கீர்த்தனா.மு
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு
ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி, சாத்தூர்.
ஆய்வு நோக்கம்
“கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி” என போற்றப்படும் தமிழ் மொழியானது இணையத்தில் தனி சிறப்பிடத்தினை பெற்றிருக்கிறது. மனிதன் தங்களுடைய கருத்துகளை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவது தொடங்கி இன்று நவீன தொழில்நுட்பங்களின் மூலம் பல்வேறு கட்ட பரிணாம வளர்ச்சியை எட்டியுள்ளது. அவ்வகையில் இணைய நூலகத்தில் தமிழின் பங்களிப்பினைப் பற்றி இக்கட்டுரையின் மூலம் நோக்கலாம்.
இணைய அறிமுகம்:
உலகம் முழுவதும் உள்ள அனைத்து கணினிகளை ஒரே மின்னனு வலையில் சங்கிலிப்பிணைப்பு செய்யப் பெற்று ஒன்றாக்கப்பட்டது தான் இணையம். உலகளாவிய வலை இதனை ஆங்கிலத்தில் (World Wide Web) என்பர். இதனை சுருக்கமாக WWW என்றும் குறிப்பதுண்டு. இணையம் இன்று மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் கருவியாக விளங்குகிறது. புதிய தகவல்களை பெற உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் மிக பழமையான தகவல்களை பெறவும் இணையம் வழிவகுக்கிறது.
“உய்த்துக் கொண்டு உணர்தல்” (தொ.பொ.மரபு-1610)
ஒரு தகவலை பற்றி யூகித்து அறிவதற்கும் மேலும் அதனைப் பற்றி தெளிவாக ஆராய்வதற்கும் இணையம் உதவுகின்றது.
மின்னியல் நூலகம்: (Digital Library)
மின்னியல் நூலகம் என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் நூல்கள், படங்கள். ஆவணங்கள் தகவல் தொகுப்புகளைச் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும் கணினிவழி அணுகக்கூடிய நூலகமாகும். தற்போது வழக்கில் உள்ள அச்சு வடிவம் அல்லது மைக்ரோ ஃபிலிம்(Micro Flim) வடிவத்தில் உள்ள புத்தகங்களை அல்லது அவற்றுள் ஒரு பகுதியை மாற்று வழியாகவோ மறு பிரதியாகவோ துணைப்பொருளாகவோ மின்னியல் வடிவில் பாதுகாத்து வைக்கும் நூலகம் என்று மலேசியாவைச் சேர்ந்த எஸ். இளங்குமரன் விளக்கம் தந்துள்ளார் என்று துரை.மணிகண்டன் தனது “தமிழ்க் கணினி இணைய பயன்பாடுகள்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
உலக மின்னியல் நூலகம்: (The world Digital Library)
உலக மின்னூலகம் என்பது யனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி. அறிவியல் மற்றும் கலாசார அமைப்புகளான (யுனெஸ்கோ) தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்க மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் “ஜேம்சு எச். பில்லிங்டன்” அந்நாட்டின் ஆணையராக யுனெஸ்கோவால் நியமிக்கப்பட்டார். ஜுன் 2005ஆம் ஆண்டு யனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் சென்று “உலக மின்னூலகம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகம் ஆகியவற்றில் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாக பெறக்கூடிய வகையில் உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று கூறினார். மக்களுக்கு செய்திகளை வழங்குவதில் மின்னூலகம் என்பது ஒரு அட்சயப் பாத்திரமாகவே விளங்குகின்றது.
தமிழ் மின்னியல் நூலகம்:
உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழியாகக் கருதப்படும் தமிழ்மொழி இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் மொழிகளுள் ஒன்று.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்:
இந்தியாவில் சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) 1994இல் நிறுவப்பட்டது. 1996இல் ஆராய்ச்சியாளருக்காகத் திறக்கப்பட்டது. மனிதநேயம். சமூக அறிவியல் மற்றும் அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் தமிழ் ஆய்வுக்கான ஆய்வுப் பொருளை வழங்குகிறது. தமிழ் நூல்கள், இதழ்கள், தமிழ் கட்டுரைகள் ஆகியவற்றை இந்நூலகம் தொகுத்து தந்துள்ளனர்.
