“இன்று கல்விக்கூடம் வியாபார கேந்திரமாகி விட்டதை யாராலும் மறுக்க இயலாது. யாரோ ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. “அரசு நடத்தவேண்டிய பள்ளிக்கூடத்தை தனியார் நடத்துகிறார்கள். தனியார் நடத்த வேண்டிய கள்ளுக்கடைகளை அரசு நடத்துகிறது”.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிலர் வேண்டுமென்றே பாடசாலையில் நடத்த வேண்டிய பாடத்தை தவிர்த்து, தனிப்பயிற்சியாக நடத்தி ஆதாயம் தேட வேண்டி, சுயநலத்துடன் நடந்துக் கொள்ளும் அவலமும் ஆங்காங்கே நம் நாட்டில் இடம்பெறத்தான் செய்கின்றன.
முன்னுரை :
“இன்று கல்விக்கூடம் வியாபார கேந்திரமாகி விட்டதை யாராலும் மறுக்க இயலாது. யாரோ ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. “அரசு நடத்தவேண்டிய பள்ளிக்கூடத்தை தனியார் நடத்துகிறார்கள். தனியார் நடத்த வேண்டிய கள்ளுக்கடைகளை அரசு நடத்துகிறது”.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிலர் வேண்டுமென்றே பாடசாலையில் நடத்த வேண்டிய பாடத்தை தவிர்த்து, தனிப்பயிற்சியாக நடத்தி ஆதாயம் தேட வேண்டி, சுயநலத்துடன் நடந்துக் கொள்ளும் அவலமும் ஆங்காங்கே நம் நாட்டில் இடம்பெறத்தான் செய்கின்றன.
கல்வியின் இன்றைய நிலையும் குழந்தைகளும்
பொதுவாக குழந்தைகள்தான் விளையாட்டுப் போக்கில் புத்தகங்களை கிழிப்பார்கள். கவிக்கோ அப்துல் ரகுமான் “புத்தகங்களே! குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்” என்று கவிதை எழுதி பிஞ்சுக் குழந்தைகளின் மீது புத்தக பாரத்தை சுமத்துவதை சாடியிருந்தார்.
நவம்பர் 14, குழந்தைகள் தினத்திற்காக அவர் எழுதிய மற்றொரு கவிதை. “குழந்தைகளை விட்டுவிட்டு குழந்தைகள் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்” என்று மனம் வெதும்பினார்.
குழந்தைகள் தங்கள் எடையைக் காட்டிலும் அதிக எடை கொண்ட புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்துச் செல்வது அன்றாடக் காட்சி ஆகிவிட்டது. வீட்டுப்பாடம் என்ற போர்வையில் அவர்கள் இல்லத்தில் ஓடியாடி மகிழும் குழந்தைப் பருவமும் களவாடப்பட்டு விடுகிறது.
“ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று மீசைக்கவி பாரதி பாடியது நமக்கு நினைவிருக்கும். பின்லாந்து நாட்டில் ஒரு குழந்தை பள்ளியில் சேரும் வயது என்ன தெரியுமா? ஏழு. ஏழுவயதில்தான் கல்வி கற்கவே தொடங்குகிறார்கள். அதுவரை குழந்தைகள், குழந்தைகளாகவே இருக்கின்றனர். கல்வி ஓர் எளிமையான விளையாட்டு என்பது போலவே அவர்களுக்கு ஊட்டப்படுகிறது. இங்கு பால்மணம் மாறா பச்சிளங் குழந்தைகளையும் தானியங்கி மூவுருளி உந்து வண்டியில் புத்தக மூட்டையுடன் ‘பரபர’வென்று இழுத்துவந்து திணித்து பள்ளிக்கு அனுப்புவதை நாம் பார்க்கிறோம்.
சந்தேகமே இல்லை, “கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்ற பாரதியின் கூற்று முற்றிலும் உண்மை. காலத்திற்கேற்ப கல்வி பரிணாமம் பெறுவது காலத்தின் கட்டாயம். அதை நாம் சூழ்நிலைக்கேற்ப செயற்படுத்த தவறிவிட்டோமோ என்ற ஐயம் நம் மனதில் எழுகிறது. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது.
நவீனக் கல்வித் தொழில்நுட்பம்
பாடங்களை ஒப்பிக்கச் சொல்வதல்ல பாடசாலை. கற்பித்தலை, கவரும் வண்ணம் சொல்லித்தரும் தொழில் நுட்பமே இன்றைய தேவை. மாணவர்களுக்கு சலிப்பின்றி பாடம் சொல்லித் தருவதற்கு இன்றைய நவீன உலகில் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.
