முனைவா் நா.கவிதா,
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்,
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட … ஒருவனைத் தூக்கிலிடும் தீர்ப்பை … என்னிடம் கொண்டு வாருங்கள், அதை தமிழாக்கம் செய்யும் போது அவனை விடுதலை செய்யுமாறு… எழுதித் தருகிறேன்… – கண்ணதாசன். |
Advancement in the exchange of ideas between world languages and excellence in literary development can only happen through translation. In today’s internet world, the field of science, linguistics, and global sociology can be seen to be growing due to the field of translation. In such a field of translation, the contribution of Google Translate to the development of Tamil language today is immeasurable. Along with the history and evolution of Google Translate, defining their translation types and principles, data on the uses and pitfalls of translation have been examined in this research paper.
உலக மொழிகளுக்கிடையே கருத்துப்பரிமாற்றத்தில் முன்னேற்ற நிலையும், இலக்கிய வளா்ச்சியில் மேன்மையும் மொழிபெயா்ப்பினால் மட்டுமே நடைபெற இயலும். இன்றைய இணைய உலகில் அறிவியல் துறையும், கலைச்சொல்லாக்கமும், உலக சமூகவியலும் மொழிபெயா்ப்புத் துறையினால் வளா்வதைக் கண்கூடாகக் காண முடிகின்றது. இத்தகைய மொழிபெயர்ப்புத் துறையில் இன்று தமிழ் மொழி வளா்ச்சிக்கு, கூகுள் மொழிபெயா்ப்பு சாதனத்தின் பங்களிப்பு அளவிடற்கரியது. கூகுள் மொழிபெயா்ப்பின் வரலாறு மற்றும் வளா்ச்சி நிலைகளுடன்; அவற்றின் மொழிபெயா்ப்பு வகைகளையும் கொள்கைகளையும் வரையறுத்துக் கூறுவதுடன், மொழிபெயா்ப்பின் பயன்பாடுகளையும் இடா்பாடுகளையும் குறித்த தரவுகளே இவ் ஆய்வுக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.
கூகுள் மொழிபெயா்ப்பு வரலாறும் வளா்ச்சியும்
மொழிகள் குறித்து யுனெஸ்கோ கூறுகையில், “மொழிகள் நமது கலாச்சாரங்கள், கூட்டு நினைவகம் மற்றும் மதிப்புகளின் வாகனங்கள். அவை நமது அடையாளங்களின் இன்றியமையாத அங்கமாகும். மேலும், நமது பன்முகத்தன்மை மற்றும் வாழும் பாரம்பரியத்தின் கட்டுமானத் தொகுதியாகும்”1 என்று எடுத்துரைக்கிறது. ஆக, உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஏற்புடைய ஒரு தன்மையை இங்கு காண முடிகின்றது. உலக மொழிகளுக்கிடையே மொழிபெயா்ப்பு என்பதே மக்கள் மத்தியில் மாபெரும் பாலமாக விளங்குகின்றது.
தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் மகாகவி பாரதி மொழிபெயா்ப்புத்துறையின் தேவையைக் குறித்து கூறுகையில்,
“பிறநாட்டு நல்லறிஞா் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயா்த்தல் வேண்டும்” (பாரதியார் பாடல்கள் – 21)
என்றும்,
“சென்றிடுவீா் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்” (பாரதியார் பாடல்கள் – 22)
என்றும் தீா்க்கதரிசிப் பாவலன் பாடியுள்ளமையைக் காணலாம். ஆக, தமிழ்மொழி வளா்ச்சியில் முதன்மையாக இங்கு எண்ணத்தக்கது மொழி பெயா்ப்புத் துறை என்பது புலப்படுகிறது. அவ்வகையில்,
இணையத்தில் தமிழ் மொழி வளா்ச்சிக்கு நம்மை இணைத்திடும், இலவசத் தானியங்கி மொழிபெயா்ப்புச் சேவையே கூகுள் மொழிபெயா்ப்பு (Google Translate) ஆகும். கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சேவையை நாம் வலைக்கடப்பிடத்தின் வழியே (Webiste) பெற இயலும். தொடக்கத்தில் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயா்ப்பு செய்யும் வசதியை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்ந்தது. தற்போது 136 மொழிகளுக்கிடையில் மொழிபெயா்ப்பு செய்யும் வளா்ச்சியுடன் வளா்ந்துள்ளது. தொடக்கத்தில் உரை (Text) வழியாக மட்டுமே மொழிபெயா்ப்பு செய்யும் பயன்பாடுகள் காணப்பட்டன. ஆனால் இன்று பின்வரும் பகுதிகளுடன் பல்வேறு சேவைகளுடன் வளா்ச்சி அடைந்துள்ளமைச் சிறப்பிற்குரியது.
