சிக்கலும் தீர்வும்
இணைய வழிக் கற்றல் கற்பித்தலில் உள்ள
சிக்கலும் தீர்வும்
திருமதி பெ.காளியானந்தம்,
தமிழ்த்துறைத் தலைவர்(சுயநிதி),
எஸ்.பி கே கல்லூரி, அருப்புக்கோட்டை.
மின்னஞ்சல்: kaliyanantham@gmail.com
ஆய்வுச்சுருக்கம்
இன்று உலகம் முழுதும் சிறுவர் முதல் பெரியவர் வரை தொழிலாளி முதல் முதலாளி வரை பள்ளி மதல் பல்கலைக் க.ழகம் வரை ஏழை பணக்காரன் எனும் வேறுபாடின்றி அனைவரும் இணையக் கட்டுப் பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பேரிடர்காலம் நம்மை இணையத்திற்குள் புகுத்திவிட்டது. இச்சூழல்[ சில இன்னல் களைத் தந்தாலும் நமக்கு நன்மை தரும் விடயங்களைத் கற்றுத் தந்தது ஏராளம் எள்பது மறுக்க முடியாத உண்மை.இச்சூழலில் இணையவழி ஆசிரியர் மாணவர்களிடையே கற்றல் கற்பித்தல் நிகழும் போது உண்டாகும் சிக்கலையும் அதற்கான தீர்வையும் பதிவு செய்வதுடன் அவற்றோடு தொடர்புடைய கருத்துக்களையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டு ஆசிரியர்கள்
உலகமே மாறிவரும் சூழலில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ? உலகின் அதிவேக மாற்றங்களுக்கு ஆசிரியர்களும் ஆயத்தமாகி விட்டார்கள்.இன்றைய சூழலில் கற்றலுக்குப் பயன்படும் கருவிகளும் குறுஞ்செயலிகளும் வல்லமை பெற்றுள்ளன.ஆசிரியர்களோடு இணைந்து மாணவர்களும் கற்றலுக்குரிய மென்பொருள்கள், ,கருவிகள்,செயலிகள் போன்றவற்றை அறிந்து மிக்க ஆர்வத்துடன் மின்னுலகில் எதிர்நீச்சல் போட்டு வருகிறார்கள்.இதனால் ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் மனநிலை மாற்றம் அடைந்துள்ளது.
கற்றல் –கற்பித்தல்-கருவிகள்-துணைக்கருவிகள்
இணையமே முதன்மைக் கருவியாகும்.இணையம் வழி ஆசிரியர் கற்பிக்கவும் , மாணவர்கள் கற்கவும் ஆகிய பணியில் இன்று கற்றல் கற்பித்தல் கருவிகளும் அதன் பயன்பாடுகளும் மேம்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இத்தகைய கல்வியல் கோட்பாடுகளையும் செல்நெறிகளையும் அறிமுகப்படுத்திய போது இக்கற்றல் கருவிகள் சாத்தியமில்லை எனும் எதிர்வினை எழுந்தது.ஆசிரியர்கள் ,பொது இயக்கங்கள் ,பெற்றோர்கள் என அனைவரும் பல்வேறு விவாதங்களை முன் வைத்தனர்.காரணம் 19 ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் வகுப்பறை பயன்பாட்டுச் சூழலே ஆகும். ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டு தலைமுறை ஆசிரிரியர்களின் பங்கு விளைபயன்மிக்க மாற்றங்களுக்கு வித்திடும் நடைமுறைச் சாத்தியங்களை ஏற்படுத்தி வருகிறது .
நம்மைச் சுற்றிய வாழ்க்கைச் சூழல், தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் ,புத்தம் பதிய கையடக்கக் கருவிகளின் பயன்பாடு பேரிடர், ஊரங்கு எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.நம் பள்ளிகளும் கல்லூரிகளும் புதிய கற்றல் சூழலுக்கு மாறுவது முதலில் சவாலாக இருந்தாலும் சில நாட்களிலேயே தன்னைத் தயாராக்கிக் கொண்டு, சில மாதங்களிலேயே சாதனை புரியுமளவிற்கு எதிர் நீச்சல் போட்டு வருகின்றன இந்தச் செல்நெறிகளும் மாற்றங்களும் ஆசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவம் சமூக முன்னேற்றத்துற்காகவும் இன்றியமையாதது ஆகிவிட்டன. இந்த அதிரடி மாற்றங்களைச் சமாளிப்பது எளிதில்லை தான். எனினும் 21 ஆம் நூற்றாண்டுக் கல்வியும் ,கற்றல் சூழலும் அதற்கேற்ற வகுப்பறை மாற்றங்களுமே தேவைப்படுகிறது.
