முனைவர் சி.தேவி
உதவிப்பேராசிரியர்
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
ஆய்வுச்சுருக்கம்
தமிழ் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழ்ப் படைப்புக்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டன. இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பொழுது ஏற்படும் இடற்பாடுகளைக் களைய பல செயலிகள், மென்பொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் பல மொழிக்கலப்பு ஏற்பட்டு மொழியின் தன்மை கெட்டுப்போவதோடு மட்டுமல்லாமல், சந்திப்பிழைகளும் இன்று மலிந்துவிட்டன. பிழையின்றி எழுதும் ஆற்றல் குறைந்துவிட்டது. சந்திப்பிழை பொருட்பிழை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். சந்திப்பிழைகளை அகற்றுவதற்கு “நாவி“ என்ற மென்பொருளும், எழுத்துப்பிழைகளை அகற்ற ”வாணி” என்ற மென்பொருளும் உதவியாக உள்ளன. நாவி பிழைதிருத்தியின் செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.
திறவுச்சொற்கள்
மொழிக்கலப்பு – சந்திப்பிழைகள் – சந்திப்பிழைதிருத்தி – நாவி – வாணி – சுளகு – நாவுதல்.
Abstract
Tamil works were uploaded on the internet for the benefit of all Tamil people. Many applications and software have been found to eliminate the errors that occur while uploading to the Internet. Apart from the deterioration of the character of the language due to the many intermingling of the Tamil language, the dialects have also become corrupted today. The ability to write without error has decreased. Interference can lead to material error. Software “Navi” is helpful for removing spelling mistakes and software “Vani” is helpful for removing typos. The functions of the Navi Debugger are explained.
ஆதித்தமிழனின் படைப்புகள் அனைத்தும் ஓலைச்சுவடிகளிலிருந்து உ.வே.சா அவர்களின் பெருமுயற்சியினால் அச்சாக்கம் பெற்றது. இயல், இசை,நாடகம் என்று முத்தமிழாய் இருந்த நிலை வளர்ச்சியடைந்தது.
முத்தமிழோடு கணினியும் அறிவியலும் இணைந்து ஐந்தமிழாய் விரிந்து நின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த பிறகு தமிழ்ப் படைப்புகள் அனைத்தும் கணினியில் தரவேற்றம் செய்யப்பட்டன. எத்திசையும் புகழ்மணக்க இருந்துவரும் தமிழ்மொழி , தமிழகம் தாண்டி உலகளவில் பல நாடுகளிலும் வழக்கிலுள்ளது. அந்நிய தேசத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழ்ப் படைப்புக்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பட்டன.
இணையத்தில் பதிவேற்றம் செய்யும்பொழுது ஏற்படும் இடற்பாடுகளைக் களைய பல செயலிகள், மென்பொருட்கள் கண்டறிப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் பல மொழிக்கலப்பு ஏற்பட்டு மொழியின் தன்மை கெட்டுப்போவதோடு மட்டுமல்லாமல், சந்திப்பிழைகளும் இன்று மலிந்துவிட்டன. பிழையின்றி எழுதும் ஆற்றல் குறைந்துவிட்டது.
” நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன் வாழ்வு
இல்லந் தொறும்மூன்று எரியுடைத்து – நல்லரவப்
பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டிய நின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்” என்னும் ஔவையார் பாட்டின் இறுதியடிச் சொற்றொடரைத் தழுவி, நல்ல தமிழ் எழுத வேண்டுமா? எனும் நூலை எழுதியதாகப் பதிவிட்டுள்ளார் அ.கி.பரந்தாமன் அவர்கள். அவர் வழியில் நின்றவராய் நீச்சல்காரன் என்பவர் கணினியில் பயன்படும் பிழைதிருத்தியை உருவாக்கித் தந்துள்ளார்.
க், ச், த், ப் ஆகிய வல்லின ஒற்றுகள் மிகுந்து வர வேண்டிய இடங்களில் மிகாமலும், மிகக்கூடாத இடங்களில் மிகுந்தும் வருமாறு எழுதுவது சந்திப்பிழை என்றழைக்கப்படுகிறது. வல்லினம் மிகும் இடங்களையும் மிகா இடங்களையும் தெரிந்து கொண்டால் சந்திப்பிழை ஏற்படாமல் எழுத முடியும். சந்திப்பிழை பொருட்பிழை ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
இன்று பலருக்குத் தமிழில் எழுதுவதும், படிப்பதும் குதிரைக்கொம்பாக உள்ளது. இந்நிலை நீடித்தால் மெல்லத் தமிழினிச் சாகும் என்ற நிலை வருவது உறுதி. ஆங்கிலத்தில் இருப்பது போலப் பிழை திருத்தும் வசதி தமிழ் மொழிக்கு இல்லாதது பெரிய குறையாகயிருந்தது. தற்போது தமிழில் சில பிழைதிருத்தி மென்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. சந்திப்பிழைகளை அகற்றுவதற்கு “நாவி“ என்ற மென்பொருளும், எழுத்துப்பிழைகளை அகற்ற ”வாணி” என்ற மென்பொருளும் உதவியாக உள்ளன.
