தமிழ் கற்றல்,கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு

தமிழ் கற்றல்,கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு

பா.நாகேஸ்வரி,

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி,

சாத்தூர்.

மின்னஞ்சல் : nagesarumugathai@gmail.com

தமிழ் கற்றல், கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது. ஆசிரியர், மாணவர் நேரடிக் கற்பித்தல் என்ற முறையிலிருந்து மாறி இணையதளங்களின் ஊடே கல்வி என்ற நிலையானது ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினாலே இருக்கும் இடத்திலே கற்றல் என்ற நிலையானது உருவாகியுள்ளது. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பாவிற்கேற்ப பழைய முறைகளில் கற்றல் மாறி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் பங்கு அளப்பறியது. அவற்றை எடுத்துக்காட்டும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

PPT  மூலம் கற்றல்

               படிக்கும் மாணவர்கள் பாடத்தை விரும்பிக் கற்கும் வகையில் அமையப்பெற்றது. இவற்றில் ஒலி மற்றும் காட்சிப்படங்களின் வாயிலாகவும், இயங்குபடத்தாலும் (Animation) விரும்பிக் கற்பர். power point மூலம் மாணவர்களுக்கு பாடங்களை வண்ணமயமாக வழங்குவதனால் படிப்பதில் ஈடுபாடு ஏற்படும். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் வழி கற்பிப்பதால் அவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற முறையில் கவனிப்பதில் ஆர்வம் காட்டுவர். இயங்குபடத்தினால் விளையாட்டு, வினாடி-வினா போன்ற அமைப்பு முறையால் எளிமையாக பாடத்தை மனனம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமையும். மாணவர்களுக்கு Seminor, Assignment போன்றவைகளுக்கு PPT  பயன்படுத்துவதால் தானே கற்பிக்கும் முறையிலும் ஆர்வம் கொள்வர். தற்போதைய காலத்தில் PPT வழியாக மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒப்படைப்புகளை மிகவும் ஈடுபாடுடன் கற்பித்தலுக்கு பயன்படுத்துகின்றனர்.

இணையதளங்களின் வாயிலாக கற்றல்

               இணையதளங்களின் வாயிலாக பல்வேறு வழிமுறைகளில் கற்றலும், கற்பித்தலும் நிகழுகிறது. இணையதளங்களின் பயன்பாட்டால் எவ்விடத்திலிருந்தும் கற்றுக் கொள்ளும் ஒரு அறிய வாய்ப்பாக இவை அமைந்துள்ளது. அவற்றால் தமிழ் மொழியை பற்றி நாட்டில் இருக்கும் அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் பல தளங்கள் அமைந்துள்ளது.

i) தமிழ் இணையக் கல்விக்கழகம்

               தமிழ் இணையக் கல்விக்கழகம் இணையவழியே கல்வி என்ற வாய்ப்பினை முதன்முதலாக நிறுவியது. உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது. மின்நூலகத்தில் நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியம், கலைச்சொல் தொகுப்புகள், சங்ககால இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரையிலான நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. தொன்மை இலக்கியங்கள் மற்றும் உரோமன் வடிவிலான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவை இவற்றில் சிறப்பாக விளங்குகின்றது. இவ்இணையப்பக்கத்தில் அடிப்படைக் கல்வி முதல் பட்டமேற்படிப்புக் கல்வி வரை படித்துக் கொள்ளலாம். மேலும் தமிழ் சார்ந்த விளையாட்டுகள், ஓலைச்சுவடிக் காப்பகம், ஆய்வியல் நூல்கள் போன்றவைகள் தனிமுறை பிரிவாக வைக்கப்பட்டுள்ளன. இவ்இணையப்பக்கம் கல்வி கற்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

ii) தமிழ் விக்கிப்பீடியா

 விக்கிப்பீடியா என்னும் தளமானது இணையத்தில் நாம் எவற்றைத் தேடினாலும் முதலில் அவற்றை எடுத்துக்காட்டுவது இத்தளமாகும். இத்தளத்தில் விக்சனரி, விக்கி செய்தி, விக்கிநூல்கள் என்ற பலவகைப் பிரிவுகளின் அடிப்படையில் இயங்குகின்றன. கற்பித்தலுக்கு மட்டுமின்றி பொதுவான தகவல்களை அறிந்து கொள்வதற்கும் உதவும் வகையில் உள்ளது. இவற்றில் பல கட்டுரைகள், தமிழ் வார்த்தைகளுக்கு பொருள் விளக்கும் தமிழ் விக்சனரி போன்றவற்றின் மூலம் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தமிழ் தொடர்பான பல கட்டுரைகள் அகர வரிசைபடுத்தப்பட்டுள்ளன. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தளத்தில் கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் மட்டுமின்றி தனக்கு தெரிந்த தகவல்களை கட்டுரையாக்கவும், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் கட்டுரை படைத்தல், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழைத்திருத்தம் செய்தல், ஆங்கில நூல்களின் செய்திகளை அறிய மொழியாக்கம் செய்து கற்றுக் கொள்ளுதல் போன்ற பலவகையான செயல்திட்;டங்கள் விக்கிப்பீடியாவில் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவானது கல்லூரி மாணவர்களிலிருந்து ஆய்வு மாணவர்கள் வரையிலான அனைவருக்கும் பயன்படும் வகையில் இத்தளம் அமைந்துள்ளது.

