முனைவர் கு.லிங்கமூர்த்தி,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி.
ஆய்வுச் சுருக்கம்
நாட்டார் இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியம், பொருள்சார் பண்பாடு, நிகழ்த்துக் கலை என்று பரந்து காணப்படுகின்றன. முற்காலத்தில் பல ஆய்வாளர்கள் இவ்விலக்கியங்களைத் திரட்டித் தொகுத்துப் பதிப்பித்தனர். சில ஆய்வாளர்கள் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வியலைப் புனைகதைகளாகக் கொடுத்தனர். சில ஆய்வாளர்கள் நாட்டுப்புற மக்களுடன் வாழ்ந்து, தரவுகளைச் சேகரித்து நாட்டுப்புற ஆய்வுகளாக வெளியிட்டனர். தற்காலத்தில் நாட்டார் இலக்கியம் தொடர்பான தரவுகள், பதிப்புகள் இணையத்தில் குறைந்த அளவு பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் நாட்டார் இலக்கியம் யாருக்கும் தெரியாமல் அழிந்து போகும் சூழல் உள்ளது. அரசும் ஆய்வாளர்களும் இணையத்தில் கணினிப் பெட்டகம் அமைத்து, நாட்டார் இலக்கியங்கள், கலைகளைப் பதிவேற்றம் செய்து எதிர்காலச் சந்ததிகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.
Abstract
Folk literature is broadly divided into oral literature material culture performing arts. Earlier many researchers collected compiled published these literatures. Some researchers have given the biographies of folk artists as fiction. Some researchers lived with the natives collected data and published them as ethnographic studies. Nowadays data related to Folk Literature Editions are uploaded to the Internet in limited quantities. In the near future there is a situation where the Folk literature will disappear without anyone knowing about it. Government and researchers should set up a computerized repository on the Internet and upload the national literature Arts for future generations.
முன்னுரை
இலக்கியங்கள் மனித வரலாற்றின் ஆவணமாக விளங்குகின்றன. அவற்றின் வடிவம் காலந்தோறும் மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு மக்கள் இலக்கியத்தின் மீது கொண்டுள்ள இரசனை அடிப்படைக் காரணமாக அமைகின்றது. மேலும், மக்கள் வாழும் காலச்சூழல், அரசியல், சமயம் போன்றவை பிற காரணங்களாக இருக்கின்றன. ஆனால், மக்களின் வாழ்வியல் ஆதாரமாக இருந்து, வெளிப்படுகின்ற ஓர் இலக்கிய வடிவம் தான் நாட்டார் இலக்கியங்கள் ஆகும்.
மக்கள், தற்காலத்தில் இலக்கியங்களை அதிகளவில் படிக்கின்ற அல்லது தேடுகின்ற ஒரே இடமாக இணைய தளம் இருக்கின்றது. சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை அனைவரும் தன் தேவைக்கு ஏற்ப, இணைய தளத்தில் தரவுகளைத் தேடிப் பெற்றுக் கொள்கிறோம். ஒவ்வோர் இலக்கியம் தொடர்பான தரவுகளின் பெட்டகமாகக் கணினித் திகழ்கின்றது. நாட்டார் இலக்கியத்தின் தேவை, அவசியத்தை மக்களுக்குக் கொண்டு செல்லக் கணினிப் பெட்டகம் வேண்டும். ஆங்காங்கு நிகழ்த்தப்படுகின்ற கலைகளையும் வாய்மொழியாக வெளிப்படுகின்ற பாடல்களையும் தொகுத்து உயிரோவியமாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தக் கருத்தை முன்னிறுத்தி, நாட்டார் இலக்கியங்களின் எதிர்காலம் – கணினிப் பெட்டகம் என்னும் தலைப்பில் இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.
