திருமதி மா.முத்து காயத்ரி,
உதவிப்பேராசிரியர்.
தமிழ்த்துறை
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி
ஆய்வுச்சுருக்கம்
நூலறிவு மட்டுமே மனிதனை நல்வழியில் ஒழுங்குபடுத்தும் ஆய்தமாகும். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தற்கால மனிதன் பல்துறை சார்ந்த நூல்களைக் கற்பதில் ஆர்வம் காட்டினர். அழகினை காட்டிலும் அறிவினை விரும்பிய மனிதர்கள் பல நூல்களை வாங்கி அடுக்குவது அறிவுக்காக மட்டுமே என்பதனை உணரலாயினர். எதுவும் தெரியாமல் பிறந்து வளர்ந்த இச்சமூகத்தில் நாம் தலைநிமிர்ந்து நடக்க இன்று தலைக்குனிந்து படிப்பது அவசியமாகின்றது. இதற்கு உதவிக்கரமாய்த் திகழ்வது நூலகங்களே. மனிதனின் நவநாகரீக வளர்ச்சியானது நூல்களையும் நூலகங்களையும் தேடி அலைவதை வெறுக்கின்றது. இவற்றின் விளைவாக இணையத்தின் வரப்பிரசாதமாக மின் நூலகங்கள் ஏராளம் தோன்றின. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவணந்தி முனிவரின் கூற்றிற்கேற்ப முந்தைய காலத்தில் கருத்துப் பொக்கிஷமாகத் திகழ்ந்த ஓலைச்சுவடிகள் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப அச்சு இயந்திர காகிதமானதைப் போல் நூலகமும் மின்னூலகமாக வளர்ச்சியடைந்துவிட்டன. இம்மின்னூலகங்கள் மனிதனின் அறிவு பசிக்கு விருந்தாகின்ற முறையினை எடுத்துரைப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமையப் பெறுகின்றது.
Abstract
Literacy is the only tool that can discipline man in the right way. Realizing the importance of education, modern man is interested in learning multidisciplinary texts. People who loved knowledge more than beauty realized that buying and stacking many books was only for knowledge. In this society where we are born and raised without knowing anything, it is necessary to study with our heads down to walk uprightly. Libraries are helpful for this. The modern development of man abhors wandering in search of books and libraries. As a result, many e-libraries have emerged as a boon of the Internet. According to sage Bhavananti’s statement that “the old is lost and the new is brought in, like a slippery slope” the leaf prints which were a treasure of ideas in the past have developed into an electronic library just like the printing press paper according to the development of science. This review article highlights the manner in which these e-libraries are a feast for human hunger for knowledge.
முன்னுரை
நூலறிவு மட்டுமே மனிதனை நல்வழியில் ஒழுங்குபடுத்தும் ஆய்தமாகும்.
“குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் யழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி யழகே அழகு”1– என்ற நாலடியாரின் வாக்கினை நிறைவேற்றும் வகையில் தற்கால மனிதன் பல்துறை சார்ந்த நூல்களைக் கற்பதில் ஆர்வம் காட்டினர். அழகினை காட்டிலும் அறிவினை விரும்பிய மனிதர்கள் பல நூல்களை வாங்கி அடுக்குவது அறிவுக்காக மட்டுமே என்பதனை உணரலாயினர். எதுவும் தெரியாமல் பிறந்து வளர்ந்த இச்சமூகத்தில் நாம் தலைநிமிர்ந்து நடக்க இன்று தலைக்குனிந்து படிப்பது அவசியமாகின்றது. இதற்கு உதவிக்கரமாய்த் திகழ்வது நூலகங்களே. மனிதனின் நவநாகரீக வளர்ச்சியானது நூல்களையும் நூலகங்களையும் தேடி அலைவதை வெறுக்கின்றது. இவற்றின் விளைவாக இணையத்தின் வரப்பிரசாதமாக மின் நூலகங்கள் ஏராளம் தோன்றின. இம்மின்னூலகங்கள் மனிதனின் அறிவு பசிக்கு விருந்தாகின்ற முறையினை எடுத்துரைப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
மின்னூலகங்கள்