எண்ணிமம் கற்றல் கருவிகள்
எண்ணிமம் கற்றல் கருவிகள் ஒன்று தான் இன்றைய சூழலுக்கு ஏற்றதாக உள்ளது. “ பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பதற்கேற்ப புதிய கல்வி மாற்றத்திற்கு மாறிவரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இக் கற்றல் கருவிகளைப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் எனும் நிலை எழுந்துள்ளது. வகுப்பறை மொழிப்பாடத்திற்கு உரிய கற்றல் துணைக்கருவிகளை ( Learning Tools) செயலிகளைத் தேடிப் பயன்படுத்துவது இதன் மைய நோக்கமாகும்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகம் பின்வருவனவற்றைப் புதிய கற்றல் துணைக் கருவிகள் என வகைப் படுத்தியுள்ளது. அவற்றுள்
ஒத்துழைப்பு – Collaboration பேச்சுக்கலை -Communication ஆக்கச் சிந்தனை – Creativity விமர்சனச் சிந்தனை – Critical Thinking பின்னூட்டம் – Feedback புத்தாக்கம் – Innovation | படைப்பு – Presentation சிக்கல் களைதல் – Problem Solving உற்பத்தி – Productivity மீட்டுணர்தல் – Reflection சமூக வலைதளங்கள் – Social Networking |
போன்றவை அடங்கும்.
ஆசிரியர்கள் பாட நோக்கத்தைப் பெற்றிடவும், உலகத்தின் ஆணிவேர்களாக விளங்கும் சுற்றுச்சுழல், வாணிகம், பொருளாதாரம், பண்பாடு, உடல் நல விழிப்புணர்வு போன்றவற்றை மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும். அதே வேளையில் ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும் புத்தாக்கத்தையும் கற்பித்தல் செல்நெறிகளுக்கு உட்படுத்துவது மிகுந்த சவால் நிறைந்ததாய் உள்ளது.
புதிய வகுப்பறை மாற்றங்கள்
இன்றைய வகுப்பறைகள் முன்பு சாத்தியமில்லாதது என்பதை சாத்தியமாக்கும் வல்லமை பெற்று வருகின்றன. மாற்றங்களுக்கு இசைவு தந்து ஆக்கச் சிந்தனை, புத்தாக்கம், சவால்கள் நிறைந்த சிக்கல்களைக் கொண்டதாக உள்ளது. ஆயினும் அந்தச் சிக்கல்களைக் களையவும் உயர்நிலைச் சிந்தனைத் திறன்களுக்கு (Higher order thinking skills ) வழி வகுக்கும் களமாகவும் வகுப்பறை மாறிவருகிறது.
உயர்நிலைச் சிந்தனையானது நிரல் வழியற்றதும் சிக்கலானதும் சுயகட்டுப் பாட்டுடனும் பொருள் நிறைந்ததும் முயற்சி நிறைந்ததும் பல்வேறு வழிகளையும் நயமான தீர்ப்புகளையும் நிச்சயமற்றத் தன்மையுடனும் இவையெல்லாம் அறிவாற்றலுடன் கூடிய பண்புகளின் அடிப்படையில் வெளிப்படும் தனிமனிதச் செயல் முறையைச் சார்ந்ததாகும். ( Rajendran.N. S.2013 Pg. 22 )
இந்த வகுப்பறையில் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள், கற்பிக்கும் ஆணைகளை வெண்திரை வழி காட்டுவார்கள். தொழில் நுட்ப நிலையம் (Technology Station ) மாணவர்களுக்கு சுதந்திரமாக கற்கும் சூழலைத் தரும். சிறு குழுவிற்கான கட்டளையுடன் ( Small group instructions ) ஆசிரியர் திறன்களையும் உத்திகளையும் கற்பிப்பர். மாணவர்களுடன் உறவுகளை வலுப்படுத்துவர் சுய வாசிப்புக்கான நிலையமாக ( Independent reading station ) இருக்கும். இந்த வகுப்பறை வசதியான நூல்களைக் கொண்டிருக்கும் மாணவர்கள் மின்வழி கேட்டல் கருவிகளையும் மின் நூல்களை வாசிக்கவும் ஏற்புடைய இடமாக இருக்கும்.
இன்றைய கற்றல் கற்பித்தல் முறைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணையத்தைப் பயன்படுத்திப் பல்வேறு எண்ணிமக் ( Digital tools) கருவிகளை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கற்றல் தேவை அதிகரித்து வருகிறது.
