The role of the Tamil Virtual Academy in Internet libraries

இணையநூலகத்தில் தமிழ்இணையக்கல்விக்கழகத்தின்பங்கு

செல்வி செ.பிரியதர்ஷினி,

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

மேட்டமலை, சாத்தூர்.

Abstract :

A library is a repository of books. As Sage Bhavananti says, “The old goes away and the new comes in.” The internet generation lives a hyperactive lifestyle, making it rare for them to go to the library. The world of libraries is becoming more colorful by the day, undergoing various changes, and acquiring a new dimension as “change is the only thing that never changes”. Through this initiative, the Tamil Internet Education Institute becomes an integral part of the effort to transform our libraries into our mobile devices. An internet library created by Tamil Internet Education Institute aims to answer the search of both school and college students as well as lay people by explaining its origin, structure, and classification system.

ஆய்வு சுருக்கம் :

            நூல்களின் சேமிப்பே நூலகம் ஆகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவணந்தி முனிவரின் வாக்கிற்கிணங்க, இன்றைய இணைய தலைமுறைகளின் அதிதீவிரவாழ்க்கை சூழலில், நூலகம் சென்று புத்தகங்களை தேடி அதன் கருத்தக்களை உள்வாங்குவது என்பது அரிதாகி விட்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நூலகங்கள், பல்வேறு மாற்றங்களை சந்தித்து “மாற்றம் ஒன்றே மாறாதது” என்பதற்கிணங்க, ஓர் புதிய பரிமாணத்தை பெற்றுள்ளது. அவ்வகையில் நமது கையடக்கத்திற்குள் நூலகத்தை மாற்றிய முயற்சியில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சிறப்பிடம் பெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பாமர மக்களின் தேடலுக்கும் விடை நல்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட இணைய நூலகமான, தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தோற்றம், அமைப்பு, பாகுப்படுத்திய முறைமை மேலும் அவற்றின் பயன்களை விளக்குவதாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைய பெறுகின்றது.

முன்னுரை

            நவீன உலகில் ஒரு வேலையை மிக விரைந்து செய்வதற்குக் கணினியின் தேவை அவசியமாகிறது. கணினியின் பயன்பாட்டினைத் தொடர்ந்து இணையம் இன்றியமையாத ஒன்றாக மாறிவருகிறது. கணினி, இணையம் இதனைப் பயன்படுத்தாத துறைகளே இல்லை. இவைகள் தமிழ்மொழி சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிகின்றன. ஓர் மொழியின் புலமையைப் பெற நூலகம் இன்றியமையாத இடமாக கருதப்படுகிறது. அந்நூலகத்தின் மற்றொரு பரிமாணமாக கருதப்படும் இணைய நூலகம் பாமர மக்களுக்கும் கல்வியறிவை ஊட்டுகிறது. இவ்வகையில் இணைய நூலகமான, தமிழ் இணையக் கல்வி கழகத்தின் தோற்றம் முதல் இன்று வரை செயலாற்றும் பாங்கினையும் அதன் பயனையும் இக்கட்டுரையில் காண்போம்.

தமிழ் இணையக் கல்விக்கழகம்தோற்றம்

            தமிழ் இணையப் பல்கலைக்கழகம் எனும் இயற்பெயர் கொண்ட தமிழ் இணையக் கல்விக் கழகம் பல்வேற்பட்ட இடங்களில் வசிக்கும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் மொழி சார்ந்த இலக்கியத் தொடர்பினை காலகாலமாக நீட்டிப்பதற்காகவும் 17.02.2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது நிதித்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.த.உதயச்சந்திரன் தலைவராகவும் சே.ரா.காந்தி இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர்.

குறிக்கோளுரை

            “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்பதே தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் குறிக்கோளுரை ஆகும்.

மேலும்,

  • கணினித் தமிழின் சிறப்பை மேம்படுத்துவதும்
  • தமிழர்களின் பண்பாடு மற்றும் நாகரிகத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு புகட்டுவதும்
  • தமிழ் மொழியில் சான்றிதழ், மேற்சான்றிதழ், பட்டயம் மற்றும் பட்டம் போன்ற கல்வித் திட்டங்களை வழங்குவதும்
  • தமிழ் மின்நூலகம் மற்றும் பண்பாட்டு மின்களஞ்சியத்தை நிர்வகிப்பதும்

முதலிய அனைத்து பொருளடக்கத்தையும் www.tamilvu.org என்ற இணையதளத்தின் வாயிலாக அளிக்க வேண்டும் என்பதே குறிக்கோள் ஆகும்.

