முனைவர் ப.கலைவாணி,
கெளரவ விரிவுரையாளர்,
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர்.
தோற்றுவாய் :
உலக மொழிகளுள் ‘செம்மொழி’ என்னும் தகுதியைப் பெற்றதும், மூத்ததும், இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்ற முன்னோடி மொழியாகவும் தமிழ்மொழி திகழ்ந்து வருகின்றது. மொழி மற்றும் இலக்கியங்கள் தவிர்த்த பிறதுறைகளில் அறிவுவழிபட்ட ஆய்வுகள் உயர்ந்தும் மேன்மையுடனும் வளர்ந்துவரும் இக்காலப் பகுதியில் தமிழ் ஆய்வாளர்களும் தகுதியான தமிழ் ஆர்வலர்களும் தமிழ் மொழியினை உலகளாவிய தன்மையில் கொண்டு செல்லுகின்றனர்.
திரைகடல் ஓடித் திரவியம் தேடிய தமிழன் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளான். அவன் இருக்கும் இடங்களில் எல்லாம் தம் தாய்மொழியினைப் பேணுகின்ற பொருட்டுச் சங்கங்களை நிறுவிப் பணி செய்கின்றான். அப்படியான உலகத் தமிழ் இணைய இதழ்களின் செயல்பாடுகளும் குறித்துச் சற்று விரித்துரைப்பதே இக்கட்டுரையாகும்.
இணைய இதழ்கள் :
இணைய இதழானது கணினியில் தட்டச்சு செய்து, அச்செய்திகளுக்குத் தேவையான புகைப்படங்கள், வீடியோ அல்லது அசைவூட்டுப்படங்களை இணைத்துப் பதிவேற்றுவர். உடனே இது எந்த விநியோகிப்பாளருமின்றி நேரிடையாக நம் கணினி, அல்லது செல்பேசி வழியாக வாசகர்களைச் சென்றடைகிறது. சில இணைய இதழ்கள் வானொலியைப் போன்று ஒலிவடிவிலும் செய்திச் சேவையை வழங்குகிறது. இத்தகைய இதழ்களே இணைய இதழ்கள் எனப்படுகின்றன. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்து வருவதால் உலகின் பல இடங்களிலிருந்து தமிழில் இணைய இதழ்கள் நடத்தப்படுகிறது. எனவே நிலவியல் அடிப்படையில் இவற்றை நோக்க வேண்டியது அவசியமாகிறது.
உலக நாடுகளும் தமிழ் இணைய இதழ்களும் :
உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் தமிழர்கள் அமைப்புகளைத் தோற்றுவித்து தம் இணையப் பக்கங்களின் வாயிலாக உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பொருட்டு இதழ்களை நடத்திவருகின்றனர்.
ஹாங்காங்
ஜப்பானின் தலைநகர் ஹாங்காங்கில் ‘தமிழ் பண்பாட்டுக் கழகம் ஹாங்காங்’ https://www.tcahk.com/mukappu எனும் முகவரியில் கழகத்தின் நிகழ்வுகள், உணவு முறைகள், கலாச்சாரம், செய்திகள், இந்திய தூதரகம், ஆண்டு நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றன. 11-07-2000 முதல் ஹாங்காங் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். தம் இதழ் பக்கங்களைத் தமிழ், ஆங்கிலத்தில் அமைத்துள்ளனர்.
இலண்டன்
இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் இயங்கிவரும் இவ்வமைப்பு உலகத்தமிழர்களின் சுரண்டலுக்கெதிராகவும், குறிப்பாக ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பாகச் செயல்படுகிறது. www.tamilsolidarity.org எனும் முகவரியில் தம் இதழை நடத்துகிறது. தினமும் செய்திகளைப் பதிவேற்றுகின்றனர். சிட்னி ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் உள்ள தமிழர்கள் www.australiantamilcongress.com எனும் முகவரியில் தம் அமைப்புகுறித்த தகவல்களையும், செய்திகளையும் மாத இதழாக நடத்திவருகின்றனர்.அங்கிருந்து ஒரு சில இணைய இதழ்கள் வெளிவருகின்றன. நிலாச்சாரல்(www.nilacharal.com) ஜெர்மனியிலிருந்து வெளிவரும் இணைய இதழ் ஆகும். உலகச் செய்திகள், தமிழகச் செய்திகள், தொடர்கள், கதைகள், கவிதைகள், ஜோதிடம், அறிவியல், ஆன்மிகம், சமையல், நகைச்சுவையெனச் செய்திகளை வெளியிடுகிறது. இவ்விதழைப் பதிவு செய்து படிக்க வேண்டும். மற்றும் உலகெங்கிலுமிருந்தும் எழுத்தாளர்கள் எழுத வரவேற்கின்றனர்
கனடா
கனடாவில் இயங்கிவரும் தமிழ் இளையோர் அமைப்பு https://www.tamilacademy.org/ எனும் முகவரியில் தம் இதழ் பக்கத்தை நடத்திவருகிறது. தினமும் ஈழத்தமிழர் குறித்த தகவல்களைப் பதிவேற்றுகின்றனர். செய்திகள் பதிவேற்றப்படும் நேரத்தையும் குறிப்பிடுகின்றனர். செய்திகள், புகைப்படத் தொகுப்பு, காணொளி, ஆவணங்கள் எனப் பகுத்துச் செய்திகளை வெளியிடுகின்றனர்.
