பண்பாட்டு மாற்றம் – தேவையும் வரையறையும்

பண்பாட்டு மாற்றம்தேவையும் வரையறையும்

கு.ஜெயசித்ரா,

உதவிப் பேராசிரியர்,

கல்வித்தந்தை ஏ கே ஆர் சௌராஷ்ட்ரா ஆசிரியர் கல்லூரி

மதுரை

முன்னுரை

மனித சமூகம் என்றைக்கு தோன்றியதோ, அன்றைக்கே பண்பாடும் தோன்றிவிட்டது எனலாம். பண்பாடு என்பது இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு மாறுபட்ட நிலையில் வேறுபடும் தன்மையில் பயணித்து வருகின்றது. இன்றைய பண்பாடு தொழில்நுட்பங்களின் பண்பாடாக உலகளாவிய தன்மையில் ஒரு பொது நிலையை எட்டியுள்ளது என்று கூட சொல்லலாம். எனினும், மனிதர்களின் பழக்கவழக்கங்களுக்கேற்ப ஓர் இனத்திற்கென்ற தனித்தன்மையையும் பெற்றிருக்கிறது எனலாம். இவ்வேளையில் பண்பாட்டுக் கூறுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த விமர்சனமும், வரவேற்பும் விவாதப் பொருளாகவே உள்ளன. இத்தகையப் பண்பாட்டு மாற்றத்தில் காணும் தேவையையும், அதற்கான வரைமுறைகளையும் இக்கட்டுரை ஆய்வு நோக்கில் முன்வைக்கிறது.

பண்பாடும் விளக்கமும்

பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் நோக்கத்தில், காலத்திற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. பண்பாடு என்பதின் அடிச்சொல் பண்பு என்பதாகும். பண்புகளின் மூலம் பெறப்படுவனவையே பண்பாட்டுக் கூறுகள்.

மிகச்சிறந்த மானுடவியலாளரான ஈ.பி.டெய்லரின் கருத்தை முன் வைத்து தமிழ்க்கலைக்களஞ்சியம் ”ஈ.பி.டெய்லர் கூறுவதுபோல் பண்பாடு என்பது மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினன் என்ற  நிலைமையில், அறிவு, நம்பிக்கை, அறவாழ்க்கை, சட்டம், வழக்கங்கள் முதலியன பற்றிப் பெற்ற ஒரு வித வாழ்க்கை முறையாகும்’” என்று விளக்கம் கூறுகின்றது. (தமிழ்க்கலைக்களஞ்சியம், தமிழ்வளர்ச்சித்துறை, சென்னை-1959, பார்க்க பண்பாடு பகுதி-3) இத்தகைய பண்பாட்டு விழுமியங்களைக் கடைப்பிடிப்பவர்கள்களாலேயே சமூகம் தழைத்தோங்குகின்றது என்பதை வள்ளுவர்

”நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு”

(குறள்-அதிகாரம்-பண்புடைமை-குறள்எண் 4)

என்ற குறள் மூலம் வலியுறுத்துகின்றார்.

பண்பாட்டுக் கூறுகளில் தொழில் நுட்பங்களும் கல்வியும் பெறும் இடம்

பண்பாடு எனும் விழுமியச் சொத்து அறம் சார்ந்த நிலையில் மட்டும் இயங்குவதன்று, மாந்தன் முதல் முதலாகப் பயன்படுத்திய வேட்டைக் கருவிகளில் தொடங்கி, இன்றைய கணினி வரை வளர்ச்சி பெற்றுள்ள அனைத்துத் தொழில் நுட்பங்களும் அத்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த செய்யும் கருவிகளும், இதனடிப்படையில் எழுகின்ற கல்வி முறைகளும் கூட பண்பாட்டை பின்னியவைகளாக உள்ளன.

கலப்பை பண்பாடும் கணினிப்பண்பாடும்

மனிதனுக்கு அடிப்படையான தேவைகளாக இருப்பன உணவு, உடை, உறைவிடம் என்னும் மூன்றுமே. இவைகளே ஒர் சமூகத்தின் அனைத்து நிலைகளையும் தீர்மானிக்கின்றன. இவ்வாறான தீர்மானிக்கும் நிலைகளும் அந்நிலைகளை ஒழுங்குபடுத்தும் வகைமைகளுமே பண்பாடாகின்றது.மனித நாகரிகங்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே மலர்ந்து செழித்தன. அங்கே தோன்றிய சமூகங்கள் வேளாண் தொழிலையே போற்றி வந்தன. இன்றும் பொன் ஏர் கட்டும் பண்பாட்டு நிகழ்வு தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருவதைக் காணலாம்.