புலனக் குறுந்தகவல் (Whatsapp ) அனுப்புதல், தொலைவரி (Telegam) சமூக ஊடாடல், பல்லூடகம் (Multimedia ) என்பனவற்றிற்கு மடிக்கணினி (Laptop ), அட்டைக்கணினி (Tablet ), திறன்பேசி (Smartphone) போன்ற கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களின் அன்றாட வாழ்வும் பள்ளி, கல்லூரிகளில் கற்கும் சூழலும் மாறிவிட்டது. கல்வி நிலையங்களில் கற்றல் என்ற நிலை மாறுபட்டு வெவ்வேறு உலகங்களாய் காட்சி தருகிறது.
21-ம் நூற்றாண்டுக் கற்றல் திறன்கள்
இன்று கற்றல் திறன்கள் பரந்து விரிந்த அறிவு நிலையு மாய் விளங்குகிறது . அதனால் தேர்ந்தெடுத்த கல்வியை ஏற்புடைய தொழில்நுட்பக் கருவிகளுடன் செயலிகளை முன்னேற்பாடுடனும் கட்டுக்கோப்புடனும் ஒருங்கிணைத்துக் கற்பிக்கும் கற்றல் திறன்கள் ஒரு தனிக் கலையாக இயங்கி வருகிறது.
எண்ணிம வகுப்பறை பாடநூலாளர், மின்னூலாளர், கல்வியல் சார்பான ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கல்விச் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்தச் செல்நெறிகளை உணர்ந்து விளை பயன்மிக்க மாற்றங்களுக்கு வழிவகுக்க வேண்டும்.
சிக்கல்களுக்கான தீர்வுகள்
புதிய கற்றல் கற்பித்தல் முறையில் ஏற்படும் சிக்கல்களை பின்வரும் செயல்முறைகளைக் கொண்டுக் களைந்து மாணவர்களயும் ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தலாம்.
சிந்தனை முறைகளில் {Way of Thinking } புத்தாக்கச் சிந்தனை,
- விமர்சனச் சிந்தனை போன்றவற்றை மாணவர்களிடம் உருவாக்க வேண்டும்.
- பேசும் கலை, ஒத்துழைப்பு போன்ற செயற்பாட்டு முறைகளை ( Way of working ) நடைமுறைப் படுத்த வேண்டும்.
- தகவல் தொடர்பு, தொழில்நுட்பத்திற்குப் பயன்படும் கருவிகளை (Tools for working ) பயன்படுத்த வேண்டும்.
- குடியுரிமை, வாழ்க்கையும் தொழில்நுட்பமும் சமூகப் பொறுப்பும் நிறைந்த மாணவர்களை உருவாக்கி வாழ்வியல் திறன்களை (Skills for living the world ) மேம்படுத்த வேண்டும் .
- இன்றைய கற்றல் கற்பித்தலில் பழைய வாசித்தல் ( Reading ) , எழுதுதல் (Writing ) எனும் நிலைகளுடன் பேச்சுக்கலை (Communication) , விமர்சனச் சிந்தனை ( Critical thinking ), ஒத்துழைப்பு (Collaboration ), ஆக்கச் சிந்தனை ஆகிய நான்கையும் மிகவும் இன்றியமையாததாக ஆக்க வேண்டும்.
ஆசிரியர்களின் கடமை
கற்றல் கற்பித்தலுக்கான திட்டமிடல் மிக அவசியம்
மாணவர்கள் இந்த வகுப்புக்கு வரும் முன்பே முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்.
கலந்துரையாடலில் கருத்துரைக் கருவி பின்னூட்டக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்குச் சரியான தகவல்களைச் சரியான நேரத்தில் வழங்க வேண்டும்.
டுவிட்டர் செயலி, அறிவிப்புப் பலகை செயலி போன்றவற்றை முறைப்படுத்தி நினைவூட்ட வேண்டும்.
காணொலி உரை, வாசிப்பு ஆவணம் ஒருங்கிணைந்த பல்லூடகம் போன்றவற்றின் மூலம் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த வேண்டும்.
கற்றல் ஆவணங்களைக் கருவூலங்களிலிருந்துப் பெற்று மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
எழுத்துக்காணொளி, குரல் பதிவு பல்லூடகம் போன்ற படைப்பு கற்றல் கருவிகளைச் சரியான அமைப்புடன் பயன்படுத்தி கற்றல் திறன்களை மேம்படுத்த வேண்டும்.
