செயற்கை நுண்ணறிவின் வழி தமிழ் கற்பித்தல்

திருமதி மா.முத்துச்செல்வி,

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்,

தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,

சிவகாசி

மனிதன் உருவாக்கிய கண்டுபிடிப்புகளுள் சாலச் சிறந்தது செயற்கை நுண்ணறிவாகும். ஏனெனில் மனித மூளைக்கு இணையாக சிந்திக்கும் ஆற்றலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனிடமிருந்து இயந்திரங்களை வேறுபடுத்துவதே படைப்பாற்றல் திறன் ஒன்றே. அவற்றையும் சாத்தியமாக்கிவிட்டது இச்செயற்கை நுண்ணறிவின் கண்டுபிடிப்பு. இத்தகைய கண்டுபிடிப்பினை இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் பொருத்தி தமிழ் மொழியினை இருபத்தோராம் நூற்றாண்டிற்கு ஏற்ற வகையில்  மாற்றி உலகளவில் கொண்டு செல்லும் நோக்கில்  இவ்ஆய்வு அமைகிறது.

செயற்கை நுண்ணறிவு

            செயற்கை நுண்ணறிவு என்பது  மனிதன் தனக்கு இணையாக ஒன்றைத் தானே உருவாக்குதல். இத்தகைய செயற்கை நுண்ணறிவு மனிதனுக்கு பலவாறு பயன்படுகிறது. மேலும், மனிதன் தான் இல்லாத இடத்திலும் அவ்விடத்தை பூா்த்தி செய்ய இத்தகைய செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்துகிறான். குறிப்பாக ரோபோர்ட் பயன்பாட்டினைக் குறிப்பிடலாம்.  ரோபோர்ட் முதல் மருத்துவமனையின் பல செயல்பாடுகளுக்கு இத்தகைய செயற்கை நுண்ணறிவின் பணி அளப்பரியது. இத்தகைய செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தி தமிழ் மொழியின் வளா்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே தமிழ் மொழிக்கு செய்யும் மாபெரும் தொண்டாகும். அவ்வகையில் செயற்கை நுண்ணறிவின் வழி செயல்படும் பார்ட், சாட் ஜிபிடி போன்ற செயலிகள் இவற்றை  செய்கின்றன. இருப்பினும் இவை தமிழ்மொழிக்கானது மட்டுமல்ல.

கூகுள் சாட் ஜிபிடி வேறுபாடு

            கூகுள் ஒரு தேடுபொறியாகும். தேடுபவா் கேட்கும் வினாவிற்கு ஏற்ற வகையிலான அனைத்து தகவல்களையும் கொண்டு வந்து தரும். உதாரணமாக, திருக்குறள் தொடா்பான கருத்துக்களைத் தேடும் பொழுது அது தொடா்பாக வெளியிடப்பட்ட கட்டுரைகள், வீடியோ உரைகள் என அனைத்தையும்  கொண்டு வந்து தரும். ஆனால் செயற்கை நுண்ணறிவின் வழி செயல்படும் சாட் ஜிபிடி அவ்வாறு அன்று. ஒரு மனிதனிடம் இத்தகைய வினாவினைக் கேட்டால் அவன் தான் அறிந்ததைக் கூறாமல் தன் அறிவை பயன்படுத்தி பொருத்தமானவற்றை தோ்வு செய்து பேசுவானோ அதைப்போன்று சாட் ஜிபிடி யும் பதிலளிக்கும். தேடுபவரின் காலவிரயத்தை தடுக்கும் . மேலும், கூகுள் அளிக்கும் விடை அனைத்தும் சரியாக இருக்கும் என்று கூற இயலாது. ஆனால் மனிதனால் உள்ளீடு  செய்வதன் வழி செயல்படும் சாட் ஜிபிடியில் தவறு நேர வாய்ப்பு குறைவு. மனிதன் எத்தகைய உள்ளீடுகளை செய்கிறானோ அவற்றையே அது செயல்படுத்தும். கூகுளில் ஒன்றைத் தேடும் பொழுது கூகுள் அவை தொடா்பான மொத்த சுட்டியையும் கொண்டு வந்து தரும். ஆனால் சாட் ஜிபிடி அவ்வாறு இல்லாமல் அவை தொடா்பான துல்லியமான பதில்களையே அளிக்கும்

