இன்றையத் தமிழ்க் கல்விச்சூழலில் கணினித்தமிழ்- கற்றல், கற்பித்தல் முறைமையில் சிக்கல்கள்
- 2024
- கட்டுரை
- By முனைவர் சி.வெங்கடேசன்
முனைவர் சி.வெங்கடேசன்
ஜி.டி.என். கலைக்கல்லூரி,திண்டுக்கல் – 624 005
Summary
தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் இந்தியச் சமூகம் பெரும் நன்மையடைந்துள்ளது என ஒருபுறம் மார்தட்டிக் கொள்கிறார்கள். தொழிற்புரட்சியால் உலகம் சுருங்கிப்போய் விட்டது. இயந்திரமயமாக்கலால் மனிதாபிமானத்தை இழந்து தவிக்கிறோம் எனச் சமூக ஆர்வலர்கள் மறுபுறம் புலம்பித் தவிக்கிறார்கள். உலகம் தோன்றிய காலந்தொட்டே இம்முரண்பட்ட கருத்துக்களோடுதான் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனக் கணியன் பூங்குன்றனார் குறிப்பிட்டதைப் போல, விஞ்ஞானத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதும் அழிவுக்கு இட்டுச் செல்வதும் மனிதர்களின் மனநிலையைப் பொறுத்ததேயாகும். எனவே, ஊடகங்கள் மற்றும் இணையங்களைத் தவிர்த்துவிட்டு மனிதர்களால் வாழந்துவிடமுடியாது. இன்று தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு மனிதனின் அனிச்சைச் செயல்களாகி விட்டன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த கணினியின் பரவலாக்கம் மிகப் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம்.
உலக மொழிகளில் ஆங்கிலத்திற்குப் பிறகு, கணினியில் மிகச் சிறப்பாகவும் எளிதாகவும் இயங்கிக் கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதில் பெருமிதமடைகிறோம். இக்கணினித் தமிழ் வளர்ச்சிக்குப் பல அயல்தேசத் தமிழறிஞர்களும் பொறியாளர்களும் ஈழத்தமிழர்களுமே காரணம் எனலாம். அத்தகையக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை இளங்கலை, முதகலைத் தமிழ் பயிலும் மாணவர்கள் கற்பதிலும் ஆசிரியர்கள் கற்பித்தலிலும் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாக இருக்கிறது.
தமிழ்க் கல்விச்சூழல்:
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த்துறைகள் ஆரோக்கியமான செயல்பாட்டில் இல்லை என்பதை அங்கு படித்து வெளிவரும் மாணவர்களின் கல்வித் திறன் கொண்டு அறிந்து கொள்கிறோம். மேலும், அங்கு நிகழ்த்தப்படுகின்ற பெரும்பாலான ஆய்வுகள் கூட தரமானதாக இருப்பதில்லை. தேர்ந்த வாசிப்பறிவோடு கடுமையாக உழைக்கின்ற இளந்தலைமுறையினருக்குச் சரியான வாய்ப்புக் கிடைப்பதில்லை. சமகாலத்தில் ஆய்வு நிகழ்த்தி வருகிற ஒரு சிலருக்கு மட்டடுமே கணினித்தமிழ் குறித்த பயன்பாட்டறிவு இருக்கிறது. கணக்கெடுத்துப் பார்த்தால் தமிழகம் முழுக்க உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஒரு சில பேராசிரியர்களே மிஞ்சுவர். அவர்களும் கணினியைப் பயன்படுத்துவார்களே தவிர, அவர்களிடம் தொழில்நுட்ப அறிவு மிகக்குறைவே ஆகும்.
உயர்கல்வியில் பாடத்திட்டங்கள் சரியாகக் கட்டமைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பலரிடமுண்டு. தமக்குத் தெரிந்ததை மட்டுமே பாடத்திட்டத்தில் வைக்கிறார்கள். அதிலும் பாடநூல்கள் அவர்களது நண்பர்களுடையதாக இருக்கும். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆசிரியர்களிடையே பாடத்திட்ட விசயத்தில் ஒரு புரிந்துணர்வு காணப்படும். இதில் ஒற்றுமையாக இருப்பார்கள். பாடத்திட்டத்தில் சமகாலம், எதிர்காலம் குறித்த சிந்தனை துளிகூட இருப்பதில்லை. குறிப்பாக, கணினித் தமிழ் பாடம் இருப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கும். அந்தப் பாடத்தையும் தடுப்பதற்குத் திட்டமிடும் பேராசிரியர்களும் உண்டு. எதையும் புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எவரிடமும் இல்லை. மேலும், கணினி அறிவு சுத்தம். இணைய மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்கிறேன், அதற்காக வினாக்கள் தயாரித்திருக்கின்றேன். தயவு கூர்ந்து பதிலளியுங்கள் என்று எமது துறைப் பேராசிரியர்களிடம் கொடுத்தேன். இந்தக் கட்டுரை எழுதி முடியும் வரை அவர்கள் என்னிடம் வினாக்களுக்குரிய பதிலை எழுதித் தரவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். இப்படிப் பல நிகழ்வுகள் தமிழ்க்கல்விச் சூழலில் புதைந்து போய்க் கிடக்கின்றன. இவ்வாறாக, நாம் கணினித்தமிழை மாணவர்களிடையே கொண்டு சேர்ப்பது குறித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம்.
