மின்கற்றல்/கற்பித்தல் தளங்களும் தமிழ்க் கல்வியும்
முனைவர் த. சத்தியராஜ்/ தமிழ் உதவிப்பேராசிரியர், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை & அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641 042, தமிழ்நாடு, இந்தியா. 9600370671, sathiyarajt@skacas.ac.in
ஆய்வுச்சுருக்கம் (Abstract)
மின்கற்றல், கற்பித்தல் தன்மைகளை வழங்கக்கூடிய இணையதளங்கள் நிரம்பக் காணப்பெறுகின்றன. அவற்றின் வரவு இன்றியமையாதது. இதனால் உலகின் எந்த மூலையிலும் இருந்து கொண்டு பாடப்பொருளை உருவாக்கிக் கற்பித்தலைக் கற்றலாகப் பெறமுடிகின்றது. இவற்றுள் சில இலவசக் கல்வியும், பெரும்பான்மை கல்விக் கட்டணம் பெற்றுக் கொண்டும், சில சிலநாட்களோ/ வாரங்களோ இலவசக் கல்வியை வழங்கிய பின்பு கல்விக்கட்டணம் பெறும் சூழ்நிலையும் கொண்டுள்ளன. எவ்வாறு இருப்பினும் மின் வழியிலான கற்றல் தேவையான ஒன்றே. இக்கற்றல் தமிழில் மிகச் சொற்ப அளவிலே உள்ளது. அதனை விரல் விட்டே எண்ணிவிட முடியும். அதனை இக்கட்டுரை கோடிட்டுக் காண்பித்துப் பின்பு தமிழுக்கு ஏற்படுத்த வேண்டிய மின்கற்பித்தல்/கற்றல் முறைகளையும் ஆராய்கிறது.
மின்கற்றல்/ கற்பித்தல் தளங்கள்
இங்குப் பேசப்படுகின்ற கருத்துக்களை மின்கற்றல், கற்பித்தல் தளங்கள், தமிழ்க்கல்வி என்ற இருவகைகளில் பேசிய பின்பு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. இதிலிருந்து தமிழ்க் கல்வியை மேம்படுத்த வேண்டிய முறைமைகள் புலப்படும். முதலில் மின்கற்றல்/கற்பித்தல் பற்றி அறிய முற்படுவோம்.
மின்கற்றல் என்றால் என்ன?
அச்சுப்படியாக இல்லாமல் மின்கருவிகளின் வழியாகக் கற்கக்கூடிய ஒவ்வொன்றும் மின்கற்றல்/கற்பித்தல் தன்மையைச் சாரும். எடுத்துக்காட்டிற்குக் கையாவண நூலை (PDF) எடுத்துக் கொள்வோம். இந்நூலை வாசிக்க மின்னாற்றல் தேவைப்படுகின்றது. அதனாலேயே மின்கற்றல் எனும் கலைச்சொல் இங்குப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் E-Learning எனப்படுகின்றது. இவ்வாறு மின்கற்றலை வழங்கும் தளங்களை E-Learning Portal என்பர். கற்றல் என்பது வாசிப்பை மட்டுமே கொண்டிருத்தல் கூடாது. ஆசிரியரும் இதில் பங்களிப்புச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் செவிச்செல்வத்தின் பயன் நிறைவுபெறும். அவ்வாறு வழங்கக் கூடிய தன்மையிலுள்ள தளங்களையே மின்கற்றல் தளங்கள் எனப் புரிந்துகொள்வது சரியாக இருக்கும்.
மின்கற்றலை வழங்கக்கூடிய தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தியாவில் பல்கலைக்கழக மானியக்குழு சுவயம் (Swayam), கோர்செரா (Coursera), என்பிடிஇஎல் (NPTEL), இடிஎக்சு (Edx) போன்ற மின்கற்றலைப் பரிந்துரைக் கின்றது. இதனை மோக் (MOOC) எனும் பொதுத்தன்மையில் கூறிச் செல்கிறது. Massive Open Online Course என்பது அதன் விரி. இதில் பல்வேறு நாட்டைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள் கற்றலை வழங்கி வருகின்றன. இக்கற்றல் அடிப்படை தொடங்கி ஆராய்ச்சி வரை அமைந்துள்ளன. சில இலவசக் கற்றலையும் சில கல்விக் கட்டணத்துடன் கூடிய கற்றலையும் தருகின்றன. இது ஒருபுறம் இருக்கட்டும். இவ்வகையிலான மின்கற்றலை வழங்கக் கூடிய சில தளங்களின் பெயரையாவது முதலில் அறிந்து கொள்ளலாம்.
