E-Learning Teaching Experiences of Tamil Professors in the context of Covid-19
முனைவர்.இரா.தனசுபா,
இணைப்பேராசிரியர் – தமிழ்த்துறை,
சைவபானு சத்திரிய கல்லூரி
அருப்புக்கோட்டை 626101, விருதுநகர்.
ஆய்வுச் சுருக்கம்:
கோவிட் 19 சூழலில் எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதார நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைப் போலவே கற்றல்-கற்பித்தலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் உணர முடிகிறது. இணையவழி வகுப்புகளில் தொழில்நுட்பங்களின் உதவியின்றி கற்றல்-கற்பித்தல் நிகழ முடியாது என்ற காரணத்தால் நாம் அனைவரும் கற்றல்-கற்பித்தலில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டையும் அவற்றைக் கையாளக் கற்றுக் கொள்ளவும் வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். வளர்ந்த நாடுகளில் கோவிட் காலத்திற்கு முன்பே இணையவழி கற்றல்-கற்பித்தலுக்கு வாய்ப்பும் வசதியும் போதிய அறிவும் இருந்தது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவ்வாறில்லை. இங்குள்ள பலருக்கும் இணையமும் தொழில்நுட்பமும் எட்டாக் கனியாகவே இருந்தது. கோவிட் 19க்குப் பின்பு இந்நிலையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தையும் நீதி இலக்கியத்தையும் பக்தி இலக்கியத்தையும் நுணுகி நுணுகி ஆராய்ந்து பலமணிநேரம் வகுப்பெடுக்கும் பல திறமையான தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் இணையவழிக் கற்றல்-கற்பித்தல் ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தது. சிறிது சிறிதாக இணையவழிக் கற்றல் கற்பித்தல் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு இன்று நேரடி வகுப்புகளிலும் மிகத் திறமையுடன் அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். கோவிட் 19 சூழலில் தமிழ்ப் பேராசிரியர்களின் இணையவழிக் கற்றல் கற்பித்தல் அனுபவங்களை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
திறவுச் சொற்கள் :
சமூக ஊடகங்கள், இணையவழித் தொழில் நுட்பம், கோவிட் 19
Abstract :
In the context of In the context of Covid 19, we can feel that there have been many changes in Teaching-Learning as well as great changes in the social and economic conditions in the Elva countries. As Teaching-Learning cannot take place in online classes without the help of technology, we are all forced into an environment where we have to learn the use of social media in Teaching-Learning and how to handle them. Developed countries had the opportunity, facilities and ample knowledge for e-learning-teaching even before the Covid period. But it was not so in developing countries like India. For many here, the Internet and technology have been the fruit of ethos. This is the biggest change since Covid 19. Online learning-teaching was initially a major challenge for many talented Tamil professors who spent many hours researching Sangam literature, Justice literature and Devotional literature. Little by little they learned the techniques of online learning and teaching and today we are using them very efficiently in live classes as well. The purpose of this study is to examine the online learning and teaching experiences of Tamil professors in the context of Covid 19.
