கற்றல் கற்பித்தலில் கட்டற்ற வளங்கள் 

கற்றல் கற்பித்தலில் கட்டற்ற வளங்கள்

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்,

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்

gunathamizh@gmail.com,

ஆய்வுச் சுருக்கம்

மென்பொருள்களைத் தனியுரிம மென்பொருள்கள், கட்டற்ற மென்பொருள்கள் என இருவகையில் பகுக்கலாம். தனியுரிம மென்பொருள்கள் கட்டணத்துடன் கிடைக்கும், அதன் மூல நிரல்கள் கிடைக்காது, பகிரமுடியாது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புதுப்பித்துக்கொள்ளக் கட்டணம் கட்டவேண்டும். ஆனால் கட்டற்ற மென்பொருள்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. அதன் மூல நிரல்களை யாவரும் பதிவிறக்கலாம், திருத்தலாம், மேம்படுத்தலாம், பகிரலாம். கட்டற்ற மென்பொருள்கள் பல்வேறு வகையில் பல வகை உரிமங்களுடன் இலவசமாகவும் கட்டணத்துடனும் கிடைக்கின்றன. அவற்றுள் கற்றல் கற்பித்தலில் பயன்படும் கட்டற்ற வளங்களை வகைப்படுத்தி அதன் தனித்தன்மைகளையும் அவற்றைப் பயன்படுத்துவதால் தனிநபர், நிறுவனம், அரசு பெறும் நன்மைகளையும் எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது

Software can be divided into two types, Proprietary software and Open source software. Proprietary software is available for a fee, its source code is not available and cannot be shared, and you must pay a fee to renew after a certain period of time. But Open source software is available for free. Its source code can be downloaded, edited, upgraded and shared by anyone. Open source softwares is available for free and for a fee with a wide variety of licenses. This article categorizes the Open source software used in teaching and learning and highlights their uniqueness and the benefits to individuals, organizations, and governments of using them.

குறிச்சொற்கள்

கட்டற்ற வளங்கள், கட்டற்ற மென்பொருள்கள், திறந்த மூல மென்பொருள்கள், Open source software, teaching, oss,

முன்னுரை

இன்றைய சூழலில் கற்றல் கற்பித்தலில் கணினியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. கணினி என்ற வன்பொருள் இயங்க மென்பொருள்கள் தேவைப்படுகின்றன. மென்பொருள்களைத் தனியுரிம மென்பொருள்கள்(Proprietary software), கட்டற்ற மென்பொருள்கள் என இருவகையில் பகுக்கலாம். கட்டற்ற மென்பொருள்களைத் திறந்தமூல மென்பொருள்கள் (Open source software) என்றும் திறவூற்று மென்பொருள்கள் என்றும் அழைக்கிறோம். தனியுரிம மென்பொருள்கள் கட்டணத்துடன் கிடைக்கும், மூல நிரல் கிடைக்காது, பகிரவோ திருத்தவோ அனுமதி கிடையாது. திறந்த மூல மென்பொருள்கள் இலவசமாகவும் மூல நிரலுடன் பகிரும் அனுமதியுடன் திருத்தும் சுதந்திரத்துடன் கிடைக்கும். கற்றல் கற்பித்தலில் கட்டற்ற வளங்களின் பங்கை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

மூடூள் – ஆன்லைன் கற்றல் மேலாண்மை அமைப்பு

மூடுல் ஓர் இலவச மற்றும் திறந்த மூல கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS – (Learning management system) பிஎச்பியில் (PHP) மொழியில் எழுதப்பட்டு குனூ (GNU) பொது உரிமத்தின் கீழ் விநியோகிக்கப்படுகிறது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைதூர கல்வியகம், இணையவழியிலான தனியார் பயிற்சி மையங்கள் எனப் பல நிலைகளில் மூடுல் பயன்படுகிறது.