சுவயம் (Swayam), என்பிடிஇஎல் (NPTEL), கோர்செரா (Coursera), ஈடிஎக்சு (Edx), உடேமி (Udemy), தமிழ்கூப் (Tamil Cube), மூடுல் (Moodle), கோர்சைட் (Course Site), ஓவர்சல் (Oversal), உடாசிட்டி (Udacity), கேன்வாசு (Canvas), விச்ஐகியூ (WizIQ), எலக்ட்ரா (Electa), பிகினர் டூ மாஸ்ட்ரி (Beginner to Mastry), ஐசிஎஸ்ஐ (ICSI), திக்சா (Diksha), சா அகாடெமி (Shaw Academy), தமிழ் இணையக் கல்விக்கழகம் (TAU), என்ஐஇஎல்ஐடி (NIELIT), புகி (Byjus), டிக்சலர் (Dexler), எசூகப் (Educomp), சிம்பில் லேர்ன் (Simple Learn), புளுன்டியு (Fluentu), ஓபன் கல்சர் (Open Culture), டியூலிங்கோ (duolingo), கெலோ டாக் (Hello Talk), பேபல் (Babbel), இன்னோவோட்டிவ் (Innovative), லைவ் லிங்குவா (Live Lingua), தமிழ் அநிதம் (Unlimit Tamil), லிங்க்டுஇன் (LinkedIN), புளுரல்சைட் (Pluralsight), அலிசன் (Alison), கியூடென்சுக் (Xuetangx), எட்மோடா (Edmodo), பெடரிகோஇயூ (Federica EU), கில்சேர் (Skillshare), பியூச்சர்லேன் (Futurelearn), நோவோஇடி (Novo Ed), இவர்சிட்டி (Iversity), இன்டலிபாட் (Intelli Paat), எசுரேகா (Edureka), லிங்க் ஏர்ன் சிடிரீட் (Linkstreet learning), சிக்சா அகாடெமி (Jigsaw Academy), கதென்சி (Kadenze) போன்றவற்றைக் கூறலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்டமைப்புடன் அமைந்துள்ளன.
இவற்றுள் தமிழ்க் கல்விக்கான இடம் மிகச்சொற்பமே உள்ளது அல்லது இன்னும் மேம்படுத்த வேண்டும் எனலாம். சான்றாக உடேமியை எடுத்துக்கொள்வோம். இவற்றுள் இந்நாள்வரை (12.8.2020) 157 மட்டுமே தமிழ்க் கல்விக்கான பாடங்களாக உள்ளன. ஆனால் பிற துறை சார்ந்த பாடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அதிலிருந்து தமிழ்க்கல்வி மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகின்றது.
தமிழ்க் கல்வி
தமிழ்க் கல்வி என்று எதனை முன்னிறுத்தலாம்? தமிழ் மொழியில் வழங்கக் கூடிய கல்வியையா? அல்லது இலக்கியம், இலக்கணம் சார்ந்த கல்வியையா என்ற ஐயம் எழும். இங்குத் தமிழ்க் கல்வி என்றமை அனைத்துத் துறை சார்ந்த படிப்புகளும் தமிழில் வழங்க வேண்டும் என்பதாகும். இதில் இலக்கணம், இலக்கியம், நாட்டுப்புறவியல், மின்னியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மண்ணியல், நிலவியல், சட்டவியல், கணினி, நூலகவியல், மருத்துவம் என அனைத்துத் துறைசார் பாடங்களும் தமிழில் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் மின்கற்றல்/ கற்பித்தலில் தமிழ்க் கல்வி என்பது நிறைவுறும். மின்கற்றலில் இன்னும் நாம் பின்தங்கியே இருக்கிறோம். அதற்குச் சோம்பேறித்தனம் தனக்குத் தொழில்நுட்பம் வராது என்ற தாழ்வுணர்ச்சியே. இதனைக் கூட்டு முயற்சியால் மட்டுமே தகர்க்க முடியும். இவற்றைப் போக்குவதற்குச் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- பள்ளிகளில் மின்கற்றல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். இது இரண்டு வகையில் நிகழவேண்டும். ஒன்று: ஆசிரியர்களுக்கு. இரண்டு: மாணவர்களுக்கு. அதனைப் போன்றே கல்லூரிகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
- கல்லூரி அளவில் செய்யும்பொழுது அனைத்துத் துறைசார் பேராசிரியர்களுக்கும் விழிப்புணர்வைத் தருதல் சாலச் சிறந்தது.
- கல்லூரிகளில் தமிழ்த்துறை என்றால் ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம்போல் தமிழகச் சூழலில் பார்க்கப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும். தமிழ்த்துறையோடு பிறதுறைகளும் இணைந்து பங்களிப்புச் செய்தல் வேண்டும்.
- அதற்குத் தமிழ்ப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மின்கற்றல் தளத்தில் தங்களது பங்களிப்பினைச் செய்ய முன்வருதல் வேண்டும்.