மின்னூலகம் என்பது நூல்கள், ஆவணங்கள், படங்கள் போன்ற தகவல்கள் அனைத்தையும் மின்னூல் வடிவில் சேகரித்து, இணையப் பயன்பாட்டின் மூலம் எவரும் எங்கிருந்து வேண்டுமானாலும் எளிமையாக பார்க்கும் வகையில் அமையப்பெற்ற நூலகமாகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே”2 என்ற பவணந்தி முனிவரின் கூற்றிற்கேற்ப முந்தைய காலத்தில் கருத்துப் பொக்கிஷமாகத் திகழ்ந்த ஓலைச்சுவடிகள் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப அச்சு இயந்திர காகிதமானதைப் போல் நூலகமும் மின்னூலகமாக வளர்ச்சியடைந்துவிட்டன.‘மின்னியல் நூலகம் என்பது தற்போது வழக்கில் உள்ள அச்சு வடிவம் அல்லது மைக்ரோபிலிம் (Micro Film) வடிவத்தில் உள்ள புத்தகங்களை அல்லது அவற்றுள் ஒரு பகுதியை மாற்று வழியாகவோ, மறுபிரதியாகவோ, துணைப் பொருளாகவோ மின்னியல் வடிவில் பாதுகாத்து வைக்கும் நூலகமாகும் என்று மலேசியாவைச் சேர்ந்த எஸ்.இளங்குமரன் விளக்கம் தந்துள்ளார்.’3
“முன்பெல்லாம் ஒரு நூலைத் தேடிப் பல்வேறு இடங்களுக்கும் நூலகங்களுக்கும் செல்ல வேண்டும். அங்கு அவை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்றோ இணையத்தில் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் வெகுவாக, இலவசமாகக் கிடைக்கின்றன.” 4 என்று க.துரையரசன் மின்னூலங்கள் குறித்து விளக்குகிறார்.
தமிழ் மின்னூலகங்களின் வகைப்பாடு
இணையத்தை அதிகம் பயன்படுத்தும் மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இணையம் பெரிதும் உதவிப்புரிகின்றது. அவ்வகையில் தமிழ்ப்பனுவலை எளிதாக இணையத்தில் படிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டதே தமிழ் மின்னூலகங்களாகும்.
- ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (Roja Muthiah Resarch Library)
- மதுரைத் திட்டம் (Project Madurai)
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம் (Tamil Virtual University E – Library)
- தமிழிணையம்-மின்னூலகம் (தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒருபிரிவு)
- தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
- நூலகம்.நெட் (Noolaham.net)
- சென்னை நூலகம் (Chennai Library)
- திறந்த வாசிப்பகம் (Open Reading Room)
போன்ற நூலகங்கள் தமிழ்மொழிக்காகவே செயல்படுகின்றன.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (Roja Muthiah Resarch Library)
ஆர்.எம்.ஆர்.எல் 1994 ஆம் ஆண்டு சிக்காகோ பல்கலைக்கழகத்தால் தமிழ்மொழி ஆராய்ச்சிக்கென்று உருவாக்கப்பட்ட நூலகமாகும். இந்நூலகம் 200 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மையான தமிழ் சார்ந்த நூல்கள், இதழ்கள், கட்டுரைகள், மருத்துவம், நாட்டுப்புறவியல், இயற்பியல், காந்தியம், பெண்ணியம் தொடர்பான ஆய்வு நூல்கள் உள்பட 3,00,000 பனுவல்களை உள்ளடக்கியுள்ளது. இந்நூலகம் ஆய்வாளா் அனைவருக்கும் பயன்தரும் வகையில் செயல்படுகிறது. இந்நூலகத்தின் இணையதள முகவரி :
http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl.html
மதுரைத் திட்டம் (Project Madurai)
மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டமானது ஜனவரி 14,1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் ஆவார். இத்திட்டத்தில் திருக்குறள், ஆத்திச்சூடி. திருவாசகம், திருமந்திரம். கல்வெட்டுப் பாடல்கள், கவிதைகள், உரைநூல் என சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையிலான 985 நூல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நூல்களை ஒருங்குறி வடிவிலும் பார்க்கவும் பி.டி.எப் முறையில் பதிவிறக்க செய்துக்கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. எளிய முறையில் தமக்கு தேவைப்படும் நூல்களை தேடி எடுத்துப் படித்துக் கொள்ளலாம்.
