொல்கிறார். உதாரணத்திற்கு பிராணாயாமம் பற்றிய பாடல்களில், இதைச் செய்தால் மனம் லேசாகும், கள்ளில்லாமலேயே போதை உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும் என்று ஒரு உத்வேகத்தை கலந்தே தருகிறார்.

            வேதியர்கள் சத்தமாக மந்திரம் சொல்லும் விதத்தை மெலிதாக கிண்டல் செய்து உரையாசிரியர்களுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறார் திருமூலர். சிவபுராணத்தில் சொல்லப்படும் தக்கன் வேள்வியைப் பற்றி அவர் சொல்வது, இப்போது உள்ள நவீன குருமார்கள் கூட தொடத் தயங்கும் விஷயம். தக்கன் வேள்வி எனச் சொல்லப்படுவது ஆண், பெண் உறவு என்கிறார் திருமூலர். அந்த உறவு சிவனை நினைத்து இருக்க வேண்டும் என்கிறது அவரது உபதேசம். இது பற்றி பேசுவதற்கு முன்னால் பிறர் மனையை பார்க்கக் கூடாது, பொது மகளிரிடம் செல்லக்கூடாது போன்ற இயமங்கள் உண்டு. தாம்பத்திய உறவு என்பது காமமில்லாமல் கடவுளை நினைத்து இருந்தால் அதுவும் ஒரு யோகமே என்பது திருமூலரின் உபதேசச் சுருக்கம்.

             இந்த முதல் தொகுதியில் திருமந்திரத்தின் முதல் நூற்று ஐம்பது பாடல்கள், விளக்கவுரையுடன் உள்ளன. மிக உயர்ந்த விஷயங்களும், மறைபொருட்களும் கொண்ட ஒரு ஆகம நூலுக்கு உரை எழுதும் தகுதி எனக்கு இல்லை. திருமூலரின் பாடல்கள் தரும் வியப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மின்னூலின் நோக்கம், நண்பர்களிடையே திருமந்திரப் பாடல்களின் மேல் ஒரு ஆர்வத்தை தூண்டுவதே ஆகும். இதில் உள்ள விளக்கவுரைகள், பாடல்களை புரிந்து கொள்வதற்கான ஒரு சின்ன வழிகாட்டி மட்டுமே. நண்பர்கள் பாடல் புரிந்த பிறகு, விளக்கவுரையை விட்டு விட்டு பாடலை மட்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வு அனுபவத்திற்கும், ஆன்மிக ஈடுபாட்டிற்கும் ஏற்ப பல விஷயங்கள் புரிய வரும்.” என்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. (திருமந்திரம், கூகுள் பிளே ஸ்டோர்)

திருக்குறள்

            உலகில் உள்ள மொழிகள் பலவற்றில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல் என்ற பெருமையை உடையது நம் உலகப் பொதுமறையாம் திருக்குறளாகும். திருக்குளுக்கு 1330 குறள்களுக்கும் உரையுடன் கூடிய பல குறுஞ்செயலிகள் உள்ளன. அதுவும் ‘திருக்குறள்’ என்ற பெயரிலேயே அமைந்துள்ளன. எனவே தெளிவான உரையுடன் கூடிய செயலியைத் தேர்வு செய்வது சற்று கடினமாகவே உள்ளது. நான் ஆய்வு செய்த திருக்குறள் குறுஞ்செயலியை வெளியிட்ட நிறுவனம் Sparkle Solution என்பதாகும். 16 நவம்பர் 2017ல் வெளியடப்பட்டுள்ளது. 1 ஜீலை 2022ல் மேம்படுத்தியுள்ளது. 1,00,000 க்கும் மேற்பட்டோர் இச்செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளனர்.

            இந்தக் குறுஞ்செயலியைப் பற்றி, “உலகப் பொதுமறையான திருக்குறளை எளிய மற்றும் நேர்த்தியான வடிவமைப்பில், அதிக பயனர் பயன்பாடுகளுடன் கூடிய ஆண்ட்ராய்டு செயலியாக வழங்கியுள்ளோம் என்று நம்புகிறோம்.

