கணினித் தமிழ்ப் பாடத்திட்டங்கள்

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்,

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -14

ஆய்வுச்சுருக்கம்

கணினி நுட்பங்களைத் தமிழில் கற்கும் வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி இணையவழியாகவும் கணினி நுட்பங்களைக் கற்றுக்கொள்ளமுடிகிறது. கணினி நுட்பங்களைக் கற்பித்தலிலும் கற்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. சரியான கணினித் தமிழ்ப்பாடத்திட்ட வடிவமைப்பு அந்த சிக்கல்களுக்கான சரியான தீர்வுகளாக அமையும். பெரும்பாலான கணினித்தமிழ்ப் பாடத்திட்டங்கள் கணினி வரலாறு, அறிமுகம், என்ற அடிப்படையிலேயே உள்ளன. இக்கட்டுரையானது இதுவரை பயன்பாட்டிலுள்ள பல்வேறு கணினித்தமிழ்ப் பாடத்திட்டங்களை வகைப்படுத்தல், அவற்றுக்கான பாடநூல்கள், பார்வை நூல்களை மதிப்பாய்வு செய்தல், கற்பித்தல் அணுகுமுறைகளை ஆராய்வதுடன், வேலைவாய்ப்பு மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கேற்ற சரியான பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைப்பதாக அமைகிறது.

Abstract

An opportunity to learn computer techniques in Tamil has emerged today. Computer techniques can be learned not only in schools, colleges and universities but also online. There are many problems in teaching and learning computer techniques. A proper computerized Tamil curriculum design can be the right solutions to those problems. Most computer Tamil syllabus is based on computer history, introduction, etc. This article categorizes the various Computer Tamil Curriculums in use so far, reviews their textbooks, reference books, examines the teaching approaches and suggests ways to design an appropriate curriculum for employment and Tamil language development.

குறிச்சொற்கள்

கணினித் தமிழ், பாடத்திட்டம், Computer Tamil Syllabus, Computer Tamil Books,

முன்னுரை

கணினி நுட்பங்களைத் தமிழில் கற்கும் வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி இணையவழியாகவும் கணினி நுட்பங்களைக் கற்றுக்கொள்ளமுடிகிறது. கணினி நுட்பங்களைக் கற்பித்தலிலும் கற்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. சரியான கணினித் தமிழ்ப்பாடத்திட்ட வடிவமைப்பு அந்த சிக்கல்களுக்கான சரியான தீர்வாக அமையும். பெரும்பாலான கணினித்தமிழ்ப் பாடத்திட்டங்கள் கணினி வரலாறு, அறிமுகம், என்ற அடிப்படையிலேயே உள்ளன. இக்கட்டுரையானது இதுவரை பயன்பாட்டிலுள்ள பல்வேறு கணினித்தமிழ்ப் பாடத்திட்டங்களை வகைப்படுத்தல், அவற்றுக்கான பாடநூல்கள், பார்வை நூல்களை மதிப்பாய்வு செய்தல், கற்பித்தல் அணுகுமுறைகளை ஆராய்வதுடன், வேலைவாய்ப்பு மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்கேற்ற சரியான பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைப்பதாக அமைகிறது.

பள்ளிகளில் கணினி அறிவியல்  பாடத்திட்டம்

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கான கணினி அறிவியல் பாடம் தமிழில் வழங்கப்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்புக் கணினி அறிவியல் பாடத்தில், கணினி அறிமுகம், விண்டோசு, சி மொழி அறிமுகம், கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு, கணிப்பொறியில் தமிழ் ஆகிய நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

பன்னிரண்டாம் வகுப்புக் கணினி அறிவியல் பாடத்தில், தரவு, பைத்தான், நிரலாக்கம், தரவுத்தளத்தை உருவாக்குதல் ஆகிய நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன. இப்பாடங்களில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கென கலைச்சொல் அகராதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பயிற்சிப்பட்டறைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் கியு.ஆர் கோட் என அழைக்கப்படும் விரைவு எதிர்வினைக் குறியீடுகள் வழியாக தொடர்புடைய பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக கணினிப் பாடங்களைத் தமிழில் வடிவமைத்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் கணினித் தமிழ்ப் பாடத்திட்டம்

தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கணினி அறிவியல் தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக்கப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புக்காகக் கற்பிக்கப்பட்டு வந்த இதழியல் மற்றும் ஊடகவியல் பாடங்களுடன் கூடுதலாகவும், கணினித் தமிழ் என்ற நிலையில் தனியாகவும் பாடங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2016 – 2017 கல்வி ஆண்டில், முதல் பருவத்தில் ஊடகவியல் பாடம் இடம்பெற்றுள்ளது. அதில் கணினி, இணையம், மின்னஞ்சல், வலைப்பதிவு குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஊடகவியல் சார்ந்த தமிழ்ப் பாடநூல்களுடன் தொடர்புடைய இணையதளங்களையும் பார்வைக்காக வழங்கியுள்ளனர். (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,2022).