இலங்கை
ஆசியாவில் முதல் வானொலி ஒலிபரப்பைத்தொடங்கிய இலங்கை, தமிழகத்திற்கு அடுத்தபடியாக அதிகளவில் தமிழர்கள் வசிக்கும் நாடாகும். பூர்வீகத் தமிழர்களும், இந்திய வம்சாவழித் தமிழர்களும் உள்ள இலங்கையில் இதழியல் துறையும் சிறப்புற அமைந்துள்ளது. அத்தகைய இலங்கையில் இருந்து, வீரகேசரி (www.virakesari.lk), அததெரண (www.adaderana.lk) போன்ற பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகின்றன.
சிங்கப்பூர்
சிங்கப்பூரிலிருந்து ‘தமிழ்முரசு’ www.tamilmurasu.com.sg எனும் இதழ் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகிறது. இவ்விதழில் சிங்கப்பூர், இந்தியா, உலகம், இளையர் முரசு, தலையங்கம், திரைச்செய்தி, படங்கள் எனப் பகுக்கப்பட்டுச் செய்திகள் வெளியாகின்றன. தமிழகத்திலிருந்து சன் குழுமத்தால் வெளிவரும் தமிழ்முரசு இதழுக்கும் இவ்விதழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மலேசியா
மலேசியாவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் இருந்தாலும் குடியேற்றவாத காலப்பகுதியில் பிரித்தானிய அரசால் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்களின் குடிவழியினரே பெரும்பாலான மலேசியத் தமிழர்கள் ஆவார்கள். இங்குத் தேசிய மொழியாக மலாய் இருக்கிறது. மற்றும் மலாய், சீனம், தமிழ் கலந்த மேங்கிலிசு எனும் மொழியாகப் பேசப்படும் அளவிற்குத் தமிழின் செல்வாக்கு உள்ளது. மலேசியாவில் இருந்து ஒரு சில இணைய இதழ்கள் வெளிவருகின்றன. செம்பருத்தி (www.semparuthi.com) தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய நான்கு மொழிகளில் அச்சிலும் இணையத்திலும் வெளிவருகின்ற நாளிதழ் செம்பருத்தி. இவ்விதழ் கடந்த 123 ஆண்டுகளாக அச்சில் வெளிவருகிறது. “தலைப்புச் செய்திகள், கட்டுரைகள், தமிழீழச்
செய்திகள், உலகவலம், காணொளி, கலந்துரையாடல், தமிழகம், இந்தியச் செய்திகள், பல்சுவைப்
பக்கம் ஆகிய செய்திகளோடு சமூக வலைதளங்களில் இவ்விதழை இணைக்கும் வசதியும் உள்ளது. அடிக்கடி செய்திகளைப் புதுப்பிக்கின்றனர்.
ஜெர்மனி
தமிழகத்திற்கும் ஜெர்மனிக்கும் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்புகள் உண்டு. ஏறக்குறைய 60000 தமிழர்கள் அங்கு வசிக்கிறார்கள். அங்குள்ள கோலென் பல்கலைக் கழகம் மற்றும் ஜடல்பேர்க் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தமிழ் நூல்களை மின்பதிப்பாக இவ்விதழ் பதிவேற்றம் செய்துள்ளனர். ஊடறு எனும் பெண்களுக்கான மாத இதழும் ஜெர்மனியிலிருந்து வெளிவருகிறது.
