முனைவர் ர.விஜயப்ரியா
உதவிப்பேராசிரியர்
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை
தி ஸ்டாண்டர்டு ஃப்யர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி
சிவகாசி
Tamil Semantics and E-Tamil Thesaurus
Language is subject to development. A language with words of fixed meaning meets its end with time. The language that can fulfill the needs of the society over time wins. Adapting itself according to the times, Tamil language is ever finding its own place in this internet era. To help those who want to know the usage of Tamil language, there are many Tamil e-Dictionaries available on the internet. The purpose of this study is to explain the meaning and classification of Tamil words and compile the Tamil e-dictionaries today. Tamil words can be classified based on its meaning as synonym, hyponym, antonym. This type of classification and inputs will help in Tamil machine learning.
Key words: Tamil E-Dictionary, synonym, hyponym, antonym
திறவுச் சொற்கள்:
மின் தமிழ்ச் சொற்றொகுதிகள், ஒரு பொருள் பன்மொழியம், உள்ளடங்கு மொழியம், எதிர்மொழியம்
முன்னுரை
மொழி வளர்ச்சிக்கு உட்பட்டது. நிலையான பொருள் கொண்ட சொற்களை உடைய மொழி காலப்போக்கில் முடிவைச் சந்திக்கிறது. காலத்திற்கேற்பச் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றும் தகுதியுடைய மொழியே வெற்றி பெறுகிறது. அவ்வாறு காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் தமிழ்மொழி இணைய உலகிலும் இனிதே உலா வருகின்றது. தமிழ் மொழியின் பயன்பாட்டினை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு உதவும் வகையில் தமிழ்ச் சொற்றொகுதிகள் பல இணையத்தில் இடம்பெறுகின்றன. தமிழ்ச் சொற்களின் பொருளுறவினையும் சொல் வகைப்பாடுகளையும் விளக்கித் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள தமிழ் சொற்றொகுதிகளைத் தொகுத்துத் தருவதும் இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.
சொற்பொருண்மை–விளக்கம்:
பொருள் மிகவும் நுட்பமானதும் ஆழமானதும் ஆகும். பொருளை விளக்குவது எளிதன்று. மொழியின் கூறுகளான ஒலி, உருபன், தொடர், வாக்கியம் என்பன பொருளை வெளிப்படுத்துவன. இவ்வகையான மொழிக் கூறுகள் வெளிப்படுத்தும் பொருள் பற்றிய விளக்கங்களை அளிக்கும் துறை பொருண்மையியல் (Semantics) ஆகும்.
பொருண்மையியல் semantics என்னும் ஆங்கிலச் சொல்லின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. Semantique என்னும் பிரஞ்சு மொழிச் சொல்லில் இருந்து semantics என்னும் சொல் உருவாக்கப்பட்டது. பிரயேல் என்னம் மொழியறிஞர் முதலில் semantics என்னும் சொல்லைப் பொருண்மையியல் என்னும் பொருளில் பயன்படுத்தினார். “Semantics: Studies in the Science of Meaning” என்னும் அவருடைய நூல் பொருண்மையியல் பற்றிய பல கருத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே இவரைப் பொருண்மையியலின் தந்தை என்பர்.
பொருள் என்பதற்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி வஸ்து, சொற்பொருள், விடயம், உண்மைக் கருத்து, காரியம், தத்துவம், மெய்ம்மை, நன்கு மதிக்கப்படுவது, கல்வி, அறிவு, கொள்கை, அறம், பயன், மோட்சம், கடவுள், திரவியம், பலபண்டம், பொன், புத்திரன், தந்திரம், அணங்கு, உபமேயம், உறுதி, அருத்தாபத்தி, அகம் புறமாகிய திணைப்பொருள், அர்த்த சாஸ்திரம், தலைமை எனப் பல பொருள்களைச் சுட்டுகிறது. பொருள் என்பதற்குச் சொற்பொருள் என்பதே பொருளாகக் கொண்டு இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியர் எல்லாச் சொற்களும் பொருளுடையன என்று சுட்டுகிறார். இக்கருத்தை
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”1
என்னும் நூற்பா உணர்த்துகிறது. மேலும் பொருள் இருவகைப்படும் என்று விளக்குகிறார்.
“பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”2
என்னும் நூற்பாவில் சொன்மை என்பது இலக்கணப் பொருளையும் பொருண்மை என்பது சொற்பொருளையும் குறிப்பிடுவன. சொன்மை, பொருண்மை ஆகிய இரண்டையும் விளக்கும் தொல்காப்பியர் பொருண்மையை மேலும் இரண்டாக வகைப்படுத்துகிறார். சொல்லானது பொருளை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ வெளிப்படுத்தும். எனவே பொருளைத் தெரிநிலைப் பொருள், குறிப்புப் பொருள் என்று வகைப்படுத்த இயலும். இயல்பாகப் பொருளைப் புலப்படுத்தும் நிலையைத் தெரிநிலைப் பொருள் எனலாம். குறிப்பாகப் பொருளைச் சுட்டிச் செல்லும் நிலையைக் குறிப்புப் பொருள் எனலாம்.
சொற்பொருள் மரபு :
மொழியின் பொருளுரைக்கும் மரபு மொழியின் ஆளுமையை வெளிப்படுத்துவதாகும். ஒரு பொருளையோ உணர்வையோ நிகழ்வையோ மற்றொருவருக்கு அடையாளப்படுத்துவதற்கு மனிதன் சொல்லைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பான். இப்படி உருவாக ஆரம்பித்த மொழி பன்னூறு ஆண்டுகளைக் கடக்கும் போது தன்னுடைய பொருள் வரையறைகளில் மாறுபடத் தொடங்குகிறது. மக்களுடைய பயன்பாடு மற்றும் பயன்பாட்டின்மை காரணமாகப் பொருள்மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். சொல் தன்னுடைய பயன்பாட்டின் தன்மையில் குன்றும் போது அதற்கு பொருளுரைப்போர் தேவைப்படுகின்றனர். அவ்வாறு பொருளுரைக்கும் மரபு உருவாகும் போது பழங்காலச்சொற்றொகுப்புகள் உருவாகின்றன. தமிழ்மொழியில் சொற்பொருள் தொகுப்புகளின் வரலாறு குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் உரியியல் என்னும் இயலைப் படைத்துள்ளார். இவ்வியலில் கடினச் சொற்களுக்கான சொற்பொருளைத் தொகுத்துத் தந்துள்ளார். பிற்காலத்தில் கையாளப்பட்ட அகரவரிசை இவ்வியலில் கையாளப்படவில்லை. அக்காலத்தில் நிலவிய செய்யுட்குரிய சொற்களுக்குப் பொருள் தரும் தன்மையினவாக இவ்வியல் அமைந்துள்ளது. தொல்காப்பியத்தில் இடம்பெறும் இடையியல் மற்றும் மரபியலும் கூட சொற்களுக்குப் பொருள் உரைக்கும் தன்மையினைக் கொண்டுள்ளன.
தொல்காப்பியத்தைத் தொடர்ந்து பொருளுரைக்கும் நூல்கள் பல தமிழ்மொழியில் தோன்றியுள்ளன. தமிழில் முதலில் தோன்றிய பொருளுரைக்கும் நூல்கள் உரிச்சொல் என்றும் உரிச்சொற்பனுவல் என்றும் அழைக்கப்பட்டன. நிகண்டு மரபில் முதலில் தோன்றிய (எட்டாம் நூற்றாண்டு) திவாகரம் மற்றும் பிங்கலம் ஆகிய சொற்பொருண்மை நூல்கள் உரிச்சொல் என்ற பெயராலேயே சுட்டப்பட்டுள்ளன. இறையனார் அகப்பொருள் உரையில் முதன்முதலாக நிகண்டு என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது. பல்வேறு நிகண்டுகள் தோன்றித் தமிழ்மொழிக்கு வளம் சேர்த்துள்ளன.