கற்றல், கற்பித்தல் –சிக்கல்கள்:
தமிழ்ப் பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையால் அவர்கள் எதையும் துணிந்து கற்பதற்குத் தயங்கும் நிலை கல்விச்சூழலில் உருவாகியுள்ளது. இதை உடைக்க வேண்டுமெனில் மாணவர்களிடையே திறன் சார்ந்த கல்வியைக் கொடுப்பது சமகாலத் தேவையாக இருக்கிறது. குறிப்பாக, கணினி என்றால் ஆங்கிலம் என்ற மாயையை அவர்களிடம் உருவாக்கியிருப்பது பெருந்தவறான செயலாகும். சில கல்லூரிகளில் இளங்கலைத் தமிழ் மாணவர்களுக்குக் கணினி பாடமாக இருக்கும். ஆனால், ஆய்வுக்கூடம் இருப்பதில்லை. அதனால் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்கிறார்கள். செயல்முறையாக அவர்கள் கற்றுக் கொள்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். அரசு கல்லூரிகளில் கணினி ஆய்வுக்கூடம் போதிய வசதிகளுடன் இருப்பதில்லை. தனியார் கல்லூரிகளில் குறிப்பாகத் தன்னாட்சி கல்லூரிகளில் மட்டும் கணினி ஆய்வுக்கூட வசதிகள் இருக்கின்றன. ஆனால், மாணவர்கள் பெருந்தொகையைக் கல்விக் கட்டணமாகக் கட்ட வேண்டியிருக்கிறது.
சில கல்லூரிகளில் கணினி வசதிகள் இருந்தாலும் தமிழ்க் கற்பிக்கும் பேராசிரியர்களிடையே போதிய கணினியறிவு இருப்பதில்லை. அதிலும் பாடத்தில் இருக்கிற அலகுகளை மட்டுமே கற்பிக்கும் நிலையும் உள்ளது. கணினி கற்கும் மாணவர்களை உதாசீனப்படுத்தும் நிலையிலும் ஆசிரியர்கள் இருப்பதையும் பார்க்க முடிகிறது. மவுஸை எப்படிப் பிடித்து நகர்த்த வேண்டும் என்று தொடங்கி சில மாணவர்களுக்குக் கற்றுத் தரவேண்டிய அவசியமிருக்கிறது.
கல்வித் தளத்தில் இருக்கின்ற மூத்த பேராசிரியர்கள், கணினி கற்ற ஆசிரியர்கள் காட்சி உரையில் பாடம் கற்பித்தால் இது ஏமாற்று வேலை எனப் புறக்கணிக்கும் நிலையும் உண்டு.
ஒரு புகழ்பெற்ற தன்னாட்சிக் கல்லூரிகளில் பயில்கிற ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு ஆராய்ச்சி நெறிமுறைகள் குறித்துப் பாடம் எடுக்கச் சென்ற போது, அங்குள்ள துறைத்தலைவரிடம் “புரஜெக்டர் இருக்கிறதா ஐயா” என்று கேட்டேன். அதற்கு அவர், “அப்படின்னா என்ன தம்பி, அதெல்லாம் இங்க இல்லங்க தம்பி… தமிழ்ப் படிக்கிறவங்களுக்கு எதுக்கு கம்ப்யூட்டர்ன்னு கேட்குறாங்க…நிர்வாகத்துல” என்று அவர் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. பிறகு, நான் வகுப்பு முடிந்து விசாரித்த போது அந்தக் கல்லூரியிலேயே ஒரே ஒரு புரஜெக்டர் மட்டுமே இருப்பதை அறிந்து கொண்டேன். கணினி குறித்த புரிதலில் உயர்கல்வியில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டேன்.