பார்ட்சாட் ஜிபிடி வேறுபாடு

            சாட் ஜிபிடி பார்ட் இரண்டிலும் சில நிறை குறைகள் உள்ளன.  சாட் ஜிபிடி 2021 ஆம் ஆண்டு வரையிலான தகவல்கள் மடடுமே நாம் பெற முடியும். ஆனால் பாரட் செயலியில் தற்போதுள்ள தகவல்கள் வரை அனைத்தையும் பெற இயலும். சாட் ஜிபிடியில் ஒரு தமிழ்க்கவிதையினைக் கேட்கும் பொழுது ஓர் அழகான கவிதையை நம் கண்முன்னே திரையில் காட்டுகிறது. ஆனால் பார்ட் செயலியில் இது போன்ற தகவல்கள் இல்லை என்ற பதிலே வருகிறது. சாட் ஜிபிடியில் ஒரு வினாவிற்கான விடையினை நகலெடுக்க மட்டுமே முடியும். ஆனால் பாரட் செயலில் அவற்றை மின்னஞ்சலுக்கோ அல்லது கூகுள் டிரைவிற்கோ ஏற்ற இயலும். படத்தை உருவாக்கக் கூடிய நுட்பம் பார்ட்டில் இலவசமாகவும் சாட் ஜிபிடியில் முன்பணம் செலுத்தினால் மட்டுமே உருவாக்க இயலும். கடினமான உரைகளையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பார்ட் செயலி வழங்கும். குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரிடையேயும் அறிவாற்றலை வளா்ப்பதையே இந்த தொழில்நுட்பம் இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் சாட் ஜிபிடியோ எழுப்பப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும் திறன் கொண்டுள்ளது.

            செயற்கை நுண்ணறிவின் வழிச்செயல்படும் இவ்விரு செயலிகளிலும் தமிழ் மொழித்தொடாபான தகவல்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கெனத் தனித்ததொரு செயலி உருவாக்குதலேச் சிறந்தது. மேலே குறிப்பிட்ட செயலிகளில் அனைத்துத் தகவல்களையும் பெற இயலும். ஆனால் தமிழ் மொழிக்கென உருவாக்கப்படும் செயலியில் தமிழ்க்குறித்தத் தகவல்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் அமைத்தல் நலம். அவ்வாறு உருவாக்கப்படும் செயலியில் கீழ்க்காணும் செயல்பாடுகளை உள்ளீடு செய்யும் பொழுது அவை தமிழ்மொழி சார்ந்த சிறந்ததொரு செயற்கை நுண்ணறிவு செயலியாக விளங்கும் .

அடிப்படைத்தமிழ்

            கணினியில் அடிப்படைத்தமிழினை உள்ளீடு செய்து தமிழ் மொழியினை அறியாதவா்களும் அறியும் வண்ணம் செய்யலாம்.  செயற்கை நுண்ணறிவின் வழி செயல்படும் செயலிகள் கிட்டத்தட்ட ஒரு ஆசிரியருக்கு இணையாக கற்பிக்கும் ஆற்றல் கொண்டது. எந்த மொழியினைச் சார்ந்தவா்களும் தமிழினைக் கற்கலாம். அதற்கு ஏற்ற வகையில் நாம் உள்ளீடு செய்தல் அவசியம். அவ்வாறு தமிழை அறியாதவா்களுக்கான அடிப்படைத்தமிழினை உள்ளீடு செய்வதன் வழி அவற்றை அனைவரும் அவா்கள் கற்றுத் தெளிய முடியும்.

அடிப்படை இலக்கணம்

            தமிழில் ஏற்படும் இலக்கண பிழைகளான ஒற்று மிகுமிடம், ஒற்று மிகா இடங்கள், மயங்கொலிப் பிழைகள், ஒருமை பன்மை பிழைகள் இவையெல்லாம் தமிழைக் கற்போரிடத்து ஆரம்பக் காலகட்டத்தில் ஏற்படுதல் இயல்பு. இப்பிழைகள் ஏற்படா வண்ணம் அவற்றிற்கான விதிகளை உள்ளீடு செய்வதன் வழி அப்பிழைகளை எளிதில் நீக்க இயலும். கட்டுரையில் ஏற்படும் இலக்கணப் பிழைத்திருத்தம் செய்யவும் இயலும். இவற்றை இன்னும் எளிமையாக்க சில கிளைமரப்படங்கள் மூலம் விளக்கும் வண்ணம்  உள்ளீடு செய்வதால் குழந்தைகள் முதல் அனைவரும் எளிதில் விளக்கம் அடைந்து கொள்ளலாம்.  தற்போதுள்ள சூழலில் வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழா்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்று கொடுப்பதில் ஆா்வம் காட்டுகின்றனா். அதனால் அதற்காக ஆசிரியா்களை நியமிக்கின்றனா். இந்த செயற்கை நுண்ணறிவின் வாயிலாக அவற்றை மிக எளிமைப்படுத்த இயலும். குழந்தைகளும் மிக எளிதாக தாங்களாகவேத் தமிழினைக் கற்றுத் தேர இயலும்.

