தமிழும் அறிவியலும்

க.சந்திரலேகா M.A.,B.Ed.,M.Phil., (Ph.D)

பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திண்டுக்கல்.

முன்னுரை

            தமிழில் மரபு வழிப்பட்ட அறிவியலும், தொழில் நுட்பவியலும் வழக்கில் இருந்துள்ளதனைத் தமிழ் நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளினாலும், இலக்கியப் படைப்புகளினாலும் வரலாறு ஆவணங்கள் மூலமாகவும் அறிவியல் தொடர்பான செய்திகளைத் தமிழின் மூலமாக விரிவாகக் கூறலாம். ஓலைச் சுவடிகளில் வெடிமருந்து தொழில்நுட்பம்பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட தமிழைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அறிவியல் தமிழ் தோற்றம், வளர்ச்சி

ஐரோப்பியரின் இந்திய வருகைக்குப் பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் மேலைநாடுகளில் வெளியான அறிவியல் நூல்கள், இதழ்களைப் போன்று தமிழிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அறிவியல் தமிழுக்கு ஆதாரமாகும். “16, 17, 18ஆம் நூற்றாண்டுகளில் அறிவியலால் ஏற்பட்ட தொழிற்புரட்சி மொழியில் தாக்கத்தை உண்டாக்கியது புத்தம் புதிய கருவிகள், தொழில் நுட்பங்கள் உண்டாக்கியது. உலக மக்கள் வாழ்வில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மட்டுமல்லாமல் மொழியின் வளர்ச்சியிலும் மறுமலர்ச்சியை உண்டாக்கின” (அறிவியல் தமிழ் வரலாறு).

அறிவியல் தமிழ் வரையறை

            “அறிவியல் தமிழ்” என்ற சொல்லின் மூலம் நாம் எந்த அறிவுத்துறைகளைக் குறிப்பிடுகிறோம் என்பதை வரையறைப்படுத்த வேண்டும். அறிவுத்துறைகளைப் பயன்படுத்திச் செயலாற்றும் வினைமுறைகள் அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. வேளாண்மை, மருத்துவம் போன்ற துறைகளில் இச்சொல் பரவலாகப் பழக்கத்திலிருக்கிறது. நாம் அறிவியல் தமிழ் என்ற சொற்றொடரைப் பரவலான அளவில் விரிந்த பொருளில் அறிவியல், தொழில்நுட்பம் போனற் அறிவுத் துறைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகவே பயன்படுத்துகிறோம். அறிவியல் என்பது தொழில் நுட்பத்தையும் உள்ளடக்கியதாகக் கொள்வதும் நடைமுறையேயாகும் (கலைச் சொல்லாக்கம்),

அறிவியல் தமிழின் இன்றியமையாமை

            மொழி என்பது பல்வேறு மக்களை இணைக்கும் ஒரு தளமாகும். வெவ்வேறு மொழிகளின் நுணுக்கங்களை ஆராய்ந்தறியும்போது அவற்றில் உயர்ந்தவை, தாழ்ந்தவை என்று வரையறுத்துக் கூறுவது கடினம். ஆனால் வரலாற்றில் மொழிகள் உயர்ந்தும், தாழ்ந்தும், அழிந்தும் போயிருப்பதைக் காணமுடிகிறது. மனித வளர்ச்சியின் வெளிப்பாடு அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அறிவியல் வளர்ச்சி என்பது உலக மக்கள் அனைவரின் பொது உடைமையாகும். ஒரு நாட்டில் கண்டறியப்படும் அறிவியல் உண்மை அனைத்து மக்களையும் சென்றடைய அஃது அறிவியலின் வெற்றியாகும்.

அறிவியல் தமிழ் நூல் உருவாக்கம்

            அறிவியல் கருத்துக்களும், புதிய கண்டுபிடிப்புகளும் பல்வேறு திசைகளிலிருந்து தோன்றுகின்றன. பல்வேறு மொழியினரிடமிருந்து தோன்றியவை சிறப்புடைய ஒரு மொழியினைப் பற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆறுகள் ஒன்றாகக் கடலில் கலப்பதைப் போல் ஒருவருக்கொருவர் தெரியாத மொழியில் உரையாடி, நேரத்தையும், அறிவையும், சக்தியையும் வீணாக்குவதைக் காட்டிலும் ஆங்கில வழியில் உரையாடுவது உயர்ந்ததாகும்.

