பி. ஸ்ரீதேவி,
தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி),
ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி ,
சாத்தூர் – 626 203, தமிழ்நாடு
Abstract:
In the modern world protecting each and every creative work is essential. Copyright registration is essential as piracy technologies is rampant. Since the invention of computers, plagiarism has become a sophisticated technique. Hacking is going on through computers to the extent of stealing people’s knowledge. In this article, we will discuss in detail about information’s which are all has to be protected how to legally prevent or protect this knowledge theft that steals the unique creativity and self-thinking of others, and the need for copyright today.
.Keywords:
Copyright registration, Deep fake video maker, Advantages of copyright
ஆய்வுச்சுருக்கம்
நவீன உலகில் ஒவ்வொன்றையும் பாதுகாப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகும். தொழில்நுட்பங்களைத் திருடும் தொழில்நுட்பத்திருட்டுகள் பல்கிவிட்ட நிலையில் காப்புரிமைப் பதிவு பெறுவது இன்றியமையாத ஒன்று. அக் காப்புரிமைப் பதிவு எப்படிப் பெறுவது. கணிப்பொறி கண்டுபிடிப்புக்குப் பின் திருட்டு என்பது நூதனமான முறையில் செய்யக்கூடிய ஒரு தொழில் நுட்பமாகவே மாறிவிட்டது. மக்களுடைய அறிவைத் திருடக்கூடிய அளவிற்கு திருட்டுக்கள் கணிப்பொறியின் வழியாக நடந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக பிறரின் தனித்துவமான படைப்பாற்றலை, அவர்களின் சுயசிந்தனையை திருடும் இந்த அறிவுத் திருட்டை எப்படி சட்டபூர்வமாகத் தடுப்பது அல்லது பாதுகாப்பது என்பது குறித்தும், காப்புரிமையின் இன்றைய தேவை குறித்தும் இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
முக்கியச் சொற்கள்
காப்புரிமைப் பதிவு, டீப் ஃபேக் வீடியோ மேக்கர் டெக்னாலஜி , காப்புரிமைபெறுவதனால் கிடைக்கும் நன்மைகள்
முன்னுரை :
படைப்பாளர்களின் படைப்புகளையும், தயாரிப்புகளையும் பாதுகாப்பதெற்கென்றே காப்புரிமைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இக்காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாப்பதுவே இதன் முக்கியபணியாகும். இந்தியாவில் 1957 ஆம் வருடத்திலிருந்து இச்சட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் படி படைப்பாளர்களின் படைப்புக்கான அங்கீகாரம் மட்டுமல்லாமல் அவர்களின் படைப்புக்கான வெகுமதியையும் பெற்றுத்தரும். இப்பதிப்புரிமைக்கான ஆயுட்காலமாக அப்படைப்பாளியின் இறப்புக்குப் பின்னர் 60 ஆண்டுகாலம் கொடுக்கப்படுகிறது. இக்காப்புரிமைப் பதிவு குறித்தும், எந்தெந்த தொழிலுக்கு காப்புரிமை பெற முடியும், அதனால் கிடைக்கும் நன்மைகள், போன்ற காப்புரிமையின் இன்றைய தேவைகள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.
காப்புரிமைப் பதிவு ( Copyright Registration):
தொழில் முனைவோர்கள் அனைவரும் தங்களுடைய தொழில் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே, இந்தக் காப்புரிமை பதிவினை பெற்றுக் கொள்கிறார்கள். காப்புரிமை என்பது நம் சிந்தனையில் இருந்து உதிக்கக் கூடிய அத்தனை அறிவையும் பிறர் திருடவிடாமல் காப்பது என்று கூறலாம்.
இந்தக் காப்புரிமை பதிவினை செய்து கொள்வதன் மூலம் அது சட்டபூர்வமாக பாதுகாப்புப் பெறும். எந்த படைப்பு வேலைக்காக நாம் காப்புரிமைப் பதிவு செய்கிறோமோ, அந்தப் படைப்பு வேலை (Creative Work)முழுமையாக சட்டபூர்வமாக பாதுகாப்புப் பெறும். அதனை வேறு யாரும் திருட முடியாது.
எந்தெந்த தொழிலுக்கு காப்புரிமை வாங்க முடியும் என்பதனை இதில் காண்போம்.
