கி ராஜ்குமார்,
அன்னை இந்திரா குடியிருப்பு,
அளவா கோட்டை, சிவகங்கை மாவட்டம்
முன்னுரை:
மக்கள் தம் தேவைகளை நிறைவு செய்ய பழைய காலம் தொட்டு புதிய இலக்கிய உத்திகள் மலர்ந்தும் செழித்தும் வந்துள்ளன. அதிலும் இன்ப நுகர்ச்சியைச் சுவைபடச் சொல்லுவதில் சிற்றிலக்கியங்கள் போட்டியிட்டன அத்தகையச் சிற்றிலக்கியங்கள் வரிசையில் இன்று வயது வேறுபாடு இன்றி மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஓர் வாய்மொழி இலக்கியமாக வலைத்தளங்களில்(Youtube) வளர்ந்துள்ளது “கதைச் சொல்லிகள்”. இன்னும் சில நூற்றாண்டுகள் இவ்வகை இலக்கியங்கள் நிலைத்து செழித்து வளர உள்ளது. குறிப்பாக திரைத்துறை சார்பாய்க் கிளர்ந்து இருந்தாலும் தனக்கெனத் தனி இடத்தைப் பெற்று மிளிருகின்றது. மக்களால் போற்றப்படும் இக்கதைச் சொல்லிகள் சிற்றிலக்கியக் கூறுகளை உடையது என்பதை நிறுவுவதும் மொழியை அடுத்த தலைமுறைக்கு சுவை பட எடுத்துச் செல்லும் ஊர்தியாகக் கைக்கொள்வது பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கதைச் சொல்லிகள்:
காலந்தோறும் தங்கள் வாழ்வியல்களை அனுபவங்களைக் கதைகளாகச் சொல்லி அடுத்த தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கடத்துவது மனித நாகரிகத்தோடு தொடர்புடையதாக உள்ளது. பண்டைய மனிதர்களின் அழகியலை புனைவுத்திறனால் மெருகூட்டி காட்டுவதில் கதைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
காலந்தோறும் சூழலுக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் ஏற்ப பிறக்கும் இலக்கியங்களில் பொருண்மையாலும் வடிவமைப்பாலும் ஒத்து விளங்கும் பல்வேறு இலக்கியங்களை குறிப்பிட்ட ஒரே வகை இலக்கியங்கள் என மொழியலாம்.
இன்றைக்கு கிடைக்கும் மலிவான ஊடகமான வலைத்தளத்தைக் கொண்டு கதைச்சொல்லிகள் எனும் இலக்கிய வகை மலர்ந்திருக்கிறது. இது சிறுகதை, குறுநாவல், நாவல், நாடகம், திரைப்படம் போன்று மொழியில் தோன்றியுள்ள தனித்த இலக்கிய வகையாக வளர்ந்து வருகிறது. தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களைப் போல கதைச் சொல்லிகளும் சிற்றிலக்கியமாக கொள்ளலாம்.
இலக்கியப் பொருத்தம்:
‘பாட்டிடை வைத்த குறிப்பினானும்
பாவின் றெழுந்த கிளவி
யானும்
பொருளொடு புணராப் பொய்ம் மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகை மொழி யானுமென்
றுரை வகை நடையே நான்கென மொழிப’
தொல்.செய்.485.
இந்நூற்பாவில் உரை வகை நான்கு என சொல்லி இருக்கிறார். எழுத்து என்பது எழு- என்னும் சொல்லடியாகப் பிறந்து எழுப்பப்படுவது எழுத்து, எழுதப்படுவது -எழுத்து என தன் இரு வடிவத்தையும் குறித்தல் போல உரை என்பது ‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்ற வகையில் உரை என்பது செய்யுளுக்கு இடையே எழுதப்படுவது எனவும், உரைத்தல்- என்ற வடிவில் சொல்லுதலையும் பொருளாய் தருவதைக் கொண்டு மேலே கண்ட சூத்திரத்தால் உரைவகை நடை நான்கில், மூன்றாவது வகையான
‘பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்’
என்ற வகையில் கதைச்சொல்லிகள் அடங்கி விடுகிறது.
சூத்திரத்திற்கு உரை எழுதிய பேராசிரியர்’ ஒரு பொருளன்றிப்பொய்படத் தொடர்ந்து சொல்வன. அவை “ஓர் யானையுங் குரீஇயுந் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக்கியையாப் பொருள்படத் தொடர் நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் வருகின்றன” என்று உரை எழுதியுள்ளார்.
” அதுவே தானும் ஓரிரு வகைத்தே” தொல்.செய்.486.