இணையதளம் மூலம் ஆலோசனை வழங்குதல், நூலகங்கள் மூலம் ஆராய்தல், அறிவியல் தொழில் நுட்பத்தில் செயல்முறைகள், ஊடகங்களின் பயன்பாடு இவைகளின் மூலமாக சிறந்ததொரு கல்வி முறையை நம்மால் நம் மாணவச் செல்வங்களுக்கு வழிவகுத்து செயல்படுத்தி தர இயலும்
1) விரிவுரை முறை (Lecture Method)
இது காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் முறை
2) குழு முறை (Group activity)
மேலை நாடுகளில் இம்முறை பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறது
3) வினாவுதல் முறை (Questioning Method)
கற்பித்த பாடங்களை மாணவர்கள் எவ்வளவு தூரம் கிரகித்து வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிற நுணுக்க முறை.
4) வினா விடை முறை (QUIZ)
புறநிலைக் கேள்விகளை ஆம்/ இல்லை என்ற எளிதான முறையில் தெரிந்துக் கொள்ள உதவும் முறை
5) ஒப்படை வழங்கல் முறை (Assignment methods)
பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தனியாகவோ அல்லது கூட்டாகவோ முன்வைத்து செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தும் முறை
6) கண்டறிதல் முறை (Discovery methods)
ஏதாவதொரு தற்போதைய நிகழ்வு அல்லது நடைமுறை சம்பவத்தை தலைப்பாக தேர்ந்தெடுத்து, அதனை பகுப்பாய்வுக்கு உபட்படுத்தி, அதற்கான காரணிகளை கண்டறியச் செய்தல்
7) விளையாட்டு முறை (Playing methods)
கற்பித்தலை சலிப்புண்டாக்கும் வகையில் தீவிரமாக கற்பிப்பதைக் காட்டிலும், வகுப்பறைக்கு வெளியே விளையாட்டு முற்றத்தில் செயற்பாட்டு ரீதியில் படிப்பித்தல் மாணவச் செல்வங்களுக்கு உற்சாகத்தைத் தரும்; ஆர்வத்தை உண்டு பண்ணும்.
8) சிந்தனைக் கிளறல்-முறை (Brainstorming Method)
சிந்தனை ஆற்றலைத் தூண்டி, அவர்களை சுயமாக சிந்திக்க வைத்து அவர்களிடமிருந்தே தீர்வை பெறுவது
9) வெளிக் கள ஆய்வு (Field study)
வகுப்பறையைக் காட்டிலும் அனுபவ ரீதியில் களத்தில் தெரிந்துக் கொள்ள வேண்டிய பொதுஅறிவு நடைமுறை வாழ்வுக்கு மிகவும் முக்கியம்.
10) நுண்முறைக் கற்பித்தல் (Micro Teaching)
கரும்பலகையில் கற்பிப்பது மாத்திரம் கல்வியல்ல. நுண்முறை கற்பித்தல் வழியே மாணவர்களின் மூளைக்குள் அறிவை புகுத்த முடியும்
11) முன்வைத்தல் (Presentation)
மாணவர்கள் தாங்கள் கற்ற விடயங்களை அவர்கள் வாயிலாகவே முன்வைக்கச் செய்வது, அவர்களுடைய தொடர்புத் திறனை/ வெகுஜனத் தொடர்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்
12) போலச் செய்தல் (imitate):
மாதிரி ஒன்றை உண்டாக்கி செயற்பாட்டுத் திறன் மூலம் படைப்பாற்றலை வெளிக்கொணர்தல்
கல்வி முறை
கல்விமுறையை நாம் மூன்றாக பிரிக்கலாம்
- 1. வாழ்வியல் பாடங்கள், 2. தொழிற் பாடங்கள், 3. விருப்ப பாடங்கள்
இம்மூன்றுக்கும் ஏற்றவாறு தொடக்கத்திலிருந்தே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களைத் தயார் செய்வது நம் தலையாய கடமை.
என்னென்ன பட்டப்படிப்புகள் இருக்கின்றன என்பது பெரும்பாலான மாணவர்களுக்குத் தெரிவதில்லை. என்னென்ன துறைகள் உள்ளன?, எத்தனை விதமான மேற்படிப்புகள் உள்ளன? என்ற விவரம் அவர்களுக்கு சொல்லப்படுவதில்லை. இவ்விடயத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட பின்பும் கிணற்றுத் தவளைகளாக மாணவர்கள் இருப்பதை நாம் காண்கிறோம்.