1. இலக்கியப்பணி (Literary Work):
புத்தகங்கள்,சிறுகதைகள், நாவல், நாடகம், திரைக்கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள்,வலைத்தள உள்ளடக்கம் இவைகள் எல்லாமே இலக்கியங்கள் என்ற பிரிவில் காப்புரிமை வாங்க முடியும்.
2. இசைப்பணி ( Musical work):
ஒரு இசையமைப்பாளர் தயாரிக்கின்ற பின்னணி இசை, திரைபடங்களில் இருந்து சின்னத்திரை வரையில் அவர்கள் தயாரிக்கும் அனைத்து இசைகளுக்கும் காப்புரிமை பெற்றுக் கொள்ளலாம்.
3. கலைப்பணி (Artistic work):
வரைபடங்கள், ஓவியங்கள், கட்டிடக்கலை நிபுணர்கள் (Architecture) வரையும் கட்டிடப்படங்கள், வரை திட்டங்கள் (Architecture plans)
புகைப்படக் கலைஞரின் புகைப்படங்கள், இவையாவற்றிற்கும் கலைப்பணி காப்புரிமை பெறமுடியும்.
4.ஒளிப்பதிவுப்பணி (Cinematography Work):
காணொளிக்காட்சிகள், ஒளிப்பதிவு, குறும்படம், முழுநீளத் திரைப்படம், சமையல் குறிப்புகள், விளம்பரத் தயாரிப்பு, திரைவிமர்சனம் செய்து வீடியோவாக வெளியிடுவது இவையாவும் ஒளிப்பதிவுப்பணி காப்புரிமை பெறக் கூடியவை.
5. ஒலிப்பதிவுப் பணி ( Sound Recording Work):
இது ஒருவரின் குரல் பதிவாக அமையும். பாடல் பதிவு, போன்றவை இதில் அடங்கும்.
6. மென்பொருள் பணி (Software work):
கணினி மென்பொருள், கைபேசி பயன்பாடு இவையனைத்தும் காப்புரிமை பெறக்கூடிய தொழில்கள்
காப்புரிமைபெறுவதனால் கிடைக்கும் நன்மைகள் (Advantages of copyright):
ஒவ்வொரு படைப்புப் பணிக்கும் அதற்கான, காப்புரிமையைப் பெறுபவர் அந்தப் பணிக்கான உரிமையாளராகிறார். அவர் சமர்ப்பிக்கும் அந்தப் படைப்புப்பணியினை வைத்து அவருக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழே அவருக்குச் சட்டபூர்வமான ஆதாரமாக அமையும்.
காப்புரிமை பதிவேட்டில் யார் அந்தப் பணிக்காக காப்புரிமை பெற்றிருக்கிறார்களோ, அவர்தான் அதன் உரிமையாளர் என்ற பதிவும் வெளியிடப்பட்டிருக்கும். அவருடைய பெயர், அவருடைய பணி, இதற்கு இவர் தான் உரிமையாளர் என்ற பதிவு அதில் இருக்கும். இது ஒரு பொதுப்பதிவாக இருக்கும். வெளி உலகம் இதனை பார்க்கும் பொழுது இந்த பணிக்கு இவர் தான் உரிமையாளர் என்பதை எளிமையாக அடையாளம் கண்டு கொள்வார்கள்.
இதன் மூலம் உரிமையாளருக்கு சட்டப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும். உரிமையாளர் வெளியிடக்கூடிய கதை, திரைப்படம், ஒளிப்பதிவு, மென்பொருள் இது எதையுமே மற்றொருவர் எளிமையாக திருடி விட முடியாது. வேறு யாரும் உரிமையாளர் படைப்பைத் திருடினாலும் சட்டபூர்வமாக அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பிவிட்டு, நீதிமன்றத்தின் வாயிலாக உரிமையாளர் வழக்குத் தொடுக்க முடியும். இதன்பின்னர் உரிமையாளருக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு கிடைக்கும்.
இந்த காப்புரிமைச் சட்டத்தின்படி உரிமையாளர், திருட்டினை கண்டறிந்து வழக்குத் தொடரும் பொழுது நீதிமன்றத்தின் வாயிலாக திருடியவர்களிடமிருந்து ஒரு பெரிய இழப்புத் தொகையை உரிமையாளருக்கு நீதிமன்றம் பெற்று தரமுடியும். மேலும் உரிமையாளர்கள் தன் படைப்புகளை விரிவு செய்து ,அப் படைப்புகளுக்கு உண்டான ஊதியத்தைப் பெறுவார். பல்வேறு விதமான படைப்புவிரிவுப் பணிகளையும் அவரே செய்து அதன்மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
மேலும் தன் காப்புரிமை உரிமத்தை மற்றவர்களுக்கு வழங்கி அதன் மூலமாகவும் பணம் சம்பாதிக்கலாம்.இந்த முறைகளினால் அறிவுத்திருட்டை முற்றிலும் தவிர்க்கலாம்.