எனும் நூற்பாவின் மூலம் உரை வகை நான்கினை இரு கூறாக(2×2) பகுத்துக் காட்டுகிறார்.
அவை,
முதல் வகை
‘பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்’
இரண்டாவது வகை
‘பொருளொடு புணராப் பொய்ம் மொழியானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்’
இவ்வாறு இரண்டாகப் பகுக்கப்பட்ட உரை வகை நான்கில்
“ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே
யொன்றே யார்க்கும் வரைநிலை யின்றே” தொல்.செய்.487.
எனும் நூற்பாவின் மூலம் முதலாவதாகப் பகுக்கப்பட்டது செவிலிக்கு உரியதாக வரையறுத்து இரண்டாவதாகப் பகுக்கப்பட்ட இருவகை வரையறை இன்றி எல்லோருக்கும் உரியது என்றுச் சொல்லுகிறார். இதன் வழி தொல்காப்பியம் உரைக்கும் உரைவகை கதைச் சொல்லிகளுக்குப் பொருந்துகிறது.
இலக்கியத் தோற்றத்தில் ஊடகங்கள்:
தாள்களின் வருகையால் மலிந்த உடன் உரைநடை தோன்றி வளர்ந்து சிறுகதை, குறுநாவல், நாவல் என மொழிகூறுகளுள் அடங்கும் புதிய வகை இலக்கியங்கள் தோற்றம் பெற்று மக்களால் போற்றப்பட்டன. இன்று அவ்வகையான வாசிப்பு தளங்கள் விரிவடைந்து தாளில் இருந்து இணைய தளத்திற்கு மாறிவிட்டது. வானொலி தோன்றிய பிறகு ‘கதைச் சொல்லிகள்’ இலக்கியத் தரத்தை நோக்கி நகர்ந்த போதிலும் காட்சிக்கேள்வி ஊடகங்களின் வளர்ச்சி வானொலியைப்பின்னுக்குத் தள்ளி விட்டது. படப்பிடிப்பும் ஒளிபரப்பும் வந்த பிறகு முத்தமிழில் ஒன்றான நாடகம் வளர்ச்சி பெற்று திரைப்படங்களாக மொழியை மக்களிடம் ஒருங்கிணைத்துக் கொண்டு சென்றது. வளர்ந்து வரும் மனித சமுதாயத்தில் வலைத்தளங்களின் மலிவு, தொடுதிரை அலைபேசிகளின் பெருக்கமும் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்கும் முழுமையான திரைப்படங்கள், நாடகங்களை காணும் மனநிலையைக் குறுக்கி உள்ளது. வேற்று மொழி படங்களைக் காண மொழிச் சிக்கலும் உள்ளதால் இவ்வகையான சூழலைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ‘கதை சொல்லிகள்’ வளர்ந்து மக்களிடம் மிகுந்த செல்வாக்கையும் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.கதைச் சொல்லிகள் புதிய சிற்றிலக்கியம் என்றால் அது மிகையாகாது.
கதைச் சொல்லிகளின் வகைகள்:
- தொன்மைக் கதைகள்
- இலக்கியக் கதைகள்
- மொழிப்பெயர்ப்புக் கதைகள்
- மொழிப்பெயர்ப்பு நாடகங்கள்
இதுபோன்ற வளத்தினை ‘கதைச் சொல்லிகள்’ தேர்வு செய்கின்றன.
தொன்மக்கதைகளைப் பொருத்தமட்டில் நம் நாட்டில் வழக்கில் உள்ள பாரதம், இராமாயண கதைகளும் அவற்றில் வரும் கிளை கதைகளும் ‘கதைச் சொல்லிகளில்’ காணப்படுகின்றன.
சான்றாக
நளதமயந்தி கதை -1.6 M பார்வைகள் /24000 விருப்பங்கள் /1300 கருத்துரைகளைப் பெற்றுள்ளது.
இலக்கிய கதைகள்:
கதைச் சொல்லிகளில் காணப்படும் தமிழ் இலக்கிய கதைகளும் தமிழ் மக்களால் பெரிதும் கேட்கப்படுகிறது போற்றப்படுகிறது.
சான்றாக
- மணிமேகலைக் கதை- 2.8 M பார்வைகள்/44000 விருப்பங்கள்/2500 கருத்துரைகள் பெற்றுள்ளது.