மூடுல் (Modular Object-oriented Dynamic Learning Environment – Moodle) என்பது ஒரு திறந்த மூல பாட மேலாண்மை அமைப்பு. இது கல்வியாளர்களுக்கு இணைய அடிப்படையிலான படிப்புகள் மற்றும் இணையதளங்களை உருவாக்க உதவுகிறது.  மூடுல் கல்வி உள்ளடக்க மேலாண்மை அமைப்பின் (Content Management System) அனைத்து அதிநவீன உயர்நிலை செயல்பாடுகளையும் வழங்குகிறது. தனிப்பயனாக்கக்கூடிய மேலாண்மை அம்சங்களுடன், கற்றல் இலக்குகளை அடைய கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இத்தளம் பெரிதும் உதவுகிறது. இதன் குறிப்பிட்ட அடிப்படை சேவைகளை இலவசமாகவே பெறமுடியும் கூடுதல் சேவைகளைப் பெற கட்டணம் கட்டவேண்டும். இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று. இதில் பாடநெறி உருவாக்கம், வருகைப்பதிவு, கலந்துரையாடல், வலைப்பதிவு, தேர்வு நடத்துதல், வினா வங்கி உருவாக்கம், பல வகையான தேர்வு முறைகள் எனப் பல்வேறு வசதிகள் உள்ளன. இதைக் கணினி, மடிகணினி மட்டுமின்றி திறன்பேசிகளிலும்  குறுஞ்செயலியாகவும் பயன்படுத்தமுடியும்.

ஸ்க்ராட்ச்

ஸ்க்ராட்ச் (Scratch) என்பது கட்டற்ற நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள் (Animation), செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் சமீபத்திய பதிப்பு 2.0. அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்கும் வண்ணம் குனூ பொதுமக்கள் உரிமம் (GPLv2) மற்றும் ஸ்க்ராட்ச் மூல குறியீடு உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

ஓபிஎஸ் ஸ்டுடியோ

காணொலிப் பதிவு மற்றும் நேரலை ஒளிபரப்புக்கான இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளாக ஓபிஎஸ் ஸ்டுடியோ Open Broadcast Studio (OBS) பயன்படுகிறது. இதில் ஒலி மற்றும் காட்சிப் பதிவு, கணினித் திரைப் பதிவு, யூடியூப் ஒலிபரப்பு எனப் பல செயல்களைச் செய்ய முடியும். தொழில்முறை திறந்த மூல மென்பொருளாக இம்மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிக் புளூபட்டன்

பிக் புளூடூத் (BigBlueButton) என்பது இணையவழியான கூட்டங்கள் (Web conferencing platform) நடத்தப் பயன்படும் திறந்தமூல மென்பொருளாகும்.  கூகுள் மீட், சூம் போன்ற தனியுரிம மென்பொருள்களைப் போன்றே பல்வேறு வசதிகளுடன் பயன்படுகிறது. திரைப்பகிர்வு, காணொலிப் பதிவு எனப் பல நிலைகளில் ஆற்றலுடன் செயல்படுகிறது. பல இயங்குதளங்களிலும் சிறப்பாக இயங்குகிறது.

வெயோன்

வெயோன் (Veyon -Virtual Eye On Networks) என்பது பல தளங்களில் உள்ள கணினிகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படும் இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளாகும். பல இயங்குதளங்களில் இயங்கும் கணினிகளையும் இதில் எளிமையாகக் கண்காணிக்கலாம்.  வெயோன் பயனர்களுக்கு இணையவழிக் கற்றல் சூழல்களில் கற்பித்தல், மெய்நிகர் பயிற்சிகள் அல்லது தொலைதூர ஆதரவை வழங்குதல் ஆகியவற்றில் ஆதரவளிக்கிறது. ஒரே சுட்டுதலில் தனிப்பட்ட கணினிகளை அணுகலாம். கணினிகளின் திரைகளைப் பதிவு செய்தல், அனைத்து கணினிகளையும் பூட்டுதல் மற்றும் உள்ளீட்டு சாதனங்களைத் தடுத்தல் எனப் பல பணிகளையும் உடனடியாகச் செய்ய இயலும். திரைகளை அனைத்து மாணவர்களுடனும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. வணிக வகுப்பறை மேலாண்மை தீர்வுகளுக்கு இலவச மாற்றாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வேர்டுபிரசு (WordPress)

கூகுள் நிறுவனத்தின் பிளாக்கர் சேவை போல வேர்டுபிரசு என்பது வலைப்பதிவு சேவை ஆகும். மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு யாவரும் தமக்கென ஒரு வலைப்பதிவை உருவாக்கிக்கொள்ளலாம். அந்த வலைப்பதிவில் தம் சிந்தனைகளைத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழியில் பகிர்ந்துகொள்ளலாம்.