உரை (Text)
படங்கள் (Image)
ஆவணங்கள் (Documents)
இணையதளங்கள் (Websites)
வரலாறு (History)
சேமித்தவை (Saved)
பங்களியுங்கள் (Contribute)
மேற்கூறியுள்ள முறைமைகளில் படங்கள் (Image) என்ற பகுதியின் மூலமாக நாம் 136 மொழிகளில் எது தேவையோ அந்த மொழிக்குரிய தரவுகளை மொழிபெயா்த்து கண்டு கொள்ளலாம். வேற்றுமொழியில் உள்ள மருத்துவக் குறிப்புகள் தொடங்கி வாழ்விற்குத் தேவையான அனைத்து தரவுகளையும் நாம் அறிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் எளிமையாக இது வழிகாட்டுகிறது.
ஆவணங்கள் (Documents) என்ற பகுதியில் குறிப்பிட்ட சொல்லுக்கு சொல் மட்டுமே மொழிபெயா்ப்பினையும் ஒரு பத்தி செய்திகளையும் மொழிபெயா்த்து பயன்படுத்திய மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய பயன்பாடு. எந்த ஒரு மொழியிலான ஆவணங்களையும் நாம் நமது தேவைக்குரிய மொழியில் தரவுகளைப் பெற்று மேன்மை நிலைப் பெற இது பயன்படுகிறது.
இணையதளங்கள் (Websites) என்ற பிரிவில் பல்வேறு மொழிகளில் காணப்படும் இணையதளங்களை இங்கு உள்ளீடு செய்தால் நாம் நமது தாய்மொழியில் மாற்றி உண்மைத் தரவுகளை சில நொடிகளில் பெற்றிட இயலும். ஆக பல்துறை ஆராய்ச்சி உலகிற்கு இது முதன்மைத் தேவையாகக் காட்சி அளிக்கின்றது.
உரை, படங்கள், ஆவணங்கள் மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றில் நாம் சேகரித்த தரவுகளைத் தேவைப்படும் பொழுது மீண்டும் பார்க்க வரலாறு (History) என்ற பகுதியும் எப்பொழுதும் பயன்படுத்திக்கொள்ளும் மாபெரும் பயனை சேமித்தவை (Saved) என்ற பகுதியும் நமக்கு வழங்குகிறது. அத்துடன் பன்மொழி ஆற்றல் நம்மிடையே காணப்பட்டால் நமது மொழிப்புலமையை பங்களியுங்கள் (Contribute) என்ற பகுதியில் வழங்கிடவும் வாய்ப்புகளை கூகுள் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் மொழிபெயா்ப்பு பயன்பாடு சில பயனாளா்களுக்கே
உலகளவில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் பயனுள்ள தளம் என்றால் அது கூகுள் மொழிபெயா்ப்புத் தளமே. இக்கருவி செயற்கை நுண்ணறிவு மூலமாக தானியங்கி புள்ளி விவர மொழிபெயா்ப்பு (SMT) என்ற சிறப்புடன் செயல்படுவது. பயனுள்ள தளமாக இருந்தாலும் சில பயனாளா்களுக்கே அது முழுமையான பயனை வழங்குகிறது. அப்பயனாளா்கள் யார் எனில்,
- ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்பவர்கள்
- சா்வதேச இணையதளத்தை அணுகும் தேவை உடையவா்கள்
- தம் சூழலில் வேற்றுமொழிப் பொருளை அறிய வேண்டுபவா்கள்
ஆகியவா்களுக்கே கூகுள் மொழிபெயா்ப்பு பயன்பாடு முதன்மைத் தேவையாகத் திகழ்கின்றது.