டீப் ஃபேக் வீடியோ மேக்கர் டெக்னாலஜி: (Deepfake video maker Technology)
ஒருவரின் சுய சிந்தனையில் சுய முயற்சியில் உருவான ஒரு காணொளி காட்சியை டீப் ஃபேக் வீடியோ டெக்னாலஜி மூலமாக, முகங்களை மட்டும் மாற்றி அவர்களுடைய கற்பனையையும் படைப்பாற்றலையும் அப்படியே உருவிக்கொண்டு புதியதாக ஒரு காணொளியை உருவாக்குகிறார்கள். இப்படி உருவாக்கி வலைதளங்களில் பதிவிடுவதன் வாயிலாக அவர்களுக்கு கிடைக்க கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது ஒரு வியாபாரத்திருட்டாக அமைந்து விடுகிறது. நான்காயிரம் பேரில் இருந்து 4 லட்சம் பேர் வரை காணக்கூடிய ஒரு வலைதள காணொளிக்கு கிடைக்கக்கூடிய பண மதிப்பு என்பது அதிகம். இங்கே உண்மையாக தன் அறிவு ஆற்றலை பயன்படுத்தி ஒருவர் எடுத்த அந்தக் காணொளியைவிட அதிகமான பார்வையாளர்களை பெற்று விடுகிறது இந்தப் போலி காணொளி. இதைப் போன்ற திருட்டைத் தவிர்ப்பதற்கு காப்புரிமை தேவைப்படுகிறது.
இந்தத் திருட்டைத் தடுப்பதற்கு மைக்ரோசாப்ட் (Microsoft), கூகுள் (Google ),போன்ற இணைய நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இந்த (Original creator) முதல் சிந்தனையாளர் சிந்தனையின்படி உருவாக்கிய காணொளியை , அவரின் தனித் திறமையை பாதுகாக்க அவரே, காப்புரிமை செய்தால் மட்டுமே இதிலிருந்து முழுவதுமாக பாதுகாப்புப் பெற முடியும்.
கல்விப்பணியில் காப்புரிமைப் பதிவு (Copyright Registration in Academic work):
இதேபோல் ஒருவர் கல்விப் பணிக்காகப் பாடத்திட்டங்களை நடத்தி எடுத்து வீடியோக்களை காப்புரிமை பதிவின் கீழ் பதிவு செய்து கொண்டால் அதனையும் வேறு யாரும் திருடிவிட முடியாது. உதாரணமாக கல்லூரிகளில் NAAC work நடக்கும் பொழுது ஒவ்வொரு கல்லூரியும் தங்களுடைய பாடத்திட்ட செயல்பாடுகள் முழுவதுமாக ஆன்லைனில் ஏற்றக்கூடிய வேலைகளைச் செய்கிறார்கள். Outcome based education system , co- po attainment in OBE,
பாடத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் என்ன பயனை அடைவார்கள் என்பதை முன்னிட்டு UGC – பல்கலைக்கழக மானியக்குழுவும் பாடத்திட்டங்களை இந்த அடிப்படையில் வகுக்க வேண்டும் என்கின்ற ஒரு முறையை வகுத்துள்ளது இந்த முறையை பின்பற்றி நாக்கில் நல்ல மதிப்பெண்ணுடன் முன் வரிசையில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் இருக்கும் பல பேராசிரியர்கள் co- po attainment in Outcome based education system என்று திட்டத்தின் கீழ் மிக தெளிவான தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் தங்களுடைய செயல்பாடுகளை (prasentation) முழுவதுமாக முழு நீள வீடியோக்களாக எடுத்து அதனை யூட்யூப் வீடியோக்களாக வெளியிடுகிறார்கள். அந்த வலையொளி பதிவை கண்டு பலரும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகலாம். ஆயினும் முதன்முறையாக எந்தப் பேராசிரியர் அத்துறையில் தேர்ச்சி பெற்று அவர்களுடைய செயல்பாடுகள் முழுவதுமாக வலையொளிக் காட்சிகளாக மாற்றினார்களோ, அவர்கள் தான் அந்தத் துறையில் முதன்மையானவர். இவையும் முழுவதுமாக காப்புரிமைப் பதிவின் கீழ் வரும் பொழுது அதைத் தயாரித்த அந்த பேராசிரியர் மட்டுமே அதில் வல்லுனராகக் கருதப்பட்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் முதன்மைப் பேச்சாளர் (Keynote speaker) ஆக அழைக்கப்படுகிறார். இதனால் அவருடைய வேலை அவருக்கு சிறப்பைத் தருகிறது. முன்னுரிமையைத் தருகிறது. ஆதலால் காப்புரிமைப் பதிவு இங்கே இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
