இணையமும் தமிழ்ப்பயன்பாடும்

முனைவர் ச. மாசிலா தேவி

உதவிப்பேராசிரியர்

தமிழ் உயராய்வு மையம்

ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி)

திண்டுக்கல்

Summary

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற பாரதியின் கூற்றுப்படி தமிழகத்தில் தெருவெங்கும் ஒலிக்கும் தமிழோசை உலகம் முழுவதும் உள்ள தெருக்களில் ஒலித்திட வேண்டும். அதற்கு இன்று உலகையே கட்டுக்குள் வைத்திருக்கும் கணினி என்னும் இணையமே பெருந்துணையாக அமைகின்றது. இன்றைய காலநிலையில் கல்வி தொடங்கி அனைத்து நிலைகளிலும் இணையத்தின் வழியாகவே முன்னேறிக்கொண்டு இருக்கின்றது இன்றைய உலகம். இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்ற இளைய சமுதாயத்தினரிடம் தமிழ்மொழி உணர்வையும் மொழிப்பற்றையும் வளர்க்க வேண்டும் எனில் அதற்கு இணையமே சிறந்தது. இணையத்தின் தனிப்பகுதியாக இயங்கிவருவதே வலைப்பூக்கள். வலைப்பூக்கள் என்ற குறிப்பிட்டோமேயானால் அதில் புலனக்குழு, கீச்சகம் போன்றவையும் ஆகும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு இணையம் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்: இணையம், வலைப்பூக்கள், கணினி, பல்லூடகம்

முன்னுரை:
“இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்ற நிகண்டின் வாசகத்திற்கேற்ப இன்று கணிப்பொறியும் தமிழும் இரண்டறக் கலந்து விட்டது. நம் தமிழ் மொழியானது காலந்தோறும் பல்வேறு இடங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தடமாக கல்வெட்டு, ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், நடுகல் போன்றவற்றின் வாயிலாக அவற்றை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அவை உலகமக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் எனில் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே செயல்படுத்த முடியும். இன்றைய கணிப்பொறியும் அலைபேசியும் அன்றாட மக்களுக்கு அவசியமான ஒன்றாகவே மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவை இல்லாத மனிதனே இன்று இல்லை. அவை அனைத்தும் அவரவர் தாய்மொழியின் வாயிலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தகைய நிலையில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவிட்டது.

வலைப்பூக்கள்:
 ஒருவரிடமிருந்த பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்புக்கான எழுத்துகள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணைய வழியிலான ஒரு சேவையே வலைப்பூ.

 ஆசிரியர் நன்கு பயன் விளைவிக்கக்கூடிய கருத்தையோ தகவலையோ வகுப்பறையில் கூறினால் அவ்வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே அக்கருத்து சென்றடையும். பலரும் அதைப் பெற்றுப் பயன்பெற வேண்டும் என எண்ணினால் அதற்குத் துணையாக அமைவது வலைப்பூக்கள். தன் மனதின் திறனையோ, எண்ணங்களையோ, தகவல்களையோ உலகளாவிய மக்கள் அனைவரும் தெரிவிக்கும்படி பதிவிடுவது தான் வலைப்பூ என்பதாகும்.
முனைவர் துரை மணிகண்டன் வலைப்பூ பற்றிக் குறிப்பிடும்பொழுது,
“தன் மனதில் தோன்றும் கருத்துக்களை உடனடியாகத் தெரிவிப்பதற்கும் அதற்கான விமர்சனங்களைப் பெறுவதற்கும் உதவும் ஊடகமாக வலைப்பூக்கள் விளங்குகின்றன”.            (11-2010, ஆனந்த விகடன்)

கணினியில் தமிழ்ப் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்குத் தமிழ் வலைப்பூக்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. வலைப்பூக்களின் வாயிலாகத் தமிழ்மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன. இணையத்தில் தமிழில் எழுதுபவர்கள் பெருகியுள்ளனர். அதிக தமிழ் இணைய வாசிகள், தமிழ்ப் பதிவாளர்களால் தமிழ்மொழி வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் காணப்படும் தமிழ்ச் சமயங்கள் மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பின்பற்றுகின்றனர். எனவே  பிற நாட்டில் உள்ள தமிழர்கள் சமய விழாக்கள், வழிபாட்டு முறை கடைபிடிக்கும் நெறிகள் போன்றன இதன் மூலம் அறியப்படுகின்றன.

