திருமதி.வீ.வெள்ளைத்துரைச்சி,
உதவிப்பேராசிரியர்,
முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை,
எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி,
சிவகாசி.
நம் முன்னோர்கள் இலக்கியங்களைச் செய்யுள் வடிவிலேயே இயற்றினர். ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் நம் இலக்கியங்களின் வடிவங்கள் மாற்றம் பெற்றது. பெரும்பாலும் இன்று நாம் உரைநடை வடிவிலேயே இலக்கியங்களைப் படைக்கின்றோம். அன்றைய காலத்தில் செய்யுட்களை இலக்கணவிதிப்படி உருவாக்கினர். அனைத்துச் செய்யுட்களும் யாப்பு இலக்கணத்தைப் பின்பற்றி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புக்களைக் கொண்டு, பாவகைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இன்றைய இணைய உலகத்தில் யாப்பு இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாகக் கற்றலிலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும் வகையில் கற்பித்தலிலும், பிறதுறை எழுத்தாளர்களும் மரபுக்கவிதை உருவாக்குவதிலும், யாப்புறுப்புக்களைக் கண்டறிவதிலும் அவலோகிதம் என்ற யாப்பு மென்பொருளின் அவசியத்தைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
Our forefathers composed literature in the form of poems. After the arrival of the British, the forms of our literature changed. Mostly today we create literature in prose form. In those days Seyyuds were formed according to grammar. All Sayyuts are based on syllables, following the Yapu grammar, consisting of syllables, syllables, syllables, palms, feet, and thighs. In today’s internet world, this article examines the need of Yapu software called Avalokitam for students to learn Yapu grammar easily, for teachers to teach in a way that students can easily understand, and for writers of other fields to create traditional poetry and find parts of Yapu.
அவலோகிதம்
“ஒரு தமிழ் யாப்பு மென்பொருள் ஆகும். உள்ளிடப்பட்ட உரையினை தமிழ் யாப்பு விதிகளின்படி ஆராய்ந்து – எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புக்களை கணக்கிட்டு, இவற்றைக் கொண்டு உள்ளீட்டின் பாவகையினை கண்டறிந்து மேற்குறிப்பிட்டுள்ள யாப்புறுப்புக்களையும் பாவிதிகளின் பொருத்தத்தையும் வெளியிடும். இதில் யாப்பிலக்கணம் கற்கவும் வழி உள்ளது. கீழ்க்கண்ட பாவகைகளை அவலோகிதம் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
வெண்பா, ஆசிரியப்பா, தரவு கொச்சகக்கலிப்பா, வெண்கலிப்பா, வஞ்சிப்பா, குறட்டாழிசை, குறள்வெண்செந்துறை, வெண்டாழிசை, வெள்ளொத்தாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம், ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம், கலித்தாழிசை, கலித்துறை, கட்டளைக்கலிப்பா, கட்டளைக்கலித்துறை, கலிவிருத்தம், வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்”1 என்பதன் வாயிலாக அவலோகிதத்தின் செயல்பாடு குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறியமுடிகின்றது.
அவலோகிதம் – உருவாக்கியவர்
அவலோகிதம் என்ற மென்பொருள், யாப்பு இலக்கணத்தை கண்டறியக்கூடிய மென்பொருளாகும். இம்மென்பொருளை ஸ்காட்லாந்து செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற வினோத் ராஜன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
அவலோகிதம் – பெயர்க்காரணம்
அவலோதிகம் என்ற யாப்பு மென்பொருளில் ‘பற்றி’ என்ற உள்ளடக்கப்பட்டியலில் “பண்டைய தமிழ் மஹாயான பௌத்தர்களால் தமிழ் மொழியை அகத்தியருக்கு உபதேசித்தவராக கருதப்பட்ட, சகலபுத்தர்களின் மஹாகருணையின் உருவகமாக விளங்கும் பகவான் போதிசத்துவர் அவலோகிதேஸ்வரரின் பெயர் இம்மென்பொருளுக்கு இடப்பட்டது.”2 என அம்மென்பொருளின் பெயர்க்காரணம் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. மேலும், தமிழ் விக்சனரி அவலோகிதன் என்பதற்கு “பௌத்த முனிவருள் ஒருவர், அகத்தியரின் ஆசிரியராகக் கருதப்படுபவர்”3 என விளக்கம் அளிக்கின்றது. ஆகவே, இம்மென்பொருளுக்கு பௌத்த முனிவரான அவலோகிதேஸ்வரரின் பெயரையே சூட்டியுள்ளதை அறிய இயலுகின்றது.
