திருமதிமு. கற்பகச்செல்வி,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மேட்டமலை, சாத்தூர்.
Abstract :
The Internet connects everyone in the world. The exchange of information takes place all over the world through this method. The rapid development of science has shrunk the world in our hands today. Computing is the cutting edge form of science. Another dimension of computer science is the Internet. To create a connection to all the people in different countries all over the world, Tamils spread across the world decided to create Tamil websites to keep Tamil news up to date, protect their heritage, and learn more about Tamil culture, language, and literature. Tamil has been trying to integrate into computer and internet usage. This article examines the news about the development of Tamil and its increasing dominance on the internet.
ஆய்வுச்சுருக்கம் :
உலகில் உள்ள அனைவரையும் ஒன்றிணைக்கிறது இணையம். இதன் மூலம் உலகம் முழுவதிலும் தகவல்பரிமாற்றம் நடைபெறுகிறது. அறிவியலின் அதிவேகவளர்ச்சியால் இன்றைய உலகம் நமது கைக்குள் சுருங்கி உள்ளது. அறிவியலின் அதிநவீன வடிவமே கணிப்பொறியாகும். கணினி அறிவியலின் மற்றொரு பரிமாணமே இணையம். உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் உள்ள அனைவருக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும், உலகெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் இணையத்தின் வழியாக தமிழின் செய்திகளை பராமரித்துக் கொள்ளவும், தங்கள் பாரம்பரியத்தை பாதுகாத்துக் கொள்ளவும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகள் ஆகியவற்றை கற்றுத்தெரியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர். உலகில் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் கணிப்பொறியின் வல்லமை பெற்ற தமிழர்கள் தமிழை கணிப்பொறி மற்றும் இணைய பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர். முயற்சியின் விளைவே இன்று இணைய பயன்பாட்டில் தமிழ் தலை சிறந்து வளர்கிறது என்பதை கருத்தாக கொண்டு தமிழின் வளர்ச்சி பற்றிய செய்திகளை கட்டுரையில் ஆராய்கின்றது .
முன்னுரை
இருபத்தொன்றாம் நூற்றாண்டினை தகவல் தொழில் நுட்பயுகம் என்று அழைக்கின்றோம். அவ்வுலகத்தில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மனிதனும் மொழியும் தன்னை அவற்றில் இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வகையில் தமிழ்மொழியினை இந்நூற்றாண்டுக்கேற்ப வளர்ச்சியடைய செய்வது இன்றைய இளஞர்களின் கடமையாகும். ஓலைச்சுவட்டில் தழைத்த தமிழனாது கணினியோடு இணைந்த இணையத்தில் தளர்நடையிட்ட தமிழ்மொழி இன்று தரணியில் தமிழ்சமூகங்களை இணைத்துள்ளது. இதற்கு இணையப்பக்கங்கள், வலைப்பூக்கள், இணையநூலகம், இணையஅகராதி, இணையஇதழ்கள் போன்றவை மிக முக்கிய பங்காற்றி வருகின்றது.
இணையைம் வரையறை:
இன்றைய நவீன உலகின் முக்கிய பங்காற்றி வருவது இணையமாகும். இணையத்தை பயன்படுத்த தெரியாதவன் குருடன் என்றே கூறலாம். “இணையம் என்பது வலையமைவுகளின் வலையமைவு ஆகும். சிறியனவாகவும் பெரியனவாகவும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன”1. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்துக்கணினிகளையும் ஒரே மின்னனுவலையில் சங்கிலிப்பிணைப்பாக இணையச்செய்வது தான் இணையம் எனப்படும். “International Netwrok” என்பதின் சுருக்கமே இன்டர்நெட் ஆகும். இணையம் என்பது World Wide Web என்பர். இதனை W3 என்றும் அழைக்கலாம்.
