கற்றல் கற்பித்தலில் விரைவுத் தகவல் குறியீடு

கற்றல் கற்பித்தலில் விரைவுத் தகவல் குறியீடு

(QR Code in Teaching and Learning)

முனைவர் மா.ரமேஷ் குமார்

உதவிப் பேராசிரியர், மொழியியல்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10

E.mail- rameshkumarida@gmail.com

 

 

 

ஆய்வுச் சுருக்கம்

கல்வி தொழிற்நுட்பத்தில்  நாளும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு வருகின்றன. கற்றல் கற்பித்தலோடு தொடர்புடைய ஆசிரியரும் மாணவரும் இணையத்தின் துணைகொண்டு கல்வியில் புதுமைகளைப் புகுத்தி கற்றலை எவ்வாறு மேம்படுத்துவது என ஆராய்கையில் அரசாங்கமானது கல்வித்துறையில் ஆசிரியரியருடனும், ஆசிரியர் இன்றியியும் கற்கும் வகையில் பாடநூல்களை வடிவமைத்துக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வித்துறைத் தொழில்நுட்பத்துறையுடன் பாடநூலில்  விரைவுத் தகவல் குறியீடு எனும் க்யூ ஆர் கோடு (QR Code) முறையை பின்பற்றியுள்ளது.  இந்த விரைவுத் தகவல் குறியீடு (க்யூ ஆர் கோடு) எவ்வாறு உறுவாக்கப்படுகின்றது, இவற்றின் செயல்பாடுகள் என்ன?, இவற்றின் துணைகொண்டு மாணவர்கள் எவ்வாறு தானே கற்றலுக்கு  பயன்படுத்துகின்றனர், இவற்றால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை விளக்குவதாக இவ்வாய்வுக்கட்டுரை அமையும்.

 

திறவுச்சொற்கள் : கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, விரைவுத் தகவல் குறியீடு, க்யூ ஆர் கோடு, பாடநூல் திக்சா செயலி, கற்றல் கற்பித்தல்.

முன்னுரை

கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பத்துறைகளோடு இணைந்து, பல்வேறு ஊடகங்களின் வாயிலாக மொழிபயில்வோரின் எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகின்றன. பல்லூடகத்தில் கணினி முதன்மையிடம் பெற்றிருந்தது. ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கணினியின் செயல்பாடுகள் யாவும் கைபேசி வழியாக சாத்தியமாக்கப்பட்டுவருகின்றன.  இதற்கு இணையம் அடிப்படையாக உள்ளது.

பாடநூல் வடிவமைப்பாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும்  கற்றல் கற்பித்தலில் புதுமைகளைப் புகுத்திவருகின்றனர். பாடநூல்களும் தொழில்நுட்பத்துறைகளுக்கு ஈடாக பல்வேறு மாற்றங்களைத் தாங்கி நிற்கின்றன. தற்காலத்தில் கற்றல் கற்பித்தலில் கைபேசி செயலிகளின் பங்கு முக்கியமானவையாகும். பல செயலிகள் மாணவர்களின் அறிவுத்திறன்களைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.

தமிழ்நாடு பாடநூல்களில் பாடங்கள், வினாக்கள், கூடுதல் செய்திகளை விளக்க ஆங்காங்கு விரைவுத் தகவல் குறியீடு (QR Code) எனப்படும் படங்கள்/குறியீடுகள் காணப்படுகின்றன. இது எவ்வாறு உருவாக்கப்படுகின்றது? இவற்றால் ஆசிரியர், மாணவர்களின் திறன்கள் வளர்கின்றனவா?, இவைகள் கற்றல் கற்பித்துக்கு எவ்வாறு பயன்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுகின்றன?, இவற்றால் ஏற்படும் சிக்கல்களும் அவற்றை களைவதற்கான தீர்வுகளும். போன்ற வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் விடைகளாக இவ்வாய்வு கட்டுரை அமைக்கப்படுகின்றது.