வேளாண் சமூகத்திலிருந்து நகரமயமான சமூகமாக மாறுவதற்கு அங்கே பயன்படுத்தப்பட்ட உற்பத்திக் கருவிகளே முதன்மைப் பங்கை வகித்துள்ளன. அதன்பின் முதலாளித்துவ சமூகங்கள் உருவாக ஆரம்பித்தவுடன், பெரும், பெரும் தொழிற்சாலைகள் அதற்கான கருவிகள்,  இவைகளைக் கையாளும் அறிவுசார் கல்விமுறைகள் போதிக்கப்படலாயின. இத்தொழில் புரட்சிகளும், கல்விமுறைகளும் பண்பாட்டின் போக்கில் பேரளவில் மாற்றங்களைச் செய்துவந்தன. இப்பண்பாட்டு மாற்றங்கள், பொருளாதாரத் தளத்திலும் அதிர்வுகளை உண்டுபண்ணின. இந்தியச் சூழலிலும், நவீனத்தொழிற் சாலைகளும், தொழில்களும், வேளாண் தொழில்களும் போட்டிபோட ஆரம்பித்தன. அதனாலேயே பாரதியார்.

”உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”

(பாரதியார் கவிதைகள் –சுதந்திரப்பள்ளு)

என்று சமரசப் போக்கைப் பாடவேண்டிய பண்பாட்டுச் சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் உருவான ஏகாபத்தியச் சூழலிலும், இன்றைய பண்பாட்டு வணிகச் (Corporate) சூழலிலும் கணினிப் பண்பாடு நம் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டது.

பண்பாட்டு மாற்றங்களில் தொழில்நுட்பங்களின் பங்கு

பொருளாதார மேதை காரல் மார்க்சு மாற்றம் என்பதே மாறாத தத்துவம் என்பார். ஆக மாற்றம் என்பதே வாழ்க்கையாக உள்ளது. வேளாண் சமூகம் அல்லது நிலவுடைமைச் சமூகத்தில் இருந்த மிக உயர்ந்த பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று கூட்டுக் குடும்பம் முறை. தொழில் புரட்சிக்குப் பின்னர் (பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி) இக்குடும்ப அமைப்பு உடைந்து தனிக்குடும்ப அமைப்பு ஏற்படலாயிற்று.

கூட்டுக்குடும்ப முறைகள் உடைவதைக் கண்ணுற்ற இயக்குநர், பீம்சிங் (1950 முதல் 1970 வரையிலான காலம்) தான் இயக்கிய திரைப்படங்கள் அனைத்திலும் இதனையே மையமாக வைத்து இயக்கினார். இந்த முயற்சி கலை-பண்பாட்டு, இலக்கியத்தளங்களில் பெரும் விவாதங்களையும் தொடங்கி வைத்தன. குறிப்பாக பீம்சிங்கின் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ”ப” வரிசைத் திரைப்படங்கள் இவ்வகைத் திரைப்படங்களாக வெளிவந்தன. (படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், படிக்காத மேதை, பாசமலர்)

கூட்டுக்குடும்ப முறை உடைவது அன்று எதிர்க்கப்பட்டாலும், இன்றைய பண்பாட்டு வணிகச்சூழலில் (Corporate) முற்றிலுமாக ஏற்பட்ட வடிவமாகவே ஆகிவிட்டது.

தொழில் புரட்சிக்குப் பின்னர் பெண்களின் வாழ்க்கை முறையிலும், பண்பாட்டுச் சூழலிலும் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. மரபு சார்ந்த எரிபொருட்களைப் பயன்படுத்தி, அடுப்பூதிக் கொண்டிருந்த பெண்கள், மரபு சாராத எரிசக்திப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக மேசை அடுப்புகளும், நவீன சமயலறை சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து சேர்ந்தன.