ஊடகம்:
ஊடகங்கள் என்னும் சொல்பரவல், செய்தித்தொடர்பு சாதனம் என்கின்ற பொருளைக் குறிக்கும். இருபதாம் நூற்றாண்டில் உலகிலுள்ள மக்களை ஏதாவது ஒருவகையில் தொடர்புபடுத்தும் சாதனங்களை ஊடகம் அல்லது மக்கள்தொடர்புச்சாதனம் என்று அழைப்பர். “பெருமளவுக்கு மக்களுக்கு செய்திகளை எடுத்துச்செல்லும் வடிவமைக்கப்பட்ட ஊடகத் தொடர்புச்சாதனங்கள் மக்கள் தொடர்புச்சாதனங்கள் என்று அழைக்கப்படகின்றன”2 ஊடகங்களை இரண்டு வகையாகப் பிரித்துள்ளனர். அதனை, 1. அச்சிடப்படும் ஊடகங்கள் (செய்தித்தாள்கள், பத்திரிக்கை, புத்தகங்கள்) 2.மின்னணுஊடங்கள் (வானொலி, தொலைக்காட்சி, தொலைத்தொடர்புசாதனங்கள், இணையம்)
தொடர்பியலும்இணையமும்:
உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இணையதளம் உதவுகிறது. இவற்றின் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை அந்தந்த மொழிகளின் மூலமும், பிறமொழிகளின் மூலமும் செய்திகளாக வெளியிடுகின்றனர். இதன் மூலம் அந்தந்த பகுதியில் நடக்கும் நிகழ்வுகளையும் அந்தந்த மொழிகளில் தகவல்களை உடனுக்குடன் மற்ற மொழி பேசும் மக்களும் அறிந்து கொள்ள இணையம் உதவுகின்றது. அவ்வாறு தகவல்கள் மூலம் மூலத்தரவுகளை மிகவும்கவனமும் அதன்மையக் கருத்தில் எந்தவிதமாற்றமும் செய்யாமல் தெளிவாக இருத்தல் வேண்டும். அவ்வாறு இருப்பது தான் சிறந்த தகவல் தொடர்பாக அமையும். ஆரம்பகாலத்தில் புலவர்களும், மன்னர்களும் தமிழிலக்கியத்தினை ஓலைச்சுவடி, முரசு, கல்வெட்டு, செப்பேடுகள் போன்றவற்றின் மூலமாக பதிவு செய்தனர். ஆனால் இன்றைய காலத்தில் புத்தகம், செய்தித்தாள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, தந்தி, இணையதளம், குறுஞ்செய்தி, வலைப்பூக்கள் போன்றவற்றின் மூலம் தகவல்களை பெறலாம்.
இணையமும்பங்களிப்பும்:
ஓலைச்சுவடிகளின் வாயிலாகவும், முன்னோர்களின் குறிப்புகளின் மூலமாகவும் சங்ககாலமக்களின் வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இன்றோ உலகெங்குமுள்ள தமிழர்களின் வரலாற்றினை அடுத்த நிமிடமே நாம் அறிந்து கொள்ள இணையத்தின் பங்களிப்பு மிக இன்றியமையாததாக அமைகின்றது. அவற்றினால் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவைகள் இணையஇதழ்கள், இணையவானொலிகள், இணையதொலைக்காட்சிகள், இணையப்பக்கங்கள், இணையப்பல்கலைக்கழகம், இணையநூலகம், சமூகவளைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவைகள் ஆகும்.
இணையத்தில்தமிழின்தோற்றம்
சமுதாய வாழ்வில் எந்தவொரு செயலும் நன்முறையில் தொடங்கி சீரியமுறையில் நடைபெற ஒருங்கினைந்த அமைப்பு முறையே பயன் தரும். பண்டைய தமிழ்நாகரிகத்தின் பன்னாட்டுச் செய்திகளாகத் தமிழர்கள் தென்மேற்கு, தென்கிழக்கு ஆசியநாடுகளில் அரசாங்கத் தூதுவர்களாகவும், வணிகர்களாகவும், அந்தந்த நாடுகளில் சில காலம் குடியேறினர். இவ்வாறு குடியேறிய மக்கள் நல்ல நிலையில் வாழ்கின்றனர். ஆயினும் தமிழ்நாட்டிலிருந்து பல்லாண்டுகளுக்கு முன்பு சென்ற தமிழர்களின் வழித் தோன்றல்கள் தன் தாய்நாட்டுடன் நேரடித்தொடர்பு குறைந்ததால் தமது தாய்மொழியான தமிழை மறந்தும், தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பினை உணராமலும் போய்விட்டனர்.