நாட்டார் – சொல் விளக்கம்
நாட்டார் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியினர் என்ற பொருளில் கையாளப்படுகின்றது. நாடோடி என்பது ஓாிடத்தில் தங்கி வாழாமல், இடம் பெயர்ந்து வாழும் மக்களைக் குறிக்கும் சொல். நாட்டுப்புறவியல் அறிஞர் நா.வானமாமலை முதன் முதலில் நாட்டுப்புறத்தாரை நாட்டார் என்று கூறினார். தற்காலத்தில் நாட்டார் என்ற சொல்லாட்சியை நாட்டுப்புறம் என்ற சொல்லிற்கு இணையான பொருளில் பயன்படுத்துகின்றனர்.
19 ஆம் நூற்றாண்டில் ஆங்கில அறிஞர் வில்லியம் ஜான் தாம்சன், ‘Popular Antiquities’ என்ற இலத்தீன் சொல்லிற்கு Floklore என்ற ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். இச்சொல் மனிதனின் பழக்கங்கள், வழக்கங்கள், சடங்குமுறைகள், மூட நம்பிக்கைள், கதைப்பாடல்கள், பழமொழிகள், பழங்கால வழக்காறுகள் முதலியவற்றை குறிப்பிடுவதாக அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து நிறைய கலைச்சொற்கள் உருவாக்கம் பெற்றன. நாட்டுப்புற வழக்காறு (Floklore), நாட்டுப்புறவியல் (Flok lotistics), நாட்டுப்புற இலக்கியம் (Flok literature), நாட்டுப்புறப் பாடல் (Flok song), நாட்டுப்புறக் கலை (Flok Art), நாட்டுப்புற நம்பிக்கைகள் (Flok Beliets) போன்றவையாகும்.
நாட்டார் இலக்கியம் ஆழ்ந்த பார்வை
நாட்டார் இலக்கியங்கள் ஒருவகை வாய்மொழி இலக்கியமாகும். இதனை, வாய்மொழிக்கலை அல்லது வெளிப்பாட்டிலக்கியம் என்றும் அழைப்பர். இதனுடன் சேர்ந்து பொருள் சார் பண்பாடு, நாட்டார் சமூகப் பழக்கங்கள், நிகழ்த்தப்பெறும் நாட்டார் கலைகள் என்று வகைப்படுத்துகின்றனர். வாய்மொழி இலக்கியங்களாக நாட்டுப்புறப் பாடல், கதைப்பாடல்கள், வாய்மொழி இலக்கிய வழக்காறுகள் உள்ளன.
நாட்டார் பாடல்களாகக் கருதப்படுபவையாக, குழந்தைப் பாடல்கள், ஒலிநயப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்களாகிய ஏற்றப் பாடல்கள், நடுகைப் பாடல்கள், அறுவடைப் பாடல்கள், பொலிப் பாடல்கள். நெல்குற்றுப் பாடல்கள், சுண்ணமிடிப்போர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், பூப்புப் பாடல்கள், திருமண எள்ளல் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள,, மாரடிப் பாடல்கள். கும்மிப் பாடல்கள் போன்றவை பல்வேறு சூழல்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்படுபவை.
இவை யாவும் தான் பாமரர் பாடல்கள், காற்றில் மிதந்த கவிதை, ஏட்டில் எழுதாக் கவிதை, நாடோடிப் பாடல்கள், வாய்மொழிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், கிராமியப் பாடல்கள், கிராமிய இலக்கியம், ஊரகப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைப் பாடல்கள், நாடோடி இலக்கியம், நாட்டுப்புறப்பாடல்கள், நாடோடி இலக்கியம், நாடோடிக் கலை, நாட்டுப் பண்பாட்டியல், நாட்டுப்புறவியல், நாட்டார் வழக்காற்றியல், நாட்டாரியல், நாட்டார் வாழ்வியல் என்று கூறும் அளவிற்கு நாட்டார் இலக்கியம் மிகப் பெரிய அளவில் பரந்து காணப்படுகின்றது.