அணியினைக் கண்டறிதல்

            யாப்பிலக்கணத்தில் இடம் பெறும் யாப்பு உறுப்புகள், பாக்கள் ஆகியவற்றை கண்டறிய அவலோகிதம் என்ற மென்பொருள்  பயன்பாட்டில் உள்ளது. அவற்றைப் போன்றே சங்க இலக்கியப் பாக்கள் அனைத்திற்கும் அணியினைக் கண்டறியும் வதிமுறைகளை உள்ளீடு செய்வதன் வாயிலாக அணியிலக்கணம் குறித்த ஆழ்ந்த புரிதல் பயனருக்கு கிடைக்கும். அதாவது சங்க இலக்கியப் பாக்களை  இடுகையிட்டவுடன் அவற்றின் அணியினையும், அவற்றிற்கான விளக்கங்களையும் பெறும் வகையில்  செயலியினை வடிவமைத்தல் சாலச்சிறந்தது.

இலக்கியங்கள் உள்ளீடு செய்தல்

            தமிழ் இலக்கியங்களை  செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு அனைத்து இலக்கியங்களையும் கால வாரியாக உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை அனைவரும் அறிந்து கொள்ள இயலும். பொதுவாக கூகுளும் இவ்வேலையைச் செய்தாலும் , செயற்கை நுண்ணறிவின் வழி கொண்டு செயல்படும் செயலியில் இவற்றை துல்லியமானப் பதில்களைப் பெற இயலும்.  கூகுளில் இத்தகைய பயன்பாடு காணப்பட்டாலும் அவை அனைத்தும் ஒவ்வொரு இணைப்பிலேயேக் காட்டும். ஒரு இணைப்பு ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் அடுத்த இணைப்பில் சென்று தகவலைத் திரட்டுவோம். ஆனால் செயற்கை நுண்ணறிவின் வழி  உருவாக்கப்படும் செயலியில் அவ்வாறு இல்லாது துல்லியமாக பாடலுக்கு ஏற்ற விளக்கமே இடம் பெறும்.

மொழி மாற்றிகள்

            தமிழ் மொழியை பிற மொழிகளுக்கு மாற்றவும், பிற மொழியில் உள்ளவற்றை தமிழ் மொழிக்கு மாற்றவும் கூகுள் மொழி மாற்றிகள் உள்ளிட்ட நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன. இருப்பினும் தொழில் நுட்பம் தெரிந்த தமிழா்களுக்கு இலக்கணம் சரிவர  தெரியவில்லை என்பதே உண்மை . மொழிமாற்றும் போது துல்லியமாக மொழிமாற்றுதலை நாம் பெறுதல் என்பது இயலாது. ஆகவே தமிழ் இலக்கணம் அறிந்தவா்கள் தொழில்நுட்பமும் கற்றுக்கொண்டால் செயற்கை நுண்ணறிவின் வழி  உருவாக்கப்படும் செயலியில் அவற்றை துல்லியமாக செயல்படுத்துதல் என்பது சாத்தியமான ஒன்றாக அமையும்.

அகராதிகள்

            தமிழ்ச்சொற்களுக்கான பொருட்களை அறிந்து கொள்ள அகராதிகள் பயன்படுகின்றன. இத்தகைய அகராதிகள்  பல மின்அகராதிகளாக மாற்றப்பட்டுவிட்டன. இவற்றை செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு உள்ளீடு செய்யும் பொழுது தமிழ் மொழிக்கான பல பொருள்கள் எளிதாக அனைவரும் விளங்கும் வண்ணம் அமையும். இவற்றில் அகராதிகள் மட்டுமன்றி கலைச்சொல்லாக்கம், வாழ்வியல் களஞ்சியங்கள், சொற்றொடா் அகராதி என தமிழ்மொழிக்கு பொருள் தரும் அனைத்தையும் உள்ளீடு செய்வதன் வழி தமிழ் மொழிக்கான பொருள் விளக்கங்கள் படிப்போர் எளிதாக பெற இயலும்.

ஒலிமாற்றிகள்

            ஒருங்குறி அமைப்பில் தட்டச்சு செய்யப்பட்ட அனைத்தும் ஒலிகளாக மாற்றி கேட்க இயலும். ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் மட்டும் புழக்கத்தில் இருந்த தொழில் நுட்பம் இன்று தமிழ் மொழியிலும் காணப்படுகிறது.  இதைப்போன்று தமிழ்மொழியில் வெளிவந்த நூல்களை ஒலி மாற்றிகளாக மாற்றி அவற்றை ஒலி நூல்களாக மாற்றி அனைவரும் பயன்பெறும் வண்ணம் செயற்கை நுண்ணறிவின் வழி உருவாக்கும் செயலியில் உருவாக்கி பயன்பெற இயலும்.

