திருமதி பெ.ஆனந்தி,
உதவிப்பேராசிரியர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி,
தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி. தமிழின் இனிமையையும் சிறப்பினையும் உணர்ந்தவா்கள் அதனை பல காலம் சீரோடும் சிறப்போடும் போற்றத் துணிந்தனர். தமிழ் மொழியின் வளமைக்குச் சான்றாவன அம்மொழிக்கண் தோன்றிய இலக்கிய இலக்கணங்களே ஆகும். “இணையப் பயன்பாட்டில் தமிழ்மொழி இரண்டாவது இடத்தைப் பெற்று வளர்ந்து வருகிறது.”1 தமிழின் தொன்மையைப் பறைசாற்றும் இலக்கிய வளங்களை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு தொழில்நுட்ப ஆர்வலர்கள் அரிதின் முயன்று செய்தமை மின்னூலாக்கம் ஆகும். தமிழ் நூல்களை மின்னூல்களாக வாசிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் உறுதுணையாய் இருக்கும் இணையத் தளங்கள் குறித்து விளக்கும் வகையில் இக்கட்டுரை அமையப் பெறுகின்றது.
தமிழ் நூல்களை மின்னூலாக்கும் முயற்சி
தொட்டுஉணர்ந்து புத்தகவடிவில் படித்த நூல்களை, வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளமைக்கேற்ப கணினியிலும் கையடக்கப் பேசிகளிலும் மென் திரைகளிலும் கண்டு ரசித்து வாசிக்கும் போக்கு வளர்ந்துள்ளது. ”பதிப்பகங்களில் புத்தகம் வெளியிடுகையில், வியாபாரம் உள்ளிட்ட காரணங்களால் நூல் வெளிவரத் தாமதமாகலாம். மின்னூல்களுக்கு அப்படியில்லை. எழுதும் ஆர்வமும் எழுத்துப் பயிற்சியும் இருந்தால், எவரும் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடமுடியும்”.2 தமிழ்நூல்வளமையை வரலாற்றாக்கும் முயற்சியில் மின்னூலாக்க முறைமை தோன்றியது. நல்ல புத்தகத்தைத் தேடி அலைந்து பணம் கொடுத்து வாங்கி படித்த நிலைமையை மாற்றி, நல்ல புத்தகங்கள்பல எளிமையாய் இருக்கும் இடத்திலிருந்தே உலகின் எந்த மூலையிலிருந்தும் வாசிக்கும் விதமாய் எழுந்ததே மின்னூலாக்கத் திட்டமாகும்.
இலவசத் தமிழ் மின்னூல் தளங்கள்
தமிழில் மின்னூல்கள் பல தன்னார்வ நபர்களாலும் இணைய நிறுவனங்களாலும் பதிவேற்றம் செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக இலவசமாகத் தரப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இலவசமாகத் தமிழ்மின்னூல்களைத் தரவிறக்கம் (Download) செய்துகொள்ளப் பயன்படும் இணையத் தளங்களாக,
- நூலகம் ( www.noolaham.net)
- மதுரைத்திட்டம் (www.projectmadurai.org/pmworks.html,)
- தமிழ் இணையக் கல்விக் கழகம்( www.tamilvu.org/library/libcontnt.htm )
- தமிழ் மரபு அறக்கட்டளை நூலகம்
(http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html)
- கூகுள் புத்தகம் (https://books.google.com/)
- ஃப்ரீதமிழ்இபுக்ஸ்.காம் (https://freetamilebooks.com/)
- நீச்சல்காரன்.காம் ( https://oss.neechalkaran.com/books/ )
- சென்னை நூலகம் ( www.chennailibrary.com )
- தமிழ்ஃப்ரீபிடிஎஃப்புக்ஸ் ( https://tamilfreepdfbooks.blogspot.com/ )
போன்றவற்றைச் சுட்டலாம். இந்த இணைய தளங்களில் பல்லாயிரக் கணக்கான தமிழ் நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு வாசிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் ஏற்ற வகையில் இடம்பெற்றுள்ளன. மின்னூல்கள் பி.டி.எப்(pdf), இணைய வெளியீடு(html), உலகத்தரமான இபப்(epub) மற்றும் மொபி(mobi) போன்ற பல்வேறு அமைப்புகளில் வெளியிடப்படுகின்றன.
