முனைவர் சு.தங்கமாரி,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுயநிதி),
வி.இ.நா.செந்திக்குமாரநாடார் கல்லூரி (தன்னாட்சி),
விருதுநகர்.
முன்னுரை :
நூல்களாலும் நுண்அறிவாலும் அறிய அறிய முன்னைய மானுட அறியாமை தெள்ளிதின் தெரிவதுபோல (அறிதொறு அறியாமை கண்டற்றால்) இன்றைய கல்வியில் கணினித் தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வர வரக் கல்வியின் மேன்மை வளர்பிறையாகி, இருண்மை தேய்கின்றது; மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் இன்று பெற்றுள்ளது. தொடக்கக் கல்வி தொடங்கி ஆய்வுப் பட்டம் வரையிலான அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் இந்நுட்பம் பயன்படுகிறது. கற்றலிலும் கற்பித்தலிலும் இந்நுட்பத்தின் பல்வேறு தளங்களைக் கண்டறிவது கல்வியாளர்களின் வேட்கையாகக் காணப்படுகிறது. கணனி நுட்பத்தோடு இணைந்த இணையவழி அணுகுமுறையில் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் பயன்படுத்தப்பட வேண்டிய சூழல்கள் உருவாகி வருகின்றன. இந்தச் சூழலில் கணினி வாயிலாகப் பெறப்படும் கல்வி வளங்கள் நுகர்வு குறித்தும் காப்புரிமையின் தேவை குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் மையமாகும்.
கணினித்தரவு நுகர்வும் கருத்துத் திருட்டும் :
பழம் புராணக் கதையான மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ‘ஏகலைவன்’ என்ற கற்பனை பாத்திரம் உண்டு. மகத நாட்டைச் சேர்ந்த இவன் பிறப்பினால் ஒரு வேடன். அவன் இருந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது. இவன் உலகில் சிறந்த வில் வித்தைக் கற்றுத் தேர்ந்தவனாக வர எண்ணினான். துரோணர் தான் சிறந்த குரு என்று தெரிந்து கொண்டு அவரிடம் சென்று தனக்கு வில் வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டினான். தான் சத்திரியர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுப்பதால், அதை வெளிக்காட்டாமல், ஏராளமான சீடர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் தனக்கு நேரமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பிறகு நான் எப்படி இதைக் கற்றுக்கொள்வது என்று துரோணரிடமே கேட்டான். “உனக்கு உன்மீது நம்பிக்கை இருந்தால் நீ எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வாய்” என்று அனுப்பிவிட்டார். இந்தக் கதையானது குரு இல்லாமல் தானாகக் கற்றுக் கொள்ளும் ஒருவனைப் பற்றியானது. இன்று கல்வியில் கணினி வழி துரோணர்கள் நிரம்ப இருக்கின்றனர். ஆனால் ஏகலைவன் தான் சரியான வித்தையைக் கற்க மறந்து திரிகின்றனர்.
மேற்சொன்ன கதையினைப் போல, கணினியில் இன்று எண்ணிலடங்காத நூல்களும்(E.Books), வலைதளங்களும்(Websites), வலைப்பூக்களும்(Blogspots) இலக்கியம் தொடங்கி அறிவியல் தொழில்நுட்பம் வரையிலாக அனைத்துத் துறைகளுக்கும் சொல்லிக் கொடுக்கத் தயாராக இருக்கின்றனர். இந்தத் தரவுகளை நுகர்வதற்கு ஏராளமான கணினித் தரவு நுகர்வோர்களும் நிரம்ப இருக்கின்றனர். கணினி வழங்குகின்ற வளங்களையும் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் தான் பெற்றுக் கொண்ட மூலங்களுக்கான அடையாளங்களைக் கொடுக்காமல் திருட்டுத்தனமாகத் தானாக அறிந்தது போல, காட்டிக் கொள்கின்றனர். இங்கே மிகப் பெரிய கருத்துத்திருட்டு(Plagiarism) நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதிலும், ஆய்வுத் தளத்தில் இன்னும் இன்னும் நிரம்ப நாளொருவண்ணம் நிகழ்கின்றன. இதனைத் தடுப்பதற்கான சிறுதகவல் குறிப்புகளைக் கொண்டதாகப் பின்வருவன அமைகின்றன.