மதிப்பீட்டுச் செயலி மூலம் தரவுகளின் அடிப்படையில் மாணவர்களை ஆய்ந்து மதிப்பிட வேண்டும். பின் அவர்களின் வளர்ச்சி நிலையைக் காண வேண்டும்.
விரைவுநிலை கற்றல் மாணவர்களை மேலும் உயர்வு நிலைக்குச் செல்ல வழி காட்ட வேண்டும்.
மெதுநிலை கற்றல் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
ஆசிரியர் மாணவர் உறவை வலுப்படுத்த குறிப்பிட்ட வகுப்பு மாணவர் குழுவுக்கென சமூக வலைக் கட்டமைப்புகளைக் கையாள வேண்டும். இதற்காக வலைப்பு, பலனம், தொலைவரி போன்ற செயலிகளைப் பயன்படுத்த வகை செய்ய வேண்டும்.
கற்றல் கற்பித்தலுக்குரிய கல்விக் கேள்வி, கலந்துரையாடல் போன்றவற்றிற்கு அரட்டை பகுதி, மின்னஞ்சல் போன்ற செயலிகளைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.
நவீன கல்வி செயலிகளைப் பயன்படுத்துவது வெவ்வேறு ஆசிரியர்களுடனான மடலாடற் குழு கலந்துரையாடல், ஆசிரியர் மேம்பாட்டுத் திறன்களை வளர்க்கும் தொழில்நுட்பப் பயிலரங்குகளில் பங்கு பெற்று திறன்களை வளர்க்க வழி செய்ய வேண்டும்.
ஆசிரியரின் பண்புகள்
ஆசிரியர்கள் நவீன கல்வி முறையில் வரும் சவால்களை எதிர்கொள்ளவும் நிலையான மாற்றங்களைக் கொண்டு வரவும் தங்கள் மனநிலையை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- நிறைவான ஆற்றலும் ஈடுபாடும், உற்சாகமுமுள்ளவராக இருத்தல் மிக அவசியம்.
- மற்றவர்களுக்கு நல்வாழ்த்து, பாராட்டுரை வழங்கும் மனப்பான்மை
- பரிவும் இரக்கமுமிக்க பன்முகத்தன்மை
- மாணவர்களுடனும் பிறரோடும் பழகும் தன்மையில் உண்மையையும் நேர்மையையும் பின்பற்றுதல்
- நற்சிந்தனையையும் படைப்பாற்றல் சிந்தனையையும் கொண்டிருத்தல்
- முடிவெடுக்கும் முன் பல்வேறு கருத்துகளையும் மாற்றுச் சிந்தனைகளையும் பலமுறை கேட்டறிதல்.
- விடா முயற்சி
- நேர மேலாண்மைத் திறன்
- பட்டறிவின் வழி கற்றல் கற்பித்தல்
- இக்கட்டான சூழலிலும் அமைதி காத்தல்
- பல்வேறு குழுமத்தில் வெவ்வேறு துறை சார்ந்தவர்களுக்கும் பயனுள்ள வகையில் படைப்பை வழங்குதல்.
- பல்வேறு ஊடகம், தொழில் நுட்பத் தகவல்களிலிருந்து மூலச்சிக்கலையும் வாய்ப்புகளையும் கண்டுணர்தல்
போன்ற திறன்களை ஏற்பது ஆசிரியர்களின் தலையாய பண்புகளாகும்.
முடிவுரை
இன்றைய சூழலில் இணைய வழிக் கற்றல் கற்பித்தல் முறை உலக அளவில் மிகப் பெரும் மாற்றத்தை உருவாக்கி வருகிறது எந்த ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கும் படைப்பாற்றல் திறன் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு மாணவர்களின் படைப்புத் திறனை மேம்படுத்த கணினி மென்பொருள் வசதியுடன் கூடிய மொழிப்பயிற்று முறை அனைத்து வகுப்பறைகளிலும் கொண்டு வரப்பட வேண்டும். அன்றைய ஓலைச்சுவடி முதல் இன்றைய இணையம் வரையுள்ள அனைத்து தரவுகளையும் எடுத்துக் காட்ட வேண்டும்.
தற்போதைய சூழலில் இருக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி தமிழ் மொழியைக் கற்கவும் கற்பிக்கவுமான புதிய முயற்சிகள் நடைபெற வேண்டும். பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையுமாய் விளங்கும் தமிழ்மொழியின் வளர்ச்சியை இணையம் வழி மேம்படுத்த உலகத் தமிழர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.