Keywords:
Social Media, Internet Technology, Covid 19
முன்னுரை:
‘மனித வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாத் தத்துவம்’ என்பதைச் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களும் கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்களும் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளன. எதிர்காலத் திட்டங்களோடு ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலட்சியத்தோடு ஓடிக்கொண்டிருந்த மனித குலத்தை இரண்டு ஆண்டுகள் முடக்கிப் போட்டது இந்தக் கொரோனா எனலாம். மனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கியது. உலக நாடுகள் மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்ததோடு மட்டுமல்லாமல் உயிர்பிழைத்து வாழ்வதே பெரிது என்ற உணர்வை நமக்குள் உண்டாக்கியது இந்த கோவிட் 19. உலக அளவில் கல்வித்துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது இந்நோய். இணையவழிக் கல்வி கட்டாயம் என்ற நிலை உருவானது. இணையவழிக் கல்வி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல புதிய அனுபவங்களைத் தந்து சென்றுள்ளது. திறன்பேசிகளைக் கையாளத் தெரியாத பேராசிரியர்களும் பல குறுஞ்செயலிகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கற்றுக் கொண்டனர். ஆரம்பத்தில் இணையவழிக் கருத்தரங்குகளில் Zoom, Google Meet போன்ற செயலிகளில் இணைவதற்குச் சிரமப்பட்டவர்கள் தினந்தோறும் இந்தச் செயலிகளைப் பயன்படுத்தி வகுப்பெடுக்கவும் கருத்தரங்குகள் நடத்தவும் இணையவழியில் தேர்வுகள் நடத்தவும் கற்றுக் கொண்டனர். கோவிட் 19 சூழலில் படிப்படியாக தங்கள் இணைய அறிவை வளர்த்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்திய தமிழ்ப் பேராசிரியர்களின் இணையவழிக் கற்றல் – கற்பித்தல் அனுபவங்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இணையவழிக் கல்வியின் ஆரம்பகால நிலை :
கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதத்திலிருந்து உலக அளவில் பள்ளிகள் மூடப்பட்டன. கரோனா பரவத் தொடங்கியதன் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் (UNESCO) ஆய்வு அறிக்கையின்படி உலகில் 150 நாடுகளில் பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. 10 நாடுகளில் பகுதி நேரமாக மூடப்பட்டன. மேலும் 10 நாடுகளில் மட்டுமே பள்ளிகள் திறந்து இருந்தன. இதனால் உலக அளவில் 168 மில்லியன் குழந்தைகளின் கல்வி பாதிப்புக்கு உள்ளானது. லத்தீன் அமெரிக்க நாடுகள், கரேபியன் நாடுகள் மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. உலக அளவில் பள்ளிகள் மூடப் பட்டதினால் அக்குழந்தைகளின் வாழ்நாள் வருவாய் இழப்பு 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என உலக வங்கி கணித்துள்ளது. இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் 32 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 4 சதவீதம் மழலையர் கல்வியும், 86 சதவீதம் ஆரம்ப கல்வி மற்றும் உயர்கல்வி (1 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை) 10சதவீதம் மேல்நிலை கல்வி (+1 மற்றும்+2) என மேற்குறிப்பிட்ட ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. (வே.சிவசங்கர், இணையவழிக்கல்வி : சமூக ஏற்றத்தாழ்வு, thamizhbook.com, ஜீன் 16,2021)
கொரோனாப் பெருந்தொற்று மக்களிடையே வேகமாகப் பரவாமல் இருக்க உலக சுகாதார நிறுவனம் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. பெரும்பாலும் 60 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்திலேயே இந்திய வகுப்பறைச் சூழல் அமைந்துள்ளது. எனவே கல்வி நிலையங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மிகவும் சிரமமானதாகும். மாணவர்களிடையே கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் காலவரையறையற்ற விடுமுறையை அரசு அறிவித்தது. இதனால் உலக அளவில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடு தடைபட்டது. ஏற்கனவே இணையவழி வகுப்புகளைக் கையாளும் திறனும் வசதியும் பெற்ற நாடுகளில் மட்டும் சில மாதங்களிலேயே இணையவழியில் கற்றல்-கற்பித்தல் நடைபெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக மாணவர்கள் கல்விகற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் உயர்கல்வித் துறையானது கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி கற்பிக்க அறிவுறுத்தியது. தகவல் தொழில் நுட்பத்தைக் கற்ற பொறியியல் கல்லூரிகளுக்கு அது எளிதான ஒன்றாகும். ஆனால் கலை அறிவியல் கல்லூரிகளில் இணையவழிக் கல்வி என்பது பெரிய சவாலாக இருந்தது. அதற்குக் காரணங்கள் பல.
- கிராமப்புற ஏழை எளிய மாணவர்களிடம் திறன்பேசி, மடிக்கணினி போன்றவை இல்லாத நிலை.
- அவை இருந்தாலும் இணைய வசதியைப் பெறமுடியாத பொருளாதார சூழல்.
- பல கிராமங்களில் இணையசேவை இல்லாமை.
- ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இணையத்தைக் கையாளும் திறனின்மை.
இவை போன்ற பல காரணங்களால் இணையவழி வகுப்புகளை முறைப்படுத்த காலதாமதமானது.