புத்தகங்களுக்குக் காப்புரிமை பெறுதல்:
ஒரு துறையில் மிகச் சிறந்த வல்லுனர் ஒருவர், அத்துறை சார்ந்த அத்துணை அறிவினையும் பயன்படுத்தி ஒரு புத்தகமாக எழுதி வெளியிடலாம். மிகுந்த புரிதலைத் தரக்கூடிய நூல் என்றால் கல்விச்சமூகத்தில் அது முக்கிய இடம் பெறும். அதனால் அந்த நூலாசிரியர் அந்தத் துறை சார்ந்த பெரும் பேச்சாளராக முதன்மைப் பேச்சாளர் ( Keynote speaker) ஆக எல்லா இடங்களிலும் முன்னிலைப் படுத்தப்படுவார். அப்படியில்லாமல், இங்கே மூல ஆசிரியர் காப்புரிமை பெறுவதற்கு முன்னமேயே அல்லது பெறுவதற்கு மறந்து விட்டால், மற்றொரு ஆசிரியர் அதனை வேறு மொழியிலோ அல்லது கருத்து திருட்டோ செய்திருந்தால் காப்புரிமை பெறாத அந்த நூலாசிரியரால் கருத்துத் திருட்டு செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது மிகக் கடினமான ஒரு செயலாக இருக்கும்.
புத்தகங்களுக்கு ஏன் காப்புரிமை பெற வேண்டும் என்றால், மிகக் குறைந்த செலவில் முகநூலில் குறைந்த செலவில் அதிகமான பார்வைகளைக் காணச் செய்வது நிகழ்வு எப்படி? இது போன்ற வழிமுறைகள் அடங்கிய புத்தகத்தை, ஒரு ஆசிரியர் வெளியிடும்போது, அதை கற்கின்ற மற்றொருவர் அதில் உள்ள உள்ளடக்கத்தை மட்டும் எடுத்து அவர் ஒரு தனிபுத்தகமாக உருவாக்கலாம்.
ஒருவர் எழுதக்கூடிய நாவல், சிறுகதை போன்ற கதைப் புத்தகத்தை அவருடைய அனுமதியின்றி அப்படியே மற்றொருவர் திரைப்படமாக மாற்றி விடலாம்.
ஒரு ஆசிரியர் தமிழில் எழுதக்கூடிய ஒரு நூலை அவருடைய அனுமதியின்றி ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ மொழிபெயர்ப்பது அதன் மூல ஆசிரியருக்கு விளைவிக்கக் கூடிய பெரும் தவறு. இவையெல்லாம் காப்புரிமைப்பதிவு செய்யாத அத்தனை படைப்பாளிகளுக்கும் நடக்கக்கூடிய நிகழ்வு. இதனைத் தடுக்கவேண்டுமென்றால், அவரவர் படைப்புகளுக்கு காப்புரிமைப் பதிவு செய்தல் மிகவும் அவசியம். மற்றுமொன்று இலக்கியப் பணியில் பத்திரிக்கையில் போட்டி அறிவிப்பு செய்யப்பட்டு அதற்காக அனுப்பப்படும் படைப்புகள் யாருக்கு சொந்தம் என்கின்ற ஒரு வினா நம்முள் எழலாம். அப்படைப்புகள் யாவும் படைப்பாளர்களுக்கே சொந்தம். அந்தப்போட்டிக்கு அறிவிப்பு செய்யும் பொழுதே அப்பத்திரிக்கை, சில சட்டதிட்டங்களை அறிவிப்பு செய்திருப்பார்கள். கதையினைப் படிக்கும் நடுவர்கள் குழு படைப்பினை திருத்தம் செய்ய அனுமதியுண்டு என்று அறிவித்திருந்தால் கதையில் திருத்தம் செய்யலாம். அப்படி திருத்தம் செய்து வெற்றிடிபற்ற கதைகளை வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பக்கூடாது என்று அவர்கள் அறிவித்திருந்தால் அச்சட்டத்திற்கும் கட்டுப்பட வேண்டும்.