அகராதி என்னும் சொல் முதன்முதலில் ஐந்தாம் நூற்றாண்டில் திருமந்திரத்தில் கையாளப்பட்டுள்ளது. அகரத்தை ஆதியாகக் கொண்ட பிரபஞ்சம் என்னும் பொருளில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது. அகராதி நிகண்டில் முதன்முதலில் அகரத்தை ஆதியாக உடைய சொற்கள் என்னும் பொருளில் கையாளப்பட்டது. அகராதி போல ககரத்தில் தொடங்குவன ககராதி என்றும் சகரத்தில் தொடங்குவன சகராதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சதுரகராதியில் வீரமாமுனிவர் அகராதி என்னும் மரபினைத் தெளிவாக்கினார்.
தமிழ்ப்புலத்தில் முதன்முதலில் அச்சேற்றப்பட்ட அகராதி புரோயன்சாவின் தமிழ் – போர்ச்சக்கீசிய அகராதி(1679) ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டில் சீகன்பால்கு டிக்னேரியம் தமுலிகம், தமிழ் – இலத்தீன் அகராதி, தமிழ் உரைநடை அகராதி, அகராதி பேர் சுவடி முதலாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஆகியவற்றைத் தொகுத்துள்ளார். இவை அச்சேறா அகராதிகள். வீரமாமுனிவரின் சதுரகராதியும் பெப்ரிசியசின் தமிழ் – ஆங்கில அகராதியும் பதினெட்டாம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்கவை ஆகும். வெளிநாட்டார் வரவால் இவ்வாறாகப் பல்வேறு அகராதிகள் உருவாக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் தமிழறிஞர் பலரும் அகராதிகளைத் தொகுத்து வெளியிட்டனர். கலைக்களஞ்சியங்களும் சொல்லடைவுகளும் லெக்சிகனும் அகராதிகளின் வழியில் தோன்றி வளர்ச்சியை ஏற்படுத்தின.
சொற்பொருண்மைக் கூறுகள்:
சொற்பொருளின் அடிப்படைப் பொருண்மைக் கூறுகளில் கருத்துப்பொருள், குறிப்புப் பொருள், பயன்பாட்டு எல்லை ஆகிய மூன்றையும் இன்றியமையாதவையாகச் சுட்டுவர்.
கருத்துப் பொருள்:
சொல்லுக்கும் உலகப் பொருளுக்கும் இடையே உள்ள உறவே கருத்துப்பொருளாகும். ஓர் உருவமுடைய பொருளையோ அருவமான பொருளையோ கேட்போர் மனதில் விரித்துக் காட்டுவதே கருத்துப் பொருளாகும். ஒரு சொல்லும் உலகத்துப் பொருளும் இக்கருத்துப் பொருள் மூலமே இணைக்கப்படுகின்றன.
சில சொற்கள் கருத்துப் பொருளைக் கொண்டிருக்கும். ஆனால், அவற்றிற்கெனத் தெளிவான ஓர் உலகப் பொருளை வரையறுத்துக் கூறுதல் இயலாது. சான்றாக, கடவுள், பூதம், பேஎமகளிர் ஆகிய சொற்களுக்குக் கருத்துப்பொருள் உண்டு. கேட்போர்க்கு இச்சொற்கள் தெளிவான கருத்தை விளக்கும் தன்மையன. ஆனால், இவற்றிற்கு உரிய உலகப் பொருளைக் காட்டுதல் இயலாது. இதைப் போன்று, பண்புகளைக் குறிக்கும் சொற்களுக்கும் உலகப்பொருள் காட்டுதல் இயலாது. இவ்வகையில் அயர்வு, அவலம், களிப்பு, தீமை நாணம் போன்ற பல்வேறு சொற்களுக்கும் உலகப் பருப்பொருளைக் காட்டுதல் இயலாது.
