திருமதி ச.மீனாட்சி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
ஆய்வுச்சுருக்கம்
தற்காலத்தில் இணையம் சார்ந்த தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொழில்நுட்பங்களை வளர்ந்து வருகின்ற வல்லரசு நாடுகள் தத்தமக்குரிய தாய் மொழியிலே கற்பிக்க முயல்வதால் கண்டுபிடிப்புகள் எளிமையாகின்றன. அவ்வழியிலே இணையமும் தமிழும் சுமூகமாக உறவாடுகின்றன. இலக்கியம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் என்று பல்கி பெருகி பல்சுவை தொடர்பான கருத்துக்களும் வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன. எனவே வலைப்பூ அனைத்து துறைச்சார்ந்த மக்களையும் ஒருங்கே சங்கமிக்கின்றன. தனியொருவரே தத்தம் துறைச் சார்ந்த செய்திகளின் புதியமுறையை இணையத்தில் ஏற்றும் வழிமுறையே வலைப்பூக்கள். இப்பூக்கள் இணையம் வழியிலான தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றன. இவற்றின் சாரம்சமாக இணையதளத்தில் தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சியினைப் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் சாரம்சம்.
Abstract
Nowadays internet technology is used in all fields. Innovations become easier when emerging superpowers try to teach modern technologies in their respective mother tongues. In that way, the internet and Tamil have a smooth relationship. Literature, science, medicine, technology and many other topics are also featured in the blog. So websites collaborates people with all disciplines together. Blogs are the only way to bring people from all disciplines together. Blogs are the only way to express a new type of industry – Specific news to the internet. These blogs support the development of Tamil through the internet. The essence of this article is to explain the development of Tamil blogs on the internet.
திறவுச்சொற்கள்
வலைப்பூக்கள், இலக்கியம், மருத்துவம், அறிவியல், வலைத்தளம்
முன்னுரை
மனிதனின் சிந்தனைகள் மலர்களாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய தளமே வலைப்பூக்கள்(Blog). தற்காலத்தில் மின்னஞ்சலுக்கு ஈடாக வலைப்பூக்களை தனித்துவமாக அனைவரும் கையாண்டு வருகின்றனர் என்று கூறின் மிகையாகாது. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று தமிழ் மொழியினை சிறப்பித்த பாரதியின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்மொழி வலைப்பூக்களில் யாபித்து எங்கும் நீக்கமற நிலைத்துள்ள நிலையினை இன்றும் நாம் காணலாம். அனைத்து தர மனிதர்களையும் ஈர்க்கும் வகையில் இலக்கியங்கள், கட்டுரைகள், கவிதைகள், படைப்புகள், ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், பொழுதுபோக்கு என்று பல்வேறான தளங்களிலும் வலைப்பூக்கள் தற்காலத்தில் தடம் பதிக்கும் வண்ணமே திகழ்கின்றன. இணையதளத்தில் தமிழ் வலைப்பூக்கள் அடைந்துள்ள வளர்ச்சினைப் பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில் காண்போம்.
வலைப்பூக்கள் (Blog)
Blog என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக தமிழில் தோன்றிய பெயரே வலைப்பூ. இதனை ஆங்கிலத்தில் Web blog என்றும் அழைப்பர். 2003 ஆம் ஆண்டில் கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினர் என்று பினாக்டிரைவ் என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் தமிழில் வலைப்பூக்கள் உருவாகிய போதிலும் தமிழ் எழுத்துருக்களால் இவற்றின் வளர்ச்சி சற்று சிக்கலானது. இச்சிக்கலைத் தொடர்ந்து உருவாக்கியதை திரையில் எங்ஙனம் காண்பது என்ற கேள்வி எழுந்தது. இச்சிக்கல்கள் சரியாகி உருவான வலைப்பூக்களின் எண்ணிக்கையை துரை.மணிகண்டன் தன் நூலில், “2007 – 2009 டிசம்பர் முடிய ஏறத்தாழ 12,000 வலைப்பூக்களும் 2020 முடிய 27,876 வலைப்பூக்கள் தமிழில் தோன்றியுள்ளன.”1 என்ற முறையில் குறிப்பிட்டுள்ளார். தற்காலத்தில் தமிழில் ஏராளமான வலைப்பூக்கள் உருவாகியுள்ளது என்பதே இணையத்தில் தமிழ் மொழிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.