தமிழில் அறிவியல் நூல்கள்

            ஐரோப்பியர் வருகையால் இந்திய மொழிகளில் ஒன்றான மொழிகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெறும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

            19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியலைக் கற்பிக்கும் நோக்கில் பல இதழ்கள், பாடநூல்கள், பொது அறிவு நூல்கள் வெளிவரத் தொடங்கின. “1831இல் தமிழ் மேகசின் என்ற இதழ் அறிவியல் செய்திகளை வெளியிட்டது. 1931இல் தமிழகம் வந்த இரேனியுஸ் பாதிரியார் பூமி சாஸ்திரம் என்ற நூலைத் தமிழர் அறிவு பெறுவதற்காக வெளியிட்டார். இவர் பலவகை நோய்களைப் பற்றியும் அவற்றுக்கான தடுப்பு முறைகளைப் பற்றியும் தமிழில் வெளியிட்டார். இவரது பணியின் விளைவாகத் தமிழில் அறிவியலைச் சொல்லப் பலர் முன்வந்தனர். அறிவியலைத் தமிழில் சொல்ல முடியும் என்பதனை இராஜாஜி, கா.அப்பாத்துரையார், அ.கி. பரந்தாமனார் போன்ற தமிழறிஞர்களும் கூறியுள்ளனர். அவர்கள் அறிவியல் நூலாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளனர்”.

தாய்மொழியும், அறிவியல் மொழியும்

            அறிவியலின் வளர்ச்சி என்பதும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு என்பதும் தோன்றும் இடங்களால் வேறுபடலாம். ஆனால் அவற்றின் பயன் உலகநோக்கை முன்னிறுத்தியது. அறிவியலை ஆணிவேராகக் கொண்டு இயங்கும் “இன்றைய உலக சூழலில் அறிவியலின் பயனையும் தொழில் நுட்பத்தின் திறனையும் ஒருவர் எளிதில் பெற அவரின் தாய்மொழியில் அவை வழங்கப்படுதல் வேண்டும். உலக மயமாக்கலின் இன்றைய சூழலில் மக்கள் வளமும், நுகர்வோரும் நிறைந்த இந்தியா போன்ற நாடுகள் வெற்றுச் சந்தைகளாக மாறிவரும்”. இக்கருத்தை “உலகின் பல்வேறு பாகங்களிலும் அந்தந்த நாட்டுக்கு இன்றியமையாத அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் கண்டுபிடிப்புகள் உருவாகின்றன. அதுவே உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பயன்படக்கூடிய கண்டுபிடிப்புகளாகவும், வளர்ச்சியும், மாற்றமும், பெற்று வருகின்ற இந்தப் புதுமைகளை மக்கள் அறிந்து புரிந்து தன் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். அதுவே அறிவியல் வளர்ச்சியின் உண்மையான பயன் ஆகும்”.

            தமது நாட்டில் “அறிவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். அறிவியல் கல்வி இருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இவை நமது மொழியில் இல்லை”.

அறிவியல் தமிழும், எதிர்காலவியலும்

            இன்று அறிவியலும், தொழில்நுட்பமும் வாழ்க்கை முறையில் இரண்டறக் கலந்துவிட்டன. இந்தத் துறைகள் சார்ந்த செய்திகளை அனைவருக்கும் எட்டச் செய்ய “அறிவியல் தொழில் நுட்பத்துறைகள் நம் பண்பாட்டின் கூறாக அமைய வேண்டும். அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வேற்று மொழி சார்ந்ததாகவும், பொதுமக்களின் பண்பாட்டுக்கும், அன்றாட வாழ்வியலுக்கும் சற்றே புறப்பானதாகவும் இருக்கும் வரை அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் பயன் இருக்காது”.

அறிவியல் தமிழை பரப்பும் முறைகள்

            கட்டுரைகள், குறிப்புரைகள், சித்திரங்கள், புகைப்படங்கள், இதழ்கள், நூல்வழி அறிவியலைப் பரப்புதல் இம்முறையில் வாசகர்களின் தகவல்களைப் பதித்துக் கொள்ளுதல்.

            வானொலி, தொலைக்காட்சி, இணையம், மேடைப்பேச்சுக்கள் வழியாக அறிவியலைப் பரப்புதல்.

            திரைப்படங்கள் வாயிலாகவும், நிகழ்ச்சிகளின் வாயிலாகவுடம கண்டும், கேட்டும், உணரச் செய்தல்.

            செய்முறை விளக்கங்கள் மூலமாகவும், வகுப்புகள் நடத்தியும், மாதிரிகள் தயாரித்தும் அறிவியலைத் தமிழ் மூலமாகப் பரப்புதல் ஆகும்.

            கார்டூன், ஓவியம், நிழற்படங்கள், பாவைக்கூத்து, தெருக்கூத்து, வல்லிப்பாட்டு, நாடோடி கானம், நாட்டுப்புறக் கலைகளும் அறிவியல் பரவ அரியதோர் ஊடகமாகும்.

கணினித் தமிழ் வளர்ச்சி

            மனித மூளையின் வியக்கத் தக்க படைப்புகள் தான் மனிதரின் இயற்கை மொழிகள் தேவையான மூளை வளர்ச்சியும் செவித்திறனும் உடைய எந்த ஒரு குழந்தையும் தாம் பிறந்து வளர்கிற சமூகத்தின் மொழியைத் தாய் மொழியைக் குறைந்த அனுபவத்தில் காலத்தில் பெற்றுக் கொள்கிறது.