கல்வெட்டுஓலைச்சுவடி         

            கருத்துப்பரிமாற்றமே மொழியின் பயனாகும். இத்தகைய  கருத்துப்பரிமாற்றத்ததை வெளிப்படுத்தும் மொழியினை நாம் அழியாது காத்தல் அவசியம். எனவே கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவற்றில் செய்திகளை எழுதி வரலாற்றையும் மொழியையும் காத்தனா். இத்தகைய கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளில் காணப்படும் எழுத்துக்கள் தமிழி,கிரந்தம்,வட்டெழுத்து போன்றவை, இவற்றிற்கான நிரலாக்கங்களை உள்ளீடு செய்து அம்மொழியினையும் செயலியில் பதிவேற்றம் செய்தால் தமிழ்மொழியானது என்றும் வளா்ச்சிப் பாதையிலேயே பயணிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  மொழிபெயா்க்கப்படாத ஓலைச்சுவடிகள் அதிகம் உள்ளன. இத்தகைய செயலின் வாயிலாக அவற்றை மொழிபெயா்த்தலும் எளிதாக அமையும்.

சொல் திருத்திகள்

            ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சு செய்யும் போது வார்த்தைகளில் ஏற்படும் பிழைகளைச்  சரிசெய்ய பல மேம்பட்ட சொல்திருத்திகள் புழக்கத்தில் உள்ளன. அதைப்போன்று தமிழ் மொழியில் தட்டச்சு செய்யும்போது அனைத்து சிகப்பு நிறத்திலேயே சொல் திருத்தம் பெற இயலா நிலையிலேயே உள்ளது. எனவே அவற்றை சரிசெய்வதற்கான முறைமைளை நாம் செயற்கை நுண்ணறிவின் வழிச்செயல்படும் செயலியில் உள்ளீடு செய்வதன் வழி நாம் இத்தகைய இடா்பாடுகளை நீக்க இயலும். அவற்றிலும் ஏற்கனவே உள்ளீடு செய்தவற்றிலேயே பிழைத்திருத்தம் செய்ய இயலும். புதிதாக நாம் தட்டச்சு செய்வனவற்றில் திருத்தம் செய்தல் இயலாத ஒன்றாகும்.  

படைப்பாற்றல் திறன்

            சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை உள்ளீடு செய்யும் இத்தகைய தமிழ்ச்செயலியில் சங்க இலக்கியத்தை அடிப்படையாக வைத்து சிறுகதை படைக்கும் முயற்சியினையும், காப்பியங்களை வைத்து நாடகம் இயற்றும் முயற்சியினையும் மேற்கொள்ளும் போது செயற்கை நுண்ணறிவின் வழி செயல்படும் செயலியில் இத்தகைய செயல்பாடுகள் சாத்தியமாகலாம். ஏனெனில் நாம் உள்ளீடு செய்வனவற்றை கருத்தில் கொண்டு அவற்றை ஆராய்ந்து நுணுக்கமாக செயல்படுவதே இவற்றின் பணியாகும் எனவே இத்தகைய படைப்புத்திறனும் இவற்றில் சாத்தியமே.

 தொகுப்புரை

            “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் “   என்பார் வள்ளுவா். உலகத்தார் எவ்வழியில் பயணிக்கின்றனரோ அவ்வழியிலேயே நாமும் பயணிப்பதேச் சிறந்தது . அவ்வகையில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மொழியானது இருபத்தோராம் நூற்றாண்டிலும் சிறந்து விளங்குகிறது என்றால் மொழியானது காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டதே காரணமாகும். உலகமே கணினி மயமாக்கப்பட்ட பொழுது தமிழழும் இணைந்தது.  கணினியின் வளா்ச்சிக்கு ஈடுகொடுத்து தமிழும் பயணிக்கிறது. தற்போது கணினித்துறையானது செயற்கை நுண்ணறிவின் வழிப் பயணப்பட ஆரம்பித்துள்ளது. தமிழும் அவற்றுடன் இணைந்தே பயணிப்பதே அவற்றின் வளா்ச்சிக்கு உகந்தது. எனவே தமிழ்மொழியின் வளா்ச்சிக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு செயல்படும் செயலியை தமிழ் மொழியில் உருவாக்கி தமிழ் மொழிப்பற்றி அறியாதவா்களும் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்குவதே தமிழ் மொழியினை அடுத்தக்கட்ட வளா்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை.

ஆய்விற்கு பயன்பட்ட இணையதள இணைப்புகள் 

  1. https://bard.google.com/chat/5f5f932954d3545e
  2. https://www.gunathamizh.com/2012/12/blog-post_4495.html?m=1
  3. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
  4. https://youtu.be/t8WvRJdnI_Q?si=JuhEZ-or7XYPr6Mo
  5. https://youtu.be/YgGUGlRVn-U?si=ydxwmFP_UfQt3QXC
  6. https://fsts.fourstepsolutions.com/courses/aitamil
error: Content is protected !!