வேர்ட்பிரசு (WP, WordPress.org) என்பது பிஎச்பி (PHP) இல் எழுதப்பட்ட ஓர் இலவச மற்றும் திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை அமைப்பு (Free and open-source content management system /CMS) ஆகும். அழகான வடிவமைப்புகள், சக்திவாய்ந்த கூறுகள் மற்றும் நீங்கள் விரும்பும் எதையும் உருவாக்க சுதந்திரம் ஆகியன வேர்டுபிரசின் சிறப்பியல்புகள் ஆகும். நிழற்படங்கள், ஒலிகள், காணொலிகளை இப்பக்கத்தில் பதிவேற்றலாம்.

விக்கிப்பீடியா

விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-இல் தொடங்கப்பட்டது. விக்கிப்பீடியா என்பது, வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும். விக்கிப்பீடியாவில் யாரும் இலவசமாகக் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம், திருத்தலாம், தொகுக்கலாம், புதிய கட்டுரையை உருவாக்கலாம். இணையதளத்தில் இயங்கும் பரிந்துரைக்கப்படும் பக்கங்களில் மிகவும் பெரியதும், அதிகப் புகழ்பெற்றதுமாகும்.

தமிழ் விக்சனரி

தமிழ் விளக்கங்களுடன் வளரும் பன்மொழி அகரமுதலி ஆகும். தற்பொழுது 3,60,400  சொற்கள்  உள்ளன. இது சொற்களின் பொருள், மூலம், அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சியாகும். இதில் தமிழ் சொற்களுக்கான விளக்கம் வழங்குப்பட்டு வருகிறது. ஒரு சொல்லின் பொருள், அதன் இலக்கியப் பயன்பாடு. அச்சொல்லின் படம், அந்தச் சொல்லின் ஒலி உச்சரிப்பு எனப் பல விவரங்கள் உள்ளீடு செய்யப்படுகின்றன.

விக்கிமூலம்

விக்கிமூலம் ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும். இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின்  இணையத் தொகுப்பாக விளங்குகிறது. தேடுபொறிகளுக்கு ஒருங்குறி வடிவில் உள்ள தமிழ் எழுத்துருக்கள் மட்டுமே தெரியும் என்பதால் மின்வருடப்பட்ட பல நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை எழுத்துணரியாக்கம் செய்து விக்கிமூலத்தில் பதிவேற்றியுள்ளனர். இப்பக்கங்களைச் சரிபார்த்துப் பிழைகளைத் திருத்துவதால் இணையத்தில் தமிழின் வளம் மேம்படும். பிழை திருத்தங்களை யாரும் செய்ய இயலும். மாணவர்களுக்கு இப்பணியைப் பயிற்சியாக வழங்கலாம்.

விக்கிமேற்கோள்

விக்கிமேற்கோள் என்பது புகழ் பெற்ற நபர்களின் கூற்றுகளையும் படைப்புகளின் மேற்கோள்களையும் கொண்ட, யாவரும் தொகுக்கப்படக் கூடிய ஒரு நிகழ்நிலைக் களஞ்சியமாகும்.    இதில் தமிழ் உள்ளிட்ட மேற்கோள்களைத் தொகுக்குவம் உருவாக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதால் மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெறும் மேலும் மொழியறிவையும் வளர்த்துக்கொள்ள இயலும்.

விக்கிப் பொதுவகம்

விக்கிப் பொதுவகமானது (Wiki Commons) கட்டற்ற ஊடகக் கிடங்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் பங்களிக்கக்கூடிய இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஊடகக் கோப்புகளின் தொகுப்பாக இப்பக்கம் உள்ளது. இதில் மாணவர்களைப் நிழற்படங்கள், ஒலி, ஒளிக் கோப்புகளைப் பதிவேற்றச் செய்யலாம்.