- ஆசிரியர்கள் வலைப்பூ எழுதுதல்; பயிற்சி வழங்குதல்; மாணவர்களைப் பங்களிப்புச் செய்யவைத்தல்.
- ஆசிரியர்கள் விக்கிப்பீடியாவில் எழுதுதல்; பயிற்சி வழங்குதல்; மாணவர்களைப் பங்களிப்புச் செய்யவைத்தல்.
- மின்னணு தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த பயிற்சி வழங்குதல்.
- காணொலி உருவாக்கப் பயிற்சி வழங்குதல்.
- தமிழ் மொழியைச் சந்தைப்படுத்தும் நுட்பத்தைக் கூறுதல்.
- மின்கற்றல், கற்பித்தல் கொள்கைமுறைகள் தொடர்பான பயிற்சி அளித்தல்.
- மின்கூடுகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காணொலி உருவாக்கப் பயிற்சியளித்தல்.
- திட்டக்கட்டுரைகள் என்ற பெயரில் பெரும்பான்மைக் குப்பைகளை வாங்கி, மதிப்பெண் வழங்கும் முறையை மாற்றி, வலைப்பூ, விக்கி போன்ற திட்டங்களில் மின்னாக்கச் செயல்பாடுகளில் பங்களிப்புச்செய்ய வழிகாட்டுதல்.
இவை போன்ற செயல்பாடுகள் துரிதமாக நிகழும்போதுதான் தமிழ்க் கல்வியானது மின்கற்றல், கற்பித்தலில் சாத்தியமாகும். அதுவரை தமிழ்க் கல்வி ஒடுக்கப்பட்ட கல்வியாகத்தான் உலக அரங்கில் பார்க்கப்படும்.
தமிழ்க் கல்வியை வழங்கும் தளங்கள்
இனி, தமிழ்க் கல்வியை வழங்கக் கூடிய சில தளங்களின் செயல்பாடுகளை அறிவோம். அதில் தமிழ்கூப், தமிழ் இணையக் கல்விக்கழகம், உடேமி, தமிழ் அநிதம், கான் அகடாமி போன்றன செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ்கூப்பில் தமிழ் மொழியைக் கற்பதற்கான சூழல்களை உருவாக்கியுள்ளது. இச்சூழல் தமிழ்மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளமுடியும். அதனால் இத்தளம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் மழலையர் பாடம் முதல் பட்டக்கல்வி வரை தமிழ் மொழியைக் கற்பதற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காணொலி வகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் இது போதாது. அனைத்துறைசார் பாடங்களையும் தமிழில் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக ஆர்வமுள்ள தமிழாசிரியர்களைப் பங்களிப்புச்செய்ய ஏதுவாக இத்தளம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
உடேமியில் தோராயமாக 157 பாடங்கள் தமிழில் உள்ளன. இதில் மொழி, தொழில்நுட்பம், உளவியல், இலக்கணம், இலக்கியம், இந்தி, போட்டோசாப், எத்திக்கல் கேக்கிங், பைத்தான், வீடியோ எடிட்டிங், ஆண்ட்ராய்டு டெவலப்மென்ட், சாவா, மெசின் லேர்னிங், வேர்டு பிரசு, 2டி அனிமேசன், வியூஇ செஎசு, அக்கோண்டிங், ஆப்டர் எபெக்ட், அபிலியோட் மார்க்கெட்டிங், அமேசான், ஆடியோ எடிட்டிங், பிளெண்டர், கேட்டசியா போன்ற வகைகளிலான பாடங்கள் உள்ளன.
தமிழ் அநிதம் தற்பொழுது உருவாக்கம் பெற்றுள்ள தமிழுக்கான ஒரு தளம். இதன் வரவு வரவேற்புக்குரியது. இதன் தளத்தில் கற்பதற்கான சூழல் எளிதாக உள்ளது. இதில் கற்றலானது வாசிப்பு, இலக்கணம், விளையாட்டு என அமைந்துள்ளன. ஆனால், கற்பிப்பதற்கான சூழல் அனுமதி வாங்கி செயல்படுவதுபோல் உள்ளது. இது இன்னும் இலகுவாக்கப்பட வேண்டும்.
கான் அகாடெமி கணிதம், அறிவியல் பாடங்களை உருவாக்குவதற்கான தளமாக உள்ளது. இருப்பினும் மொழிசார்ந்த கற்பித்தலையும் அங்கு நிகழ்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் தமிழ்மொழி கற்பித்தல் இல்லை. இத்தளத்தில் உள்ள கற்பித்தல் செயல்பாட்டை கூகுள வகுப்பறை, முகநூல், டிவிட்டர், மின்னஞ்சல் ஆகிய ஊடகங்களின் மூலம் பெறுவதற்கான சூழலும் இடம்பெற்றுள்ளது.