இணையவழிக் கல்வி முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு, “ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொண்டு, மாணவர்களுக்கான இணையவழி புத்தாக்கக் கல்வியை உருவாக்கித் தரவேண்டியது தற்போதைய கரோனா ஊரடங்கு காலத்தின் கட்டாயம். அதேநேரம் இணைய வசதி, கணினி, தடையற்ற மின்சாரம், இவற்றுக்கான செலவு போன்ற அம்சங்கள் அனைவருக்கும் கிடைக்கும்போது – அரசு கிடைக்கச் செய்யும்போது மட்டுமே இந்த அம்சங்கள் முழுமையான உண்மையாக மாறும். என்று காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிவரும் ஆங்கிலம், அயலக மொழிகள் பள்ளியின் முதல்வரான ஜோஸப் துரைராஜ் விளக்கியுள்ளார்.” (யுகன்> இணைய வழிக் கல்வி: சில தவறான கற்பிதங்கள்!> இந்து தமிழ் திசை(மின்னிதழ்), 07 ஜுலை 2020)
இணையவழி கற்பித்தலுக்குத் துணைபுரிந்த இணைய சாதனங்கள்:
கோவிட் 19 காலத்தில் இணையவழியில் கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டைத் துவங்க வேண்டும் என்று முடிவு செய்தபோது அதற்கு ஊடகமாக எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நிலவியது. ஏனெனனில் புலனம், முகநூல், யுடியூப் என ஒருசில சமூக வலைதளங்களைப் பற்றி மட்டுமே ஆசிரியர்கள் அறிந்திருந்தனர். கற்றல்-கற்பித்தலுக்குப் பயன்படும் செயலிகள் பற்றிய போதிய விழிப்புணர்ச்சி இல்லை. பிறகு சிறிது சிறிதாக தெளிவு பெற்று Zoom, Google Meet, Team போன்ற செயலிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இவற்றில் ஒருசில செயலிகள் இலவசமாகவும் ஒருசில செயலிகள் பணம் கொடுத்துப் பெறும் வகையிலும் தமது சேவையை வழங்கின. Zoom போன்ற சில செயலிகள் இலவச சேவையை வழங்கினாலும் அது குறிப்பிட்ட கால அளவிற்கு மட்டுமே இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் இருந்தது. முழுமையான வகுப்பறை நிகழ்விற்கு அச்செயலிகள் வழங்கிய இலவச சேவை போதுமானதாக இல்லை. Google Meet செயலி முற்றிலும் இலவசமாக தனது சேவையை வழங்கியமையால் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் இச்செயலியையே கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தின. சில கல்வி நிறுவனங்கள் பணம் செலுத்தி பெறக்கூடிய செயலிகளையும் பயன்படுத்தின.
கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டிற்கு எந்த செயலியைப் பயன்படுத்தினாலும் இதில் சாதக பாதகங்கள் நிறையவே இருந்தன. நேரடி வகுப்புகளில் பலமணி நேரம் சலிப்பில்லாமல் பாடம் நடத்தும் திறன்மிக்க பேராசிரியர்கள்கூட இணையவழி வகுப்புகளைக் கையாள்வதில் சிரமப்பட்டனர். தகவல் தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரியாதவர்களாகப் பலர் இருந்தனர். வகுப்பறையில் தன் முன்னால் இருக்கும் மாணவர்களை உற்றுநோக்கி அவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படாது இடையிடையே வினாக்கள் கேட்டு பாடத்தைத் தெளிவாக விளங்க வைக்கும் நிலை இணையவழி வகுப்புகளில் இல்லை. எனவே பேராசிரியருக்குப் பெரும் சவாலாகவே இணைய வகுப்புகள் அமைந்திருந்தன.
தமிழ்ப் பேராசிரியர்களின் இணையவழிக் கற்றல் கற்பித்தல் அனுபவங்கள்:
அனைத்து துறைப் பேராசிரியர்களுக்குமே கோவிட் 19 காலத்தில் இணையவழிக் கற்பித்தல் நிறைய அனுபவங்களைத் தந்து சென்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கு செயல்முறைக் கற்பித்தல் சிரமமாக இருந்தது. லோகமாதாதேவி என்ற பேராசிரியர்,“ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பலமாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காகப் பழகியகையும் மனமும் இதற்குப் பழகாமல் ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது. மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப் பார்த்தபடி கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவளாதலால் இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்துக் கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொருநாளும் உணர்கிறேன்.” (லோகமாதாதேவி, இணையவழி : கற்றலும்-கற்பித்தலும், சொல்வனம், இதழ் 275(மின்னிதழ்), டிசம்பர் 27, 2020) என்று தன் மனஉணர்வைப் பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட தமிழ்ப் பேராசிரியர்கள் பலரின் மனநிலை இவ்வாறுதான் இருந்ததுஎனலாம். தமிழ்ப் பேராசிரியர்கள் இலக்கியக் காட்சிகளை உணர்வுபூர்வமாக விளக்கி இன்றைய வாழ்வியலோடு ஒப்பிட்டு மாணவர்களின் மனதில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது நேரடி வகுப்புகளில் எளிதாக இருந்தது. ஆனால் இணையவழியில் வகுப்பெடுக்கும்போது அது சாத்தியப்படவில்லை.