நாட்டார் கதைப்பாடல்கள் உரைநடையிலும் அமையும். வில்லுப் பாடல்கள், உடுக்கடிப் பாடல்கள், கதைப்பாடல்கள், தேவதைக் கதைகள், பழமரபுக் கதைகள், புராணக் கதைகள் ஆகியவை உரைநடையில் அமையும். வாய்மொழி இலக்கிய வழக்காறுகள், வாய்மொழி வெளிப்பாடுகளின் சில சுருங்கிய வடிவங்களாக, பழமொழிகள், விடுகதைகள் என்று பகுக்கப்படும். வாய்மொழி இலக்கிய வழக்காறுகள் எழுத்திலக்கியங்களின் வடிவ அடிப்படையிலும், உள்ளடக்கங்களின் அடிப்படையிலும் ஊடுருவி நிற்கின்றன. இதில் நாட்டார் பேச்சுகளும் கிளை மொழிகளும் அடங்கும்.
பொருள்சார் பண்பாடு நாட்டுப்புற மக்கள் பயன்படுத்துகின்ற பொருள்களால் அறியப்படும் பண்பாடு ஆகும். இந்திரமயமாக்கப்பட்ட தொழில் துறைகளுக்கு முன்னர் அதற்குச் சமமாகத் தொடர்ந்தும் நிலை பெற்றிருப்பவை ஆகும். வாய்மொழிக் கலைகள் எவ்வாறு பழைய மரபுகளுக்குக் கட்டுப்பட்டு தனிமனிதத் திரிபுகளுக்கு ஆட்படுகின்றன. நிகழ்த்துக்கலைகள் என்பது பார்வையாளர்களின் முன்னால் ஏதேனும் ஒன்றை நிகழ்த்திக் காட்டுவதாகும். இது மரபான நாடகம், சம காலத்திய நாடகமாக இருக்கும்.
தெருக்கூத்து தெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து எனப்படும். நாடக மேடை, காட்சித் திரைகள் இல்லாமல் எளியமுறையில் தெருவில், திறந்தவெளி அரங்கில் இரவு முழுவதும் நடைபெறும் கூத்து தெருக்கூத்தாகும். வேடம் புனைந்து கொண்ட நடிகர்கள் சிலரால் தெருக்களில், வயல்வெளிகளில் இரவு தொடங்கி விடியும் வரை கதை தழுவி ஆடப்படும் நாடகம் தெருக்கூத்தாகும். தமிழகத்தின் மிகப் பழமையான கலைகளுள் ஒன்று தெருக்கூத்து. நாட்டுப்புறக் கலைகளான பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகங்களுக்கு முன்னோடியான தெருக்கூத்து காலத்தினால் பழமையானது என்று அறிவுநம்பி (வேர்களைத் தேடி, 2004 ப.66) குறிப்பிடுகிறார்.
தெருவில் நிகழ்த்தப்படும் கூத்து தெருக்கூத்து. மேடையும் திரையும் கிடையாது. மக்களின் நடுவிலே தெருக்களில் ஒப்பனையுடன் ஆடிப்பாடிச் செல்வது எனச் சண்முகசுந்தரம் குறிப்பிடுகிறார். இக்கூத்து பெரும்பாலும் மக்களுக்குத் தெரிந்த காப்பிய, இதிகாச அல்லது புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பொது மக்களுக்குத் தெருக்கூத்து ஒரு நல்ல பொழுதுபோக்காக அமைந்திருப்பதோடு நீதி புகட்டும் வாயிலாகவும் உள்ளது என்று கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது. நாட்டார் இலக்கியங்கள் நிகழ்த்துக் கலைகளைத் தொகுத்து மக்களுக்குக் கொடுத்துள்ளன. நாட்டார் கலைகள் வழிபாட்டுச் சடங்குகளில் ஒரு பகுதியாகவும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடாகவும் பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் உருவாக்கப்படும் நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகளை நாட்டார் கலைகள் என்று குறிப்பிடலாம் என்று இராமநாதன் (2007:460) குறிப்பிடுகிறார்.