விரைவுத் தகவல் குறியீடு (க்யூ.ஆர்.கோடு)

‘க்யூ.ஆர் கோடு’ எனப்படும், ‘குயிக் ரெஸ்பான்ஸ் கோடு’ 1994 ஆம் ஆண்டு ஜப்பானில் டென்சோ வேவ் (Denso Wave) நிறுவனம் அறிமுகம் செய்தது. இது தமிழில் விரைவுத் தகவல் குறியீடு என்றும் விரைவு எதிர்வினைக் குறி என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் அமைப்பு சிறிய மற்றும் பெரிய வடிவிலான சதுரங்களால் ஆனது. இதில் இணையத்தள முகவரிகள், தன்விவரங்கள், எண்கள் உள்ளிட்டவைகள் விரைவுத் தகவல் குறியீடாக (க்யூ. ஆர். கோடு)  மாற்றி வழங்கப்படுகிறது. ஆரம்பகாலத்தில் வாகனங்கள் பதிவு குறியீடாகவும், பின் நிதிநிறுவனங்களின் பணபரிவர்த்தனைகளுக்கும், இன்று அனைத்துத்துறைகளும் பயன்படுத்தும் குறியீடாக மாறியுள்ளது. பெட்டிக்கடை முதல் பெருநிறுவனங்கள்வரை தங்களுக்கென தனியொரு அடையாளக்குறியீடாக பயன்படுத்தி வருகின்றன. இக்குறியீட்டை இன்றைய பாடதிட்டத்திலும் பாடநூல்களிலும் இடம்பெற்றுள்ளன.

பாடநூலில் விரைவுத் தகவல் குறியீடு (க்யூ.ஆர்.கோடு) அறிமுகம்

தமிழ்நாட்டு பாடநூல்களில் 2018ஆம் ஆண்டு முதல் விரைவுத் தகவல் குறியீடு (க்யூ.ஆர்.கோடு) முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடக்கமாக 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களில் இக்குறியீடுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அப்பாடப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள விரைவுத் தகவல் குறியீடு (க்யூ.ஆர்.கோடு) மூலமாக பாடத்தில் உள்ள கருத்துக்களை ஒலி,ஒளி (Audio, Video) வடிவில் பதிவுசெய்யப்பட்டு மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இக்குறியீடானது இன்று  அனைத்துப் பாடநூல்களிலும் கருத்துக்களை தாங்கி இடம்பெற்றுள்ளன.

விரைவுத் தகவல் குறியீடு (க்யூ.ஆர்.கோடு) பயன்படும் முறை

தொடக்கப்பள்ளி முதல் புதிய தொழில்நூட்பங்களுடன் கூடிய வகுப்பறைகள், பாடநூல்கள் என்று மாணவர்களின் கற்றல்திறனை வளர்க்கவும் ஆசிரியர்களின் கற்பித்தலில் புதிய முயற்சிகளைக் கல்வித்துறையில் காணமுடிகின்றது. இனி பாடநூல்களில் உள்ளப்பாடங்களை வரிவரியாக வாசித்தலை குறைக்கவும் புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட பாடநூல்களில் காணப்படும் விரைவுத் தகவல் குறியீடுகளை (க்யூ.ஆர்., கோடு)  திறன்பேசிவாயிலாக (Android/Smart Phone ) வருடி (Scan) செய்து  அவற்றின் தொடுதிரை (Screen) வழியாக பாடங்ளில் உள்ள செய்திகளை விரிவாக அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பக்கத்திலும், பாடங்கள் அருகே, அதற்கான படங்களைக் காணெளிகளாக (Videos) பார்க்க, மின்னணு முகவரிகள் (Digital link) மற்றும் விரைவுத் தகவல் குறியீடுகள் (QR Code) இடம்பெற்றுள்ளன. இந்த குறியீடுகளை, திறன்பேசி செயலிகளைப் (Mobile App) பயன்படுத்தி, வருடி (Scan) வீடியோவாக பார்க்கலாம்.