பன்னாட்டுப் பதிவுகளும் காப்புரிமையும் :
பெரும்பான்மையிலான கணினிப் பொது மொழியாக ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி கணினியில் இந்த மொழிகளுக்கான பதிவுகளும் நிரம்ப உள்ளன. ஆங்கில மொழியிலோ அல்லது பிரெஞ்சு மொழி போன்ற ஆராய்ச்சி மொழிகளிலோ கணினித் தளங்களில் பல்வேறு தளங்கள் செயல்படுகின்றன. ஆனால், தமிழ் போன்ற உள்நாட்டு மொழிகளை அவைகள் இன்று வரை ஏற்றுக் கொள்வதில்லை. ஏற்காமைக்கு வேறு காரணங்கள் இல்லை; அதிகப் பயன்பாட்டுக்கு நாம் கொண்டு செல்லாமையே காரணமாகும். சான்றாக, கூகுள் ஸ்காலரில் கொடுக்கப்பட்டுள்ள அமைப்பு(Settings) மொழிகளில் இந்திய மொழிகள் ஒன்று கூட இன்னும் இடம்பெறவில்லை என்பதைக் கவனிக்க. இதனைப் போக்க அதிக அளவிலான ஆராய்ச்சிகள் வெளிவர வேண்டும். அவ்வாறு ஆராய்ச்சித்திறன் மேம்பட்டு அதிக படைப்புகள் வெளிவர வேண்டும். அவ்வெளியீடுகள் பன்னாட்டுப் பொதுமைத் தளங்களில்(Google Scholar, orcid, Research gate, Road) பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
காப்புரிமை என்ற சொல்லானது இலத்தீன் சொல்லான ‘patere’-இலிருந்து வந்தது. இதன் பொருள் “வெளிப்படையாக வைத்தல்” (அதாவது, பொதுமக்களின் பார்வைக்கு வைத்தல்) என்பதாகும். மேலும் காப்புரிமைப் பத்திரம் என்ற வார்த்தையின் சுருக்கப்பட்ட பதிப்பாக நேரடியாக வந்தது. இது உண்மையில் அரசாங்க விதியானது ஒரு நபருக்கு வழங்குகின்ற பிரத்தியேக உரிமைகளைப் பொதுமக்கள் படிப்பதற்காகத் திறந்து வைத்தலைக் குறிக்கின்றது. காப்புரிமம் அல்லது தனியுரிமம் அல்லது காப்புரிமைப் பட்டயம் (patent) என்பது ஒரு கண்டுபிடிப்பை பொதுமக்களிடம் வெளியிடுவதில் கண்டுபிடிப்பாளர் அல்லது அவர்களின் நியமிக்கப்பட்ட நபருக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு தேசத்தால் (தேசிய அரசாங்கம்) வழங்கப்பட்ட பிரத்தியேக உரிமைகள் ஆகும். இதற்கு முன் பதிவாகாத, அறிவுக் கூர்மையால் இயற்றப்பட்ட, பயன்தரும் ஒரு புத்தம் புதுக்கருத்தைப் படைத்து, அதனைப் பதிவு செய்து, அதனைப் படைத்தவர் மட்டுமே அவர் விரும்புமாறு பயன்படுத்த, அவருக்கு ஒரு குறிப்பிட்ட காலம், ஒரு நாடு தரும் உரிமை. இதனைப் படைப்பர் தனியுரிமம் என்றோ, படைப்பர் காப்புரிமம் என்றோ, இயற்றுநர் தனியுரிமம் என்றோ, இயற்றுநர் செய்யுரிமம் என்றோ புரிந்து கொள்ளலாம். இப்படிப் பயன்பாட்டுக்குரிய மேன்மையான கருத்துக்களைப் சரியான முறையில் பயன்படுத்தினால் சமூகம் உயர்வதற்கு ஏதுவாகும். ஆனால் ஆய்வுத்துறையில் கருத்துத் திருட்டைத் தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். ஆராய்ச்சி கட்டுரையில் ஆய்வுத் தரவுகளுக்குக் குறிப்புக் கொடுக்கும்பொழுது இணைய உரலிகளை முறையான குறிப்பு முறையாகப் பயன்படுத்த முடியாது. அதற்குச் சிறந்த முறையாக ஆய்வுத் தரவுகளை நெறிப்படுத்தும் வழிமுறைகளைச் சில பொதுமைத்தளங்கள் தரவுகளை முறையாகச் சேமிக்கும் அமைப்பு தொடங்கியுள்ளன.