வகைப்பாடு

            தமிழ் இணையக் கல்விக் கழகம்

  • கல்வித் திட்டங்கள்
  • நூலகம்
  • பண்பாட்டுக் காட்சியகம்
  • கணித்தமிழ்
  • ஆய்வு மற்றும் உருவாக்கம்
  • தகவலாற்றுப்படை

எனும் உட்பிரிவுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வித்திட்டங்கள்

            மழலைக்கல்வி தொடங்கி ஆசிரியர் பட்டயப் பயிற்சி வரையிலான கல்வி விவரங்களின் புதையலாகவே கல்வித்திட்டம் அமைந்துள்ளது. மேலும் புதிய பாடத்திட்டம் 2022, தொடர்பு மையங்கள் ஒப்பந்தப்படிவம், கட்டண விபரம், மாணவர் பதிவு, தேர்வு முறை பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. கொரானா காலத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட இணைய வகுப்பறைகள், குறிப்பு புத்தகங்கள், அயல்நாடுகளில் தமிழ் பள்ளிகள், பயணியர் தமிழ், பயில் செயலி முதலிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

நூலகம்

            நாம் ஒன்றைக் கற்கவேண்டுமென்றால் நல்ல ஆசிரியரைத் தேடி சென்று கற்ற வேண்டும்.

 “கற்கை நன்றே கற்கை நன்றே

  பிச்சை புகினும் கற்கை நன்றே”1

            என்பது ஔவையார் வாக்கு. பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் படிக்க வேண்டும் என்பது பொருளல்ல. நமக்கு ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பதே உண்மையான பொருளாகும். இருபதாம் நூற்றாண்டின் வளாச்சியில் ஒருவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடுவது என்பதற்கு மாறாக, விரல்நுனியின் தடவல்களில் நிகண்டுகள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் மேலும் ஓலைச் சுவடி முதல் தற்காலத்திய இலக்கியங்கள் வரை அனைத்தும் தமிழ்இணையக் கல்விக் கழக நூலகத்தின் வாயிலாக எளிய முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்டு கற்றப்படுகிறது. எனவே தமிழ் இணையக் கல்விக் கழக நூலகம் ஆகச் சிறந்த நல்லாசிரியராகவே பணியாற்றி வருகின்றது.

பண்பாட்டுக் காட்சியகம்

            ஓர் இனத்தின் சிறப்புகள் அல்லது ஒர் நாட்டின் சிறப்புகள் பண்பாடு என அழைக்கப்படுகின்றது. பெருமழை பெய்கின்ற போதெல்லாம் வெள்ளம்பெருகி அனைத்தையும் கூடவே வாரிச் சுருட்டிச் செல்வது போல செல்வாக்கு மிக்க பண்பாடு, பின்னடைந்து நிற்கின்ற ஒரு பண்பாட்டினை அடக்கி வெற்றி கொள்ளுவது மரபு. அவ்வகையில் தமிழர்கள் தங்களின் பண்பாட்டினை ஆன்மீக ரீதியாகவும் கலைகள் மற்றும் வீரவிளையாட்டுகள் வாயிலாகவும் போற்றி பாதுகாத்து வெற்றியும் கண்டனர். இதனை பறைச்சாற்றும் விதமாக தமிழ் இணையக் கல்விக்கழகம் சைவ, வைணவ, சமண, இசுலாமிய, கிறிஸ்துவ திருத்தலங்களின் பெயர் அட்டவணை, அதன் சிறப்பம்சம் ஆகியவற்றை விளக்கவதோடு மட்டுமல்லாமல் நவீன போக்குவரத்து சாலை வரைபடம் மூலமாக இடங்களையும் அறியும் வசதிஅமைந்துள்ளது. திருவிழாக்களின் அம்சங்களையும் வரலாற்று சின்னங்களின் அம்சங்களையும் பறைச் சாற்றுகின்றது. மேலும் நாட்டுப்புறக் கலைகளான சிலம்பம், ஒயில், கோல், பொம்மலாட்டம் முதலான கலைகளின் வரலாற்றையும், வீரவிளையாட்டுகளையும் ஒலி-ஒளி படம் வாயிலாக வண்ணமயமாக கற்பவர்கள் உணர்வு பூர்வமாக மனதில் பதிய வைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழிணையம்மின்னூலகம்

