இணைய நூலகமும் தமிழ் வளர்ச்சியும்

திருமதி.பா.செண்பகா

உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுய உதவிப் பிரிவு)

ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல் – 05

    Our pursuit of knowledge and learning today is completely dependent on the Internet. Computerized recording and preservation of texts as an unparalleled scientific tool of the 21st century is rapidly progressing worldwide in all languages. E-library is a method of storing Tamil books in a computer and setting them up as a library so that anyone can view them from anywhere through the use of the Internet. E-libraries were created to store e-books as a framework. The purpose of this article is that the scope of Internet technology and its immense potential have made undreamed of capabilities possible today.

நம்முடைய அறிவுத் தேடலும் கற்றலும் இன்று முற்றிலும் இணையத்தைச் சார்ந்தே உள்ளன. 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அறிவியல் சாதனமாகக் கணினியில் நூல்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் பணி உலகெங்கிலும் எல்லா மொழிகளிலும் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் நூல்களைக் கணினியில் சேமித்து இணையப் பயன்பாட்டின் மூலமாக எவரும் எங்கிருந்தும் பார்க்கும் வகையில் நூலகமாக அமைத்திடும் முறையையே மின் நூலகம் என்று குறிப்பிடப்படுகின்றன. மின்னூல்களை ஒரு கட்டமைப்பாக வைப்பதற்கு மின்னூலகங்கள் உருவாக்கினர்.. இணையத் தொழில்நுட்பத்தின் வீச்சும் அதன் அபரிமித ஆற்றலும் கனவிலும் நினைக்க முடியாத திறன்களை இன்று சாத்தியப்படுத்தியுள்ளன என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.          

நூல்விளக்கம்

            நூல் என்ற சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் நூல் இலக்கண நூல் ஆகும்.ஒரு மரத்தின் வளைவு நெளிவுகளைக் கண்டறிவதற்கு மரவேலை செய்யும் தச்சர்கள் பயன் படுத்தும் கருவி, நூல் ஆகும். மரத்தின் வளைவைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு நூலைப் பயன்படுத்துவதுபோல மனிதனின் மனதில் உண்டாகும் கோணல்களைக் கண்டறிந்து அவன் மனக்கோளாறுகளை ஒழுங்குபடுத்தும் கருவியாக நூல் செயல்படும் என்கிறது நன்னூல் நூற்பா. நூல் என்பதற்கு நன்னூல் ஆசிரியர் பவனந்தியார் தரும் பொருள் விளக்கம் ஆழ்ந்து நோக்கத்தக்கது. நன்னூல் தனது பொதுப்பாயிரத்தில் நூல் என்ற சொல்லுக்கான பொருட்காரணத்தை விளக்கிக் காட்டுகின்றது.

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லாமரத்தின்
கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு                  (நன்னூல் 25)

            மனிதன் தான் சிந்தித்த, கற்பனை செய்த, விரும்பிய கருத்துக்கள் அனைத்தையும் எழுத்துவடிவில் பதிந்து வைக்க உருவாக்கிக் கொண்டதோர் கருவிதான் நூல். எழுத்து வடிவிலான இத்தகைய பதிவுகள் தொடக்கத்தில் கல்லிலும் சுடுமண் பலகைகளிலும், ஓலைகளிலும் பதிந்து வைக்கப்பட்டன. காகிதம் மற்றும் அச்சு இயந்திரங்களின் கண்டுபிடிப்பு நூல்களின் பெருக்கத்திற்குப் பெருமளவில் வழிவகுத்தது. தமிழகத்தில் தொடக்ககால நூல்கள் பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டன. அவை சுவடிகள் என்றழைக்கப்பட்டன. பனையோலை நறுக்குகள் துளையிட்டுக் கயிற்றால் கோர்த்துக் கட்டப்பட்டிருந்த காரணத்தால் அவை பொத்து அகம்- பொத்தகம் என்றழைக்கப்பட்டன.