பாரம்பரிய உடையான சேலை அணிந்தவர்கள், பாதுகாப்பான சுடிதார்கள் அணியலாயினர். மகளிர்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உறிஞ்சு துணிகள் காலாவதியாகி நவீன வகைத் துணிகள் (Napkins) பயன்பாட்டுக்கு வந்தன. இவைகள் பலசரக்குக் கடைகளில் கூட விற்கப்படும் மாபெரும் பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

செய்ய வேண்டி வரையறைகள்

இன்று கணினிப் பயன்பாடும், கைப்பேசிப் பயன்பாடுமே பண்பாடு என்றாகிவிட்டது. “4G” அலைவரிசைள் காலம் போய் ”5G” அலைவரிசைகள் காலம் வந்துவிட்டது. 5G என்பது 3½  மணி நேரம் ஓடும் ஒரு திரைப்படத்தை, நம் கைபேசியில் ஐந்தே நிமிடத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஒரு மனிதன் கடவுள் இல்லாமல் கூட இருக்க முடியும். ஆனால் கணினி இல்லாமல் யாரும் வாழ முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. காற்றையும், கடவுளையும் போல கண்காணிப்புக் கருவிகளும் எங்கும் நம்மைக் கண்க்காணிக்கின்ற சூழலில் நாம் வாழ்கிறோம்.

தற்போதைய சமூகம் Printout சமூகமாகவும் Online சமூகமாகவும் மாறிய சமூகமாகும். இந்த இறுக்கமான சூழல் வாழ்க்கையை எளிமையாக்குவதாகவும் பல தீய விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிட்டது. இந்தியாவில் கைபேசி பயன்டுபடுத்துவோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிராமப்புற கைப்பேசிப் பயன்பாட்டில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. கைபேசி பயன்படுத்துவதாலும், கைப்பேசியில் பேசிக்கொண்டே செல்வதானால் ஏற்படும் இருசக்கர வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 70000பேர்கள் என்று தேசியக்குற்ற ஆவணக் காப்பீடு அறிக்கை கூறுகின்றது. (தினமணி நாளிதழ், 29.10.2022) இதை ஒழுங்குப்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு, கைப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டுவதை சட்டப் பூர்வமாக ஆக்கப்போகிறதாம்.

கைப்பேசி உபயோகப் படுத்துபவர்களிடம், ஒரு மனோநோய் உருவாகின்றது. அஃதாவது தொலைபேசியில்லாமல் நாம் இயங்க முடியாது என்னும் மனநோய், இந்த மனநோய்க்கு நோமோஃபோபியா என்று நவீன அறிவியல் உலகம் பெயர் சூட்டியுள்ளது.

கணினியைப் பொறுத்தவரையில், அதன் பயன்பாடு எந்த அளவுக்கு மனித சுவாசமாக மாறிவிட்டதோ, அதே அளவுக்கு கணினிக் குற்றங்களும் (Cyber crimes) தோன்றிவிட்டன. இ-புக், இ-காமர்ஸ், இ-மெயில் என்ற பயன்பாடுகள் வநவேற்கக் கூடியவைகள் தான். ஆனாலும் கணினி அடிப்படையில் செய்யப்படும் பாலியல் குற்றங்கள் பயங்கரமானதாக உள்ளன.

எனவே, கணினிப் பயன்பாட்டிலும் கைபேசி பயன்பாட்டிலும், இன்னும் பல அறிவியல் தொழில் நுட்பக் கருவிக்களின் பயன்பாட்டிலும் ஒரு வரையறை செய்ய வேண்டியது அவசியம். இதற்கான தேசிய வரையறைக் கொள்கை ஒன்றை உருவாக்க, கல்வியாளர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆளும் அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், இலக்கியவாதிகள், பண்பாட்டு செயல் பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஒரு கொள்கையை உருவாக்குவதும் அதற்கான வரையறை செய்வதும் இன்றைய கட்டாய தேவையாகும்.