எதிர்காலத்தில் மாணவர்கள் எதைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்பதை 90 விழுக்காடு, பெற்றோர்களே தீர்மானிக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். அனைத்து பெற்றோர்களுக்கும் மூன்றே மூன்று குறிக்கோள்தான் மண்டைக்குள் ஆட்டிப் படைக்கின்றன.. தன் பிள்ளை மருத்துவராகவோ, பொறியாளனாகவோ அல்லது பட்டயக்கணக்காளனாக ஆக வேண்டும். அவ்வளவுதான்.
அதிகமான எதிர்ப்பார்ப்பை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த எதிர்ப்பார்ப்பில் ஏதேனும் தடங்கல் வரும்போது அவர்கள் தங்கள் விலைமதிப்பற்ற உயிரையே மாய்த்துக் கொள்ளும் அசம்பாவிதங்களும் அடிக்கடி அரங்கேறத்தான் செய்கின்றன..
கல்விமுறைகள் – ஒரு ஒப்புமை
அயல்நாட்டு கல்வி முறைக்கும், இந்திய நாட்டு கல்வி முறைக்கும் ஏராள்மான வேறுபாடுகள் உள்ளன. நம் கல்வி முறையில் நாம், கோட்பாட்டில் (Theory) அதிக கவனம் செலுத்துகிறோம். படைப்பாற்றலை நாம் ஊக்குவிப்பதில்லை. தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே ஆசிரியர்களின் குறிக்கோளாக இருத்தல் கூடாது. அவர்களுடைய செயலாற்றலை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
கல்விமுறை மேம்பாடு அடைய வேண்டுமெனில் பள்ளிகளுக்கு கூடுதல் நிதிகள் ஒதுக்கப்பட வேண்டும். கல்வி உபகரணங்கள் நவீன பல்லூடக (Multi Media) சாதனங்கள் வழங்கப்பட வேண்டும். பாரம்பரிய கல்வி முறையை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு பாடத்திட்டத்திலும் நவீனமுறை கையாளப் படவேண்டும். பாடத்திட்டத்தை வரையறுப்பவர்கள் மதச்சார்பற்ற, மொழி சார்பற்ற வகையில் பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். தாய்மொழி வாயிலாக கல்வி பயில்வது இழுக்கல்ல என்று உணர்த்தப்பட வேண்டும். கால சூழ்நிலைக்கேற்ப தொழில்முறை கலைச்சொற்கள் புதிது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு அதை பரவலாக்க வேண்டும்.
காட்சிவழிக் கல்வி (Visual Learning), செவிவழிக் கல்வி (Auditory Learning), செயல்வழிக் கல்வி (Kinesthetic Learning) – இம்மூன்றையும் பாடசாலைகளில் செயற்படுத்த வேண்டும்.
இன்று உலகமே கணினிமயமாகி விட்டது, இந்தியாவில் 5G அறிமுகம் செய்து விட்டோம் என்கிறார்கள். நம் ஊரில் பெரும்பாலான இடங்களிலும் இணைய வசதி உண்டு. ஆனால் சீரான இணைய வசதி இன்னும் வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அரசு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
அதேசமயம் வட இந்தியாவைக் காட்டிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்வாக இருக்கிறது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. படிப்பிற்கு பசி தடையாக இருக்கிறது என்று சொல்லி, இலவச மதிய உணவுத்திட்டம் கொண்டு வந்து மற்ற மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது தமிழ்நாடு என்பது வெள்ளிடைமலை. அப்பேர்ப்பட்ட தமிழகம் கற்பித்தலிலும் தொழில் நுட்பங்கள் கொண்டு வந்து முன்மாதிரியாகத் திகழ்ந்து உலகோர் கவனத்தை ஈர்க்க முடியும்.
“மாற்றம் என்பது மானிட தத்துவம், மாறும் உலகின் மகத்துவம்” என்பது கவியரசர் கண்ணதாசனின் கருத்து. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்று அன்றே பகர்ந்து விட்டது பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம். நம் தமிழகம், காலத்திற்கேற்ப மென்மேலும் மாற்றங்கள் கண்டு ,உலகத் தரத்திற்கு உயரவேண்டும் என்பதே நம் நல்லோருடைய விருப்பம்