தமிழ்மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில்  வெளிவருகின்றன. கணினியில் தமிழ்மொழியில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன. இவை தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரிதாக உதவுகின்றன. வலைப்பூக்கள் உடனுக்குடன் பின்னூட்டம் வழங்குவதால் கருத்துகள் செம்மைப்படுத்தப் படுகின்றன. இதனால் வலைப்பூவினை விமர்சன இலக்கியம் என்று கூறலாம். இவை போன்ற பல நன்மைகளின் வழியாக வலைப்பூக்களில் தமிழ்மொழிப் பதிவுகள் வெளியாகின்றன. ஆகவே தமிழ்மொழி வளர்ச்சியில் வலைபூக்களின் பங்களிப்பு மிக இன்றியமையாதது.

தமிழும் தொழில்நுட்பமும்:
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி” என்ற வாக்கிற்கேற்ப தமிழ்மொழியானது தொன்மையும் தனிச்சிறப்புக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நம் தமிழ்ப் படைப்புக்கள். இதன் மூலமே நாம் பண்பாடுகளையும் நாகரீகம் போன்ற இன்ன பிறவற்றையும் அறிந்து கொண்டு தமிழ்மொழியை வளர்த்துக் கொண்டும் அறிந்து கொண்டும்  இருக்கின்றோம்.

அன்றைய காலக்கட்டத்தில் ஏட்டில் எழுதப்பட்ட பல இலக்கியங்கள் இன்று அழிந்து கொண்டிருக்கின்றன அதற்குக் காரணம் பராமரிக்க முடியாமல் போன்றதேயாகும். ஆனால் அத்தகைய நிலை இன்றைய காலக்கட்டத்தில் படைக்கப்பட்டிருக்கும் படைப்புக்களுக்கு இல்லை. ஏனெனில் அவை தொழில்நுட்பத்தின் காரணமாக பாதுகாப்பாக இணையத்தின் மூலம் தட்டச்சு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய சூழ்நிலையில் நம்மிடையே அறிவு என்று எண்ணப்படுவது, பேசப்படுவது எல்லாம் கல்வி அறிவு தான் என்றாலும் அதனினும் மேம்பட்ட அறிவு இணையம் சார்ந்து கல்வி அறிவாகும்.
“அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்” – குறள் : 483
நாம் காலம் அறிந்து செயலைச் செய்து முடிக்கவேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
கல்வெட்டு போன்றவற்றில் எழுதப்பட்ட தமிழ் மொழியானது கணிப்பொறியிலும் எழுதப்பட வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். கற்களிலும் ஓலைச்சுவடிகளிலும் பதிக்கப்பட்டது  இன்று அச்சுப்பொறி வாயிலாக கணினி மயமாக்கப்பட்டு  தமிழ் வளர்ந்து கொண்டிருக்கின்றது. கணினி வருகையால் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்ற நிலையானது இணையத்தின் வழியாக மாறிக் கொண்டிருக்கின்றது.

“வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
 விரல்கள் பத்தும் மூலதனம்” 
என்ற தாராபாரதியின் படைப்பின் சொற்களுக்கேற்ப அனைத்தும் மாறிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையில் உழைப்பின் மூலம் உண்டாக்கப்பட்ட சிப்பிக்குள் முத்தாய் கிடைக்கும் மூலதனம் கணினித் தமிழ் ஆகும். அத்தகைய தமிழின் தொன்மையும் இளமை, வலிமை, தாய்மை, தூய்மை, செம்மை, இனிமை, தனிமை, இனிமை போன்ற உண்மை நிலையினை வெளிப்படுத்துவதற்கும் இலக்கிய இலக்கண வளம் மொழியியல் வளம் பெறுவதற்கும் அதனை அறிந்து கொள்வதற்கும் மனிதனால் சாதிக்க முடியாதவை மனித மூளையினால் உருவாக்கப்பட்ட கணினியின் மூலம் சாதிக்க முடியும். ஏனெனில் தோண்டத் தோண்ட வற்றாத ஊற்றாக என்றும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்ற நதியாகவும் மனித வாழ்க்கையின் மகத்துவத்தை அழியாமல் காத்துக் கொண்டு இருப்பதும் கணினியின் பயன்பாடேயாகும்.