மொழி கற்றல் கற்பித்தலில் விரைவுத் தகவல் குறியீட்டின் (க்யூ.ஆர்.கோடு) பங்கு

மொழி பயில்வோரில் பலர் பாடங்களைப் படித்து அறிந்துகொள்வதைக்காட்டிலும், தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல் சாதனங்கள் மூலம் அறிந்து கொள்ள ஆர்வம்காட்டுகின்றனர். அவ்வகையில் இன்று பாடநூல்களில் காணப்படும் குறியீடுகள் மூலமாக பாடங்களைக் கண்டு கேட்டு புரிந்துகொள்ள விரைவுத் தகவல் குறியீடு  இடையீட்டு சாதனமாக பயன்படுகின்றன. கைபேசி சாதனத்தில்  விரைவுத் தகவல் குறியீடுகளை (க்யூ.ஆர்.கோடு) உணரும் செயலிகள் ஏராளமாக உள்ளன. இவற்றின் உதவியுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் மொழி பாடங்கள் குறித்த செய்திகளைக் கூடுதலாக கற்கவும் கற்பிக்கவும் இக்குறியீடு உதவிபுரிகின்றன. இதனால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்கின்றனர்.  மாணவர்கள் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களையும் இதன் மூலம் எளிமையாக கற்கின்றனர். பாடங்களைப் படங்களாக காண்பதால் மனதில் பதியப்படுகின்றன.

தானே கற்றல்

மாணவர்களுக்கு இத்தகைய செயலிகளை அறிமுகம் செய்வதன் மூலமாக அவக்கள் வீட்டில் இருந்தபடியும், பாடங்கள் நடத்துவதற்கு முன்பாகவும், நண்பர்களுடன் கலந்துரையாடும் பொழுதும் கற்பதற்கு ஏதுவாக அமைகிறது. இதனால் மாணவர்களிடம் தானே கற்றல் முறையை வளர்த்தெடுக்க துணையாக உள்ளது. பாடங்களைத் திரும்ப திரும்ப பார்த்து கேட்கக் கூடிய வகையில் அமைந்துள்ளதால் தானே கற்றல் சாத்தியமாக்கப்படுகின்றது.

திக்சா செயலி (DIKSHA APP)

மத்திய அரசு மாணவர்களின் கற்றல்திறனை மேம்படுத்தவும்,ஆசிரியர்களுக்கான குறிப்பாகவும் உருவாக்கப்பட்டதே திக்சா செயலி (போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையிலும் பாடநூல்களில் உள்ள பாடங்களின் செய்திகளைக் கருவாக எடுத்துக்கொண்டு  அவற்றைக் காணொளிகளாக வடிவமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இந்திய மொழிகளில் (இந்தி, ஆங்கிலம், கன்னடா, மராத்தி, தமிழ், தெலுங்கு, உருது)  என்னற்ற காணொளிகளை உருவாக்கி கொடுத்துள்ளது. இவைகள் விரைவுத் தகவல் குறியீடுகள் மூலமாக உள்நுழையும் வாகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் தமிழ் வழியில் அல்லது ஆங்கில வழியில் படிக்கிறார்களா? எந்த வகுப்பு என ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை பகுத்து கொடுக்கப்பட்டுள்ளன.