இந்நிலையில் இணையத்தின் வளர்ச்சியால் புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெறச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். “உலகெங்கும் பரவி வரும் தமிழர்கள் இணையத்தின் வழியாகத் தமிழில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினர். அவர்கள் தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றைத் தொடர்ந்து கற்றுத் தெளியவும் தமிழ் இணையதளங்களை உருவாக்க விரும்பினர். உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் கணிப்பொறியில் வல்லமை பெற்ற தமிழர்கள், தமிழைக் கணிப்பொறி மற்றும் இணையப்பயன்பாட்டில் கொண்டு செல்ல முயன்றனர்.”
அம்முயற்சியின் விளைவே இன்று இணையப்பயன்பாட்டில் தமிழ் தலை சிறந்து வளர்கிறது. தமிழில் இணையதளங்கள் உருவாக பிறிதொரு காரணமும் முக்கியமாகும். 1983-க்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் கலவரத்தால் தமிழர்கள் உலகம் முழுக்க புலம் பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. அதுபோன்று தமிழகத் தமிழர்கள் பணியின் பொருட்டு அயல்நாடுகளுக்கு சென்றனர். இவ்வாறு சென்ற தமிழர்கள் தாய்நாட்டுடன் தொடர்புகொள்ளவும், பிறநாடுகளில் வாழும் தமிழர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இணையத்தைப் பயன்படுத்தினர். இதில் தங்களை ஒன்றிணைக்க தமிழ் வளர்ச்சியில் கவனம் செலுத்தினர். இதன் விளைவாய் பல்வேறு சங்கங்கள், அமைப்புகளை இணையத்தில் உருவாக்கினர். உலகம் முழுக்க இத்தகைய பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாய் இணையத்தில் தமிழ் எளிதில் வளர்ந்தது.
“தமிழ் இணையத்தளங்களின் தோற்றம் பற்றித் துல்லியமாகக் குறிப்பிட முடியாதபடி உள்ளது. இதற்கு காரணம் இத்தகைய முயற்சி உலகம் முழுக்க பரவலாக நடந்தமையாகும். ஒவ்வொரு தளத்தினரும் தங்களின் முயற்சியே முதன்மை என்கின்றனர். இவ்வாறு குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு இணையத்தில் தமிழின் தோற்றம் பரவலாகவும், விரைவாகவும் உருவானது. இத்தகைய முயற்சியும் ஒருவகையில் இணையத்தில் தமிழின் வளர்ச்சிக்கு பெரும்பங்காய் அமைந்தன.
இணையத்தில்தமிழின்வளர்ச்சிநிலை
உலகின் பழமை வாய்ந்த உயர்தனிச்செம்மொழிகள் எட்டில் (கிரேக்கம், இலத்தீன், அரபி, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம்) இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக தமிழும் சீனமும் விளங்குகிறது. இன்றைய உலகமயமாக்கலான காலகட்டத்திலும் வழக்காற்றில் நவீனமொழியாகவும், வரலாற்றில் வளமான மொழியாகவும் வளர்ந்து நிற்கிறது. இன்றைய காலகட்டத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழோடு கணினித்தமிழ் நான்காம் தமிழாய் வளர்ந்து வருகிறது.
“ஒரு நாட்டின் மொழியை ஏற்றுக்கொள்ளாத கணிப்பொறி அந்நாட்டில் இயங்க முடியாது. கணிப்பொறியை ஏற்றுக்கொள்ளாத ஒரு மொழி வாழ முடியாது என்பது வரலாற்று உண்மையாகி விட்டது. மேற்கண்ட கூற்று உணமையே. ஏனெனில் இன்றைக்கு கணிப்பொறியை பயன்படுத்தாத துறைகளே இல்லையெனும் அளவிற்கு கணினி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கணினியில் தமிழ்மொழியின் பயன்பாட்டிற்கு காரணம் நம் மொழியின் சிறப்பே ஆகும். ஏனெனில் தமிழ்மொழியில் எழுத்தமைப்பு, ஒலியமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு ஆகிய எல்லாவற்றிலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கிறது. இத்தனை சிறப்பினை பெற்றிருப்பதால் கணினியில் தமிழ் மிகக் குறுகிய காலத்தில் நுழைந்தது.