குறிப்புப் பொருள்:
கருத்துப்பொருள் நேரடியான பொருள் விளக்கத்தைத் தரக் கூடியது. பெரும்பாலும் நிலையானது. ஆனால், குறிப்புப் பொருளோ அதற்கு நேர்மாறானது. குறிப்புப்பொருள் வெளிப்படையான கருத்தைத் தருவதில்லை. அது நிலையற்றது. காலத்திற்கேற்பவும் இடத்திற்கேற்பவும் சமுதாயத்திற்கேற்பவும் மாறுபடும் தன்மை உடையது. தனி மனிதனால் படைக்கப்பெற்றுப் பெருவழக்கு பெற்று, சிறிது காலம் மொழி ஒருங்கில் இடம் பெற்றுப் பின் மாறும் தன்மையை உடையது. கருத்துப்பொருளுடன் கூடுதலாக அச்சொல் மற்றும் பொருள் குறித்த உணர்வு, வட்டாரம், சூழல், இடம், இனம், நடை, மதம், பண்பாடு, கிளைமொழி, இருமொழி போன்ற பல்வேறு செய்திகளைத் தருவது குறிப்புப் பொருளாகும்.
மது என்னும் கருத்துப் பொருளைத் தரும் வகையில் அரி, அரியல், கந்தாரம், கலங்கல், தேறல், கள், மட்டு ஆகிய சொற்கள் கையாளப்பட்டுள்ளன. அரி மற்றும் அரியல் அரிக்கப்பட்ட மதுவினையும், கந்தாரம் என்பது நன்கு முற்ற விளைந்த இனிய மதுவினையும், கலங்கல் என்பது களிப்பை மிகுதியாகத் தரக் கூடிய கலங்கிய கள்ளையும், தேறல் என்பது தெளிவும் இனிமையும் உடைய கள்ளையும் கள் என்பது களிப்பைத் தரும் மதுவையும், மட்டு என்பது பூவிலிருந்து கிடைக்கும் கள்ளையும் உணர்த்துகின்றன. இவ்வாறு ஒரு பொருட் பன்மொழியாக வரும் பல சொற்களும் குறிப்புப் பொருள் உடையனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பயன்பாட்டு எல்லை:
ஒரே கருத்துப் பொருளை உடைய பல சொற்கள் இருக்கும் போது, அச்சொற்களின் பயன்பாட்டு எல்லை வகுக்கப்பெறுகிறது. இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட சொற்கள் ஒரே கருத்துப் பொருளைக் கொண்டிருந்தும் அவற்றின் பயன்பாட்டில் ஒரு வரன்முறை காணப்படும். ஒரு பொருட் பன்மொழிகளை வேறுபடுத்திக் காட்டப் பயன்பாட்டு எல்லை பெரிதும் பயன்படுகிறது. ஒரு பொருட்பன்மொழியாக வழங்கும் சொற்கள் பயன்பாட்டு எல்லையைப் பெற்றுள்ளன. பூ குறித்த சொற்களைச் சான்றாகக் குறிப்பிட முடியும். அரும்பு, முகிழ், முகை ஆகியவை அரும்பி வரும் பூவையும் கூம்பு என்பது மொட்டையும் போது என்பது மலரும் நேரத்து பூவையும் மற்றும் மலர், நனை என்பன மலர்ந்த பூவையும் அலர் மற்றும் அலரி ஆகியன நன்கு அலர்ந்த பூவையும் சுட்டுகின்றன.