வானம்பாடி எழுத்தாளர்கள் பலரும் பத்திரிக்கைகளில் படைப்புகளை அனுப்பி வெற்றிபெற்ற பின்னரே தம் படைப்புகளை புத்தகமாக்கினார்கள். அதேபோல் பெரும் படைப்பாளர்கள் பத்திரிக்கைகளுக்கேன்றே தொடராக பல கட்டுரைகளை, கதைகளை எழுதம் போது , அது எழுத்தாளர்களின் ஒப்புதல் பெற்றபின்னரே மறுபதிப்பாகப் பதிவிட முடியும். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய எசப்பாட்டு- ஆண்களோடு பேசுவோம் என்ற அத்தியாயங்ஙகளின் தொகுப்பானது, இந்துதமிழ் திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் இன்றுவில் 52 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்தது. அதை வாரம் தொடராக வெளியிடுவதற்கு மட்டுமே அவர் ஒப்புதல் அளித்திருந்தார். பத்திரிகையில் அத்தொடர் முடிவடைந்ததும் அவரே புத்தகமாக வெளியிட்டுவிட்டார்.
கல்விப்புலத்தில் கருத்துத்திருட்டிற்கான தண்டனைகள்
பல்கலைக்கழக மானியக் குழு கருத்து திருட்டு வரைமுறைச் சட்டத்தை 2018 இல் வெளியிட்டது. உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள், கருத்து திருட்டு வழக்குகளில் சிக்குமானால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆய்வறிக்கை மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதில் கருத்துத் திருட்டு இருந்தால், அதற்கான அபராதத்தை, நிறுவன கல்வி ஒருமைப்பாட்டுக் குழு (IAIP) அதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அபராதம் விதிக்கின்றது.
ஒரு ஆய்வேடு அல்லது ஆய்வுத் திட்டத்தில் கருத்துத்திருட்டு, செய்யப்பட்டிருந்தால், அக்கருத்துத்திருட்டு புத்தகத்திலிருந்தோ அல்லது இணையத்திலிருந்தோ எதிலிருந்து எடுக்கப்பட்டாலும், அதற்கான புகாரை, முதலில் அவர்கள் துறைசார் கல்வி ஒருமைப்பாட்டுக் குழுவிடம் (Departmental Academic Integrity Panel) தான் புகார் அளிக்க வேண்டும். இக்குழுவினர் புகார் அளித்த அந்த ஆய்வறிக்கையினை ஒப்பிட்டுப் பார்த்து அதில் இருக்கும் கருத்து திருட்டு உண்மை என்பதை அறிந்த பின்பு, அதனை நிறுவன கல்வி ஒருமைப்பாட்டுக் குழு (IAIP) விடம் சமர்ப்பிப்பார்கள். அதன் பின்பு (IAIP) இக்குழுவில் உள்ளவர்கள் கருத்து திருட்டு பரிசோதனை செய்வார்கள்.
IAIP- இக்குழுவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (VC), புல முதன்மையர் (Dean), மூத்த கல்வியாளர்(Senior Academician), மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெளியில் இருந்து ஒருவர், கருத்து திருட்டுக் கருவிகளை நன்கு அறிந்த ஒருவர் அதன் தலைவரால் நியமிக்கப்படுவர். நான்கு நிலைகளை நிறுவன கல்வி ஒருமைப்பாட்டுக் குழுவினர் சுட்டுகிறார்கள்.
நிலை 1- கருத்துத் திருட்டு பரிசோதனையின் போது அதில் 10% வரை ஒற்றுமைகள் இருக்கலாம். அதற்கு குறைவான ஒற்றுமை என்று பெயர். அதற்கு அபராதம் இல்லை.
நிலை 2 – 10% முதல் 40 % வரையிலான கருத்துத் திருட்டு இருந்தால், அந்த ஆய்வறிக்கையை அல்லது ஆய்வுக் கட்டுரையை, திருத்தி மீண்டும் சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுவர். அதற்கு 6 மாத காலத்திற்குள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
நிலை 3– 40% முதல் 60 % வரையிலான கருத்துத் திருட்டு கண்டறியப்பட்டால், அந்த ஆய்விற்கு உரியவர், திருத்தப்பட்ட ஆய்வறிக்கையைக் கூட மீண்டும் சமர்ப்பிக்க முடியாது. ஒரு வருட காலத்திற்கு அந்த ஆய்வேட்டையோ அல்லது ஆய்வுக் கட்டுரையையோ அவர்கள் திருத்தி வெளியிடவும் முடியாது.