அவலோதிகம் – உள்ளடக்கப் பட்டியல்
அவலோதிகம் மென்பொருளின் இடதுபக்கத்தில் ஆராய்க, சொல் தேடல், பாவகைகள், கற்க, குறிப்புகள், Tamil Prosody, பதிவிறக்கம், உதவி, பற்றி, பிற கருவிகள் (அஷரமுகம், ஜினவாணி, அனுநாதம்) என்ற உள்ளடக்கப் பட்டியல் உள்ளன. இவ்வுள்ளடக்கப் பட்டியலை ஒவ்வொன்றையும் சொடுக்கினால் வலது புறத்தில் அதற்குத் தொடர்பான நமக்குத் தேவையான செய்திகள் தோன்றும். அதனடிப்படையில் நமக்குத் தேவையான பயன்பாட்டை நாம் பெறலாம்.
சான்றாக
‘ஆராய்க’ என்ற உள்ளடக்கப்பட்டியலை நாம் சொடுக்கினால் அதன் வலது புறத்தில் ‘பா உள்ளிடும் வழிமுறைகள்’ என்று கொடுத்து அதற்குக் கீழ் செய்யுளை நாம் உள்ளிடுவதற்குத் தேவையான வழிமுறைகள் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து ‘பாவினை உள்ளிடவும்’ என இருக்கும். அதற்குக் கீழ் நாம் கொடுக்கப்பட்டிருக்கும் செய்யுளில் ‘யாப்புறுப்புக்களை மட்டும் வெளியிடவும், பாவினை கண்டறிய வேண்டாம்’ என சொடுக்கினால் யாப்புறுக்களை மட்டும் திரையில் காண்பிக்கும், அப்படி அதனைச் சொடுக்காமல் விட்டுவிட்டால் அந்தச் செய்யுள் எந்தப் பா என்பதையும் காண்பிக்கும். அதற்கு அடுத்து ‘விதிகளோடு பொருத்துக’ என்பதில் இம்மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பாக்களும் இருக்கும். நாம் நம் செய்யுள் இந்தப் பாவகையுடன் ஏன்? பொருந்தவில்லை என்பதை ஒவ்வொரு பாவினையும் சொடுக்கி அதன் விதிமுறைகளுடன் தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக, ‘மாறுபட்ட அலகிடல்’ என்பதில் நான்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எந்த விதிமுறையும் என்றால் அதனைச் சொடுக்கி நம் செய்யுளின் யாப்பு அமைப்பினைத் தெரிந்துகொள்ளலாம். ‘பா உள்ளிடும் வழிமுறைகள்’ என்ற பட்டியலுக்கு வலது புறத்தில் எழுத்து, அசை-சீர், தளை, அடி, தொடை, அனைத்தும் என்ற பட்டியல் இருக்கும். அதில் நாம் உள்ளிட்ட செய்யுளுக்கான அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறாக நாம் ஒவ்வொரு உள்ளடக்கப் பட்டியலை நாம் சொடுக்கும் போது பல உள்ளடக்கப் பட்டியல் தோன்றி யாப்பு சம்மந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.