பொருள் உறவும் சொற்களும்:
சொற்களுக்கு இடையே நிலவும் பொருள் உறவுகளின் அடிப்படையிலும் சொற்களைப் பலவாய் வகைப்படுத்த முடிகிறது. சொற்கள் தொடர்நிலையிலும் சொற்றொகுதி நிலையிலும் பிற சொற்களோடு தொடர்புடையனவாய் உள்ளன. பொருள் உறவு அடிப்படையில் சொற்கள் ஒரு பொருட் பல சொல், ஒப்புருச் சொல், மீச்சொல், உட்பொருட்சொல், எதிர்ச்சொல் என வகைப்படுத்தப்படுகின்றன.3
இராசேந்திரன் சங்கரவேலாயுதன் அவர்கள் லையான்ஸ் உடைய கருத்தின்படி சொற்களைப் பொருளுறவு அடிப்படையில் ஒரு பொருள் பன்மொழியம்(synonymy), உள்ளடங்கு மொழியம் (Hyponymy), இணக்கம் (Compatability), இணக்கமின்மை (Incompatability) என்ற அடிப்படையில் விளக்க முயல்கிறார். இணக்கம் மற்றும் இணக்கமின்மை என்று லையான்ஸ் குறிப்பிடுவதை மேலும் உற்றுக் கூர்ந்து எதிர்மொழியம்(Antonymy) என்ற பகுப்பினைக் குறிப்பிடுகின்றார்.4
ஒரு பொருட் பன்மொழியச் சொற்கள் :
ஒரு பொருள் தரும் பல்வேறு சொற்களை ஒரு பொருட் பன்மொழியச் சொற்கள் ஆகும். பொருண்மை அடிப்படையில் ஒன்றையொன்று உள்ளடக்கி இடம்பெயர்க்கும் சொற்களுக்கு இடையில் உள்ள உறவு ஒரு பொருட் பன்மொழியம் ஆகும்.
ஒரு சொல் பலபொருட் சொற்கள் :
ஒரு சொல் பல்வேறு பொருட்களை உணர்த்தும் நிலை பொருட்பன்மையை உணர்த்தும். காலச்சூழல் காரணமாகவும் அணிநயம் பற்றியும் அயன்மொழித் தாக்கம் காரணமாகவும் ஒரு சொல் பல பொருட் சொற்கள் உருவாகின்றன.
உட்பொருட் சொற்கள் :
பொருண்மை அடிப்படையில் உள்ளடங்கும் சொற்களுக்கும் உள்ளடக்கும் சொற்களுக்கும் இடையிலுள்ள உறவு உள்ளடங்கு மொழியச் சொற்கள் ஆகும். சான்றாக விலங்கு என்னும் உள்ளடக்கு மொழிக்குள் பசு, குதிரை, நாய், புலி ஆகியவை உள்ளடங்கு மொழிகளாகும்.
எதிர்மொழியச் சொற்கள் :
இணக்கமற்ற ஒன்றையொன்று எதிர்ப்பது போன்ற பொருள் அமையும் சொற்களுக்கு இடையே அமையும் உறவு எதிர்மொழியம் எனப்படும். எதிர்ப்பொருண்மை கொண்ட சொற்கள் இலக்கியங்களில் முரண் சுவையை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
தமிழில் மின் சொற்றொகுதிகள் :
தமிழ் மொழிக்கான மின்சொற்றொகுதிகள் பல இணையத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை எளிதில் பயன்படுத்திக்கொள்ளத்தக்க வகையில் திறந்த மூலங்களாக உள்ளன.
- Digital Dictionaries of South Asia
- TVU – Tamil Lexicon
- Pals Dictionary
- University of Madras Dictionary
- English to Sinhala and Tamil Online Dictionary from Sri Lanka
- Tamildict.com | Online Tamil Dictionary
முடிவுரை:
தமிழ்மொழிக்கு இத்தகைய மின் சொல்தொகுதிகள் வளம் சேர்க்கும் சிறப்பினைப் பெறுகின்றன.
சான்றெண் விளக்கம்
1. தொல்காப்பியம், பெயரியல், நூ.57
2. தொல்காப்பியம், பெயரியல், நூ.58
3. பெ.மாதையன், அகராதியியல், ப.184.
4. இராசேந்திரன் சங்கரவேலாயுதன், தமிழில் சொற்பொருள் மயக்க நீக்கத்திற்கான
நெறிமுறைகள்(ஆய்வுக்கட்டுரை-இணையப்பதிவு), https://www.researchgate.net/publication/328531739_tamilil_corporul_mayakkanikkattirkana_nerimuraikal_Methods_of_word_sense_disambiguation_in_Tamil, பக்.4-15