மின்நூல்கள் (e-book)

மின்-நூல் என்பது அச்சிடப்பட்ட /அச்சுக்கேற்ற நூலின் மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பாகும். கணினி, பலகைக் கணினி (tablet), திறன்பேசி (smartphone) முதலான கருவிகளின் வாசிக்கத்தக்கதாய் எண்ணிம (Digital) முறையில் உருவாக்கப் பட்டிருக்கும் இவ்வகை மின்-நூல்கள், பொதுவாக மின்-நூல் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை பல்வேறு அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. கோப்பு வடிவம் மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றும் வெவ்வேறு (file format) பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

  1. PDF Book – மின்-நூல்
  2. HTML Book – மீயுரை நூல்
  3. Flip Book – புரட்டும் நூல்
  4. epub – மென்னூல்
  5. mobi      – கிண்டில் நூல்

பொதுவாக நாம் இணையத்தில் காணும் நூல்கள் PDF (Portable Document Format) வடிவத்தில் இருக்கும். பழைய அச்சு நூல்களை அப்படியே ஸ்கேன் செய்து கணினி, பலகைக் கணினி, மற்றும் திறன்பேசிகளில் பயன்படுத்தும்போது அவை PDF வடிவத்தில் இருக்கும். இவ்வகை மின்-நூல்களை உருவாக்குவது எளிது. நாம் அச்சில் உருவாக்கும் நூல்களில் எழுத்து மற்றும் படங்களை மட்டுமே இணைக்க முடியும். ஆனால் சிலவகை மின்-நூல்களில் (epub, mobi) அசையும் படங்கள் மற்றும் ஒளி-ஒலிக் கோப்புகளையும் இணைக்க முடியும். மீயுரை நூல்களில் ஒருபக்கத்திலிருந்து வேறு ஒரு பக்கத்திற்கு அதன் மீயுரைகளைச் சுட்டியால் தட்டுவதன் மூலம் செல்ல முடியும். புரட்டும் நூல்களில் அச்சு நூல்களைப் புரட்டுவது போன்ற அனுபவத்தைப் பெறமுடியும். மென்னூல்கள் கணினி வாசிப்புக்கென்றே உருவாக்கப்பட்டவை, இவ்வகை நூல்களில் எழுத்து மற்றும் படங்களைப் பெரிதாக்கவோ சிறியதாக்கவோ முடிவதோடு நூலின் அமைப்பையும் நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளமுடியும். கிண்டில் நூல்கள் அமேசான் கிண்டில் சாதனங்களில் பயன்படுத்து வதற்காக என்றே உருவாக்கப்படுபவை. இவ்வாறு மின்-நூல்களின் ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியான சிறப்பம்சங்கள் உண்டு.

மின்நூலகங்கள் (electronic library)

மின்நூலகம் என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் சேமித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மின்-நூல்கள், படங்கள், ஆவணங்கள் முதலான தகவல் தொகுப்புகளைக் கணினி மற்றும் இணைய வழி அணுகக்கூடிய நூலகம் ஆகும். இந்நூலகத்தில் சேமித்து, மேலாண்மை செய்து பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும் எண்ணிம உள்ளடக்கங்களை (Digital content) கணினி இணையம் மூலமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தவொரு இணையவழி சாதனத்தின் மூலமும் அணுகிப் பெறமுடியும். மின்-நூலகம் என்பது ஒரு தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் (information retrieval system) ஆகும். மின் நூலகம், மெய்நிகர் நூலகம் (virtual library) எண்ணிம நூலகம் (digital library) போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. மிக விரிவான எண்ணிம உள்ளடக்கங்களைச் சேகரித்து, மேலாண்மை செய்து, பாதுகாத்து அதன் பயனாளர்களுக்கு அத் தகவல்களைத் தேவைப்படும் போது தேவையான அளவில் எழுதப்பட்ட கொள்கை விதிகளின்படி அளிக்கும் அமைப்புக்கு மின்-நூலகம் என்று பெயர்.