தமிழ் வளர்ச்சியில் இணையம்:
தமிழ் வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வியை வீட்டில் இருந்தபடியே அனைத்துப் பாடப்பிரிவுகளையும் கற்றுக்கொள்ள ஏதுவாக மாற்றம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தொலைதூரக் கல்வியும் இணையத்தின் உதவியால் கணினி வாயிலாக அனைவரும் கற்று வருகின்றனர். இணையத்தின் வாயிலாக ஏற்படும் சந்தேகங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் போன்றவையும் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் போன்ற அடிப்படைத் திறன்களோடு கவிதை, கட்டுரை, பாடல், கடிதம் வரைதல் போன்றவையும் குறிப்பெடுத்தல், அகராதித் தேடல் போன்றவையும் இணையத்தின் வாயிலாகவே கற்க இயலும். உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்கள் அனைவரும் இணையத்தின் மூலமே அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கணினியின் பயன்பாட்டினை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அது முடியால் மலையை அளப்பதற்குச் சமமாகும். கணினி தன் பயன்பாட்டினை கால்பதிக்காத இடமே இல்லை எனலாம். 

இணையம்ஒரு பல்லூடகம்:
 இணையம் இன்று ஒரு பல்லூடகக் கருவியாகப் பரிணமித்து இருக்கின்றது. எழுத்துரு, படங்கள் அசைவுப்படங்கள், நிகழ்ப்படங்கள், ஒலி, ஒளி சேர்க்கைகள், இணைய உரையாடல்கள், நிகழ்ப்படக் கருத்தரங்கு, வானொலி, தொலைக்காட்சி எனப் பன்முகப் பயன்பாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றது. இவை அனைத்தும் தற்கால நவீன முறையிலான கற்றல் கற்பித்தலுக்கு மிகவும் ஏற்றவை மட்டுமல்ல, எளிமையாக பயன்படுத்தக் கூடியவை. இவ்வாறு பல்லூடகமாகச் செயல்படும் இணையத்தில் உள்ளவற்றைக் கணினியில் சேமித்து வைத்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது.

இணையத்தில் பாடத்தரவுகள்:
இணையத்தில் பாடத்தரவுகளை இருவகைகளில் நாம் உருவாக்க முடியும்.
முதலாவது திட்டமிட்ட பாடங்களில் தரவுகளை குறிப்பிட்ட கல்விக் கோட்பாட்டின்படி திட்டமிட்ட அடைவை முன்வைத்து  நாமே பாடங்களைப் பதிவேற்றுதல்.

 அடுத்து ஏற்கனவே இணைய வெளியில் குவிந்து கிடக்கும் தரவுகளைக் குறிப்பிட்ட கல்விக் கோட்பாட்டின்படி திட்டமிட்ட அடைவை முன்வைத்துப் பாடங்களைத் தயாரித்தல். பல்வேறு அரசு நிறுவனங்களும் தன்னார்வ நிறுவனங்களும் திட்டமிட்ட பாடத்தரவுகளை உருவாக்கி பதிவேற்றி வருகின்றன. ஆனால் ஏற்கனவே குவிந்து கிடக்கும் தரவு வளங்களைப் பயன்படுத்தி பாடத்திட்டம் உருவாக்குதல் என்பது தனிப்பட்ட ஆசிரியரின் வகுப்பறை மேலாண்மையும் படைப்பாக்கத் திறனையும் சார்ந்ததாகவே இன்றைய சூழலில் காணப்படுகின்றது.

இணையத் தரவுகளின் வகைகள்:
இணையம் ஒரு பல்லூடகமாகவும் பரிணமிப்பதால் இதன் தரவுகளும் பல்வேறு வகைப் பட்டனவாக அமைகின்றது.
  • பனுவல் வகை
  • ஒலிவகை
  • காணொலி வகை
  • படங்கள் வகை


பனுவல் வகை:
வலைப்பூக்கள், இணையதளங்கள், மின்னாடற் குழுக்கள், மின்னஞ்சல் முதலான இடங்களிலிருந்து கதைகள், கட்டுரைகள், செய்திகள், தனித்தகவல்கள், உரைகள், உரையாடல்கள்,  தனிநபர்  பின்னூட்டம் முதலான பல்வேறு வகைப் பனுவல்களைப் பெறலாம்.

ஓலிவகை:
இணைய வானொலிகள் வழி ஒரு குறிப்பிட்ட கருத்து பற்றிய உரைக்கோவைகள், கருத்தாடற்கள், தனிப்பேச்சுகள், செய்திவடிவங்கள், உரையாடல்கள், கதைகளும் பாடல்களும் பெறயியலும்.