இணையத்தில் தமிழின் வளர்ச்சியைச் செம்மைப்படுத்த,
1.நாவி – தமிழ்ப்பிழைதிருத்தி
2. கிரந்தம் -நீக்கி
3. வாணி-எழுத்துப்பிழை திருத்தி
4. நோக்கர் – பிழை அறிக்கை
5. அகராதி – தமிழ் ஒருங்கிணைந்த தேடல் தளம்
6. சுளகு – தமிழ் எழுத்தாய்வுக்கருவி
7. ஓவன் – தமிழ் ஒருங்குறி மாற்றி
8. மென்கோலம் – பல்குறியிட்டுத் தமிழ் எழுதி என்ற மென்பொருட்கள் உதவியாக உள்ளன எனலாம்.
நாவி தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி
கணினியில் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் சந்திப்பிழைகளைத் திருத்தம் செய்து கொடுக்கும் நாவி மென்பொருளை “நீச்சல்காரன்” என்ற புனைபெயருடைய திரு. இராஜாராமன் அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு “நாவி தமிழ் சந்திப்பிழை திருத்தி” என்று பெயரிட்டுள்ளார். நாவி மென்பொருள் மரபுப் பிழைகளையும் சரி செய்யும் திறன் படைத்தது. நாவியை வலைத்தள இடைமுகத்தினூடாகப் (interface) பயன்படுத்த முடியும். கணிக்கமுடியாத வார்த்தைகளுக்கு ஏற்ற இலக்கண விதிகளைச் சுட்டிக்காட்டும் பணியையும் சிறப்பாகச் செய்கிறது.
நாவியில் உள்ளிட வேண்டிய வாக்கியத்தை ஒருங்குறியில் தட்டச்சு செய்த பின் ஆய்வுசெய் என்பதை அழுத்தினால், பிழைகள் திருத்தம் செய்யப்படும்.
1. வலி மிகுமிடம், மிகா இடங்களில் உள்ள பிழைகள் சுட்டிக்காட்டப்படும்.
2. ஆய்வு செய்து காட்டும் பகுதியில் வலி மிகுமிடங்கள் பச்சை நிறத்திலும், வலி மிகாத இடங்கள் சிவப்பு நிறத்திலும், சந்தேகத்திற்குரிய சொற்கள் தடித்த வடிவத்திலும் இருக்கும். அச்சொற்களைச் சொடுக்கினால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
மென் பரிந்துரை கூடுமானவரை பிழையின்றிக் காணப்படும். சந்தேக வார்த்தைகளைக் கீழே கொடுக்கப்படும் விதிமுறைகளைப் படித்து நாம் நமக்கு விருப்பமான வார்த்தையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இறுதியாக “சம்மதம்” என்கிற பொத்தானை அழுத்தினால் வாக்கியங்கள் திருத்தப்பட்டிருக்கும். இம்முறை பிழைகளைத் திருத்தவும், தமிழைப் பிழையறக் கற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும்.
வாணி தமிழ் எழுத்துப் பிழை திருத்தி
இணையவழியில் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வாணி என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தி உருவாகியுள்ளது. புணர்ச்சி விதிகளை மட்டும் பின்பற்றி இந்தச் செயலி கட்டமைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மற்றும் நன்னூல் இலக்கண நூல் விதிகளுக்குட்பட்ட வேர்ச்சொற்களை கணனி தானாகவே திருத்தம் செய்து கொடுக்கும் வகையில் வாணி எழுத்துப் பிழை திருத்திச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாவி பிழைதிருத்தியும் வாணியும் செயல்பாட்டு முறையில் ஒத்த தன்மையுடையதாகக் காணப்படுகின்றன எனலாம். மென்கோலம் என்பது ஒரு வரைகலைக் கருவி. நாம் கொடுக்கும் தமிழ்ச் சொற்களைக் குறியீடுகளின் மூலம் வரைந்து கொடுக்கும் மென்பொருள் ஆகும்.
கோலசுரபி என்னும் கோலம் வரையும் செயலி ஒன்றும் பெண்களுக்குப் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுளகு என்னும் மென்பொருள் யாப்பு இலக்கணத்தைக் கண்டறிய, பாடலைச் சரியாகச் சீர்பிரித்து வாசித்தறிய உதவியாக உள்ளது.
நாவி செயல்பாட்டு முறை
முகப்பு பக்கம்
உள்ளீடு
முடிவு
விதிகளுடன் கூடிய ஆலோசனை
தொகுப்புரை
பாவாணர் நாவுதல் என்றால் கொழித்தல் என்று பொருள் தருகின்றார். அரிசி நாவுதல் என்ற சொல் நம் வழக்கில் உள்ளதை இதற்குச் சான்றாகக் கூறலாம். நாவுதல் என்பது தானியத்தில் உள்ள குப்பைகளை நீக்கிச் சுத்தம் செய்யும் பணியாகும். அதுபோலத் தமிழின் பிழைகளை அகற்ற உதவும் நாவி பிழைதிருத்தி மூலம் பிழைதிருத்தம் செய்து, பிழையற்ற தமிழ் எழுதுவோம். தமிழ் வளர்ச்சிக்கு நாவியைப் பயன்படுத்துவோம்.
குறிப்புகள்
1. நல்ல தமிழ் எழுதவேண்டுமா? – அ.கி. பரந்தாமன். (முன்னுரை), அல்லி நிலையம், சென்னை.
2. தமிழ்த்தாய், பாரதியார் கவிதைகள், ப. 433 பாவை ப்ப்ளிகேஷன்ஸ், சென்னை.
3. https://ta.wikipedia.org › wiki › நாவி
4. https://groups.google.com/g/mintamil/c/xQCb2s7R8Q4/m/wCEBtQNw97sJ