இன்றைக்குக் கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் வருகையால் ஏற்பட்டுள்ள அறிவுப் புரட்சியின் திறவுகோலாக மின்-நூலகங்கள் இயங்குகின்றன. நாம் இருந்த இடத்திலிருந்தே கையில் உள்ள திறன்பேசி, பலகைக் கணினி அல்லது பிறவகைக் கணினிகளின் ஊடாக இணையத்தின் வழியாக மின்-நூலகங்கங்களை அணுகி நூல்களை வாசிக்கலாம், பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது அச்சிட்டுக் கொள்ளலாம். மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் அறிவியல் மற்றும் சமுதாயவியல் வல்லுநர்களுக்கும் தேவைப்படும் அனைத்து மின்-நூல்களும் இத்தகு மின்-நூலகங்களின் வழியாக இலகுவில் கிட்டும் என்பது கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் சாதனையாகும்.

உலக மின்னூலகம்

                உலக மின்னூலகம் என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைப்படங்கள் அரிய நூல்கள் இசைக் கோர்வைகள் திரைப்படங்கள், அச்சுவடிவங்கள், ஒளிப்படங்கள், வடிவியல், வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.

இணைய உலகில் சேவை வழங்கிவரும் தமிழ் மின்நூலகங்கள்

தமிழ் இணையக் கல்விக் கழகம்: (http://tamilvu.org)

உலகெங்கிலுமுள்ள பன்னாட்டு மாணவர்கள் மட்டுல்லாது விரும்பும் எவரும் தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது தமிழ் இணையப் பல்கலைக் கழகம். இந்நிறுவனம் இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் இணையக் கல்விக் குழுமம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. பயில்வோர் மற்றும் உலகு தழுவி வாழும் தமிழர்கள் அனைவரது பயன்பாட்டிற்காகவும் உருவமைக்கப்பட்டுள்ளது. இம்மின்நூலகம் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய நூல்களை விரும்பிக் கற்க விழைவார்க்கும் பயன்படும். இதில் 350க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இலக்கிய வரலாற்று அடிப்படையில் நூல்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

மதுரைத் தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்: (http://www.projectmadurai.org/)

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவரும் துணைத் தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். இந்நூலகத்தில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின் சிறப்பு கூறாகக் குறிப்பிடத்தக்கது யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருச் சிக்கல் இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது இம் மின்-நூலகம் தமிழ்.நெட் இணைய தளத்துடன் இணைந்து செயல்படுகிறது. மின்-நூல்களை PDF கோப்புகளாகவும், Unicode, TSCII எழுத்துருக்களிலும் பெற்றுக் கொள்ளும் வசதியும் இத்தளத்தில் கிடைக்கின்றது.

சென்னை நூலகம்: (http://www.chennailibrary.com)

திரு.கோ.சந்திரசேகரன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் உருவான நூலகம், சென்னை நூலகம் ஆகும். இது வணிக நோக்கில் இயங்கும் நூலகம் ஆகும். இந்நூலகம் கெளதம் இணைய சேவைகள் (Gowtham Web Services) நிறுவனத்தினரால் நடத்தப்படும் இணையதளம் ஆகும். சென்னை நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையிலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவையும் ஒருங்குறியில் இருக்கின்றன. இந்நூலகத்தில் உறுப்பினர்களாக இணைவோருக்குத் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள நூல்களை PDF கோப்புகளாகத் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும், கெளதம் பதிப்பகத்தாரால் வெளியிடப்படும் நூல்களை 20 % சலுகை விலையில் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுன்கிறன.

நூலகம் திட்டம்: ( http://www.noolaham.org )

நூலகம் திட்டம் என்பது, ஈழத்துத் தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணிப் பாதுகாத்து வைப்பதற்கான இலாப நோக்கில்லா தன்னார்வ முயற்சியாகும். குறிப்பாக, மின்னூலாக்கம் செய்யப்படும் நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப் பட்டதாக இருக்க வேண்டும். இந்நூலகத்தில் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஈழத்து நூல்கள், ஆறாயிரத்துக்கும் மேலான இதழ்கள், இரண்டாயிரத்துக்கும் மேலான பத்திரிகைகள் கிடைக்கின்றன. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத், மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-ல் தொடங்கி இடையே சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை மாதம் மீண்டும் புதுப்பொழிவுடன் பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது. வாரம் ஒரு மின்னூல் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் செயற்பட்டு வருகிறது.