தொழில் முறை மொழிபெயா்ப்பாளா்களுக்கு இது நம்பகமான தளமாக இல்லாவிட்டாலும் ஒரு புதிய மொழியின் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களின் மொழிபெயர்ப்பைக் கண்டறிய மிகவும் நம்பகமானதாகத் திகழ்கிறது. எளிமையான வினவல்களுக்கு இது மிகச் சரியான தரவினை வழங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, ஒரு குறிப்பிட்ட பயனா்களுக்கும் குறிப்பிட்ட சூழலுக்கும் மட்டுமே பயன்படாமல் தமிழ் இலக்கியம் சார்ந்த மொழிபெயா்ப்புத் தேவைகளை நிறைவேற்றும் மாபெரும் மாற்றத்துடன் கூகுள் மொழிபெயா்ப்பு பரிமாற்றம் பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புகளாகும்.
இணையமும் நேரடி மொழிபெயா்ப்பும்
மொழிபெயா்ப்பு என்பது அறிவியல் மற்றும் இலக்கியம் இணைந்து இயங்கும் துறை ஆகும். அதனில், சொல்லுக்குச் சொல் மொழிபெயா்ப்பு, பொருளை மட்டுமே மொழி பெயா்ப்பு செய்வது என்ற இரு முறைமைகளை உள்ளடக்கிய நேரடி மொழிபெயா்ப்பு முறை முதன்மை பெற்றதாகும். அறிவியல் கருத்துகளை, விதிகளை, வாய்பாடுகளை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கலாம். இம்முறையே கூகுள் மொழிபெயா்ப்பில் முதன்மையானதாகப் பின்பற்றப்படுகின்றது. நேரடி மொழிபெயா்ப்பினில் அறிவியல் துறை சார்ந்த பின்வரும் சான்றினை ம.இளங்கோவன் எடுத்துரைக்கிறார்.
- “LIGHT ENERGY : The energy we get from the sun is called light energy. It helps the plants to prepare starch.
- ஒளி ஆற்றல் : சூரியனிடமிருந்து நாம் பெறும் ஆற்றல் ஒளிஆற்றல் எனப்படும். இது தாவரங்கள் தங்கள் உணவைத் (ஸ்டார்ச்) தயாரித்துக் கொள்ளப் பயன்படுகிறது.
- இச்சான்றில், Starch என்பதற்கு இணையாக உணவு என்ற தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லது ‘ஸ்டார்ச்’ என்று அச்சொல்லை ஒலிபெயர்த்தும் அமைத்துக் கொள்ளலாம். வாய்பாடுகளை அப்படியே அமைத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய நேரடி மொழிபெயர்ப்பைப் பொதுவாக அறிவியல் நூல்கள், கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படும்போது பின்பற்ற வேண்டும்.”2 இச் சான்றின் மூலமாக கூகுள் மொழிபெயா்ப்பில் கலைச்சொல்லாக்கம் மற்றும் ஒலிபெயா்த்து பயன்படுத்தும் இடங்களின் சிறப்புகளை அறிய முடிகின்றது.