யாப்பிலக்கணத்தைக் கற்பித்தலில் அவலோகிதத்தின் அவசியம்
இன்றைய மாணவர்கள், ஆசிரியர்கள் எவ்வளவு மனநிறைவுடன் மிகத் தெளிவாகப் பாடத்தைக் கற்பித்தாலும், அதனை மிக ஆர்வத்துடன் கவனிக்கும் அளவிற்கு அவர்களின் மனநிலை இல்லை. ஏனெனில் இன்றைய மாணவர்கள் இணையதளம் வழியாகவே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கின்றனர். அதனால் நாமும் கொஞ்சம் மாணவர்களின் மனநிலை அறிந்து அவர்களுக்குத் தகுந்தாற் போல் மாற வேண்டும். இலக்கியம் என்றாலே மாணவர்கள் கவனிப்பது கடுமையாக உள்ள இன்றைய காலத்தில் இலக்கணத்தை ஆசிரியர்கள் எவ்வளவு எளிமையாக கரும்பலகையில் நடத்தினாலும், அவர்கள் அதனை முழுமையாகக் கற்பது சந்தேகமே. அதனை உணர்ந்துதான் இம்மென்பொருள் உருவானதோ என்னவோ? ஒரு ஐயம் பிறக்கின்றது. ஏனென்றால் அவலோதிகம் என்ற யாப்பு மென்பொருள் – யாப்பு இலக்கணத்தில் உள்ள எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பதையும் நான்கு வகைப்பா மற்றும் அதன் பாவினங்களையும் எளிமையாக மாணவர்களுக்கு கற்பிற்கும் அளவிற்கு சிறந்து விளங்குகிறது. யாப்பு இலக்கணத்தை ஆசிரியர்கள் அவலோதிகம் என்ற மென்பொருளின் வழியாகக் கற்பிக்கும் போது மாணவர்களின் மனிதில் எளிமையாகப் பதியலாம். ஏனெனில் இன்றைய மாணவர்கள் காட்சிப்படுத்துதலையே அதிகம் விரும்புகின்றனர். இன்று பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் ஒளிப்படக்காட்டி (Projector) வசதியுள்ளது. அதனால் இம்மென்பொருளை ஒளிபடக்கருவி வாயிலாக மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் போது யாப்பிலக்கணத்தை எளிதில் புரிந்து உள்வாங்க வாய்ப்புண்டு. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு யாப்பிலக்கணத்தை கற்பிக்க இம்மென்பொருள் அவசியமான ஒன்றே.
யாப்பிலக்கணத்தைக் கற்றலில் அவலோகிதத்தின் அவசியம்
மாணவர்கள் வகுப்பறையில் யாப்பிலக்கணத்தை முழுமையாக உள்வாங்க முடியாத பட்சத்தில் இம்மென்பொருளில் ‘கற்க’ எனும் உள்ளடக்கப் பட்டியல் வழியாக அவர்களால் ஆசிரியர் கற்றுக் கொடுத்தவற்றை முழுமையாகப் பிழையறக் கற்க முடியும். நன்னூலார் எழுத்ததிகாரத்தில்,
“ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின்
பெருக நூலிற் பிழைபா டிலனே” (நன்னூல்.எழுத்ததிகாரம்.நூற்பா. 42)
என்கிறார். அதாவது மாணவர்கள் ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறைக் கேட்டால் அப்பாடத்தை முழுமையாக கற்க முடியும் என்கிறார். இக்கருத்தை உறுதி செய்யும்படியாக, இம்மென்பொருள் ஆசிரியர் கற்றுக்கொடுத்த யாப்பிலக்கணத்தை முழுமையாகப் பிழையறக் கற்க உதவும். ஏனெனில் இம்மென்பொருளில் பேசக்கூடிய தமிழில் யாப்பிலக்கண விதிகளை படிப்படியாகத் தெள்ளத் தெளிவாகச் சான்றுகளுடன் விவரித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாங்கள் கற்ற யாப்பிலக்கணத்தைச் சோதித்து பார்க்க ‘ஆராய்க’ எனும் உள்ளடக்கபட்டியல் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு செய்யுளை யாப்பிலக்கண விதிப்படி மாணவர்களே பிரித்து வைத்துக் கொண்டு அதனை ஆராய்க எனும் பகுதியில் உள்ளீடு செய்து தாங்கள் கண்டறிந்த எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா அனைத்தும் சரியா என அவர்களால் ஆராய்ந்து பார்க்கவும் இம்மென்பொருள் உதவிக்கரமாக இருக்கும். அதனால் மாணவர்கள் யாப்பிலக்கணம் கற்றலில் இம்மென்பொருள் அவசியமான ஒன்றே.