III கூகுள் வகுப்பறை (Google Classroom)

               கூகுள் வகுப்பறை என்னும் தளமானது வகுப்பறையில் கல்வி கற்கும் நிலையை உருவாக்கும். ஆசிரியர்கள் வகுப்பறைக்கான இணைப்பை உருவாக்கி அவற்றில் மாணவர்களை (Google meet, Google hangout) இவற்றின் மூலம் வகுப்பறையில் பங்கேற்கச் செய்யலாம். அதுமட்டுமின்றி கூகுள் வகுப்பறையில் ஆசிரியர், மாணவர் கலந்துரையாடலில் ஈடுபடவும், வீட்டுப்பாடங்களை வழங்கிடவும் அதை திருத்தி தகவல்களை மாணவர்களுக்கு வழங்கும் முறையில் அமைந்துள்ளது. சான்றாக ஆசிரியர் தான் நடத்தும் பாடத்தை you tube  இல் பதிவேற்றம் செய்தும்,  Google meet ஆல் நேரடி வகுப்போ நடத்தி அவற்றை கூகுள் வகுப்பறையில் பதிவேற்றம் செய்து அவற்றின் மூலம் பயிற்சி கட்டுரை போன்றவை எழுதச் செய்து அவற்றை திருத்தியும் வழங்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்களிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை இவற்றின் மூலமே கல்வி  கற்கின்றனர். மூடுல் வகுப்பறையும் கற்பித்தலுக்கு ஏற்ற தளமாக உள்ளது.

iv மைக்ரோசாப்ட் ஸ்வே (sway)

               மைக்ரோசாப்ட் ஸ்வே           மூலம் பாடங்களை எளிதில் கற்பதற்கு ஏற்ற வகையில் ஆடியோ, வீடியோ, படங்கள் போன்றவற்றை உள்ளீடு செய்து கண்கவரும் அழகிய காணொலிகளாக வழங்கும்போது கற்றலானது மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும்.

v வலைப்பதிவுகள் மூலம் கற்றல்

               வலைப்பதிவுகள் என்ற தளமானது தனிநபருக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டது. ஆசிரியர் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடமாக அமைத்து தனது வலைப்பக்கத்தில் போட்டு அவற்றைக் கண்டு பயனடையச் செய்யலாம். இவ்வலைப்பதிவில் கட்டுரை, கருத்தறிதல் பயிற்சி, குரல் பதிவுகள், கற்றல் தொடர்பான இணையதள இணைப்புகள், ஒளிக்காட்சிகள் போன்றவைகளை கற்பித்தலுக்கு பயன்படுத்தலாம். ஆசிரியர் தனக்கான ஒரு வலைப்பதிவை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலம் மேற்குறிப்பிட்ட செயல்முறைகளால் மாணவர்களுக்கு கற்பிக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் வலைப்பதிவுகளின் மூலம் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன. அவ்வலைப்பதிவுகளை கற்றல் நடைமுறைகளுக்கு பயன்படுத்துவதினால் காலத்திற்கு ஏற்ற கல்வி முறையினால் மாணவர்களின் அறிவுநிலைக்கு உந்துசக்தியாக விளங்கும்.

அலைபேசியின் (குறுஞ்செயலிகள்) மூலம் கற்றல்

               கற்றல், கற்பித்தலில் இன்றைய கட்ட வளர்ச்சி என்றால் அலைபேசிகளின் வழி கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது. அலைபேசிகளின் (குறுஞ்செயலிகள்) மூலமாக பல்வேறு வகையில் கற்பித்தலுக்கு ஏற்ற வகையில் உள்ளது. அகராதிகள், தமிழ் இலக்கியங்களான சிறுகதைகள், நாவல்கள் என்று எல்லாவற்றிற்குமான குறுஞ்செயலிகள் உள்ளன. அதுமட்டுமின்றி சிறுவயது குழந்தைகளுக்கான பாடங்கள் முதல் இளைய தலைமுறையினருக்கான நூல்கள் வரை பலவிதமான குறுஞ்செயலிகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் எழுத்துக்களை உச்சரிப்பது, எழுதுவது போன்ற செயலிகள் உள்ளன. இளைய தலைமுறையினருக்கும் ஏற்ற நூல்களும் செயலிகளாக உள்ளன.

               மேலும் இன்றைய நிலையில் வீட்டிலிருந்தே கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது. அவற்றை வெளிப்படுத்தும் விதமாக வகுப்பறையில் இருந்து கவனிக்கும் சூழலை காட்டும் முறையில் GOOGLE MEET> WEBEX MEET> ZOOM போன்ற செயலிகள் தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ளன.