ஆதிகால மனிதன் வேட்டைக்குச் செல்லும் போது, விலங்குகளைப் போன்று வேடம் அணிந்து வேட்டைக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு வேட்டைக்குச் செல்லுவதற்கு முன்பு தம்முடைய குழுவினர் முன்னால் ஆடிய வேட்டை நடனங்கள் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு விலங்குகளை வேட்டையாடுவது போன்று பாவனை நடனத்தை ஆடிய பின்னர் வேட்டைக்குச் சென்றால் அதிகளவு வேட்டை கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். வேட்டை நடனத்தின் எச்சங்களாகப் புலியாட்டம், காளையாட்டம், கரடியாட்டம் முதலிய ஆட்டங்களைச் பார்க்க முடிகின்றது.
தெய்வ வழிபாட்டுச் சடங்கில் இருந்து பின்னாளில் கலைவடிவம் பெற்றவைகளாக கரகாட்டம், காவடியாட்டம், சேர்வையாட்டம் முதலிய ஆட்டங்கள் கூறப்படுகின்றன. சு.சக்திவேல் அவர்கள் இரண்டாக வகைப்படுத்தியுள்ளார். அவை, 1. நிகழ்த்துக் கலைகள் 2. நிகழ்த்தாக் கலைகள் (பொருட் கலைகள்) என்பனவாகும். நாட்டுப்புற நடனங்களை சு.சக்திவேல் அவர்களும் ஆறு.இராமநாதன் அவர்களும் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளனர். அவை,
1. சாதி : கணியான் ஆட்டம், தேவராட்டம்
2. ஆடும்முறை அல்லது பண்பு : ஒயில்கும்மி
3. பாடுபவர் : கோடாங்கியாட்டம்
4. நேரம் : பகல் வேடம்
5. பொருட்கள் அடிப்படை : மரப்பாவைக் கூத்து, தோற்பாவைக் கூத்து, பொய்க்கால்
குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், கழைக்கூத்து
6. இசைக்கருவி : வில்லுப்பாட்டு
7. வேடம் : புலியாட்டம், கரடியாட்டம், மயிலாட்டம், காளியாட்டம்
8. இசைக்கருவியும் வேடமும் : உறுமிக் கோலாட்டம்
9. நிகழ்த்தும் இடம் : தெருக்கூத்து என்பனவாகும்.
இவ்வாறு நாட்டார் இலக்கியங்கள் பரந்துபட்டு காணப்பட்டன. தற்காலத்தில் ஒரு சில கிராமங்களில் மட்டும் தான் இன்னும் இத்தகைய இலக்கியம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிகழ்த்து கலைகளும் ஒரு சில கலைஞர்களால் மட்டும் தான் இன்றும் முன்னேடுக்கப்படுகின்றன.
நாட்டார் இலக்கியங்களின் காப்பும் அவசியமும்
கி.ராஜநாராயணன் வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்துள்ளார். அவருடன் இருந்த உதவியாளர்கள் கழனியூரான், பாரதமணி ஆகியோர் பதிப்பித்துள்ளனர். இவை மக்களின் கைகளில் நாட்டார் இலக்கியங்களைக் கொண்டு வந்த ஒரு வழிவகை ஆகும். சு.சக்திவேல் போன்ற ஆய்வாளர்கள் தொடர்ந்து நாட்டார் இலக்கியங்களின் மீது ஆய்வு நிகழ்த்தி, அதனை மீட்டுருவாக்கம் செய்துள்ளார். தே.லூர்து, வானமாமலை போன்றோர் மக்களின் வாழ்க்கையோடு இணைந்து நாடடுப்புறப் பாடல்களைத் தொகுத்துள்ளனர். அவர்கள் முயற்சியால் இன்று மக்கள் கைகளில் நாட்டார் இலக்கியங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவர்களைத் தொடர்ந்து நாட்டார் இலக்கியங்களை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தொகுத்துக் கணினிப் பெட்டலகத்தில் கொடுக்க வேண்டும். ஏனெனில் எதிர்காலத்தில் வருகின்ற தலைமுறைகளுக்குத் தாலாட்டுப் பாட்டு என்பது தெரியாமல் போய்விடும். நாட்டார் இலக்கியம் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். அவற்றையெல்லாம் தொகுத்து, காக்க வேண்டிய முழுப் பொறுப்பும் நமக்கு உள்ளது. இக்காலத்தில் கணினிப் பெட்டகத்தின் வழியாக இணையத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் இன்றைய தேவையாக உள்ளது. ஆய்வாளர்கள்; சரி வர வாய்மொழி இலக்கியங்களைத் தொகுக்க வேண்டும். கணினியில் கொண்டு வர வேண்டும். இணையத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, வில்லிசை வேந்தன் பிச்சைக்குட்டியின் இசை தொடர்பான பதிவுகளைத் தொகுத்து வாழ்க்கை வரலாற்றுப் புனைவாக, சோ.தர்மன் வில்லி வேந்தன் பிச்சைக்குட்டி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் சஞ்சாரம் என்ற புதினத்தில் நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். தோல் பாவைக் கூத்து என்பது தற்போதுள்ள மக்களுக்கும் ஆய்வாளருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “அவள் பெயர் தமிழரசி“ என்ற திரைப்படம் தோல் பாவைக் கலைஞர்களின் வாழ்க்கை யதார்த்தப் படைப்பாக வெளிவந்தது.