கற்பித்தலுக்கான தொழில் நுட்பங்கள்

பண்பாடு மற்றும் பிறதுறைகளில் எங்ஙனம் தொழில் நுட்பர்கள் கற்பிப்பது என்பது இன்று கல்வியாளர்களிடையே பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. அனைத்துத் தொழில் நுட்பங்களும் கற்பிக்கப்பட வேண்டிய தொழில் நுட்பங்கள் தான் எனினும், அனைத்துத் துறையினரும் ஏற்கும் வண்ணம் இருக்கக்கூடிய தொழில் நுட்பங்களை வகைப்படுத்துவது சற்று கடினம் தான். இதைத்தான் கணினி வழிக்கல்வி தெளிவு படுத்தியுள்ளது. Software, Hardware என்ற இருவகையுண்டு. Software என்பது பயன்படுத்தும் விதம், Hardware என்பது அதன் இயந்திரவியல் தொடர்பானவைகள். இதே போல் அனைத்து தொழில் நுட்பங்களையும் வகைப்படுத்தலாம். இப்படி வகைப்படுத்திக் கொடுப்பதனாலேயே மேலைநாட்டினர் முன்னேற்றம், காண்கின்றனர். நாம் அறுவடை பற்றி கற்றுக்கொடுக்கிறோம். எப்படி வேளாண்மை செய்வது என்று பற்றிக் கற்றுக் கொடுப்பதில்லை. அதுதான் நமது பிரச்சினையே.

இன்றைய தொழில்நுட்பங்களின் பயமும், பயனும்

இன்றைய கல்விமுறை என்பது தொழில்நுட்பங்களின் கல்வியாகவும், அதுவே சமூகப்பண்பாடாகவும் மாறிவிட்டது. அவ்வகையில் பார்க்கும்பொழுது ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப்போல, தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உருவாகும் பண்பாட்டிற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கம் பயன்பாடு தரும் பக்கமாகவும், அடுத்த பக்கம் சமூகம் பயப்படும் அளவுக்கு போய்க்கொண்டிருக்கும் தீமைகளை விளைவிக்கும் பக்கமாகவும் உள்ளது.

தீபத்தின் ஜோதியில் திருக்குறளையும் படிக்கலாம். அதே திருக்குறளையும் எரிக்கலாம். அது தீபஜோதியின் தவறல்ல. பயன்படுத்துவோர்களின் மனோபாவம். எனவே தொழில்நுட்பங்களின் விழுமியங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கும் பொழுது, ஒரு நல்ல மாணவர் சமூகம், சமூகவியல் சிந்தனையாளர்களின் சமூகமாகவும் மாறிவிடுகிறது. அதே வேளையில் ஏதோ கல்விச்சாலைக்கு வந்தோம், சென்றோம் என்றிருக்கும் மாணவர்களின் நிலைதான் கவலைக்கிடமாகவே இருக்கும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக வெளிவருகிறார்கள். எத்தனைபேர் பொறியலாளராக வெளிவருகிறார்கள் என்பதுதான் மில்லியம் டாலர் கேள்வி. தொழில்நுட்பக் கல்விப் பண்பாட்டில் நாம் மாணவர்களுக்கு உணர்த்த வரும் செய்திகளாக

எந்த ஒரு தொழில் நுட்பமும் சமூகப்பண்பாட்டைச் சாந்ததாகவே இருக்கிறது என்பதையும்

எந்த ஒரு தொழில் நுட்பமும் தீயவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அவ்விளைவுகள் தளராத வண்ணம் நாம் வரையறை செய்து கொள்ள வேண்டும் என்பதையும்

நாம் கல்விக்கூடங்களில் இருந்தே சொல்லிக் கொண்டு வரவேண்டும் என்பதே.

முடிவுரை

பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியும், பண்பாட்டு மாற்றம் என்றால் என்ன  என்பது பற்றியும், அந்த மாற்றத்தின் தேவை பற்றியும், அம்மாற்றங்களினால் செய்யப்படவேண்டிய வரையறைகள் (Limit) பற்றியும் இக்கட்டுரை பண்பாட்டு மானிடவியலின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளது.

பொருளாதாரம், கலை-இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் தேவைப்படும் பயன்சார் அறிவின் மீதான வேட்கையும், சமூகத்தின் மீதான அக்கறையும் உள்ளடக்கிய கல்விமுறையையும் வளர்ப்பதன் மூலம் மிகச்சிறந்த பண்பாட்டையும் தொழில் நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்தும் தீயமுறைகளுக்கு எதிரான சிறந்த முறையினையும் கொண்டுவர முடியும் என்று இக்கட்ரை வழிமொழிகிறது.

error: Content is protected !!