கற்பித்தல் முறையில் பல்ஊடகப்பயன்பாடு

கற்பித்தல் முறையில் பல்லூடகப் பயன்பாடு

முனைவர் சி.தேவி

உதவிப்பேராசிரியர்

திஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி,சிவகாசி

devi-tam@sfrcollege.edu.in

 

கல்வியே மனிதப்பண்பாட்டு வளர்ச்சிக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.  கல்வி என்பது உலகை மாற்றும் மகத்தான ஆற்றல் பெற்ற ஆயுதம் என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய கல்வி முறை அமைந்துள்ளது. ”கல்வி கரையில கற்பவர் நாள் சில” (நாலடியார். புலியூர்க்கேசிகன்(உ.ஆ) பா. எ. 135,ப.எ.76) எனும் தன்மையில் ஆசிரியர்களும் தினமும் கற்றுக்கொள்ள அநேக தகவல்கள் இன்று உலகில் தோன்றிவிட்டன.காலஓட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர்களும் புதிது புதிதாக கற்று பின் கற்பிக்க வேண்டிய கடமை உடையவர்களாக உள்ளனர். எனவே தான் அறிவே தெய்வம் என்ற நம்பிக்கையுள்ள  பாரதி,

“ கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்

காலவெள்ளத்திலே நிலை காணுங்கால்

புல்லினில்  வயிரப்படை காணுங்கால்

பூதலத்தில் பராசக்தி தோன்றுமே” ( பாரதியார் கவிதைகள் – பராசக்தி.பா.எ. 28 ப.எ.128)என்று பாடியுள்ளான்.

கற்பித்தல்

கற்பித்தல் என்பது மொழி வளர்ச்சிக்கும் மானுடப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பேருதவி செய்பவை. எனவு கற்பித்தலுக்கான பல படிநிலைகள் உருவாக்கப்பட்டன. கற்பித்தலுக்கான நோக்கங்களை வகுத்தல், திட்டமிடல் என்பது முக்கிய பணியாக பின்பற்றப்பட்டது.

 

காலந்தோறும் கற்பித்தல்

காலந்தோறும் கற்பித்தல் அமைப்பு முறை பல்வேறுமாற்றங்களை அடைந்து வந்திருக்கின்றது. அவை,

  1. குருகுலக்கல்வி
  2. Black and chalk method
  3. White Board method
  4. E-Content என்று கிளைபரப்பி வளர்ந்து வருகின்றது.

கற்பித்தல் முறைகள்

ஆசிரியர் மையக் கற்பித்தல், மாணவர் மையக் கற்பித்தல், விவாதித்துக் கற்றல்,

அண்மைக்காலக் கற்பித்தல் என்று பலமுறைகள் கற்பித்தலில் பின்பற்றப்படுகின்றன.

அண்மைக்காலக் கற்பித்தல் சிறப்பாக நடைபெற சில நுட்பங்கள் உற்ற துணையாக இருக்கின்றன. அவை கற்பித்தல் வளங்கள் என்றழைக்கப்படுகின்றன.

கற்பித்தல் வளங்கள்

அறிவியல் மட்டுமல்லாது கணினி வளர்ச்சி காரணமாக இற்றைக்கால கற்பித்தல் என்பது பல்வேறு மாற்றங்களைப்பெற்றுள்ளது. அதன் வடிவங்களான,

அச்செழுத்து வளங்கள்

ஒலிசார்வளங்கள்

தகவல் தொடர்பு வளங்கள்

இ. கற்றல் என்று கற்பித்தல் வளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

” Tell me and  I forget

Teach me and I remember

InvolvemeandIlearn” (https://www.brainyquote.com/quotes/benjamin_franklin_383997 -Penjamin Franklin)

எனவே கல்வியின் அனைத்து செயல்பாடுகளும் கணினிவழியே நடைபெறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. கற்பித்தல் என்பது குரல்வழி, காட்சிவழி, தகவல்தொகுப்பு(அச்சு) என்று அமைகின்றது.

  1. ஒரு வழித்தகவல் அளிப்புக்கருவிகளான ஒலிப்பேழைகள் மற்றும் இரு வழித்தகவல் அளிப்புக்கருவிகளான தொலைபேசி மற்றும் ஆடியோ கான்பிரன்சிங் போன்றவை குரல் வழி கற்றல் உபகரணங்கள் ஆகும்.
  2. வரைபடங்கள். நழுவங்கள். ஒளிப்பேழைகள்.வீடியோ கான்பிரன்சிங் போன்றவை காட்சி வழியில் அமைந்த கற்றல் உபகரணங்கள் ஆகும்.
  3. மின்னணுக்கருவி-கணிப்பொறி வழியாக கற்பிக்கும் தகவல்கள் வழங்கப்படுகின்றன.
  4. பாடங்கள் அச்சு வடிவில் புத்தகங்களாக வழங்கப்படுகின்றன.

இ.கற்றல்

இ-கற்றல் என்பது மின்னியல் சாதனங்கள் வழியாக கற்றல் ஆகும். இவ்வழிக்கற்றலினால் செலவு குறைவு. எவ்விடத்திலும். எந்நேரத்திலும் கற்றல் என்பதை  இ.கற்றல்  சாத்தியமாக்கியுள்ளது. தேவையான செய்திகள் வழங்குதல். பயிற்சி வழங்குதல். கூடுதலாக அறிஞர்களின் ஆலோசனை கிடைக்க ஆவண செய்தல் அனைத்தும் இ.கற்றலில் கிடைக்கும் சிறப்பம்சங்கள் ஆகும.