எதிர்கால முன் எடுப்புகள்
நாட்டார் இலக்கியங்கள் தொகுப்பும் அவற்றைக் கணினிப் பெட்டகத்தில் சேர்க்கும் பங்கு அனைவருக்கும் உள்ளது.
அரசு
தமிழ் நாட்டில் உள்ள ஆட்சியாளர்கள் சொல் குவை (sorkuvai.com) என்ற இணைய தளத்தில் நிறைய பிற மொழி சொற்களுக்குத் தமிழாக்கம் கொடுக்கின்றனர். நாட்டார் இலக்கியத்தில் காிசல் வட்டாரச் சொல் அகராதியைக் கி.ரா., அவர்கள் உருவாக்கினார். அதைப் போல பிற வட்டாரத்தின் சொல் அகராதிக்கு என இணைய தளத்தை அரசு உருவாக்கிக் கொடுத்தால் மிகவும் நன்மை தருவதாக இருக்கும். இதனால் பிற வட்டாரங்களின் சொற்கள், சொற்களுக்கு உாிய பொருளை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பிற வட்டாரம் தொடர்பான நாட்டார் இலக்கியங்களைத் தொகுத்தும் பதிவு ஏற்றம் செய்யவும் முடியும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்கள், தமிழ் ஆய்வு அமைப்புகள் கணினித் துறை சார்ந்த வல்லுநர்களுடன் புணர்ந்துணர் ஒப்பந்தம் செய்து கொண்டு நாட்டுப்புற இலக்கியம் தொடர்பான கணினிப் பெட்டலகத்தை வடிவமைக்க வேண்டும். இதற்கான பயிற்சிப் பட்டறை, பயிலரங்கள் நிகழ்த்தி, ஆய்வாளர்களுக்கு நாட்டார் இலக்கியங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். வீக்கிப் பீடியா போன்ற இணைய தளம் போன்று தன்னார்வலர்களுக்குப் பயிற்சி கொடுத்து, அதன் வழியாக ஏட்டில் வருகின்ற இலக்கியத்தை இணையத்தில் கொண்டு சேர்க்க முடியும்.
ஆய்வாளர்கள்
ஆய்வாளர்கள் நாட்டுப்புற இலக்கியம் தொடர்பான தரவுகள் கிடைக்கும் இடங்களைத் தேடிச் செல்ல வேண்டும். மக்கள் வாழ்வில் பயன்படுத்துகின்ற வழக்காறுகளைத் தொகுக்க வேண்டும். நிகழ்த்து கலைகள் நடைபெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று தரவுகளை ஒலி, ஒளிப் பதிவு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நிகழ்த்துக்கலை கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து, ஆவணப் படமாகக் கொடுக்க வேண்டும். தற்காலத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் நடைபெறுகின்றன. அவ்வாறு நடைபெறும் நேரங்களில் அவற்றையெல்லாம் ஆய்வாளர்கள் ஒலி, ஒளிப்பதிவு செய்து கணினிப் பெட்டகத்தில் சேர்க்க வேண்டும்.