நிலை 4– 60% மேலான கருத்துத் திருட்டு கண்டறியப்பட்டால், அந்த ஆய்வுத் திட்டம் அல்லது ஆய்வுக் கட்டுரைக்கான ஆய்வாளர்களின் பதிவு ரத்து செய்யப்படும்.
அந்த ஆய்வாளர் ஆய்வுத் திட்டத்திற்கான, ஊக்கத்தொகை பெறப்பட்ட பின் கருத்துத் திருட்டு கண்டறியப்பட்டு அது நிரூபிக்கப்படுமானால் ,அவர்களும் அதற்கான அபராதத்தைக் கட்டியே ஆக வேண்டும். அதேபோல் பட்டம் பெற்று நீண்ட நாள் ஆகியிருந்தாலும்,அதன் பின்னர் கருத்துத் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களும் அபராதத்திற்கு உரியவர்கள்.அவர்கள் பணியில் அமர்ந்திருந்தாலும் அவர்களின் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும். அவர்கள் கருத்து திருட்டினால் பெறப்பட்ட அந்தப் பட்டமும் பறிமுதல் செய்யப்படும்.
இதே நிலைதான் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நடக்கும் கருத்து திருட்டிற்கும் இதே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கருத்துத் திருட்டு ஆய்விற்கான மேற்பார்வையாளர், அதன் பின்னர் முதுகலை, இளநிலை ஆய்வாளர், முனைவர் பட்ட ஆய்வாளர் என்று எந்தப் பிரிவிலும் மாணவர்களுக்கு , இரண்டு ஆண்டு காலத்திற்கு மேற்பார்வையாளராக இருக்க முடியாது. மேலும் குற்றம் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டால் ஒழுங்குமுறை சேவை (disciplinary Action) விதிகளின்படி இடைநீக்கம் அல்லது பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளையும், நிறுவன கல்வி ஒருமைப்பாட்டுக் குழு (IAIP) செய்கிறது
முடிவுரை
சாதாரணமாக பள்ளிகளிலும், கல்லூரியிலும் தேர்வு எழுதும் பொழுது , ஒருவர் எழுதுவதைப் பார்த்து மற்றொருவர் எழுதுவதை நாம் மாணவப் பருவத்திலேயே கண்டிக்கிறோம். அதேபோலத்தான் ஒரு ஆசிரியரின் சிந்தனை, அவருடைய அறிவு, அவருடைய சம்மதமின்றி அவருக்குத் தெரியாமல் திருடப்படுவது என்பது பெரும் தவறு. அத்தவறை கண்டிக்கும் விதமாக அரசு காப்புரிமைப் பதிவின் (Copyright Registration) கீழ் தண்டனை வழங்கும் சட்டத்ததை கொண்டு வந்துள்ளது. ஒரு படைப்பின் மீதான காப்புரிமையை மீறுவோருக்கு இழப்பீட்டுத் தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது. காப்புரிமை மீறப்பட்டு உருவாக்கப்படும் படைப்பானது காவல்துறை அதிகாரிகளால் தடை செய்யவும்ஈ பறிமுதல் செய்யவும் படும் . ஆதலால் ஒவ்வொரு துறையிலும் புதிதாக ஒன்றைப் படைக்கும் படைப்பாளர்களுக்கு காப்புரிமைப் பதிவு இன்றியமையாததாகிறது. மேலும் இதன் மூலமாக வரும் வருமானமும் அதிகம். இசையமைப்பாளர்கள் தங்களின் இசைக்கு காப்புரிமை செய்தமையால் அதனை பயன்படுத்துவோரிடம் இருந்து வருமானம் பெறுகிறார்கள்.
துணைநின்றவை
- Copyright Office
- Copyright Protection in India- Overview and Recent Developments (europa.eu)
- https://www.ugc.gov.in/pdfnews/7771545_academic-integrity-Regulation2018.pdf
- காப்புரிமை பெறுவது எப்படி ? – https://www.hindutamil.in> news
- காப்புரிமைப் பதிவு – https://www.ezeefiling.com/copyright-registration/