நூலகம் ( www.noolaham.net)
தமிழ் மின்னூல் பதிவிறக்கத் தளங்களில் நூலகம் எனும் தளத்திற்குத் தனியிடம் உண்டு. இலங்கைத் தமிழ் நூல்களையும் ஆவணங்களையும் பாதுகாத்து இணையவழித் தந்திட முனையும் ஓர் இலவசத்தளம் இது. இத்தளத்தில் ஏறக்குறைய 1லட்சத்து 44ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் வகையில் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
மதுரைத்திட்டம் (www.projectmadurai.org/pmworks.html)
1998 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஏராளமான தமிழ்நூல்களை மின்னூலாக்கித் தருவதில் ஆர்வம் செலுத்திவரும் திட்டம் மதுரைத்திட்டமாகும். ‘முனைவர் கே.கல்யாணசுந்திரம், முனைவர் பி.குமார் மல்லிகார்ஜுணன் ஆகிய இரு தன்னார்வர்களின் சீரிய முயற்சியால் உருவான தன்னார்வ (voluntary) முயற்சியாகும்.” 3கணினியில் கன்னித்தமிழை வளப்படுத்தும் இவ்அரிய முயற்சியில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் நூல்கள் இணைய வடிவில் இலவசமாக வாசிக்கவும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
தமிழ் இணையக் கல்விக் கழகம் ( www.tamilvu.org/library/libcontnt.htm )
தமிழுக்குத் தொண்டாற்றும் இணைய நிறுவனங்களில் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்குச் சிறப்பிடம் உண்டு. இவ்இணையப் பக்கத்தில்,
- நூல்கள்
- அகராதிகள்
- நிகண்டுகள்
- பிறமொழியில் தமிழ் நூல்கள்
- கலைக் களஞ்சியங்கள்
- கலைச்சொல் தொகுப்புகள்
- சுவடிக் காட்சியகம்
- பண்பாட்டுக் காட்சியகம்
- நாட்டுடைமை நூல்கள்
எனப்பல்வேறு பிரிவுகளின் கீழ் மின்னூல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.அரசால் பொருளுதவி செய்யப்படும் இக்கழகத்தின் மின்நூலகத்தில் இதுவரை 24,500க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு இலவசத் தரவிறக்கத்திற்குத் தரப்பட்டுள்ளன. இலசவ தமிழ் மின்னூல்களின் பட்டியலைக் காண பின்வரும் இணைப்பு பயன்படும்.(https://drive.google.com/file/d/10qYayZl_8ylPm3Jh4PsBs9xcLi6FIzcf/view?pli=1)
தமிழ் மரபு அறக்கட்டளை நூலகம்
(http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html)
தமிழ்மரபு அறக்கட்டளை தொண்டூழிய நிறுவனம் தமிழ்மரபிற்குத் தன்னாலாகிய பல முயற்சிகளைச் செய்து வருகிறது. இவ்அறக்கட்டளை சார்பாக
- மரபுச் சேதி: (Heritage News)
- மரபின் குரல்: Heritage Tunes
- மரபுச் சுவடு: Image Heritage
- தமிழ் நிகழ் கலை : Waiting Room (video show)
என்ற பெயர்களில் வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழுக்கும் தமிழ்மரபினைப் பாதுகாக்கவும் அரிதின்முயன்று வரும் இவ்அறக்கட்டளையில் 480 க்கும் மேற்பட்ட தமிழ் மின்னூல்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கூகுள் புத்தகம் (https://books.google.com/)
Search the world’s most comprehensive index of full-text books என்ற நோக்கத்தோடு கூகுள் நிறுவனத்தாரால் வெளியடப்படும் கூகுள் புத்தகம் எனும் இணையப் பக்கமானது தமிழ் நூல்களின் மின்பதிப்புகளில் இடம்பெற்றிருக்கும் ஒரு சொல்லைக் கண்டறியப் பயன்படுகிறது. அதாவது ஒரு சொல் தொடர்பாக நமக்குத் தேவையான தரவுகள் எந்தெந்தப் புத்தகங்களில் எந்தப் பக்கங்களில் இருக்கின்றன என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டும் தளமாக செயல்படுகின்றது. இத்தளத்தில் நாம் தமிழ் மின்னூல்களை இலவசமாக வாசிக்க இயலும்.