கணினித் துறை சார்ந்த வல்லுநர்களாக உள்ள ஆய்வாளர்கள், கணினித் தொழில் நுட்பங்களைப் பிற ஆய்வாளர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களின் வாய்மொழி இலக்கியங்களைப் பதிவேற்றம் செய்வதற்கானப் பயிற்சிகளைப் பிற ஆய்வாளர்களுக்கு அளிக்க வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வரும் சந்ததிகளுக்கு நாட்டார் இலக்கியங்களைக் கொண்டு சேர்க்க முடியும். மக்களின் வாழ்வியல் இலக்கிய வடிவமான தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாாி பாடல்கள் போன்றவை பிற்காலத்தில் வருகின்ற சந்ததிகளுக்குக் கொடுக்க முடியும். இதற்குக் கணினித் தொழில் நுட்பம் தான் தேவை, அவசியம் என்று தொிகின்றது. கணினி காலத்தை வென்று நிற்கும் மிகப் பொிய அறிவியல். அது தான் நாட்டார் இலக்கிய வடிவம் மற்றும் நிகழ்த்துக்கலை, கலைஞர்கள் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கின்ற பெட்டலகமாகத் திகழும் என்பதை உணர்ந்து கொண்டு அனைவரும் செயலாற்ற வேண்டும்.
தொகுப்புரை
நாட்டார் இலக்கியம் மிகப் பெரிய களமாகத் திகழ்கின்றது. இவை, கிராம மக்களின் வாழ்வியல் கூறுகளை எடுத்தியம்புகி;ன்றன. நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை, சடங்குமுறைகள், பழக்கவழக்கங்களை இலக்கியங்களில் பதிவு செய்கின்றன. இவை, பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் வெளிப்படுத்துகின்ற பாடல்களாகவும் கதைப் பாடல்களாகவும் அவர்களின் வாழ்வில் பயன்படுத்துகின்ற பழமொழியாகவும் விடுகதையாகவும் வெளிப்படுகின்றன. தற்காலத்தில் அதன் அழிவும் தொடங்கிவிட்டது என்று கூறலாம்.
எதிர் கால மக்கள் பயன்படுத்தும் விதத்தில் கணினிப் பெட்;டகம் என்று ஒன்றை ஏற்படுத்தி, நாட்டார் இலக்கியங்களை இணையத்தில் சேர்க்க வேண்டும். நவ நாகரிக காலத்தில் இணையத்தில் கலை நிகழ்ச்சிகள் யாவும் பதிவு ஏற்றம் செய்யப் பட வேண்டும். இலக்கியங்கள் வாய்மொழியாகப் பாடும் போது, அதனைப் பதிவு செய்து இணையத்தில் வழியாக, எதிர்கால ஆய்வாளர்களுக்குச் சேர்க்க வேண்டிய முக்கிய பங்கு அனைவருக்கும் உள்ளது. கணினித் துறை சார்ந்த வல்லுநர்கள் இதற்கெனத் துணை நிற்க வேண்டும். கணினித் தொழில் நுட்பத்தை ஆய்வாளர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நவீன காலத்தில் கணினித் தொழில் நுட்பத்தின் வழியாக எதிர்கால மக்களுக்கு நாட்டார் இலக்கியம் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்கால மக்களுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் பற்றிய வரலாறு தொிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டுரை நிறைவுரை அமைகின்றது.
துணைநின்ற நூல்கள்
1. லூர்து, தே., நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு
மையம், பாளையம்கோட்டை, 2000.
2. லூர்து, தே., நாட்டார் வழக்காறுகள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1988.
3. ரெஜித்குமார், த., நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 – பி, சிட்கோ
இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, 2020.
4. ஸ்டீபன், ஞா., தமிழ்ச்சமூகத்தில் வாய்மொழிக் கதைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை,
2009.
துணை நின்ற இணைய தளங்கள்
1. sorkuvai.com
3. http://tamilvu.org/ta/courses-degree-a061-a0611-html-a0611113-10311