இணைய தமிழ் நூலகங்கள்

திருமதி.சி.கீர்த்தனா., M.A., NET

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

கே.ஆர்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

காக்கிவாடன் பட்டி, சிவகாசி.

இருபத்தோராம் நூற்றாண்டில் பயணித்து வரும் மனிதர்கள் அதிகமாக உலாவி வரக்கூடிய ஒன்று இணையம். எண்ணிலடங்காத தரவுகளை நினைத்த மாத்திரத்தில் இணையத்தில் தேடி அறிந்து அறிவை வளர்க்கும் போக்கு உருவாகியுள்ளது. இணையமே கற்பிக்கக்கூடியவராக செயலாற்றி வருகிறது. இன்றைய இளைய சமுதாயனரிடம் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வாசிக்கும் பழக்கம் என்ற ஒன்று குறைந்து வருகிறது. கையில் உள்ள இணையத்தின் வழி  நூல்களையும் தரவுகளையும் பதிவிறக்கம் செய்து படிக்கும் பழக்கம் நடைமுறையானது. இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன. இந்திய மொழிகளில் அதிகமாக தமிழ் நூல்களே மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய இணையத்தில் உள்ள தமிழ் நூலகங்கள் பற்றி ஆராயும் நோக்கில் இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.

குறிப்புச்சொற்கள்

            இணையம், நூல்கள், தமிழ், நூலகங்கள்

நூல் மற்றும் நூலகத்தின் தோற்றம்

            ஆரம்பகாலத்தில் மனிதன் தான் சிந்தித்த செய்திகளையும், கற்பனைகளையும் சுடுமண் பலகை, ஓலைகளில் பதிவு செய்து வைத்தான். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், இயந்திரங்களின் கண்டுபிடிப்பாலும் செய்திகள் நூல்களாக அச்சாக்கம் செய்யப்பட்டன. நூல் என்ற சொல் வழக்கு தொல்காப்பியத்திலே இடம் பெற்றுள்ளது1. நூல் என்ற சொல்லுக்கான பொருளை நன்னூல் எடுத்தியம்புகிறது.

            “உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை

            புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா – மரத்தின்

            கனக்கோட்டம் தீர்க்கும் நூல் அஃதேபோல் மாந்தர்

            மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு”2  

அதாவது, மரத்தின் வளைவைக் கண்டறிந்து சரி செய்ய நூல் பயன்படுவது போல, மனித மனத்தின் வளைவுகளை ஒழுங்குப்படுத்தவும், சீர் செய்யவும் சிறந்த கருவியாக நூல் செயல்படுகிறது என்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நூல்கள் மொத்தமாக, குவியலாக இருக்கும் இடமே நூலகம். 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கியர்களால் உருவானதே நூலகம். களிமண் பலகைகளில் எழுதி, நெருப்பில் சுட்டு பாதுகாத்து வந்த கருத்துக்களை எகிப்தியர்கள் ‘பாப்பிரஸ்’ என்ற தாளில் எழுதத் தொடங்கினர். அறிவியல் வளர்ச்சி உச்சம் அடைந்த பிறகு கணினியும், இணையமும் இணைந்து நூல்களையும், நூலகங்களையும் தமதாக்கிக் கொண்டன.

இணையம்-சொற்பொருள் விளக்கம்

            உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னனு வலையில் பிணைக்கப்பட்டதே இணையம். உலகலாவிய தகவல் பரிமாற்றத்திற்கு இப்பிணைப்பு உதவுகிறது. இணையம் என்ற சொல் ஆங்கிலத்தில் INTERNET என்று அழைக்கப்படுகிறது. INTERNATIONAL NETWORK என்பதன் சுருக்கமே INTERNET. இணை+அம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக்கணினியோடு இணைத்துச் செயல்படுவதாகும்.

உலக மின்னியல் நூலகம்

            மின்னியல் நூலகம் என்பது நூல்களை ஒளி அச்சு முறையில் பதிவு செய்வதாகும். UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் வழி நடத்துவதே உலக மின்னியல் நூலகம். >http://catalog.crl.edu என்பதே இந்நூலகத்தின் இணைப்பு.

            உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30- மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் 171 – நாடுகளிலுள்ள 72000 நூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று முனைவர் கு.கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்3.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

            ரோஜா முத்தையாவின் சேகரிப்பை பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும் தொடங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தினர் உலகளாவிய முயற்சியால் தொடங்கிய நூலகமே ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இந்த நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள், பத்திரிக்கைகள், செய்தித்தாள்கள்  இடம் பெற்றுள்ளன. இலக்கியம். மருத்துவம், சினிமா, நாட்டுப்புறக் கதைகள் மற்றும் வரலாற்று மதிப்புள்ள பல வெளியீடுகளை கொண்டுள்ளது. தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு ஆராய்ச்சி பொருட்களையும், வசதிகளையும் வழங்குகிறது. >http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl என்பதே இந்நூலகத்தின் இணைய முகவரி ஆகும்.

மதுரைத் திட்டம்

            பண்டைய இலக்கியப் படைப்புகளைப் பாதுகாத்தும், பரந்த அளவில் விநியோகித்தும் வருகின்றது மதுரைத் திட்டம். பண்டைய தமிழ் இலக்கியங்களை மின்னணு பதிப்புகளாக  சேகரித்து வெளியிடுகிறது. பழைய புத்தகங்களை தட்டச்சு அல்லது ஸ்கேன் செய்து தளங்களில் web/html மற்றும் pdf வடிவங்களில் இந்நூலகம் கொடுக்கிறது. 2004 ஆம் ஆண்டு முதல் தமிழ் யுனிகோடில் மின்னணு பதிப்புகளை (ETEXTS) வெளியிடத் தொடங்கியது. கையடக்க சாதனங்களிலும் பயன்படுத்த எளிய வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன.. திருக்குறள், அவ்வையார் பாடல்கள் என சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை சுமார் 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.  1998 ல் கே.கல்யாணசுந்தரம், முனைவர் பி.குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் தொடங்கப்பட்டது.

தமிழ் இணையக் கல்விக்கழகம்

            தமிழ் இணையக் கல்விக்கழகம் 17.02.2001 அன்று தொடங்கப்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் தமிழ் மொழியைப் பயிலும் நோக்கில் கல்வித்திட்டங்களையும் இந்நூலகம் செயலாற்றி வருகிறது. நூல்கள், கலைச்சொல், அகராதிகள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டு காட்சியகம் போன்ற உட்தலைப்புகளைக் கொண்ட மின்னூலகமாக உள்ளது. இந்நூலகத்தில் இலக்கண, இலக்கிய நூல்கள், தமிழ் உரைநடை நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் போன்றவை உள்ளன. >http://www.tamilvu.org என்பதே இந்நூலகத்தின் இணைய முகவரி.

தமிழ் மரபு அறக்கட்டளை

            தமிழ் மரபு அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய அறக்கட்டளையாகும். தமிழ் மரபு, வரலாறு, ஓலைச்சுவடிகள், மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பழைய நூல்களை மின் பதிப்பாக வெளியிடுகிறது. 2001 ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளையின் இணைய முகவரி >http://www.tamilheritage.org

சென்னை நூலகம்

            சென்னை நூலகம் கோ.சந்திரசேகரன் என்பவரால் 25.09.2006 முதல் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் யாவும் கிடைக்கின்றன. மின்னூல்களாக படிக்க மற்றும் pdf வடிவில் பதிவிறக்க ஏதுவாக உள்ளது எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது இதன் சிறப்பாகும்.      சென்னை நூலகத்தின் இணைய முகவரி >www.chennailibrary.com

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்

            உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் Journal Of Tamil Studies ல் 1972 முதல் வெளியான ஆய்வுக்கட்டுரைகளும், புத்தக மதிப்புரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன. >http://www.ulakaththamizh.org என்பதே உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைய முகவரி.

தொகுப்புரை

            நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகங்கள் உருவாகி வருகின்றன.  கணிப்பொறியையும், இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாகி உலக மக்களுக்கு உதவியாகவும், முன்னோடியாகவும் திகழ்கிறது. இந்த வகையில் இணையத்தில் தமிழ் நூலகங்களின் பங்களிப்பு பரவலாக உள்ளது என்பது இக்கட்டுரையின் வழி அறியமுடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.தொல்காப்பியம், இளம்பூரணனார் உரை

2. நன்னூல் மூலமும் தெளிவுரையும்- முனைவர் சுயம்பு 3. இந்து தமிழ் திசை (https://www.hindutamil.in>news)

error: Content is protected !!