- குண்டலகேசி கதை 1.2 M பார்வைகள்/20000 விருப்பங்கள்/1300 கருத்துரைகள்
- சீவக சிந்தாமணி கதை பாகம் 1 , 1.1M பார்வைகள்/ 19000 விருப்பங்கள்/1000 கருத்துரைகள்
- .ஆய் அண்டிரன் கதை 154K பார்வைகள்/4700 விருப்பங்கள்/710 கருத்துரைகள்
- கோப்பெரு நள்ளி கதை 133K பார்வைகள் /2900 விருப்பங்கள் /412 கருத்துரைகள்
மொழி பெயர்ப்பு கதைகள்:
மொழிபெயர்ப்புக் கதைகளில் வேற்று மொழி திரைப்படங்களின் கதைகள் கதைச் சொல்லிகளால் தேர்வு செய்யப் பட்டு சொல்லப்படுகின்றன.
சான்றாக
- 1.The secret: Date to Dream-2020 1.5 M பார்வைகள்/51k விருப்பங்கள்/2.6k கருத்துரைகள்
- 2.THE TIME MACHINE 1.4M பார்வைகள்/50000 விருப்பங்கள்/607 கருத்துரைகள்
- ஒரு பலாப்பழத்தின் கதை 553K பார்வைகள்/13K விருப்பங்கள்/444 கருத்துரைகள்
- 4.Mukundan unni associates 2022-479k பார்வைகள்/15k விருப்பங்கள்/744 கருத்துரைகள்
மொழிபெயர்ப்பு நாடகங்கள்:
கதைச் சொல்லிகள் கூறும் கதைகளில் கொரிய சீன ஜப்பானிய மொழிகளில் தொடர்களாக வெளிவந்த நாடகங்களின் கதைச்சுருக்கங்கள் தமிழ் மக்களின் அதிக பார்வையை பெற்றுள்ளன.
சான்றாக
- 1.Most Popular guy…. 284 k பார்வைகள்/7.2K விருப்பங்கள்/200 கருத்துரைகள்
- 2.Soul switched 19356 பார்வைகள்/2.2K விருப்பங்கள்/83 கருத்துரைகள்
இலக்கியத் தன்மை:
ஒப்புமை கூறவும் கூற முடியாதனவும் ஆகிய கதை தேர்வுகளில் ‘பிசி’யும், அளவில் பெரிய கதையைச் சுருக்கி விளக்கிப் பொருளுடன் கதை முடிக்கும்போது ‘முதுமொழித்’ தன்மையும், மந்திர தந்திரங்கள் மாயாஜாலங்கள் நிறைந்த கதைகளைக்கூறும் இடத்து’ மந்திரமும்’, கதையை இடையிலேயே நிறுத்திப் பல்வேறு வகையான முடிவுகளைக் கேட்பவரையே தேர்வு செய்ய( முடிவு செய்ய) விடுகிறபோது ‘குறிப்பு மொழி’ எனத் தொல்காப்பியம் குறிப்பிடும் இலக்கியக் கூறுகள் கதைச் சொல்லிகளுக்கு மேலும் பொருந்துவதாக உள்ளது.
முடிவுரை:
இன்று உலகச் சுருக்கத்தால் அனைத்து மொழிகளிலும் தோன்றி வளர்ந்து வரும் கதைச் சொல்லிகள் தமிழில் இக்காலத்து சிற்றிலக்கியம் எனக் கொள்ளத்தக்கத் தகுதிகளைக் கொண்டுள்ளது. எனவே தமிழ் கூறும் நல்லுலகம் கற்பித்தலைப் பொதுச் சமூகத்திற்கு கற்பித்தல் எனும் தளத்தை நோக்கி நகர்த்த இந்தக் கதைச் சொல்லிகளைப் பயன்படுத்தி பரவலாக்கவும் தமிழ் சமூகத்திடமிருந்து தேவையான துலங்கள்களைப் பெறவும் இவ்விலக்கியம் பயன்படும். தமிழ் உலகத்தில் திரைத்துறை மூலம் அறியப்பட்ட ‘தாய்க்கிழவி’ என்னும் சொல் உருவாகியது இக்கதைச் சொல்லிகளில் தான்என்று கூறி நிறைவு செய்கிறேன்.
பார்வை நூல்கள்:
- தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம்; தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், ஆகஸ்டு 1951.
- பாட்டியலும் இலக்கிய வகைகளும், டாக்டர் ந.வீ.செயராமன். இலக்கியப் பதிப்பகம், மார்ச்சு 1981.
பார்வை வலைத்தளங்கள்
(பார்வை நாள்-09/11/2023)
- 1.APPLE BOX By Sabari
- 2.TAMIL VOICE OVER
- 3.Mr Tamilan 2.0
- 4.Mr Tamizhan
- 5.Dubz Tamizh
- 6.Mr Vignesh
- 7.MXT Dramas
- 8.SK Voice over dramas
- 9.K.Talk movies
இன்னோரன்ன……..
குறியீட்டு விளக்கம்
K-1000 m-1000000