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2010-2011 கல்வி ஆண்டில் இளங்கலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கான பாடத்தில் ஆறாவது பருவத்தில் அடிப்படைக் கணினியியல் பாடமாக உள்ளது. இதில் கணினி தோற்றம், வளர்ச்சி, வரலாறு, இணையம், மின்னஞ்சல் பயன்பாடு ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன. (சென்னைப் பல்கலைக்கழகம்,2022)

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2012-2013 கல்வி ஆண்டில் இளங்கலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இணையம் பாடமாக உள்ளது. இதில் இணையம் அறிமுகம், வளர்ச்சி, கற்றல் கற்பித்தலில் இணையம், மின்னஞ்சல், எழுத்துரு வளர்ச்சி குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்காக 2012-2013 கல்வி ஆண்டில், தமிழுக்குக் கணினியின் பயன்பாடுகள் பாடமாக உள்ளது. இதில் கணினி அறிமுகம் வரலாறு, நிரலாக்கம், இயந்திர மொழி, மென்பொருள்கள், வன்பொருள்கள் பல்லூடகம், இணையம், கணினி மொழியியல், இயந்திர மொழிபெயர்ப்பு, கணினி அகராதியியல், எழுத்துணரியாக்கம், செயற்கை நுண்ணறிவுத்திறன் என கணினி நுட்பங்கள் உட்பிரிவுகளாக உள்ளன. இப்பாடத்திட்டத்திற்கு 22 நூல்கள் பார்வை நூல்களாக உள்ளன. இவை 1999 முதல் 2006 வரை எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது (திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,2022).

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2016-2017 கல்வி ஆண்டில் இளங்கலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கான நான்காம் பருவத்தில் ஊடகவியல் பாடத்தின் ஒரு அலகாக கணினி, இணையம், மின்னஞ்சல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. (மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,2022 )

பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கான 2022-2023 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் கணிப்பொறி அடிப்படைகள் செய்முறைத்தாள் இடம்பெற்றுள்ளது. மேலும் தகவல் தொடர்பியல் பாடத்தின் இரு அலகுகளிலும் கணினி மற்றும் சமூகத் தளங்கள் பற்றிய செய்திகள் உள்ளன.(பாரதியார் பல்கலைக்கழகம் ,2022 )

தெரசா பல்கலைக்கழகத்தின் இளங்கலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு 2021-2022  கல்வி ஆண்டில்  நான்காம் பருவத்தில் மேம்பட்ட கணினித் தமிழ் பாடமும் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் பருவத்தில் மொழியியல் மற்றும் கணினி மொழியியல் அறிமுகம் பாடமும் இணையத்தமிழ் இலக்கியம் பாடமும் இடம்பெறுகிறது. ஆறாம் பருத்தில் தமிழ்க் கலைச்சொல்லாக்க நெறிகள் ஒரு பாடமாகவுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் பாடம் முதல் பருவத்தில் இடம்பெறுகிறது. இரண்டாம் பருவத்தில் மேம்பட்ட கணினித் தமிழ் மற்றும் தமிழ்த் தரவக உருவாக்கம் பாடமாக உள்ளது.(தெரசா பல்கலைக்கழகம்,2022)

தன்னாட்சிக் கல்லூரி களில் கணினித் தமிழ்ப் பாடத்திட்டம்

இலயோலா கல்லூரியில் 2016-2017 கல்வி ஆண்டில் ஐந்தாம் பருவத்தில் ஊடகத்தமிழின் ஒரு பிரிவாக கணினி அறிமுகம், வன்பொருள், மென்பொருள், கணினி நிரலாக்கம், குறுவட்டுகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.(இலயோலா கல்லூரி,(2022)

அமெரிக்கன் கல்லூரியின் 2019-2020 கல்வி ஆண்டில் இளங்கலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்தில் புதிய ஊடகங்களும் தமிழும் என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. இதில் கணினி இணையம், சமூகத்தளங்கள் குறித்த செய்திகள் பாடமாக்கப்பட்டுள்ளன. (அமெரிக்கன் கல்லூரி(2022 )

மேலும் பல்வேறு தன்னாட்சிக் கல்லூரிகளிலும் கணினி, இணையம், மின் உள்ளடக்கங்கள் சார்ந்த பாடங்களை முழு பாடமாகவும், இதழியல், ஊடகவியல், தகவல் தொடர்பியல் பாடங்களுடன் ஓரிரு அலகுகளாகவும் கட்டமைத்துள்ளனர். சில கல்லூரிகளில் சான்றிதழ் படிப்பாகவும் கணினி நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

பாடநூல்களும் பார்வைநூல்களும்

தமிழ் சார்ந்த பாடங்களுக்கு 50க்கும் மேற்பட்ட தமிழ் வழி எழுதப்பட்ட கணினித்தமிழ் நூல்கள் பாடநூல்களாகவும் பார்வை நூல்களாகவும் உள்ளன. சில பல்கலைக்கழகங்கள் தொடர்புடைய இணையதளங்களைப் பார்வைக்கான தளங்களாக வழங்கியுள்ளன. 1999 முதல் 2020 வரை திரு.மா.ஆண்டோபீட்டர், முனைவர்.மு.இளங்கோவன்,  முனைவர் க.துரையரசன் முனைவர் துரை மணிகண்டன்,  திரு. வீரநாதன், முனைவர்.இல.சுந்தரம்,  ஆகியோர் நூல்கள் அவற்றுள் குறிப்பிடத்தகன. சமகால நுட்பங்களைப் பேசும் கணினித்தமிழ் நூல்கள் மேலும் எழுதப்படுதல் வேண்டும்.