டிசி தேர்வு மென்பொருள்

டிசி தேர்வு (TCExam) என்பது இணையவழித் தேர்வுகளுக்கான திறந்த மூல கணினி அடிப்படையிலான மதிப்பீட்டு மென்பொருள் (Open Source system for electronic exams) அமைப்பாகும். இது கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வினாடி வினாக்கள், சோதனைகள் மற்றும் எழுதுதல், திட்டமிடுதல், வழங்குதல் மற்றும் புகாரளிக்க உதவுகிறது. தேர்வுகள். இது பாரம்பரியக் கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் எழுத்து வடிவத் தேர்வு முறைகளுக்குச் இணையாக உள்ளது. ஆசிரியர்கள் தங்கள் பணிகளை வடிவமைத்து அவற்றை ஆய்வுகள், தேர்வுகள், சோதனைகள் மற்றும் வினாடி வினாக்கள் வடிவில்  வழங்க உதவுகிறது. வணிகம் அல்லாத பயன்பாட்டிற்கான மூலக் குறியீடு TCExam அதன் மூலக் குறியீட்டை (AGPLv3) பொது உரிமத்தின்கீழ் வழங்குகிறது. 24 மொழிகளில் மொழிபெயர்ப்புகள் மற்றும் மொழிபெயர்ப்பு நினைவக பரிமாற்றம் செய்வதற்கான வசதியுள்ளது.

நிறைவுரை

          இன்றைய சூழலில் கற்றல் கற்பித்தலில் தனியுரிம மென்பொருள்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தனியுரிம மென்பொருள்களுக்கு இணையாகக் கட்டற்ற மென்பொருள்கள் இருந்தாலும் அவை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.

மூடுல் என்ற கற்றல் மேலாண்மை அமைப்பு கூகுள் கிளாஸ்ரூம் போல பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. இலவசமாகவும் கட்டணத்துடனும் இதைப் பயன்படுத்த இயலும்.

ஸ்கிராட்ச் என்ற நிரலாகக் மொழி வழியாக அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் என பலவற்றை உருவாக்கமுடியும்.

ஓபிஎஸ் ஸ்டுடியோ என்ற மென்பொருள் காணாலிகளைப் பதிவுசெய்யவும் நேரலை ஒளிபரப்புகளுக்கும் பெரிதும் பயன்படுகிறது. அதனால் ஒரு ஆசிரியர் பல மாணவர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

பிக் புளூடூத் என்ற செயலி கூகுள் மீட், சூம் போல இணையவழிக் கூட்டங்கள் நிகழ்த்த உதவுகிறது.

வெயோன் என்ற மென்பொருள் பல கணிகளைக் கண்காணிக்கவும் கணினி வழியாகவும் மெய்நிகர் பயிற்சிகள் வழங்கவும் உதவுகிறது.

வேர்டு பிரசு இலவச மற்றும் திறந்த மூல உள்ளடக்க மேலாண்மை அமைப்பாகப் பயன்படுகிறது. வேர்டுபிரசு வலைப்பதிவு வழியாக கற்றல் கற்பித்தல் சார்ந்த பல பணிகளைச் செய்ய இயலும்.

விக்கிப்பீடியா, தமிழ் விக்சனரி, விக்கிமூலம், விக்கிமேற்கோள், விக்கிப் பொதுவகம் ஆகிய கட்டற்ற விக்கித் திட்டங்கள் வழியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல பயிற்சிகளை வழங்கமுடியும். இதன் வழியாக மாணவர்கள் கற்பதுடன் மொழியும் வளப்படுத்தப்படுகிறது.

டிசி தேர்வு மென்பொருள் இணையவழித் தேர்வுகளை நிகழ்த்தப் பயன்படுகிறது.

References

  1. மூடுல் கற்றல் மேலாண்மை அமைப்பு. (2021, December 25). Retrieved from https://moodle.org/
  2. ஸ்கிராட்ச். (2021, December 25). Retrieved from https://scratch.mit.edu/
  3. ஓபிஎஸ் ஸ்டுடியோ. (2021, December 25). Retrieved from https://obsproject.com/
  4. பிக் புளுடூத். (2021, December 25). Retrieved from https://bigbluebutton.org/
  5. வெயோன். (2021, December 25). Retrieved from https://veyon.io/en/
  6. விக்கிப்பீடியா: (2021, December 25). Retrieved from https://ta.wikipedia.org/
  7. விக்சனரி. (2021, December 25). Retrieved from https://ta.wiktionary.org/
  8. விக்கி மூலம்: (2021, December 25). Retrieved from https://ta.wikisource.org/
  9. விக்கி மேற்கோள். (2021, December 25). Retrieved from https://ta.wikiquote.org/
  10. விக்கிப் பொதுவகம். (2021, December 25). Retrieved from https://commons.wikimedia.org/
  11. வேர்டுபிரசு. (2021, December 25). Retrieved from https://wordpress.org/
error: Content is protected !!