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி.

நூலகத் திட்டம் குறித்து நூலகம் வலைத்தளத்தின் முகப்பு வாசகம் மேல்வருமாறு குறிப்பிடுகின்றது. ஈழத் தமிழ் நூல்களை மின்-நூல்களாக்கிப் பாதுகாத்து வழங்கும் நூலகம் திட்டத்தினை நாம் இணைய ஈழ நூலகம் என்றே குறிப்பிடலாம்.

தமிழ் மரபு அறக்கட்டளை: (http://www.tamilheritage.org/)

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஓர் இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து இணையத்தில் மின் பதிப்பாக வெளியிடுவது ஆகும். தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொல் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஓர் அறக்கட்டளையாகும். இன்றையக் கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில்நுட்பங்களின் துணையோடு அழிந்து வரும் தமிழ் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கவும் அவற்றை இலகுவாகப் பகிர்ந்து கொள்ளவும் தமிழ் மரபு அறக்கட்டளை வழிவகுக்கின்றது. கணினித் தொழில்நுட்பங்கள், தமிழ் மரபுச் செல்வங்களை, ஒலி, ஒளி, எழுத்து வடிவம் எனப் பல்வேறு வழிகளில் அவற்றை எண்ணிமப் பதிவாக்க உதவுகின்றன. தமிழின் மரபைப் பாதுகாக்கும் ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகவும் செயல்படுகின்றது. மின்பதிப்பாக்கம், மின்னூலாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இணையத்தில் மின் நூல்களுக்கான அட்டவணை ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இவற்றில் அரக்குமாளிகை நாடகம், அமெரிக்க அன்னையான பிள்ளைத் தமிழ், சபரி மோட்சம், சுபத்திரை மாலையிடு போன்ற அரிய நூல்கள் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

ஓபன் ரீடிங் ரூம்(www.openreadingroom.com)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை, மின்னூல் வடிவில் இலவசமாகப் படிக்க உதவும் ஓர் இணையதளம் ஓபன் ரீடிங் ரூம் ஆகும். இதன் முகப்புப் பக்கத்தில் அரசியல், சிறுகதை, நாடகம், நாவல், கவிதை, வரலாறு என வகைவகையான மின்னூல் கோப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பக்தி இலக்கியம் முதலான தமிழிலக்கியங்கள் அங்கே வாசிக்கக் கிடைக்கின்றன. அ.சிதம்பரநாத செட்டியாரில் தொடங்கி அண்ணாதுரை, அசோகமித்திரன், கல்கி, குன்றக்குடி அடிகளார், பரிதிமாற் கலைஞர், புதுமைப்பித்தன் எனப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களோடு உடுமலை நாராயணகவி, சுரதா, மீரா, அழ. வள்ளியப்பா எனப் பிரபல தமிழ்க் கவிஞர்களின் பட்டியலும் நீள்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், காப்புரிமையுள்ள நூல்கள் எனத் தொடரும் பட்டியல்களில் பிடித்தமான நூலைத் தேர்வு செய்து வாசிக்கலாம். சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இத்தளத்தில் 2,300 படைப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூர் வாழ் தமிழரும், மூத்த பத்திரிகையாளருமான ரமேஷ் சக்ரபாணி இத்தளத்தை நடத்தி வருகிறார். ‘இலவச இணைய நூலகம்’ என்றே இதனை அவர் குறிப்பிடுகிறார்.