இந்நூலகத்தின் இணையதள முகவரி : https://www.projectmadurai.org/pmworks.html
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம் (Tamil Virtual University E – Library)
தமிழ் இணையக் பல்கலைக்கழகமானது பிப்ரவரி 17,2001 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் என்ற பெயரில், உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவா்கள் முதலானோர் எங்கும் அலையாமல் இருந்த இடத்திலிருந்தே எளிய முறையில் தமிழ்மொழியைக் கற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கில் மின்னூலகம் ஒன்றை உருவாக்கினர்.
இந்நூலகம் இலக்கணம், சங்க இலக்கியம், பதிணென் கீழ்க்கணக்கு, காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதி நுல்கள், சித்தர் இலக்கியம், நாட்டார் இலக்கியம், சிறார் இலக்கியம் போன்ற தமிழ் நூல்கள் மட்டுமன்றி ரோமன் வடிவ தமிழ் நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், பிறமொழியில் தமிழ் நூல்கள், கலைக்களஞ்சியம், சுவடிக்காட்சியம், பண்பாட்டு காட்சியகம், நாட்டுடைமை நூல்கள், கணித்தமிழ், ஆய்வு உருவாக்கம் மற்றும் தகவலாற்றுப்படை போன்றவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன. இந்நூலகத்தின் இணையதள முகவரி : www.tamilvu.org
தமிழ் மரபு அறக்கட்டளை(Tamil Heritage Foundation)
தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் 2001 ஆம் ஆண்டு உலகம் தழுவிய ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டது. உலகில் இருக்கும் மிகத் தொன்மையான ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களை மின்னூல்களாக இணையத்தில் பதிவேற்றில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் உதவிப்புரிந்து வருகிறது. பதிப்பாசிரியர்கள், சுவடியியல், புராணங்கள், மூலிகைகள், எழுத்துக்கள், கிராம தெய்வங்கள், நாகநந்தி மணிமண்டபம், சங்க இலக்கியம், சங்க இலக்கியத் தொடரடைவு, காலாண்டிதழ், மின்னூல்கள், தமிழ்ப்பொழில், ஒரு பைசாத் தமிழன், நாடார் குல மித்திரன், குடி அரசு, கீழடி நூல் போன்ற உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நூலகத்தின் இணையதள முகவரி : www.tamilheritage.org
நூலகம்.நெட் (Noolaham.net)
நூலகம்.நெட் என்னும் திட்டமானது 2005 தை மாதம் தி.கோபிநாத், மு.மயூரன் ஆகியோரால் தொடங்கப்பட்டு இடையில் சில காரணங்களால் தடைப்பட்டது. மீண்டும் 2006 தைப்பொங்கல் திருநாளன்று புதுப்பொலிவுடன் தொடரப்பட்டது. இந்நூலகத்தில் ஈழத்து தமிழ் நூல்கள், எழுத்து ஆவணங்கள் போன்றவை மின்வடிவில் பாதுகாக்கப்படுகின்றன. ஆவண வகைகள், தகவல் மூலங்கள், பகுப்புகள், உசாத்துணை வளங்கள், சிறப்புச் சேகரங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள், பிராந்திய சேகரங்கள், தொடரும் செயற்திட்டங்கள், முடிவடைந்த செயற்திட்டங்கள் என்ற முறையில் உட்பிரிவுகளாக பிரித்து நூல்களை காட்சிப்படுத்துகின்றன. இந்நூல்களை ஒருங்குறியில் வாசிக்கவும் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்யும் வசதியுள்ளது. இந்நூலகத்தின் இணையதள முகவரி : http://www.noolaham.org
சென்னை நூலகம் (Chennai Library)
சென்னை மின்னூலகமானது கோ.சந்திரசேகரன் என்பவரால் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டதாகும். இம்மின்னூலகத்தில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய நூல்கள், இலக்கண நூல்கள், உலா, கலம்பகம், ஆன்மீகம் முதலான நூல்களும் கல்கி, ராஜம் கிருஷ்ணன், புதுமைப்பித்தன் முதலானோரின் நூல்களும் உள்ளன. அதாவது பண்டைய கால இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான நூல்கள் காணக்கிடைக்கின்றன.