இதற்குப் பெருமளவில் துணைநிற்பவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களேயாவர். நாடு, இனம், மொழி எனக் கடல் கடந்து சென்றாலும் நம் தமிழர்கள் பண்பாடு, மொழி, கலை போன்றவற்றால் தமக்கான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தை விட்டுத் தொழில் காரணமாக அயல்நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள், தமிழைப் பேசவும், கேட்கவும் வழி இல்லாமல் இருந்த நிலையில் இணையம் மூலம் சந்தித்துக் கொள்ள தமிழில் மின்னஞ்சல்களையும், இணைய இதழ்களையும், இணையத் தளங்களையும் பயன்படுத்தினர். இதுபோன்ற ஆரம்பகட்ட முயற்சிகளே இன்று இணையத்தமிழ் என்ற துறையை வளர்த்தெடுத்தன. கணிப்பொறி வரலாற்றில் 1975-இல் தனிமனிதக்கணிப்பொறி (Personal Computer) கண்டுபிடிக்கப்பட்டதும், உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் தத்தமது மொழியைக் கணினியில் காண ஆர்வம் காட்டினர். இதுபோன்றே கணிப்பொறியில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியினை புலம்பெயர்தமிழர்கள் மேற்கொண்டனர். “தமிழ் எழுத்துருக்குறியாக்க முயற்சிகள் 1980-இன் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.”
உலகம் முழுவதிலும் பல்வேறு தமிழறிஞர்கள் 1984 முதல் 1995 வரை அவரவர்க்கென தனிகுறியீட்டு முறையை அமைத்து எழுத்துருக்கள், விசைப்பலகைகள் அமைத்து தமிழைக் கணினியிலும், இணையத்திலும் ஏற்றம் பெறச் செய்தனர். இணையத்தில் முதல்நிலையாகத் தாங்கள் கண்டுபிடித்த தமிழ் எழுத்துருக்கள் மூலமாக தமிழில் மின்னஞ்சல் அனுப்பினர். பின்னர் இணைய இதழ்களும், இணையத் தளங்களும் இணையத்தில் உருவாகின.
இத்தகைய குழப்பத்தால் முதல் தமிழ் இணைய இதழ் மற்றும் முதல் இணையத்தளம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. “1995-ஆம் ஆண்டில் நா.கோவிந்தசாமி “கணியன்” என்கிற பெயரில் நடத்தியது தான் முதல் தமிழ் இணையத்தளம். இவ்விணையத்திற்கான தகவல்கள் சிங்கப்பூர் மற்றும் சென்னையிலிருந்து தொகுக்கப்பட்டன. இத்தளத்தினை படிக்க ‘கணியன்’ என்ற எழுத்துருவை பயன்படுத்த வேண்டும்.
தமிழின்முதல்இணையதளம்எது?
இணையத்தில் முதல்தமிழ் தளம், இணைய இதழ் குழப்பம் நிலவினாலும் இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் தளங்களும், இணைய இதழ்களும் வெளிவருகின்றன. இவற்றில் சங்கஇலக்கியம், காப்பியங்கள், பக்திஇலக்கியம், சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுக் கட்டுரைகள், நூலகம், இணையப்பல்கலைக்கழகம், அகராதிகள், சினிமா போன்ற ஏராளமான தகவல்கள் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்டுள்ளன.