அவற்றுள் சில :
- கூகுள் ஸ்காலர்(Google scholar)
- ஆர்சி(Orcid)
- கிராஸ்ரெப்(Crossref)
- ரிசர்ச்கேட்(Research gate)
கூகுள் ஸ்காலர்(Google Scholar) :
கூகுள் ஸ்காலர் (Google Scholar) என்பது இலவசமாக அணுகக்கூடிய வலைத் தேடுபொறியாகும், இது அறிவார்ந்த இலக்கியங்களின் முழு உரை அல்லது மீதரவினை வெளியீட்டு வடிவத்தில் துறைவாரியாக வரிசைப்படுத்துகிறது. இதனுடைய பீட்டாவடிவம் நவம்பர் 2004ல் வெளியிடப்பட்டது. இதில் மதிப்பாய்வு செய்யப்பட்ட இணையவழி ஆய்விதழ்கள், புத்தகங்கள், கருத்தரங்க கையேடுகள், ஆய்வு அறிக்கைகள், விளக்கவுரைகள், ஆய்வுச் சுருக்கத்தொகுப்பு, தொழில்நுட்ப அறிக்கைகள் உட்பட, பிற கல்வியியல் இலக்கியம், நீதிமன்றம் கருத்துத் தொகுப்புகள் மற்றும் காப்புரிமைகள் உள்ளிட்டவை உள்ளன. கூகிள் ஸ்காலரின் தரவுத்தளத்தின் அளவை கூகிள் வெளியிடவில்லை என்றாலும், விஞ்ஞான ஆய்வாளர்கள், கட்டுரைகள், மேற்கோள்கள் மற்றும் காப்புரிமைகள் உட்பட சுமார் 389 மில்லியன் ஆவணங்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.
2018 சனவரியில் உலகின் மிகப்பெரிய கல்வி தொடர்பான தேடுபொறியாக அமைந்தது. முன்னதாக, மே 2014 நிலவரப்படி இதில் 160 மில்லியன் ஆவணங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. குறித்தல் மற்றும் மீள் செலுத்தல் முறையைப் பயன்படுத்தி பிஎல்ஓஎஸ் ஒன்ல் வெளியிடப்பட்ட முந்தைய புள்ளிவிவர மதிப்பீடு 100 மில்லியன் மதிப்பீட்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அனைத்து கட்டுரைகளின் ஏறக்குறைய 80-90% மதிப்பீட்டு எல்லையினைக் கொண்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. வலைத்தளத்தில் எத்தனை ஆவணங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதையும் இந்த மதிப்பீடு தீர்மானிக்கிறது.
ஆர்சிட்(Orcid) :
ஆர்சிட் (ORCID) திறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் பங்களிப்பாளர் அடையாளம்) என்பது அறிவார்ந்த தகவல்தொடர்பு மற்றும் ஆராய்ச்சியாளர்களையும்/ஆய்வாளர்களையும் அவர்களின் ஆய்வுக் கட்டுரை வெளியீட்டையும் (மற்றும் பயனர் வழங்கிய பிற தகவல்களைத் தேடுவதற்கான ஆய்வாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களை தனித்தனியாக அடையாளம் காண்பதற்கான ஒரு லாப நோக்கற்ற எண்ணெழுத்துக் குறியீடாகும். அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் அல்லது மானுடவியல் வெளியீடுகளுக்கு ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பங்களிப்பினை அடையாளம் காணக் கடினமாக இருப்பதால், பெரும்பாலான தனிப்பட்ட பெயர்கள் தனித்துவமானவை அல்ல. இவை காலப்போக்கில் மாறலாம் (திருமணம் போன்றவை). மேலும் பெயர் வரிசையில் கலாச்சார வேறுபாடுகள், சீரற்ற முதல் பெயர் சுருக்கங்களின் பயன்பாடு மற்றும் வெவ்வேறு எழுத்து முறைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களினால் மாறுகின்றன. எனவே எண்ணிம ஆவணச் சுட்டி (DOIகள்) ஒன்றினை எண்ணிமை வலைப்பின்னலில் வரி விதிப்பில் உருவாக்கப்பட்ட எண் போல ஆராய்ச்சியாளர்களுக்கு என ஒரு எண்ணை உருவாக்கி ஆய்வாளர்களுக்கு ஒரு நிலையான அடையாளத்தை வழங்குகிறது.