மொழித் தொழில் நுட்பம்

            மொழியின் எழுத்து வடிவம் என்பது மனிதன் உருவாக்கிய முதல் மொழித் தொழில் நுட்பமாகும். தனது கருத்துகளைக் காலம் கடந்து இடம் கடந்து நிலைத்து வைக்க மனித சமுதாயம் உருவாக்கிய முதல் மொழில் தொழில் நுட்பமாகும்.

மின் தமிழ்

            கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கே வசதி கிடையாது. தமிழில் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை. முதலில் தமிழை உள்ளீடு செய்வதற்கு வசதிகள் உருவாக்கப்படவில்லை. முதலில் தமிழை உள்ளீடு செய்வதற்கு வசதிகள் உள்ளன. மெல்ல மெல்லத் தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து உருவாக்கப்பட்டது. தமிழை நேரடியாகக் கணினியில் உள்ளீடு செய்யும் வசதி ஏற்பட்டது. வோர்ட், வோர்டு பெர்ஃபெக்ட் வோர்டு ஸ்டார், பேஜ் மேக்கர், வெஞ்சுரா போன்ற மென்பொருட்களில் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டது.

            தமிழில் இணைய தளங்கள், வலைப்பூக்கள் தோன்ற ஆரம்பித்தன. அச்சில் இடம்பெற்ற அனைத்தும் கணினியிலும் இடம்பெற்றன. தொடக்கத்தில் ஒருங்குறிக் குறியேற்றம் பன்னாட்டுக் கணினி நிறுவனங்களின் வணிக முயற்சிகளினால் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடுத்த கட்ட வளர்ச்சி

            கல்வெட்டு, ஓலைச்சுவடி, தட்டச்சு, அச்சுப்பொறி, கணினி ஆகியவற்றில் இதுவரை நாம் பார்த்த தமிழ் மொழித் தொழில் நுட்பமானது, தமிழ் உரை அல்லது பனுவலை அவற்றில் பொதிந்து அல்லது பதிந்து வைக்கப் பயன்பட்ட தொழில் நுட்பமே ஆகும். கணினியானது தன்மீது பதியப்பட்ட தமிழ் உரையை நாம் புரிந்து கொள்வது போல புரிந்து கொண்டால் புரிந்து கொண்டு செயல்பட்டால் அதுவே தன் முனைப்புள்ள அல்லது செயலூக்கமுள்ள மொழித் தொழில் நுட்பம்.

இயந்திர மொழி பெயர்ப்பு

            எம்எஸ் வோர்டு போன்ற ஆங்கிலச் சொல்லாளர் மென்பொருட்களைக் கொண்டு ஆங்கில உரையைத் தட்டச்சு செய்யும்போது, எழுத்துப் பிழைகள், இலக்கண பிழைகள் இருந்தால் உடனே அவை கண்டறியப்பட்டு சிவப்பு கோடு இடப்பட்டுக் காட்டப்படுகின்றன. டிராகன் போன்ற சில மென்பொருட்கள் நாம் ஆங்கிலத்தில் கணினி முன் பேசினாலே போதும். அவையே கணினியில் தட்டச்சு செய்து விடுகின்றன. அதைப் பேச்சு எழுத்து மாற்றி என்று அழைக்கின்றனர். தமிழ் இலக்கணமும், அகராதியும் கணினியின் புரிந்து கொள்ளும் முறைக்கு ஏற்ற வடிவில் கொடுக்கப்பட வேண்டும்.

இன்றைய தலையாய பணி

            இன்று மின் தமிழ் வளர்ச்சியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான பணிகள் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள், உருவாக்கத்தில் பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. தமிழ் விக்கிபீடியா, வலைப்பூக்கள், இணைய தளங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. மொழித் தொழில் நுட்பமே இவை. இந்த முதல் கட்டத்தைத் தற்போது நாம் தோண்டி விட்டோம். அடுத்தகட்ட வளர்ச்சியான தன் முனைப்புள்ள செயலூக்கமுள்ள மொழித் தொழில் நுட்பத்தை நோக்கி நம் பணி அமைய வேண்டும்.

முடிவுரை

            நமது நாட்டில் அறிவியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். அறிவியல் கல்வி இருக்கிறது. அறிவியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. அது சார்ந்த ஆய்வுகள் பல நடைபெற்று தமிழை உணர்த்த வேண்டும். தமிழின் மூலமாக அறிவியலை வளர்க்க வேண்டும்.

            இன்றைய உலகில் கணினியின் தேவை அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொருவரும் கணினியின் பயனை உணர்ந்து கொள்வது அவசியமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

துணைநூற்பட்டியல்

முனைவர் நா.சுப்பு ரெட்டியார்தமிழில் அறிவியல் அன்றும், இன்றும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.
முனைவர் ச.ஈஸ்வரன்அறிவியல் தமிழ், சென்னை – 17.
இராதா.செல்லப்பன்கலைச்சொல்லாக்கம்
சிவன்இந்திய அறிவியல் தொழில்நுட்பம் ப.233, சென்னை.
error: Content is protected !!