கணிப்பொறியில்தமிழ்
கணிப்பொறி என்றாலே ஆங்கிலத்தில் இயங்கக்கூடியது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணங்கள் திரையில் ஆங்கிலத்துக்கான முக்கியத்துவம், கணிப்பொறி பற்றிய வெளிநாட்டுப் புதுசெய்திகளும், அறிவிப்புகளுமே இப்படியொரு மாயையை மக்கள் மனதில் பதித்துள்ளன. ஆனால் இவையனைத்தும் பொய்யானத் தோற்றமே. கணிப்பொறியின் செயற்பாட்டு மென்பொருள்கள் பெரும்பாலும் ஆங்கிலமொழியினைக் கொண்டு வடிவமைக்கப்படுவதால், கணிப்பொறியின் செயல்பாடுகள், மற்றும் இணையச்செயல்பாடுகள் ஆங்கில மொழியைச் சார்ந்து அமைந்துள்ளன. “பிரெஞ்சு, செருமானிய, சப்பானிய, சீனநாட்டினர் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். அவர்களது ஆழ்ந்த தாய்மொழிப்பற்றின் விளைவாகக் கணிப்பொறிப் பயன்பாட்டிலும், இணையத்திலும் இந்த மொழிகள் இடம்பெறத் தொடங்கின.
“கணிப்பொறி, நாம் கொடுக்கின்ற கட்டளைகளுக்கேற்பச் செயல்படுகின்ற, சிந்திக்கும் திறனற்ற ஒரு பொறியாகும். கணிப்பொறி பல்லாயிரக்கணக்கான மின்சுற்றுகள் இயக்கப்படுவதால் செயல்படும் ஒரு திறன்மிக்க கருவி. இந்த மின்சுற்றுகள் 0.1 என்ற இரும எண் குறியீடுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பொறி மொழியின் (Machine Language) கட்டளைகளால் இயக்கப்படுகின்றன.”
ஒரு மொழியை நாம் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமானால், அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கும் முறையை நாம் குறியீட்டுமுறை என்று அழைக்கிறோம். ஒரு மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்த வேண்டுமென்றால், அந்த மொழிக்கு ஒரு குறியீட்டு முறையும் அதற்கு ஏற்ற ஓர் எழுத்துருவும் இருந்தால் போதும். அந்த மொழியைக் கணிப்பொறியில் பயன்படுத்தலாம் மற்றும் ஒரு மொழிக்கு கணிதப்பண்பு இருப்பின் எளிதில் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும்.
“கணிப்பொறியில் ஆங்கிலம் போன்று எந்த மொழியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் கணிப்பொறி கணித அடிப்படையில் செயல்படக்கூடிய ஒரு கருவியாகும். அவ்வகையில் தமிழ்மொழி கணிதப் பண்புடைய மொழியாகும். எனவே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்துவது சுலபம்.”
கணிப்பொறியில் தமிழை உருவாக்க உலகம் முழுவதிலும் பரவியுள்ள கணினித்தமிழ் வல்லுனர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்வாறு பல்வேறு இடங்களில் நடைபெற்ற முயற்சியின் விளைவாய் பல்வேறு தமிழ் எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல்வேறு விசைப்பலகை முறைகளும் உருவாக்கம் பெற்றன. இவற்றினை நெறிப்படுத்த பல கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தி கணிப்பொறியில் தமிழை வளர்த்தனர். இத்தகைய ஒருங்கிணைப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே தமிழ்த்தரவுகள் கணினியில் ஏற்றம் பெற்று வந்தன.
முடிவுரை
இணையத்தின் தமிழின் வளர்ச்சியில் இணையம் வரையறை ஊடகம் இணையமும் பங்களிப்பும் இணையத்தில் தமிழின் தோற்றம் இணையத்தில் தமிழில் வளர்ச்சி கணிப்பொறியில் தமிழ் ஆகியவற்றை விளக்குவதாக ஆய்வு கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
சான்றென்விளக்கம்
1.தகவல்தொழில்நுட்பம், புனிதா-பக்கம் 53
2.சமூக அறிவியல் தமிழ்நாடு பாடநூல் கழகம், பக்கம் -150
துணைநூற் பட்டியல்
1.தகவல்தொழில்நுட்பம், புனிதா–2016சென்னை 2.சமூக அறிவியல் தமிழ்நாடு பாடநூல் கழகம்,