இணையவழி வகுப்புகளில் திரையைப் பகிர்ந்து விளக்கக் காட்சிகள் மூலம் கற்பிக்கலாமெனில் தமிழ் யுனிகோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து விளக்கக் காட்சியை உருவாக்குவது பலருக்கும் கடினமாக இருந்தது. பிறர் உருவாக்கிய விளக்கக் காட்சிகளைப் பயன்படுத்தி கற்பிக்கலாமெனில் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணப் பாடங்களுக்கு கொரோனா காலத்தில் அதிக அளவு விளக்கக் காட்சிகள் இல்லை. கொரோனா கற்றுக் கொடுத்த பாடத்தினால் தமிழ் விளக்கக் காட்சிகளை உருவாக்குவதற்குத் தமிழ்ப் பேராசிரியர்கள் கற்றுக் கொண்டனர். இதன் விளைவாக தற்போது அதிக அளவில் இலக்கிய-இலக்கண விளக்கக் காடசிகளும் காணொளிகளும் கிடைக்கின்றன.
தடையற்ற கற்றல்-கற்பித்தலுக்கு இணையவழிக் கல்வி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தமிழ்ப் பேராசிரியர்கள் எளிதாக இணையத்தைக் கையாளக் கற்றுக் கொள்வதற்கு வசதியாக கொரோனா காலத்தில் பல பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. பல கல்லூரிகளும் பல நிறுவனங்களும் இணைய வழியில் தமிழ்ப் பேராசியர்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு பல பயிற்சிகளை வழங்கின. அதைச் சிறந்த முறையில் தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் பயன்படுத்தி தனது இணைய அறிவை வளர்த்துக் கொண்டனர். இத்தகைய பயிற்சி வகுப்புகள் மூலம் தமிழ்ப் பேராசிரியர்களின் இணைய அறிவை வளர்ப்பதில் தமிழ் அநிதம் முக்கியப் பங்காற்றியது.
எனதுஅனுபவம்:
கோவிட் 19 சூழலில் தமிழ்ப் பேராசிரியர்களின் இணையவழிக் கற்றல் கற்பித்தல் அனுபவங்கள் என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டுள்ள ஆய்வாளராகிய எனக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இணையவழி வகுப்புகள் ஆரம்பித்தபோது மாணவர்கள் அனைவரையும் புலனக்குழுவில் இணைப்பதே பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில் எங்கள் கல்லூரி மாணவர்களிடம் அவர்களுக்கெனத் தனியே திறன்பேசியோ மடிக்கணினியோ இல்லை. அப்பா, அம்மாவிடம் இருந்தாலும் அவை பழைய பொத்தான் கைபேசிகளே இருந்தன. ஏற்கனவே கோவிட் 19 காலத்தில் வருமானத்திற்கு வழியில்லாமல் இருந்த அவர்களுக்கு இது மேலும் சுமையாக இருந்தது. ஒருவழியாக அவர்கள் சிரமப்பட்டு தங்கள் குழந்தைகளுக்குத் திறன்பேசியை வாங்கிக் கொடுத்தனர். புலனக்குழுவில் இணைந்து வகுப்புகளும் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் காணொளியை இணைப்பில் இருக்கும்படி செய்து மாணவர்களைப் பார்த்து பாடங்களை நடத்த ஆரம்பித்தோம். ஆனால் அவர்களது இயைணயசேவை விரைவிலேயே முடிந்து போனது. அடுத்த வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே மாணவர்களை காணொளி இணைப்பில் இருக்க வேண்டாம் என்று கூறி நாங்கள் மட்டும் காணொளி இணைப்பில் இருந்து வகுப்புகளை நடத்தினோம். இதை மாணவர்கள் அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இடையிடையே கேள்வி கேட்டு காணொளி இணைப்பில் வந்து பதில் கூறுமாறு சொல்லும்போது நிறைய மாணவர்கள் வகுப்பில் இல்லை என்பதை அறியமுடிந்தது. வருகைப் பதிவு எடுக்கும்வரை மட்டுமே வகுப்பில் உள்ளனர். இதற்காக வகுப்பின் இடையே வருகையைப் பதிவு செய்தால், “அவளுக்கு மைக் ஒர்க் ஆகவில்லை மேடம்” என்று தோழிகள் பொய் சொல்வார்கள். மேலும் வகுப்பிற்கான இணைப்பை அனுப்பினால் குறும்புத்தனமான மாணவர்கள் அதை வேறு யாருக்காவது அனுப்பிவிடுகிறார்கள்.