காணொளி வகை:
காட்சி கேள்வி அமைப்பில் உள்ள இந்தவகைத் தரவுகள் இணைத் தொலைக்காட்சிகள், வலையொளி போன்ற தளங்களிலும் திரைப்படங்கள் வழியில் வழங்கும் தளங்களிலும் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், உரையரங்குகள், பட்டிமன்றங்கள், தனிநபர் பேச்சுகள் முதலான வடிவங்களிலிருந்து  தரவுகளைப் பெறலாம்.

படங்கள் வகை:
கோட்டுப் படங்கள், வரைபடங்கள், வண்ணப்படங்கள், புகைப் படங்கள் போன்ற பல்வேறு வகையான படத்தரவு வகைகள் காணப்படுகின்றன.

கணித்தமிழின் முக்கியத்துவம்:
பேச்சு மொழியில் இளைய, தற்போதைய மற்றும் முந்தைய தலைமுறைக்கான இடைவெளி அதிகமாக உள்ளது. இளைய தலைமுறையினர் குறிப்பாக இணையத்தை அதிகமாகப் பயன்படுத்தும் குழந்தைகள் பேசும்போது ஆங்கிலத்தில் தமிழ்க் கலப்பு செய்து பேசுகின்றனர். ஒரு தலைமுறைத் தன் சந்ததியினருக்கு தன் தாய்மொழியை நன்கு போதித்துப் பிறகு அவர்கள் கற்றுணர்ந்து மேலும் பதிய சொற்களை தேவைக்கேற்ப பயன்படுத்தினால் மட்டுமே அம்மொழி தொடர்ந்து நிலைத்து நிற்கும். இல்லையென்றால் மொழி வளமாக இருந்தாலும் அதன் பயன்பாடு குறுகி விரைவில் பேச்சு வழக்கில் இருந்து நீங்கிவிடும். தமிழ் மொழிக்கு அந்நிலை ஏற்படாத வண்ணம் புதிய தொழில்நுட்பச் சொற்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு கோட்பாடுகள், தொழில்நுட்பங்களைத் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவற்றிற்குத் தேவையான கலைச்சொற்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் அதன் பொருள் மாறாமல் உருவாக்கப்பட வேண்டும். 

தமிழ்மொழிப் பேசும் கற்றறிந்தோர் முடிந்தவரை ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாமல் அதற்கு இணையான தமிழ்த் தொழில்நுட்பக் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதை தொடர்தல் வேண்டும். உலகில் உள்ள அனைத்து கண்டுபிடிப்புகளும், கோட்பாடுகளும் புதிதாக உருவாகும் ஆங்கில தொழில்நுட்பக் கலைச்சொற்களும் தமிழில் மொழிபெயர்த்து உருவாக்கப்பட வேண்டும்.

முடிவுரை:
தாய்மொழி கொண்டே பிற மொழிகளை நன்றாகக் கற்க முடியும் என்பதே உண்மை. தமிழ்மொழி பேசும் அனைவரும் பிற மொழித் தொழில்நுட்பக் கலைச்சொற்களுக்குப் பயன்படுத்துவதை விடுத்து தமிழ் மொழியில் அதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இளைய தலைமுறையினர்களுக்குத் துணைநின்று அவர்கள் தமிழ் மொழியில் நவீன காலத்தில் பயன்படும் பிற சொற்களுக்கு குறிப்பாக ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்தொழில்நுட்பச் சொற்களை அறிமுகப்படுத்தி அதனைப் பயன்படுத்துமாறு உருவாக்கப்பட வேண்டும்.

துணை நூற்பட்டியல்:
  • துரை மணிகண்டன் - த.வானதி தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், 
  • இ.பதிப்பு 2016.    
  • திருக்குறள், புலவர் வீ.சிவஞானம், விஜயா பதிப்பகம், பதிப்பு - 2012
  • தாராபாரதி (2007) வேளைகளல்ல வேள்விகளே, இலக்கிய வீதி இனியவன், சென்னை.
  • சுந்தரம் இல, 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை

பயன்பட்ட தளங்கள்
  • www.infitt.org
  • www.tamilvu.org
  • www.wikipedia.org

Author
கட்டுரையாளர்

முனைவர் ச. மாசிலா தேவி

உதவிப்பேராசிரியர்

தமிழ் உயராய்வு மையம்

ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி)

திண்டுக்கல்