கற்றலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் டிஜிட்டல் நூலகம்

                          20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இணையம் குறித்த சிந்தனை விவாதிக்கப்பட்டாலும், 1960இல்தான் அது சாத்தியமானது. 1960களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, ARPANET என்ற பெயரில் இணையத்தைக் கண்டுபிடித்தபோது, இணையம் நம்முடைய வாழ்க்கையில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் உட்பட யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். 1991இல் டிம் பெர்னர்ஸ்– லீ கூட்டணி, வேர்ல்டு வைடு வெப் (WWW) கண்டுபிடித்து, இண்டர்நெட் என்கிற பெயரில் அதைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளித்தனர். மாணவர்களின் பயன்பாட்டுக்காகவும் இந்திய மனிதவளத் திறன் மேம்பாட்டுக்காகவும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய மின்னணு நூலகமும் (NDLI) அத்தகைய சாத்தியங்களில் ஒன்று.

இந்தியத் தேசிய மின்னணு நூலகம் (NDLI)

                          இந்தியத் தேசிய டிஜிட்டல் நூலகம் (NDLI) என்பது அனைத்து வகையான கற்றல் வளங்களைத் தன்னுள் கொண்டுள்ள மெய்நிகர் களஞ்சியம். இந்த நூலகம் கரக்பூர் ஐ.ஐ.டி.யால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. NMEICT மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த நூலகத் திட்டம், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் வழிநடத்தப்படுகிறது. இந்தியாவில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த நூலகம் செயல்படுகிறது.

                          இந்த டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த விருப்பமுள்ளவர்கள் https://ndl.iitkgp.ac.in/ என்கிற இணையதளத்துக்குள் சென்று, அதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த நூலகத்தில் உள்நுழைவதற்கு உறுப்பினர்களுக்குத் தனிப் பயன்பாட்டுப் பெயரும் கடவுச்சொல்லும் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் டிஜிட்டல் நூலகத்துக்குள் சென்று தங்களுக்குத் தேவையான மின்னணுப் புத்தகங்களைப் பதிவிறக்கம்செய்து பயனடையலாம். பயனாளர்கள் தங்களுடைய மொழியிலேயே தமக்கு வேண்டியதைத் தேடி எடுத்துக்கொள்ள முடியும். சுமார் 70 மொழிகளில் 3 லட்சம் நூலாசிரியர்களால் எழுதப்பட்ட சுமார் 7 லட்சம் நூல்கள், 3 லட்சம் கட்டுரைகள், அதில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், 2.4 லட்சம் ஆடியோ விரிவுரைகள், 18 ஆயிரம் வீடியோ விரிவுரைகள் ஆகியவை இந்த டிஜிட்டல் நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களை பி.டி.எஃப். வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

            இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அறிவுத்துறைகள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெரும்புரட்சியை ஏற்படுத்திவருகின்ற, அறிவியல் உச்சம் எனக் கருதப்படுகின்ற கணினியும் இணையமும் நூல்கள் மற்றும் நூலகங்களையும் தமதாக்கிக் கொண்டு விட்டன. கணினி மற்றும் இணையம் சார்ந்த தொழில் நுட்பத்தின் வருகையால் ஏற்பட்டுள்ள அறிவுப் புரட்சியின் திறவுகோலாக மின்-நூலகங்கள் இயங்குகின்றன. மின்-நூல் தொழில்நுட்பம் மற்றும் மின்-நூலகங்களின் வருகையால் வாசிப்புக்கான எல்லைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் அல்லாத உலகின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் தமிழ் நூல்கள் கிடைப்பது எளிதாகியுள்ளது. அச்சில் கிடைக்காத, மறுஅச்சு காணாத பல பழைய தமிழ் நூல்களை இன்றைய தலைமுறையினருக்கு வழங்கிய பெருமை மின்-நூலகங்களையே சாரும். இது நம் தலைமுறை மாணவர்களின் கற்றல்திறனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். அவர்களுடைய திறனை மெருகேற்றும்.

பார்வை நூல்கள்

  • http;//ta.wikipedia.org/s/w97
  • http;//ta.wikipedia.org/s/94p
  • இணையமும் இனிய தமிழும் – க.துரையரசன்
  • தமிழ்க்கணினி-இணைய பயன்பாடுகள்-துரை. மணிகண்டன்
  • நூலகம்-தகவல் வளங்களின் மேலாண்மை-த.சம்பத்குமார்
error: Content is protected !!