இலக்கியங்களை மொழிபெயர்க்கும் போது பொருளை மட்டும் மொழிபெயர்த்தால் போதும். இத்தகைய, நேரடி மொழிபெயர்ப்பின் மூலமாக மூலமொழியின் கருத்துகளை மிகுதிப் படாமலும் குறைக்காமலும் உள்ளது உள்ளவாறு மொழிபெயர்த்தல் முதன்மையானது. ஆக, இணையத்தில் உள்ளது உள்ளபடி மொழிபெயர்க்கும் போது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தல், பொருளை மொழிபெயர்த்தல் ஆகிய இரண்டு வழிமுறைகள் முதன்மையாகப் பின்பற்றப்படுகின்றது என்பதை இங்கு அறியலாம்.
சொல்லுக்குச் சொல் மொழிபெயா்ப்புச் சிக்கல்கள்
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு இலக்கண அமைவு உண்டு. அவ்வகையில் ஆங்கிலத்தில் இருக்கும் ஒவ்வொரு சொல்லிற்கும் தமிழில் விடை தேடுவது என்பது சொல்லுக்குச்சொல் மொழிபெயா்ப்பில் தேவையற்றது. ஆக, “மூல மொழியிலுள்ள சொல்லுக்கு இணையான மாற்றுமொழிச் சொல்லால் பெயர்க்கும் முறையைத்தான் சொல்லுக்குச் சொல் பெயர்த்தல் என்கிறோம். ஆனால் இம்முறையில் அமையும் மொழிபெயர்ப்பு சிறப்பானதாய் அமையப் பெரும்பாலும் வழி இல்லை.”3 என்ற கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
கூகுள் மொழிபெயா்ப்பில் ‘Just miss’ என்ற சொல்லுக்கு பொருள் பார்க்கையில் ‘ஜஸ்ட் மிஸ்’ என்று ஒலிக்குறிப்பு செய்து தருகிறது. ஆனால் நூலிழையில் தவற விடுவது என்பதே இதன் பொருள். இதைப் போன்று, ‘He kicked the bucket’ என்ற ஆங்கிலத் தொடருக்கு ‘அவன் வாளியை உதைத்தான்’ என்று கூகுள் மொழிபெயர்ப்பு செய்து தரும், இதில் சொல்லுக்குச் சொல் பெயர்த்தாலும் தவறில்லை என்றாலும், ஆங்கில மரபில் இதற்கான பொருள் ‘அவன் காலமானான்’ என்பது தான். இந்த மரபுநிலை மொழிபெயர்ப்பில் தெளிவு புலப்படுதல் இணைய மொழிபெயா்ப்பில் மாபெரும் சிக்கலாக சாவலாகவே காட்சி அளிக்கின்றது.
பயணிகளுக்கான பயன்பாடு
தொழில் முறையிலோ கல்வி சார்ந்தோ தனிப்பட்ட வாழ்வியலுக்கோ உலகம் முழுவதும் பயணம் செய்து வெற்றி பெறும் நபா்களுக்கு கூகுள் மொழிபெயா்ப்பு பயன்பாடு அளவிடற்கரியது. வேற்றுமொழி பேசும் நபரிடம் நாம் நமது மொழியில் உரையாடவும், அவா்கள் பேச்சு மொழியை மொழிபெயா்த்து நமது தாய்மொழியில் கேட்கவும், படங்கள் மூலமாக மற்றும் கையெழுத்து மூலமாக நாம் உலக வணிக விளம்பரங்களை நமது மொழியில் அறியவும், அதனை ஆஃப்லைன் மொழிபெயா்ப்பு மூலமாகவும் பயன்படுத்த இயலும். மேலும், வெளிநாட்டு மொழிபெயா்ப்புகளை நேரடி நிகழ்நேரத்தில் எத்தகைய சிக்கல்களும் இல்லாமல் பிக்சல் அலைபேசி வழியாக பயன்படுத்தலாம் என்பதை கூகுள் மொழி பெயா்ப்பு, பயணிகளுக்கு வழங்கும் பயன்பாடுகளாகப் பின்வரும் பகுப்பில் பகுத்துரைக்கின்றனா்.