முக்கிய அம்சங்கள்

  • ஒவ்வொரு குறள் மற்றும் அக்குறளின் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கவுரைகளை ஒலி வடிவத்தில் கேட்கலாம்.
  • ஒவ்வொரு அதிகாரத்தின் அனைத்து குறள்களையும் ஒருங்கே ஒலி வடிவத்தில் கேட்கலாம்.
  • எளிதான வடிவமைப்பு.
  • வகைப்படுத்தப்பட்டுள்ள முகப்பு.
  • வகைப்படுத்தப்பட்டுள்ள இயல்கள் மற்றும் அதிகாரங்கள்.
  • விருப்பமான குறள்கள் மற்றும் விருப்பமான அதிகாரங்களை விருப்பக் குறியீட்டின் மூலம் தேர்வு செய்யவும் நீக்கவும் செய்யலாம்.
  • குறள்களின் எண், எழுத்து, வார்த்தை, விளக்கவுரை, அதிகாரங்களின் எண், பெயர், விருப்பமான குறள்கள் மற்றும் அதிகாரங்களின் எண், எழுத்து, வார்த்தை, பெயர் என அனைத்து வகையிலான தேடல் முறைகளும் எளிதான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • முன்பின் குறள்கள், அதிகாரங்கள் மற்றும் இயல்களுக்குச் செல்லும் பயன்பாட்டு முறை மிகவும் எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இணையம் இல்லா முறையில் பயிலும் வசதி.
  • மணக்குடவர், மு.வரதராசனார், மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோரின் விளக்கவுரையுடன், ஆங்கில உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டுள்ளன.
  • பயனர்களுக்கு விருப்பமான விளக்கவுரைகளை மட்டும் தேர்வு செய்து காணவும், பகிரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
  • விளக்கவுரைகளின் எழுத்துரு அளவை ஐந்து முறைகளில் அமைத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு குறளையும், உள்ளடக்கத்தையும் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம். “என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (திருக்குறள், கூகுள் பிளே ஸ்டோர்).

சிலப்பதிகாரம்

            சிலப்பதிகாரம் என்னும் இச்செயலியை உருவாக்கியவர் கே.ஜி.ஜவர்லால் ஆவார். இச்செயலியில் சிலப்பதிகாரம் கதை வடிவில் 138 பக்களில் மின்னூலாக அமைந்துள்ளது. இம்மின்னூலை இந்தியப் பணம் 106.20 கொடுத்துப் பெறும் வகையில் அமைந்துள்ளது. 

      இச்செயலியில் “கே.ஜி.ஜவர்லால் ஓர் இயந்திரவியல் பொறியாளர். வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர். இவரது சிறுகதைகள் சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இடம்பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. அரச வம்சத்தினரை நாயகர்களாகப் புனைந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு வந்த காலத்தில், கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய சாமானியர்களைக் கதை மாந்தர்களாக உருமாற்றினார் இளங்கோவடிகள். இனிக்கும் பேரிலக்கியமான சிலப்பதிகாரத்தின் அழகிய நாவல் வடிவம்.” என்ற ஆசிரியரைப் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. (சிலப்பதிகாரம், கூகுள் பிளே ஸ்டோர்).

சீவக சிந்தாமணி

            இச்செயலியும் கதை வடிவில் 256 பக்களில் மின்னூலாக அமைந்துள்ளது. இச்செயலியை உருவாக்கியவர்  ராம் சுரேஷ் ஆவார். இம்மின்னூலை இந்தியப் பணம் 123.90 கொடுத்துப் பெறும் வகையில் அமைந்துள்ளது. 

            இச்செயலியில் “ராம் சுரேஷின் சொந்த ஊர் வேலூர். தற்போது, துபாயில் கனரக ஊர்திகள் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியியல் ஆசிரியராக வேலை பார்க்கிறார். 2004-ஆம் ஆண்டில் இருந்து இணையத்தில் ‘பினாத்தல் சுரேஷ்’ என்ற பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறார். சமணப் புராணங்களில் தொன்று தொட்டுப் பல கதைகள் சொல்லப்-பட்டு வந்துள்ளன. இந்தக் கதைகளை சமணப் புலவரான திருத்தக்க தேவர் இலக்கிய நயத்துடனும் அறிவுச் செறிவுடனும் தொகுத்து அளித்தபோது சீவக சிந்தாமணி என்னும் காப்பியப் புதையல் தமிழுக்குக் கிடைத்தது.