வலைப்பூக்களின் வகைப்பாடு
இணையம் வழி நம் கருத்துக்களை எழுத்தாலும், ஒலியாலும், ஒளி வடிவக்கோப்பாலும், கண்ணுக்கினிய ஓவியத்தாலும், கருத்துகள் நிறைந்த படத்தினாலும் பிறருக்கு இணையம் வாயிலாக வெளிக்காட்டுவதே வலைப்பூக்கள். இவ்வலைப்பூக்கள் ஒவ்வொரு மனிதனின் தன்மை மற்றும் தேவைகளுக்கேற்ப கையாளப்படுகின்றன. அவ்வகையில் வலைப்பூக்கள் ஏராளமான அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு உருவாகின்றன. அதாவது தனிப்பட்ட மனிதனின் குடும்பம் சார்ந்த புகைப்படங்கள், நண்பர்களின் அரட்டை, தான் கண்டு ரசித்த நிகழ்வுகள், தனது படைப்புகள் என்று பல கோணங்களில் வலைப்பூக்கள் தற்காலத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இவ்வளர்ச்சியின் அடிப்படையில் வலைப்பூக்களை,
- இலக்கியம் சார் வலைப்பூக்கள்
- ஆன்மீகம் சார் வலைப்பூக்கள்
- அறிவியல் சார் வலைப்பூக்கள்
- மருத்துவம் சார் வலைப்பூக்கள்
- பெண்களுக்கான வலைப்பூக்கள்
- பல்சுவை சார் வலைப்பூக்கள்
என்ற முறைகளிலெல்லாம் பாகுபடுத்தி ஆராயலாம்.
இலக்கியம் சார் வலைப்பூக்கள்
இலக்கியம் என்பது காலக் கண்ணாடியாகும். காலத்திற்கேற்ப இலக்கியங்கள் பல்வேறு நிலைகளில் வலம் வருவதால் மட்டுமே இன்றும் காலக் கண்ணாடி என்றே சுட்டப்படுகின்றன. “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்ற பாரதியின் இலக்கியத் தேடலை தற்காலத்தில் இணையம் நிறைவேற்றி விட்டது என்று கூறின் மிகையில்லை. தற்காலத்தில் எட்டு திக்கிலும் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கி இலக்கியம் தொடர்பான செறிந்த கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளனர்.
தமிழ் இலக்கியம்
2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ் இலக்கியம் என்ற வலைப்பூ உருவானது. இவ்வலைப்பூவானது ஆரம்ப பாடசாலை, மழலை நிலை என்ற இரு நிலைகளங்களைக் கொண்டு செயல்படுகின்றது. ஆரம்ப பாட சாலையானது தாய்மொழி, கணிதம், விஞ்ஞானம், சமூகம் என்ற நிலையில் செயல்படுகின்றது. மழலை நிலை என்ற பிரிவில் குழந்தைகளுக்கான கதை மற்றும் பாடலினை காணொளியாகவும் காட்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய வலைப்பூ குழந்தைகளின் மனதினை எளிதில் ஈர்க்க கூடிய வண்ணம் திகழ்கின்றது. www.illakkaiyam.com என்ற இணைய தளத்தில் தமிழ் இலக்கியம் இளைப்பாறும் இடமாக முகப்பு பகுதியில் இயல், இசை, நாடகம், கவிதை என்ற உள்ளடக்கங்களைக் கொண்டு இலக்கியங்களை இவ்வலைப்பூ பிரதிபலிக்கின்றது. இயற்றமிழில் சிறுகதை மற்றும் கட்டுரைகள் என்று சங்க இலக்கியம் தொடங்கி அனைத்து வகையான இலக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. இசைத்தமிழில் நாட்டுப்புறப்பாடல், தெம்மாங்குப் பாடல், தாலாட்டு மற்றும் ஒப்பாரிப்பாடல் என்று பாடல்கள் பற்றிய முழுமையான விவரங்களும் இவ்வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன. நாடகப் பகுதியில் இலக்கியம் சார்ந்த திரைப்பட வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இலக்கியம் சார்ந்த வலைப்பூக்களாக, அழியாச்சுடர்கள் – http://azhiyasudargal.blogspot.in, சுபவீ வலைப்பூ – http://subavee-blog.blogspot.in/, பாலமகி பக்கங்கள் – http://balaamagi.blogspot.com/2015/09/blog-post_29.html, திருத்தமிழ் வலைப்பூ – http://thirutamil.blogspot.in/2005/05/blog-post.html, கறுப்பி, சுவடுகள், தேடற்சரம், தமிழ் மொழி, கதிர், காலக்கிறுக்கன், தூறல், தேவ்பக்கம், நுனிப்புல், குயில், மனசாட்சி, சிந்தனைகள், குருவிகள், நாச்சியார், இன்ன பிற, வேர்களைத் தேடி என்று இலக்கியம் சார்ந்து பல்வேறான வலைப்பூக்கள் உருவாகியுள்ளன.