தமிழ் இணைய கல்விக்கழகம்: (Tamil Virtual University E-Library)
உலகில் உள்ள அனைவரும் பயன்பெறக் கூடிய வகையில் தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைக்கப்பட்டது. தமிழ் இணையக் கல்விக் கழக மின் நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், சிற்றிலக்கியம், திரட்டு நூல்கள், அற நூல்கள், உரைநடை என்று பல நூல்கள் இந்நூலகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.
இலக்கண நூல்கள்:
தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நன்னூல், நம்பியகப்பொருள் இன்னும் சில இலக்கண நூல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூலகத்தில் இலக்கண நூல்களுக்கு உரையுடன் அமைந்துள்ளன.
இலக்கிய நூல்கள்:
சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், பெருங்கதை, கம்பராமாயணம் போன்ற நூல்கள் கிடைக்கின்றன.
அற நூல்கள்:
மனிதர்கள் அறவழியில் பின்பற்ற வேண்டும் நோக்கில் உருவாக்கப்பட்டது. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, வெற்றிவேற்கை, உலகநீதி போன்ற நூல்களும் கிடைக்கின்றன. இவை பிற்கால அறநூல்கள் என்றும் கூறப்படுகின்றன.
சிற்றிலக்கியம்:
மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி, அறப்பளீச்சுர சதகம், கச்சிக்கலம்பகம் போன்ற இன்னும் சில நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
மதுரைத் திட்டம்:
உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் இணையம் வழியில் ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களில் மின்பதிப்புகளை உருவாக்கி அவற்றை இணையம் வழி உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களும், தமிழர்களும் இலவசமாக பெற வசதி செய்யும் திட்டம். இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கே. கல்யாணசுந்தரம் என்பவரால் 1998ல் பொங்கல் திருநாளன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டத்தின் மின் பதிப்புகள் ஆரம்பகாலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் ; (font) கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்நூலகத்தில் திருக்குறள், ஒளவையார் பாடல்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
காந்தளகம் – தமிழ்நூல்:
திரு. மறவன்புலவ க. சச்சிதானந்தன், திருமதி. சசிரேகா பாலசுப்பிரமணியன் முயற்சியில் 1999ல் தைப் பொங்கல் நாளில் சென்னையிலிருந்து காந்தளகம் – தமிழ்நூல் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய தமிழ்நூல் அங்காடியை உருவாக்கியுள்ளனர். இவ்விணைய பக்கத்தில் 40,000 மேற்பட்ட தமிழ், சிங்கள இலக்கிய நூல்கள் இடம் பெற்றுள்ளன என்று “தமிழ் கணினி இணைய பயன்பாடுகள்” நூலின் மூலம் அறியமுடிகின்றது.
நூலகம்.நெட்
ஈழத்தில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களையும் இதழ்களையும் மின் வடிவமாக்கி பாதுகாத்து அனைவரும் காணும் வகையில் நூலகம்.நெட் செயல்படுகின்றது. இந்நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத், மு. மயூரன் ஆகியோர் ஆவர். ஈழத்து நூல்களையம், எழுத்து ஆவணங்களையும் அழிவிலிருந்து காப்பதும் ஆவணப்படுத்துவதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்க வழி வகை செய்வதே இந்நூலகத்தின் நோக்கமாக கருதப்படுகிறது. ஈழத்து நூல்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.
சென்னை நூலகம்
திரு. கோ. சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் உருவான நூலகம் சென்னை நூலகம் ஆகும். இது வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நாலகம் கௌதம் இணைய சேவைகள் (Gowthem Web Services) நிறுவனத்திரால் நடத்தப்படும் இணைய தளம் ஆகும். சென்னை நூலகத்தில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையிலான நூல்கள் இடம்பெற்றுள்ளன. கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், ஒளவையார், பாரதியார், புதுமைப்பித்தன் ஆகியோருடைய படைப்புகளும் இந்நூலகத்தில் கிடைக்கின்றன.
முடிவுரை
வளர்ந்து வரும் நவீன காலத்தில் கணிப்பொறி என்பது எல்லோர் வாழ்விலும் முக்கிய அங்கமாகவே விளங்குகின்றது. இணையம் இல்லையேல் இல்லம் இல்லை என்னும் அளவிற்கும் இணையம் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. அவ்வகையில் இணைய நூலகத்தில் தமிழின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
துணை நூற் பட்டியல்
1) துரை. மணிகண்டன் – தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்
2) https://duraiarasan. blogspot.com/2008/01/blog-post-9242.html?m=1
3) தொல்காப்பியம் (பொருளதிகாரம்) – தமிழண்ணல்