நார்வே
நார்வேயில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவர். 10000 மேற்பட்ட தமிழர்கள் அங்கு வசிக்கிறார்கள். அங்கிருந்து ஒரு சில இணைய இதழ்கள் வெளிவருக்கின்றன. நார்வேயிலிருந்து நெய்தல்(www.neithal.com) எனும் இணைய இதழ் வெயிவருகிறது. செய்திகள், நேர்காணல், இளையோர் பக்கம், சிறுவர் பக்கம், மருத்துவம், சிறுகதை, கவிதை, நினைவலைகள், அறிவித்தல்கள் எனச் செய்திகளை வெளியிடுகிறது. மற்றும் வானொலி செய்திகளைக் கேட்கும் வசதியும் உள்ளது. மற்றும் நார்வேயிலிருந்து www.norwaytamil.com எனும் இணைய இதழும் வெளிவருகிறது.
உலகத் தமிழ்ச் சங்கங்கள்:
குறிப்பிட்ட நோக்கத்துடன் பலர்கூடி அமைக்கும் ஒரு குழு ‘சங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன்படி தமிழ், தமிழர் வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு அமைக்கப்படும் சங்கங்கள் தமிழ்ச்சங்கங்கள் எனப்படுகின்றன. இவ்வாறான தமிழ்ச்சங்கங்கள் பல தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. இச்சங்கங்கள் தம் இணைப் பக்கங்களில் இதழ்களையும் நடத்துகின்றன.
அவற்றுள் சில,
- மதுரைத் தமிழ்ச்சங்கம் – www.madhuraitamilsangam.com
- கரந்தைத் தமிழ்ச்சங்கம் – www.karanthaitamilsangam.com
- பெங்களுர் தமிழ்ச்சங்கம் – www.bangaloretamilsangam.com
- தில்லி தமிழ்ச்சங்கம் – www.delhitamilsangam.com
- கொழும்பு தமிழ்ச்சங்கம் – www.colombutamilsangam.com
- யூ.ஏ.இ தமிழ்ச்சங்கம் – www.uaetamilsangam.com
- இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் – www.netamilsangam.com
- மிக்சின் தமிழ்ச்சங்கம் – www.mitamilsangam.com
- மினசோட்டோ தமிழ்ச்சங்கம் – www.minnesotatamilsangam.org
- தென்புளோரிடா தமிழ்ச்சங்கம் – www.sfts.org
- இரியாத்துத் தமிழ்ச்சங்கம் – www.riyatamilsangam.com
- சிக்காக்கோ தமிழ்ச்சங்கம் – www.chicagotamilsangam.com
- பஹ்ரைன் தமிழ்ச்சங்கம் – wwwtamilmandram.com
- நொய்டா தமிழ்ச்சங்கம் – www.avvai;tamilsangam.com
- ரிச்மாண்ட் தமிழ்ச்சங்கம் – www.richmondtamilsangam.org
- அட்லாண்டா தமிழ்ச்சங்கம் – www.gatamilsangam.com
தமிழ்மொழி, தமிழா, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இச்சங்கங்கள் அரும்பணி ஆற்றி வருகின்றன.
இறுதிவாய் :
உலகம் தழுவிய இணைய இதழ்களில் அச்சு வேலை கிடையாது. எல்லாவற்றையும் கணினி மூலமாகவே தயாரித்துக் கொள்ளலாம். இணைய இதழ்களில் வெளிவரும் செய்திகள் உலக மக்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுவதால் பரந்துபட்ட வாசகப் பரப்பு உடையதாக உள்ளது. பிற ஊடகங்கள் ஒவ்வொன்றிலும் பெறக்கூடிய தனிப்பட்ட வசதிகள் அனைத்தையும் ஒருங்கே பெற முடிகிறது. எனவே இணைய இதழ்களானது தொலைத்தொடர்பு ஊடகங்களான அஞ்சல் துறை, தொலைபேசி மற்றும் வானொலி, தொலைக்காட்சி, அச்சிதழ்கள் போன்ற அனைத்து ஊடகங்களின் சிறப்புப் பண்புகளைப் பெற்ற பன்முக ஊடகத்தன்மையுடன் விளங்குகிறது. செய்திகளை வெளியிடுவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது, வாசகன்- ஊடகம் இடையேயான தகவல் தொடர்பு போன்ற கூறுகளின் பிற ஊடகங்களைக் காட்டிலும் விரைவான சேவையை இணைய இதழ்கள் மூலம் பெறமுடிகிறது. இதன்வாயிலாக இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் வளர்ச்சியில் இணைய இதழின் பங்கு மேன்மையானதாகும்.