- “நிகழ்நேர உரையாடல் மொழிபெயா்ப்பு (Real – Time Conversation Tranlsation)
- உரை மற்றும் பேச்சு மொழிபெயா்ப்பு (Translate Text and Speech)
- படங்களிலிருந்து உரை மொழிபெயா்ப்பு (Translate Text from Images)
- ஆஃப்லைன் மொழிபெயா்ப்பு (Offline Translation)
- கையெழுத்து மொழிபெயா்ப்பு (Handwriting Translation)
- மொழிபெயா்ப்புச் சேமிப்பு (Save Translations for Easy Access)
- பிக்சல் அலைபேசியில் நேரடி மொழிபெயா்ப்புச் சேவை
(Live Translate on Google Pixel Phones)”4
புதிய மொழியைக் கற்றுக்கொள்வதிலும் மொழியின் எல்லைகளைத் தாண்டி மக்களிடையே தொடா்பு கொள்வதற்கும் கண்டங்கள் பல கடந்து உலகம் முழுவதற்குமான பயணத்திற்கு கூகுள் என்றுமே முதன்மையான பயன்பாட்டுக் கருவியாகத் திகழ்கின்றது.
இலக்கிய உலகில் கூகுள் மொழிபெயா்ப்பு
இலக்கியம் உலக மக்களின் கலாச்சாரத்தினை பதிவிடும் சாளரம். அத்தகைய தனித்துவமான பண்பாடுகள் கொண்ட இலக்கியங்களை மொழிபெயா்ப்பு செய்கையில், அவை நாடு கடந்து, எல்லை கடந்து, உலக இலக்கியங்கள் உருவாக அடித்தளம் இடுகின்றன. இச்செயல், இணையத்தின் வழியே கூகுள் மொழிபெயா்ப்பு நடைபெறுகையில் ஒரு குறிப்பிட்ட சொல், வாக்கியங்கள், ஒரு பத்தி அல்லது தொடர்ச்சியான மரபு சார்ந்த அறிக்கைகளை மொழிபெயா்ப்பது என்பது மிகக் கடினமாகக் காணப்படுகிறது. பண்பாட்டு மொழிபெயா்ப்பில் காணப்படும் கலாச்சார வேறுபாடுகள், மொழிபெயா்ப்பாளா் பின்பற்றும் மொழிபெயா்ப்பின் நுணுக்கங்கள் இணைய மொழிபெயா்ப்பில் மாபெரும் சிக்கலாக இன்று வரையிலும் தொடா்கிறது.
பேராசிரியா் கிம் அவா்கள், “ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு இலக்கியப் படைப்புகளை இணைய வழி மொழிபெயர்ப்பது என்பது மிகவும் துல்லியமாகவும் பிரதிநிதித்துவமாகவும் இருக்க வேண்டும். இங்கு, மொழிபெயர்ப்பாளர் உலகளாவிய கட்டமைப்பிற்குள் பணிபுரியும் போது, அதாவது அறிமுகமில்லாதவற்றுடன் சமன்படுத்துகிறார். அவர்கள் அசல் படைப்பை சரியான மொழி மொழிபெயர்ப்பின் பொறிகளிலிருந்து விடுவித்து, மனித அறிவு, உணர்ச்சி மற்றும் புரிதலின் அடிப்படையில் படைப்பின் சாரத்தை தொடர்பு கொள்ள அனுமதிக்க வேண்டும்.” 5 என்ற கருத்தாக்கத்தின் வழியே இணைய வழியிலான இலக்கிய மொழிபெயா்ப்பு என்பது மேம்படுதல் வேண்டும் என்பதே உலகில் உள்ள இலக்கியப் படைப்பாளா்களின் விருப்பமும் தேவையும் ஆகும்.