மரபுக்கவிதை இயற்றுவதிலும் அவலோகிதத்தின் அவசியம்
தமிழ்மொழியை பாடமாக எடுத்து கற்றவர்கள் மட்டுமல்லாது தமிழ்மொழியின் மீது ஆர்வம் கொண்டு பிறதுறையைக் கற்றவர்களும், அதிகம் கல்வி கற்காதவர்களும் மரபுக்கவிதையை இயற்றுவதற்கு இம்மென்பொருள் மிகவும் உதவிகரமாக இருக்கும். எப்படியெனில் இம்மென்பொருளில் ‘கற்க’ எனும் உள்ளடக்கப் பட்டியல் வழி விதிமுறைகளைக் கற்றுப்பின் கவிதைகளை இயற்றலாம். இல்லையெனில் இயற்றிய கவிதைகளை ஒருங்குறியில் தட்டச்சு செய்தோ அல்லது நகல் எடுத்து உள்ளீடு செய்தோ அது எந்தப் பாவகை என்றும், அதனுடைய யாப்புறுக்களை அனைத்தையும் அறியமுடியும். எனவே மரபுக்கவிதை படைப்பதற்கு இம்மென்பொருள் அவசியமான ஒன்றே.
யாப்புறுக்களைக் கண்டறிவதில் அவலோகிதத்தின் அவசியம்
பள்ளிகளில் தமிழ் இரண்டாம் தாளில் யாப்பிலக்கண விதிப்படி நயங்களைக் கண்டறிதல் என்பது உண்டு. அதனை இலக்கிய நயம் பாராட்டுக என ஒரு கவிதையைக் கொடுத்து வினா கேட்பர். இந்நயம் பாராட்டுதலுக்கு இம்மென்பொருள் மிகவும் உதவிகரமாக இருக்கும். எப்படியெனில் மாணவர்கள் பாடப்பகுதியில் கொடுத்துள்ள சான்றுகளை இம்மென்பொருளின் உதவியால் சரியாகக் கண்டுபிடிக்க பழகிவிட்டால், தேர்வில் கேட்கப்படும் வினாவிற்கு சரியான பதிலை மாணவர்களால் எழுத முடியும்.
மேலும் அனைத்துக் கல்லூரிகளிலும் பொதுத்தமிழ் மற்றும் தமிழ்த்துறையைப் பயிலும் மாணவர்களுக்கு செய்யுட்களை அல்லது தற்கால படைப்புகளாகிய கவிதைகளை பாடமாக வைத்தால் இலக்கிய நயங்களைக் கண்டறிதல் என்பது இப்பாடத்தை கற்றப்பின் மாணவர்கள் பெறும் திறன்களில் உண்டு. எதற்காகவென்றால் ஒரு பாடத்தைப் படித்ததின் விளைவாக மாணவர்கள் கற்றல் திறனை அறிதல் (CO,CLO) என்ற அடிப்படையில் இலக்கிய நயங்களைக் கண்டறிதல் உண்டு. இதற்கும் இம்மென்பொருள் மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆகவே யாப்புறுப்புக்களைக் கண்டறியவும் இம்மென்பொருள் அவசியமான ஒன்றே.
முடிவுரை
இக்கட்டுரையில் யாப்பு இலக்கணம் கற்றல், கற்பித்தலில் அவலோதிக மென்பொருளின் அவசியத்தையும், ஆங்கிலேயரின் வருகையினால் நம் இலக்கிய வடிவம் முற்றிலும் மாறுபட்டுப் போனது, அதனால் இன்றைய எழுத்தாளர்கள் (பிறதுறையைக் கற்றுத் தேர்ந்தவர்கள்) யாப்பு இலக்கணத்தை முமுமையாகக் கற்கவும், எளிமையாகப் புரிந்து கொண்டு இன்றைய இலக்கிய வடிவமான கவிதை இயற்றவும், இயற்றிய கவிதையினை யாப்பிலக்கண விதிப்படி அமைந்துள்ளதா என்பதை அறியவும், யாப்புறுப்புக்களைக் கண்டறியவும் இம்மென்பொருள் அவசியமாகின்றது. அதனால் இம்மென்பொருள் நம் தமிழ்மொழிக்கு கிடைத்த ஒரு வரம் என்றே சொல்லலாம்.
சான்றெண் விளக்கம்
- https://www.avalokitam.com
- https://www.avalokitam.com
- ta.m.wiktionary.org