சமூக ஊடகங்களின் வழி கற்றல்

               சமூக ஊடகங்களான முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமும் கற்றல், கற்பித்தல் நடைபெறுகிறது. தனிநபரின் பயன்பாட்டால் செயல்படும் தளங்கள் ஆகும். இவற்றில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டு தான் விருப்பப்படும் துறையில் பிறருக்கு கற்பித்தலும், அவற்றைக் கண்டு கற்றலும் நிகழுகிறது.

               முகநூலில் நிகழ்ச்சியை உருவாக்கு என்ற பக்கத்தில் நாம் மாணவர்களுக்கு தயாரித்த பாடத்தை பதிவேற்றம் செய்து அவற்றில் கலந்து கொள்ளச் செய்யலாம். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இவற்றின் மூலமே கேட்டறிய முடியும். பாடத்தின் சிறப்பான செய்திகள் பதிவேற்றி இருப்பினும் ஆசிரியர், மாணவர்கள் என்ற குழுநிலையில் யாவரும் அறிய பயனுள்ள வகையில் அமையும். இவற்றைப் போன்றே டிவிட்டரையும் செய்திகளை பகிர்ந்துக் கொள்ள பயன்படுத்தலாம்.

               இன்ஸ்டாகிராம் போன்றவை தங்களுக்கான ஒரு பக்கத்தை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலம் கற்பித்தல் நடைபெறலாம். ஆசிரியர்கள் தங்களுக்கான இன்ஸ்டாகிராம் இணைப்பை உருவாக்கி அதன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் தொடர்பான பதிவுகள் செய்து அவற்றில் போடுவதின் மூலம் கற்பதற்கு பயனுள்ள வகையில் அமையும்.

You Tube மூலம் கற்றல்

               You Tube என்பது தான் இணையம் என்ற நிலையில் வளர்ந்துள்ள காணொளி ஊடகப் பிரிவு. இவற்றில் எதைத் தேடினாலும் எடுத்துக்காட்டும் சிறந்த ஊடகமாகும். இதில் ஆசிரியர்கள் தாங்கள் உருவாக்கிய பாடத்தினை காணொளிக் காட்சியாக உருவாக்கி பதிவேற்றம் செய்வதினால் மாணவர்கள் மட்டுமின்றி உலகளவில் வாழும் மக்களும் அறிந்துக் கொள்வதற்கு உதவும். மாணவர்களும் இன்றைய தொழில்நுட்பத்தின் வழிக் கற்பதினால் ஆர்வம் ஏற்படும். தமிழ் தொடர்பான இலக்கியம், இலக்கணம், கதைகள், நாவல் போன்றவை பிறருக்கு எடுத்துக் கூறும் முறையில் உருவாக்கப்படுவதினால் அடுத்த தலைமுறையினர் இவற்றைக் கண்டு தமிழ் மொழியின் மீது ஈடுபாடு ஏற்படும். சான்றாக கி.ரா குழம்பு என்ற வலைதளம் ஆசிரியர் கதைசொல்லியாக இருந்து ஏற்றம் இரக்கத்தோடு கதையில் நாம் பயணிக்கும் விதமாக கதைசொல்வது அமையும். அதுமட்டுமின்றி நூலினை பற்றிய விமர்சனங்களும் சொல்லப்படுவதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்ற ஆய்வுக் கண்ணோட்டம் உருவாகும். இவ்வாறாக  கற்பித்தலுக்கு ஏற்ற ஒவ்வொரு வலைதளமும் கற்றலுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது.

               தொழில்நுட்பவழிக் கற்றலில் கால நிலைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தின் வழி பாடம் கற்பித்தல், ஆசிரியர்கள் தான் நடத்தும் பாடத்தை ஒலி, ஒளி படங்களாக அமைத்து விளக்குவதினால் மாணவர்கள் ஆர்வமுடன் கற்பர். மெதுவாக கற்கும் திறனுடையவர்கள் அவற்றைக் கண்டு பாடத்தை புரிந்துக் கொள்வர். ஆசிரியர்களும் அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பாடம் கற்பிப்பதன் மூலம் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் பயனுடையதாக அமையும். இன்றையக் கருவிக் கொண்டு பாடத்தைக் கற்ப்பிப்பதின் மூலம் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு விரும்பிக் கல்விக் கற்றுக்கொள்வர். இவ்வாறான செயலிகளின் மூலம் கற்றல், கற்பித்தல் நடைபெறும் விதத்தினை எடுத்துக்காட்டுவதாக ஆய்வுக்கட்டுரை அமைகிறது.

துணைநூல் பட்டியல்

  1. தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் – முனைவர் துரை.மணிகண்டன், த.வானதி
  2. http://www.tamilvu.org
  3. http://www.ta.wikipedia.org

error: Content is protected !!