அச்செழுத்து வளங்கள்

அச்சில் நூல்கள் பதிப்பிக்கப்பட்ட பிறகு  கல்வித்துறையில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்பட்டது எனலாம். மாணவர்கள் பயிலும் பாடப்புத்தகங்கள் தவிர நாளிதழ்கள், ஆய்விதழ்கள், கலைக்களஞ்சியங்கள் போன்ற அச்சுவளங்கள் பெரும் அறிவுச்சுரங்கமாகத் திகழ்கின்றன எனலாம்.

ஒலிசார் வளங்கள்

சுவைமிக்க நிகழ்ச்சிகளை மக்கள் கேட்டு இன்புறும் அதே வேளையில், மாணாக்கர்கள் கல்வி தொடர்பான சிந்தனைகளைக் கேட்டுப் பயன்பெறும் வகையிலும் வானொலி செயல்படுகிறது. வானொலியில் அறிவியல், இலக்கியம் ,

வரலாறு போன்ற பல செய்திகளை விளக்கமாக எடுத்துச்சொல்லும் பாட முறைகள் மட்டுமல்லாது. அவற்றை புரியச்செய்வதற்கு துணையாக இருக்கும் கதைகள் மற்றும் சம்பவங்கள் மூலம் விளக்குதல் என்ற முறையும் ஒலிசார் வளமாகிய வானொலியில் பின்பற்றப்பட்டுள்ளது.

ஒளிசார் வளங்கள்

கல்வி தொலைக்காட்சி மூலம் கல்விசார் ஒளிபரப்புகள் வெளியாகின்றன.1986 இல் இன்சாட்  செயற்கைக்கோள் இந்திய அரசால் ஏவப்பட்டு டில்லியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கல்வி நுட்பவியல் கழகம் மூலம் துவங்கப்பட்டது.   INSAT என்பது  கல்விச் சேவைக்கென்றே இந்தியாவில் முதன் முறையாக ஏவப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். இதன் முக்கிய  நோக்கம் கிராமப்புற மாணவர்களும் உயர்தர கல்வி பெறுதலே ஆகும். இஸ்ரோ இருவழி இடைவினைபுரியும் தொழில்நுட்பத்தை, கல்விநிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறது.

பல்கலைக்கழக மான்யக்குழு தயாரித்தளிக்கும் நிகழ்ச்சிகளும் NCERT நிகழ்ச்சிகளும் இன்சாட் IB செயற்கைக்கோளின் மூலம் நடைபெறுகின்றன.

சென்னைப் பொதிகைத் தூர்தர்ஸன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “காண்போம் கற்போம்“ என்பதும்   UGC  இன் நாடு முழுவதும் பரந்த வகுப்பறை முறையாக உள்ளது. திறன்மிகு ஆசிரியர் ஒருவரின் கற்பித்தலை பரவலாக  அனைத்து மாணாக்கர்களும் பெறும் வாய்ப்புகிட்டும். இது மாணாக்கர்களின் தனிப்புரிதலுக்கும், கூடுதல் செயல்பாட்டிற்கும் உற்ற துணைபுரிகின்றது.

பல்லூடகம்

பல்லூடகம், கணினி  சார்ந்த தொழில்நுட்பமாகும். ஒலி, ஒளி, அசைவு, அட்டவணை முதலிய பல்வேறு ஊடகங்களை இணைத்துப் பயன்படுத்துவது பல்லூடகம் ஆகும். பல்லூடகம் என்பது பனுவல், புகைப்படம், திரைப்படங்கள், அசையும் படங்கள் என்பனவற்றோடு ஒலியை இணைத்துக் கற்பித்தல் முறையைச் சுட்டுவதாகும்.பல்லூடகத்தில் இடைவினைவெண்மென்பலகைப் பயன்பாடு முக்கிய இடம் பெறுகிறது.

கற்றல் செயலிகள்

2020 ஆம் ஆண்டு 5.00.000 கற்றல் செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  1. மாணாக்கர் செயலிகள்
  2. ஆசிரியர் செயலிகள்
  3. பெற்றோர் செயலிகள் என்று செயலிகள் மாணாக்கர்களி்ன் கற்றல் திறனை வளர்த்தெடுக்க, கற்பனா சக்தி நிரம்பியவர்களாக, திறன்மிகு மாணவர்களாக மாற்ற பேருதவியாக உள்ளன.
  4. தேசிய மின்னூலகங்கள் மாணாக்கர்களின் கற்றல் வேட்கையை பூர்த்தி செய்யும் வகையில்  இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்நூலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 6 கோடி நூல்கள் இங்குள்ளன.

தொகுப்புரை

கற்பித்தல் முறையில் பல்லூடகப் பயன்பாடு  என்பது மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைப் பொருத்து அவர்களது திறனை    மேலும் வளர்க்க உறுதுணையாகின்றது. திறன்மிகு ஆசிரியர்களது அறிவுத்திறனை அனைத்து தரப்பு மாணாக்கர்களும் பயன்படுத்தும் பயன்கிட்டுகிறது. மாணாக்கர்கள் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் கற்க முடியும்.வசதி வாய்ப்புகள் குறைவாக கிட்டும் கிராமப்புற மாணாக்கர்களும் அனைத்து துறையிலும் வெற்றிபெறும் அளவு அறிவு பெறுகின்றனர்.இனிவரும் காலம் இணையகல்வி காலம் என்பது வலுவடையும் வகையில் இன்றைய பல்லூடகப் பயன்பாடு அமைந்துள்ளது.

error: Content is protected !!