ஆன்மீகம் சார் வலைப்பூக்கள்
மனிதனை வீடு பேறு அடையச் செய்வது ஆன்மீகம். இவ் ஆன்மீக நெறியினை இணையத்தின் வாயிலாக அடைய முயல்பவர்கள் ஏராளமானவர்கள். எனவே ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர்கள் தங்களுக்குப் பிடித்த கதைகளையும் சாமிகளையும் ஆன்மீகக் கருத்துகளையும் கொண்டு தமிழில் வலைப்பூக்களை உருவாக்குகின்றனர். 2006 இல் முருகனருள் (http://muruganarul.blogdpot.in) என்ற பெயரில் உருவான வலைப்பூவில் முருகன் பற்றிய பாடல்களைத் தொகுத்ததோடு அதனைப் பாடிய பாடகர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வஜ்ரா படித்த செய்திகள், வைதிகஸ்ரீ, புதுவை சரவணன், மரைக்காயர் பக்கம், சுழியம், நினைவின் விளிம்பில், ரெகுபதி, அன்னையின் கருணை, சுவனப்பிரியன், கந்தரலங்காரம், அம்பலத்து அரசே, சிந்தனை துலகல் என்ற பெயர்களிலெல்லாம் ஆன்மீகம் சார் வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இஃது தனிப்பட்ட ஆலயங்கள் குறித்தும், பொதுவான நம்பிக்கைகள் பற்றியும், பாடல்கள், சுப்ரபாதம், தோத்திரங்கள் மற்றும் இந்து சமய கருத்துக்களை வலியுறுத்துகின்ற விதமாகவும் இவ்வலைப்பூக்களில் தகவல்கள் அமைகின்றன.
அறிவியல் சார் வலைப்பூக்கள்
சான்றோர் அவைகளுக்கே உரித்தான அறிவியல் செய்திகளை ஒரு சிலர் வலைப்பூவில் பதிவு செய்து அன்றாட பாமர மக்களும் அறிந்து கொள்ளச் செய்கின்றனர். வானியல், கணிதம், நவீன தொழில் நுட்பங்கள் என்று பல்வேறு அறிவியல் கூறுகளை அறிமுகப்படுத்துவதோடு புதுப்பிக்கின்ற வகையிலும் வலைப்பூக்களில் அறிவியல் செய்திகள் பதிவு செய்கின்றன. 2003 இல் தொடங்கப்பட்ட குருவிகள் என்ற வலைப்பூவானது அதிகப்படியான அறிவியல் தொடர்பான கருத்துக்களை படங்களோடு பகிர்ந்துள்ளது. பிகேபி என்ற வலைப்பூவில் இணையம் தொடர்பான அனைத்து செய்திகளும் இடம்பெறுவதோடு சிறு சிறு துண்டு செய்திகளாகவும் அறிவியல் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து எண்ணங்கள் எழுத்துக்கள், மென்பொருட்கள், செல்வராஜ் 2.0, ஆயங்குடி – கணிப்பொறியாளர், நெஞ்சின் அலைகள், சில விடயங்கள், தமிழ் ரோபோ, கணித்துளி, மணிவானதி என்று பல்வேறான வலைப்பூக்கள் அறிவியல் சார்ந்த செய்திகளை பதிப்பித்துள்ளது.