தமிழ்க் கல்வி மேம்பாட்டிற்குச் சில சிந்தனைகள்
இனி, தமிழ் மொழியைக் கற்கும், கற்பிக்கும் தளம் இருக்க வேண்டிய தன்மைகள் குறித்துப் பேசுவோம். தமிழ்க் கல்வியை வழங்குவதில் சில முறைகளைப் பின்பற்றி பார்க்கலாம். அவையாவன:-
- இணையம் மூலமாகக் கற்பிக்க விரும்பும் கல்வியாளர்களை இனம் காணல் வேண்டும்.
- இது மழலைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அமைதல் வேண்டும்.
- இக்கல்வி அனைத்துத் துறைசார் பாடங்களையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
- இதற்குக் கருத்தரங்குகள் அதிகம் ஏற்படுத்தி அதில் கற்பிக்கும் பாடங்களைப் பதிவுசெய்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
- சான்றாக, மழலைக் கல்வியைக் கற்பிக்கும்பொழுது தொழில்நுட்பத்துடன் கூடியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கருத்தரங்குகள் நடத்துவது பொத்தாம் பொதுவாக நடத்தாமல் குறிப்பிட்ட துறையைத் தெரிவுசெய்து அந்தத் துறையில் மழலைக் கல்வி, தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி, முதுகலைக் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என அமைதல் வேண்டும்.
- அப்படிக் கற்பிக்கும் பொழுது மொழிபெயர்ப்புக் குழுக்களை அமைத்து இதில் ஈடுபடுத்துதல் வேண்டும்.
பொதுவாக மேலே குறிப்பிட்ட தளங்களைப் பார்க்கும்பொழுது ஓரளவிற்கு உடேமியின் தளம் கற்றல் கற்பித்தலுக்கான அமைப்பில் சிறந்தே உள்ளது. இதனைப் போன்றே சுவயம், கோர்செரா போன்ற தளங்களின் அமைப்பு முறைகளையும் கூறலாம். இவற்றிற்கும் உடேமிக்கும் என்ன வேறுபாடு? உடேமியில் யார் வேண்டுமானாலும் கற்பித்தலை நிகழ்த்தலாம். ஆனால் சுவயம் போன்றவற்றில் அவ்வாறு இல்லை. அவற்றில் அதற்கான திட்டங்களை அறிவித்து அதன்வழிக் கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளுக்குமேல் பணியனுபவம் உள்ளோர் மட்டுமே படங்களைத் தயாரித்துத் தரும் முறை தரப்பட்டுள்ளது. இது ஒரு கல்வியைத் தரத்துடன் தருவதற்கான ஒரு செயல்பாடு. இம்முறையைக் கூடக் கருத்தில் கொள்ளலாம். இதே முறையைத் தனிக்குழு அமைத்துச் செயல்படுத்தினாலும் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளுக்கு மதிப்பிட்டுத் தரும் சரியான மதிப்பீட்டாளர்கள் இல்லை. அப்பொழுது தரமான கல்வி என்பது அங்குப் பின்தங்கி உள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, கூட்டு முயற்சியே இங்கு தமிழ்க் கல்வியைத் தரத்துடன் தருவதற்குத் தேவைப்படும் என்பதை உணரலாம்.
முடிப்பாக இதுவரை விளக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படும்பொழுது அல்லது தளம் உருவாக்கப்படும் பொழுது தமிழ்க் கல்விக்குரிய செயல்பாடு உலக அரங்கில் வெகுவாக கவனத்திற்குரியதாகும் என நம்பலாம்.
துணைநின்றவை
- https://primefeed.in/news/449321/massive-open-online-course-mooc-platforms-market-growth-and-status-explored-in-a-new-research-report-linkedin-learning-pluralsight-coursera-udemy-udacity-alison-edx-xuetangx-edmodo-wiziq/
- https://www.udemy.com
- https://www.linkedin.com/
- https://www.edureka.co/
- https://join.skillshare.com/
- https://www.udacity.com/
- https://onlinetraining.simplilearn.com/
- https://www.pluralsight.com/
- https://alison.com/
- https://www.coursera.org/
- https://www.edx.org/
- https://www.xuetangx.com/global
- https://new.edmodo.com/?go2url=%2Fhome
- https://www.futurelearn.com/
- https://www.wiziq.com/
- https://www.federica.eu/en/
- https://www.futurelearn.com/
- https://www.jigsawacademy.com/
- https://intellipaat.com/
- https://www.novoed.com/
- https://www.kadenze.com/
- https://linkstreet.in/
- https://iversity.org/
- https://www.khanacademy.org/
- http://tamilunltd.com/
- https://byjus.com/