இதையெல்லாம் ஆராய்ந்து கண்டுபிடித்து அதன்பின் மாணவர்கள் அனைவரும் இணைப்பில்தான் இருக்கிறார்கள் என்ற மனநிலையை உருவாக்கிக் கொண்டு பாடம் நடத்த வேண்டி இருந்தது. வகுப்பு முடிந்து அனைவரையும் வகுப்பைவிட்டு வெளியேறச் சொன்ன பிறகும்கூட சிலர் இணைப்பிலேயே இருப்பர். அப்போதுதான் தெரியும் இவ்வளவு நேரம் அவர்கள் வகுப்பிலேயே இல்லை என்பது. இப்படி தினமும் விதவிதமான பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற அநேகப் பேராசிரியர்கள் இதுபோன்ற சிக்கல்களை அனுபவித்திருந்தார்கள் என்பதை இணையத்தில் சில பேராசிரியர்களின் பதிவுகளையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது அறிந்துகொண்டேன்.
“கல்லுரிக்கு அலைபேசியைக் கொண்டுவந்ததற்காக முந்தின மாதங்களில் கண்டித்த அதே ஆசிரியர்கள் அலைபேசியிலும் கணினியிலும் பாடம் நடத்தி அதை மாணவர்கள் அலைபேசியில் கவனிக்கவேண்டி வந்தது. அளிக்கப்பட்ட எல்லா வாய்ப்புக்களிலும் சந்து பொந்துகளைக் கண்டுபிடித்துத் தப்பிக்க முயலும் மாணவர்கள் இந்த இணைய வழியேயான கற்பித்தலிலும் குறுக்கு வழிகளைக் கண்டறிந்து விட்டிருந்தார்கள். வருகையை உறுதிசெய்த மறுகணம் அலைபேசி அல்லது மடிக்கணினியில் நான் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் திரையைக் கீழிறக்கிவிட்டு வேறேதும் படங்களைப் பார்ப்பது, மாணவர்கள் மைக்கை அணைத்து வைத்திருக்க வேண்டுமென்பதால் பாட்டுக் கேட்பது, ஃபோனில் நண்பர்களுடன் உரையாடுவது அல்லது போனை அங்கேயே விட்டுவிட்டு வேறெங்காவது போவது என்று ஏராளமான வழிகளில் அவர்களுக்கு முக்கியமென்று தோன்றுபவற்றை, இளமைக்கே உரிய அறியாமையுடன் செய்ய அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். வழக்கமான சின்சியர் சிகாமணிகள் மட்டும் வகுப்பைக் (?) கவனித்துக்கொண்டிருப்பார்கள்.” (லோகமாதாதேவி, இணையவழி : கற்றலும்-கற்பித்தலும், சொல்வனம், இதழ் 275(மின்னிதழ்), டிசம்பர் 27, 2020) என்று பேராசிரியர் லோகமாதாதேவி என்று தன் இணையவழி வகுப்பு அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
இத்தகைய பிரச்சினைகளைச் சரிசெய்ய,“குறுகிய கால நடவடிக்கையாக, மாணவர்களின் பாதுகாப்பையும் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். இணையவழி வகுப்புகளின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும் கல்வியை நெறிப்படுத்த வேண்டும். இணைய வசதி எல்லோருக்கும் கிடைக்கும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும். ஒருவேளை கரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுமானால், அதன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறனை இந்த முன்னெடுப்புகள் கல்வித்துறைக்கும் அளிக்கும். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக் கல்விநிலையங்களை விட்டு மாணவர்கள் வெளியேறுவதையும் இது தடுக்கும்.” என்று முகமது ஹீசைன் தன் ஆலோசனையைப் பதிவு செய்துள்ளார். (முகமது ஹீசைன், கோவிட் காலத்தில் கல்வியை மீட்டெடுப்பது எப்படி?, இந்து தமிழ் திசை (மின்னிதழ்), 08.செப்டம்பர் 2020)