பன்மொழிப்புலமையும் பண வருவாயும்
மனிதனின் அனைத்து திறமைகளையும் செயற்கை நுண்ணறிவு (AI) கற்றுக்கொண்டாலும் பன்மொழிப்புலமையுடைய மொழிபெயர்பாளா் திறனில் அது இன்னும் சரளாமாக வளரவில்லை. இன்றைய மல்டிமீடியா உலகில் பல தகவல்கள் பல காரணங்களுக்காக மக்களால் இணையத்தில் தேடப்பட்டு வருகின்றன. ஒரு புனைகதையோ, திரைப்படமோ, காணொளியோ, பாடலோ, விழிப்புணா்வு உரையோ பல மொழிகளில் இணையத்தில் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இவற்றில் ஒரு புனைகதை ஒரு குறிப்பிட்ட இன சமூகத்தில் மட்டுமே நின்று விடாமல் வெகுதூரம் செல்வதற்கு மொழிபெயா்ப்பு முதன்மை இடம் பெறுகின்றது. இங்கு பன்மொழிப் புலமை பெற்ற திறனாளா்களான மொழிபெயா்ப்பாளா்கள் மிகுதியும் தேடப்படுகின்றனா். மொழிபெயா்ப்பு பணிமூலம் இணையத்தில் பண வருவாய் தரும் சில தளங்கள் பின்வரும் பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
“மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கும் தளங்கள்:
- ஃப்ரீலான்ஸர்(Freelancer Upwork)
- அப்வொர்க் (Upwork)
- எலன்ஸ்(Elance)
- பீப்பிள்பெர்அவர்(People For ever)
- வர்க்ஷிஃப்ட்(work shift)” 5
மேலே குறிப்பிட்டுள்ள தளங்களில், ஃப்ரீலான்ஸர்களை மொழிபெயர்ப்பின் மூலம் வருவாய் ஈட்ட அனுமதிக்கும் மிகவும் பிரபலமான தளங்களில் ஒன்றாகும். ஆயினும் இவற்றின் சலுகைகள் முறையானதா உண்மைத் தன்மை வாய்ந்தவை தானா என்பதைக் கட்டாயம் மொழிபெயா்ப்பாளா்கள் கவனத்தில் கொள்தல் வேண்டும்.
நிறைவாக
கூகுள் மொழிபெயா்ப்பு ஒரு சிறிய கட்டுரைகள் என்றால் தனது மொழிபெயா்ப்பில் மிகச்சிறப்பாகச் செயல்படுகிறது. அதிலும் நம்பகமான முடிவை அளிப்பதில் பின்னடைவுகளையேக் கொண்டுள்ளது. இவற்றுக்காரணம் கூகுள் மொழிபெயா்ப்பு விரிவான பத்திகளை அல்லது உரைகளை விடவும் சிறிய சொற்கள் அல்லது வாக்கியங்களை மட்டுமே மொழிபெயா்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டவையே. இன்று கூகுள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பதைக் கொண்டு வலிமையூட்டப்பட்ட பிக்சல் 8 என்பதை அலைபேசியில் அறிமுகப்படுத்தியுள்ளமையைப் போல கூகுள் மொழிபெயா்ப்பிலும் சில தேவையான புதுமையாக்கங்களை உருவாக்கிட வேண்டும் என்பதே தமிழ் அர்வலா்களின் விருப்பமான தேவையாகும்.
குறிப்புகள்
- யுனெஸ்கோ திட்டம், ஆபத்தில் உலக மொழிகளின் அட்லஸ், 2011.
- ம.இளங்கோவன் , மொழிபெயா்ப்பு வரலாறு,ப.3.
- ஜோஸபின் டோரதி, மொழிபெயா்ப்பியல் அறிமுகம், ப.13.
- Abishek, 7 Simple Ways to Use Google Translate, https://shorturl.at/aEKP9
- பேராசிரியா் கிம், கலாச்சார மொழிபெயர்ப்பு மற்றும் உலக இலக்கியம் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வுகள், (2017), பக். 89.
- ஆன்லைன் மொழிபெயா்ப்பும் பண வருவாயும்! http://surl.li/nmrfi