இந்நூல்கள் அனைத்தும் ஒருங்குறி எழுத்துரு (Unicode font) வடிவில் இருக்கின்றன. இவற்றை கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF – Portable Document Formet) முறையில் பதிவிறக்கம் செய்வதற்கு இந்நூலகத்தில் குறிப்பிட் கட்டணம் செலுத்தி உறுப்பினர் அல்லது புரவலராக இணைந்திருக்க வேண்டும் என்பது நியதி. இந்நூலகத்தில் உறுப்பினர்களாக இணைவோருக்குத் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை PDF கோப்புகளாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதி மட்டுமின்றி, கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை 20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுன்கிறன.4 இந்நூலகத்தின் இணையதள முகவரி : http://www.chennailibrary.com
திறந்த வாசிப்பகம் (Open Reading Room)
திறந்த வாசிப்பகமானது சிங்கப்பூரில் வாழும் ரமேஷ் சக்ரபாணி என்பவரால் உருவாக்கப்பட்டதாகும். இம்மின்னூலகத்தில் கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், அரசியல், பக்தி இலக்கியம், நாட்டார் இலக்கியம் போன்ற நூல்கள் துறை மற்றும் எழுத்தாளர்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு வைத்துள்ளனர். இந்நூல்களை புரட்டும் நூல் (Filp Book) வடிவில் படிக்கும் வசதியுள்ளதால் புத்தகத்தை நேரில் வாசிப்பதைப் போன்ற உணர்வு தோன்றுகின்றது. மேலும் இந்நூல்களை தரவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதியும் இருப்பதால் தமிழ் ஆர்வலா்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்நூலகத்தின் இணையதள முகவரி : https://archive.org/details/openreadingroom
முடிவுரை
இன்றைய இணைய உலகில் மனித மனம் தமக்குத் தேவையான நூல்களை நூலகத்தைத் தேடிச் சென்று நூல்களைத் தேடி எடுத்துப் படிப்பதை விரும்புவதில்லை. நூலகத்திற்கு செல்லாமலேயே தமக்கு தேவையானத் தகவல்களை இருந்த இடத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதே மின்னூலகங்களாகும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மதுரைத் திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம், தமிழ் மரபு அறக்கட்டளை, நூலகம். நெட், சென்னை நூலகம் மற்றும் திறந்த வாசிப்பகம் போன்ற மின்னூலகங்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய தமிழ் மின்னூலகங்களின் வருகையால் உலகில் பல்வேறு நாட்டினரும் தமிழைக் கற்கவும் ஆய்வாளர்கள் தன்னுடைய ஆய்வுக்கு தேவையான நூல்களை யாரிடமும் இரவல் பெறாமல் மின் நூலாக பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ள முடிகின்றது. இம்மின்னூலகங்கள் மனிதனின் அறிவு பசிக்கு விருந்தாகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
சான்றெண் விளக்கம்
- நாலடியார் , பொருட்பால், கல்வி அதிகாரம், பாடல் எண்:131
- நன்னூல், உரியியல்,462
- முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி, தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், பக்.185
- முனைவர் க.துரையரசன், இணையமும் இனிய தமிழும் –வலைப்பதிவு
பார்வை நூல்களும் இணையதளங்களும்
- முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி – தமிழ்க் கணினி இணையப்
பயன்பாடுகள்.கமலினி பதிப்பகம், கச்சமங்கலம் அஞ்சல்,தோகூர் வழி,தஞ்சாவூர் மாவட்டம் – 613 102