விரைவுத் தகவல் குறியீட்டின் (க்யூ.ஆர்.கோடு) பயன்கள்

  1. பெரிய செய்திகளை, படங்களை, காணொளிகளை விரைவுத் தகவல் குறியீடு எனப்படும் இக்குறியீட்டில் அடையாளப்படுத்தப்படுகின்றன.
  2. இக்குறியீட்டின் மூலமாக தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல்திறன்கள் அதிகரித்துள்ளன. மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் இதனால் பயன்பெறுகின்றனர்.
  3. இது அனைத்து பள்ளி பாடநூல்களிலும் இடம்பிடித்துள்ளது.
  4. இதனால் மாணவர்களிடையே கற்கும் ஆர்வம் மிகுந்துக்காணப்படுகின்றன.
  5. கூடுதல் செய்திகள் இணைக்கப்பட்டுள்ளன.
  6. இணைய முகவரிகள் மாணவர்களின் கவரும் வகையில் அமைந்துள்ளன.
  7. உணர்வுப்பூர்வமான வடிவில் காணெளிகள் காணப்படுகின்றன.
  8. இக்குறியீட்டின் மூலமாக மாணவர்களை நேரடியாக பாடங்களில் கவனம் செலுத்துகின்றனர்.
  9. பாடங்களை நேரடியாக கண்டு, கேட்டு மகிழ்கின்றனர்.
  10. கவனச்சிதறல் குறைக்கப்படுகின்றது.

விரைவுத் தகவல் குறியீட்டின் (க்யூ.ஆர்.கோடு) குறைபாடுகள்

  • இக்குறியீடுகள் பாடநூல்களில் சில இடங்களில் ஸ்கேன் செய்ய முடிவதில்லை.
  • பல்வேறு மாணவர்களுக்கு இவற்றைக்குறித்த புரிதல் இல்லை.
  • ஆசிரியர்கள் இவற்றைச் சரியாக மாணவர்களிடம் கொண்டு செல்லவில்லை.
  • பள்ளி வகுப்பறையில் செல்லிடபேசிகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாடங்களுக்குக் காணோளி இணைக்கப்படாமல் விரைவுத் தகவல் குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

முடிவுரை

பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சியால் பாடதிட்டத்தை மையமாக கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவைப் பகிந்துகொள்ளும் தளமாக திக்சா உருவாக்கப்பட்டுள்ளது. (Diksha Digital infrastructure for knowledge sharing National Platform for our Teachers our Heroes) இவற்றில் விரைவுத் தகவல் குறியீடு (க்யூ.ஆர்.கோடு) மூலமாக காணொளிகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இணைய இணைப்புகள், விரைவுத் தகவல் குறியீடு முறைகள் உள்ளிட்ட ஏராளமாக தொழில்நுட்பச் செய்திகள் பாடநூல்களில் இடம்பிடித்துள்ளன. இவைகள் இணையத்தின் துணைகொண்டு கற்பதற்கான வழிகளாகும். மாணவர்களுக்கு எழும் ஐயங்கள் இதன்மூலமாக உடனடியாக நீக்கப்படுகின்றன. இதைமையமாக கொண்டு இரண்டாம் மொழி பயில்வோருக்கான பாடதிட்டத்தை வடிவமைத்து பயன்படுத்தலாம். பிற பாடங்கள் கற்றலை எளிமையாக்கப்படுகின்றது. இதை அனைத்துப் பள்ளிகளிலும் மாணவப்கள் பயன்படுத்தும்  வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

 

References

  1. Susono H and Shimomura T, 2006, Using mobile phones and QR codes for formative class assessment, Current developments in technology-assisted education, Vol. 2. Badajoz, Spain.
  2. Law and So S, 2010, QR codes in education. Journal of Educational Technology Development and Exchange.
  3. Robertson C and Green T, 2012,Scanning the Potential for Using QR Codes in the Classroom. TechTrends, Volume 56, Number 2.
  4. Shin, D-H. et al., 2012, The psychology behind QR codes: User experience perspective, Computers in Human Behavior.
  5. Rikala, J., and Kankaanranta, M , 2012. The Use of Quick Response Codes in the Classroom. 11th Conference on Mobile and Contextual Learning. Helsinki, Finland.
  6. Gary Motteram  2013 The benefits of new technology in language learning, British Council.
  7. David Hopkins 2013, QR Codes in Education , Amazon.
  8. Rahma Al-Mahrooqi and Salah Troudi 2014 (Edit) Using Technology in Foreign Language Teaching, Cambridge Scholars Publishing.
  9. Jessica Boschen, Using QR Codes in the Classroom to Enhance Learning.
error: Content is protected !!