கிராஸ்ரெப்(Crossref) :
கிராஸ்ரெப்(Crossref) என்பது உலகளாவிய அறிவார்ந்த ஆராய்ச்சி சமூகத்திற்கான ஒரு இலாப நோக்கற்ற திறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைப்பாகும். மானியங்கள் மற்றும் கட்டுரைகள் போன்ற அனைத்து ஆராய்ச்சிப் பொருட்களுக்கான திறந்த மெட்டாடேட்டா மற்றும் அடையாளங்காட்டிகள் மூலம் அறிவை தனித்துவமாகவும், விடாப்பிடியாகவும் பதிவுசெய்தல் மற்றும் இணைத்தல். இது சர்வதேச DOI அறக்கட்டளையின் மிகப்பெரிய டிஜிட்டல் பொருள் அடையாளங்காட்டி (DOI) பதிவு முகமை ஆகும். வெளியீட்டாளர்கள், நூலகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் நிதியளிப்பவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 150 நாடுகளைச் சேர்ந்த 19,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆன்லைன் கல்வி இதழ்களில் தொடர்ச்சியான குறுக்கு-தளம் மேற்கோள்களை இணைக்க வெளியீட்டாளர்களிடையே ஒரு கூட்டு முயற்சியாக 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. ஜூலை 2023 நிலவரப்படி, கிராஸ்ரெஃப் 150 மில்லியன் மெட்டாடேட்டா பதிவுகளைக் கண்டறிந்து இணைக்கிறது அவர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.1 பில்லியன் DOI தீர்மானங்களை (DOI இணைப்பின் கிளிக்குகள்) எளிதாக்குகிறார்கள், மேலும் அவர்கள் ஒவ்வொரு மாதமும் மெட்டாடேட்டாவின் 1 பில்லியன் வினவல்களைப் பார்க்கிறார்கள்.
ரிசர்ச்கேட் (ResearchGate) :
ரிசர்ச்கேட் (ResearchGate)என்பது அறிவியலாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்குமான ஐரோப்பிய வணிக சமூக வலைப்பின்னல் தளமாகும். ரிசர்ச்கேட் என்பதற்கு ஆய்வுவாயில் என்று பொருள். இது ஆய்வாளர்களுக்கு வாயில் போன்று செயல்படுகின்றது. ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கேள்விகளைக் கேட்கவும், பதிலளிக்கவும் மற்றும் கூட்டுப்பணியாளர்களைக் கண்டறியவும் இது உதவுகின்றது. 2014-ஆம் ஆண்டு வெளிவந்த நேச்சர் மற்றும் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த டைம்ஸ் ஹையர் எடுகேசன் ஆகிய ஆய்வின்படி இது செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய கல்விசார் சமூக வலைப்பின்னலாக அமைந்துள்ளது.
முடிவுரை : ஆய்வாளர்கள் நிகழ்த்துகின்ற ஆய்வுகளுக்காக அதன் தரவுகளைத் தேடும்பொழுது தான் அதன் அருமை தெரியும். ஆனால் இன்றைய ஆய்வாளர்கள் பெரும்பான்மை யாரோ ஒருவர் தேடி வைத்துள்ள தரவுகளை எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் தன் கருத்துக்களைப் போலப் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேற்கண்ட பொதுத்தளங்களில் ஆய்வாளர்கள் தங்களுடைய கட்டுரைகளையும் கருத்துக்களையும் ஆய்வுகளையும் பதிவிடுவதின் மூலம் இயல்பாக பாதுகாப்பான காப்புரிமையைப் பெற முடியும். இதன்வாயிலாக, கருத்துத்திருட்டினைத் தடுக்கவும் ஆய்வினை மேம்படுத்தவும் முடியும்