ஃப்ரீதமிழ்இபுக்ஸ்.காம் (https://freetamilebooks.com/)
தமிழில் மின்னூல்கள் படிப்போரின் மிகச் சிறந்த கவன ஈர்ப்புத் தளமாக ஃப்ரீதமிழ்இபுக்ஸ் இணைய தளம் திகழ்கிறது. அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், வரலாறு தொடர்பான பல தமிழ் மின்னூல்கள் இத்தளத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க ஏதுவாக epub வடிவிலும் புது கிண்டில் கருவிகளில் படிக்க mobi வடிவிலும் குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க A4PDF வடிவிலும் பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க 6 inchPDF வடிவிலும் மின்னூல்களைத் பதிவிறக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நீச்சல்காரன்.காம் ( https://oss.neechalkaran.com/books/ )
தமிழுக்குத் தொண்டாற்றத் துணிந்த நபர்களுள் நீச்சல்காரன் என்ற எஸ்.இராஜாராமன் தேர்ந்தெடுத்த பாதை சற்று வித்தியாசமானது. தமிழில் பல இலக்கியங்களை எழுதியோ தமிழ்மொழிக்காகப் போராடியோ தம்மொழிப் பற்றை வெளிப்படுத்தியவா்கள் மத்தியில் தன் கணினி அறிவினை மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்த துணிந்தவா் நீச்சல்காரன். இவர் தனது சொந்த முயற்சியில்
- மென்கோலம்
- கோலசுரபி
- ஆடுபுலிஆட்டம்
- நாவி தமிழ் சந்திப்பிழை திருத்தி
- வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி
- எதிர்நீச்சல் வலைத்தளம்
- விக்கி உருமாற்றி
போன்ற பல்வேறு இலவச செயலிகளைக் கண்டுபிடித்துக் கணினித்தமிழ் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர்தம் நீச்சல்காரன் இணையதளத்தில் மின்னூலாக்கப்பட்ட தமிழ் நூல்கள் ஏறக்குறைய 28,400க்கும் மேற்பட்டவை பொதுமக்களின் தேவைக்கு இலவசமாக வாசிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் தரப்பட்டுள்ளன.
சென்னை நூலகம் ( www.chennailibrary.com )
சென்னை நெட்வொர்க்.காம் என்ற தளத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை நூலகம் என மாற்றப்பட்ட இவ்இணையதளம் சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவாக்கப்பட்டது. இத்தளத்தில் ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் தரப்பட்டு அவா்தம் நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. விரும்பும் புத்தகங்களை இவ்இணையதளத்தில் இலவசமாக வாசிக்கலாம். ஆனால் பதிவிறக்கம் செய்வதற்கு நாம் புரவலா் கட்டணமோ அல்லது உறுப்பினர் கட்டணமோ செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய நபர்களால் மட்டுமே தரவிறக்கம் செய்ய இயலும்.
தமிழ்ஃப்ரீபிடிஎஃப்புக்ஸ் ( https://tamilfreepdfbooks.blogspot.com/ )
படைப்பாளரின் பெயர்ப்பட்டியல் கொடுத்து அவா்தம் புத்தகங்களை நிரல்படுத்தி இருக்கும் இத்தளத்தில் நூற்றுக்கணக்கானத் தமிழ் மின்னூல்கள் வாசிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தளம் முழுமையும் கட்டணசேவை கொண்டதாகும்.
முடிவுரை
தமிழ்க் கணிமை வளத்திற்காக அரசும் பல்வேறு தன்னார்வலா்களும் தொண்டுநிறுவனங்களும் எடுத்துவரும் முயற்சியால் பல தமிழ் நூல்கள் மின்னூலாக்கம் பெற்றுள்ளன. மின்தமிழ்நூல்களைப் படிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் இளைய தலைமுறையினர் மிகுஆர்வம் கொண்டு வருதல் சிறப்பு. இலசவமாகவும் கட்டண சேவையுடனும் தமிழ் மின்னூல்களைப் பதிவிறக்கம் செய்ய உதவும் தளங்கள் தமிழர்தம் நூல்தேடல் முயற்சிக்குப் பெரும் விருந்தே ஆகும். இணையத் தமிழினை வரலாற்று ஆவணமாக்க செய்யப்படும் இவ்அரிய முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவையே ஆகும்.
சான்றெண் விளக்கம்