            மன்னரின் மகனான சீவகன் தன் வாழ்க்கையை இடுகாட்டில் தொடங்கி, மாபெரும் செல்வங்களையும் பதவிகளையும் ஈட்டுகிறான். ஒரு கட்டத்தில், திரட்டிய அனைத்தையும் துறக்கும் சீவகன், துறவறத்தை அடைந்து ஞானம் பெறுகிறான். இந்த எளிய கதைக்குள் பொதிந்து கிடக்கும் அறவியலும் அழகியலும் விவரணைக்கு அப்பாற்பட்டவை. சமண மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிய விரும்பும் எவரொருவருக்கும் இது ஓர் ஆதார நூல். ரசிக்க வைக்கும் சீவக சிந்தாமணியின் அழகிய நாவல் வடிவம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. (சீவக சிந்தாமணி, கூகுள் பிளே ஸ்டோர்).

இராமாயணம்

            காலத்தால் அழியாத காவியமாக திகழும் இராமாயணம் பல குறுஞ்செயலி  மூலம் அனைவரும் பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது. ராமாயணம் தமிழ்(13.59அடி) என்ற செயலி  மித்ரா தமிழ் லேப்ஸ் மூலம் 21 ஜூன் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த செயலியில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஸ்கிந்த காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களின் கதைகள் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்திருக்கிறது.

            கம்பராமாயணம்(9.50அடி) என்ற செயலி சுதாகர் கனகராஜ் என்பவர் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இந்த செயலியில் கம்பராமாயணம் கவிதை மற்றும் உரைநடையுடன் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்த செயலி வாசிப்பதற்கு மட்டுமின்றி இனிமையான குரலால் கேட்கவும் முடிகிறது.

            தமிழ் ராமாயணம்(17.81 அடி) என்ற செயலி ஸ்மார்ட் ஆப் டெவலப்பர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த செயலியில் ஆறு காண்டங்களின் கதைகளும் மிக நுட்பமாக அமைந்திருக்கிறது.

மகாபாரதம்

            நம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களில் ஒன்றாக திகழ்வது மகாபாரதம் அத்தகைய காவியத்தை அனைவரும் அறிவதற்கு பல செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

            மகாபாரதம் தமிழ்(12.66அடி) என்ற செயலி நித்ரா தமிழ் லெப்ஸ் மூலம் 23 ஜனவரி 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இதில் மகாபாரதத்தின் ஒவ்வொரு பாகங்களும்  எளிமையான முறையில் அமைந்துள்ளது.

            மகாபாரதம் தமிழ்(7.69அடி) என்ற செயலி சுதாகர் கனகராஜ் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இந்த செயலியில் மகாபாரதம் கதை வடிவில் அமைந்திருக்கிறது.

முடிவுரை

            தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்களின் அரிய முயற்சியால் இதுபோன்று தமிழ் இலக்கியம் கற்க உதவும்  குறுஞ்செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் அதிக அளவில் கிடைக்கின்றன. எனினும் இச்செயலிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தரவுகள் சரியானவைதானா என்பதைத் தமிழாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். மேலும் சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை உள்ள அனைத்து இலக்கியங்களையும் குறுஞ்செயலிகள் மூலம் பாதுகாக்கும் முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். தமிழாசிரியர்களும் கணினித் தொழிநுட்ப வல்லுநர்களும் இணைந்து பணியாற்றி இன்னும் பல பிழையில்லாத தமிழ் இலக்கியக் குறுஞ்செயலிகளை உருவாக்கித் தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும்.

ஆதாரங்கள்

  1. கே.ஆர்.ஜவஹர்லால், இலக்கியம் பதினெண்கீழ்க்கணக்கு , கூகுள் பிளே ஸ்டோர்.
  2. கே.ஆர்.ஜவஹர்லால் , இலக்கியம் நீதிநெறி நூல்கள், கூகுள் பிளே ஸ்டோர்.
  3. Free Tamil Ebook.com, திருமந்திரம், கூகுள் பிளே ஸ்டோர்.
  4. Sparkle Solution, திருக்குறள், கூகுள் பிளே ஸ்டோர்.
  5. கே.ஜி.ஜவர்லால், சிலப்பதிகாரம், கூகுள் பிளே ஸ்டோர்.
error: Content is protected !!