.எண்நூல்கள்எண்ணிக்கை
1அச்சு நூல்கள்அரிய நூல்கள்20043
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்3220
தமிழ்நாட்டுப் பாடநூல் (மற்றும்) கல்வியியல் பணிகள் கழகம்1174
2பருவ வெளியீடகள்ஆய்விதழ்கள்456
இதழ்கள்13959
தமிழரசு1626
3சுவடிகள்ஓலைச்சுவடிகள்3739
4அரசு ஆவணங்கள்ஆவணக் காப்பக அட்டவணைகள்2572
ஆவணக் காப்பக அட்டவணைகள் (கையெழுத்துப்பிரதி)749
விடுதலை இயக்கத்தின் வரலாறு112

            இவ்வட்டவணையின் அடிப்படையில் மின்னூலகம் பாகுப்படுத்தப்பட்டுள்ளது.

கணித்தமிழ்

            “கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் மறுமொழிகளையும் கொண்டிருந்தன.”2 ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி உலகில் வலம்வர தொடங்கியது. இதனை மெய்பிக்கும் விதமாக தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், தமிழ் மென்பொருள்களின் பெயர் மற்றும் இணைப்பு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வலைப்பூக்கள், தமிழ்ஒருங்குறி, தமிழ் எழுத்துருக்கள் பதிவிறக்கம் செய்யும் முறைமையும் கற்பிக்கப்படுகின்றன.

ஆய்வு மற்றும் உருவாக்கம்

            தமிழ் இணையக் கல்விக்கழகம் படிப்பதற்குரிய களமாக மட்டும் அல்லாமல் ஆய்வு மேற்கொள்ளவும், முயற்சியுடன் புதிய உருவாக்கத்தை அங்கீகரிக்கவும் செய்கிறது. அவ்வகையில் 2011-2012 ஆம் ஆண்டிற்கான பகுதி-II திட்டத்தின் கீழ் “தமிழ் இலக்கியங்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு” ‘Linguistically Annotated Corpus for Tamil Literature” என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இயற்கை மொழியாய்வுக் கருவிகளான தமிழ்க்கணினி கருவிகள், தமிழ் மின் நிகண்டு, உச்சரிப்புடன் கூடிய ஒரு மின்அகராதி, எட்டு வகையான தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கம் அடைந்துள்ளன.

தகவலாற்றுப்படை

            ஓர் இடத்தில் நிகழும் செய்திகளை அல்லது தகவல்களை பரிமாற்றும் சாதனமாகவும் தமிழ் இணையக் கல்விக்கழகம் திறம்பட செயல்புரிகிறது. அவ்வகையில்,

  • மாதாந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
  • மாதாந்திர தொடர் சொற்பொழிவு
  • விளக்க விரிவுரைகள்
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் குறும்படங்கள்

போன்றவற்றை ஒளி-ஒலி அமைப்பில் தகவலாக  வெளியிட்டுவருகிறது.

தொகுப்புரை

            “இணைய நூலகத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பங்கு” எனும் தலைப்பிலான இவ்வாய்வின் கண் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றம், குறிக்கோள், உள்ளடக்கம் ஆகியவை செவ்வனே விளக்கப்பட்டுள்ளன. கண்ணிற்கு குளிர்ச்சியும் காதிற்கு இனிமையும் அறிவுத் தேடலுக்கு முழுமையும் மனதிற்கு நிறைவினையும் அளிக்கும் விதமாக 2001 ஆண்டில் இருந்து தற்போது வரை இணைய நூலக உலகில் தனக்கேன சிறப்பிடம் பெற்று தனது தமிழ்த்தொண்டினை உலகெங்கும் பறைச்சாற்றுகின்ற இணைய நூலகமாக தமிழ் இணையக் கல்விக்கழகம் திறம்பட செயல்படுகிறது என்பதை அறிய முடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.அதிவீரராமபாண்டியன், வெற்றிவேட்கை, ப.35

2.முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி – தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள், ப.43

துணைநூற்பட்டியல்

1. அதிவீரராமபாண்டியன், வெற்றிவேட்கை, ஆர்.கணபதி அண்டு கம்பெனி, பிரம்பூர், சென்னை. 2.முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி – தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், தஞ்சாவூர் (முதற்பதிப்பு -2012)(இரண்டாம் பதிப்பு – 2016)

error: Content is protected !!