தமிழ்ப் படிக்கிறவங்களுக்கு எதுக்குக் கணிப்பொறி. கதை சொன்னால் போதாதா எனக்கருதும் சூழ்நிலையைச் சில கல்லூரி வளாகங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. உயர்கல்வி பயிலும் இடங்களில் இணைய வசிதியின்மையால் ஏழ்மை நிலையிலிருந்து வரும் தமிழ்ப் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கணினியில் தமிழ்ப் பயில முடியாமல் அவதியுறுகின்றனர். ஆதனால் கல்லூரிக்கு வெளியிலும் அவர்களால் கணினியைப் பயன்படுத்த முடிவதில்லை,
மாணவர்களின் ஆலோசனைகள்;
ஆறாம் வகுப்பிலிருந்து கணினித் தமிழைக் கற்றுத்தரல் வேண்டும்.
கணினி வழியாகத் தமிழை அறிந்தால் நலமாக இருக்கும்.
கணினி முழுமையும் தமிழ்ப்படுத்தினால் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தமிழ்த் தட்டச்சுப் பயிற்சியும், யுனிக்கோடு பயன்பாடு குறித்தும் பள்ளிக் கல்வி நிலையில் அறிமுகப்படுத்தினால் கணினி கற்றல் எளிமையாக இருக்கும்.
பாடத்திட்டத்தோடு கணினிப் பயன்பாட்டை இணக்க வேண்டுகிறோம்.
முறையாகக் கணினிப் பயின்றவர்கள் பயிற்சியளித்தால் கூடுதலானச் செய்திகளை அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
கணினித்தமிழ்ப் பயன்பாட்டைப் பிறதுறையில் பயிலும் மாணவ, மாணவியர்களிடம் எடுத்துச் சென்றால்தான் மாணவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சியை அறிந்து கொள்வார்கள்.
தமிழ்ப்பயன்பாடு குறித்த மென்பொருள்கள் பெருமளவில் உருவாக வேண்டும்.
•ஆசிரியர்கள் கற்பிக்கும் போது அதிக வகுப்புகளில் கணினியைப் பயன்படுத்தினால் மாணவர்கள் அவர்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொள்வார்கள்.
தமிழ்க்கணினிப் பயன்பாட்டைப் பரவலாக்க
ஆலோசிக்க வேண்டியக் கருத்துக்கள்:
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் தமிழ்க் கணினிப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.
தமிழ்க் கணினிப் பயன்பாடு குறித்து கருத்தரங்கம், பயிலரங்கம், மாநாடுகள் ஊரெங்கும் தொடர்ந்து நடத்தப்படல் மிக அவசியம்.
பள்ளிக் கல்வி, உயர்க்கல்விப் பாடத்திட்டத்தில் கணினித் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதற்கு அரசு உதவும் வகையில் உலகத்தமிழ் இணைய மன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்ப் பேராசிரியர்களுக்கு முதலில் கணினிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு இணைய மாநாட்டிலும் புதிதாகச் சந்தைக்கு வந்துள்ள மென்பொருள்கள் குறித்து விவாதிப்பதைவிட, சாமானிய மக்களுக்கும் தமிழ்க் கணினி குறித்த புரிதலை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். குறிப்பாக தமிழ்க் கணினிப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என விரும்புகிறோம்.
இளங்கலை கணினி, முதுகலை கணினி, முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் பயிலும் மாணவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் போன்று தமிழ்க் கணினி பயில்பவர்களுக்கும் ஏற்படுத்த முயற்சித்தால் பலர் தமிழ்க் கணினி பயில முன்வருவார்கள்.
டி.சி.எஸ், விப்ரோ போன்ற மென்பொருள் நிறுவனங்களிலும் தமிழ்க் கணினி கற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குத் தமிழ்க் கணினிப் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தமம் குழுவினர் முன்வந்தாலேயொழிய பெருத்த மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடாது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
இளங்கலை, முதுகலைத் தமிழ்ப் பயிலும் 156 மாணவ, மாணவியர்களிடமிருந்து கணினித் தமிழ் கற்றல் தொடர்பான கேள்விகளிடமிருந்து கிடைத்த தரவுகள் அட்டவணையிடப்பட்டுள்ளன.
மதிப்பீடு:
கற்றல், கற்பித்தல் என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த நெறிமுறை. இவை சரியாக செயல்பட அகவய, புறவயச் சூழல் ஆரோக்கியமானதாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், உயர்கல்வி உயிர்ப்பானதாக அமையவில்லை. இன்று அவை தேர்ந்த செயல்பாட்டில் இல்லை என்பதே பொருத்தமானதாக இருக்கும். கணினிவழித் தமிழை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் மாநாடுகளைக் கடந்து கல்விநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற புரிதலையும் சிந்தனையையும் ஒரு தீர்க்கமான ஆய்வு முடிவையும் இந்தக் கட்டுரை இட்டுச் செல்கிறது.