தமிழ் மாணவர்களுக்கான கணினிப் பாடத்திட்டம் 

இளங்கலை தமிழ் மற்றும் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தமிழ்த்தட்டச்சு முதல் கணினி நிரலாக்கம் வரையிலான நுட்பங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். இக்கணினிப் பாடத்தை வகுப்பறைக் கற்பித்தலில் மட்டும் நடத்தாமல் கணினி ஆய்வகங்களில் செயல்முறை வகுப்பாகவும் நடத்துதல் வேண்டும். கணினித் தமிழ்ப் பாடநூல்கள் தேவையான கூடுதல் விளக்கங்களை விரைவு எதிர்வினைக் குறியீடுகளாக வழங்குதல் காலத்தின் தேவையாகிறது. கணினித்தமிழ்ப் பாடத்திட்டம் அவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவுவதாகவும் மொழிக்கு வளம்சேர்க்கும் வகையிலும் கட்டமைக்கப்படவேண்டும்.

நிறைவுரை:

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என வடிவமைக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு இடையில் பெரிதும் தொடர்பு இல்லை. கட்டற்ற வளங்கள் பற்றி பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.கணினித்தமிழ் வகுப்புகள் அறிமுகம் வரலாறு என்ற அடிப்படையிலேயே உள்ளன. ஆய்வக செயல்முறை வகுப்புகளாக பெரிதும் வழங்கப்படுவதில்லை.பாடநூல்களும் பார்வை நூல்களும் சமகால தொழில்நுட்பங்களுக்கேற்பத் தேர்வு செய்யப்படுதல் வேண்டும்.கணினியின் தோற்றம், வரலாறு என்ற பொதுவான அறிமுகப் பாடங்களைத் தவிர்த்து தமிழ் மொழிக்கேற்ற நுட்பங்களைப் பயிற்றுவிப்பதுடன் வேலைவாய்ப்பை வழங்கும் கணினிநுட்பங்களைப் பாடத்திட்டங்களாக்குதல் வேண்டும். தமிழ்த் தட்டச்சு, வலைப்பதிவு, வலையொளி, ஆட்சென்சு, வரைகலை நுட்பம், மின்னூல் உருவாக்கம், மின் ஊடகங்களில் தமிழ்ப் பயன்பாடு, நிரலாக்கம், கலைச்சொல்லாக்கம், அகராதியியல், கணினி மொழியியல், கணினி மொழிபெயர்ப்பியல், மென்பொருள் உருவாக்கம், விக்கிப்பீடியா, கோரா, குறுஞ்செயலி உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு, இயற்கைமொழி ஆய்வு என தொலைநோக்கு சிந்தனையுடன் பாடங்கள் வடிவமைத்தல் வேண்டும்.

இணையப் பாதுகாப்பு, காப்புரிமம், அறிவுசார் சொத்துரிமம், மென்பொருள் உரிமங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் கட்டமைக்கவேண்டும் .எழுதும் எழுத்தாளர்களாக மாணவர்களை உருவாக்குவதுடன் நம்பகத்தன்மையுள்ள செய்திகளை எழுதும் நுட்பத்தையும் கற்பித்தல்வேண்டும். தமிழ் இணையக் கல்விக்கழகம் சமகால நுட்பகளுக்கேற்ப பாடங்களை வழங்கினால் கணித்தமிழ் வளர்ச்சி க்குப் பேருதவியாக அமையும்.

சான்றெண் விளக்கம்

  1. பாரதிதாசன் பல்கலைக்கழகம்(2022, 12 02).: https://www.bdu.ac.in/academics/syllabi.php
  2. சென்னைப் பல்கலைக்கழகம் (2022, 12 02https://www.unom.ac.in/index.php?route=colleges/syllabus
  3. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்(2022, 12 03). https://www.tvu.edu.in/links/regulations-and-syllabus/
  4. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்(2022, 11 25). https://www.msuniv.ac.in/Academic/Revised-Syllabus-Affiliated-Colleges
  5. பாரதியார் பல்கலைக்கழகம் (2022, 11 25). https://b-u.ac.in/syllabus
  6. , 12 02). https://www.motherteresawomenuniv.ac.in/syllabus%20new.html
  7. இலயோலா கல்லூரி,(2022, 11 20).https://www.loyolacollege.edu/UgRestructuredSyllabusJune2016/Tamil.pdf
  8. அமெரிக்கன் கல்லூரி (2022, 11 22 https://americancollege.edu.in/departments-2/language-and-literature/tamil-2
error: Content is protected !!