முடிவுரை:
நேரத்தை மிச்சப்படுத்தவும் எந்த இடத்தில் இருந்தாலும் தடையற்ற கல்வியைப் பெறமுடியும் என்பது போன்ற பல நன்மைகள் இந்த இணையவழிக் கற்றலில் உள்ளது. கோவிட் 19 காலத்தில் இயைணவழிக் கருத்தரங்குகள் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் பலர் கற்றல் – கற்பித்தலுக்குப் பயன்படும் தொழில்நுட்பங்கள் பலவற்றை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். குறுஞ்செயலிகள், வலைப்பதிவுகள், வலைதளங்கள் உருவாக்குவது, தமிழ் எழுத்துணரிகள், ஒலியுணரிகள், ஒளியுணரிகள், மின்னூல்கள், மின்னகராதிகள் எனக் கற்றல் – கற்பித்தலுக்குப் பயன்படும் பல தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டோம். நமக்குக் கிடைத்த இந்த அனுபவங்களைத் தமிழ் கற்றல் – கற்பித்தலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி கணினிவழித் தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்ற வேண்டும். ஒருவருக்கு ஒரு வலைப்பதிவு அல்லது வலைதளம் எனத் தமிழ்ப் பேராசிரியர்கள் உருவாக்கி கற்றல் – கற்பித்தலை மேம்படுத்தலாம். மின்னூல்கள் மூலம் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம். தமிழ்ப் பேராசிரியர்கள் கணினித் தொழில் நுட்பங்களைத் தொடர்ந்து கற்றுக் கொண்டு உலக அரங்கில் தமிழ் மொழியைத் தலைநிமிரச் செய்யலாம். பல இடர்பாடுகள் இருந்தாலும் இணையவழிக் கற்றல் – கற்பித்தல் அறிவு கோவிட் 19 கொடுத்த கொடை எனக் கொள்ளலாம்.
குறிப்புகள்
- ஜீன் 16,2021, வே.சிவசங்கர், இணையவழிக்கல்வி : சமூக ஏற்றத்தாழ்வு,
thamizhbook.com.
- 07 ஜுலை 2020, யுகன், இணைய வழிக் கல்வி: சில தவறான கற்பிதங்கள்!, இந்து தமிழ் திசை (மின்னிதழ்).
- டிசம்பர் 27, 2020, லோகமாதாதேவி, இணையவழி:கற்றலும்-கற்பித்தலும், சொல்வனம், இதழ் 275 (மின்னிதழ்).
- டிசம்பர் 27, 2020, லோகமாதாதேவி, இணையவழி : கற்றலும்-கற்பித்தலும், சொல்வனம், இதழ் 275 (மின்னிதழ்).
- 08.செப்டம்பர் 2020), முகமது ஹீசைன், கோவிட் காலத்தில் கல்வியை மீட்டெடுப்பது எப்படி?, இந்து தமிழ் திசை (மின்னிதழ்).
Refrences:
- In June 16, 2021, V.Sivasankar, Online Education : Social Inequality, thamizhbook.com.
- In 07,July 2020, Yugan, Online Education : Some Misconceptions!, Hindu Tamil Thisai(E-Journal).
- In Decembe27, 2020, Logamatha Devi, E-Learning : Learning and Teaching, Solvanam
(E-Journal).
- In Decembe27, 2020, Logamatha Devi, E-Learning : Learning and Teaching, Solvanam
(E-Journal).
- In 08 September 2020, Mohamed Hussein, How to Restore education in the time Covid,
Hindu Tamil Thisai(E-Journal).