மருத்துவம் சார் வலைப்பூக்கள்
வலைப்பூக்களில் மருத்துவம் சார்ந்த கருத்துகளும் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ் வலைப்பூக்களில் மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர் வேதம், ஹேமியோபதி என்று அனைத்து வகையான மருத்துவமுறைகளும் வலைப்பூவில் இடம்பெறுகின்றன. 2007 – இல் உருவாக்கப்பட்ட மூலிகை வளம் என்ற பெயரிலான வலைப்பூவில் மூலிகை பற்றிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
பெண்களுக்கான வலைப்பூக்கள்
வலைப்பூக்களில் பெண்களுக்கென்று தனித்துவமான ஒரு சில இடங்களும் உள்ளன. இவ்வலைப்பூக்கள் பெண்களின் நலம் குறித்தும் சுதந்திரம் குறித்தும் அழகுற பதிவு செய்துள்ளன. 2003 இல் திருமதி சந்திரவதன என்பவர் பெண்கள் (http://Pennkal.blogspot.in\) என்ற பெயரிலே வலைப்பூவை உருவாக்கி பெண்கள் தொடர்பான பல ரகசியங்களை பதிவு செய்தனர்.
பல்சுவை சார் வலைப்பூக்கள்
எவ்வித துறைகள் சார்ந்தும் அமையாது பொழுது போக்காகவும் வலைப்பூக்கள் உள்ளன. இவ்வலைப்பூக்கள் காதல், திரை, துணுக்குகள், அரசியல், சமுதாயம் என்று பல்விதமான செய்திகளை தாங்கிய வண்ணம் செயல்படும். தினேஷின் பார்வை என்பது சிங்கப்பூரைச் சார்ந்த தினேஷ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவ்வலைப்பூவில் அவர் கண்ட இயற்கை நிகழ்வுகளை படங்களுடன் பதிவு செய்துள்ளார். தமிழ் சசி என்ற வலைப்பூவில் பெரும்பான்மையாக அரசியலும் சிறுபான்மையாக பொழுது போக்கும் இடம்பெறுகின்றன. வான்மதி என்ற வலைப்பூவில் கவிதை மற்றும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. சிதைவுகள் என்ற வலைப்பூவில் சமுதாயக் கருத்துகளும், கலையகம் என்ற வலைப்பூவில் அரசியல், பொருளாதாரம், சமுதாயம் என்று பல்வேறு கோணல்களிலும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழரங்கம், மனித தெய்வங்கள், நாணயம், காலம், தமிழ்த்தேசியம், சக்தி, வன்மம், மலர்வனம் என்று ஆயிரத்திற்கு மேற்பட்ட வலைப்பூக்களானது இணையத்தில் இடம்பெற்றுள்ளது.
முடிவுரை
- தமிழிலக்கியங்களில் வலைப்பூக்கள் ஓர் தனிப்பட்ட இலக்கிய வகையாக உருவெடுத்துள்ள முறையினை அறிய முடிகின்றது.
- உலக நாடுகளில் வாழ்கின்ற அனைத்து தமிழ் ஆர்வலர்களின் மொழிப்பற்றினையும் வளர்க்கின்ற களமாக வலைப்பூ செயல்படுவதை அறிய முடிகின்றது.
- தமிழ் மட்டுமின்றி அறிவியல் சார்ந்த செய்திகளும் புகைப்படங்களும் நம்மை அறியாமையிலிருந்து விழிப்படையச் செய்கின்ற களனாக வலைப்பூவின் செயல்பாடு வெளிக்கொணரப்படுகின்றது.
இணைய தளத்தில் உருவாக்கப்பட்ட வலைப்பூக்கள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்ற முறையினைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.